ஸ்ரீ குமரகுருபரர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்டது. நேரிசை வெண்பா கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள் கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே இடம்பவனத் தாயே யிரார். 1 கட்டளைக் கலித்துறை இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள் குழைய விருகுவட்டாற் பொராநின் றதுஞ்சில பூசலிட் டோடிப் புலவிநலம் தராநின் றதுமம்மை யம்மண வாளர் தயவுக்குள்ளாய் வராநின் றதுமென்று வாய்க்குமென் னெஞ்ச மணவறையே. 2 நேரிசை வெண்பா மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன் அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் கொடியார்க் குளகொல் குணம். 3 கட்டளைக் கலித்துறை குணங்கொண்டு நின்னைக் குறையிரந் தாகங் குழையப்புல்லி மணங்கொண் டவரொரு வாமங்கொண் டாய்மது ரேசரவர் பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள் ளாயம்மை பைந்தொடியார் கணங்கொண் டிறைஞ்சு நினைக்குமுண் டாற்பொற் கனதனமே. 4 நேரிசை வெண்பா கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென் தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப் பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற் றாமாறி யாடுவரோ தான். 5 கட்டளைக் கலித்துறை தானின் றுலகு தழையத் தழைந்த தமிழ்மதுரைக் கானின்ற பூங்குழற் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய வானின்ற தோர்வெள்ளி மன்றாடு மானந்த மாக்கடலே. 6 நேரிசை வெண்பா கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லி மடந்தை யபிடேக வல்லி - நெடுந்தகையை ஆட்டுவிப்பா ளாடலிவட் காடல்வே றில்லையெமைப் பாட்டுவிப்ப துங்கேட் பதும். 7 கட்டளைக் கலித்துறை பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்ம மதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவ ரிதுமத்தப் பித்துமன் றேழைமை முன்ன ரிமையவர்கைப் புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே. 8 நேரிசை வெண்பா தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றி லகமேயென் னெஞ்சகம தானான் - மகிழ்நரொடும் வாழாநின் றாயிம் மனையிருண்மூ டிக்கிடப்ப தேழாய் விளக்கிட் டிரு. 9 கட்டளைக் கலித்துறை இரைக்கு நதிவைகை பொய்கைபொற் றாமரை யீர்ந்தண்டமிழ் வரைக்கு மலைதென் மலயம தேசொக்கர் வஞ்சநெஞ்சைக் கரைக்குங் கனகள்வி கர்ப்பூர வல்லிக்குக் கற்பகத்தால் நிரைக்கும்பொற் கோயி றிருவால வாயுமென் னெஞ்சமுமே. 10 நேரிசை வெண்பா நெஞ்சே திருக்கோயி னீலுண் டிருண்டகுழல் மஞ்சேந் தபிடேக வல்லிக்கு - விஞ்சி வருமந் தகாவென் வழிவருதி யாலிக் கருமந் தகாவென் கருத்து. 11 கட்டளைக் கலித்துறை கருவால வாய்நொந் தறமெலிந் தேற்கிரு கான்மலரைந் தருவால வாய்நின்ற தொன்றுத வாய்வன் றடக்கைக்குநேர் பொருவால வாயெட்டுப் போர்க்களி றேந்துபொற் கோயில்கொண்ட திருவால வாய்மருந் தேதென்னர் கோன்பெற்ற தெள்ளமுதே. 12 நேரிசை வெண்பா தென்மலையுங் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப் பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா முலைக்குவடு பாய்சுவடு முன்காய மாலம் மலைக்குவடு வன்றே மணம். 13 கட்டளைக் கலித்துறை மணியே யொருபச்சை மாணிக்க மேமருந் தேயென்றுன்னைப் பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் லேனவர் பாற்செலவும் துணியேன் றுணிந்ததை யென்னுரைக் கேன்மது ரைத்திருநாட் டணியே யனைத்துயிர்க் கும்மனை நீயென் றறிந்துகொண்டே. 14 நேரிசை வெண்பா கொண்டைச் செருக்குங் குருநகையு நெட்டயிற்கட் கெண்டைப் பிறக்கமும்வாய்க் கிஞ்சுகமுங் - கொண்டம்மை கற்பூர வல்லி கருத்திற் புகப்புகுந்தாள் நற்பூர வல்லியுமென் னா. 15 கட்டளைக் கலித்துறை நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசில பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர் தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட் பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே. 16 நேரிசை வெண்பா புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவை வனைந்தாளெம் வாயும் மனமும் - தினந்தினமும் பொற்பதமே நாறுமவள் பூம்பதமென் றேநமது சொற்பதமே நாறுஞ் சுவை. 17 கட்டளைக் கலித்துறை சுவையுண் டெனக்கொண்டு சூடுதி யான்மற்றென் சொற்றழிழ்க்கோர் நவையுண் டெனவற நாணுதி போலு நகைத்தெயின்மூன் றவையுண் டவரொ டருட்கூடல் வைகுமம் மேசொற்பொருட் கெவையுண்டு குற்ற மவையுண்டு நீவி ரிருவிர்க்குமே. 18 நேரிசை வெண்பா விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும் கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமாற்- றொண்டரண்டர் தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம் பூங்காவில் வீற்றிருந்த பொன். 19 கட்டளைக் கலித்துறை பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும் வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் மையனொடும் கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே. 20 மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை முற்றிற்று. |