![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முதல் பாகம் : பூகம்பம் 30. இதுவா உன் கதி? தாரிணியின் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தபோது சௌந்திரராகவனின் உள்ளத்தில் பழைய அன்பும் ஆர்வமும் ததும்பிக் கொண்டிருந்தன. பூகம்பத்தினால் விளைந்த விபரீத நிகழ்ச்சிகளைப் பற்றிப் படித்தபோது அவனுடைய மனம் இளகிற்று. கடிதத்தின் கடைசிப் பகுதி இளகிய மனத்தை மறுபடியும் கல்லாக மாற்றியது. சௌந்திரராகவனுடைய மனதிற்குள் தன்னைப் போன்ற ஒரு புத்திசாலி இந்தியா தேசத்தில் இதுவரை பிறந்ததில்லை என்ற எண்ணம் குடிகொண்டிருந்தது. தாரிணி அவனிடம் கொண்டிருந்த காதல் அந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்ந்திருந்தது. இப்போது அவள் தனக்கு மனித வாழ்க்கை எடுத்ததின் பலனைப் பற்றிய போதனை செய்ய ஆரம்பித்தது ஆத்திரத்தை உண்டாக்கியது. அதிகப்பிரசங்கி! சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு முதலியவை குறித்து இவள் என்ன நமக்கு உபதேசிப்பது? நல்லவேளை! இப்படிப்பட்ட அதிகப்பிரசங்கியுடன் நமது வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளாமல் தப்பினோம்! மூத்தோர்சொல் வார்த்தை 'அமிர்தம்' என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? கலியாண விஷயத்தில், அம்மா சொன்னதை கேட்கத் தீர்மானித்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? அப்பா அடிக்கடி சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். பெண்கள் வீட்டுக்குள்ளேயிருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம். தேசத்தொண்டு என்றும் பொதுஊழியம் என்றும் சொல்லிக்கொண்டு ஸ்திரீகள் வெளியில் கிளம்புவது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அது எங்கே கொண்டு விடும் என்று யார் சொல்ல முடியும், தாரிணியின் விஷயத்தில் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோ ம். அவளுடைய முக வசீகரமும் வெளி மினுக்கும் நம்மை ஏமாற்றிவிட்டன. பார்க்கப் போனால் சீதாவைக் காட்டிலும் தாரிணி அழகிலே அதிகம் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளும் இல்லை. அல்லது சமர்த்திலேதான் சீதா குறைந்து போய் விடுவாளா? அதுவும் இல்லை! அன்றைக்குத் தன் அப்பா, அம்மாவிடம் சீதா எவ்வளவு சாதுர்யமாகப் பேசினாள்? அழகோடும் சமர்த்தோடும் சீதா அடக்கம் என்னும் அருங்குணத்தையும் அணிகலனாகப் பூண்டிருப்பாள். குடும்ப வாழ்க்கைக்கு தகுந்தபடி நடந்து கொள்வாள். பெரியவர்களிடம் பயபக்தியோடு இருந்து நல்ல பெயர் வாங்குவாள். பணம் பணம் என்று ஜபம் செய்து கொண்டிருந்த அப்பாவையே மனம் மாறும்படி செய்து விட்டாளே! அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டு, 'பணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வேண்டிய பணம் நீ சம்பாதித்துக் கொள்வாய். இந்த மாதிரி சமர்த்துப் பெண் கிடைப்பது துர்லபம். உனக்குப் பிடித்திருந்தால் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சொல்லி விட்டாரே? கடவுளுடைய கருணை தன்னிடத்தில் பூரணமாய் இருக்கிறது; ஆகையினாலே தான் தாரிணியோடு தன் வாழ்நாள் முழுவதையும் பிணைத்துக் கொண்டு திண்டாடாமல் இந்த மட்டும் தப்ப முடிந்தது. பெண் பார்க்கப் போன இடத்தில்தான் என்ன? கடவுளுடைய சித்தந்தானே லலிதாவைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவை முதலில் கொண்டு வந்து விட்டது? ஆனால் இந்த விஷயத்தில் கடவுளின் சித்தத்தைக்கூட இரண்டாவதாகத்தான் சொல்ல வேண்டும். அம்மாவுக்குத்தான் முதல் நன்றி செலுத்த வேண்டும். அம்மா மட்டும் அவ்வளவு பிடிவாதமாயிருந்திராவிட்டால், தான் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாளெல்லாம் திண்டாட நேர்ந்திருக்கும்? இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ராகவனுடைய கவனம் உறை பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதத்தின் மீது சென்றது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அதில் அடங்கியிருந்த விஷயம் அவனைத் திடுக்கிட்டுத் திகைக்கும்படி செய்தது. அது முஸபர்பூர் பூகம்பத் தொண்டர் படை முகாமிலிருந்து வந்து கடிதம். அதில் எழுதியிருந்தாவது: முஸபர்பூர்
