உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் : பிரளயம் 23. சீதாவின் பிரார்த்தனை கல்கத்தா மெயிலில் இரண்டு தினங்கள் சீதா பிரயாணம் செய்தாள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகத் தோன்றின. சீதா ஏறியிருந்த அதே மாதர் வண்டியில் கல்கத்தாவுக்குச் செல்லும் இன்னும் சில மதராஸி ஸ்திரீகளும் ஏறியிருந்தார்கள். அந்த ஸ்திரீகளில் ஒருத்தி ஹாவ்ராவில் ஜாகை உடையவள். சீதாவுக்கு அவள் சிநேகமானாள். பொழுது போவதற்கு அவளுடைய பேச்சுத் துணை கொஞ்சம் உதவியாயிருந்தது. வண்டி ஹாவ்ரா ஸ்டேஷனை அடைவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் தாமதமாயிற்று. அன்று காலையிலிருந்து ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஜனங்கள் கூடிக்கூடி ஏதோ கசமுசாவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வண்டியிலிருந்த பிரயாணிகளிடையிலும் ஏதோ கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் ஸ்திரீகளின் வண்டிக்குத் தகவல் ஒன்றும் எட்டவில்லை. ஹாவ்ராவுக்கு முதல் ஸ்டேஷனில் வேறு வண்டியிலிருந்த தென்னிந்தியர் ஒருவர் இறங்கி வந்து மாதர் வண்டியிலிருந்தவர்களைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் புருஷத்துணை இருக்கிறதா? அல்லது ஹாவ்ரா ஸ்டேஷனுக்காவது புருஷர்கள் வருவார்களா? தனியாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போகவேண்டும். கல்கத்தாவிலே ஏதோ கலாட்டாவாம்!" என்று சொன்னார். இது சீதாவின் மனதில் எந்த விதமான கலக்கத்தையும் உண்டு பண்ணவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ கலாட்டாக்களை அவள் பார்த்தாகிவிட்டது. கல்கத்தாவுக்குப் புதிதாகப் போய் இறங்கிய அன்றைக்கே பெரும் அபாயத்துக்கு அவள் உட்பட நேர்ந்தது. அதையெல்லாம்விட இப்போது என்ன அதிகம் இருந்துவிடப் போகிறது? ஆனால் ஹாவ்ரா ஸ்டேஷனில் போய் இறங்கியவுடனே தான் நினைத்தது எவ்வளவு தவறு என்று சீதாவுக்குத் தெரிந்துவிட்டது. அன்று 1946- ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி நரகத்தில் வாழும் பேய்கள் அன்றைக்குக் கல்கத்தாவுக்கு விஜயம் செய்து தங்களுடைய நாச வேலைகளை நடத்திக் கொண்டிருந்தன. குழந்தைகள் என்றும், வயோதிகர்கள் என்றும், ஸ்திரீகள் என்றும் பாராமல் அந்தப் பேய்கள் கொன்று தின்றுவிட்டுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தன. அந்த ஊளைச் சத்தங்களுக்கிடையே 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்னும் கோஷம் சில சமயம் கேட்டது. கிரேதாயுகத்திலே வாழ்ந்த இரணியன், இரணியாட்சன் ஆகிய அரக்கர்களும், திரேதா யுகத்தில் இருந்த இராவணன், கும்பகர்ணன், மகோதரன், விருபாட்சன் முதலிய ராட்சதர்களும், துவாபர யுகத்திலே பிறந்த கம்ஸன், சிசுபாலன், தந்தவக்கிரன், பகாசுரன், ஜராசந்தன் ஆகிய மனிதப் பேய்களும் ஒரே சமயத்தில் கல்கத்தாவில் வந்து பிறந்து ஆயிரம் பதினாயிரம், லட்சம் எனப் பெருகித் தங்களுடைய கோர கிருத்தியங்களை