![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
நான்காம் பாகம் : பிரளயம் 41. சூரியாவின் இதயம் சூரியா அடிக்கடி ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதுண்டு. தன்னுடைய வெளி மனம் என்ன நினைக்கிறது. தன்னுடைய அறிவு என்ன முடிவு சொல்கிறது. தன்னுடைய இதய அந்தரங்கத்தில் எத்தகைய ஆசை குடிகொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்ப்பான். எந்த விஷயத்திலேனும் மனதில் குழப்பமிருந்தால், மனத்திற்கும் அறிவுக்கும் இதயத்துக்கும் வேற்றுமை இருப்பதாகத் தோன்றினால், அந்த விஷயத்தைப் பற்றி தீர்க்கமாகச் சிந்தனை செய்வான். தன்னுடைய உணர்ச்சிகளில் உள்ள குழப்பத்தைப் போக்கித் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டுச் சில சமயம் அவன் 'டைரி' எழுதுவதும் உண்டு. பிப்ரவரி மாதம் 10-ம் தேதியன்று சூரியா தன்னுடைய 'டைரி'யில் பின்வருமாறு எழுதத் தொடங்கினான். இன்று சீதாவின் பத்தாவது நாள் கிரியைகள் முடிவடைந்தன. அவளுடைய கணவன் சௌந்தரராகவன் பக்தி சிரத்தையுடன் வைதிகக் கிரியைகளைச் செய்தான். இத்தனை நாளும் வைதிகத்தில் இல்லாத பற்றுத் திடீரென்று ராகவனுக்கு ஏற்பட்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ராகவனுடைய சிரத்தையைக் காட்டிலும் வேடிக்கை என்னவென்றால், அந்தப் புண்ணியவதி பாமா காட்டிய வைதிக சிரத்தைதான். சீதாவின் சரமக் கிரியைகளையெல்லாம் அவள் தான் நடத்தி வைத்தாள் என்று சொல்ல வேண்டும். ராகவனுக்கு அது விஷயத்தில் கொஞ்சங்கூடக் கஷ்டமோ கவலையோ ஏற்படாமல் பாமா தன்னுடைய வீட்டிலேயே சகலவசதிகளும் செய்து கொடுத்தாள். சீ! இது என்ன வெட்கக்கேடு! இதுவும் ஒரு மானிட ஜன்மமா? பெண்டாட்டியைப் பறிகொடுத்தவன் கொஞ்ச நாளைக்காவது காத்திருக்கக் கூடாதா? அதற்குள்ளே இப்படி நாலு பேர் பார்த்துச் சிரிக்கும்படி நடந்து கொள்ள வேண்டுமா? சீதா! இப்பேர்ப்பட்ட இதயமற்ற கிராதகனிடமிருந்து விடுதலையடைந்து நீ போய்ச் சேர்ந்தாயே? யமன் கருணையில்லாதவன் என்று சொல்லுவது எவ்வளவு அறிவீனம்? உன்னை யமன் கொண்டு போனதைப் போல் கருணையுள்ள செயல் வேறு என்ன இருக்க முடியும்?.... சீதா விஷயத்தில் என்னுடைய கடமையைச் சரிவரச் செய்துவிட்டேனா? என் அத்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேனா? இந்த எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டுதானிருக்கும். வாழ்நாள் உள்ள வரையில் அந்தக் கேள்விகள் மனதில் உதயமாகிக் கொண்டுதானிருக்கும். ஆயினும் என்னாலியன்றவரை என் கடமையைச் செய்துதானிருக்கிறேன். என் உயிரைத் திரணமாக மதித்துச் சீதாவைக் காப்பாற்றியிருக்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம்! சீதாவுக்காக நான் செய்த ஒவ்வொரு உதவியும் அவளுக்கு அபகாரமாகவே முடிந்திருக்கிறது. உண்மையில் அவளுடைய துயர வாழ்க்கைக்குக் காரணமானவன் நானே. அத்திம்பேரின் தந்தியை மட்டும் அன்று நான் மறைத்திரா விட்டால்.... சீதாவின் தகப்பனார், - அத்திம்பேர் துரைசாமி ஐயரின் - வாழ்க்கையும் முடிந்து விட்டது. பரிதாபம்! பரிதாபம்!