உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 25 - புலிப்பட்டி பிள்ளைவாள் கதைகளிலும் இதிகாசங்களிலும் கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு விரோதிகள் சிலர் தோன்றுவார்கள். கதை முடியும் வரையில் அவர்கள் கதாநாயகர்களுக்கு இன்னல் விளைவிக்க முயன்று கொண்டேயிருப்பார்கள். கடைசியில், கதை முடியும் சமயத்தில், தங்களுடைய தீச்செயல்களுக்கு அவர்கள் தண்டனையடைவார்கள். ஆனால், வாழ்க்கையில் சாதாரணமாய் இவ்வாறு நடப்பதில்லை. அவ்வப்போது நமக்குச் சில சிநேகிதர்களோ, விரோதிகளோ ஏற்படுகிறார்கள்; அவர்களால் சில நன்மைகளும், தீமைகளும் விளைகின்றன. அத்துடன் அவர்களுடைய சிநேகமோ, விரோதமோ தீர்ந்து போகிறது. நமது வாழ்க்கையில் இன்னல் விளைவிப்பவரும் உதவி புரிகிறவரும் எப்போதும் ஒருவராகவே இருப்பதில்லை. *****
முத்தையன் - கல்யாணியின் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருந்தது. முத்தையனுடைய வாழ்க்கையில் கார்வார்பிள்ளை பிரவேசித்ததையும் அதனால் விளைந்த பலனையும் பார்த்தோம். முத்தையனுடைய வாழ்க்கையைப் பொறுத்த வரையில், அபிராமி சென்னைக்குச் சென்ற செய்தியை அவனுக்கு அறிவித்ததுடன் சங்குப் பிள்ளையின் லீலை முற்று பெற்றது. பிறகு, அந்தப் புண்ணிய புருஷர் வேறு எந்த இளம் பெண் அநாதையாகவோ நிராதரவாகவோ இருக்கிறாள்; எந்த ஏழையின் குடியைக் கெடுக்கலாம், எந்தக் குடிசையில் தீயை வைக்கலாம் என்று பார்த்துக் கொண்டு போய் விட்டார். அவருடைய பாபகிருத்தியங்களுக்குத் தக்க தண்டனையளிக்கும் பொறுப்பை நாமும் பகவானுக்கே விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. முத்தையனுடைய வாழ்க்கையில் அந்த ஆட்டுத்தோல் போர்த்த காட்டுப் பூனை பிரவேசித்தது போலவே, கல்யாணியின் வாழ்க்கையில் பிரவேசித்த ஒரு மகா பாவியைப் பற்றி நாம் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. அவனுக்குப் புலிப்பட்டி ரத்தினம் பிள்ளை என்று பெயர். தாமரை ஓடைப் பண்ணையாருக்கு நெருங்கிய தாயாதி உறவு பூண்டவன் அவன். அவனுடைய தகப்பனார் காலத்தில் தாமரை ஓடைப்பண்ணைக்குச் சமமான சொத்து இந்தக் குடும்பத்துக்கும் இருந்தது. ஆனால் பிள்ளையாண்டான் தலையெடுத்ததும், அந்த நிலைமை மாறிற்று. பையன் சென்னைப் பட்டணத்தில், காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோதே டம்பாச்சாரித்தனம் எல்லாம் கற்றுக் கொண்டான். பிறகு சீமைக்குப் போய் விட்டு வந்தான். சென்னையிலும், சீமையிலும், தான் கற்றுக் கொண்டு வந்த நாகரிகத் தோரணையுடனே புலிப்பட்டியில் அவன் வாழ்க்கை நடத்தத் தொடங்கினான். பெரிய மனுஷர்களுடைய சிநேகம் அதிகமாயிற்று; அவர்களுக்கெல்லாம் அடிக்கடி 'பார்ட்டி'கள் நடத்த வேண்டியிருந்தது. நாகரிகமாய் டிரஸ் பண்ணிக் கொள்வதிலும், உயர்தர விருந்துகள் நடத்துவதிலும், பிறத்தியாருடைய எலெக்ஷன்களில் முன்னின்று உழைத்து வேலை செய்வதிலும் புலிப்பட்டி பிள்ளைவாளுக்கு இணையானவர் அந்த ஜில்லாவிலேயே கிடையாது என்று பெயர் வந்தது. பிறகு, கேட்பானேன்? பிதிரார்ஜித சொத்து நாளுக்கு நாள் குறைந்து வந்தது; கடனோ நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஆனாலும், ரத்தினம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எப்போதும் போல் டாம்பீகச் செலவுகள் செய்து வந்தான். அவன் கவலையின்றி இருந்ததற்கு ஒரு காரணமும் இருந்தது. தாமரை ஓடைப் பண்ணையாருக்குச் சந்தானம் இல்லாதபடியால், அவருடைய திரண்ட சொத்தெல்லாம் தனக்கே வரப்போகிறதென்று அவன் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். ரத்தினம் சென்னையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பஞ்சநதம் பிள்ளைக்குக்கூட அத்தகைய அபிப்பிராயம் இருந்துதான் வந்தது. ஆனால் அவன் புலிப்பட்டிக்கு வந்த பிற்பாடு, அவனுடைய நடை உடை பாவனைகள் பஞ்சநதம் பிள்ளைக்கு அளவில்லாத வெறுப்பை உண்டாக்கின. தன்னுடைய சொத்தில் ஒரு காலணாக்கூட இந்தத் தூர்த்தனுக்குச் சேரக் கூடாது என்று அவர் தீர்மானித்து விட்டார். ஆனால் இது அவனுக்குத் தெரியாது. "சொத்து எங்கே போகிறது? இவருக்குக் கொள்ளியிட நம்மைத் தவிர வேறு யார்?" என்று எண்ணி அவன் நிர்சிந்தையாய் இருந்தான். எனவே திடீரென்று ஒரு நாள், தாமரை ஓடைப் பண்ணையார் இரண்டாந்தாரமாகக் கல்யாணியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறார் என்ற செய்தியை அறிந்ததும் ரத்தினம் பிள்ளைக்கு இடி விழுந்தாற் போலிருந்தது. அவன் கோபங்கொண்டு கல்யாணத்துக்குக் கூட வரவில்லை. "கிழவனுக்கு என்ன கல்யாணம் வேண்டிக் கிடக்கிறது?" என்று கண்டவர்களிடமெல்லாம் தூற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது வந்த ஆத்திரத்தில், இந்த மாதிரி வயதானவர்கள் சிறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும் அக்கிரமத்தைப் பற்றிப் புனை பெயருடன் பத்திரிகைகளுக்குக் கூட ஒரு கடிதம் எழுதினான். அது வெளியானதும், தனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து, "பத்திரிகையில் இது ஒரு விஷயம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா?" என்று அதைப் படித்துக் காட்டினான். சில மாதங்கள் இப்படிக் கோபத்தில் ஆழ்ந்திருந்த பிறகு ஒரு நாள் தாமரை ஓடை வீதி வழியாகப் போன போது அவன் தற்செயலாகக் கல்யாணியைப் பார்க்க நேர்ந்தது. அவளுடைய திவ்ய சௌந்தர்யத்தைப் பார்த்ததும் அவன் பிரமித்தே போனான். "ஆகா! இப்பேர்ப்பட்ட அழகியையா இந்தத் தலை நரைத்த கிழவன் மணந்து கொண்டிருக்கிறான்?" என்று எண்ணினான். இயற்கையிலேயே காமுகனும் ஒழுக்கத்தில் தூர்த்தனுமான அவனுடைய உள்ளத்தில், அக்கணமே பாப சிந்தை குடி கொண்டது. |