நடத்தியதாகத் தோன்றியது. ஸ்திரீகளின் வயிற்றில் கத்தியை செலுத்திக் குடலை வெளியில் எடுத்தல், குழந்தைகளைக் காலைப் பிடித்து வீசி எறிந்து கொல்லுதல், உயிரோடு மனிதர்களைப் பிடித்து எரியும் நெருப்பிலே போடுதல், முதலிய அசுரச் செயல்கள் அன்று கல்கத்தாவில் சர்வசாதாரணமாயிருந்தன. ஹாவ்ரா ஸ்டேஷனில் சீதா இறங்கியபோது கல்கத்தா நகரத்துக்குள்ளேயிருந்து ஆயிரம் நகரங்களிலிருந்து வருவது போன்ற கோர சத்தம் வருவது கேட்டது. லட்சக்கணக்கான மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் ஓலமிடும் குரலும், ஆயிரக்கணக்கான பேய் பிசாசுகள் ஊளையிடும் குரலும், வீடுகள் தீயிட்டு எரியும் சத்தமும், எரிந்து விழும்போது எழும் சத்தமும், மக்கள் இங்குமங்கும் ஓடும் சத்தமும், துப்பாக்கி வேட்டுச் சத்தமும், துருப்புக்களின் ஆர்ப்பாட்டச் சத்தமும் சேர்ந்து வந்து ரயிலிலிருந்து இறங்கியவர்களின் உடம்பையும் உடம்புக்குள் எலும்பையும் நடுநடுங்கச் செய்தன. சீதாவுக்கு ரயிலில் சிநேகமான ஸ்திரீயை அழைத்துப் போவதற்காக மனுஷர்கள் வந்திருந்தார்கள். கல்கத்தாவில் பயங்கரமான கலகம் நடப்பதாகவும் ஆகையால் யாரும் ஹாவ்ரா பாலத்தைத் தாண்டி அப்பாலே போக முடியாது என்றும் சொன்னார்கள். அந்த ஸ்திரீ தனியாக வந்திருந்த சீதாவைப் பற்றி அவர்களிடம் சொன்னாள். சீதாவும் ஹாவ்ராவுக்கு வந்து இருக்கலாம் என்றும், கலகம் அடங்கிய பிறகு அவளுடைய மனுஷர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றும் சொன்னார்கள். இதைக் கேட்ட சீதாவுக்கு உள்ளம் கலங்கி உலகம் சுற்றியது. சிறிது நிதானித்துக் கொண்டு, "இல்லை; நான் எப்படியும் இன்றைக்குப் போக வேண்டும், எனக்கு ஒன்றும் வராது" என்றாள். "அப்படியானால் போய்ப்பாருங்கள்!" என்றனர் ஹாவ்ராக்காரர்கள். சீதா தட்டுத் தடுமாறி ஹாவ்ரா ஸ்டேஷனிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்த பாலம் வரையில் சென்றாள். அங்கிருந்து ஸ்டேஷன் பக்கத்தில் ஓடிவந்த ஒரு பெரும் கூட்டம் அவளைத் தள்ளிக் கொண்டு வந்து ஸ்டேஷன் வாசலில் சேர்த்தது. அதுவரை காத்திருந்த ஹாவ்ராக்காரர்கள் அவளையும் சேர்த்துத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனார்கள். ஹாவ்ராவில் தங்கியிருந்த நாலு தினங்களும் சீதா அநுபவித்த மன வேதனையைச் சொல்லி முடியாது. இன்னும் ஒரு நாள் முன்னால் வராமற் போனோமே, வந்திருந்தால் இத்தகைய பயங்கரமான அபாய காலத்தில் கணவனோடும் குழந்தையோடும் சேர்ந்திருக்கலாமே என்று எண்ணி ஏங்கினாள். ஒவ்வொரு நிமிஷமும் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று நினைத்து விம்மினாள். இவ்வளவு தூரம் வந்த பிறகு கடைசியில் அவர்களைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சை வாளால் அறுப்பது போலிருந்தது. கல்கத்தாவில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிக் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்துகொண்டிருந்த செய்திகள் அவளுடைய மனப் புண்ணில் அடிக்கடி