12-2-34 அன்பார்ந்த ஐயா, வருத்தம் தரும் ஒரு விஷயத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. பம்பாயிலிருந்து வந்த ஒரு தேச சேவிகை - தாரிணி என்னும் பெயர் கொண்டவள் - இந்த முகாமில் தங்கிப் பூகம்பத்தினால் நஷ்டமடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்து வந்தாள். அவளுடைய உயர்ந்த குணங்களினால் இங்கே எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவளாயிருந்தாள். நேற்று மத்தியானம் விடுதியில் சாப்பிட்டுவிட்டுப் போனவள் இரவு திரும்பி வரவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவளிடம் ஒரே ஒரு துர்ப்பழக்கம் இருந்தது. பூகம்பத்தினால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பூமிப்பிளவுகளுக்குப் பக்கத்தில் போய் அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பாள். நாங்கள் பலமுறை எச்சரித்தும் அவள் கேட்கவில்லை. கடைசியாக நேற்றுப் பிற்பகல் தாரிணியைப் பார்த்தவர்கள் அத்தகைய பிளவு ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று அவள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். எவ்வளவோ தேடிப் பார்த்தும் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. "அன்று ஜனககுமாரி பூமிக்குள் போனதுபோல் நானும் போய்விட விரும்புகிறேன்" என்று தாரிணி அடிக்கடி சொல்வது வழக்கம். அவளுடைய விருப்பம் நிறைவேறி விட்டதென்ற வருத்தத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. தாரிணியின் உற்றார் உறவினர்கள் பற்றி எங்களுக்கு யாதொரு தகவலும் இல்லை. அவளுடைய டைரியில் தங்கள் விலாசம் குறிக்கப்பட்டிருந்தபடியால் இதைத் தங்களுக்கு எழுதுகிறோம். தாரிணியின் பந்துக்களைத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களுக்கும் அறிவிக்கக் கோருகிறோம். ஒருவேளை தாரிணி எங்கேயாவது வழி தப்பிப் போயிருந்து திரும்பி வந்து விட்டால் தங்களுக்கு உடனே தெரியப்படுத்துகிறோம். இங்ஙனம்,
சரளாதேவி. இந்தக் கடிதத்தின் முதல் சில வரிகளைப் படிக்கும் போதே ராகவனுக்குத் தாரிணிமீது ஏற்பட்டிருந்த ஆத்திரமெல்லாம் மாறிவிட்டது. அவனுடைய இருதயத்தில் அன்பும் இரக்கமும் ததும்பின. கடிதத்தை முடிக்கும்போது கண்களில் கண்ணீர் ததும்பியது. எழுந்து சென்று பூட்டியிருந்த அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த தாரிணியின் படத்தை எடுத்தான். வெகுநேரம் அதை உற்று பார்த்துக்கொண்டேயிருந்தான். தாரிணியின் பேச்சுக்களும் முக பாவங்களும் நடை உடை பாவனைகளும் ஒவ்வொன்றாகவும் சேர்ந்தாற்போலவும் அவன் மனக் கண் முன்னால் வந்து கொண்டிருந்தன. "அடடா! இதுவா உன் கதி?" என்று எண்ணியபோது ராகவனுடைய கண்ணில் ததும்பிய கண்ணீர் வழிந்து தாரிணியின் படத்தின் பேரில் முத்து முத்தாக உதிர்ந்தது. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தில் ஓர் அதிசயமான நிம்மதியும் உண்டாயிற்று. அப்புறம் ஒரு வாரம், பத்து நாள் வரையில் முஸ்பர்பூரிலிருந்து வேறு ஏதேனும்- நல்ல செய்தி கொண்ட கடிதம் - ஒருவேளை வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அத்தகைய கடிதம் ஒன்றும் வரவேயில்லை. |