நந்திக் கலம்பகம்

     கலம்பக நூல்களில் காலத்தால் மூத்தது மட்டுமல்ல, சுவையில் முதன்மையானதும் நந்திக்கலம்பகமே ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நூல் இது. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

     இதுபற்றி ஒரு கதையும் வழங்கிவருகிறது. மூன்றாம் நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது. இது நந்திவர்மனுடைய அளவற்ற தமிழ்ப் பற்றினைக் காட்ட எழுந்த கதையாக இருக்கலாம்.

     நந்திவர்மன் இறந்த பிறகு கவிஞன் பாடியதாக நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு உள்ளது.

வானுறுமதியைஅடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறுபுலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்
யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயாபரனே.

என்பது அப்பாட்டு. ஒருவேளை நந்திவர்வன் இறந்தபிறகே நந்திக் கலம்பகம் இயற்றப் பட்டிருக்கலாம் என்பதற்கு இப்பாட்டு சான்றாக உள்ளது.
தற்சிறப்புப் பாயிரம்
கடவுள் வாழ்த்து

பிள்ளையார்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன்
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிதகன்று
தம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே.

சிவபெருமான்
தரவு கொச்சகக் கலிப்பா

பொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த
நெருப்புருவம் வெளியாக நீறணிந்த வரை மார்ப!
பருப்புரசை மதயானைப் பல்லவர்கோன் நந்திக்குத்
திருப்பெருக அருளுகநின் செழுமலர்ச்சே வடிதொழவே.

திருமால்
வஞ்சித்துறை

கரியின் முனம்வரும்
அரியின் மலர்பதம்
உருகி நினைபவர்
பெருமை பெறுவரே.

கலைமகள் முதலிய கடவுளர்கள்
நேரிசை வெண்பா

திருவாணி யைக்குருவைத் தென்முனியைப் போற்றத்
தருவாணி ஆண்மை இறை சாரும்-உருவாணி
ஐங்கரனைச் சங்கரனை ஆறுமுகத் தோன் உமையைப்
பங்கில்வைப் பார்க்கில்லை பவம்.

நூல்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு
மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய்
ஒண்சுடராய் ஒளிஎன்னும் ஓருஉருவம் மூன்றுருவ
மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ
செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி;

அருவரையின் அகங்குழைய அனல் அம்பு தெரிந்தவுணர்
பொருமதில்கள் அவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும்
குருமணிசேர் அணிமுறுவற் குலக்கங்கை நதிபாயத்
திருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே;

இலகொளிய மூவிலைவேல் இறைவாநின் னியற்கயிலைக்
குலகிரியும் அருமறையும் குளிர்விசும்பும் வறிதாக
அலைகதிர்வேற் படைநந்தி அவனிநா ராயணன் இவ்
வுலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே.

அராகம்
செழுமலர் துதைதரு தெரிகணை மதனனது
எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை;
அருவரை அடிஎழ முடுகிய அவுணனது
ஒருபது முடிஇற ஒருவிரல் நிறுவினை.

தாழிசை
வீசிகையிற் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய்த்தொடுத்த
வாசிகையின் ஊடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே

பாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம்
ஆயிரவாய் கருங்கச்சை அழல் உமிழ அசைத்தனையே;

சோர்மதத்த வார்குருதி சோனைநீ ரெனத்துளிப்ப
ஏர்மதத்த கரிஉரிவை ஏகாச மிட்டனையே.

திசைநடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல்நஞ்சம்.
உயிர்நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெங்கூற்றம்.

முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்
அனைத்துலகில் பிறப்பும் நீ;
அனைத்துலகில் இறப்பும் நீ;
அனைத்துலகில் துன்பமும் நீ;
அனைத்துலகில் இன்பமும் நீ;
வானோர்க்குத் தாதையும் நீ;
வந்தோர்க்குத் தந்தையும் நீ;
ஏனோர்க்குத் தலைவனும் நீ;
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ.

இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்
ஊழி நீ; உலகு நீ;
உருவும் நீ; அருவும் நீ;
ஆழி நீ; அமுதம் நீ;
அறமும் நீ; மறமும் நீ;

தனிச்சொல்
என ஆங்கு

நேரிசை ஆசிரியச் சுரிதகம்

ஒருபெருங் கடவுள் நிற் பரவுதும் எங்கோன்
மல்லை வேந்தன் மயிலை காவலன்
பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி
வடவரை அளவும் தென்பொதி அளவும்
விடையுடன் மங்கல விசயமும் நடப்ப
ஒருபெருந் தனிக்குடை நீழல்
அரசு வீற்றிருக்க அருளுக எனவே. 1

தலைவி கூற்று
நேரிசை வெண்பா

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினவேறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீரிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது. 2

கிள்ளைவிடு தூது
கட்டளைக் கலித்துறை

பொழுதுகண் டாய் அதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றும்
தொழுதுகொண் டேன் என்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு
முழுதுகண் டான் நந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப்
பழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே. 3

தோழி கூற்று: தலைவனை வேண்டல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குருகுதிர்முன் பனிக்கொதிங்கிக் கூகம் கங்குற்
    குளிர்திவலை தோய்ந்தெழுந்த நறுந்தண் வாடை
அருகுபனி சிதறவர வஞ்சு வாளை
    அஞ்சலஞ்ச லென்றுரைத்தா லழிவதுண்டோ
திருகுசினக் கடக்களிற்றுச் செங்கோல் நந்தி
    தென்னவர்கோன் தன்குறும்பிற் சென்று சூழ்ந்த
சுரிகைவினைப் பகைஞர் உடல் துண்டமாகத்
    துயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே. 4

வெற்றி முரசச் சிறப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தொண்டை வேந்தன் சோணோடன்தொல் நீர் அலங்கல் முந்நீரும்
கொண்ட வேந்தர் கோனந்தி கொற்ற வாயில் முற்றத்தே
விண்டவேந்தர் தந்நாடும் வீரத் திருவு மெங்கோனைக்
கண்டவேந்தர் கொண்மின்கள் என்னும் கன்னிக் கடுவாயே. 5

