உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
படிக்காசுப்புலவர் இயற்றிய புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் காப்பு அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம் நற்பகத்தை யிற்கொடித்தே னண்பகத்தை நிலராக்கி நலங்கொண் மாதர், பொற்பகத்தை நாடவுணன் மார்பகத்தைப் பிளந்தாவி போக்கி னானை, வெற்பகத்தை யடியவர்கள் விருப்பகத்தைப் புள்ளிருக்கு வேளூர் மேய, கற்பகத்தைக் கைதொழுது கலம்பகத்தை யிலம்பகமாய்க் கழறி னேனே. நூல் ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா சீர்கொண்ட நெடுமாலுந் திசைமுகனு மடிவருடக் கார்கொண்ட திருமிடற்றுக் கருணையுருக் கொண்டாங்கு வடதிசையி லுறையிமய மலைமகடென் றிசைநோக்கக் குடதிசையையெதிர்நோக்கிக் குணதிசையிற்கதிரவன்போற் கள்ளிருக்கு மலர்ச்சோலைக் களிவண்டியா ழிசைமுரலும் புள்ளிருக்கு வேளூரிற் பூங்கோயி லமர்ந்தனையே. இது ஆறடித்தரவு சம்பாதி யருச்சிப்பத் தம்பிசடா யுவும்பரவச் செம்பாதி யவள்வணங்கத் திருப்பாத மளித்தனையே. நிருபதங்க னளகேச னேரியர்கோன் சோணாட்டில் வருபதங்கன் குகன்செவ்வாய் மாபதங்கன றனைப்போல விருபதங்கண் டருச்சிப்ப வென்பதங்க முருக்கினையே. இருங்குழலும் வீணையும்போ லிசைமுரல்வண் டறையொலியா, வொருங்குழலும் பெருங்கணையைந் துடையோனை வென்றடர்த்துங், கருங்குழலும் பசுந்தோடுங் கனதன முஞ் சுமந்துசிறு, மருங்குழலுந் தையலுமை மையலுமை வருத்தியதே. இம்மூன்றும் ஈரடியுமூவடியு நாலடியுமாய்வந்த தாழிசை குழையணி குழையினை குனிசிலை சிலையினை யுழைமழு வுழையினை யுடையத ளுடையினை. பலிவிர விரவினை பணியணி பணியினை யுலகுரு வுருவினை யொருவிடை விடையினை. சரணுறு சரணினை தலைமலை தலையினை யருளளி யளியினை யகலெரி யகலினை. ஒருவினை யொருவினை யுளமறை மறையினை புரமம ரமரினை புரைதவிர் புரையினை. இவைநான்கும் ஈரடியராகம் வீசலை முழக்கமும் விழாவும் பூசையுங் கோசலை மகன்புரி கோயில்கொண்டனை. சிரம்வெகுண் டறுத்தவத் தீமை தீர்ந்திடப் பிரமகுண் டத்தினிற் பெரிது வாங்கினை. இவையிரண்டும் நாற்சீரீரடி யம்போதரங்கம் கண்டல்வீ ழயன்சிரங் கரத்தி லேந்தினை. கொண்டன்மே னியன்விழி காலிற் கொண்டனை. சந்திர கலையினைத் தளையிற் றாங்கினை. கந்திரு வரையிரு காதிற் சேர்த்தனை. இவைநான்கும் நாற்சீரோரடி யம்போதரங்கம் கடகரி யுரிவை யுரித்தனை, கதழ்திரி புரமு மெரித்தனை. விடமுகிழ் கரியமிடற்றினை, விறன்மத னெரிய வுடற்றினை. இவை நான்கும் முச்சீரோரடி யம்போதரங்கம் மலைவ ளைத்தனை, யமர்வி ளைத்தனை. மறைது தித்தனை, முறைவி தித்தனை. யலர்மு டித்தனை, சபைந டித்தனை. யரவ சைத்தனை, யறமி சைத்தனை. இவையெட்டும் இருசீரோரடி யம்போதரங்கம் எனவாங்கு, இது தனிச்சொல் கள்ளூர் கழனிப் புள்ளூ ரடைந்துந் தென்புலத் தமர்ந்த நன்புன லாடியு மாவண வீதி மூவலம் வந்துந் தள்ளையை யறுமுகப் பிள்ளையை வணங்கியும் விண்மருந் துதிக்கு மண்மருந் தருந்தியுங் குருவடி வாயநின் றிருவடி யடைந்தே னாயினை யிதுவுமோர் பேயென விகழாது சிறப்புறத் தமியேன் பிறப்பறுத் தருளா யாராவமுதே யடியர்தந் தீரா வல்வினை தீர்த்தவெம் பரனே. 1 இது பத்தடி நேரிசையாசிரியச் சுரிதகம் நேரிசைவெண்பா பரமானந் தத்தற் பரஞ்சுடரென் றேத்தப் பிரமானந் தத்தினிலை பெற்றார் - வருமானைக் கந்தனையும் பெற்றார் கருதியபுள் ளூர்வணங்கி வந்தனையும் பெற்றார் மகிழ்ந்து 2 கட்டளைக் கலித்துறை மகமத் தனையும் புரிவித் தவனையும் வாழ்வித்தகோன் சகமத் தனையு மனையுமில் லானென்று சாற்றுமைந்து முகயத் தனையுமப் புள்ளூரை யுந்தொழு முத்தர்கண்டீர் சுகமத் தனையும் பெறவாழ்ந் திருந்து சுகிப்பவரே 3 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் சுகத்திலே யிருந்துவளர் பிரமபதம் விண்டுபதஞ் சுவர்க்க மெல்லா, மிகத்திலே யின்பமல்லா லத்தனையு முத்தியென வெண்ண வேண்டா, செகத்திலே புகழ்படைத்த வெளூர ரிருபாதஞ் சேவித் தோர்கண், முகத்திலே விழித்தாலும் போதுமையா வவர்சேவன் முத்தர் தாமே. 4 மேற்படி வேறு தாது வண்டறை யூது கொன்றையர் தாம மர்ந்தபுள்ளூர் நாதர் தொண்டர்தம் வீடறிந்தொரு நாள ருந்தினர்தா மோத நஞ்சொடு வேடனுண்டதொ ரூனு முண்டனர்மா மாதர் தங்கிய மாவ னந்தனின் மாவி ருந்தினரே 5 மேற்படி வேறு மாவிருக்குந் தலத்திரண்டு மருந்திருக்கு மவரிடத்தில் வைத்திய நாதர், சேவிருக்குங் கொடியுடையார் சென்றிருக்குந் தேடரியார் செவியின் மூவர், பாவிருக்கு மவர்சடை மேற் பாம்பிருக்கு மால்பணியும் பாதத் தேகட், பூவிருக்கு மடையாளம் புள்ளிருக்கு வேளூரெம் புனித னார்க்கே. 6 கேசவனு நான்முகனு மறுமுகனுங் கிம்புருடர் கெருடர் விண்ணோர், வாசவனு நீள்விசும்பு வழிக்கொள்ளிற் புள்ளூரை வலமாய் வான்புண், ணேசவன மயில்யானை முதலான வாகனங்க ணீத்தெம் பாவ, நாசவனங் கொன்றைவன மென்றிழிந்து பார்மீது நடப்பர் தாமே. 7 நடப்பர்சிலர் வேளூரர் சந்நிதிக்கே சேர்வர்சிலர் நண்ணி நீட்டிக், கிடப்பர்சிலர் நல்வரங்கள் கேட்பர்சிலர் கேட்டவரங் கிட்டி யவ்வூர், கடப்பர்சிலர் தலமகிமை கற்பர்சிலர் நிற்பர்சிலர் கண்டுசேவித், திடப்பயணத் திளைப்பர்சிலர் கண்டுசில ரதிசயப்பட் டிருப்பர் தாமே. 