உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
மூன்றாம் பாகம் : எரிமலை 16. சீதாபஹரணம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே மாதிரி குறுகலாயும் அசுத்தம் நிறைந்துமிருந்த சந்துகள் வழியாகச் சூரியாவை முஸ்லீம் லீக் தொண்டர் அழைத்துச் சென்று சற்று தூரத்தில் ஜும்மா மசூதி தெரியும் இடம் வந்ததும், "அதோ! ஜும்மா மசூதி! இனிப் போய் விடுவீர் அல்லவா?" என்றார். "வந்தனம்! இவ்வளவு தூரம் கூட நீங்கள் வந்திருக்க வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டுச் சூரியா மைதானத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே அவனுடைய கால்கள் தடுமாறின. டில்லி நகரமே அவனைச் சுற்றிச் சுழல்வது போலிருந்தது. தாரிணி ஒரு முஸ்லீம் மௌல்வியைத் தன்னுடைய தகப்பனார் என்று சொன்னது அவ்வளவு தூரம் அவனுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணி விட்டது. அந்தச் செய்தியினால் அவனுடைய ஆகாசக் கோட்டைகள் பல தகர்ந்து இடிந்து அவன் தலை மீது விழுந்து கொண்டிருந்தன. ஆம்; அந்தச் செய்தி உண்மையானால் அவனுடைய வாழ்க்கையின் போக்கே மாற வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமானால் தானும் ஒரு முஸ்லீம் ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருஷங்களாக நிலைபெற்று உலகத்துக்கெல்லாம் வழி காட்டும் ஜோதியாக விளங்கும் சநாதன ஹிந்து தர்மத்தைத் துறந்துவிட அவன் தயாராயில்லை. "ஒருவேளை பொய்யாயிருக்குமோ? நமக்குப் போக்குக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லியிருப்பாளோ?" என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா! அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்குகிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோமல்லவா? அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிறதேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். "என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்!" என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத்தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது? சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில் இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன? சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ? அப்படியானால் அந்த நோக்கம் என்ன? அந்தப் பேதைப் பெண் சீதாவை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஏறக்குறைய பைத்தியமாக அடித்து விட்டார்கள்? தாரிணியின் வார்த்தையை நம்பி அந்த அனாதையை கைவிட்டுத் தான் கல்கத்தாவுக்குப் போய்விடுவது சரியா? இவ்விதமெல்லாம் யோசனை செய்து கொண்டே ஜும்மா மசூதியைத் தாண்டி அப்பால் வெள்ளி வீதிக்குள் சூரியா பிரவேசித்தான். டவுன் ஹாலை அடைந்ததும் அங்கே வீதி ஓரத்தில் சீதா தன்னந்தனியாக நிற்பதைக் கண்டான். விரைந்து அவளிடம் சென்று, "சீதா! நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா?" என்றான். "கால் மணி நேரந்தான் ஆயிற்று; ஆனாலும் சாலையில் போகிறவர்கள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்துக்குள் நீ வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது என்று எண்ணி கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்!" என்று சொன்னாள் சீதா. சூரியாவின் மனதில் அப்போது, ஐந்து நிமிஷம் கழித்து 'வராமற் போனோமே!' என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அநாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்?... இருவரும் டவுன் ஹாலுக்குப் பின்புறமுள்ள சாலையின் வழியாகக் காந்தி மைதானத்தை நோக்கி நடந்தார்கள். முதல் நாள் தாரிணியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அதே மரத்தடிக்குச் சூரியா சீதாவை