சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 5 ...

9. கனாத்திறம் உரைத்த காதை

(கலிவெண்பா)

அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை
நிகர் மலர் நெல்லொடு தூஉய், பகல் மாய்ந்த
மாலை மணி விளக்கம் காட்டி, இரவிற்கு ஓர்
கோலம் கொடி-இடையார்-தாம் கொள்ள-மேல் ஓர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க, 5

பால் விக்கிப் பாலகன்-தான் சோர, மாலதியும்,
'பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு
ஏற்பன கூறார்' என்று ஏங்கி, மகக் கொண்டு,
அமரர் தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்,
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம், பகல் வாயில் 10

உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற்கோட்டம்,
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்,
நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
'தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம்' என்று மேவி-ஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு, 15

ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், 'ஆசு இலாய்!
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்
படு பிணம் தா' என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு 20

இடு பிணம் தின்னும் இடாகினிப் பேய் வாங்கி,
மடி அகத்து இட்டாள், மகவை-இடியுண்ட
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன்
'அஞ்ஞை! நீ ஏங்கி அழல்' என்று, 'முன்னை
உயிர்க் குழவி காணாய்' என்று, அக் குழவி ஆய், ஓர் 25

குயில்-பொதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி,
மாயக் குழவி எடுத்து, மடித் திரைத்துத்
தாய் கைக் கொடுத்தாள், அத் தையலாள் தூய
மறையோன் பின் மாணி ஆய், வான் பொருள் கேள்வித்
துறைபோய், அவர் முடிந்தபின்னர், இறையோனும் 30

தாயத்தாரோடும் வழக்கு உரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேய நாள்,
தேவந்தி என்பாள் மனைவி, அவளுக்குப்
'பூ வந்த உண் கண் பொறுக்க' என்று மேவி, தன்
மூவா இள நலம் காட்டி, 'எம் கோட்டத்து 35

நீ வா' என உரைத்து, நீங்குதலும்-தூ-மொழி,
ஆர்த்த கணவன் அகன்றனன், 'போய் எங்கும்
தீர்த்தத் துறை படிவேன்' என்று; அவனைப் போர்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய்' என ஒன்றன் மேல் இட்டு,
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள், வாட்டு-அரும் சீர்க் 40

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
'பெறுக, கணவனோடு!' என்றாள்- 'பெறுகேன்;
கடுக்கும் என் நெஞ்சம்; கனவினால், என் கை 45

பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்;
"கோவலற்கு உற்றது ஓர் தீங்கு" என்று அது கேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனொடு 50

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உரையாடேன்;
தீக் குற்றம் போலும், செறி-தொடீஇ! தீக் குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும்'- பொன்-தொடீஇ!
கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒரு நோன்பு 55

பொய்த்தாய் பழம் பிறப்பில்; போய்க் கெடுக! உய்த்துக்
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்,
மடல் அவிழ் நெய்தல் அம் கானல், தடம் உள,
சோம குண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு 60

தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்' என்ற அணி-இழைக்கு-அவ் ஆய்-இழையாள்,
'பீடு அன்று' என இருந்தபின்னரே-'நீடிய
காவலன் போலும், கடைத்தலையான் வந்து-நம் 65

கோவலன்!' என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, 'யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த; 70

இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்ன-
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
'சிலம்பு உள; கொண்ம்' என-'சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர் 75

மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு,
ஏடு அலர் கோதாய்! எழுக' என்று, நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

வெண்பா

காதலி கண்ட கனவு கரு நெடுங் கண்
மாதவி-தன் சொல்லை வறிதாக்க, மூதை-
வினை கடைக் கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

10. நாடுகாண் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்-
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப,
ஏழகத் தகரும், எகினக் கவரியும், 5

தூ மயிர் அன்னமும், துணை எனத் திரியும்,
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு-
அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து, 10

பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி-
புலவு ஊண் துறந்து, பொய்யா விரதத்து, 15

அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய கொள்கை,
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐ-வகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து, தலை மயங்கிய வான் பெரு மன்றத்து, 20

பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல்,
நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும்,
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு- 25

மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கிக்
கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர் 30

இலவந்திகையின் எயில் புறம் போகி-
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 35

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க, 40

'மதுரை மூதூர் யாது?' என வினவ-
'ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து' என நக்கு
தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்- 45

'உருவும், குலனும், உயர் பேர் ஒழுக்கமும்,
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்,
உடையீர்! என்னோ, உறு கணாளரின்
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு?' என-
'உரையாட்டு இல்லை; உறு தவத்தீர்! யான் 50

மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்'-
"பாடகச் சீறடி பரல் பகை உழவா;
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
"உரியது அன்று; ஈங்கு ஒழிக" என, ஒழியீர்; 55