8 கட்டளைக் கலித்துறை தாதுண்டு வண்டறை வேளூ ரரனுண்டு தையலென்னு மா துண்டு கொண்ட மருந்துண் டிதைப்பற்ற மாநிலத்தி லேதுண் டுனக்கு மடநெஞ்ச மேயிசை கேட்கவிரு காதுண்டு கூப்பக் கரமுண்டு நோக்கவுங் கண்களுண்டே. 9 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கண்ணுண்டு வானவர்க்கோர் மதியுண்டு கதியடையக் கருத்துமுண்டு, தண்ணுண்டு வலைதெறித்தான் முத்திதரத் தீர்த்தமுண்டு தைய லென்னும், பெண்ணுண்டு நல்லமுத்துப் பிள்ளையுண்டு வினைதீர்த்த பெருமான் பக்கல், மண்ணுண்டு பிறப்பறுக்க மாட்டாமன் மருந்துண்டு மயங்கு வாரே. 10 நேரிசை வெண்பா மயங்காது வேளூரா மாலைதந்தா லுள்ளந் தியங்காது சிந்தைநோய் தீரு-முயங்காது மையலாங் கண்டீர வத்தையினி வெல்லா முய்யலாங் கண்டீ ருயிர். 11 இரங்கல் தாழிசை உய்யாலாகு மெனநினைந்து வள்ளல்புள் ளிருக்குவே ளூரைநாடி யும்மைநாடி யுற்றுவந்த பேர்களைக் கையினா லழைக்கின்முன்பு கண்டபேர்க ளென்சொலார் காமனைக்கடிந்தபேர்கள் காமநோ யுழப்பரோ மையனோய் தனக்குநீர் மருந்தறிந்த தில்லையோ வந்த வந்த பேர்களுக்கு மண்மருந் தளிக்கிறீர் தையலம்மை காணினென்ன சண்டைவந்து விளையுமோ சடையினான் மருட்டுகின்ற சலுகையென்ன சலுகையே. 12 புயவகுப்பு கையினுக்குநே ராம்வரிச்சிலை யாயொரு கனகக் கிரியைக் குனித்தெதிர்ந்தன கல்லிழைத்தபூ ணார்மணிப்பணி யாகிய கனபொற் பணியைப் பெறச்சுமந்தன கையரைக்கொல்கூர் வாய்மழுப்படை யோடொரு கழுமுட்படையைச் செலுத்துகின்றன கைவசப்படா தான்மகத்தியை மேவிய கதிர்பற் சிதறத் தகர்த்தறைந்தன. 12 1/4 ஐயமிட்டசோ றேயிரப்பவ ராய்நக ரகரத் தெருவிற் பலிக்குழன் றன வல்லலுற்றவா னோர்பயப்படும் வேளையி லருள்வைத் தபயத் தினிற்புரந்தன வைவருக்குளோர் கோவடித்திட வேபொரு தவனெய்த் திடமற் பிடித்துடன றன வல்லையொத்தகூர் வாளரக்கனை நேமிகொ டறம்விட் டவனைக் கழுத்தரிந்தன. 12 1/2 தையலுக்குமா லாய்வளைக்கையி னாலவ டழுவத் தழுவத் தவக்குழைந்தன சைவருக்குமே லாயுதித்திடு மூவர்க டலைமைத் தமிழைத் தரித்திருந்தன சையமுற்றபால் போல்வெளுத்திட வேநல தவளப் பொடியைக் குழைந்தணிந்தன தள்ளிலத்திபோ லேவிழப்பிர மாவொரு தலையைத் திருகிப் பறித்தெறிந்தன. 12 3/4 பொய்யுரைத்தலா லேயகற்றிய கேதகை பொருமப் பொருமத் தவிர்த்தொ ழிந்தன புல்லெருக்குவேர் கூவிளத்தொடு தாதகி புனையப் புனையப் பொறுத்தமர்ந்தன புள்ளிபட்டகூர் வாளெயிற்றொடு தாவிய புலியைக் கரியைப் புடைத்துவென் றன புள்ளிருக்குவே ளூர்வயித்திய நாயகர் புளகக் களபத் திருப்புயங்களே. 13 கட்டளைக் கலித்துறை புயலார் வரையொன் றிருசுடர் தீயிற் பொருந்துகண்மூன் றயலார் துதிக்கு மறைநான் கெழுத்தஞ் சறுமுகன்சே யியலா ரெழுசுர மெண்டோள் வடிவங்க ளென்பதொன்பான் செயலா லழித்தனர் வேளூரர் வீரன் சிரங்கள்பத்தே. 14 சம்பிரதம் பதினான்குசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் பத்தா யிரங்கோடி யண்டபகி ரண்டங்கள் பண்ணுவன் கண்ணனைப்போற், பாரினை யளப்பன்வட மேருவுங் கடுகெனப் படிறுபொய்க் களவு செய்வ, னித்தா ரணிக்குளக் கடுகுமலை யாக்கிடுவ னிரவினைப் பக லாக்குவ, னித்தனையு நம்முடைய சீடனுடை வித்தையிவை யிந்திரசா லங்க ளல்ல, முத்தான பிள்ளையுந் தேவியுந் தானுமாய் மூவர்க்கும் வரமருளியே, முப்பத்து முக்கோடி தேவருந் தெண்டனிடு மூர்த்திபுள் ளிருக்கு வேளூர், சித்தாமிர் தக்குளத் தீர்த்தநீ ராடினோர் திவலைக டெறித்த வுடனே, தீராத நோயையும் போகாத பேயையுந் தேடிப் பிடிப் பிப்பனே. 15 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் பிடிநடை மலர்மகள் புவிமகள் புடையது பெரியது கரியதுநீ, ளடிமுடி யுடையது நிசிசர ரொடுமிடி யனையது மனையதுநீள், கடியுடை யிதழியர் கதழெரி யனையவர் கழுமல முடையவர்கூர், வடிவுடை மழுவினர் மருவுபுள் ளுறை பதி மதியினர் மழவிடையே. 16 மேற்படி வேறு விடவிப்பே தைமைதவிர்த்தே வினைதீர்த்தா ரடைந்தவர்க்கும் விதனந் தீரத், தடவிப்பே ரருள்புரியுந் தம்பிரான் வேளூரைச் சார்ந்தோர்க் கெல்லா, மடவிப்பே யெனச்சுழலுமாசைப்பேய் சந்நிதிக்கே யாடுகின்ற, புடவிப்பேய் தொடர்ந்துவரும் பிறவிப்பே யத்தனையும் போக்க லாமே. 17 இரங்கல் பதின்முச்சீர்க்கழிநெடில் விருத்தம் போரார் மழவிடை யுகைப்பவர் வாழ்வுறு சோணா டுடையவர் புடைத்திட வேவளர் பூணார் கனதன கிரித்தைய லாளுமை யொருபாகர், வேரார் சதுர்மறை துதித்திட வேவளர் நீள்கா விரிவட கரைத்திசை மேவிய வேளூ ருடையவர் வயித்திய நாயகர் வரைபோல்வீ, ராரா மயலிது பொறுக்கறியேனொரு பேய்போ லறிவினை மயக்குதை யோவினி யாராகிலுமொரு மருத்துவ ராலிது தணியாதோ, நீரா கிலுமிதை நிறுத்திடு வீரெனி னானா கிலுமினி விலைப்படு வேன்மிக நீள்சா தனமுறி யெழுத்திடு வேனினி மடவீரே. 18 வஞ்சி விருத்தம் மடவர றிருமகண் மாலோடே புடவிமின் வழிபடு போதாலே விடமிட றுடையவர் வேளூரே யடல்விடை யுடையவ ராரூரே. 19 அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் ஆருண்டா ரெனினுமவ ரண்டராய்ப் பிறப்பேழு மகற்றா நின்றார், காருண்ட திருமேனிக் கண்ணனார் கண்ணாரக் கண்டி லாரோ, பாருண்ட மண்ணையெல்லா மேனுண்டார் வேளூரெம் பரமகுண்டத், தோருண்டை மண்ணையுண்டா லையிரண்டு பிறப்புமவர்க் கொழிக்க லாமே. 