செவிலி தலைவிக்குக் கூறல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட அங்கண் மறுகே
அடுவார் மருப்பி னயிரா வதத்தின் அடுபோர் செய் நந்தி வருமே
கொடுவார் புனத்து நகுவார் படைக்கண் மடவா ரிடைக்குள் மனமே
வடுவா யிருக்கும் மகளேஇம் முன்றில் மணிஊசல் ஆடல் மறவே. 6

தோள் வகுப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மறமத கரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன
விறலர சர்கள் மனம் நெகிழ்வன விரைமலர் களிமுலை பொருவன
திறலுடை யனதொடை புகழ்வன திகழொளி யனபுகழ் ததைவன
நறுமல ரணியணி முடியன நயபர நினதிருப் புயமதே. 7

தலைவி வாடைக்கு வருந்துதல்
கலிவிருத்தம்

புயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின்
நயங்கொளத் தகுபுகழ் நந்தி கச்சிசூழ்
கயங்களில் கடிமலர் துழாவிக் காமுகர்
பயங்கொளப் புகுந்தது பருவ வாடையே. 8

தலைவி இரங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாடை நோக வீசு மால் அம் மாரன் வாளி தூவுமால்
ஆடல் ஓதம் ஆர்க்கு மரல் என் ஆவி காக்க வல்லனோ
ஏடு லாவு மாலை சேரி ராசன் மல்லை நந்திதோள்
கூடினால லர்வ ராதுகொங்கு விம்மு கோதையே! 9

தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவற்
சோதி வெளுக்கில் வெளுமருங்கில் துவளின் நீயும் துவள்கண்டாய்
காது நெடுவேற் படைநந்தி கண்டன் கச்சி வளநாட்டு
மாத ரிவரோ டுறுகின்றாய் வாழி மற்றென் மடநெஞ்சே! 10

தோழி கூற்று
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நெஞ்சாகுல முற்றிங னேமெலிய
    நிலவின்கதிர் நீளெரி யாய்விரியத்
துஞ்சாநய னத்தோடு சொருமிவட்
    கருளாதொழி கின்றது தொண்டைகொலோ
செஞ்சாலி வயற்படர் காவிரிசூழ்
    திருநாடுடை நந்தி சினக்கலியின்
வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான்
    விடைமண்பொறி ஓலை விடேல்விடுகே. 11

தன் மன்னன் மாண்பை படைவீரன் எடுத்தியம்புதல்
கட்டளைக்கலித்துறை

விடுதிர்கொல் லோவள நாடுடை வீரரசற்கு முன்னின்று
இடுதிர்கொல் லோபண் டிறுக்குந் தீறையெரி கானத் தும்மை
அடுதிர்கொல் லோதிறல் நந்திஎம் கோனயி ராவதத்தில்
படுதிர்கொல் லோபடை மன்னீரென் னாமுங்கள் பாவனையே. 12

கார் வரவு கண்ட தோழி, தலைவியை ஆற்றுப்படுத்துதல்
வஞ்சி விருத்தம்

வனைவார்குழல் வேணியும் வாடைகணீர்
நனைவார் துகிலுமிவை நாளுமிரா
வினைவார்கழல் நந்திவி டேல்விடுகின்
கனைவார்முர சொத்தது கார் அதிர்வே. 13

யானை மறம் கண்டோ ர் கூற்று
தரவு கொச்சகக் கலிப்பா

அதிர்குரல மணிநெடுந்தேர் அவனிநா ரணன்களிற்றின்
கதிரொளிய வெண்மருப்புக் கனவயிரம் செறிந்ததால்
மதுரைகொலோ வடுபுலிக்கோன் நகரிகொலோ மாளிகை சாய்ந்து
எதிரெதிரே கெடநின்ற தெவ்வூர் கொல் அறியோமால். 14

நந்தி மன்னன் திருவடிச் சிறப்பு
நேரிசை வெண்பா

ஓம மறைவாணர் ஒண்பொற் கழல்வேந்தர்
தாம முடிக்கணிந்த தாளிப்புல் - கோமறுகில்
பாவடிக்கீழ்ப் பல்யானைப் பல்லவர்கோன் நந்திதன்
சேவடிக்கீழ்க் காணலாம் சென்று. 15

யானை மறம் கண்டோர் கூற்று
கட்டளைக் கலித்துறை

சென்றஞ்சி மேற்செங்கண் வேழம் சிவப்பச் சிலர் திகைப்ப
அன்றும் சினத்தார் இனமறுத்தார் போலும் அஃதஃதே
குன்றஞ்செய் தோள் நந்தி நாட்டம் குறிகுருக் கோட்டையின்மேற்
சென்றஞ்சப் பட்டதெல் லாம்படும் மாற்றலர் திண்பதியே. 16

நந்தி மன்னன் வீரம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெல்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா!
நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடைநந்தி!
மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே. 17

தலைவன், மடலேறத் துணிதல்
கலி விருத்தம்

ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்
தோட்குலாம் மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர்
வாட்குலாம் கண்ணினால் வளைத்த மம்மர்நோய்
மீட்கலாம் மடல் கையில் விரவும் ஆகிலே. 18

தோழி, தலைவனை இயற்பழித்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விரவாத மன்னரெலாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்டோ ன் தொண்டைக்
இரவாத பரிசெல்லாம் இரந்தேற்றும் பாவைமீர் எல்லீர் வாடை
வரவாதை உற்றிருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி
பரவாதை நந்திசெங்கோல் இதுவாகில் அதுபார்க்கும் பரிசு நன்றே. 19

தலைவன் இரவுக் குறியீடு இடையீட்டினால் வருந்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நன்றும் நெடி தாயவிர் கின்றதிரா
    நலிகின்றது மாருத சாலமெனக்கு
என்றின்னில வென்னும் இளம்பிறையும்
    எரியேசொரி கின்ற தியாதுசெய்கோ
அன்றிந்நிலம் ஏழும் அளந்தபிரான்
    அடலுக்ரம கோபன் அடங்கலர்போல்
இன்றென்னுயிர் அன்னவள் கொங்கையை விட்
    டெங்ஙன் துயில்கின்றன ஏழையனே. 20

