உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் 24 - கைம்பெண் கல்யாணி கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளே, பஞ்சநதம் பிள்ளை தாம் செய்து விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தெரிந்து கொண்டார். கல்யாணத்தன்று, கல்யாணி மூர்ச்சையாகி விழுந்த போது, அவருக்குக் கொஞ்சம் நெஞ்சு திடுக்கிடத்தான் செய்தது. ஆனால் அவள் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும் அவருக்குப் பழையபடி உற்சாகம் ஏற்பட்டது. சௌந்தரிய தேவதையாய், இன்ப விளக்காய், நிலவு வீசும் முகத்தில் நீலக் கருவிழிகள் ஊசலாட நின்ற கல்யாணி இனிமேல் தமக்கே முழுமையும் உரியவள் என்பதை எண்ணிய போது, அவருக்குச் சொல்ல முடியாத பெருமை உண்டாயிற்று. அந்தச் செய்தியை கூரை மீது நின்று கூறி, சகலரும் அறியச் செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆசையாயிருந்தது. கல்யாணத்தை யொட்டி அந்த ஜில்லாவிலுள்ள பெரிய உத்தியோகஸ்தர்களுக்கும், பெரிய மனுஷர்களுக்கும் பிரபலமான விருந்து நடத்தினார். அந்த விருந்துக்கு வந்திருந்த பெரிய மனிதர்களை உட்கார வைத்து நடுவில் மாப்பிள்ளையுடன் ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அந்தச் சமயம் யாரோ சொன்னார்கள், மணமகனும் மணமகளும் சேர்ந்து உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென்று. பஞ்சநதம் பிள்ளைக்கும் இது விருப்பமாகவேயிருந்தது. அப்படியே, அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க கல்யாணி பக்கத்தில் நிற்க, ஒரு போட்டோ எடுக்கப்பட்டது. கல்யாணம் நடந்த ஒரு வாரத்திற்கெல்லாம் அந்த போட்டோ தபாலில் வந்தது. அதைப் பஞ்சநதம் பிள்ளை ஆவலுடன் எடுத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் ஒரு பெரிய மாறுதல் உண்டாயிற்று; எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோ மென்பதை அந்தக் கணமே அவர் உணர்ந்தார். இதற்கு முன்னால் அவர் தம்மைத் தனியாகக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். கல்யாணியை எதிரே வைத்துப் பார்த்திருக்கிறார். ஆனால் தம்மையும் அவளையும் சேர்த்துப் பார்த்தது கிடையாது. இப்போது படத்தில் சேர்த்துப் பார்த்தவுடன் அவருக்குப் பகீர் என்றது! 'வயதிலும், தோற்றத்திலும் எவ்வளவு வித்தியாசம்! ஐயோ! ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாய்ப் பாழாக்கி விட்டோ மே?' இம்மாதிரி அவருக்கு ஏற்பட்ட கவலையை ஊர்ஜிதப் படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டது. கல்யாணி தம்முடைய வீட்டுக்கு வந்ததிலிருந்து சிரிப்பதில்லை யென்பதை அவர் கண்டார். எந்தக் குறுநகையைக் கண்டும், குதூகலமான சிரிப்பைக் கேட்டும் அவர் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தாரோ, அதெல்லாம் இப்போது எங்கே? யார் கொண்டு போனார்கள்? அந்த அழகான மிருதுவான கன்னங்களில் இப்போது குழி விழுவதே இல்லையே அது ஏன்? சிரிப்பது தான் இல்லை; அழவாவது செய்கிறாளா? அதுவும் கிடையாது. சிரிக்காவிட்டாலும் அழுதாலாவது தேவலையென்றுதான் பஞ்சநதம் பிள்ளை எண்ணினார். அழுதால் அருகில் சென்று சமாதானம் செய்யலாம்; கண்ணீர் பெருக்கினால் கண்களைத் துடைக்கலாம்; விசித்தாலும் விம்மினாலும் மடியில் எடுத்துப் போட்டுக் கொண்டு