20 ஆவணத்தார் சூடிவரு காவணத்தா ரேறியவா வணத்தார் செஞ்சொற், பாவணத்தார் மறையோது நாவணத்தார் மேகலையம் பணத்தா ராழி, மாவணத்தார் மழவிடையாந் தீவணத்தா ரிதழியந்தார் மணத்தார் நாக, கோவணத்தா ரினிதுறையும் பூவணத்தார் வேளூரெண் குணத்தார் தாமே. 21 பிச்சியார் தாண்டிச்சென் மதர்விழியும் வெண்ணீறுங் கஞ்சுளியுந்தனமுங் கண்டாற், பூண்டிச்சி யாதவரு மிச்சிக்குந் தகைச்சியார் புளகக் கொங்கைத், தோண்டிச்சி யார்வேளூர்ப் பிச்சியா ரெனவந்து தோன்று மிந்த, வாண்டிச்சி யாரழகைக் காண்டிச்சி யாதவரா ரவர்நச் சாரே. 22 கழிக்கரைப் புலம்பல் கட்டளைக் கலிப்பா சால மேவுங் கருங்கடற் சங்கமே சபையெ லாமென் விரகப்ர சங்கமே மாலு லாவுங் கழிக்கரைக் கம்புளே மதன னேவும் விழிக்கரைக் கம்புளே கோல மேவுங் கரும்பனை யன்றிலே கொடுமை செய்தன டாயெனை யன்றிலே வால முண்டவர் வேளூரி லன்னமே யருந்தி லேன்றவ ராரமு தன்னமே. 23 கார்காலம் எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் மேகமெனும் பசுநிரைகள் கடனீர் மாந்தி வெற்பேறி மேய்ந்திடையன் விடுகாற் றாக, மாகமெனும் பெருவெளிக்கே பரந்து சென்று மழையெனும்பால் பொழிந் துயிரை வளர்க்குங் காலம், போகமெனும் பசலைமழை பொழியுங் காலம் புள்ளிருக்கு வேளூரர் புணராக் காலங், காகமிடம் வளர்ந்தகுயில் கூவுங் காலங் கான்மோதுங் கார்காலங் காலந் தானே. 24 கிள்ளைவிடுதூது கட்டளைக் கலித்துறை காலையு மாலையுங் கைகூப்பு வேனென்னுங் காமனெய்யும், வேலையு மாலையும் வேளூரர்க் கேசொல்லு மென்கிள்ளைகாள், சோலையு மாலையுஞ் சூழ்பொன்னி நாடர்த் தொழுதெனக்கோ, ரோலையு மாலையுந் தாருமென் றோடி யுரை செய்யுமே. 25 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம் ஓடெடுத்தா ரொருகாது தோடெடுத்தார் வேளூர ருடுத்தார் தோலு, மாடெடுத்தா ரோரிரண்டு மாடெடுத்தாரவரூருக் கடுத்தார் மேல்பால், வீடெடுத்தா ரண்டையிலே காடெடுத்தார் கீலாலம் விட்டி ராத, வேடெடுத்தா ரொரு கையிலே கோடெடுத்தார் யாவருக்கு மிறைவர் தாமே. 26 இரங்கல் வெளிவிருத்தம் இறையவர்க்கு மெண்ணரிய விறையவர்க்கு மிறையவனம் வேளூர்முன்னோ, னிறைவளைக்கை யிவள்புலம்ப விறைகயற்கண் ணீர்தணியான் வேளூர்முன்னோ, னிறைபொறுத்தலரிதுகலை யிறையிறுத்த றனைநினையான் வேளூர்முன்னோ, னிறைதொடுக்க வரிதுநிறை யிறைவெறுத்த தெனவணையான் வேளூர்முன்னோன். 27 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் முன்னுடைய திருக்குளமு மூர்த்திகளுந் தொழும்வேளூர் முருக பாலன், றன்னுடைய திருக்குளமு மதியாக வேபடைத்த தைய லென்னு, மின்னுடைய திருக்குளமு மிடமாக வேயிருந்தார் வியன்வே ளூர, ரென்னுடைய திருக்குளமு மிடமாக வேயிருந்தா லென்ன தானே. 28 நேரிசை வெண்பா என்னுடைய பங்குக் கிடஞ்சிறிது மில்லைகொலா மின்னுடையுஞ் செஞ்சடையார் வேளூரா-வுன்னுடைய வாகநகக் கிள்ளை யறிதேன்கா ணெங்கையந்தக் கோகநகக் கிள்ளை குறி. 29 கலித்துறை குறைமதி யின்றவர்புள் ளுறைபதி யினின்மலர் கொய்வேனே, யுறைமதி நுதலிவள் குழல்செரு கிடின்மன முய்வேனே, மீறைபயில் சதுமுகன் மதியில னெனமிக வைவேனே, நறைமலர் புனையினு மிடையொடி படுமென நைவேனே. 30 தரவு கொச்சகக் கலிப்பா நையலுக்குத் தம்பமென நம்பலுக்குத் தம்மடியா ருய்யலுக்குக் குண்டமெடுத் துண்டைமருந் தையளிப்பார் தையலுக்குச் சடாயுபுரிச் சங்கரிக்குத் தான்கொண்ட மையலுக்கு வேளூரர் மருந்தறியமாட்டாரே. 31 ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை மாடுதிகழ் கலைக்கோட்டு மதிதவழ்செஞ் சடைமௌலி பீடுதிகழ் மணிமன்றிற் பெரும்பற்றப் புலியூரி லாடுமலர்க் கழலுடையா னம்மான்றென் பெருவேளூர் பாடுதுமஞ் செழுத்தோதிப் பரவுநின் சீரே பாண்டரங்க னெனத்தினமும் பகருதுநின் சீரே. 32 கலித்துறை சீரார் பேரா ரேரார் தேரார் வேளூரா ராரார் சூரார் நாரா ரோரா ராராரே சேரார் பாரார் நேரார் சாரார் தீரார்தார் தாரார் தாரார் வாரார் நீரார் தாராவே. 33 மறம் அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வேல்போலுங் கண்ணிபங்கர் வேளூரின் மறவர்பெண்ணை வேட்க வேந்தன், கோல்போல வளைந்ததொன்று கொண்டுவந்த தூதனைநாங் கோற லாமோ, கால்போல விரலமைத்துக் கவிபோல வொரு கோலங்காட்டிப் பின்பே, வால்போல நாலவிட்டுத் திரிகொளுவி யிவ்வூரை வலங்கொள்வேமே. 34 இதுவுமது வேலைகொண்ட விடமுண்டார் வேளூரின் மறவர்பெண்ணை வேட்கச் சந்த, மாலைகொண்டு சேலைகொண்டு வந்திடுதூ தாமுன்னாள் வந்த மன்னர், காலைகொண்ட கூர்வாளால் வெட்டிடுவேம் வெட்டிலிழை கட்ட வேண்டி, யோலைகொண்டு வந்தநீ யூசிகொண்டு வந்தனையோ வுரைசெய்வாயே. 35 வார்த்தைவே றின்றிவினை தீர்த்ததே வெனும்பேரே மந்த்ர மாகப், பார்த்தபேர் மகிழ்திருச்சாந் துண்டைமருந்தாய்மருந்துப் பையுந் தாங்கிக், கூர்த்தவேற் குகன்றாதை வைத்தியநா யகர் தமது குளத்தி லுள்ள, தீர்த்தமே மருந்தாகத் தீராத நோய்களெல்லாந் தீர்க்கின் றாரே. 36 இரங்கல் கட்டளைக்கலித்துறை தீரத் தரைக்கடல் பொங்கார வாரந் திகழுமந்தி நேரத் தரைக்கட லானது மேகலை நீலவிழித் தாரத் தரைக்கட கப்பாணி யாளர் தமிழ்பயில்வே ளூரத் தரைக்கட னன்றினி நோவதென் னூழ்வினையே. 