வாழ்த்து
வஞ்சித்துறை

ஏழை மார்துணை
வாழி நந்திதண்
நீழல் வெண்குடை
ஊழி நிற்கவே. 21

தலைமகளின் வருத்தம் கண்ட செவிலி கூற்று
எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகை
விற்கொள் நல்நுதல் மடந்தை மார்மிக முயங்கு தோளவனி நாரணன்
நற்கொள் வார்மதிற் கச்சி நந்தி நலங்கொள் அன்னவன் அலங்கல் மேல்
ஒற்கம் என்மகள் உரைசெய் தோவுல களிப்பன் இத்திறன் உரைத்திடே. 22

பாண்: கண்டோ ர் கூற்று
இணைக்குறள் ஆசிரியப்பா

உரைவரம் பிகந்த உயர்புகழ்ப் பல்லவன்
அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவே லுயர்வு பாடினன் கொல்லோ
நெருநல் துணியரைச் சுற்றிப் 5
பரடு திறப்பத் தன்னால் பல்கடைத்
திரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப்பூப் பொலன்கலன் அணிந்து
விளங்கொளி ஆனனன் இப்போது 10
இளங்களி யானை எருத்தமிசை யன்னே. 23

இயலிடம் கூறல் : தலைவன் கூற்று
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்ன மடமயிலை ஆளி மதயானை நந்தி வறியோர்
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகுநீர தொண்டை வளநாட்டு
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அங்கை அகல்வான்
மின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே. 24

தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
    மான் கண்டால் மனைக்கே வாடி மாதர்
குயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்
    கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே! கூடாமன்னர்
எயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்
    இகல்கொண்டார் இருங்கடம்பூர் விசும்புக்கேற்றி
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
    அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன். 25

நந்தி மன்னன் வீரச் சிறப்பு
கலி விருத்தம்

நூற்க டற்புல வன்னுரை வெண்திரை
நாற்க டற்கொரு நாயகன் நந்திதன்
கோற்க டைப்புரு வந்துடிக் குந்துணை
வேற்க டற்படை வேந்தர்தம் வீரமே. 26

இதுவும் அது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வீர தீரன் நல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச் செருவென்றோன்
ஆர்வ மாவுளம் நின்றவர் அன்பன் மற்றவன்பெருங் கடைநின்ற
சேர சோழரும் தென்னரும் வடபுலத் தரசரும் திறைதந்த
வீர மாமத கரியிவை பரியிவை இரவலர் கவர்வாரே. 27

உடன் போக்கறிந்து செவிலி வருந்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன்
குமரிக் கொண்கன் கங்கை மணாளன் குரைகழல் விறல் நந்தி
அமரில் தெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் தரசர்கள் திரள்போகும்
இவரிக் கானத் தேகிய வாறென் எழில் நகை இவனோடே. 28

ஊசல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
    உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்
    அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
    கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
    காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல். 29

செவிலி கூற்று
கலி விருத்தம்

ஊசல் மறந்தாலும் ஒண்கழல் அம்மானை
வீசல் மறந்தாலும் மெல்லியல் என்பேதை
பூசல் இலங்கிலை வேல் பொற்கழல் நந்திநின
பாசிலை அந்தொண்டை அல்லது பாடாளே. 30

நந்தி மன்னனின் அரண்மனைச் சிறப்பு
நேரிசை வெண்பா

பாடிய நாவலரோ வேந்தரோ பல்புரவிப்
பீடியல் மாகளிற்றார் பிச்சத்தார் - கூடார்
படையாறு சாயப் பழையாறு வென்றான்
கடையாறு போந்தார் கலந்து. 31

தலைவன் தலைவியின் நலம்புனைந்துரைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கலங்கொள் அலங்கல் வேல் நந்தி கச்சி நாட்டோ ன் நவன்கழல்
புலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின் றோர்ற்கும் பொன்னாரம்
நலங்கொள் முறுவல் முகஞ்சாய்த்து நாணாநின்று மெல்லவே
விலங்கல் வைத்த மின்னோக்கின் மேலுமுண்டோ வினையேற்கே. 32

தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி, தலைவியை இற்செறிப்பறிவுறுத்தல்
கட்டளைக் கலித்துறை

வினையின் சிலம்பன் பரிவும் இவள் தன் மெலிவு மென்பூந்
தினையும் விளைந்தது வாழிதன் மீறுதெள் ளாற்றுநள்ளார்
முனையுமன் றேக முனிந்தபி ரான்முனையிற் பெருந்தேன்
வனையும் வடவேங் கடத்தார்தண் சாரலின் வார்புனமே. 33

தோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புனத்து நின்ற வேங்கைமேல் புகைந்தெ ழுந்த ஆனையின்
சினத்தை அன்றொ ழித்தகைச் சிலைக்கை வீரர் தீரமோ
மனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட திர்ந்தமான்
வனத்த கன்ற திர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பதே. 34

தலைவி கூற்று
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆர்க்கின்ற கடலோதம் ஆர்க்கும் ஆறும்
    அசைகின்ற இளந்தென்றல் அசையும் ஆறும்
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும்
    காணலாம் குருக்கோட்டை குறுகாமன்னர்
போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி
    பூதலத்து வடிம்பலம்பப் பூண்ட வில்லோன்
பார்க்கொன்று செந்தனிக்கோல் பைந்தார் நந்தி
    பல்லவர்கோன் தண்ணருள்யாம் படைத்த ஞான்றே. 35

தலைவன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தல்
கலி விருத்தம்

ஞான்ற வெள்ளருவி இருவி எங்கள் பொன்
தோன்றல் வந்திடில் சொல்லுமின் ஒண்சுடர்
போன்ற மன்னவன் நந்திதன் பூதரத்து
ஈன்ற வேங்கை இருங்கணிச் சூழ்ச்சியே. 36

மன்னன் உலாக் கண்ட தலைவி கூற்று
அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

சூழிவன்மத யானையின் பிடர்படு சுவடிவை சுவட்டின்கீழ்
வாழி இந்நில மன்னவர்வந் தனுதினம் இறைஞ்சிய வடுக்கண்டோ ம்
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடுங்கயிற றடிபட்ட
பாழி மன்னெடுந் தோள்வடுக் கண்டிலம் பல்லவ பகர்வாயே. 37