அழைத்துச் சென்றான். வழியில் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் நடக்கும் போது சூரியாவின் மனம் சீதாவின் விஷயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் சென்று உட்கார்ந்ததும் சீதா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "அம்மாஞ்சி! நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு! உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா? இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா!" என்று படபடவென்று பேசினாள். "அத்தங்கா! என்னைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு கவலை? போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன? எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா! நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா! அமரநாத்தின் வீட்டில் உன்னை ஒப்புவித்து விட்டுப் பிறகு நான் என் காரியத்தைப் பார்க்கிறேன். அமரநாத்தும் அவன் மனைவி சித்ராவும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள்...." இவ்வளவு நேரம் அரைமனதாகக் கேட்டுக் கொண்டிருந்த சீதா இப்போது குறுக்கிட்டு, "சூரியா! அந்த யோசனையெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!" என்று சொன்னாள். "அத்தங்கா! அந்த மாதிரி முடிவு செய்ய வேண்டாம். நீ எதற்காக உயிரை விடவேண்டும்? ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதகனுக்காகவா? என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந்தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும்!" என்று சூரியா உணர்ச்சி பொங்கக் கூறினான். "சூரியா! உயிரை விடுவது பற்றி யார் பேசினார்கள்? உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா? எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள்! அவள் அல்லவா உத்தமி; நானும் என் கணவர் இஷ்டப்படி இனிமேல் நடந்து கொள்கிறது என்று தீர்மானித்திருக்கிறேன்." சூரியாவின் தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலத் தோன்றியது. சீதாவின் முடிவு அவனுடைய இருதயத்துக்கு உகந்ததாயிருந்தது. ஆனால் அவனுடைய அறிவு அந்த முடிவை ஆட்சேபித்தது. சீதாவைப் பார்த்து அவன் கூறியதாவது:- "ஸ்திரீகளின் மனதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்களே, அது வாஸ்தவமாகத்தானிருக்கிறது. பெண்களின் சஞ்சலப் புத்தியைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பதிலும் தவறில்லை. இரண்டுக்கும் நீயே உதாரணமாயிருக்கிறாய். நேற்று இரவு எப்படிப் பேசினாய்? இன்றைக்கு எப்படிப் பேசுகிறாய்? புருஷன் என்ன கொடுமை செய்தாலும் மனைவி பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கட்சியை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதெல்லாம் பழைய காலம். பெண்களை அடிமைப்படுத்தப் புருஷர்கள் எழுதி வைத்த சாஸ்திரங்கள் சொல்லும் கடமை. 'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம்' என்பது இந்தக் காலத்துத் தர்மம். கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றிக் கூறுகிறாயே? கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா?" "சூரியா! காந்திஜியின் இஷ்டத்தைப்போல் கஸ்தூரிபாய் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது அவர் மகாத்மா ஆகியிருந்தாரா? இல்லையே? ரொம்ப சாதாரண மனிதராகத் தானே இருந்தார்? அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா! எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார்! நான் எங்கே போனாலும் ஏன் போனாய் என்று கேட்பதில்லை. யாரோடு பேசினாலும் ஏன் பேசினாய் என்று கேட்பதில்லை. நான் தான் அவரை அப்படியெல்லாம் கேட்டு அவருடைய வாழ்க்கையை நாசமாக்கினேன். எனக்கு