- சீதா பல தடவை சொன்னாளே? அந்தத் துப்பாக்கியை அவர் தூர எறிந்திருக்கக் கூடாதா? அந்தத் துப்பாக்கியினால் அவருக்கு சாவு என்று ஏற்பட்டிருக்கும்போது எப்படித் தூர எறிந்திருக்க முடியும்! ஒருவிதத்தில் பார்த்தால் அவருக்கு இது நல்ல முடிவுதான்! அவருடைய இரு புதல்விகளில் ஒருத்தி செத்துவிட்டாள். இன்னொரு பெண் சாவைக் காட்டிலும் பயங்கரமான கதியை அடைந்திருக்கிறாள். இத்தகைய கொடூரத்தை எந்தத் தகப்பனார்தான் சகிக்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய தீச்செயல்களே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார். பாவம்! நான் பானிபத் பட்டணத்துக்குப் போவதற்குள்ளே அனாதைப் பிரேத சம்ஸ்காரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். மனிதருக்கு இறந்த பிறகு நல்ல யோகம். காந்தி மகான் காலமான செய்தியைக் கேட்டுத் துக்கம் தாங்க முடியாமல் சுட்டுக்கொண்டு செத்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. இதுவும் ஒரு விதமான யோகந்தானே!..... சீதா இறந்துவிட்டாள்; துரைசாமி ஐயரும் போய்விட்டார் ஆனால் தாரிணி உயிரோடிருக்கிறாள். செத்துப் போனவர்களை மறந்துவிட்டு உயிரோடிருப்பவர்களைப் பற்றி கவனிக்க வேண்டும். தாரிணி விஷயத்தில் நான் என்னுடைய கடமையைச் செய்யத் தயாராயிருக்கிறேனா? என்னுடைய இதயத்தின் உணர்ச்சியும் உள்ளத்தில் ஆசையும் என் அறிவு சொல்லும் முடிவும் ஒன்றாயிருக்கின்றனவா? தாரிணியிடம் இன்றைக்கு நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சத்தியமானவைதானா? என் இதயத்திலிருந்து உண்மையாகச் சொன்னவைதானா? அல்லது வீம்புக்காகவோ ஜம்பத்துக்காகவோ அவசரப்பட்டுச் சொல்லி விட்டேனா? இன்று தான் சொன்ன வார்த்தைகளுக்காகப் பிறகு எக்காலத்திலேனும் வருத்தப்படுவேனா?.... காந்தி மைதானத்தில் பழைய இடத்தில் இன்று மாலை நாங்கள் சந்தித்தோம். எங்கள் வருங்கால வாழ்வைப் பற்றிப் பேசினோம். அந்தச் சம்பாஷணையை ஒருவாறு இங்கே எழுதப் பார்க்கிறேன். எழுதிய பிறகு படித்துப் பார்த்தால் ஒருவேளை என்னுடைய பிசகை நானே தெரிந்து கொள்ள முடியும் அல்லவா? முதலில் கொஞ்ச நேரம் சீதா, துரைசாமி ஐயர் - இவர்களுடைய பரிதாப மரணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி விம்மினாள்! அழுதாள். அவளுடைய கண்ணிலிருந்து கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எழுந்தது. ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை. ஏனெனில் அவள் முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டிருந்தாள். எதற்காக என்றுதான் எனக்குத் தெரியுமே? அன்றைக்கு - சீதாவின் உயிர் பிரிந்த அன்றைக்கு, - ஒரு நிமிஷம் பார்த்தேன். ஐயோ! அதை நினைக்கவே பயங்கரமாயிருக்கிறது. ஆயினும் அதனாலே தாரிணியின் விஷயத்தில் என்னுடைய மனம் சிறிதாவது சலித்ததா? ஒரு நாளும் இல்லை. அவளுடைய முகத்தை விகாரப்படுத்துவனவென்று மற்றவர்கள் நினைக்ககூடிய காரியங்கள் அவளுடைய சௌந்தர்யத்தை அதிகமாக்குகின்றன என்றே நான் எண்ணுகிறேன். சீதா உயிர் விடும் தருவாயில் அவளுடைய கண்களுக்கு அப்படித்தானே தோன்றியது? என்றாலும், தாரிணியின் முகமூடியை நீக்குவதற்கோ கண்களைத் துடைப்பதற்கோ எனக்குத் தைரியம் வரவில்லை. ஒருவாறு விம்மலும் அழுகையும் நின்ற பிறகு 'எத்தனை நேரம் போனதைப் பற்றியே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது? வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமா? என்ன செய்வதாக உத்தேசம்?' என்று நான் கேட்டேன். பேச்சை அப்படித் திருப்பினால் அவளுடைய அழுகை நிற்கும் என்பதற்காகத்தான் அவ்விதம் கேட்டேன். 'எனக்கு ஒரு உத்தேசமும் இல்லை. யோசனை செய்யும் சக்தியும் இல்லை. நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்களுடைய வருங்காலத் திட்டம் என்ன?' என்று தாரிணி கேட்டாள். 