தோழி கூற்று
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பகரங்கொள் நெடுந்திவலை பனிவிசும்பில்
    பறித்தெறியப் பண்டு முந்நீர்
மகரங்கொள் நெடுங்கூல வரைதிரித்த
    மாலென்பர் மன்னர் யானை
சிகரங்கள் போன்மடியத் தெள்ளாற்றுக்
    கண்சிவந்தான் தென்னன் தொண்டி
நகரங்கைப் படுத்தபிரான் நந்திநர
    பதிபணிகோன் நங்கள் கோவே. 38

இதுவும் அது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நங்கள்கோத் தொண்டை வேந்தன்
    நாமவேல் மன்னர்க் கெல்லாம்
தங்கள்கோ னங்க நாடன்
    சந்திர குலப்பிர காசன்
திங்கள்போற் குடையின் நீழல்
    செய்யகோல் செலுத்தும் என்பர்
எங்கள்கோல் வளைகள் நில்லா
    விபரிதம் இருந்தவாறே. 39

இதுவும் அது
கட்டளைக் கலித்துறை

ஆறா விறலடு போர்வன்மை யாலமர் ஆடியப்பால்
பாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக்
கூறாள் இவளிளங் கொங்கை அவன்வளர் தொண்டையல்லால்
நாறா திவள் திரு மேனியும் நாமென்கொல் நாணுவதே. 40

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நாணா தித்திரு மடவார் முன்புநின்
    நன்பொற் கழலிணை தொழுதாரில்
பூணா கத்தொளிர் பொலனா கச்செய்த
    புதுமென் தொண்டைய தருளாயே
வாணா ளைச்சுளி களியா னைப்படை
    வயவே லடையலர் குலகாலா
கோணா மைக்கொருகுறையுண் டோ வுரை
    கொங்கா நின்னது செங்கோலே. 41

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செங்கோல் வளைக்கை இவளும் துவண்டு
    செறியாமை வாட எழிலார்
அங்கோல் வளைக்கை இளையார் இழப்ப
    அரசாள்வ தென்ன வகையோ
தங்கோல் வளைத்த திகழ்சேரர் சோழர்
    தமிழ் மன்னர் நின்ற நிலமேல்
வெங்கோல் நிமிர்த்த வரையும் சிவந்த
    விறல் நந்தி மேன்மொழி வையே. 42

தலைவன், கார்கண்டு பாகனொடு கிளத்தல்
கலிநிலைத்துறை

மொழியார் தொண்டைப் பன்மலர் முற்றும் தெருவந்து
விழியாள் என்றும் மேனி வெளுத்துற மெலிவாளே
ஒழியா வண்கைத் தண்ணருள் நந்திதன் ஊர்மட்டோ
வழியாம் தமரக் கடல் வட் டத்தொரு வண்கோவே. 43

தலைவி இரங்கல் : நிலவை வெறுத்துரைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஒருகோமகன் நந்தி உறந்தையர்கோன்
    உயர்நீள்வல யத்துயர் வாளைவளை
குருகோடு வயற்படர் காவிரியில்
    குலவும்புயல் கண்டு புகார்மணலில்
பெருகோடு நெடுங்கழி சூழ்மயிலைப்
    பெருமானது பேரணி நீள்முடிமேல்
தருகோதை நினைந்தயர் வேன்மெலியத்
    தழல்வீசுவ தோகுளிர் மாமதியே. 44

தோழி கூற்று : தன் நெஞ்சொடு கூறியது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்

மதியம் எரிசொரியும் மாலையம் மாலை
    மறந்தும் புலராது கங்குலெலாம் கங்குல்
கதிர்செய் அணிவண்டு காந்தாரம் பாடக்
    களிவண்டு புகுந்துலவுங் காலமாம் காலம்
பதியின் வளர்ந்தநறுந் தொண்டையங்கோன் நந்தி
    பல்லவர்க்கு நேராத பாவையர்தம் பாவை
விதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால்
    வினைமற்றும் உண்டோ நம் மெல்லோதி மாட்டே. 45

தலைவி கூற்று : வெறிவிலக்கல் பற்றி விளம்புதல்
தரவு கொச்சகக் கலிப்பா

மாட்டாதே இத்தனைநாள் மால்நந்தி வான்வரைத்தோள்
பாட்டாதே மல்லையர் கோன் பரியானைப் பருச்சுவடு
காட்டாதே கைதைப் பொழிலுலவும் காவிரிநீர்
ஆட்டாதே வைத்தென்னை ஆயிரமுஞ் செய்தீரே. 46

பாங்கன் தலைவனை வியத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை செறிந்திறு மருங்குற்கொம்பு
ஐய சாலவும் அவிரிழை அல்குலம் மதுமலர்க் குழலென்றால்
வெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி வீரவன் இவனைப் போய்
நைய நாமிவன் நகரிகை தொழுதிலம் நம்முயிர் அளவன்றே. 47

தலைவன், தலைவியின் கண்ணயந் துரைத்தல்
கட்டளைக் கலித்துறை

அளவுகண் டாற் குடங் கைத்துணை போலும் அரசர்புகும்
வளவுகண் டான் நந்தி மானோதயன் வையம் தன்னின்மகிழ்
தளவுகண் டாலன்ன வெண்ணகை யால்தமியே னதுள்ளம்
களவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே. 48

பாட்டுடைத் தலைவன் பெருமை கூறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குலமரபும் ஒவ்வாது பயின்றுவந்த
    குடித்தொழிலும் கொள்படையின் குறையும் கொற்றச்
சிலஅளவுஞ் சிந்தியாத் தெவ்வர் தேயத்
    தெள்ளாற்றில் செருவென்ற செங்கோல் நந்தி
புலஅரசைப் புறங்கண்ட புகழ்சேர் கோவே
    பூவலயம் தனிற்கரியாய் நின்ற மன்னா
சொலவரிய திருநாமம் உனக்கே அல்லால்
    சொல்ஒருவர்க் கிசையுமோ தொண்டைக் கோவே. 49

தோழி, தலைவியின் நிலை கிளத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கோவே மாலை மாலையர்க் கோவே வேண்டும் நிலவோகண்
கோவே மாலை மாலையது கொண்டார் குறுகு மாறறியேன்
கோவே மாலை நீள் முடியார் கொற்ற நந்தி கச்சியுளார்
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே. 50