அவர் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். நான் அவருக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கவில்லை. யோசிக்க யோசிக்கத் தப்பெல்லாம் என் பேரில் தான் என்று உணர்கிறேன். என்னுடைய மூளை எப்படியோ கெட்டுப் போயிருந்தது. இப்போது நிச்சயமாக முடிவு செய்துவிட்டேன். இனிமேல் நீ என் மனதை மாற்ற முயல்வதில் பயனில்லை" என்றாள் சீதா. சூரியா திகைத்துப் போய்விட்டான். "நான் உன் மனதை மாற்ற முயலவேயில்லை. எப்படியாவது நீ ராகவனுக்கு உகந்த மாதிரி நடந்து அவனைச் சீர்திருத்தினால் சரிதான். நீயும் ராகவனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறில்லை. புறப்படு, போகலாம்! இருட்டி விட்டது. உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு என் காரியத்தைப் பார்க்கப் போகிறேன்" என்றான். "நீ என்னுடன் வரவேண்டாம்; ஒரு டாக்ஸி பிடித்து என்னை அதில் ஏற்றிவிட்டால் போதும். இல்லாவிடில் நானே பிடித்துக் கொள்கிறேன்" என்று சீதா சொன்னாள். "அது மாத்திரம் முடியாது, சீதா! என்னுடைய கடமையை நான் செய்தே தீருவேன். இப்போதெல்லாம் டில்லியில் எங்கே பார்த்தாலும் அபாயம் அதிகமாகி வருகிறது. ஸ்திரீகள் தனியாகப் போவது உசிதமல்ல அதிலும் இருட்டிய பிறகு போகவே கூடாது." "எனக்கு என்ன அபாயம் வந்துவிடும், சூரியா! நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய்?" "உனக்குத் தெரியாது, நேற்றுச் சாயங்காலம் தாரிணியும் நானும் இதே மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.." "தாரிணியோடு இந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தாயா? என்னிடம் சொல்லவே இல்லையே?" என்று கேட்ட சீதாவின் குரலில் இத்தனை நேரம் இல்லாத ஈருஷை தொனித்தது. "உன்னிடம் சொல்லச் சந்தர்ப்பம் ஏற்படாதபடியால் சொல்லவில்லை; அதனால் என்ன?" "அதனால் என்ன? ஒன்றுமில்லை; நீயும் தாரிணியும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்? இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள்?" "தனியாகப் பேச வேண்டியிருந்தது; அதனால்தான் வந்தோம். இன்றைக்கு நாம் இருவரும் வரவில்லையா?" "தனியாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்." "பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். முக்கியமாக, புரட்சி இயக்கத்தை மேலே நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், உன்னைப் பற்றியும் பேசினோம்." "என்னைப் பற்றி என்ன பேசினீர்கள்? தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன?" என்று சீதா கேட்டாள். "உன்னுடைய உடல்நிலையும் உள்ளத்தின் நிலையும் சரியாயில்லாதது பற்றிப் பேசினோம். உனக்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தோம்." "எனக்கு ஒரு உதவியும் தேவையில்லை. என்னமோ சொல்ல வந்தாயே அதைச் சொல்! நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம்?" "தாரிணி போன பிறகு நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மூன்று ஆசாமிகள் வந்தார்கள். வந்து லோகா பிராமமாகக் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு தங்கள் நோக்கத்தை வெளியிட்டார்கள். அதாவது தாரிணியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு போவதற்கு நான் உதவி செய்தால் எனக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! நன்றாயிருக்கிறதல்லவா?" "இது என்ன அநியாயம்? அப்படிப்பட்ட மனிதர்கள் யாராயிருக்கும்?" என்றாள் சீதா. "ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தோன்றியது. இந்த 1943-ஆம் வருஷத்தில் வைஸ்ராய் வேவலின் ஆட்சியின் கீழ் டில்லி நிலைமை இப்படி இருக்கிறது. இருட்டிலே உன்னைத் தனியாக அனுப்ப எப்படி எனக்கு மனம் வரும்?" "சூரியா! என் விஷயத்தில் அந்த மாதிரிக் கவலை உனக்கு வேண்டாம். தாரிணியைப் போன்ற