கொள்ளிக் கட்டையால் சுடுவது போன்ற துன்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. முக்கியமாகப் பச்சிளங் குழந்தைகளைத் தூக்கி எறிந்து கொல்லுகிறார்கள் என்றும், தீயிலே போட்டு வதைக்கிறார்கள் என்றும் வந்த செய்திகள் அவளுக்கு எல்லையில்லாத துன்பத்தை உண்டுபண்ணின. அந்த மாதிரி கதி தன் அருமைக் குழந்தைக்கு ஒருவேளை நேர்ந்திருக்குமோ, நேர்ந்து விடுமோ என்று எண்ணி எண்ணி அவளுடைய மண்டை வெடித்து விடும் போலிருந்தது. இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனி என்றைக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுப் பிரிவதில்லையென்று மனதிற்குள் ஆயிரந்தடவை சபதம் செய்து கொண்டாள். இந்தத் தடவை தன் கணவன் உயிர் பிழைத்திருந்து தனக்கும் அவருக்கும் சமாதானமாகி விட்டால் அப்புறம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவருடன் சண்டையிடுவதில்லையென்றும் பிரதிக்ஞை செய்துகொண்டாள். ஆனால் அவர் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? தன்னைக் கண்டதும் "எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?" என்று கேட்காமலிருக்க வேண்டுமே? அப்படி அவர் கேட்டாலும் கேட்கட்டும். அதற்காக இவள் இனிமேல் பின்வாங்கப் போவதில்லை. ஏதாவது எப்படியாவது சொல்லிச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர் பிழைத்திருக்க வேண்டுமே? அவருக்கும் குழந்தைக்கும் அபாயம் ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே? இந்தப் பாவியின் அதிர்ஷ்டம் எப்படியிருக்குமோ தெரியவில்லையே? மூன்று நாள் பகலும் இரவும் சீதா தூங்கவேயில்லை. தப்பித்தவறிச் சிறிது கண்ணயர்ந்தாலும் பயங்கரச் சொப்பனங்கள் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவள் படும் துன்பத்தைப் பார்த்து அந்த வீட்டுக்காரர்கள் அவளிடம் மிகவும் அநுதாபம் காட்டி ஆறுதல் கூறினார்கள். ஹாவ்ராவில் வசித்த தென்னிந்தியர்களுக்குக் கவலையில்லாமற் போகவில்லை. கல்கத்தாவில் நடக்கும் பயங்கரக் கலகம் பாலத்தைத் தாண்டி ஹாவ்ராவுக்குள்ளும் வராது என்பது என்ன நிச்சயம்? இது மட்டுமல்ல, அவர்களிலே பலர் உத்தியோகம் பார்த்த ஆபீஸுகள் கல்கத்தாவிலேதான் இருந்தன. அந்த ஆபீஸுகளின் கதி என்ன ஆகிறதோ? கலகம் அடங்கிய பிறகாவது ஆபீஸைத் திறப்பார்களோ என்னமோ? அப்படித் திறந்தால்தான் என்ன? ஷுஹரவர்த்தி ஆட்சி புரியும் நகரத்தில் இனி நிம்மதியாக வாழ முடியுமா? இவ்வாறெல்லாம் முதல் இரண்டு நாளும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் கலகம் ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் உற்சாகம் காட்ட ஆரம்பித்தார்கள். ஏனெனில் கலகத்தின் போக்கு மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் மாறத் தொடங்கியது. முதல் இரண்டு நாளும் ஹிந்துக்களின் படுகொலையாகவே நடந்தது. மூன்றாம் நாள் பீஹாரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து குடியேறியிருந்த பால்கார