இரண்டாம் பாகம் : புயல்

23. தாரிணியின் கதை

     இருவரும் அவரவர்களுடைய படுக்கையில் உட்கார்ந்திருந்தார்கள். தாரிணி கேட்டுக் கொண்டபடி அன்று முன்னிரவில் நடந்ததையெல்லாம் சீதா தனக்குத் தெரிந்த வரையில் சொல்லியாகி விட்டது. இப்போது தாரிணியின் முறை வந்திருந்தது.

     தாரிணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னதாவது:- பழைய காலத்துக் கதைகளில் தங்களுடைய கதைகளைத் தாங்களே சொல்லும் கதாநாயகிகள், 'நான் பிறந்த கதையைச் சொல்லவா? வளர்ந்த கதையைச் சொல்லவா?' என்று ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் பிறந்த கதையை நான் சொல்ல முடியாது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் ரஸியாபேகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடைசியாக, அவளைக் கண்டுபிடித்து விட்டதாக எண்ணிய சமயத்தில் கை நழுவிப் போய் விட்டாள். அதுவும் நல்லதுதான். இப்பேர்ப்பட்ட பயங்கரச் சம்பவம் நடந்திருக்கும் சமயத்தில் நான் என்ன கேட்க முடியும்! அவள்தான் என்னத்தைச் சொல்ல முடியும்!"

     "அவள் உண்மையில் முஸ்லிம் ஸ்திரீதானா? அக்கா! அவளுடைய உண்மைப் பெயர் ரஸியாபேகம்தானா?" என்று சீதா கேட்டாள்.

     "இல்லை அந்த விஷயத்தை அப்புறம் சொல்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவளைத்தான் என்னுடைய தாயார் என்று நினைத்திருந்தேன். உலகத்திலேயே எந்தத் தாயாரும் அவ்வளவு அன்பாக மகளை வளர்த்திருக்க முடியாது. அப்படி என்னை உயிருக்குயிராக எண்ணிப் பாதுகாத்து வந்தாள். ஆனால் உலகத்திலுள்ள பெண்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய சிறு பிராயத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது. என்னுடைய தாயார் உலகத்திலேயே மற்ற ஸ்திரீகளைப் போல் புருஷருடன் வாழ்ந்து குடித்தனம் செய்யவில்லை. யாருக்கோ பயந்து கொண்டு மறைந்து ஒளிந்து வாழ்வதாகத் தெரிந்தது. அடிக்கடி என் தாயாரைப் பார்க்க ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அவரை நான் 'அப்பா' என்று கூப்பிடுவது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது, தானாக வந்ததா அல்லது யாராவது சொல்லிக் கொடுத்து வந்ததா என்று எனக்குத் தெரியாது. என் நினைவு தெரிந்தது முதல் அவரை 'அப்பா' என்றே நான் அழைத்து வந்தேன். அவரும் அம்மாவும் சில சமயம் ஒருவருக்கொருவர் ரொம்பப் பிரியமாயிருப்பார்கள். சில சமயம் புலி கரடிகளைப் போலச் சண்டை போட்டுக் கொள்வார்கள். அவர்கள் உலகத்தில் எல்லாரையும் போலக் கலியாணம் செய்து கொண்ட கணவனும் மனைவியும் அல்ல என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவர் தான் என்னுடைய தகப்பனார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு பேரும் அடிக்கடி சண்டையிட்ட போதிலும் ஒரு விஷயத்தில் ரொம்பவும் ஒற்றுமையாயிருந்தார்கள். அதாவது என்னிடம் பிரியமாயிருக்கும் விஷயத்தில் தான். நான் ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்று சொல்லிவிட்டால் போதும், உடனே அது வந்து சேர்ந்துவிடும். எனக்கு ஏதாவது கொஞ்சம் உடம்பு சரிப்படாவிட்டால் போதும், இரண்டு பேரும் எனக்காக உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள். என்னை வளர்ப்பதற்கும் படிக்க வைப்பதற்கும் கூசாமல் பணம் செலவு செய்தார்கள். இத்தனைக்கும் அவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கவில்லை. நான் சிறுமியாயிருந்த போது என் தாயாரிடம் விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏராளமாக இருந்தன. அவை எப்படி வந்தன என்று எனக்குத் தெரியாது; கேட்கவும் எனக்கு மனம் வராது. அந்த நகைகளையெல்லாம் என் தாயார் ஒவ்வொன்றாக என் தகப்பனாரிடம் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்வாள். சில சமயம் அப்பாவும் பணம் கொண்டு வருவார். அதை வாங்கிக் கொள்ள முடியாது என்று அம்மா பிடிவாதம் பிடிப்பாள். ஏனெனில் அப்பாவுக்கு வருமானம் அதிகம் இல்லை என்றும் அவர் காப்பாற்ற வேறொரு குடும்பம் இருந்ததென்றும் அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. சில சமயம் அம்மாவுக்குத் தெரியாமல் அப்பா எனக்குத் துணிமணி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். தெரிந்த பிறகு அம்மா அவரைச் சண்டை பிடிப்பாள். இந்த விதமாக என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. கான்வெண்ட் பள்ளிக்கூடத்தில் படித்தபோது நிருபமா என்ற பெண் எனக்குச் சிநேகிதி ஆனாள். என்னுடைய பிறப்பு வளர்ப்பைக் குறித்து நினைத்து நான் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போதெல்லாம் நிருபமாவின் சிநேகந்தான் எனக்கு ஒருவாறு உற்சாகம் ஊட்டி வந்தது...."

     "ஆக்ராவில் பார்த்தோமே, அவர்தானே? எனக்கு அவரை ரொம்பவும் பிடித்திருந்தது. சிநேகம் என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்?" என்று குறுக்கிட்டுச் சொன்னாள் சீதா.

     "ஆம், அவள்தான்! எங்கள் இருவருக்கும் ஒரே வயது. எங்களுக்கும் வயதாக ஆக வருங்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தோம். ஒருவருக்கொருவர் அந்தரங்கத்தை வெளியிட்டுக் கொண்டோ ம். இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்வதில்லையென்றும் தேச சேவைக்கே எங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்வது என்றும் தீர்மானம் செய்தோம். ஆனால் நிருபமா அந்தத் தீர்மானத்திலிருந்து மாறிவிட்டாள். சீதா! நீதான் பார்த்தாயே? அவளை அவ்வளவு இலட்சணமானவள் என்று உலகத்தார் சொல்ல மாட்டார்கள். இதை நிருபமா உணர்ந்திருந்தபடியால் தனக்குக் கலியாணமே வேண்டாமென்று சொல்லி வந்தாள். ஆனால் வெளி அழகை மட்டும் பாராமல் அகத்தின் அழகைத் தெரிந்து பாராட்டக் கூடிய ஒருவர் வந்து சேர்ந்தார். அவரை நிருபமா கலியாணம் செய்துகொண்டு இப்போது சந்தோஷமாயிருக்கிறாள். அவள் பாக்கியசாலி."

     தாரிணியின் கண்களில் அப்போது கண்ணீர் துளிர்த்ததைச் சீதா பார்த்தாள். அவளுடைய மனம் கனிந்தது.

     "அக்கா! நிருபமாவைப் போல் நீங்களும் ஒரு நாள் பாக்கியசாலியாவீர்கள்" என்றாள்.

     "அவளுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு, சீதா! என்னுடைய குறை என்னுடைய பிறப்பைப் பற்றியது. தாயாரும் தகப்பனாரும் இன்னார் என்று தெரியாத என்னைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டிய புருஷன் இந்த நாட்டில் எங்கே இருக்கிறான்? அப்படி ஒருவன் இருந்து சம்மதித்தாலும், அவனுடைய பந்துக்கள் சம்மதிக்க வேண்டும்? நம்முடைய தேசத்தில் கலியாணம் நடப்பது பந்துக்களின் சம்மதத்தைப் பொறுத்தல்லவா இருக்கிறது? அது போகட்டும், எனக்குக் கலியாணத்தில் இஷ்டம் இல்லை. இப்போதுமில்லை; எப்போதும் இருக்கவில்லை. தேச சேவையில் உண்மையாகவே ஆர்வம் இருந்தது. பம்பாய் உப்பு சத்தியாக்கிரஹ இயக்கம் நடந்தபோது நிருபமாவும் நானும் அதிலே சேர்ந்தோம். எங்களுடைய சிறு பிராயத்தை முன்னிட்டு எங்களைச் சிறைக்கு அனுப்பவில்லை. நகரத்துக்கு வெளியே பல தடவை கொண்டு விட்டார்கள். ஒவ்வொரு தடவையும் நானும் நிருபமாவும் சேர்ந்தே இருந்தபடியால் எங்களுக்குப் பெரிய தமாஷாயிருந்தது. அந்த இயக்கம் முடிவடைந்ததும் கராச்சி காங்கிரஸுக்குப் போனோம்..."

