அத்தியாயம் 13 - பயம் அறியாப் பேதை

     முத்தையனைப் போலீஸ் சேவகர்கள் வீதியில் சந்தித்து அழைத்துக் கொண்டு போனதை அச்சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் போக நேர்ந்த செங்கமலத்தாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

     இந்தச் செங்கமலத்தாச்சி, முத்தையன் குடியிருந்த அதே வீதியில், அவனுடைய வீட்டுக்கு ஐந்தாறு வீட்டுக்கு அப்பால் வசித்தவள். அவள் ஒரு ஏழை ஸ்தீரீ. காலை வேளையில் இட்டிலி சுட்டு விற்று ஜீவனோபாயம் நடத்திவந்தாள். அவளுக்குப் பதின்மூன்று, பதினாலு வயதான ஒரு மகன் மட்டும் உண்டு.

     சில சமயம் அவள் அபிராமி வீட்டுக்குப் போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பாள். அபிராமியின் இனிய சுபாவமும், சமர்த்தும் அவளுடைய மனத்தைக் கவர்ந்திருந்தன. அபிராமி போன்ற ஒரு பெண் தனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவள் ஒவ்வொரு சமயம் எண்ணுவதுண்டு.

     அபிராமி அந்த மாதிரித் தனி வீட்டில் இருப்பதைப் பற்றிக்கூடச் செங்கமலத்தாச்சி சில தடவை பிரஸ்தாபித்திருக்கிறாள். அந்தத் தெருவிலே ஒரு வரிசைதான் வீடுகள். அநேகமாக எல்லாம் மடத்தைச் சேர்ந்தவையே. முத்தையன் குடியிருந்த வீட்டுக்கு ஒரு புறத்தில் தோட்டம். இன்னொரு புறத்தில் பாழாகி விழுந்து கிடந்த ஒரு வீடு. அதற்கப்புறம் அந்த வீதியில் வீடே கிடையாது.

     "இம்மாதிரி கோடி வீட்டில் போய்க் குடியிருக்கிறாயே அம்மா! நீயோ பச்சைக் குழந்தை. அண்ணன் எங்கேயாவது ஊருக்குக் கீருக்குப் போக வேண்டியிருந்தால் என்ன பண்ணுவாய்? பேசாமல் என் வீட்டுக்கு வந்து என்னோடேயே இருந்து விடுங்களேன்!" என்று பல தடவை சொல்லியிருக்கிறாள் செங்கமலத்தாச்சி.

     ஆனால், அபிராமி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. பயம் என்றால் இன்னதென்று அவளுக்குத் தெரியாது. மேலும், அண்ணன் முத்தையன் இருக்கும் போது அவளுக்கு என்ன பயம்? யாரால் என்ன செய்ய முடியும் அவளை?

*****

     முத்தையனுக்கு இரண்டு பக்கமும் இரண்டு போலீஸ்காரர்கள் நின்று அவனை, அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்ததும் செங்கமலத்தாச்சிக்குச் சொரேல் என்றது. அவள் விரைந்து நடந்து நேரே அபிராமியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தாழ்ப்பாள் போட்டிருந்த கதவை இடித்தாள். அபிராமி, அண்ணன் தான் வந்து விட்டான் என்று எண்ணிக்கொண்டு, சட்டென்று கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்தாள். ஆனால் அண்ணன் குரல் கேட்காமலிருக்கவே, கொஞ்சம் சந்தேகம் தோன்றி, "யார் அது?" என்று கேட்டாள்.

     "நான் தான், அபிராமி! கதவைத் திற!" என்று செங்கமலத்தாச்சியின் குரல் கேட்கவும், ஜன்னலில் எட்டிப் பார்த்து, வேறு யாரும் இல்லையென்று தெரிந்து கொண்டு, கதவைத் திறந்தாள். அபிராமியின் கண்கள் அழுது அழுது சிவந்திருப்பதையும், கன்னமெல்லாம் கண்ணீர் வழிந்த அடையாளங்கள் இருப்பதையும் கண்ட செங்கமலத்தாச்சிக்குப் பரபரப்பு அதிகமாயிற்று.

