![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
நான்காம் பாகம் : பிரளயம் 33. ராகவன் கோபம் ராகவனுக்கு திடீர் என்று கோபம் வந்துவிட்டது. சூரியா தன்னைப் பரிகாசம் செய்கிறானோ என்ற சந்தேகம் அவன் மனதில் உதித்தது. உடனே குதித்து எழுந்து, "அடே! உன்னுடைய அகம்பாவமும் கெட்ட சுபாவமும் இன்னும் மாறவில்லை போலிருக்கிறது. இந்த க்ஷணமே எழுந்து போய்விடு! கெட் அவுட்!" என்று கூவினான். "நீங்கள் இன்னும், 'கெட் அவுட்' சொல்லவில்லையே என்றுதான் காத்திருந்தேன்!" என்று கூறிக் கொண்டே சூரியா எழுந்தான். அதற்குள் ராகவனுடைய கோபம் கொஞ்சம் தணிந்தது. "இல்லை, சூரியா! சற்று உட்காரு! நீ உண்மையாகவே அப்படி எண்ணுகிறாயா? அதாவது நான் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்வது சீதாவுக்கு..." என்று தயங்கினான். சூரியா நின்றுகொண்டே, "அதைப் பற்றி ஏன் தயங்கவேண்டும்? சீதாவின் ஆத்மாவுக்கு அது நிச்சயம் திருப்தி அளிக்கும். அதற்கு ஒரு விசேஷ காரணம்!" என்றான். "அது என்ன அவ்வளவு பொருத்தமான காரணம்?" "சீதாவும் தாரிணியும் சொந்தச் சகோதரிகள் என்பதுதான். அவர்கள் ஒரே தந்தையின் புதல்விகள். ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் வேண்டும்?" "என்ன உளறுகிறாய்! உன்னுடைய மூளை குழம்பி விட்டதா? புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறாயா?" என்றான் ராகவன். "எப்படி வைத்துக் கொண்டாலும் சரிதான்! நான் போய் வருகிறேன்" என்று சூரியா புறப்பட்டான். "இல்லை, சூரியா போகாதே! திடீரென்று ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே? சற்றுமுன் நீ சொன்னது நிசந்தானா? தாரிணியும் சீதாவும் அக்கா தங்கைகளா? யார் சொன்னார்கள்? என்ன அத்தாட்சி?" என்று பரபரப்புடன் ராகவன் கேட்டான். "அவர்களைப் பெற்ற தகப்பனாரே சொன்னார்! அவருடைய வாய்மொழியாகவே தெரிந்து கொண்டேன்!" என்றான் சூரியா. பிறகு, துரைசாமி ஐயரின் இல்வாழ்க்கை ஆரம்பத்தில் நடந்த அதிசய சம்பவங்களைப் பற்றியும் சூரியா விவரமாகக் கூறினான். நம்புவதற்கு அரிய அபூர்வமான சம்பவங்கள்தான். ஆயினும் ராகவனுடைய மனதுக்குள் அவையெல்லாம் உண்மையாகத்தானிருக்கும் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்கெனவே நன்கு விளங்காமல் மர்மத் திரையினால் மறைக்கப்பட்டிருந்த பல சம்பவங்கள் இப்போது பிரகாசமாகத் துலங்கின. "சூரியா! அவர் எங்கே? அந்தப் பிராமணர் துரைசாமி ஐயர் எங்கே? சீதாவின் கலியாணத்துக்குப் பிறகு அவர் ஏன் திடீரென்று மறைந்து போனார்? அவரை எங்கே பார்த்தாய்?" என்று கேட்டான். "ராகவன்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? தெரிந்து கொண்டால் உங்கள் மனம் கஷ்டப்படும்!" "எதற்காக