உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூன்றாம் பாகம் : எரிமலை 5. வெற்றி ரகசியம் சென்னை மாநகரின் சிரோரத்தினமாக விளங்கி வந்த பத்மாபுரத்தில் "தேவி ஸதனம்" என்னும் பங்களாவில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் துர்வாச முனிவராக உருக்கொண்டிருந்தார். தன்னுடைய இதய கமலத்திலிருந்து பொங்கி வந்த குரோதமோகமாற்சரியங்களைப் பேனா முனை வழியாகக் காகிதத்தில் தீட்டிக் கொண்டிருந்தார். "தார்மிக கேஸரி" என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை, எழுதிய காகிதம் தீப்பட்டு எரியுமாறு அவ்வளவு உத்வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. சில காலமாக மேற்படி பத்திரிகையின் பத்திகளில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கும் பேராசிரியர் பரிவிராஜகசர்மாவுக்கும் மாபெரும் விவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்துக்கு மூல காரணம் சாஸ்திரியார் பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தில் நிகழ்த்திய ஒரு பிரசங்கந்தான். ஹிந்து சமுதாயத்தில் அநாதி காலமாக ஏற்பட்டுள்ள வருணாசிரமத்தின் சிறப்பைச் சாஸ்திரியார் மேற்படி பிரசங்கத்தில் சாங்கோபாங்கமாக விளக்கினார். வர்ணாசிரம தர்மத்தை மேற்கொள்ளாததினால் மேனாடுகள் எப்படிப் பயங்கரமான யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கின்றன என்று எடுத்துக் காட்டினார். நாலு வர்ணங்களைப் பற்றிச் சொல்லி விட்டு நாலு ஆசிரமங்களைப் பற்றிக் கூறும்போது, சந்நியாச ஆசிரமத்தின் மகிமையைப் பற்றி மிக விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். காலாகாலத்தில் சந்நியாச ஆசிரமத்தை மேற் கொள்ள முடியாதவர்கள் அந்திக் காலம் நெருங்கிவிட்டதென்று தெரிந்த பிறகாவது 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொள்வதின் அவசியத்தை இலேசாகக் குறிப்பிட்டார். சாஸ்திரியாரின் மேற்படி பிரசங்கத்தின் சாராம்சம் சற்று விரிவாகவே தினப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. மேற்கண்ட கருத்துக்கள் சாதாரணமாகப் பேராசிரியர் பரிவி ராஜக சர்மா ஒப்புக்கொள்ளக் கூடியவைதான். ஆயினும் சாஸ்திரியார் பிரசங்கம் செய்து அது பத்திரிகையிலும் வந்து விட்ட காரணத்தினால் ஏதாவது ஒரு விதத்தில் அதைத் தாக்குவது சர்மாவின் இன்றியமையாத கடமையாயிற்று. எனவே, "தார்மிக கேஸரி"க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதன் சாராம்சமாவது:- "இந்தக் காலத்தில் சிலர் சந்நியாச ஆசிரமத்தைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் பழைய வேத காலத்து ஹிந்துக்கள் சந்நியாசத்துக்கு அவ்வளவு உயர்வைக் கொடுக்கவில்லை. சஹதர்மினி இல்லாதவன் யாகம் செய்வதற்கு உரியவனாகக் கருதப்படவில்லை. அத்திரி, பிருகு, ஆங்கிரஸர், அகஸ்தியர், வசிஷ்டர், வாமதேவர், பராசரர் முதலிய மகரிஷிகளுக்குப் பத்தினிகள் இருந்தார்கள். கௌதம புத்தருடைய காலத்துக்குப் பிறகு தான் இந்தியாவின் சந்நியாசத்துக்குச் சிறப்பு ஏற்பட்டது. 