அழகிக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னால், எனக்கும் அப்படிச் சொல்வார்களா? என் மூஞ்சி இருக்கிற லட்சணத்துக்கு என்னை ஏலம் போட்டாலும் ஒரு லட்சம் பைசாக்கூட யாரும் கொடுக்க மாட்டார்கள். என் அகத்துக்காரர் தாரிணியை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாரே, அதை நினைத்தால் அவருக்கு எவ்வளவோ நான் நன்றியோடிருக்க வேண்டும்." "அப்படி நீயிருப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அது என்னுடைய கடமை இல்லாவிட்டால் என் மனது அடித்துக் கொண்டேயிருக்கும்." "சூரியா! உன்னை வரவேண்டாம் என்று நான் சொல்லுவது உனக்காகத் தான். எங்கள் வீட்டுக்கருகில் போலீஸார் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ அவ்விடம் வந்தால் உடனே உன்னை அரெஸ்டு செய்து விடுவது என்று காத்திருக்கிறார்கள்..." "அரெஸ்டைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை என்று தான் முன்னமே சொன்னேனே?" "உனக்குக் கவலையில்லை என்பது சரிதான். நீ எப்போது கைதியாவோம், ஜெயிலுக்குப் போய் நிம்மதியாயிருப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என் அகத்துக்காரர் சர்க்கார் உத்தியோகஸ்தர் என்பதை நீ கவனித்தாயா? எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும்? அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா?" சூரியா ஒரு நிமிஷம் திகைத்து ஸ்தம்பித்துப்போய் விட்டான். பிறகு "மன்னிக்க வேண்டும், சீதா! அந்த விஷயத்தை நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. போகட்டும்; நான் உன் வீடு வரையில் வரவில்லை. வீட்டுக்குக் கொஞ்ச தூரம் வரையில் வருகிறேன். அப்புறம் நீ தனியே போய்விடு இவ்வளவாவது செய்தால் தான் என் மனம் நிம்மதியடையும்" என்றான் சூரியா. "நல்லது; அப்படியே செய். உன் மனது நிம்மதி அடையட்டும்" என்று சீதா சம்மதித்தாள். இருவரும் அந்த மரத்தடியிலிருந்து புறப்பட்டார்கள். மைதானத்திலிருந்து வெள்ளி வீதிக்குப் போகும் சாலை ஜன நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்தச் சாலையில் ஓரிடத்தில் ஒரு பெரிய மோட்டார் நின்று கொண்டிருந்தது. அதனுடைய பின்புறத்திலிருந்த 1111 என்னும் நம்பர் சூர்யாவின் மனதில் பதிந்தது. வண்டிக்குள் இரண்டு பேர் இருந்தார்கள். வண்டிக்கு வெளியில் சாலை ஓரத்து வேலிக்கருகில் நின்று இருவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியைத் தாண்டிச் சென்ற போது சூரியாவின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதுவல்ல என்பதை உணர்ந்தான். பின்னர் கொஞ்சம் வேகமாகவே நடந்தான். சூரியாவும் சீதாவும் வெள்ளி வீதியை அடைந்து மணிக்கூண்டுக்கு அருகில் ஒரு டாக்ஸியைப் பிடித்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புதுடில்லியை நோக்கிப் போயிற்று. அவர்கள் ஏறிய டாக்ஸியைப் பின்னால் ஒரு மோட்டார் வண்டி தொடர்ந்து வருகிறது என்று சூரியா சந்தேகித்தான். அதை நிச்சயம் செய்துகொள்ள முடியவில்லை! புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இருக்கும்? வண்டி வேகமாய்ச் சென்றது; ஜந்தர் மந்தர் என்னும் வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தைக் கடந்ததும் சீதா, "இங்கேயே வண்டியை நிறுத்திவிடலாம். எங்களுடைய வீடு இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கிறது" என்றாள். "சரி என்று சொல்லிச் சூரியா வண்டியை நிறுத்தச் செய்தான். "நான் இவ்விடம் இறங்கிக் கொள்ளட்டுமா? நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா?" "வேண்டாம்! டாக்ஸிக் காரில் போய் இறங்கினால் வேலைக்காரர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். நடந்து போனால் வழக்கம்போல் உலாவப்போய் வருவதாக எண்ணிக் கொள்வார்கள். இங்கிருந்து நடந்தே போய்விடுகிறேன். இரண்டு பர்லாங்கு தூரம் கூட இராது" என்றாள் சீதா. "சரி" என்றான் சூரியா. சீதா