என் மனம் கஷ்டப்படவேண்டும்? நீ பேசுவதெல்லாம் மர்மமாகவே பேசுகிறாயே?" "நீங்கள் வைதிக சிரேஷ்டர், உங்கள் மாமனார் ஒரு மௌல்வி சாகிப் என்று தெரிந்தால் உங்களுக்குக் கஷ்டமாயிராதா? உங்கள் தகப்பனார் பத்மலோசன சாஸ்திரிகளின் இருதயமே நின்றுவிடுமே?" "என் தந்தையை எதற்காக இதில் சம்பந்தப்படுத்துகிறாய்? என் அழகான மாமனார் உனக்கும் தாய் மாமன்தானே? அவர் எதற்காக மௌல்வி சாகிபு ஆகவேண்டும்? ஹிந்து மதத்தைவிட முஸ்லிம் மதம் சீக்கிரத்தில் மோட்சம் அளித்துவிடும் என்கிற நம்பிக்கையினாலா?" "அவ்வளவு தூரம் எனக்கு அவருடைய மதக் கொள்கையைப் பற்றித் தெரியாது. என்னுடைய அபிப்பிராயம், அவர் ஊரை ஏமாற்றுவதற்கே அப்படி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்தார் என்பதுதான். ஆனால் அந்த வேஷம் அவர் எதிர்பாராத முறையில் அவருக்குத் திடீர் என்று மோட்சத்தை அளித்து விட்டது!" ராகவனுடைய இருதயத்தில் இனந்தெரியாத ஏதோ ஒருவித பயம் ஏற்பட்டது. பயங்கரமான பாவம் ஒன்று கரிய முகமூடி போட்டுக்கொண்டு தன் முன்னால் வந்து நிற்பதாகத் தோன்றியது. அந்த முகமூடியைக் கிழித்து அந்த உருவத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. ஆகையால் உடனே அவன் பேச்சை மாற்றிவிட விரும்பினான். "கிரகசாரந்தான்! துரைசாமி ஐயர் மௌல்வி சாகிபு ஆவதாவது? அதைப்பற்றி நினைக்கவே எனக்கு அருவருப்பாயிருக்கிறது வேறு ஏதாவது விஷயமிருந்தால் பேசு!" "வேறு ஒன்றும் இல்லை" என்று கூறிவிட்டுச் சூரியா மறுபடியும் புறப்பட்டான். "ஒருவேளை நீ தப்பித் தவறிச் சீதாவை எங்கேயாவது பார்க்கும்படி நேர்ந்தால்...." "சீதாவின் ஆவியைப் பார்த்தால் என்று சொல்லுங்கள்." "நீ பேசுவதைக் கேட்டால் சீதா இறந்துவிட்டாள் என்று உறுதியாக நம்புகிறாய் போலிருக்கிறது!" "கண்ணால் கண்டதை நம்பாமல் என்ன செய்கிறது?" "என்னத்தை நீ கண்ணால் பார்த்தாய்!" என்று ராகவன் குரல் நடுக்கத்துடன் வினவினான். "நதியின் பிரவாகத்தில் சீதா முழுகுகிறதைக் கண்ணால் பார்த்தேன்" என்றான் சூரியா. "ஐயோ!" என்றான் ராகவன். "அந்தப் படகிலே நானும் இருந்தேன். நாங்கள் மூன்று பேருந்தான் இருந்தோம். கரையிலிருந்து படகைப் பார்த்துச் சுட்டது யார் என்பது பற்றி எனக்குச் சந்தேகம் உதித்திருந்தது; அது உண்மை என்று இன்றைக்குத் தெரிந்தது!" "என்ன சொல்கிறாய், சூரியா? என் மூளை குழம்புகிறது! படகில் நீங்கள் மூன்று பேரும் இருந்தீர்கள் என்றால்? யார் யார் இருந்தீர்கள்?" "நானும் சீதாவும், சீதாவின் தகப்பனாருந்தான் இருந்தோம். பஞ்சாப் நகரத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தோம். சீதாவின் தகப்பனார் என்ன நினைத்தார் என்றால், தம்முடைய மௌல்வி சாகிபு வேஷம் சீதாவுக்கு