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொள்ளும் வழக்கம் மிக்க அபத்தமானது. புதல்வர்கள் சரிவரச் சிரார்த்தம் செய்ய மாட்டார்களோ என்று பயந்தவர்கள் தான் கடைசி காலத்தில் அவசர அவசரமாகச் சந்நியாசம் பெறுவார்கள். சில அபூர்வமான புத்திர சிகாமணிகள் தகப்பனாருக்கு சிரார்த்தம் செய்யும் சங்கடம் இல்லாமற் போவதற்காக தகப்பனாரைக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துக் காஷாயம் கட்டிவிடுவதும் உண்டு. ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கு இத்தகைய விபத்து எதுவும் நேராது என்று நம்புகிறேன். சாஸ்திரியார் இம்மாதிரியெல்லாம் உளறிக் கொட்டாமல் தமது திருவாயை மூடிக்கொண்டிருந்தாரானால் ஹிந்து தர்மத்துக்குப் பேருதவி செய்தவராவார்." இத்தகைய அவதூறு நிறைந்த கடிதத்தைப் படித்துவிட்டு ராவ்பகதூர் பத்மலோசனை சாஸ்திரியார் அளவில்லாத கோபம் கொண்டது இயல்பேயல்லவா? அவர் எழுதிய மறுப்புக் கடிதத்தில் பேராசிரியர் சர்மாவை வெளு வெளு என்று வெளுத்திருந்தார். "ஹிந்து சமயத்தில் சந்நியாச ஆசிரமத்துக்கு உயர்வு கொடுக்கவில்லையென்று எந்த மூட சிகாமணி - எந்த நிரட்சரகுட்சி சொல்லுவான்? இந்தியாவில் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டிய மகா புருஷரான ஆதி சங்கராச்சாரியார் சந்நியாசி அல்லவா? நம்முடைய காலத்தில் ஹிந்து தர்மத்தின் உயர்வை உலகமெல்லாம் உணரும்படி செய்தவர் சுவாமி விவேகானந்தர் அல்லவா? இன்று திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் ரமண மகரிஷியின் பெருமையை உணராத ஜடமாக யார் இருக்க முடியும்? இராமாயண காலத்தில் இந்தியாவிலே சந்நியாச ஆசிரமத்துக்கு எவ்வளவு பெருமை இருந்தது என்பதை வால்மீகி பகவான் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லி இருக்கிறார். சந்நியாசி வேடத்தில் வந்த இராவணனைப் பார்த்ததும் சீதாதேவி எவ்வளவு பயபக்தி மரியாதையுடன் அவனை உபசரிக்கிறாள்? சந்நியாசத்துக்கு அவ்வளவு மரியாதை அந்தக் காலத்தில் இருந்தபடியால் அல்லவா இராவணன் சந்நியாச கோலம் பூண்டு சீதையிடம் வந்தான்? நிற்க, ஆசிரமங்களை எப்படி வரிசைப்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து எது உயர்ந்த ஆசிரமம் என்பதை அறியலாம். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்னும் வரிசையில் கடைசியில் இருப்பதனாலேயே அது எல்லா ஆசிரமங்களுக்கும் சிகரமானது என்று விளங்கவில்லையா? சாதாரணமாக எல்லோருக்கும் இது விளங்கக் கூடிய விஷயந்தான். மெத்தப் படித்த மேதாவியான பேராசிரியர் சர்மாவின் அபார மூளைக்கு மட்டும் இது விளங்கவில்லை போலும்!" இவ்வாறு சாஸ்திரியார் எழுதிய விவாதத்தைக் கடைசி வார்த்தையாக இருக்கும்படி விட்டுவிட்டுப் பேராசிரியர் சர்மா சும்மா இருந்து விடுவாரா? மீண்டும் அவர் எழுதத்தான் செய்தார். "ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் தாம் மெத்தப் படித்தவர் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் கொஞ்சம் படித்தவர் என்று ஏற்படுகிறது. ஆனால் அந்தக் கொஞ்சமும் எதைப் படித்தாரோ தெரியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தைத் தொட்டுப் பார்த்ததேயில்லையென்று திட்டமாய்த் தெரிகிறது. புத்தருக்குப் பிறகு இந்தியாவிலே சந்நியாசத்துக்குப் பெருமை ஏற்பட்டது என்று தான் சொன்னேன். சாஸ்திரியார் ஸ்ரீசங்கராச்சாரியாரையும், சுவாமி விவேகானந்தரையும், ஸ்ரீரமண ரிஷிகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மூவரும் புத்தருக்கு முன்னாலிருந்தவர்கள் என்பது சாஸ்திரியாரின் எண்ணம் என்று தெரிகிறது. ஆனால் சாஸ்திரியார் சொல்லிவிட்டதால் சரித்திரம் வந்த வழியே திரும்பிப் போய்விடாது. சாஸ்திரியார் 'இராவண சந்நியாசி'யைக் குறிப்பிட்டது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இராமாயண காலத்திலே சந்நியாச ஆசிரமம் போலிகளுக்கும் மோசக்காரர்களுக்கும் வேஷமாகி விட்டது என்பதை வால்மீகி பகவான் நன்றாக ஸ்தாபனம் செய்திருக்கிறார். ஆசிரம வரிசைக் கிரமத்தில் சந்நியாசம் கடைசியில் வருவதால் அதுவே உயர்ந்த ஆசிரமம் என்று சாஸ்திரியார் சாதிக்கிறார். இதே மாதிரி வர்ணங்களிலும் கடைசி வர்ணமே உயர்ந்தது என்று சாஸ்திரியார் ஒப்புக்கொள்கிறாரா? அப்படி ஒப்புக்கொண்டால் நானும் சந்நியாசத்தின் உயர்வை ஒப்புக்கொண்டு சாஸ்திரியாருக்கு இப்போதே 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். சாஸ்திரிகளின்பாடு இப்போது மிகவும் சங்கடமாகத்தான் போய்விட்டது. தம்முடைய வாதங்களில் உள்ள பலக் குறைவைக் கோபத்தினாலும் சாபத்தினாலும் இட்டு நிரப்புமாறு காரசாரமுள்ள பதில் ஒன்றை எழுதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பிரயத்தனம் காரணமாகச் சாஸ்திரியார் ரௌத்ராகாரம் கொண்டிருந்தபோது, அவருடைய பங்களாவின் வாசலில், "பவதி பிட்சாந் தேஹி" என்று குரல் ஒன்று கேட்டது. மேல்மாடித் தாழ்வாரத்திற்கு வந்து சாஸ்திரியார் எட்டிப் பார்த்தார். இளம் பிராயத்துத் துறவி ஒருவர் நிற்பதைக் கண்டார். அவருக்கு ஏற்பட்ட வியப்பைச் சொல்லி முடியாது. தம் வாழ்நாளிலேயே இதுவரையில் இல்லாத பரபரப்புடன் மச்சுப்படிகளை மூன்று மூன்று படியாகக் குதித்துத் தாண்டிக் கொண்டு கீழே இறங்கினார். பின்கட்டிலிருந்த தமது வாழ்க்கைத் துணைவியை அழைத்து "காமாட்சி! ஒரு அதிசயத்தைக் கேள்! வாசலில் யாரோ பால சந்நியாசி வந்து நிற்கிறார். முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறது. 'பிட்சாந்தேஹி!' என்ற வார்த்தை கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. வாசற்கதவுச் சாவியைச் சீக்கிரம் கொண்டுவா! ஒரு மகானை எத்தனை நேரம் வாசலிலே நிறுத்தி வைக்கிறது? சாக்ஷாத் ஆதிசங்கரரே திரும்ப அவதாரம் எடுத்து வந்திருப்பது போலிருக்கிறது. நம் பிதாமகர்கள் செய்த பாக்கியம் நம் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். என்ன பேசாமல் நிற்கிறாயே?" என்று இரைந்தார். இதற்குள் வாசற்புறம் எட்டிப் பார்த்து யாரோ ஒரு சந்நியாசி நிற்பதைத் தெரிந்து கொண்ட காமாட்சி அம்மாள் "எதற்காக இவ்வளவு படபடப்பாய் பேசுகிறீர்கள்? வாசற் கதவு திறந்துதானிருக்கிறது. அப்படி அதிசயமான மகான் எங்கேயிருந்து வந்து குதித்து