முண்டர்களும் சீக்கியர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். பழிக்குப்பழி வாங்கும் கோஷம் எங்கெங்கும் கிளம்பியது. முதல் இரண்டு நாளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷுஹரவர்த்தியும், அவருடைய சகாக்களும் இப்போது கலவரத்தை அடக்கவும் கல்கத்தாவின் நல்ல பெயரை நிலைநாட்டவும் பெருமுயற்சி செய்தார்கள். ஐந்தாம் நாள் அவர்களுடைய முயற்சி பலன் தந்தது; கலவரம் அடங்கியது. சீதா ஹாவ்ரா ஸ்டேஷனில் வந்திறங்கி ஒரு வாரம் சொல்ல முடியாத மன வேதனைகளை அநுபவித்த பிறகு எட்டாம் நாள் அமரநாத்தின் வீட்டை அடைந்தாள். அமரநாத்தின் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் அவளுடைய கணவனும் குழந்தையும் வசித்தார்கள் என்று சித்ராவின் கடிதத்திலிருந்து அவளுக்குத் தெரிந்திருந்ததல்லவா? ஆனால் இப்போது ராகவனும் வஸந்தியும் எதிர் வீட்டில் இல்லை. அமரநாத்தின் வீட்டிலேயே மேல் மச்சில் இருந்தார்கள் என்று தெரிந்தது. அவர்கள் மட்டுமா? புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளுமாகத் தென்னிந்தியர்கள் சுமார் நூறு பேர் அந்த வீட்டில் இருந்தார்கள். கலகம் நடந்த பிரதேசங்களிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள்தான் அத்தனை பேரும். அவர்களில் பெரும்பாலோரை அபாயங்களிலிருந்து தப்புவித்து அழைத்துக் கொண்டுவந்து சேர்த்தது தன் கணவன் சௌந்தரராகவன்தான் என்பதை அறிந்தபோது சீதாவின் உள்ளம் பூரித்தது. அப்போது தான் பக்கத்திலிருந்து அவருக்கு உதவி செய்யக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூட ஏற்பட்டது. சௌந்தரராகவன் செய்த சேவையைப் பற்றியும் அமரநாத்தின் வீடு தென்னிந்தியர்களின் அடைக்கலம் ஆனது பற்றியும் ஹாவ்ராவிலேயே சீதா தெரிந்து கொண்டிருந்தாள். ஆகையால் நேரே அமரநாத் வீட்டுக்குச் சென்று சித்ராவை தேடிப் பிடித்தாள். சித்ரா சீதாவைப் பார்த்ததும், "வந்தாயா, மகராஜி! ஏதோ இந்த மட்டும் இப்போதாவது வந்து சேர்ந்தாயே? உன் புருஷனாச்சு, நீயாச்சு! மேல் மாடியில் படுத்துக் கிடக்கிறார்! போய்க் கவனித்துக் கொள்!" என்றாள். சீதா நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள, "அவருக்கு என்ன? ஏன் படுத்திருக்கிறார்?" என்று கேட்டாள். "அவருக்கு என்னவா? 105 டிகிரி காய்ச்சல், ஜன்னி, பிதற்றல் எல்லாந்தான்! இந்த ஏழு நாளும் அவர் செய்திருக்கிற வேலைக்கு சுரம் வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுரம் தெளியாமல் அவர் செத்துப் போனாற்கூடப் பரவாயில்லை. நூறு பேரைக் காப்பாற்றிய மனுஷன் அப்புறம் இருந்தால் என்ன? போனால் என்ன?" என்றாள் சித்ரா. கல்கத்தா படுகொலையின்போது அந்த நகரில் வசித்தவர்கள் சாவைப்பற்றி இப்படி அலட்சியமாய்ப் பேசுவது இயற்கையேயல்லவா? ஆனால் சீதா அப்படி நினைக்கவில்லை, "சித்ரா! உனக்குப் புண்ணியம் உண்டு, இப்படியெல்லாம் பேசாதே. நிஜமாக அவருக்கு அபாயம் ஒன்றும் இல்லையல்லவா? பிழைத்துக் கொள்ளுவார் அல்லவா?" என்றும் கேட்டாள். "அது உன்னுடைய