இதுவும் அது
எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆகிடுக மாமை அணிகெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி பொருபுணரி சங்கு வளைமென்
நாகிடறு கானல் வளமயிலை யாளி நயபரனும் எங்கள் அளவே
ஏகொடி யனாக இவையியையும் வஞ்சி இனியுலகில் வாழ்வ துளதோ. 51

தலைவன், தலைவியின் இடைச்சிறுமையை வியத்தல்
நேரிசை வெண்பா

உளமே கொடிமருங் குண்டில்லை என்னில்
இளமுலைகள் எவ்வா றிருக்கும் - கிளிரொளிய
தெள்ளிலைவேற் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்றகோன்
தன்மயிலை அன்னாள் தனக்கு. 52

தலைவன் புறத்தொழுக்கத்தைத் தலைவி கூறி வருந்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தனக்குரிய என்கொங்கை தான் பயந்த
    மழகளிற்றுக் காக்கித் தன்பால்
எனக்குரிய வரைமார்பம் எங்கையர்க்கே
    ஆக்கினான் இகல்வேல் மன்னர்
சினக்கரியும் பாய்மாவுந் தெள்ளாற்றில்
    சிந்துவித்த செங்கோல் நந்தி
மனக்கினியான் அவனிட்ட வழக்கன்றோ
    வழக்கிந்த வையத் தார்க்கே. 53

பாங்கி கூற்று
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தார்வட் டக்கிளி மருவுஞ் சொற்பகர்
    தளரிடை தையல் வஞ்சிக்கின்று
ஏர்வட் டத்தினி மதிவெள் ளிக்குடை
    கொடிதென் றாலது பழுதன்றோ
போர்வட் டச்சிலை உடைவாள் பற்றிய
    பொருகடல் மல்லைப் புரவலனே!
பார்வட் டத்தனி மதயா னைப்படை
    உடையாய்! பல்லவர் அடலேறே! 54

இதுவும் அது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடலேறு வலத்துயர் வைத்தபிரான்
    அடலுக்ரம கோபன் அடங்கலர்தாம்
மடலேறிட வாகை புனைந்தபிரான்
    வடவேங்கட நாடுடை மன்னர்பிரான்
பெடையேறு நெடுங்கழி சூழ்மயிலைப்
    பெருமானது பேரருள் நீள்முடிமேல்
மிடலேறிய கோதை நினைந்தயர்வாள்
    மெலியத்தழல் வீசுஇம் மாமதியே. 55

தலைவி, வேனிற் பருவங்கண்டு வருந்துதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்
    வரிக்குயில்கள் மாவிலிளந் தளிர்கோதும் காலம்
சிலர்க்கெல்லாம் செழுந்தென்றல் அமுதளிக்கும் காலம்
    தீவினையேற் கத்தென்றல் தீவீசுங் காலம்
பலர்க்கெல்லாம் கோன் நந்தி பன்மாடக் கச்சிப்
    பனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடுங் காலம்
அலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்தூற்றுங் காலம்
    அகன்றுபோ னவர்நம்மை அயர்ந்துவிட்ட காலம். 56

தோழி கூற்று
கலி விருத்தம்

காலவினை வாணர்பயில் காவிரிநல் நாடா
ஞாலமொரு கோலின் நடாவுபுகழ் நந்தி
நீலமயில் கோதையிவள் நின்னருள்பெ றாளேல்
கோலவளை கோடலிது மன்னர்புக ழன்றே. 57

தலைவன், கையுறை மலரை ஏற்பித்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புரவலன் நந்தி எங்கள் பொன்னிநன் னாட்டு மன்னன்
வரமயில் போற்று சாயல் வாள் நுதற் சேடி காணும்
குரவலர் பொழிலிற் கோலக் கோட்டிடை யில்லை ஆகில்
இரவலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்கு வேனே. 58

தலைவி இரங்கல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நல்கும் நந்தியிந் நானிலங் காவலன்
    மாரவேள் நளிர்முத்தம்
மல்கு வெண்குடைப் பல்லவர்
    கோளரி மல்லலம் திண்தோள் மேல்
மெல்கு தொண்டையும் தந்தருள்
    கிலன்விடை மணியெடும் விடியாத
அல்லி னோடும்வெண் திங்களி னொடுமுளன்
    உய்வகை அறியேனே. 59

தலைவன், தலைவியின் உறுப்புநலம் புனைந்துரைத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன் தொண்டை
    அம்கனிபோல் சிவந்துதிரு முகத்துப் பூத்து
மறிந்துளதே பவளவாய் மருங்கில் ஆடும்
    வல்லியிடை மணிமுறுவல் முத்துச் சால
நெறிந்துளதே கருங்குழலங் குவளை கண்கள்
    நெடியவேய் தொடியதோள் நேர்ந்து வெம்மை
செறிந்துளவே முலைசிலையே புருவம் ஆகி
    அவர்நம்மைச் சிந்தைநோய் திருத்தினாரே. 60

பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு
இணைக்குறள் ஆசிரியப்பா

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!
தோள் துணை ஆக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகின்
அடங்கார் பெண்டிர் 10
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக் கும்மே
மாமத யானை பண்ணின்
உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே. 15 61

செவிலித்தாய் கூற்று
நேரிசை வெண்பா

ஓராதே என்மகளைச் சொன்னீரே தொண்டைமேல்
பேராசை வைக்கும் பிராயமோ - நேராதார்
ஆன்வலியால் கொண்ட அகன்ஞாலம் அத்தனையும்
தோள்வலியால் கொண்ட துயக்கு. 62

பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்
கட்டளைக் கலித்துறை

துயக்குவித் தான்துயில் வாங்குவித் தான்துயில் வித்திவனை
வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காவகத்து
முயக்குவித் தான்துகில் வாங்குவித் தான்முன நின்றிவளை
மயக்குவித் தானந்தி மானோ தயனென்று வட்டிப்பனே. 63

சம்பிரதம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வட்டன்றே நீர் இதனை மிகவும் காண்மின்
    மற்றைக்கை கொட்டினேன் மாவின்வித்தொன்று
இட்டன்றே பழம்பழுப்பித் துண்ணக் காண்மின்
    இவையல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று
அட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி
    அவனிநா ராயணன்பா ராளுங் கோமான்
குட்டன்றே மழைநீரைக் குடங்கை கொண்டு
    குரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின்றேனே. 64

