உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 19 - கச்சேரியில் கள்வன் 'மகா-௱-௱-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது. கொஞ்சமாவது அலட்சியமாய் இருப்பதாய்த் தெரிந்தால், கடுமையான சிட்சை அனுபவிக்க நேரிடும்.' இம்மாதிரிக் கடிதங்கள் அந்தத் தாலுக்காவிலுள்ள ஐம்பது அறுபது பெரிய மனிதர்களுக்கு ஒரே நாளில் கிடைத்தன. கடிதம் பெற்றவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்தச் செய்தி வாய்மொழியாகத் தாலுகா முழுவதும் பரவிற்று. ஜனங்கள் அடைந்திருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது. குடித்தனக்காரர்கள் வீட்டுக் கதவுகளுக்கு இரட்டைத் தாள்ப்பாள் போட ஆரம்பித்தார்கள். இரும்புப்பெட்டிகளை இழுத்து இழுத்துப் பார்த்துப் பூட்டினார்கள். அநேகம் பேர் தலைமாட்டில் பெரிய தடியை வைத்துக் கொண்டு தூக்கினார்கள். ரொம்பப் பெரிய மனுஷர்கள் சிலர் துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பம் போட்டார்கள். வேறு சிலர் வஸ்தாதுகளுக்குச் சம்பளம் கொடுத்து வீட்டில் வைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களே சிலம்பம் பழகத் தொடங்கினார்கள். இராத்திரியில் வீதியில் நாய் குரைத்தால் தீர்ந்தது; அன்றிரவு ஊரில் யாருக்கும் தூக்கம் கிடையாது. சாலைகளில் அஸ்தமித்த பிறகு பிரயாணம் செய்வது அநேகமாக நின்று போயிற்று. அப்படிப் பிரயாணம் செய்தாலும், கையில் தடிகளுடன் தீவட்டி கொளுத்திக் கொண்டுதான் கிளம்பினார்கள். ஒரு தடவை, இப்படி எதிரும் புதிருமாய் வந்த இரண்டு கோஷ்டியினர், ஒருவரையொருவர் திருடர் கூட்டம் என்று நினைத்துக் கொண்டு அடித்துக் கொண்டார்கள்! *****
திருடன் முத்தையனும் மேலும் மேலும் துணிகரமான செயல்களைச் செய்துகொண்டு வந்தான். சில சமயம், கடிதம் அனுப்பிய பெரிய மனிதர்களின் வீட்டுக்குக் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலேயே அவன் தைரியமாகப் போவான். வேறு சில சமயம் முன் பின்னாகப் போய் அவர்களைத் திடுக்கிடச் செய்வான். அவன் போகுமிடங்களுக்கெல்லாம் தன்னந்தனியாகவோ, இரண்டொருவரை மட்டும் அழைத்துக் கொண்டோ தான் போவான். ஆனால், அவனுடைய ஆட்கள் கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருப்பதாய் எண்ணிக்கொண்டு, குடித்தனக்காரர்கள் அவன் கேட்டபடி நகை நாணயங்களைக் கொடுத்து விடுவார்கள்! புருஷர்கள் ஒரு வேளை மார் தட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினாலும், ஸ்திரீகள் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சி, கொள்ளைக்காரன் கேட்டதைக் கொடுத்து அனுப்பிவிடச் சொல்வார்கள். "அங்கே அப்படிச் செய்தான்", "இங்கே இப்படிச் செய்தான்" என்ற கதைகள் பரவப் பரவ, ஜனங்களின் பீதி வளர்ந்தது. அவ்வளவுக்கு முத்தையனுடைய துணிச்சலும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஆனால் கோவிந்த நல்லூரில் அவன் செய்த காரியந்தான் அவனுடைய துணிச்சலான காரியங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போலிருந்தது. கோவிந்தநல்லூரில் ஒரு பெரிய வீட்டில் கல்யாணம். வீதியை அடைத்துப் போட்டிருந்த கொட்டாரப் பந்தலில் சங்கீதக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் எட்டு மணியிருக்கும். காஸ் லைட்டுகள் கண்ணைப் பறிக்கும்படியான பிரகாசம் அளித்தன. புருஷர்களின் கை விரல் மோதிரங்களும் ஸ்திரீகளின் காதுக் கம்மல்களும் காந்த விளக்கின் வெளிச்சத்தில் டால் வீசின. சந்தனம், பன்னீர், ஊதுவத்திகளின் வாசனை கமகமவென்று இருந்தது. ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸோபாவில் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருந்தார்கள். அந்தச் சபையில் வாயசைக்காமல் உட்கார்ந்திருந்தவர்கள் இவர்கள் தான். மற்றபடி பந்தலில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒன்று வெற்றிலை புகையிலையாவது மென்று கொண்டிருந்தார்கள்; அல்லது பேசிக்கொண்டாவது இருந்தார்கள். பாடகர் வெகு நன்றாய்ப் பாடிக்கொண்டு வந்தார். தியாகராஜ கீர்த்தனம் ஒன்றை, அக்கு வேறு ஆணி வேறாய்ப் பிய்த்தெறிந்துவிட்டு, "முத்துக் குமரய்யனே!" என்ற பழந்தமிழ்க் கீர்த்தனத்தை எடுத்தார். உடனே, சபையில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் பாடகரை நோக்கினார்கள். ஒரு நிமிஷ நேரம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. ஆனால் அடுத்த நிமிஷத்தில், அப்படி மௌனமாயிருந்ததில் வெட்கமடைந்தவர்கள் போல் அவ்வளவு பேரும் சேர்ந்தாற்போல் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஒவ்வொருவரும் மெதுவாய்த்தான் பேசினார்களென்றாலும், அத்தனை பேரும் மெதுவாய்ப் பேசின சப்தம் சேர்ந்து, ஒரு பெரிய பேரிரைச்சலாகி, பாடகரின் பாட்டை மூழ்க அடித்து விட்டது. அவர்கள் அவ்வளவு பேரும் பேசின விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது, முத்தையனின் விஷயந்தான். இப்படி எல்லாரும் முத்தையனைப் பற்றியே பேசினார்கள் என்றாலும் அவர்களின் இரண்டு பேருடைய பேச்சை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். ஒருவர் பூங்குளம் தர்மகர்த்தாப் பிள்ளை; இன்னொருவர் சாக்ஷாத் திருப்பரங்கோயில் மடத்துக் கார்வார் சங்குப் பிள்ளை. "அந்தப் பயலுக்கு நம் ஊர்தான்னா! பாலியத்திலிருந்தே ரொம்ப துஷ்டன். நான் அப்போதே சொல்லியிருக்கேன்! இந்தப் பயல் பெரியவனாய் போனால் தீவட்டிக் கொள்ளை அடிப்பான் என்று!" என்பதாகத் தர்மகர்த்தாப் பிள்ளை கூறினார். "நான் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாம் இந்தப் போலீஸ்காரர்களின் கையாலாகாத்தனந்தான். இவனை நான் நன்னா உதைச்சு, போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு விட்டேன். போலீஸ்காரர்கள் கையாலாகாமல் அவனைத் தப்பிச்சுக்க விட்டுவிட்டார்கள்..." என்று கார்வார் பிள்ளை சரடு விட்டார். "ஆமாம்; போலீஸிலே கூட அவனுக்கு யாரோ உடந்தை. அதனால்தான் அவனை இதுவரையிலும் பிடிக்கவில்லை என்கிறார்களே!" என்றார் தர்மகர்த்தா. "இருந்தாலும் இருக்கும், இந்தக் காலத்திலேதான் யோக்யனுக்குக் காலமில்லையே! திருட்டுப் பயல்களுக்குத் தானே காலமாயிருக்கு! திருப்பரங்கோவில் சப் - இன்ஸ்பெக்டர் மட்டும் மாற்றலாகாமற் போனால், இவனைப் பிடிக்க முடியவே போறதில்லை. இப்போ எங்கிட்ட மட்டும் போலீஸ் அதிகாரத்தைக் கொடுக்கட்டும்! ஒரு நொடியில் பிடிச்சுத் தரேன். இந்த நிமிஷம் அவன் எங்கேயிருக்கான்னு எனக்குத் தெரியும்..." இப்படிக் கார்வார் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கும்போது, சபையில் சட்டென்று மறுபடியும் நிசப்தம் குடி கொண்டது. பாடகர் பாட்டை நிறுத்தி விட்டார். பக்க வாத்தியங்களும் நின்றன. சபையோர் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் ஒரே போக்காக, கார்வார் பிள்ளை இருந்த திக்கையே நோக்கினார்கள். அவர்களுடைய கண்கள் மிரண்டு விழித்தன. அவர்களுடைய முகத்திலே பயங்கரம் குடிகொண்டிருந்தது. இதைப் பார்த்த கார்வார் பிள்ளையும் கலவரமடைந்தார். எல்லோரும் தம் தலைக்குமேல் நோக்குவதைப் பார்த்து அவரும் தலை நிமிர்ந்து பார்த்தார். அந்த க்ஷணத்தில் அவருடைய உடம்பு சொட்ட வியர்த்து விட்டது. ஏனெனில் அவருக்குப் பின்னால், கண் மூடி அணிந்த ஓர் உருவம், கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தது. "ஐயோ!" என்று ஒரு கூச்சல் போட்டார் சங்குப் பிள்ளை. எழுந்து ஓட ஆரம்பித்தார். அடுத்த கணத்தில் பந்தலிலிருந்த அவ்வளவு பேரும் எழுந்தார்கள்; நாலா புறமும் சிதறி ஓடினார்கள். விளக்குகள் விழுந்து உடைந்தன. குழந்தைகள் அழுதன. ஸ்திரீகள் கூச்சலிட்டார்கள். அல்லோல கல்லோலமாய் போய் விட்டது. |