உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
திருத்தக்கதேவர் அருளிய சீவக சிந்தாமணி சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது. இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர். ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் 'நரி விருத்தம்' என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு 'செம்பொன்வரைமேல்' என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், 'மூவா முதலா' எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர். பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார். பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது. கடவுள் வாழ்த்து சித்தர் வணக்கம் மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத் தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே. 1 அருகர் வணக்கம் செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல் அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர் அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 2 மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம் பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான் தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன். 3 அவை அடக்கம் கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப் பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார். 4 முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும் அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார் இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார். 5 பதிகம் மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில் ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான் வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத் தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன். 6 கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல் ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள். 7 சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண் பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின் ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல் வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே. 8 கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச் சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும் புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச் செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும், 9 நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத் தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும் கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும் வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும், 10 நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும் விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும் நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும், 11 முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம் மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய் இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும், 12 சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப் புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள் கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும், 13 பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும் அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும், 14 தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும் கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும் வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன் ஊன் நாறு ஔத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும், 15 தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும் பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும், 16 பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக் கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும், 17 அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப் பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச் சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும், 18 பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும் கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான் வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும். 19 தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம் உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும் கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும், 20 இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப் பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன் கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும், 21 திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும் கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப் புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும், 22 மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும் நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும் பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும், 23 கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும் மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப் பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும், 24 துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல் எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும், 25 புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல் தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும், 26 திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக் குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும், 27 கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ் வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும் பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும், 28 தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன் வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான் ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே, 29 1. நாமகள் இலம்பகம் நாட்டு வளம் நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன் பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும் பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக் கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். 30 காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே 31 இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல் கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே 32 தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின் மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண் கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள் வான் நிரைத்து மணந்து சொரிந்தவே 33 குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன் முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின் இழியும் வெள் அருவித் திரள் யாவையும் குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே. 34 இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல் விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால் கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. 35 வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய் வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. 36 மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன் ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச் செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா நைய வாரி நடந்தது நன்று அரோ. 37 வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து எனக் காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய் மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல் நாடு முற்றியதோ என நண்ணிற்றே. 38 திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல் நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான் சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக் குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே. 39 பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல் வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம் முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே. 40 வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத் தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க் குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம் நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே. 41 கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர் செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும் எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே. 42 மாமனும் மருகனும் போலும் அன்பின காமனும் சாமனும் கலந்த காட்சிய; பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டின தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே. 43 நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம் செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்உறீஇப் பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன் வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே. 44 சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை 'வீறொடு விளைக' எனத் தொழுது வித்துவார்'; நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்; கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார். 45 முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர் குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல் புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால் நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே. 46 பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம் கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர் ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே. 47 இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின் அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம் விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே. 48 வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின் அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில் உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே. 49 வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே. 50 கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார் வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார் பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர் தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே. 51 நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரி ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால் தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல் பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே. 52 சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார் செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. 53 மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால் தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின் வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும் ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே. 54 ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன் வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர் ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே. 55 வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை மெலிவு எய்தக் குவளைகள் வாடக்கம் பலம் பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழ மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார். 56 வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர் தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமை கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில் பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே. 57 சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம் மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை ஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம் போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே. 58 ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால் மாடு உறத் தெளித்து வை களைந்து கால் உறீஇச் சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள் கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே. 59 கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம் விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகை பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே. 60 கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப் பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும் கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும் மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும். 61 மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும் மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும் ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும். 62 கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும் நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும் பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபு திருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே. 63 கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா வள வயல் வைகலும் இன்னது என்ப தேன் துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ் ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே. 64 சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக் காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தன தாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத் தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ. 65 கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடை வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வன பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்து ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே. 66 காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின் ஆவி அன்ன பூந்துகில் அணிந்த அல்குல் பல் கலை கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின் வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே. 67 பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம் ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து ஊசல் ஆடும் பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ வாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே. 68 மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால் நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக் கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே. 69 வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலை கொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கண ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக் கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே. 70 காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகை மாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின் கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகு ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே. 71 கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே. 72 கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல் சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியா வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக் காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே. 73 இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம் இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே. 74 விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத் தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும் கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறி நிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே. 75 அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம் கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம் மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம் ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே. 76 நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம் நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம் பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு அரோ. 77 நகர் வளம் - புடை நகர் கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்து ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும் பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கிய அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம். 78 விண்புகு வியன் சினை மெலியப் பூத்தன சண்பகத்து அணிமலர் குடைந்து தாது உக வண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க் கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே. 79 கை புனை சாந்தமும் கடி செய் மாலையும் மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால் பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே. 80 கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின் பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம் அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில் புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே. 81 சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள் கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இரு மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர் குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே. 82 முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப் பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச் சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர் ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே. 83 ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும் ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும் கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக் கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே. 84 புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின் இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர் கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல் மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே. 85 சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும் சந்தன நீரோடு கலந்து தையலார் பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசை இந்திர வில் எனக் கிடந்த வீதியே 86 பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல் தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவ பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே. 87 நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவர உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின் நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில் அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே. 88 பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம் நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை மற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே. 89 மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக் கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர் ஆலயம் இது என ஐயம் செய்யுமே. 90 கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால் நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால் பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. 91 நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர் உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம் நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க் கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே. 92 இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய முட்டு இலா மூவறு பாடை மாக்களால் புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே. 93 அகழியின் தோற்றம் தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய வெம் களி இள முலை வேல் கண் மாதரார் பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும் கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். 94 கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள் ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே. 95 சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய் அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை உறைவது குழுவின் நீங்கி யோகொடு கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே. 96 அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம் விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே. 97 பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல் அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால் கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே. 98 நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல் விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும் குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும் உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே. 99 மதிலின் தோற்றம் தாய் முலை தழுவிய குழவி போலவும் மா மலை தழுவிய மஞ்சு போலவும் ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. 100 |