தலைவி இரங்கல்
கட்டளைக் கலித்துறை

குடக்குடை வேந்தன்தென் னாடுடைமன்னன் குணக்கினொடு
வடக்குடை யான்நந்தி மானோ தயனிந்த வையமெல்லாம்
படக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பாரறியத்
துடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே. 65

தோழி கூற்று
கலி விருத்தம்

பிறைதவழ் செஞ்சடைப் பிறங்கல் நாரணன்
அறைகழல் முடித்தவன் அவனி நாரணன்
நறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபின்
இறைகெழு சங்குயிர் இவளுக் கீந்ததே. 66

தலைவன் சிறைப்புறத்தானாகத், தோழி செறிப்பறிவுறுத்தல்
கலி விருத்தம்

ஈகின்றது புனமும்தினை யாமும்பதி புகுநாள்
ஆகின்றது பருவம்இனி யாகும்வகை அறியேன்
வாழ்கின்றதொர் புகழ்நந்திதன் வடவேங்கடமலைவாய்த்
தேய்கின்றதொர் உருவத்தொடு திரிவாரது திறமே. 67

மன்னன் வீரத்தைப் படைவீரன் பகர்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திறையிடுமின் அன்றி மதில்விடுமின் நுங்கள்
    செருவொழிய வெங்கண் முரசம்
அறைவிடுமின் இந்த அவனிதனில் எங்கும்
    அவனுடைய தொண்டை அரசே
நிறைவிடுமின் நந்தி கழல்புகுமின் உங்கள்
    நெடுமுடிகள் வந்து நிகழத்
துறைவிடுமின் அன்றி உறைபதிய கன்று
    தொழுமின் அல துய்ந்தல் அரிதே. 68

தலைவன் தலைவியின் பேரழகை வியந்துரைத்தல்
கலி விருத்தம்

அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்
உருவுடை இவள் தாயர்க் குலகொடு பகையுண்டோ . 69

மதங்கியார்
தரவு கொச்சகக் கலிப்பா

பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்
தகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு
மிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ. 70

செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்
கலிநிலைத்துறை

வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு
பூண்டாள் நங்காய் அன்றிவள் என்றால் பொல்லாதோ
மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி
மீண்டான் நந்திக்கு என்மகள் தோற்கும் வெண்சங்கே. 71

தலைவி இரங்கல்
வெண்டுறை

வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான்
வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்
தண்செங்கோல் நந்தி தனிக்குடைக்கீழ் வாழாரின்
கண்சிம் புளியாநோய் யாமோ கடவோமே. 72

இதுவும் அது
கலி விருத்தம்

கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை
மடற்கூறு தோறு மலிமல்லை கங்குல்
அடற்கூடு சாவே அமையா தவர்வை
திடற்கூறு வேனுக் கேதாவி உண்டோ . 73

தோழி கூற்று
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உண்டிரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே
    ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடித்
தண்டலையில் பூங்கமுகம் பாளை தாவித்
    தமிழ்தென்றல் புகுந்துலவும் தண்சோ ணாடா!
விண்டொடுதிண் கிரியளவும் வீரம் செல்லும்
    விடேல்விடுகு! நீகடவும் வீதி தோறும்
திண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச்
    செங்கோலன் அல்லையோ நீசெப் பட்டே. 74

தோழி, தலைவியின் உறுப்பு நலனை எழுதுதல் அரிதெனல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார்
    நாண்நெடும் தெள்ளாற்றில்
வட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன்
    மல்லையின் மயிலன்னாள்
விட்ட கூந்தலும் விழியும்நன் முறுவலும்
    நுதல்மிசை இடுகோலம்
இட்ட பொட்டினோ டிளமுலைப் போகுமும்
    எழுதவும் ஆகாதே. 75

கலி நிலைத்துறை

ஆகாதுபோக மயில்வினைத் தகன்ற லவன்கை
போகாத சங்கு அருளார் என்ற போதுவண்டோ
...... ....... ...... ...... ....... ...... .......
...... ....... ...... ...... ....... ...... ....... 76

தோழி, தலைவியின் நிலைகண்டு வருந்தியுரைத்தல்
கட்டளைக் கலித்துறை

காவி அனந்தம் எடுத்தான் மதன்கைக் கரும்பெடுத்தான்
மேவி யளந்த வனம்புகுந் தானினி வேட்டஞ்செய்வான்
ஆவி அனந்தமுண் டோ உயிர் தான்விட் டகலுமுன்னே
தேவியல் நந்திக்கங் காரோடிச் செய்குவர் விண்ணப்பமே. 77

மறம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அம்பொன்று வில்லொடிதல் நாண் அறுதல்
    நான்கிழிவன் அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி
    வரவிடுத்தார் மன்னர் தூதர்
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்
    நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும்
    நெடுவளையும் குனிந்து பாரே. 78

செவிலி, தன்னை நொந்துரைத்தல்
அறுசீரடி ஆசிரிய விருத்தம்

பாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்தில்
கோவையேய் நந்தி காக்கும் குளிர்பொழில் கச்சி அன்னாள்
பூவையம் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே
மாவியல் கானம் போந்த தறிகிலேன் மதியிலேனே. 79

தோழி கூற்று
அறுசீரடி ஆசிரிய விருத்தம்

நீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி
மூண்டதாம் மதியி னோடே முயங்குதார் வழங்கும் தெள்ளாற்
ஈண்டினார் பரியும் தேரும் இருகை வென்றொருகை வேழம்
தூண்டினான் நந்தி இந்தத் தொண்டைநாடுடைய கோவே. 80

நற்றாய் இரங்கல்
வெண்டுறை

கோலக்கொடி அன்னவர் நீள்செறுவில்
    குறுந்தேன்வழி கொண்ட லருங்குவளை
காலைப்பொழு தின்னெழு கன்னியர்தம்
    கண்ணின்படி காட்டிடு கச்சியின்வாய்
மாலத்தெள் ளாறெறிந்த மானோ
    தயன் குடைக்கீழ்
ஞாலத்தோ டொத்ததே நான்பெற்ற
    நறுங்கொம்பே. 82