ஆறுதல் சொல்லலாம். அப்படி எல்லாம் தமது எல்லையில்லாத அன்பையும் ஆசையையும் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பமாவது கிடைக்கும். ஆனால் கல்யாணியோ சிரிப்பதுமில்லை; அழுவதுமில்லை. பஞ்சநதம் பிள்ளையிடம் மிக பயபக்தியுடன் அவள் நடந்து கொண்டாள். தன்னுடைய நடத்தையில் எவ்விதக் குறையும் சொல்வதற்கு அவள் இடம் வைக்கவில்லை. அந்த வீட்டின் எஜமானியாய், அந்தக் குடும்பத்தின் தலைவியாய் அந்த வயோதிகரின் மனைவியாய் வாழ்வது தனக்குரிய கடமை என்று உணர்ந்தவளைப் போல் அவள் நடந்து வந்தாள். ஆனால் அவளுடைய குதூகலத்தையும் இருதயத்தையும் ஏன், ஜீவனைக்கூட, பூங்குளத்திலேயே விட்டுவிட்டு இங்கே வெறும் உடம்புடன் மட்டும் வந்து நடமாடிக் கொண்டிருப்பது போலப் பஞ்சநதம் பிள்ளைக்குத் தோன்றியது. கல்யாணியின் முகத்தில் மறுபடியும் சிரிப்பை வரவழைக்க வேணுமென்று பஞ்சநதம் பிள்ளை எவ்வளவோ முயற்சி செய்தார். எள் என்று சொல்லுமுன் எண்ணெயாக நின்றார். நகைகளும் புடவைகளும் கணக்கில்லாமல் கொண்டு வந்து குவித்தார். ஆயினும் கல்யாணி சிரிக்கவில்லை. அவள் எப்பொழுதும் போலவேயிருந்து வந்தாள். நாளாக ஆக, பஞ்சநதம் பிள்ளையின் மனசு உடைய ஆரம்பித்தது. அதன் பலனாய் அவர் படுத்த படுக்கையானார். கல்யாணி இரவு பகல் பாராமல் அவருக்குச் சிசுருஷை செய்தாள். பிள்ளைக்கு நோய் முற்றிக் கொண்டு வந்தது. கடைசியாக ஒரு நாள் பஞ்சநதம் பிள்ளை படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். கல்யாணியின் கையை எடுத்துத் தம்முடைய கையில் வைத்துக் கொண்டார். "கல்யாணி! முக்கியமான விஷயத்தை இப்பொது சொல்கிறேன், கேள். நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்; இந்தக் கல்யாண பந்தத்திலிருந்து, கடவுள் சாட்சியாக உன்னை விடுதலை செய்கிறேன். வருங்காலத்தில் உன் மனதுக்குப் பிடித்த வாலிபன் யாரையேனும் நீ கல்யாணம் செய்து கொண்டால், என்னுடைய ஆத்மாவுக்கு அதனால் அதிருப்தி ஏற்படாது; திருப்தி தான் உண்டாகும்" என்றார். இத்தனை நாளைக்குப் பிறகு இப்போது தான் கல்யாணியின் கண்களில் ஜலம் வந்தது. அவளுடைய உள்ளத்தில் அப்போது ஒரு ஆசை, ஒரு வேகம் உண்டாயிற்று. எழுந்திருந்து பஞ்சநதம் பிள்ளையைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். கட்டிக் கொண்டு அவரை "மாமா!" வென்று கூப்பிட்டு, தன்னுடைய இருதயத்தின் கதவைத் திறந்து, அதிலுள்ள இரகசியத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று எண்ணினாள். ஆனால் அத்தகைய எண்ணத்துடனே எழுந்து நின்றதும், அவளுடைய இருதயம் மறுபடி வைரமாகி விட்டது. அந்த இரகசியம் தனக்கு மட்டும் உரியதல்லவென்றும் முத்தையனுக்கும் அதில் உரிமை உண்டென்றும், தங்கள் இருவரையும் பகவானையும் தவிர வேறு யாருக்கும் அது தெரியக்கூடாது என்றும் ஒரு கணத்தில் அவள் உறுதி கொண்டாள். ஆகவே, எழுந்து நின்றவள், கை கூப்பியவண்ணம் அவரைச் சுற்றி வந்து, தன்னுடைய தலை அவருடைய பாதங்களில் படும்படியாக வணங்கி நமஸ்கரித்தாள். அவருடைய பாதங்கள் அவளுடைய கண்ணீரினால் நனைந்தன. இது நடந்து ஐந்தாறு தினங்களுக்கெல்லாம் பஞ்சநதம் பிள்ளை காலமானார். கல்யாணி உலகத்தாரின் முன்னிலையில் கைம்பெண் ஆனாள்! |