விடப் போகிறார்? இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சாமியாராயிருக்கும் ஏதாவது நன்கொடை வசூலிப்பதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது!" என்றாள். இதைக் கேட்டதும் சாஸ்திரியாரின் உற்சாகம் கொஞ்சம் தணிந்தது. காமாட்சி அம்மாள் சொன்னதைப் போலவே இராமகிருஷ்ண மடம் அல்லது கௌடியா மடத்திலிருந்து யாராவது நன்கொடை கேட்க வந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படியிருந்தால், "பவதி பிக்ஷாந்தேஹி!" என்று கேட்டிருக்க மாட்டாரல்லவா? இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை ஊட்டியது. எப்படியிருந்தாலும் பார்த்து விடலாம் என்று வாசற் பக்கம் சென்றார். காமாட்சி அம்மாளும் வஸந்தியும் பின்னோடு வந்தார்கள். இதற்குள் சாமியாரும் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். சந்நியாசியை நெருங்கி நின்று பார்த்ததும் சாஸ்திரியாரும் காமாட்சி அம்மாளும், 'தெரிந்த முகமாய்த் தோன்றுகிறதே; யாராக இருக்கும்?' என்று திகைத்தார்கள். "மாமி என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று சுவாமியார் கேட்டதும் காமாட்சி அம்மாளுக்குப் பளிச்சென்று உண்மை தெரிந்துவிட்டது. "நம்ம சூரியாவைப் போலிருக்கிறதே? இது என்ன கோலம்?" என்றாள் காமாட்சி அம்மாள். "நம்ம சூரியா போலிருக்கிறதா? என்ன உளறுகிறாய்? நம்ம சூரியா என்றால் யார்?" என்றார் சாஸ்திரியார். "ராஜம்பேட்டை கிட்டாவய்யர் பிள்ளை சூரியா தான். வேறு எந்தச் சூரியாவைச் சொல்லப் போகிறேன்?" "நிஜமாகவா? அதனாலேதான் எனக்குக் கூடப் பார்த்த முகமாகத் தோன்றியது" என்றார் சாஸ்திரியார். "ஆமாம்; பூர்வாசிரமத்தில் இந்தக் கட்டையின் பெயர் சூரியா தான்; இந்த ஆசிரமத்தில் சுதந்திராநந்தர்" என்று சொன்னார் சந்நியாசி. "அப்படியா? ரொம்ப சந்தோஷம். பழம் நழுவிப் பாலில் விழுவது போலாயிற்று!" என்று உபசரித்துக் கொண்டே சாஸ்திரிகள் ஸ்ரீசுதந்திராநந்தரை அழைத்துச் சென்று ஹாலில் சோபாவில் உட்காரச் செய்தார். காமாட்சி அம்மாள், "இத்தனை சின்ன வயதில் இது என்ன கோலம்? அப்பா அம்மா சம்மதித்தார்களா? காலாகாலத்தில் ஆகவேண்டியதெல்லாம் ஆகி, வயதான பிறகு சந்நியாசம் வாங்கிக் கொண்டால் பாதகமில்லை!" என்றாள். சுவாமியார் பதில் சொல்வதற்குள் சாஸ்திரியார் குறுக்கிட்டு, "ரொம்ப லட்சணம்! உன்னைக் கேட்டுக் கொண்டு தான் சந்நியாசி ஆகவேணும் போலிருக்கிறது. உலகத்தைத் துறந்து ஆசிரமம் வாங்கிக்கொண்ட பிறகு, அப்பா யார்? அம்மா யார்? பிரிவிராஜகர் ஆன பிறகு, உலக பந்தமே கிடையாது; குடும்ப பந்தம் எப்படி வரும்? அவள் கிடக்கிறாள், சுவாமிகளே! தங்களைப் போல் பால வயதில் வைராக்கியமடைந்து ஆயிரம் பேர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஸநாதன தர்மத்தைப் பிரசாரம் செய்வது என்று ஆரம்பித்தால் ஸநாதன தர்மம் உத்தாரணமே ஆகிவிடும். அது இருக்கட்டும்; தாங்கள் எங்கே, எப்போது இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? எந்த மகானிடம் ஆசிரமம் வாங்கிக் கொண்ட பிறகு எங்கெங்கே போய் வந்தது? இந்த