தோழி கூற்று
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கொம்புயர் வாமை நாகம் எதிர்வந்த
    நந்தி குலவீரர் ஆகம் அழியத்
தம்பியர் எண்ண மெல்லாம் பழுதாக
    வென்ற தலைமான வீர துவசன்
செம்பியர் தென்னர் சேர ரெதிர்வந்து
    மாயச் செருவென்ற பாரி முடிமேல்
வம்புயர்தொண்டை காணும் மடமாதர்
    தங்கை வளைகொண்ட தென்ன வலமே. 83

தலைவனது சிறப்பு
குறள்வெண்செந்துறை

வலம்வரு திகிரியும் இடம்வரு பணிலமும்
    மழைதவழ் கொடிபோலக்
குலமயில் பாவையும் எறிகடல் வடிவமும்
    இவைஇவை கொண்டாயே. 84

தோழி கூற்று
கலி விருத்தம்

கொண்டல் உறும்பொழில் வண்டின மாமணி
வண்டல் இடுங்கடல் மல்லைகா வலனே!
பண்டை மராமரம் எய்தபல் லவனே!
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே. 85

தலைவி தன் தோழியர்களைப் பார்த்துக் கூறல்
நேரிசை வெண்பா

தோளான் மெலியாமே ஆழ்கடலால் சோராமே
வாளா பெறலாமே வாயற்றீர் - கேளாதார்
குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்
அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள். 86

தோழி கூற்று
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அருளான தெங்கையர்க்கே அன்னாயென்
    றியம்பிடுமெங் கன்னி செஞ்சொல்
தெருளாமேல் நல்குநந்தி தெள்ளாற்றில்
    பொருதபோர் தன்னில் அந்நாள்
இருளான மதகரியும் பாய்மாவும்
    இரதமுங்கொண் டெதிர்ந்தார் தம்முன்
மருளாமே நன்கடம்பூர் வானேற
    வளைந்துவென்ற மன்னர் ஏறே. 87

இதுவும் அது
அறுசீரடி ஆசிரிய விருத்தம்

ஏறுபாய விளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக்கொங்கை
வீறு பாயக் கொடுக்கின்ற விடலை யார்கோ என்கின்றீர்
மாறு பாயப் படைமன்னர் மாவும்தேரும் தெள்ளாற்றில்
ஆறு பாயச் சிவந்ததோ ளிணைகா விரிநா டாள்வானே. 88

இதுவும் அது
கலி விருத்தம்

ஆயர் வாய்க்குழற் காற்றுறு கின்றிலள்
ஏயு மாங்குயிற் கென்னைகொல் ஆவதே
தேயம் ஆர்புகழ்த் தேசபண் டாரிதன்
பாயல் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே. 89

தலைவி கூற்று : புள்ளொடு புகலல்
கட்டளைக் கலித்துறை

துளவுகண் டாய்பெறு கின்றிலம் சென்றினிச் சொல்லவல்ல
அளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட
விளைவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறல் மாரன்செய்த
களவுகண் டாய்நந்தி மல்லையங் கானற் கடற்கம்புளே. 90

மன்னன் மாலையின் மாண்பு
நேரிசை வெண்பா

என்னையா னேபுகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும்
மன்னர்கோன் நந்தி வரதுங்கன்-பொன்முடியின்
மேல்வருடும் தொண்டை விரைநாறும் இன்னமும் என்
கால்வருடும் சேடியர்தம் கை. 91

தலைவன் தலைவியின் இடையை வியத்தல்
நேரிசை வெண்பா

கைக்குடமி ரண்டும் கனக்கும் பக்குடமும்
முக்குடமுங் கொண்டால் முறியாதே - மிக்கபுகழ்
வேய்க்காற்றி னால்விளங்கும் வீரநந்தி மாகிரியில்
ஈக்காற்றுக்(கு) ஆற்றா இடை. 92

நந்தியின் கொடைப் பெருமை
நேரிசை வெண்பா

இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே அல்லவோ - நந்தி
தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி
அடங்கப்பூ பாலரா னார். 93

நந்தியின் நாட்டில் முத்துச் சிறப்பு
கட்டளைக் கலித்துறை

அடிவிளக் கும்துகில் ஆடை விளக்கும் அரசர்பந்திப்
பிடிவிளக் கும்எங்கள் ஊரார்விளங்கும் பெரும்புகழால்
படிவிளக் கும்நந்தி எங்கோன் பெரும்படை வீட்டுக் கெல்லாம்
விடிவிளக் கும்இது வேநாங்கள் பூண்பதும் வெண்முத்தமே. 94

நந்திமன்னன் வருகைச் சிறப்பு
நேரிசை வெண்பா

ஏம வரைசலிக்கும் ஏழாழி யுங்கலங்கும்
காம வயிரி களங்கறுக்கும் - சோமன்
வருநந்தி யானத்து மானாரை விட்டுப்
பொருநந்தி போந்த பொழுது. 95

நந்திமன்னன் வீரம்
கட்டளைக் கலித்துறை

ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்
தேரும் உடைத்தென்பர் சீறாத நாள்நந்தி சீறியபின்பு
ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வன மும்
தேரும் உடைத்தென்ப ரேதெவ்வர் வாழும் செழும்பதியே. 96

தலைவன் தன் தேர்ப்பாகனுக்குக் கழறல்
கட்டளைக் கலித்துறை

திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்
மருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகின் மகுடரத்னப்
பரித்தேரும் பாகுமங் கென்பட்ட வோவென்று பங்கயக்கை
நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்ப ளேவஞ்சி நெஞ்சுலர்ந்தே. 97

தலைவி கார்ப்பருவங்கண்டு வருந்துதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிவனை முழுதும் மறவாத சிந்தையான்
    செயமுன் உறவு தவிராத நந்தி யூர்க்
குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்
    குமிழி சுழியில் விளையாடு தும்பியே!
அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே
    அவரும் அவதி சொனநாளும் வந்ததே
கவலை பெரிது பழிகாரர் வந்திலார்
    கணவர் உறவு கதையாய் முடிந்ததே. 98

நந்தி மன்னன் மாலைச் சிறப்பு
நேரிசை வெண்பா

தொடர்ந்து பலர் இரந்த தொண்டையந்தார் நாங்கள்
நடந்த வழிகள் தொறும் நாறும் - படர்ந்த
மலைகடாம் பட்டனைய மால்யானை நந்தி
முலைகடாம் பட்டசையா முன். 99