37 தாழிசை ஊளையாடு பேயொடாடும் வள்ளல்புள் ளிருக்கு வேளூரர்வீதி பவனிவந் துலாவுநா டொடங்கியே நாளுநாளு முடல்வெதும்பி யூணுறக்க மின்றியே நஞ்சுதின்ற பேர்கள்போல நாவரண்டு சோர்வளால் வேள்விகார மோவலாது மருள்பிடித்த தன்மையோ மிஞ்சுமஞ்ச னந்தெளித்து வெள்ளைநீறு பூசியே 38 கேள்வியாக வேணுமையர் சந்நிதிக்கு முனவரங் கிடந்தபேரொ டிவளையுங் கிடத்திவைத்து வாருமே. 38 கைக்கிளை மருட்பா வாரணங்கண் மீதெழுதி வாள்விழிகள் வந்திமைப்பத் தார்வணங்கி வேர்வரும்புந் தன்மையாற் - பாரணங்காம் வேளூர் விமலர்வெற் பணங்கின் றோளூர் கலன்களுந் தொழில்புனைந் தனவே 39 வலைச்சியார் அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் புலைச்சியார் வளங்கொழிக்கும் புள்ளிருக்கு வேளூரர் பொன்னி நாட்டில், வலைச்சியா ராகவந்து விழிக்கயலுங் காட்டிவரை விலையாக் கொள்வார், கலைச்சியார் கோகனகக் கைச்சியார் பிச்சியார் கருமென் கூந்தல், வலைசசியா ரிருபுருவச் சிலைச்சியார் கொங்கையெனு மலைச்சியாரே. 40 பதின்முச்சீர்க்கழிநெடிலடிச் சந்தவிருத்தம் ஆசா ரமுநல் லொழுக்கமு ஞானமு மேலார் முனிவரர் வழுத்திட வேநல வாசா ரியர்தம திலக்கண மாயொரு குருவானோர், வீசா மறலியை யுதைத்திடு தாளினர் நீடாருகவன மழித்தவர் காணவர் வேளூர் மருவிய வயித்திய நாயகர் மயறானோ, மாசா கியமருள் பிடித்தவர் போலெதிர் பூசா ரிகள்கடு புகைக்கிற தேனவர் வாழ்கோ யிலினெதிர் கிடத்திவை யீர்பின்னை வெளியாமே, பேசாள் வளீவினி லிருக்கையி லேயிவ ளேதோ வெருளவும் விழிப்பளை யாவொருபேயோ விதுவுமொர் பயித்திய மோவென வறியோமே. 41 குறம் எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் அறப்பள்ளி நாதர்கொல்லி மலையுங் கண்டே னகத்தியமா முனிபொதிய வெற்புங் கண்டேன், சிறப்புள்ள வள்ளிதனைக் கொடுத்த நாளிற் சீதனமுங் கொடுத்தகுறச் சிறுமி யம்மே, யிறப்பில்லா நம்பெருமான் வேளூர் மேய வெம்பெருமான் முத்தையன்பே ரிட்ட ழைக்குங், குறப்பிள்ளா யென்னுடைய குஞ்சே யுன்றன் குஞ்சிதனக் கெண்ணெய்கேள் கூறை கேளெ. 42 வேற்றொலி வெண்டுறை கேதகையிற் குடியிருந்த பணியும் பூணார் கிளுவைதும்பை யறுகினொடு கிழமை பூண்பார், பேதையரா கிலுமன்பர் தம்மை யெண்ணிப் பிரமனையு மெண்ணாத பெரியர் மூதூ, ரோதரிய சிறுவேளூ ரோங்குபெரு வேளூர், பூதலமேற் கீழ்வேளூர் புள்ளிருக்கு வேளூர். 43 நேரிசை வெண்பா ஊரும் புழுவினுக்கு மூம்பருக்கு மோரன்பே கூறும் பெருமானே கொங்கையின்மே-லார வடங்கொடாய்த் தையன் மணாளாநின் பாகத் திடங்கொடா யைய வெனக்கு. 44 ஈற்றடிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை என்னுடை நாயக மென்னுடை மாதவ மென்னுடை யாருயிரென், றுன்னுடை யானை மறந்து கழங்குட னூசலு மாடுவதே, மின்னிடை யாளுமை தையல் பராபரை யம்பிகை வேளூர்வா, ழன்னையு நீயுமொ ரையனும் வாழ்கெனவாடுக வம்மனையே, யாரமு தேயெனை யாள்பவ னேயென வாடுக வம்மனையே. 45 வஞ்சித் துறை மனைதீர்த்து நாயேன், சினைதீர்த்த லானே னனைதீர்த்த மாடே வினைதீர்த்த தேவே. 46 நிலைமண்டில வாசிரியப்பா வேற்பதி தடக்கை வேள்பூ சனையும்- பார்ப்பதி பூசையும் பரிந்தருள் புரிந்தனை- நாரணன் பூசையு நான்முகம்படைத்த- வாரணன் பூசையு மன்புற மகிழ்ந்தனை- திருமகள் பூசையுந் திருமக டனக்கு- மருமகள் பூசையு மகிழ்ந்துவீற் றிருந்தனை- பரிதியங் கடவுளும் பழமறை யாகிய- சுருதியுந் தடமலர் சொரிந்திட மகிழ்ந்தனை- கொங்கார் கருங்குழற் குவலய மடந்தையோ- டங்கா ரகன்செயு மருச்சனைக் குவந்தனை- தக்கசம் பாதி சடாயுவர்ச் சனையுந் - துர்க்கைபூ சனயுந் துகளற மகிழ்ந்தனை- யிந்திரன் வருண னியம னிருதி- சந்திரன் பூசனை மந்திர முவந்தனை- யனைத்துள முனிவ ரருச்சனை நேமி- வனத்துள முனிவழி பாடு மகிழ்ந்தனை- மருப்பொதி சோலை மருதூ ருடையான்- றிருப்பணி மகிழ்ந்து தெரிவையை மகிழ்ந்தனை- சாத்தனுஞ் சண்டியுமேத்த மகிழ்ந்தனை- குணங்கெழு பதினெண் கணங்கள்பூசனையும்- வணங்குமா னுடவர் வரிசையு மகிழ்ந்தனை- பன்னிரு பெயரும் படைத்திடு பழம்பதித் தென்னிரு தியின்பாற் றிசையமர்ந் தருளினை- யங்கா ரகபுர மம்பிகா நகரம் பொங்கிய பானு புரமீ தெனவுங்- காவிரி வடபாற் கழுமறை குகன்பேர்- மேவுபுள் ளிருக்கு வேளூ ரெனவு- மறுவகை நாமமு மெழுவகைத் தீர்த்தமுஞ்- சரம்வெகுண் டெனவெழு சடாயு குண்டமும்- பிரமகுண் டமுமுள பெரும்பதி யமர்ந்தனை- தீரா வல்வினை தீர்த்த தேசிக- தாரார் கருங்குழற் றையன் மணாள- மண்மருந் துதவும் வைத்திய நாயக- பெண்மருந் திவளுயிர் பெறமருந் தருளே. 47 வறும்புனத்து இரங்கல் மடக்கு தாழிசை அருவித் திரளே கொழுந்தினையே யகன்றே னாசைக் கொழுந்தினையே, பந்தோ வாரத் தழையீரே யவனா யிதணத்தழையீரே, யிருவிப் புனமே குஞ்சரமே யெயினர் சொலிறைக் குஞ்சரமே, யேனல் காக்கு மஞ்சுகமே யெனக்கோ வொருநா ளஞ்சுகமே, பொருவிற் காம னம்புறவே புனத்திற் காணே னம்புறவே, பூவார் காவில் வருந்தேனே போனார் மீனிவ் வருந்தேனே, வெருவித் திரிமான் பிணையினமே வேங்கை யெனக்கோர் பிணையினமே, வேளூரிறை வர் கேள்வரையே விலக்கா ரிரதி கேள்வரையே. 