     "அடி பெண்ணே! என்ன விபரீதம் நடந்துவிட்டதடி? அங்கேயோ உன் அண்ணனைப் போலீஸ்காரர்கள் அழைத்துப் போகிறார்கள்! இங்கேயோ நீ அழுது அழுது கண் கோவைப் பழமாய் ஆகியிருக்கிறது! முத்தையன் என்னடி பண்ணிவிட்டான்? நல்ல பிள்ளையாச்சே!" என்றாள்.

     அபிராமிக்குத் திக்குத்திசை புரியவில்லை. போலீஸ்காரர்களா? அண்ணனையா அழைத்துப் போகிறார்கள்? ஏன்? எதற்காக?

*****

     செங்கமலத்தாச்சி மெள்ள மெள்ள விசாரித்து அன்று நடந்ததையெல்லாம் தெரிந்து கொண்டாள். கடைசியில் "ஐயோ! அந்தப் படுபாவி சங்குப் பிள்ளையின் கண் உன் மேலும் விழுந்துவிட்டதா? அவன் பொல்லாத ராக்ஷசனாச்சே! அவனுடைய சூழ்ச்சிதான் எல்லாம்! என்னமோ பொய்க் கேசு எழுதி வைச்சு முத்தையனைப் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறான். ஐயோ, பெண்ணே! உனக்கு இப்படி எல்லாமா வரவேணும்?" என்று அவள் புலம்பிக்கொண்டிருக்கும்போதே, வாசலில் "எங்க அம்மா இங்கே இருக்காளா?" என்று ஒரு சிறு பையனுடைய குரல் கேட்டது. "வாடா தம்பி!" என்றாள் செங்கமலத்தாச்சி.

     உள்ளே வந்தவன் அவளுடைய மகன். அவன் வரும் போதே, "அம்மா! அம்மா! நம்ம முத்தைய அண்ணனைப் போலீஸ்காரங்க பிடிச்சுண்டு போய்விட்டார்களாம். மடத்துப் பணத்தை அண்ணன் திருடிட்டான் என்று கேஸாம். போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வைச்சு, அடி, அடி என்று அடிக்கிறாங்களாம், அம்மா!..." என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

     இதைக் கேட்டதும், அபிராமி 'ஹோ' என்று அலறி தரையிலே தலையை முட்டிக் கொள்ளத் தொடங்கினாள். செங்கமலத்தாச்சி சட்டென்று அவள் தலையைப்பிடித்துத் தன் மடியின் மேல் வைத்துக் கொண்டு, "அசட்டுப் பெண்ணே! இந்த முட்டாப் பயல் ஏதோ உளறினால் அதைக் கேட்டுக் கொண்டு இப்படிச் செய்யலாமா? இவனுக்கு என்ன தெரியும்? போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கிறதெல்லாம் அந்தக் காலம். இப்போ, கவர்னராயிருந்தால் கூட ஒருத்தன் மேலேயும் கை வைக்கக்கூடாது. கை வைச்சால் கண்ணைப் பிடுங்கி விடுவார்கள். இதோ பார்! நீ கவலைப்படாதே. நான் வழி சொல்கிறேன். இந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டு அம்மாளை எனக்குத் தெரியும். உன்னை நான் அவளிடம் அழைத்துக் கொண்டு போகிறேன். அவளிடம் ஒன்று விடாமல் நடந்தது நடந்தபடி எல்லாம் சொல்லு. அந்த அம்மாள் ரொம்ப நல்லவள். வீட்டுக்காரரிடம் சொல்லி முத்தையனை விடுதலை செய்யப் பண்ணுவாள். கிளம்பு, போகலாம், இனிமேல் இந்த வீட்டிலே நீ இருக்கிறது கூட அபாயம்!" என்றான்.