'என்னுடைய திட்டத்தை இப்போது எப்படிச் சொல்ல முடியும்? உன்னுடைய உத்தேசம் தெரிந்த பிறகுதான் என்னுடைய திட்டம் தயாராகும்' என்றேன். 'எந்த விஷயத்தில் என்னுடைய உத்தேசம் தெரியவேண்டும்? என் தந்தையைப்போல் உயிரை விட்டுவிட எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை!' என்றாள் தாரிணி. 'உயிரை விடுவதற்குத் தைரியம் வேண்டாம்; உயிரோடிருப்பதற்குத்தான் தைரியம் வேண்டும்' என்று நான் சொன்னேன். 'அந்தத் தைரியம் எனக்கு வேண்டிய அளவு இருக்கிறது. மேலும், வஸந்தி விஷயமான பொறுப்பு ஒன்றும் எனக்கு இருக்கிறதல்லவா?' என்றாள் தாரிணி. 'வஸந்தி விஷயமான பொறுப்பும் இருக்கிறது. சீதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியும் இருக்கிறது. தாரிணி! அந்த வாக்குறுதியின்படி ராகவனைக் கலியாணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்!' என்றேன். தாரிணி சிரித்தாள். அந்த நேரத்தில் அவள் அவ்விதம் சிரித்தது எனக்குப் பிடிக்கவில்லை. 'என்னத்திற்குச் சிரிப்பு' என்று கேட்டேன். 'நான் விரும்பினால் மட்டும் என்ன பிரயோசனம்? அதற்குச் சௌந்தரராகவன் அல்லவா இஷ்டப்பட வேண்டும்' என்றாள். 'இது என்ன பேச்சு? உன்னை விரும்பி மணந்து கொள்ள இஷ்டப்படாத மூடன் இந்த உலகத்தில் யார் இருக்க முடியும்? என்றேன். 'சூரியா! நீங்கள்கூட இப்படிப் பொய் வார்த்தை சொல்லுவது எனக்கு அதிசயமாயிருக்கிறது. இந்த முகமூடியை நீக்கி என் முகத்தின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்த யார்தான் என்னை மணந்து கொள்ளத் துணிவார்கள்?' என்றாள் தாரிணி. 'மன்னிக்க வேண்டும், தாரிணி! ராகவனுடைய சுபாவம் தெரிந்தும் நான் அவ்விதம் எதிர்பார்த்தது பிசகுதான்!' என்றேன். 'அவரை மட்டும் சொல்வானேன்! இந்த உலகத்தில் பிறந்த எந்தப் புருஷனும் இப்படிப்பட்ட கோர முகம் உடையவளைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டான்' என்றாள். 'அப்படிச் சொல்ல வேண்டாம், சௌந்தரராகவனோடு எல்லோரையும் சேர்த்துவிட வேண்டாம். ராகவனுக்கு முகத்தின் அழகு ஒன்றுதான் தெரியும்; அகத்தின் அழகைப்பற்றி அவன் அறிய மாட்டான். உண்மைக் காதல் என்பது இன்னதென்று அவனுக்குத் தெரியவே தெரியாது. ஆக்ரா கோட்டையில் அக்பர் சக்கரவர்த்தியின் அரண்மனையில் முதன் முதலில் பார்த்ததிலிருந்து நான் உன்னைக் காதலித்து வருகிறேன். உன் முகத்தை நான் காதலிக்கவில்லை; உன்னைக் காதலிக்கிறேன்!' என்று ஆவேசமாகப் பேசினேன். தாரிணி சற்று மௌனமாயிருந்தாள். பிறகு, 'சூரியா! உங்களுடைய காதலைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம் இல்லை. ஆனால் காதல் வேறு; கலியாணம் வேறு. கலியாணம் என்றால் புருஷன் மனைவியின் கரம் பிடிக்க வேண்டும் அல்லவா? பிடிப்பதற்கு கை இல்லாவிட்டால்.....?' என்றாள். நான் குறுக்கிட்டு, 'ராகவனுக்கு அது ஒரு தடையாயிருக்கலாம். கை கோத்துக் கொண்டு 'பார்ட்டி' களுக்குப் போக முடியாததை எண்ணி அவன் கலியாணம் வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் என் விஷயத்தில் அது ஒரு தடையாகாது. கரம் பிடிப்பதுதான் கலியாணம் என்று நான் கருதவில்லை, மனம் பிடிப்பதுதான் கலியாணம். நம் இருவருடைய மனமும் ஒத்திருப்பதுபோல் வேறு எந்தத் தம்பதிகளின் மனமும் ஒத்திருக்கப் போவதில்லை. வேறு என்ன தடை? நீ முடிவு சொல்ல வேண்டியதுதான்; உடனே கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட்டு விடலாம்!' என்றேன். உணர்ச்சி மிகுதியினால் தொண்டை அடைக்க, ஆனந்த மிகுதியினால் நாத் தழுதழுக்க, தாரிணி, 'சூரியா! உங்களைப் போன்ற உத்தமர் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கும் இந்த உலகத்தில் உயிரோடிருக்கலாம் என்ற ஆசை உண்டாகிறது. உங்களுடைய உயர்ந்த நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். ஆயினும் யோசனை செய்வதற்கு எனக்குச் சில நாள் அவகாசம் கொடுங்கள்!' என்று சொன்னாள். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் இன்னொரு தடவை படித்துப் பார்த்தேன். தாரிணியிடம் நான் கூறிய வார்த்தையெல்லாம் உண்மைதானா என்று சிந்தித்தேன். என் இதயத்தின் ஆழத்தை எட்டிச் சோதனை செய்து பார்த்தேன். சந்தேகமே இல்லை. தாரிணியிடம் நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான். அவளிடம் நான் கொண்ட காதலுக்கு ஆதி அந்தமில்லை; அழிவில்லை; முடிவில்லை. அது உடம்பைப் பற்றிய காதல் அல்ல? முகத்தையோ நிறத்தையோ பற்றிய காதல் அல்ல; மனதுக்கு மனம் கொள்ளும் காதல் அல்ல, இரண்டு ஆத்மாக்கள் இதயாகாசத்தில் ஒன்று சேரும்போது ஏற்படும் புனிதமான தெய்வீகக் காதல். எங்களுடைய காதலுக்கு ஒப்புமில்லை; உவமையும் கிடையாது. சீதாவின் பேரிலும் முதல் தடவை அவளை நான் பார்த்த நாளிலிருந்து எனக்குப் பாசம் ஏற்பட்டது உண்மைதான். அதற்கும் இதற்கும் எவ்வளவோ வித்தியாசம். சீதாவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்தேன். ஆனால் என் இதயத்தை அவளுக்குக் கொடுக்கத் தயாராயில்லை. சௌந்தரராகவனிடம் வந்த கோபத்தினால் சில சமயம் சீதாவின் விடுதலைக்கு நான் விசித்திரமான சாதனங்களை எண்ணியதுண்டு. 'விவாகப் பிரிவினை செய்வித்துச் சீதாவை நான் கலியாணம் செய்து கொண்டால் என்ன?' என்று அசட்டு எண்ணம்கூட ஒரு தடவை உண்டாயிற்று. அதை மனம் விட்டு அத்திம்பேரிடங்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன். ஆனால் என் மனதில் ஒரு லவலேசமும் சீதா விஷயத்தில் களங்கம் ஏற்பட்டதில்லை. இது சௌந்தரராகவனுக்கும் நன்றாய்த் தெரியும். ஆகையினால்தான் அவனுக்குச் சீதாவும் நானும் நெருங்கிப் பழகுவதில் கோபம் உண்டாவதேயில்லை. தாரிணிக்கும் எனக்கும் சிநேகம் என்பது பற்றித்தான் அவன் குரோதம் கொண்டான். அந்தக் கோபத்தினால் என்னைக் கொன்றுவிடவும், போலீஸாரிடம் என்னைப் பிடித்துக் கொடுத்து விடவும், ராகவன் யத்தனித்தான். அவனுக்கு இப்போது படுதோல்வி தெய்வாதீனமாக நேர்ந்துவிட்டது. உடலழகு ஒன்றையே கருதும் அந்தச் சுயநலம் பிடித்த தூர்த்தன், இனி என்னுடன் போட்டியிட முடியாது. அவனுடைய காதல் எல்லாம் வெறும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவன் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். அந்தப் பாமாவையே அவன் கட்டிக்கொண்டு அழட்டும்! தாரிணி இனிமேல் என்னுடையவள்; எனக்கே அவள் முழுதும் உரியவள். என்னிடமிருந்து இனி யாரும் அவளை அபகரிக்க முடியாது. இதை நினைத்தால் எனக்குக் குதூகலமாய்த்தானிருக்கிறது. சீதா இறந்துவிட்டதையும் அவள் தகப்பனார் சுட்டுக் கொண்டு செத்ததையும் நினைக்கும்போது கஷ்டமாயிருந்தாலும், இனித் தாரிணி எனக்கே உரியவள் என்பதை நினைத்தால் உற்சாகமாயிருக்கிறது. கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட வேண்டும்; காஷ்மீருக்குப் போக ஏற்பாடு செய்ய வேண்டும். |