48 கட்டளைக் கலித்துறை வரைச்சிலை யேதொட்ட வேளூரர் வெற்பர்நல் வாய்மொழிக, ளுரைச்சிலை யேநினைந் தாரிலை யேயுற்ற வேருடனஞ், சரைச்சிலை யேதின்றும் போகா திருந்ததென் னாவியின்னங், கரைச்சிலை யேயன்ன மேயின்ன மேயன்பர் கன்னெஞ்சையே. 49 அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் கன்னன் மொழிப் பேதையொடும் பிள்ளையொடுந் தமியடியேன் கண்டு போற்ற, வின்னமொரு பிறப்பெனக்கு வேண்டுமெனில் வரமிதனை யீயமாட்டார், தன்னமறத் தவம்புரிந்தும் வேளூரில் வினைதீர்த்த தம்பிரானார், கின்னமறக் கேட்டவரந் தருவரெனுங் கீர்த்தியென்ன கீர்த்தி தானே. 50 கீரனொடும் பொருதவர்தென் வேளூர்வாழ் பஞ்சவனக்கிள்ளை யன்னார், மாரனொடும் பொருதவிழி மையனங்காக மத்திலிடு மையே போலு, மோரநெடு விழியிமைவா ளுறைபோலு முவையென்னுட்டுளைத்தூடாடல், சூரனொடும் துரு மகன்றிற் குன்றினொடும் பொருதுகந்த சுடர்வேல்போலும். 51 துரப்பவருந் தீப்பிணியைத் தொலைப்பவரென் றெடுத்தவரைத் துதிக்க வேண்டா, வுரப்பவரும் பசிப்பிணியைத் தவிர்ப்பவரு மவரல்லா லொருவ ருண்டோ, புரப்பவரு மல்லாமற் பொக்கணமுங் கையுமாய்ப் புகுந்து பிச்சை, யிரப்பவரும் வினைதீர்த்தார் திருவுளமுண் டாகவென விருப்பர்தாமே. 52 புள்ளொடுபுலம்பல் கலித்துறை இரவலர் மனமிடி களைபவ ரெளிலெனை யெள்ளீரே புரவல ரினிதுறை புள்ளூர் மருவிய புள்ளீரே குரைகட லொலியென முறையிடு மெனதுரை கொள்ளீரே நரையிடை யுடையவ நிரவிடை வரவெனை நள்ளீரே. 53 வஞ்சி விருத்தம் நள்ளிருக்கும் வேளூர் நமையாளூர் முள்ளிருக்கும் வேளூர் முகிலாருங் கள்ளிருக்கும் வேளூர் கழிசூழும் புள்ளிருக்கும் வேளூர் புகழ்வீரே. 54 அம்மானை மடக்கு கலித்தாழிசை . . புள்ளிருக்கு வேளூர்ப் புனிதனார் தந்தமுத்துப் பிள்ளைதனக் கிந்திரனார் பெண்கொடுத்தா ரம்மானை பிள்ளைதனக் கிந்திரனார் பெண்கொடுத்தா ராமாகில் வள்ளிதனைக் கொள்ள வழக்குண்டோ வம்மானை வள்ளியம்மை யம்மான் மகளல்லோ வம்மானை. 55 நேரிசை வெண்பா அப்பிறப்பும் வேளூரர்க் காளானோ மில்லையே யெப்பிறப்பும் யாமில்லா தில்லையே - யிப்பிறப்புஞ் சோகாடுஞ் செந்தீச் சுடுகாடுஞ் சாக்காடுஞ் சாகாடு போலவருஞ் சார்ந்து. 56 எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வருண முடையார் தவள விடையார் மதனை முனிவாரிதழி புனைவார், கருணை வடிவா ரருண கிரியார் கவுரி நகர்சூழ் மறுகு தனிலே, திரண மறவே யலகு மிடுவார் திவலை விடுவார் தெரியல் புனைவார், சரண மடைவார் மரண மடையார் தமரு மடையார் தரும புரமே. 57 வண்டு விடுதூது அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் தருந்தேனே யனையமொழித் தையல்பங்கர் வேளூரர் தண்டார் வேட்டுக், கருந்தேனே தினமுனக்குச் செந்தேனே தந்தேனே கறிசோ றின்ன, மருந்தேனே யிணைவிழிகள் பொருந்தேனே கொன்றையந்தா ரளித்தா லாவி, வருந்தேனே யுனைவழிபார்த் திருந்தேனே யிருகாத வழிவந் தேனே. 58 எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வந்தனை புரிந்தனர் வருந்தினர் நயந்தனர் மணந்தனர் புணர்ந்தனர் விடாய், தந்தனர் நினைந்தனர் நடந்தன ரிருந்தனர் தணந்தனர் மறந்தனர் கொலாங், கொந்தளவு கந்தமலர் சந்தன மணிந்தவர் குணந்தனை நினைந்தில னியான், கந்தபுரியெந்தைதிரு மைந்தரென வுந்திரிவர் கந்தருவர் வந்தொருவரே. 59 கட்டளைக் கலித்துறை ஒருகா தமருங் குழையார்புள் ளூரி லுகைக்குமன்பு பெருகா தமருங் குலவா வருங்கண்கள் பெண்மைகண்டான் முருகா தமருங் குழைவார்கள் பார முலைசுமக்க விருகா தமருங் குளதாகி னிற்கு மிடையிவட்கே. 60 பாதவகுப்பு இடமார் கயிலையி லேரா வணன்முய லிசைகேட் டுடலைத் தகர்த்திரங்கின வெழிலார் திசைமுகன் மாயோ னெனுமிவ ரிருவோர்க் கொருவிசை யொளித்திருந்தன வியலார் தமிழ்கொள வாரூர் மறுகினி லிருகாற் பறவைதன் மனைக்குவந்தன வெழுகூர்ப் பிறவியும் வேரோ டறவவ ரிடர்தீர்த் தடியவர் மனத்திருந்தன. 60 1/4 உடனே யெதிரிட லாலே மதுரையி லொருகாற் புலவனை யெடுத்தெறிந்தன வுருகா தவர்கதி போலே யடியவ ரொழியாப் பிறவியை யொழித்திரங்கின வுடையாள் வருடுத லாலே யனுதின முதிராப் புதுமல ரெனச்சிவந்தன வுடையா டிருநுதல் போலே முழுமதி யுடறேய்த் துளமதி யெனத் துணர்ந்தன. 60 1/2 முடியா விருவர்கள் வானோர் முனிவரர் முடிமேற் சுடர்மணி யெனப்பொலிந்தன முதலா கியதமி ழோர்மூ வர்கள்புக ழிசைகேட் டருண்மழை யெனப்பொழிந்தன முகில்போ லடல்புரி சூலா யுதமுடன் வருகூற் றுவன்விழ வுதைத்துவென்றன முதுதா ருகவன மானார் மயல்கொள வவரூர்த் தெருவினி லிரக்கவந்தன. 60 3/4 விடமார் பணிபுலி வானோர் தொழவளர் புலியூர்ச் சபையினி னடித்துநின்றன வெறியார் நறுமலர் தேனோ டுறைதலி னறுகாற் பறவைக ளிரைத்தெழுந்தன வெயிலார் சுடலையின் மீதே நடமிட மறைபோற் பரிபுர மரற்றுகின்றன வெறியார் பொழிறிகழ் வேளூர் மருவிய வினைதீர்த் தவரிணை மலர்ப்பதங்களே. 61 வேனிற்காலம் அறுசீர்க்கழிநெடில் விருத்தம் கள்ளருக்கு நிகராயென் கரவளையுங் குரவளையுங் கடிந்து சென்றென், னுள்ளுருக்கி முடிந்தபின்பென் னூரினுக்கு வருவார்நாட்டுண்டு போலுந் தெள்ளிருக்குந் தெரிவரியார் தேனிருக்குஞ் சடைமுடியார் திகழுஞ் சோலைப் புள்ளிருக்கு வேளூரர் பூணினுக்கு விருந்தான பொதியத் தென்றல். 