சமர்த்து; உன் பெண்ணின் சமர்த்து. நீங்கள் இரண்டு பேரும் செய்கிற சிசுருஷையில் இருக்கிறது அவர் பிழைக்கிறது. டாக்டர் அப்படித்தான் சொல்கிறார். உன் பெண் வஸந்தி இருக்கிறாளே? மகா சமர்த்து. இந்த ஏழு நாளும் எப்படி எனக்கு ஒத்தாசையாயிருந்தாள் என்று நினைக்கிறாய்? கொஞ்சமாவது பயப்படவேண்டுமே? கிடையாது! எல்லாரும் குலைநடுங்கிக் கொண்டிருந்தபோது அவள் மட்டும் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டும் குஷிப்படுத்திக் கொண்டும் இருந்தாள். இப்பேர்ப்பட்ட புருஷனையும் பெண்ணையும் விட்டுவிட்டுத் தேவபட்டணத்தில் உனக்கு என்னடி வைத்திருந்தது? போனால் போகட்டும். உடனே இப்போதாவது போய்க் கவனி. வஸந்திக்குக் கை வலித்துப் போயிருக்கும் ஐஸ் வைத்து வைத்து! ஆனாலும் குழந்தை அலுக்காமல் சலிக்காமல் முணுமுணுக்காமல் அப்பாவுக்குச் சிசுருஷை செய்துகொண்டிருக்கிறாள். இந்த வீட்டுக்கு வந்திருக்கும் நூறு பேரைப் பார்த்துக் கொள்வதும் சரி, உன் புருஷன் ஒருவருக்குச் சிசுருஷை செய்வதும் சரி. வேலை செய்தாலும் அப்படி வேலை செய்கிறார்; சுரமாய்ப் படுத்தாலும் அப்படிப் படுத்துகிறார். போ மச்சுக்கு!..." என்று இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டே சித்ரா விரைந்து போய்விட்டாள். சீதா கவலையும் ஆவலும் முன்னால் தள்ளவும் கூச்சமும் தயக்கமும் பின்னால் இழுக்கவும் தட்டுத் தடுமாறி மச்சுக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கேயும் ஒரே ஜனக் கூட்டமும் சந்தடியுமாக இருந்தது. ஆனால் ஒருவரும் சீதாவைக் கவனிக்கவில்லை. அவரவர்கள் தங்கள் தங்களுடைய சொந்த விசாரத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். மேல் மாடியில் சந்தடியில்லாத அறை ஒன்றே ஒன்று இருந்தது. அதில்தான் ராகவன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சீதா வெறுமனே சாத்தியிருந்த கதவை மெதுவாகத் திறந்தாள். அவள் நினைத்தபடிதான் இருந்தது. அந்த அறையில் போட்டிருந்த கட்டிலில் ராகவன் படுத்திருந்தான். அவனுடைய கண்கள் மூடியிருந்தன. உணர்ச்சி இல்லாத நிலையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் வஸந்தி உட்கார்ந்து அப்பாவின் தலையிலும் நெற்றியிலும் ஐஸ் வைத்துக்கொண்டிருந்தாள். கதவைத் திறந்துகொண்டு சீதா உள்ளே நுழைந்ததும் வஸந்தி குனிந்திருந்த முகத்தைத் தூக்கி அவளை நிமிர்ந்து பார்த்தாள். சொல்லமுடியாத ஆவலும் வியப்பும் அன்பும் ஆத்திரமும் இரக்கமும் கோபமும் அவளுடைய கண்ணின் பார்வையில் கலந்திருந்தன. அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. சீதாவுக்குப் பேச நா எழவில்லை. தயங்கித் தயங்கிக் கட்டிலண்டை போனாள். ராகவனுடைய உள்ளங்காலை இலேசாகத் தொட்டாள்; ஜில்லென்று இருந்தது. பிறகு இன்னும் சிறிது நகர்ந்து உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்த்தாள். கைகளும் ஜில்லென்று இருந்தன. மேலும் சிறிது நெருங்கிக் கழுத்தின் கீழே மார்பில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். அடுப்பில் போட்ட