     இவ்விடத்தில் தாரிணி நிறுத்தி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு மேலே கூறினாள்:- "பிறகு இந்தப் புண்ணிய பாரத பூமியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காஷ்மீரம் முதல் சென்னை வரையில், கராச்சியிலிருந்து கல்கத்தா வரையில் ஊர் ஊராகச் சென்று பார்த்தோம். பிற்பாடு பீஹார் பூகம்பத்தைப் பற்றிய பயங்கரச் செய்திகள் வந்து இந்தத் தேசத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டன. பம்பாயிலிருந்து பூகம்ப சேவை செய்வதற்குப் புறப்பட்ட தொண்டர் படையில் நானும் நிருபமாவும் சேர்ந்து சென்றோம். பூகம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் இருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. நிருபமா வேணிப்பிரஸாதைச் சந்தித்தாள்; சில காலத்துக்குப் பிறகு அவரைத் தன் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டாள்!" என்று தாரிணி நிறுத்தினாள்.

     "அக்கா! மேலே சொல்லுங்கள் முக்கியமான இடத்தில் கதையை நிறுத்தி விட்டீர்களே! நிருபமா தேவியின் வாழ்க்கையில் திருமணம் நிகழ்ந்தது; உங்களுடைய வாழ்க்கையில் என்ன முக்கிய சம்பவம் நடந்தது?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள்.