62 எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் அல்லையொத்த சீர்மேல் வில்லெடுத்த கூர்வே லையனுக்கு வாழ்தா தையுமாவார், வல்லியொத்த பூணார் தையலுக்கு மரலாம் வள்ளலுக்கு வாழ்வாகியமூதூர், செல்லுழக் கிவேள்போர் வில்லொடித்து மீனார் செய்யழித்து வாடா வயல்வாளை, புல்லொ துக்கி லேபோய் நெல்வரப்பி லேசேர் புள்ளிருக்கு வேளூர் நகர்தானே. 63 தரவுகொச்சகக் கலிப்பா தான்யாமந் தலைப்பிரிந்த தலைவன்போன் மறந்திருப்ப வான்யாறு பெறமுயன்ற மன்னவன்போல் வருந்தினனே மீன்யானை யுடன்பொருத வேளூரர் திருநாட்டிற் கான்யாறே யிருங்கழியே கருங்கடலே காவிரியே. 64 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் விரித்தசடைக் கொருத்தியிடத் தொருத்திதனைப் பரித்தசிவன் வேளூர் வெற்பா, பொருத்திமிகப் பொருத்தியெனைத் திருத்தியதைச் சிறுக்கியவள் பொறுக்கமாட்டா, டெரித்தவளைக் கனத்தகுழைத் துடித்தவிதழ்த் தரித்தவெழிற்சிரித்த மூரற், பருத்தமுலைச் சிறுத்தவிடைக் கறுத்தவிழிச் சிவத்தநிறப் பரத்தை தானே. 65 தழை நயப்பு படுத்ததுவுந் தழையிவண்மேற் படைமதனன் பகழிபட்ட பசும்புண் ணார, வடுத்ததுவுந் தழைவீசி யடித்ததுவந் தழைவேளூ ரமலர்வெற்ப, வுடுத்ததுவுந் தழையன்றே கடைமுறையி லெங்கண்மா னுயிர்போ காமற், றடுத்ததுவுந் தழையின்று தந்ததுவு முன துகையிற் றழைகண்டாயே. 66 ஆகாசம் பூமியுமுள் ளன்றுமுத லின்றளவு மெனைவிட்டப்பாற், போகாமற் றொடர்ந்துவரும் பிறப்பென்னும் பேயையிவர் போக்கிடாரோ, பாகாரு மொழிபங்கா புள்ளிருக்கு வேளூரெம் பரமா வென்னைக், காகாவென் றழுவ துவுங் கோகோவென் றரற்றுவதுங் கண்டு தானே. 67 நேரிசை வெண்பா கண்டனைய செஞ்சொற் கவுரிபங்கர் வேளூர்சூழ் தண்டலையிற் கண்டு தழைவுற்றேன் - பண்டயனார் துங்கமலை யன்னா டுணைமுலையா கப்படைத்த வங்கமலை யன்னா ளவள். 68 பதினான்குசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் அவளைவா ரிதியி லவளைநா கணையி லவளை யேந் தியமுகின் மகனா, லவளைநா டெனவே யவளையு மறந்தா ளவளைமத் தெனவுயிர் சுழன்றா, ளவளைவார் குழையா ளவளை வேல் விழியா ளவளைமோ தியவிரு தனத்தா, ளவளைசேர் கரத்தா ளவளைநேர் மிடற்றா ளவளைநீர் நினையுநா ளுளதோ, பவளமே னியினிற் றவளநீ றணிந்து குவளைநேர் மணிமிடறிலங்கப், பாருகா வண்ணந் தாருகா வனத்திற் பலிக்குழனறிடுபரம் பரனே, கவளமால் யானை யீருரி போர்த்த கண்ணுத லெண்ணுதற் கரிய, கற்பகா டவிசூழ் பொற்பமர் வேளூர்க் கடவுளே கருணைவா ரிதியே. 69 பனிக்காலம் கட்டளைக்கலித்துறை கருங்கொண்ட லேநிகர் கண்டர்தண் டார்தரிற் கண்டொருவர், மருங்கொண்ட லேதினி மாகொண்ட லேதென்றல் வாடையுட, னிருங்கொண்ட லேவரில் வேளூரர் மீதினி லிச்சையமர், தருங்கொண்ட லேவிழி துஞ்சாம லாவி தணந்தவரே. 70 சித்து எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் தரைக்குங்கா விரிநாடு தனக்கு மீசர் தையல்பங்கர் வினைதீர்த்த தம்பி ரானார், நிரைக்குங்காற் றெழுதிறைஞ்சுஞ்சித்த ரப்பா நெய்தயிர்பா லுண்டானா னிதியு முண்டா, முரைக்குங்கான் மிக்கதுத்த நாகஞ் செம்பை யுறநீட்டி யொளியிரத வாதஞ் செய்வோ, மிரைக்குங்கார்க் கடல்கடந்தோர் நாட்டை யெல்லா மீழநா டாக்குவித்தோ மெளிதிற்றானே. 71 காலம் எழுந்தநில வெழுந்தணலை விழுங்க மாட்டா திளநெஞ்சா யுள்ளஞ்சி யேங்கி யேங்கிக், கொழுந்தனலை விழுங்குகின்ற குருகு போலக் கோகிலங்கண் மாந்தளிரைக் கோதுங் கால, மழுந்தரள மிளமுலைமேற் கொழிக்குங் கால மத்தரளங் கூடலைவந் தழிக்குங் காலஞ், செழுந்தரள மணிகொழிக்குஞ் செம்பொன் வேளூர்ச் சிவபெருமா னெம்பெருமான் சேராக் காலம். 72 எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் சேருமந் தணர்வாழ்புள் ளூரிலம் பிகையோடு தேவுமங் கிறவாத பேர், பேரிறந் திடுதேவர் கோலமுஞ் சதகோடி பேர்களுஞ் சதகோடி யே, வாரணன் சதகோடி யாதவன் சதகோடி வாவுசந் திரர்கோடி மா, நாரணன் சதகோடி நான்முகன் சதகோடி ஞாலமுஞ் சதகோடியே. 73 மதங்கியார் அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் சதங்கைநூ புரமொலிப்ப வளையொலிப்ப வண்டொலிப்பத் தடந்தோள் கொங்கை, பதங்கையா னனமிருப்ப விழியிருப்ப வேளூரெம் பரமர் முன்னே, மிதங்கையார் முழவதிர்ப்ப மாதங்கி பாடிடவாள் வீசி யாடு, மதங்கியார் மருங்குறனை வாங்கியா ரொற்றியாய் வைத்த பேரே. 74 பதினான்குசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் பேரா யிரங்கண்கள் பதினாயி ரமபுயம் பெருவரைகளெண்ணாயிரம், பிறையா யிரம்புனையு முடியா யிரம்பணிபிறங்குசடை பதினா யிர, மீரா யிரஞ்செங்கை யங்கைபதினாயிர மிலங்குகூ ருகிரா யிர, மிறையா யிரங்கொண்ட விரல்கள்பதி னாயிர மிரத்னவல யங்கள் கோடி, யோராயிரங்குழைக ளாறா யிரஞ்சரண மொலிகொள்பரி புரமா யிர, முதயதின கரர்கோடி யனையபத் தர்கள்பரவு மும்பர்சத கோடி பேர்கள், வீராதி வீரன் றசக்கிரீவ ராவணனை வென்றவன் புள்ளிருக்கு, வேளூரில் வினைதீர்த்த தம்பிரான் கயிலாய வெற்புடைய கடவு ளுக்கே. 75 பாண் எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வெற்பலகை யளித்தமுலை வேசி தன்மேல் விருப்பம்போ லவர்க்கிசைமேல் விருப்பம் பாணா, கற்பலகை யளித்தவர்பாற் சென்று பாடுங் கனவரிசை யுண்டாலங் காட்டின் முன்னா, ளற்பலகை யளித்தவனு மால வாயி லன்றுனக்குப் பொற்பலகை யளித்த கோவு, நற்பலகை யளித்தவுணன் கீதங் கேட்டு நயந்தவனும் வேளூரி னம்பன் றானே. 