இரும்புச் சட்டியைப் போல் கொதிக்கிறது. ஜுரம் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று ஐயமின்றித் தெரிந்தது. இதற்கிடையில் வஸந்தி அம்மா முகத்தையும் அப்பா முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதா வஸந்தியைச் சந்தித்ததும் என்னவெல்லாமோ சொல்லவேணும் என்று நினைத்திருந்தாள். "என்னைப் பார்க்க வராமல் உன் அப்பாவுடன் போய்விட்டாய் அல்லவா? நீ எனக்குப் பெண் இல்லை!" என்று சொல்வதாகக்கூட உத்தேசித்திருந்தாள். அதற்கெல்லாம் இப்போது சந்தர்ப்பமில்லாமல் போயிற்று. "வஸந்தி! ஐஸ் பையைச் சற்று என்னிடம் கொடு! உனக்குக் கையை வலிக்குமே?" என்றாள் சீதா. "வேண்டாம், அம்மா! எனக்குக் கை வலிக்கவில்லை. உனக்கு ஐஸ் பை சரியாக வைக்கத் தெரியாது. நெற்றி முழுதும் படும்படி வைக்க வேண்டும்" என்றாள் வஸந்தி. "எனக்குத் தெரியுமடி கண்ணே! தெரியாமற் போனால் நீதான் பக்கத்தில் இருக்கிறாயே, சொல்லிக் கொடு!" என்றாள் சீதா. அவ்வாறே வஸந்தி தன் பக்கத்தில் இருக்க, சீதா ஐஸ் பையை ராகவனுடைய நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தாள். தாயாரும் பெண்ணும் கொஞ்ச நேரம் ஒருவரையொருவர் பார்ப்பதோடு இருந்தார்கள். வஸந்தியின் முகத்தில் சிறிது நேரத்துக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. "அம்மா! நீ இனிமேல் என்னையும் அப்பாவையும் விட்டு விட்டுப் போகவே மாட்டாயே?" என்றாள். சீதாவின் முகமும் சிறிது மலர்ச்சி அடைந்தது. "போகமாட்டேனடி, கண்ணே! முன்னேகூட நான் வேண்டுமென்றா போனேன்? வேறு வழியில்லாமல் போனேன். அப்பாவும் நீயும் என்னை அழைத்துக் கொள்ளாமல் இங்கே வந்துவிட்டீர்கள்!" "அது போனால் போகட்டும், அம்மா! இனிமேல் நீ எங்களை விட்டுவிட்டுப் போகமாட்டாயே!" "போகமாட்டேன்." "ஐந்தாறு நாளாக இந்த ஊரிலே கலகம் பலமாக நடந்தது. கல்கத்தா பட்டணத்திலே உள்ளவர்கள் அவ்வளவு பேரும் கூண்டோ டு கைலாசமாய்ச் செத்துப்போக வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டார்கள், அப்போது எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? சொல், பார்க்கலாம்!" "தெரியவில்லை, கண்ணே! நீதான் சொல்ல வேண்டும்." "சாகிறதுக்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்க்காமல் செத்துப்போக வேண்டியிருக்கிறதே என்று தோன்றியது. அப்படிச் செத்துப் போய்விட்டால்கூட ஆவி ரூபத்தில் நீ இருக்குமிடம் வந்து உன்னை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றியது" என்றாள் குழந்தை. "அப்படியெல்லாம் சொல்லாதே வஸந்தி! நல்ல பேச்சாகப் பேசு!" என்றாள் சீதா. "சாவு என்றால் உனக்கு என்னமோ போல் இருக்கிறதாக்கும். இங்கே ஏழு எட்டு நாளாய் ஓயாமல் சாவைப் பற்றித்தான் பேச்சு. அது எங்களுக்குச் சகஜமாய்ப் போச்சு, அம்மா!" "அது இருக்கட்டும், குழந்தை! அப்பாவின் உடம்பைப் பற்றி டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? என்ன சுரம் என்றார்கள்?" "'ஷாக்'கினால் வந்த