     "நிருபமாவுக்கு மணம் நிகழ்ந்தது; எனக்கு மரணம் நிகழ்ந்தது! - ஏதோ பிதற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சீதா! எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் செத்துப் போனவள் ஆனேன். அப்படி எல்லோரும் என்னை அடியோடு மறந்துவிட வேண்டுமென விரும்பினேன். ஆகையால், நான் இறந்துவிட்டதாக என்னுடன் சேவை செய்தவர்கள் நம்பும்படி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். இதற்குக் காரணம் நீ பத்திரிகையில் எந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு என் தாயார் பேரில் சந்தேகப்பட்டாயோ, அதே செய்திதான். என் தாயார் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள் என்கிற செய்தி அப்படி என் மனதைக் குழப்பி விட்டது. இந்த உலகத்திலேயே என்னுடைய பூரண அன்புக்கு உரியவளாயிருந்தவள் என் தாயார்தான். என் தகப்பனார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனே, அவர் பேரில் எனக்கு எப்போதும் அவ்வளவு பிரியம் ஏற்பட்டதில்லை. ஆனால் தாயார் மீது உயிருக்குயிரான நேசம் நான் வைத்திருந்தேன். அவளுடைய நடத்தையைப் பற்றி எவ்வளவு குறைகள் மனதில் தோன்றினாலும் அவ்வளவையும் மீறி அவள் மீதுள்ள பிரியம் மேலோங்கி நின்றது. சில வருஷமாக அடிக்கடி அவளைப் பிரிந்து நான் நாடு சுற்றிய போதிலும் அவள் மீது எனக்கிருந்த பாசம் சிறிதும் குன்றவில்லை. அவளுக்கு இந்த அபகீர்த்தி - இந்தக் கஷ்டம், நேர்ந்ததை என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு மகாராஜாவை அவள் கொல்ல முயற்சித்தது ஏன் என்பதை எண்ணிப் பார்த்தபோது என்னவெல்லாமோ உருப்படியில்லாத சந்தேகங்கள் தோன்றின. அப்படிப்பட்ட நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் என் தகப்பனாரைச் சந்தித்தேன். அதுவரையில் என்னுடைய தகப்பனார் என்று நினைத்துக் கொண்டிருந்த மனிதரைத்தான். அவர் எனக்கு ஆறுதலாக இருக்கட்டுமென்று சில செய்திகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று என்ன தெரியுமா? அதுவரையில் என்னுடைய தாயார் என்று நான் நினைத்திருந்தவள், உண்மையில் என் தாயார் அல்ல என்றுதான். இது எனக்கு ஆறுதல் அளிப்பதற்குப் பதிலாகச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. இருள் நிறைந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது; அதுவும் இப்போது அணைந்து போய்விட்டது. அவள் என் தாயார் இல்லையென்றால் இவரும் என் தகப்பனார் இல்லை. பின் நான் யாருடைய மகள்? என் தாய் யார்? தகப்பன் யார்? சீதா! என் வளர்ப்புத் தாய் அவ்வப்போது ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருந்த சில வார்த்தைகளுக்கு இப்போது பொருள் நன்றாகத் தெரிந்தது. அதிலிருந்து யாரோ ஒரு சுதேச சமஸ்தான ராஜாவின் மகள் நான் என்ற சந்தேகம் உதித்தது. என் வளர்ப்புத் தாய் அடிக்கடி ஜாகை மாற்றிக் கொண்டிருந்தது, ரமாமணி என்ற பெயரை மாற்றி ரஸியாபேகம் என்று வைத்துக் கொண்டது இதற்கெல்லாம் ஒருவாறு காரணம் தெரிந்தது. என் வளர்ப்புத் தந்தை இன்னொரு விஷயமும் சொன்னார். என் தாயார் 'ரஸியாபேகம்' என்று வைத்துக்கொண்டதுடன், 'நான் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்துவிடப் போகிறேன். அப்போதுதான் ஆண் மக்களுடைய தொல்லையில்லாமல் தைரியமாக வாழ முடியும்!' என்று சொல்லிக் கொண்டிருப்பாள். கொலை செய்ய முயன்றதற்குச் சில நாளைக்கு முன்னால் உண்மையாகவே அவள் முஸ்லிம் மதத்திலே சேர்ந்து விட்டதாக என் வளர்ப்புத் தந்தை தெரிவித்தார். இதனாலெல்லாம் நான் அடைந்த மன வேதனையை என் வளர்ப்புத் தந்தை தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு வேறொரு முக்கியமான காரியம் இருந்தது. எனக்குத் தைரியம் சொல்லிவிட்டு, தன்னை மறுபடியும் சந்திப்பதற்கு இடமும் தேதியும் குறிப்பிட்டுவிட்டு அவர் போனார். ஆனால் அவரை நான் சந்திக்கவேயில்லை. சந்திப்பதற்கு மனமும் இல்லை. தாயார் விடுதலை அடையும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தேதியில் சிறை வாசலுக்குப் போனேன். ஆனால் அன்று எந்த ஸ்திரீயும் விடுதலை அடையவில்லை. விசாரித்ததில், சிறைக்குள்ளேயும் ரஸீயாபேகம் யாரையோ குத்திக் கொல்ல முயற்சித்ததாகவும், அவளைப் பைத்தியம் என்று சந்தேகித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு மாற்றிவிட்டதாகவும் தெரிந்தது. பைத்தியக்கார ஆஸ்பத்திரியை விசாரித்துக் கொண்டு அங்கே போனேன். அங்கே பைத்தியம் தெளிந்து அவள் விடுதலையாகிப் போய்விட்டதாகத் தெரிந்தது. அன்று முதல் ரஸியாபேகத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். சீதா! அதற்காகவேதான் ரஜினிபூருக்கு நான் வந்தேன். 'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ டில்லியில் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாக அங்கே கேள்விப்பட்டேன். அதன் பேரில் டில்லியிலும் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியாக அவளைச் சந்தித்திருக்கக்கூடிய தினத்தில் இம்மாதிரி பயங்கர சம்பவம் நடந்துவிட்டது!..."