நகரத்தில் எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்? எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். காமாட்சி! நீ சமையலறைக்குப் போய்க் கொஞ்சம் கவனி. சாஸ்திரோத்தமாகச் சுவாமிகளுக்குப் பிக்ஷை பண்ணி வைக்க வேண்டும்; ஒரு குறையும் ஏற்படக் கூடாது தெரிகிறதா?" என்றார். "நன்றாய்த் தெரிகிறது எல்லாம் ஒரு குறைவுமில்லாமல் நடந்துவிடும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுக் காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்றாள். அவளுடன் வஸந்தியும் போனதைப் பார்த்த பால சந்நியாசி, "வஸந்தி! என்னை ஞாபகம் இல்லையா? பேசமாட்டேன் என்கிறாயே?" என்றார். வஸந்தி அப்படியும் சுவாமியாருடன் பேசாமல் பாட்டியைக் குனியச் சொல்லி அவள் காதோடு, "ஏன், பாட்டி! சூர்யா மாமா எதற்காகத் தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்? திருப்பதிக்குப் போய்விட்டு வந்தாரா?" என்று கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள். வஸந்தியையும் அழைத்துக் கொண்டு காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்ற பிறகு சாஸ்திரியார், "ஆமாம்; தாங்கள் எப்படி இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? ஏதோ காங்கிரஸில் சேர்ந்து 'குவிட் இந்தியா' இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்களே?" என்றார். "ஆம்? அதுவும் உண்மை தான்; 'குவிட் இந்தியா' இயக்கத்துக்காகத்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். ஹரித்துவார் போயிருந்த சமயத்தில் அங்கே ஒரு சுவாமியாரைத் தரிசித்தேன். தரிசித்த வேளை, விட்டகுறை வந்து தொட்டுக் கொண்டது. அவரிடம் சிஷ்யனாகி ஒரு வருஷம் இருந்து தொண்டு செய்தேன். பிறகு ஆசிரமம் பெற்றுக் கொண்டு க்ஷேத்திர யாத்திரை செய்து வருகிறேன். இப்போது ராமேசுவரத்துக்குப் போய்த் திரும்பி வருகிறேன்!" என்றார் பால சந்நியாசி. "தங்களுடைய பூர்வீகர்களிலே யாராவது மகான்கள் இருந்து யாக யக்ஞங்கள் செய்திருக்க வேண்டும். அதனாலே தான் இந்தப் பிராயத்தில் இப்படிப்பட்ட பாக்கியம் தங்களுக்குக் கிடைத்தது. ஈரேழு பதினாலு தலைமுறையும் தங்களால் கடைத்தேறப் போகிறது. இந்த நகரிலே எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்?" "இன்றைக்கும் நாளைக்கும் இருந்துவிட்டு நாளை மறுநாள் புறப்படலாம் என்று நினைக்கிறேன்." "அதெல்லாம் கூடவே கூடாது; இங்கே ஒரு மாதமாவது தங்கியிருக்க வேண்டும். இருக்கிற வரையில் நம்முடைய கிரஹத்திலேயே பிக்ஷை, பூஜை எல்லாம் வைத்துக்கொள்ளலாம். சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் உபந்நியாசங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். ஸநாதன தர்மத்தைப் பற்றியும் முக்கியமாக வர்ணாசிரம தர்மத்தைப் பற்றியும் உபந்நியாசம் செய்யவேண்டும். ஹிந்து சமூகத்தில் சந்நியாசத்துக்கு எவ்வளவு பெருமை என்பது எல்லாரும் மறந்து விட்டார்கள். பரிவிராஜக சர்மாவைப் போன்ற படித்த முட்டாள்கள் கூட இந்த விஷயத்தில் தப்பபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய உபந்நியாசங்கள் அவர்களையெல்லாம் வாயடைத்துப் போகும்படி செய்ய வேண்டும்." இந்தச் சமயத்தில் வாசற்பக்கமிருந்து ஒரு இளம் பெண்மணி உள்ளே வந்தாள். அவள் தூய வெள்ளைக் கதருடை தரித்திருந்தாள். தலையில் மாத்திரம் மிக்க நவநாகரிக முறையில் 'பாப்' செய்யப்பட்டுப் பரட்டையாகத் தொங்கியது. ஆனால் நடையுடை பாவனையெல்லாம் அடக்கமாக இருந்தன. "நமஸ்காரம் மாமா! சௌக்கியமா? மாமி உள்ளே சமையலறையில் இருக்கிறாரா?" என்று கேட்டுக்கொண்டே அவள் பின்கட்டுக்குச் சென்றாள். "இந்த அம்மாள் யார்?" என்று சுவாமியார் கேட்கவும், "உனக்குத் தெரியாது? இவள்தான் என்னுடைய மூத்த நாட்டுப் பெண். இவளுடைய வாழ்க்கையில் திடீரென்று இந்த மாறுதல் ஏற்பட்டு விட்டது. இவளுடைய சிநேகிதிகள் சிலர் 1942 ஆகஸ்டு இயக்கத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்களாம். இவளுடைய இன்னொரு சிநேகிதி பர்மாவில் நேதாஜி சுபாஷ் பாபுவின் ஐ.என்.ஏ.யில் சேர்ந்திருக்கிறாளாம். இதெல்லாம் சேர்ந்து இவளையும் இப்படிக் கதர், காங்கிரஸ், பைத்தியமாக அடித்து விட்டது. ஆனால் மொத்தத்தில் நல்ல மாறுதல் தான். இவள் இந்த வீட்டுக்கு வந்து இருப்பதாகக் கூடச் சொல்கிறாள். ஆனால் நான் தான் கொஞ்ச நாள் போகட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவள் இங்கிருக்கும்போது போலீஸ்காரர்கள் வந்து இவளைப் பிடித்துக் கொண்டுபோனால், என்னுடைய பென்ஷனுக்கு அல்லவா ஆபத்து வந்து தொலையும்?" என்றார் சாஸ்திரியார். "ஆனால் தங்கள் பென்ஷனுக்கு இப்போது ஆபத்து வந்தாலும் சுயராஜ்யம் வந்தவுடன் பென்ஷனும் திரும்பி வந்துவிடும் அல்லவா?" என்றார் சந்நியாசி. "வரலாம் வரலாம், ஆனால் இந்த மாதிரி இளம் பெண்கள் வேலை செய்துதானா, இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரப்போகிறது? மகாத்மா காந்தி, வல்லபாய்ப் படேல், ஜவாஹர்லால் நேரு முதலியவர்கள் சிறை புகுந்ததற்கே சுயராஜ்யம் வரவில்லையே?" "அப்படியானால் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரவே வராது என்று நினைக்கிறீர்கள்?" என்றார் சந்நியாசி. "யார் சொன்னது? இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கட்டாயம் வரத்தான் போகிறது. ஆனால் இவர்களாலெல்லாம் வரப்போவதில்லை; கடவுளுடைய சித்தத்தினால் வேறு வழியில் வரப் போகிறது. கலி புருஷர் ஜெர்மனியில் அவதாரம் எடுத்திருக்கிறார்; ஹிட்லரைத் தான் சொல்கிறேன். ஹிட்லர் ருஷியாவின் மேல் படையெடுத்தது முட்டாள்தனம் என்று சில பிரகஸ்பதிகள் இங்கே சொல்கிறார்கள். ஹிட்லரை விட இவர்கள் மேதாவிகள் என்கிற எண்ணம். ஹிட்லர் ருஷியாவின் மீது படையெடுத்ததே இந்தியாவை நோக்கமாக வைத்துக் கொண்டுதான்! ஸ்டாலின் கிராடைப் பிடித்தவுடன், ஒரே தாவில் இந்தியாவிலே ஆகாச விமானத்தில் வந்து இறங்கப் போகிறார். ஐம்பதினாயிரம் ஆகாச கப்பல்களில் துருப்புகளும் வந்து இறங்கப் போகின்றன. ஹிட்லர்தான் ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டாரே, உலகத்திலேயே ஆரிய ஜாதி தான் உயர்ந்த சாதி என்று? அப்படியானால் இந்தியாவிலேதானே உலக சாம்ராஜ்யத்தின் தலைநகரத்தை ஸ்தாபித்தாக வேண்டும்? ஹிட்லர் இந்தியாவில் வந்து இறங்கிய உடனே செய்யப் போகிற முதல் வேலை என்ன தெரியுமா? 