76 கட்டளைக்கலித்துறை நம்பப் படாது விலைமாதர் நேய நளினமுகக் கும்பப் படாமுலை பங்கர்புள் ளூரர்தென் கொல்லிவெற்பா வெம்பப் படாநின்ற கட்கூற்றம் பார்க்க விதியுமுண்டோ வம்பப் படாது பிரிந்தே யிருக்கு மவருள்ளமே. 77 ஊசல் எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் உள்ளிருக்கு மயலாலுள் ளுருகி யோடி யுலையிலிடுமெழுகாக வுடலம் வாடித், தெள்ளிருக்கு மறியாத வினைகள் கோடி செனனமற வேசாடிச்செல்வ நீடிக், கள்ளிருக்கு மலர்க்கொன்றைத் தாரை நாடிக் கலைவாணர் மொழிந்திடுநற் கவிக டேடிப், புள்ளிருக்கு வேளூரர் புகழே பாடிப் புதுப்புனன்மஞ் சனமாடி யாடி ரூசல். 78 ஊசலிடு மனத்தடியேன் வேளூ ரையா வுச்சியினிற் கரங்கூப்பி வைத்தே னுற்ற, நாசியினி லணியிதழி நாற்றங்கொண்டே னாவினிலு மஞ்செழுத்தை நாட்டி வைத்தேன், காசினிநின் சந்நிதியிற் சிறப்பை யெல்லாங் கண்களுக்கே விருந்திட்டேன் காய மெங்கும், பூசுதிருச் சாந்துண்டை மண்ணைப் பூசிப் புந்தியினி னடிச்சுவடு பொறித்திட் டேனே. 79 கொற்றியார் அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் பொறியமருங் கொற்றியார் புள்ளிருக்கு வேளூரர்பொன்னிநாட்டி, னெறியமருங் கொற்றியார் முகிலொடுமின் மறையுமென நீத்த தல்லால், வெறியமருங் கற்றையார் கருங்குழலை யிவரெங்கே விற்றார் கண்கண், மறியமருங் கொற்றியார் சிறியமருங் கொற்றியார் வைத்த பேரே. 80 எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வையக மதனிற் பிறந்துளா ரீகை மறந்துளா ரெனின்மறு பிறப்பிற், கையகந் தனிலோர் கடிஞையு மேந்திக் கடைதொறும் பலியிரந் துழல்வார், வெய்யதோர் பிறப்பு முனக்கிலை யிரந்துண் வினைப்பய னெவ்விதத் ததுநீ, யையமேற் றுண்ட தென்கொலோ வேளூ ரப்பனே யொப்பிலாமணியே. 81 எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் ஒப்பொருவ ரிலையுனக்கோர் துணையு மில்லை யுலகமெலா முனைப்பணியு மொளிபொன் மேரு, வப்பெரிய மலை யிருக்கத் தைய லம்மை யருகிருக்க முத்தையனு மாங்கேவைகச், செப்பரிய புலித்தோலுந் திருவெண் ணீறுஞ் செஞ்கடைமேற் படவரவுஞ் செங்கை மீதோர், கப்பரையும் வெண்டலையும் பெறல்கண் ணேறு கழிக்கவென்றோ வேளூரெங் கடவு ளானே 82 நேரிசையாசிரியப்பா கடல்கிழித் தெழுந்த கருமுகிற் குழாங்களின குடல்கிழித் தெழுந்த கொடிக்கோ புரங்களி லசுணம் விசும்பி லமர்ந்த கின்னர ரிசையுண விருந்தாங் கிருசெவி மடுப்ப வெயிறுபுரை யிந்தி னிளநிலாச் சகோரம் வயிறுகுழி வாங்கி வாய்மடுத் தருந்தத் தென்றலுக் கிடைந்து சேவலொடு சினைஇய வன்றிலம் பேடை யழுதயர் வுயிர்ப்பக் கரும்புகள் களுலிய கயத்திரை யருந்திக் குரம்பக னாரைகள் குடம்பையடை கிடப்பச் சேண்டனிற் பிறந்து செங்கதிர் வரவை யாண்டலைப் பொறிப்புள் ளாமினத் தொடுவினாஅய்ப் பெதும்பையிற் றழீஇய பேடையோ டூடுபு பொதும்பிடை கிடந்து புறவுகள் புலம்ப மேருவிற் கிளர்தலின வெயில்கண்டு பிரிந்து கூரிருட் கிடைந்த கோகமுன் றடிப்பக் கொஞ்சிப் பார்ப்பொடுஞ் சினையொடுங் குழுமிக் கிஞ்சுக வளைவா யஞ்சுக மிழற்றக் குலமுத லியற்றிய கொள்கைகண் டும்ப ரலமரு முவணமு மலம்பா வதிந்துறப் பைந்தமிழ் வேளூர்ப் பரவையு ணிலவிய மந்தர மெனச்சுரர் வாசுகி பிணிப்பக் கீழுற வெழுதிய கேழலின் வடிவமு மேலுற வகுத்த வெண்சிறை யன்னமு முன்னந் தேடிய கேழலு மெகினமு மின்னுந் தேடிய வியல்பெனப் பொலிந்த வந்நெடுங் கோபுரத் தணிநிரை தயங்கப் பன்னெடுஞ் சிகரமும் படர்விடைக் கொடியு மாடமுந் தெற்றியு மகரவாய்க் குடுமிக் கூடமுந் தடமுங் கொடிஞ்சியு மதிலுங் கனகமா ளிகையுங் கழுமிய வேளூர்ச் சினகரத் தமர்ந்த தெய்வ நாயகன் வில்லவன் புரக்குங் கொல்லியம் பொருப்பின கரும்பினை விரும்பா வரம்பின ருளரே பண்டலர் பொழிந்த பதியினில் வணங்கிய கொண்டலி னிருண்டது குழலே திண்டிறன் மற்றவ னவுணர் வலிகெட வாங்கிய கொற்றவில் லனையன பிருகுடி வெற்றி முருகவேள் வாங்கிய மூரிவேல் விழிக ளிருகணை யருகணை யிந்துவாண் முகமே யவ்வா வரனை யருச்சனை புரிந்த செவ்வா யனையது செவ்வாய் சிறந்த திருச்சர ணிருகரஞ் சிறந்த சடாயு வருச்சனை புரிந்த வரவிந்த மலரே மண்டபத் துமையவ டண்டமிழ் மிழற்றிடு மொழிபயில் கிள்ளை மழலையுந் திருத்துங் கன்னியிங் கிவட்குச் சந்நிதி யடைந்தோர் நோயினுஞ் சிறிதிடை நுடங்கும் பேயினும் பெரியது பிணாமுலைத் தடமே. 83 கிள்ளைவிடுதூது நேரிசைவெண்பா தடந் துறைசூழ் வேளூரர் தண்டார் விரும்பி யுடைந்தெனது நெஞ்ச முருகிக் - கிடந்து கருகவிருந் தத்தாய்கண் ணற்றவ ருள்ள முருகமிருந் தத்தா யுரை. 84 இதுவுமது கட்டளைக்கலித்துறை உரையிற் படவரைந் தோலையும் போன துயிருமின்று தரையிற் படவருந் தன்மையெல் லாந்தத்தை காளுரையீர் திரையிற் படவர் திமிங்கலத் தோடமர் செய்யும்புள்ளூ ரரையிற் படவர வார்த்துநின் றாடிய வத்தனுக்கே. 85 களி எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் அத்தியின்மே லரசிருக்கு மரசின் மீதே யாத்திபனே வேம்பிருக்கு மவையின் மீதே, நித்தியமு மாவிருக்கு மயக்க மின்றி நிச்சயமா யறிந்துரைத்த களிய ரப்பா, சித்திவிநாயகன்மூத்த தமைய னீசன் றிருமடந்தை தலைமகன்மா யவனே யாகு, முத்தயன்வே ளூரர்மரு மகனென் பார்கண் முகுந்தனுக்குக் காமனண்ணன் முறைகண் டாயே. 