     அந்த அறையில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சீதா, "ரஸியாபேகம் உண்மையில் பைத்தியம் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?" என்று கேட்டாள்.

     "எனக்கு எப்படித் தெரியும், சீதா! நான் அவளைப் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல் ஆயிற்று. ஒருவேளை அவள் பைத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். அவளுடைய மனதில் ஏதோ ஒரு பெரிய துவேஷம் குடிகொண்டிருந்தது மட்டும் எனக்குத் தெரியும். துவேஷம் முற்றினால் வெறி, அப்புறம் பைத்தியந்தானே? பைத்தியம் என்று ஏற்பட்டால் ஒரு வகையில் நல்லதுதான். போலீஸாரிடம் அவள் அகப்பட்டால் இன்று நடந்த சம்பவத்துக்காகத் தூக்கு போடமாட்டார்கள். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள்!"

     இதைக் கேட்ட சீதா அன்றைய தினம் எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம் என்று எண்ணிக்கொண்டாள். வெறியும் பைத்தியமும் ஒருவேளை தன் பேரிலும் திரும்பியிருக்கலாமல்லவா? அதிலும் இராத்திரி இரண்டு மணிக்குத் தனியாகச் சென்று அறையைத் திறந்தபோது அவள் திடுக்கிட்டிருந்தால்? கடவுள் தன்னைக் காப்பாற்றினார். குழந்தை வஸந்தி செய்த அதிர்ஷ்டந்தான்!

     சற்றுப் பொறுத்து சீதா, "இன்னும் ஒரே ஒரு கேள்வி, அக்கா நான் அணிந்திருந்த ரத்தின மாலையைப் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? அதை ரஸியாபேகம் எனக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்?" என்றாள்.

     "ஆமாம்; அதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் கேட்டேன். என்னை வளர்த்த தாயார் ஒவ்வொன்றாகப் பல நகைகளை விற்ற பிறகு கடைசியாக மிஞ்சியிருந்த நகை அதுதான்."

     "அந்த ரத்தின மாலையையும் அதோடு இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் அவள் எதற்காக எனக்குக் கொடுத்தாள்?"

     "என்னை ஏன் கேட்கிறாய் சீதா? என் வாயினால் சொல்ல வேண்டுமா; நீயே ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் தாரிணி.

     சீதாவின் உள்ளம் அதை ஊகித்துத் தெரிந்து கொண்டுதானிருந்தது. இப்போது ஊகம் ஊர்ஜிதமாயிற்று; தாரிணி நினைவு வந்த நாளிலிருந்து 'அப்பா' என்று அழைத்துக் கொண்டிருந்த மனிதர் சீதாவின் தந்தையாக இருக்கவேண்டும். தன்னுடைய குழந்தைப் பிராயத்தில் வீட்டில் தரித்திரம் பிடுங்கித் தின்றதன் காரணமும் தன் தாயார் அடிக்கடி சோகக் கடலில் மூழ்கியிருந்த காரணமும் அதுவேதான். அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகவே அந்த ஸ்திரீ மர்மமாக வந்து இரத்தின மாலையை கொடுத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்.

     தன்னுடைய கலியாணத்துக்கு முன்னால் தன் தகப்பனார் டில்லிக்குப் போயிருந்த விஷயம் சீதாவுக்கு நினைவு வந்தது. தாரிணியைப் பார்க்கத்தான் அவர் போயிருக்க வேண்டும். இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ? தான் பார்த்துப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. தாரிணியும் அவரைப் பார்க்கவில்லை. அவர் உயிரோடிருக்கிறாரோ என்னமோ? இருந்தால் பெற்ற மகளை ஒரு தடவையாவது வந்து பாராமலா இருப்பார்.

     இப்படியெல்லாம் யோசித்துவிட்டுச் சீதா, "அக்கா! எது எப்படியிருந்தாலும் சரிதான்; எப்போதும் நீங்கள் எனக்குத் தமக்கையாகவே இருக்க வேண்டும்!" என்றாள்.

     கடிகாரத்தில் மணி நாலு அடித்தது.