வண்டியிலிருந்து இறங்கியதும், "இன்று ராத்திரியே கல்கத்தா போகப் போகிறாயல்லவா? கட்டாயம் போய்விடு, சூரியா!" என்றாள். "போகத்தான் போகிறேன், சீதா?" "நாம் மறுபடியும் எப்போது சந்திக்கிறோமோ என்னமோ? ஆனால் என்னிடம் உனக்குள்ள அபிமானத்தையும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவியையும் ஒருநாளும் நான் மறக்கமாட்டேன்" என்றாள் சீதா. "நானும் உன்னை ஒருநாளும் மறக்க முடியாது, அத்தங்கா!" சீதா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியா வண்டியிலிருந்து இறங்கி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். வெண்ணிலா துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளின் தோட்டங்களிலிருந்து இரவு பூக்கும் மலர்களின் சுகந்தம் வந்துகொண்டிருந்தது. காற்று மிருதுவாக வீசிற்று; பக்கத்து வீடு ஒன்றிலிருந்து, "ஸோஜா ராஜ குமாரி! ஸோஜா!" என்னும் கிராமபோன் கீதம் கேட்டுக் கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் சீதா மேலே மேலே அந்தச் சாலையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வரும் காட்சியைப் போல் தோன்றியது. சீதாவின் வருங்கால பாக்கியம் எப்படியோ? அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா? அப்படி நேர்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா?" என்று சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கார் சூரியாவைத் தாண்டிப் போயிற்று. அதனுடைய நம்பர் 1111 என்பது மறுபடியும் அவனுடைய கண்ணில் பட்டுக் கவனத்தில் பதிந்தது. வேகமாகச் சென்ற அந்த மோட்டார் கார் பட்டென்று பிரேக் போடப்பட்டுச் சீதாவின் அருகில் நின்றது. வண்டியிலிருந்து இரண்டு பேர் குதித்தார்கள். சீதாவைப் பலவந்தமாகக் காருக்குள் தள்ளினார்கள். தாங்களும் ஏறிக்கொண்டார்கள், கதவு சாத்தப்பட்டது. வண்டி 'கிர்' என்ற சத்தத்துடன் திரும்பி சூரியா நின்ற வழியாகவே மறுபடியும் வரத் தொடங்கியது. இவ்வளவும் சுமார் அரை நிமிஷத்துக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிட்டது. சூரியாவின் மூளை சற்று நேரம் செயலிழந்து போயிருந்தது. ஆனால் அந்த வண்டி நின்ற இடத்தைத் தாண்டிச் சென்றபோது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. வண்டிக்குள்ளிருந்து 'அம்மாஞ்சி' என்ற தீனக்குரல் வந்தது போலத் தோன்றியது. சூரியா தன் கால்சட்டைப் பையிலேயே வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த வண்டியின் டயர்களை நோக்கிச் சுட்டான். டயர் மீது குண்டு படவில்லை. சட்டென்று பக்கத்தில் நின்ற டாக்ஸிக்குள் ஏறிக்கொண்டு, "அதோ அந்த வண்டிக்குப் பின்னால் விடு! உனக்கு வேண்டியதைத் தருகிறேன்! இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றான். "பெட்ரோல் குறைவாக இருக்கிறது, சாகிப்!" என்றான் வண்டியின் டிரைவர். "அதனால் பரவாயில்லை பெட்ரோல் இருக்கிறவரையில் வண்டியை ஓட்டு சீக்கிரம்!" என்றான் சூரியா. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் அங்கு வந்து "சுட்டது நீதானா? அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு!" என்று கேட்டான். சூரியா அந்தப் போலீஸ்காரனைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினான். போலீஸ்காரன் தூரப் போய் விழுந்தான். "ஜாவ்! ஜாவ்!" என்று சூரியா அதட்டினான். டாக்ஸி டிரைவரும் மூளை குழம்பிப் போய் வண்டியை அதி வேகமாக விட்டுச் சென்றான். விழுந்த போலீஸ்காரன் எழுந்து மூன்று தடவை விசில் ஊதினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் நாலு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இந்தப் போலீஸ்காரனும் அதில் ஏறிக்கொண்டு ஏதோ சொன்னான். ஜீப் வண்டி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து அதிவேகமாகச் சென்றது. |