86 பதினான்குசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் முறையென வெழுத லோலையாய் விடுத்தன் முடியினிற் சேரலன் பரித்தன், முடைந்துபா யிடுதல் கொள்கல மாக்கன் முகடுவேய்ந் திடல்கணக் கெழுத, லுறையுளாக் கிடுதல் வில்லென வளைத்த லொருவன்முன் பதாகையா யுயர்த்த, லூர்மட லாதல் காணியாய்ப் பிணித்த லுயர்பரி யங்கமே யாதல், பறைவக ளுறைத னிழலிட னுடங்கும் பழங்கிழங் கொடுநற வருத்தல், படுவிற காத லெதிர்வரு மடவார்பயோதரங் கூந்தனே ராத, லிறைவர்வே ளூரர் திருப்பணிக் கமைத லிவையெலா மேயகற் பகத்தை, யெழும்பனையதுவென் றிகழுவா ரதனு ளெழுதியு மூடரா யினரே. 87 கூதிர் காலம் எண்சீர்க்கழிநெடில் விருத்தம் மூடுபனி நெடுவாடைக் குளிர்பொ றாமன் முகிலென்னுங் கரும்படாம் போர்த்து வெய்யோன், காடுபரந் தாகாசத் தெழுந்த வன்றன் கரத்தினால் விரகத்தீ காயுங் காலங், காடுபரந் தெழுந்தாலைக் கரையின் மேவுங் காய்ச்சலெனக்காமகனல் கடுகுங் கால, மேடுகுழி பரவுவயல் வேளூ ரன்பர் விரைந் துவந்து புரந்தனையே மேவாக் காலம். 88 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் காலமே யெழுந்திருந்து புள்ளூர்க்குப் போதுமென்று கழறிப் பேய்கள், சூலமே தெதிரென்னும் யாத்திரைக்கு நாள்கேட்குஞ் சோறுந் தூக்குஞ், சாலமே வியவிந்தா டவிக்குவழி யேதென்னுஞ் சகுனம் பார்க்குங், கோலமே புனைந்துகொள்ளுங் குருக்கட்பேய் முன்புவிடை கொள்ளுந்தானே. 89 இடைச்சியார் விடைக்குலமார் கொடியுடையார் வேளூரில் விலைகூறிவிற்கு முங்கள், படைக்குலமாம் விழி கண்டால் மால்கொள்வ ரல்லாமற் பால்கொள் வாரோ, நடைக்குலமோ தோகைமயிற் பெடைக்குலமோ நீருமந்த நந்த கோப, னிடைக்குலமோ வல்லதொரு கோகிலமோ வின்னதென வியம்பு வீரே. 90 நேரிசைவெண்பா வீர மதனாவுன் வென்றித்தேர் வேளூர ராற் மதனுக் களித்திடுவேன்- சூரர் தொழுந்திருந்தார் முப்புரமுந் தூளிபடப் போருக் கெழுந்திருந்தார் வந்திருந்தா ரின்று. 91 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் இன்றுதா னுடம்பெல்லா மிருந்தபடர் தாமரையுற் றிருந்தா ருக்கு, மன்றுதானவருடம்பு காய்ந்துகிடந்தவர்க்கு நிறுத் தறிய மாட்டார், சென்றுதான் பணிந்தவர்க்குத் தீராத நோயையெல்லாந் தீர்த்தோமென்பார், கொன்றுதா னிறந்தபிள்ளை யெழுப்பினோ மெனவிருதுங் கூறுவாரே. 92 தரவு கொச்சகக் கலிப்பா வாழிவாய் நேமிபெற மாயோன் மலர்சாத்த வீழிவாய் மேகங்கொள் வேளூர் திருநாட்டிற் கோழிவாய் வெங்குரலிற் கூகைவா யுங்கொடிதா மாழிவா யோய்ந்திடினு மன்னைவா யோயாதே. 93 கட்டளைக் கலித்துறை ஓயாப்பிறப்பிற் பிறந்தநெஞ் சேபல் லுயிர்கட் கெல்லாந் தாயாய்ப் பிறந்தருள் தையல்பங் காளர்தஞ் சந்நிதிக்கே யீயாய்ப் பிறக்கி னெறும்பாய்ப் பிறக்கினு மேதுங்கெட்ட நாயாய்ப் பிறக்கி னரியாய்ப்பிறக்கினு நன்றுனக்கே. 94 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் நண்ணிடுவார் போகாமற் றளையிடுவா ரடியவர்க்கு நட்ட மாக, வெண்ணிடுவார் தண்ணீரி னமிழ்ந்திடுவார் காணிக்கை யிடவே சொல்லிச், சண்ணிடுவார் வினைதீர்த்த தம்பிரா னம்பினார் தங்கள் வாயின், மண்ணிடுவா ரடிபடவு நினைந்திடுவா ரவர்க்கன்பு வைக்கொ ணாதே. 95 இரங்கல் தாழிசை வைக்ரவுஞ்ச வேலெடுத்த பிள்ளை தைய லத்தனார் வள்ளல்புள் ளிருக்குமூரர் மையல்கொண்டி டாதபே ரக்ரமங்கள் செயவெழுந்த மதியமென்பர் மதியெனி லனலைமொண்டிறைக்குமோவி தாழிவட்ட வடவையி னுக்ரமாகு மியமராச னெனையழைத்து வரவிடு மோலைவட்ட மதனராச னாலவட்ட முயிரிறுஞ் சக்ரவட்ட மல்லதொன்று பரிதிவட்ட மிவையலாற் சலதிவட்ட மீதெழுந்த சந்த்ரவட்ட மல்லவே. 96 நேரிசை வெண்பா அல்ல லறுத்தாண்ட வம்மானே வேளூரா தில்லை வனத்துறையுந் தேசிகா-தொல்பிறவிப் பித்தங் கொழிக்கும் பெருமானே பேதைவிழி முத்தங் கொழிக்கு முலை. 97 குறளடி வஞ்சிப்பா முலைமுகையினர் மொழியாம்பல் கலவியின்மகிழ் களியாம்பல் விதிரிணைபுய முதுகாம்பல் முகையனையது நகையாம்பல் வெங்கதிர்முலை வெள்ளாம்பல் செங்கவிரிதழ் செவ்வாம்பல்-எங்கோன் வேளூர் கிழவணி நாளி லாளு தாம்பா லவர்சிறு மருங்கே. 98 இன்னிசைச் சிந்தியல் வெண்பா மருமருவும் வேளூர் வயித்தியனார் வெற்பிற் கருமருந்து தம்மிதெனக் கைக்கொண்டோர், வெள்ளை மருமருந் தண்டந் தவர்க்கு. 99 அண்டர்க் கரியவர் வேளூரர் முன்னுண்ட வாலவிடங் கண்டத் திருப்பது கண்டோர் தமக்கன்பர் காதலினா லுண்டற் கவாவு நறுநாவ லொணகனி யுண்டவர் தந் தொண்டைக் குழியினின்றது போல வந்து தோன்றிடுமே. 100 அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம் தோன்றுகரி யுரி போர்த்த புள்ளிருக்கு வேளூரர் துணைத்தாள் பெற்றே, னீன்றுவரு பிறப்பொழிய மைந்தர்களு மொழியாத வின்பும் பெற்றேன், மூன்றுபிறப் பையுமறுத்தே முத்தையனுந் தையலுமென முன்னே நிற்பார், தேன்றுவலைக் கொன்றையந்தார் தரப்பெற்றே னருள்பெற்றேன் சீர்பெற் றேனே. 101 புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் முற்றிற்று |