தலைவி வருந்தல்
தரவு கொச்சகக் கலிப்பா

நம்ஆவி நம்கொழுநர் பாலதா நம்கொழுநர்
தம்ஆவி நம்பால தாகும் தகைமையினால்
செம்மாலை நந்தி சிறுகுடிநாட் டன்னமே!
தம்ஆவி தாமுடையர் அல்லரே சாகாமே. 100

காலம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்

மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியுங் காலம்
    மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொறியும்காலம்
    கோகனக நகை முல்லை முகைநகைக்கும் காலம்
செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் மேகத்
    தியாகியெனு நந்தியருள் சேராத காலம்
அங்குயிரும் இடங்குடலும் ஆனமழைக் காலம்
    அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம். 101

இதுவும் அது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்னையரும் தோழியரும் அடர்ந்துபொருங் காலம்
    ஆனிபோய் ஆடிவரை ஆவணியின் காலம்
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து
    பொற்பவள வாய்திறந்து பூச்சொறியும் காலம்
செந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்
    தியாகியெனும் நந்திதடந் தோள்சேராக் காலம்
என்னையவ அறமறந்து போனாரே தோழி!
    இளந்தலைகண் டேநிலவு பிளந்தெரியும் காலம். 102

தலைவி பாணரைப் பழித்துரைத்தல்
நேரிசை வெண்பா

ஈட்டி புகழ்நந்தி பாண! நீ எங்கையர் தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீயென்றேன் நான். 103

செவிலி இரங்குதல்
கட்டளைக்கலித்துறை

கோட்டை இடித்தகழ் குன்றாக்கிக் குன்றகழ் ஆக்கித் தெவ்வர்
நாட்டை மிதிக்கும் கடாக்களிற் றான்நந்தி நாட்டி னில்பொன்
தோட்டை மிதித்தந்தத் தோட்டூடு பாய்ந்து சுருள் அளகக்
காட்டை மிதிக்கும் கயற்கண்ணி யோசுரம் கால்வைப்பதே. 104

தலைவி வருந்தல்
நேரிசை வெண்பா

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்- பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய். 105

பாலனைப் பழித்தல்
கட்டளைக் கலித்துறை

சதிராக நந்தி பரன்தனைக் கூடிய தையலரை
எதிராக்கி என்னை இளந்தலை ஆக்கியென் அங்கமெல்லாம்
அதிராக்கித் தூசும் அழுக்காக்கி அங்கம் அங் காடிக்கிட்ட
பதராக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே. 106

மேகவிடுதூது
நேரிசை வெண்பா

ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில் வெறும்
கூடு வருகுதென்று! கூறுங்கள் - நாடியே
நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்
சந்திச்சீர் ஆமாகில் தான். 107

நிலவைப் பழித்தல்
தரவு கொச்சகக் கலிப்பா

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நல்நாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே. 108

நந்திமன்னன் கொடைச் சிறப்பு
நேரிசை வெண்பா

செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த
தையல் உறவு தவிர்ந்தோமே - வையம்
மணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி
இணக்கம் பிறந்தநாள் இன்று. 109

கையறுநிலை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
    மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
    கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
    செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என்கலியும் எவ்விடம் புகுவேம்
    நந்தியே நந்தயா பரனே.

[இப் பாடல் வேறு சுவடிகளில் சில வேறுபாடுகளுடன் கீழ்க் கண்டவாறு காணப்படுகின்றது]

வானுறை மதியில் புக்க துன் தட்பம்
    மறிகடல் புக்கதுன் பெருமை
கானுறை புலியிற் புக்கதுன் சீற்றம்
    கற்பகம் புக்கதுன் கொடைகள்
தேனுறை மலராள் அரியிடம் புகுந்தாள்
    செந்தழல் புக்கதுன் மேனி
யானுமென் கலியும் எவ்விடம் புகுவோம்
    நந்தியே எத்தைபி ரானே. 110

தலைவன், தலைவியின் உறுப்புநலனைப் புகழ்தல்
கட்டளைக் கலித்துறை

வாரூரும் மென்முலை வார்த்தைகண் டூரும் மதிமுகத்தில்
வேரூரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்குத்
தேரூரும் மால்நந்தி தேசபண் டாரிதெள் ளாறை வெற்பில்
காரூர் குழலிக்குக் காதள வூரும் கடைக்கண்களே. 111

மிகைப் பாடல்கள்
நேரிசை வெண்பா

ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா. 1

வஞ்சி விருத்தம்

புரம் பற்றிய போர்விடை யோனருளால்
வரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும்
உரம் பெற்றன ஆவன உண்மையன்னான்
சரம்பற்றிய சாபம் விடுந்தனையே. 2

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணென்பது மிலையேமொழி வாயென்பது மிலையே
    காதென்பது மிலையேஇது காலந்த னினடைவோ
நண்ணும்பனை யோலைச்சுரு ளரசன்றிரு முகமோ
    நண்ணாவரு தூதாவுனை விண்ணாட்டிடை விடுவேன்
பண்ணும்புல வெட்டுத்திசை யேகம்பல வாணா
    பாபத்திற லோனந்திதன் மறவோர் களிடத்தே
பெண்ணென் பவன் வயைக்கிழி தூதன் செவி அறடா
    பெண்ணுங்கிடை யாதிங்கொரு மண்ணுங் கிடையாதே. 3

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பருவ முகிலெழுந்து மழைபொழியுங் காலம்
    பண்டுறவாக் கியதெய்வம் பகையாக்குங் காலம்
வருவர் வருவர் என்று வழிபார்க்குங் காலம்
    வல்வினையேன் தனியிருந்து வாடுமொரு காலம்
ஒருவர்நமக் குண்மை சொலி உரையாத காலம்
    ஊருறங்க நம்மிருகண் உறங்காத காலம்
இருவரையும் இந்நிலம்விட் டழிக்கின்ற காலம்
    இராசமன்னன் நந்திதோள் சேராத காலம். 4

நேரிசை வெண்பா

இரும்புழுத புண்ணிற்கு இடுமருந்தோ அன்றோ
அருந்துயரம் தீர்க்கும் அனையே - பெரும்புலவர்
தன்கலியைத் தீர்க்கும் தமிழாகரன் நந்தி
என்கலியைத் தீர்ப்பா னிலன். 5
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247