ஒரு பாதுகாப்பு என்று நினைத்தார். அவர் ஒன்று நினைக்க, அவருடைய மாப்பிள்ளை வேறொன்று நினைத்து விட்டார்!" "ஐயையோ! அப்படியென்றால் அந்த படகில் நான் குறிபார்த்துச் சுட்ட முஸ்லிம்..." "ஆமாம்; உங்களுடைய மாமனாரை நோக்கித்தான் சுட்டீர்கள். குறியும் தப்பவில்லை, ராகவன்! இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தை அறிந்திருப்பவன் நான் ஒருவன்தான்; இப்போது உங்களுக்கும் தெரியும். நான் இதை வேறு யாரிடமும் சொல்லப் போவதில்லை. நீங்களும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்." ராகவன் திடீரென்று குதித்து எழுந்தான். கோபத்தினால் முகத்தில் நரம்புகள் புடைக்க, சூரியாவை நோக்கிக் கைகளை ஆட்டிக்கொண்டு, "அடமடையா! நீயும் ஒரு ஆண்பிள்ளையா? ஒரு பெண் ஆற்றுவெள்ளத்தில் விழுந்து முழுகி இறந்ததை நீ பார்த்துக் கொண்டிருந்தாயா? அவளைக் காப்பாற்ற முயலாமல் பெரிய வீரன், சூரன் தியாகி என்றெல்லாம் உன்னை நீயே புகழ்ந்து கொள்வாயே? மணலைக் கயிறாய்த் திரித்தேன், வானத்தை வில்லாய் வளைத்தேன் என்றெல்லாம் பீற்றிக் கொள்வாயே? வெள்ளத்தில் முழுகிப் போகாமல் ஒரு பெண்ணைக் கரை சேர்க்கக் கையினால் ஆகவில்லையா?" என்று நெருப்பை கக்கினான். சூரியா சாந்தமான குரலில், "ராகவன்! நான் அப்போது சீதாவைக் காப்பாற்றியிருப்பேன்? காப்பாற்றிக் கரை சேர்த்திருக்க முடியும். ஆனால் அவ்விதம் செய்யவில்லை. முழுகிச் சாகட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்! ஏன் தெரியுமா! பிழைத்து வந்தால் உம்மைப்போன்ற அயோக்கிய சிகாமணியோடு அவள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதினால்தான்! முன்னொரு சமயம் நீர் என்னை மாடியிலிருந்து பிடித்துத் தள்ளியபோது பழிக்குபழி வாங்குவதாகச் சபதம் செய்தேன். பழி வாங்கியாகிவிட்டது! போய் வருகிறேன்," என்று சொல்லி விட்டு நடந்தான். ராகவன் திகைத்து உட்கார்ந்துவிட்டான். சூரியாவின் கடைசி வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் கூரிய அம்புகளைப் போலத் தைத்தன. சூரியா கூறிய செய்திகளின் பலா பலன்களைப் பற்றி யோசிக்கும் சக்தியே அவனுக்கு இல்லை. இந்த விஷயம் ஒன்றும் தாரிணிக்குத் தெரியக்கூடாதே என்ற கவலை மட்டும் அவனுடைய மனதில் தோன்றியது. சூரியா வீட்டு வாசலை அடைந்ததும் விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். அவனுடைய நடையின் வேகம் அவனுடைய உள்ளப் பரபரப்புக்கும் அறிகுறியாக இருந்தது. "நான் சொன்னதில் அவ்வளவாகப் பொய் அதிகம் இல்லைதானே? சீதாவின் ஆவியைத்தான் இப்போது நான் பார்க்கப் போகிறேன். சௌந்தரராகவனைப் பொறுத்தவரையில் சீதா இறந்தவள் மாதிரிதானே?" என்று எண்ணமிட்டுக் கொண்டே நடந்தான். |