ஜுரம் என்றுதான் சொன்னார்கள். ரொம்பக் கடுமையாய்த்தான் வந்திருக்கிறது; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்கள். ஆனால் எனக்கென்னமோ ஒரு அசட்டுத் தைரியம். அப்பா கட்டாயம் பிழைத்துவிடுவார் என்று. ஏழு நாளாக எத்தனை கண்டத்துக்கு அவர் தப்பிப் பிழைத்திருக்கிறார் தெரியுமா?" "அப்பா செய்ததைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்களே! அப்படி என்ன செய்தார், வஸந்தி!" "அப்பா செய்ததையெல்லாம் சொல்வதாயிருந்தால் ஒரு ராமாயணமும் பாரதமும் எழுத வேண்டும் அம்மா! அவ்வளவு செய்திருக்கிறார். ஒன்று சொல்கிறேன் கேள். ஒரு வீட்டைக் கலகக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கதவைத் திறக்காவிட்டால் வீட்டுக்கு நெருப்பு வைத்து விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இது தெரிந்ததும் அப்பா என்ன செய்தார் தெரியுமா? கவர்ன்மெண்ட் ஆபீஸரை டெலிபோனில் கூப்பிட்டு ஒரு முஸ்லீமின் வீட்டை ஹிந்துக்கள் தாக்குவதாகச் சொன்னார் - அப்படிச் சொன்னால்தான் கவர்ன்மெண்டார் போலீஸை அனுப்புவார்கள் என்று. போலீஸும் வந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவே நேரில் போய் அந்த வீட்டிலிருந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தார். இது தெரிந்தவுடனேயே கலகக்காரர்கள் அப்பாவை அடையாளம் வைத்துக் கொண்டு அவரைக் கொன்றுவிடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய ஜம்பம் சாயவில்லை....." இந்தச் சமயத்தில் சௌந்தரராகவன் வெறி வந்தவன் போல் பிதற்றத் தொடங்கினான். "ஓகோ! என்னை யார் என்று நினைத்தீர்கள்! கிட்ட வந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவேன். கத்திக்குக் கத்தி, துப்பாக்கிக்குத் துப்பாக்கி, கொலைக்குக் கொலை, பழிக்குப் பழி - தெரியுமா? என்னையும் மகாத்மா காந்தி என்று எண்ணிவிடாதீர்கள்!" என்று கூச்சல் போட்டுக் கொண்டே எழுந்து உட்கார முயன்றான். சீதாவும் வஸந்தியும் அவனை மெதுவாகப் பிடித்து மறுபடியும் படுக்கவைத்தார்கள். அப்போது ராகவன் சீதாவை விழித்துப் பார்த்தான். ஆனால் அவள் யார் என்று கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. படுக்கையில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டான். அப்போது சீதா தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்:- "சுவாமி பகவானே! இவர் ஒருவேளை இந்தச் சுரத்தில் இறந்து போவதாயிருந்தாலும் ஒரே ஒரு தடவையாவது என்னைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொள்ளட்டும். நான் வந்துவிட்டேன், இவருக்கு சிசுருஷை செய்கிறேன் என்பதை அறிந்து கொள்ளட்டும். கடவுளே! இந்த ஒரு வரமாவது எனக்குத் தரவேண்டும்!" இவ்விதம் மனப்பூர்வமாக மன்றாடிப் பிரார்த்தித்தாள் சீதா. ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்துவிடவில்லை. ராகவனுக்கு நாளுக்கு நாள் உடம்பு குணமாகி வந்தது. நாளுக்கு நாள் அறிவும் தெளிவடைந்து வந்தது. |