'சாதி வித்தியாசம் கூடாது' என்று சில பிரகஸ்பதிகள் உளறிக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் தலையிலே துணியைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்! உலகத்திலுள்ள ஜனங்களையெல்லாம் அடால்ப் ஹிட்லர் நான்கு வர்ணங்களாகப் பிரித்துவிடப் போகிறார். அப்போது அல்லவா தெரியப் போகிறது வர்ணாசிரம தர்மத்தின் பெருமை? பிழைத்துக் கிடந்தால் நானும் பார்க்கத்தான் போகிறேன்?" என்றார் சாஸ்திரியார். அங்கே தேவபட்டிணத்தில் தாமோதரம்பிள்ளை, "ஜப்பான்காரன் வந்து எல்லாச் சாதிகளையும் ஒன்றாக்கப் போகிறான்" என்று சொன்னதையும், இங்கே சாஸ்திரிகள், "ஹிட்லர் வந்து வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டப் போகிறார்" என்று சொல்வதையும் மனதிற்குள் சுவாமியார் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார். அதனால் தன்னை மீறி வந்த சிரிப்பைப் அடக்கிக்கொண்டு, "ஆனால் சில பேர் ஹிட்லர் தோற்றுப் போய்விடுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!" என்றார். "அப்படிச் சில பேர் உளறிக் கொண்டிருக்கிறார்கள், நானும் கேட்டுத் தான் இருக்கிறேன். இவர்கள் இப்படி உளறினால் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடுமா? ஹிட்லர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார் என்பது தெரியுமல்லவா? மாமிசம் சாப்பிடுவதில்லை; மது பானம் செய்வதில்லை; ஸ்திரீகளின் முகத்தில் விழிப்பதில்லை. பிறந்ததிலிருந்து பிரம்மச்சரிய விரதம். சுவாமிகளே! ஹிட்லரைச் சாதாரண மனுஷன் என்று எண்ணிவிட வேண்டாம். அவர் ஹடயோகி; கலிபுருஷனுடைய அவதாரம். ஸமஸ்கிருத பாஷையைக் கரைத்துக் குடித்த மகாபண்டிதர்கள் இப்போது ஜெர்மனியில் தான் இருக்கிறார்கள் என்பது தெரியும் அல்லவா? ஒரு நாள் ஜெர்மன் ஸயன்டிஸ்டுகளை எல்லாம் ஹிட்லர் கூப்பிட்டார். 'உங்கள் அசட்டு ஆராய்ச்சிகளையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள்; அதர்வண வேதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். ஜெர்மன் ஸயன்டிஸ்டுகள் அப்படியே செய்தார்கள். அதன் பலன் என்ன வி. ஒன்று, வி. இரண்டு, வி. மூன்று என்பதாகப் புதுப் புது ஆயுதங்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன! இங்கிலீஷ்காரர்கள், அமெரிக்கர்கள், ருஷ்யர்கள் எல்லோரும் முழி முழியென்று முழிக்கிறார்கள்! எல்லாம் அதர்வண வேதத்திலுள்ள இரகசியம் என்று இவர்களுக்கெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு விஷயம் தெரியுமோ இல்லையோ? ஹிண்டு ஜோதிஷ சாஸ்திரத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டு தான் ஹிட்லர் ஒவ்வொரு காரியத்தையும் ஆரம்பித்தார். செக்கோஸ்லோவேகியா மீது படையெடுத்த போதும் அப்படி; பிரான்ஸைப் பிடிக்க கிளம்பிய போதும் அப்படி; இல்லாவிட்டால் நெப்போலியன் பிறந்த பிரான்ஸ் தேசத்தைப் பத்தே நாளில் பிரியைக் கட்டி இழுத்திருக்க முடியுமா? நான் சொல்கிறது என்ன?" என்று சாஸ்திரியார் நிறுத்தினார். "கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்று பால சந்நியாசி பட்டுக் கொள்ளாமல் சொன்னார். "கவனமாக கேட்டு என்ன பிரயோஜனம்? மனதிலே வாங்கிக் கொள்ள வேண்டும். இன்னொரு சர்வ இரகசியமான விஷயம். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வதற்கு ஹிட்லர் எப்பொழுதும் பக்கத்திலே வைத்துக் கொண்டிருக்கிற ஆசாமி யார் என்று சுவாமிகளுக்குத் தெரியுமா?" "அது யார்! தெரியாதே?" "நான் சொல்லுகிறேன். மன்னார்குடி பஞ்சு சாஸ்திரிகள் பிரசித்தமாயிருந்தாரே, தெரியுமோ இல்லையோ? நாலு வேதம் ஆறு சாஸ்திரம் தெரிந்த மகான். அவருடைய சாக்ஷாத் பெண் வயிற்றுப் பேரன் பிச்சு சாஸ்திரிகளைத் தான் எப்போதும் ஹிட்லர் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறாராம். எப்பேர்ப்பட்ட ஜெனரல் ஆகட்டும், பீல்டு மார்ஷல் ஆகட்டும், சீப் ஆப் ஸ்டாப் ஆகட்டும், யார் வந்து 'இதுதான் சமயம்; படை கிளம்ப வேண்டும்!' என்று சொன்னாலும் ஹிட்லர், 'ஊஹும்' என்று சொல்லிவிடுவாராம். பிச்சு சாஸ்திரிகள் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்துப் 'படை கிளம்பலாம்' என்று சொன்னால் தான், புறப்பட உத்தரவு கொடுப்பாராம்! அதன் பலன் என்ன? ஜயத்துக்கு மேல் ஜயம்! வெற்றிக்கு மேல் வெற்றி! உலகமே ஹிட்லரின் காலடியில் வந்து கொண்டிருக்கிறது. அங்கே ஹிட்லர் நம்முடைய சாஸ்திரங்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார். இங்கே சில பிரகஸ்பதிகள் 'பழம் பஞ்சாங்கம்' என்று பரிகாசம் செய்கிறார்கள்! என்னத்தைச் சொல்கிறது? எந்தக் குட்டிச் சுவரிலே போய் முட்டிக் கொள்கிறது என்று கேட்கிறேன்." இவ்விதம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்ததைச் சந்நியாசி வேறு வழியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வளவு படித்த மனிதர், பி.ஏ., பட்டம் பெற்றவர், ஸப் ஜட்ஜு உத்தியோகம் பார்த்தவர், உலக அனுபவம் பெற்றவர் - இத்தகைய குருட்டு நம்பிக்கையைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருப்பது குறித்து அவருடைய மனதில் ஒரு பகுதி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தது. பரம்பரையாக வந்து இரத்தத்தில் ஊறிப்போன நம்பிக்கைகளைக் கைவிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல போலும் என்று எண்ணினார். அதே சமயத்தில் அவருடைய மனதில் இன்னொரு பகுதி 'இவருடைய சளசளப்பு எப்போது ஓயும்? காமாட்சியம்மாளிடம் தனியாகச் சீதாவைப் பற்றிப் பேச எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் சாஸ்திரிகள் பேச்சை நிறுத்துவதற்குச் சாமியார் ஒரு வழி கண்டுபிடித்தார். "நீங்கள் சொல்லுவதெல்லாம் சரியாயிருக்கலாம். ஆனால் இப்படி இறைந்து பேசுகிறீர்களே? இப்போது தான் எங்கே பார்த்தாலும் சி.ஐ.டி.க்காரர்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களே? யார் காதிலாவது விழுந்து ரிப்போர்ட்டு செய்தால் வீண் வம்பு அல்லவா?" என்றார். சாஸ்திரியாரின் சரமாரியான பிரசங்கம் அந்தக் கணமே பளிச்சென்று ஓய்ந்தது. |