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்' என்ற 60

காவுந்தி ஐயையைக் கை தொழுது, ஏத்தி,
'அடிகள்! நீரே அருளுதிர் ஆயின், இத்
தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன்' எனக்
'கோவலன்! காணாய்; கொண்ட இந் நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல; கேண்மோ 65

வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கொண்டு
பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறைப் படுத்து, போற்றா மாக்கட்குக் 70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச்
செஞ் சுளைப் பலவின் பரல் பகை உறுக்கும் 75

கயல் நெடுங் கண்ணி காதல் கேள்வ!
வயல் உழைப் படர்குவம் எனினே, ஆங்குப்
பூ நாறு இலஞ்சிப் பொரு கயல் ஓட்டி,
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை
மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின், 80

கலங்கலும் உண்டு இக் காரிகை; ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து,
சுரும்பு சூழ் பொய்கைத் தூ நீர் கலக்கும்;
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி,
குடங்கையின் நொண்டு, கொள்ளவும் கூடும்; 85

குறுநர் இட்ட குவளை அம் போதொடு
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை,
நெறி செல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி,
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்;
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் 90

பொறி மாண் அலவனும், நந்தும், போற்றாது,
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது, யாங்கணும்,
அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை; 95

நெறி இருங் குஞ்சி! நீ வெய்யோளொடு
குறி அறிந்து, அவை அவை குறுகாது ஓம்பு' என-
தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
'மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக' எனப் 100

பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்-
கரியவன் புகையினும், புகைக் கொடி தோன்றினும்,
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண் மூப் பெயல் வளம் சுரப்ப, 105

குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை,
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும், கிழாரும், வீங்கு இசை ஏத்தமும், 110

ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து,
கம்புள் கோழியும், கனை குரல் நாரையும்,
செங் கால் அன்னமும், பைங் கால் கொக்கும், 115

கானக் கோழியும், நீர் நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும்,
வெல் போர் வேந்தர் முனையிடம் போல,
பல் வேறு குழூஉக் குரல் பரந்த ஓதையும்;
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய 120

கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய,
கருங் கை வினைஞரும் களமரும் கூடி 125

ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்;
கடி மலர் களைந்து, முடி நாறு அழுத்தித்
தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்ந்து,
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றிச்
செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர் 130

வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்;
கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து,
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி,
பார் உடைப்பனர் போல், பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்; 135

அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;
தெண் கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்;
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு, 140

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்-
உழைப் புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு
மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்,
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து, 145

மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும், 150

பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து,
மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்- 155

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160

இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-
'பண்டைத் தொல் வினை பாறுக, என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் 165

வந்த காரணம், வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கின், தெரிந்தோன் ஆயினும்,
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்-
'கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய், 170

ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர் வந்து எய்தி,
ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்; 175

அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன், 180

பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான், 185

சங்கரன், ஈசன், சுயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது, 190

போதார், பிறவிப் பொதி-அறையோர்' என-
சாரணர் வாய்மொழி கேட்டு, தவ முதல்
காவுந்திகை தன் கை தலைமேல் கொண்டு,
'ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லது, என் செவிஅகம் திறவா; 195

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது, என் நா;
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது,
கைவரக் காணினும், காணா என் கண்;
அருள் அறம் பூண்டோ ன் திரு மெய்க்கு அல்லது, என் 200

பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர், அறவன், அறிவோற்கு அல்லது, என்
இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது, என்
தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது; 205

இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது,
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது'
என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு, அதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி,
நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கிப் 210

'பவம் தரு பாசம் கவுந்தி கெடுக' என்று,
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது,
'பந்தம் அறுக' எனப் பணிந்தனர் போந்து-
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி, 215

மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்திப்,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர், 220

'காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்' என்றே-
'நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோ ர் ஆர்?' என வினவ-என்
மக்கள் காணீர்; மானிட யாக்கையர்; 225

பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்' என-
'உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந்தீர்!' என-
தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க- 230

'எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக' என-
கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியதுஆதலின், பட்டதை அறியார்,
குறு நரி நெடுங்குரல் கூவிளி கேட்டு, 235

நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
'நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ!' என- 240

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்' எனச்
சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின் 245

காவுந்தி ஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என்.

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5

ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;
அரங்கும், ஆடலும், தூக்கும், வரியும் 10

பரந்து இசை எய்திய பாரதி-விருத்தியும்,
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்,
ஈர்-ஏழ் சகோடமும், இடைநிலைப் பாலையும்,
தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும், 15

ஊர் அகத்து ஏரும், ஒளி உடைப் பாணியும்,
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்;
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.

வெண்பா

காலை அரும்பி மலரும் கதிரவனும்,
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247