உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 26 - “சூ! பிடி!” சில நாளைக்கெல்லாம் ரத்தினம், பஞ்சநதம் பிள்ளையிடம் சென்று, தான் தெரியாத்தனமாகச் செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். பஞ்சநதம் பிள்ளை அவன் முன் செய்த குற்றங்களையும் பொருட்படுத்தவில்லை; இப்போது மன்னிப்புக் கேட்பதையும் பொருட்படுத்தவில்லை. அவன் அவ்வளவு பணிவு கொண்டு பேசியது அவருக்குச் சிறிது வியப்பு அளித்ததாயினும், அதைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யாமல், "தம்பி! நீ என்னை மன்னிப்புக் கேட்கவாவது? நான் உன்னை மன்னிக்கவாவது? இதெல்லாம் எதற்காக? உன் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை; போய் வா!" என்று சொல்லி விட்டார். அவருடன் சிநேகம் செய்து கொண்டு அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனே ரத்தினம் வந்தான். அந்த நோக்கம் நிறைவேறாமற் போகவே, சலிப்புடன் திரும்பிச் சென்றான். பிறகு, அவன் இன்னும் இரண்டு மூன்று தடவை மானத்தை விட்டு பஞ்சநதம் பிள்ளையின் வீட்டுக்குப் போனான். அப்போதெல்லாம் தூரத்தில் கல்யாணி அங்குமிங்கும் நடமாடுவதைப் பார்க்கத்தான் முடிந்தது. அவளுடைய அருகில் நெருங்கவோ அவளுடன் பேசவோ சௌகரியம் ஏற்படவில்லை. இதனால், அவனுடைய உள்ளத்தை எரித்துக் கொண்டிருந்த தீ இன்னும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. பஞ்சநதம் பிள்ளை காலஞ் சென்றபோது, ரத்தினம் ஊரில் இல்லை. ஆனால் அவருடைய மரணச் செய்தி கேட்டதும் அவன் பரபரப்புடன் ஊருக்கு ஓடி வந்தான். பஞ்சநதம் பிள்ளை உயில் ஒன்றும் எழுதி வைக்காமல் இறந்திருந்தால் கல்யாணிக்குப் பிற்காலம் அவருடைய சொத்துக்கெல்லாம் இவனே உரியவன். ஆகவே, சொத்துகளின் மேற்பார்வையை இப்போதே தான் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இதன் மூலம் கல்யாணியுடன் பேசிப் பழகுவதற்கும் அவசியம் ஏற்படும். இவ்வாறு தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் எதிர்பாராத முறையில் வந்துவிட்டதாகவே அவன் கருதினான். தாமரை ஓடைக்கு வந்து விசாரித்து உயில் எழுதப்பட்டிருக்கும் விவரம் தெரிந்ததும், அவனுடைய உற்சாகம் வெகுவாகக் குறைந்தது. உயிலே பொய் உயில், போர்ஜரி செய்தது, செல்லாதது என்றெல்லாம் வழக்காடலாமா என்று சிந்தனை செய்யத் தொடங்கினான். ஆனாலும், இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், கல்யாணியின் வீட்டுக்குச் சென்று உத்தரக் கிரியைகளில் ஒத்தாசை செய்தான். கல்யாணியின் தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளைக்கு அவனுடைய பூர்வோத்தரம் ஒன்றும் தெரியாதபடியால், இறந்து போனவருக்கு முக்கியமான பந்துவாகவே அவனைக் கருதி, எல்லா விஷயங்களிலும் அவனுடன் கலந்து யோசனை செய்யத் தொடங்கினார். அவன் அபிப்பிராயப்படியே சகல காரியங்களும் செய்து வந்தார். *****
கருமங்கள் எல்லாம் ஆனதும், நில புலன்களின் சாகுபடியைப் பற்றித் தீர்மானிக்க வேண்டி வந்தது. நிலங்களைப் பிரித்துப் பிரித்துக் குத்தகைக்கு விட்டுவிடவேணுமென்றும் அதற்கு ஏற்பாடுகள் தாம் செய்வதாகவும் ரத்தினம் பிள்ளை சொன்னார். திருச்சிற்றம்பலம் பிள்ளையும் இதற்குச் சம்மதித்தார். *****
அன்றிரவு சாப்பிடும்போது அவர் இவ்விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். அது கல்யாணியின் காதில் விழுந்தது. அவள் உடனே, "அப்பா! சாகுபடி எல்லாம் இத்தனை நாளாக நடந்து வந்தது போலவே இனிமேலும் நடக்க வேண்டும், மாறுதல் ஒன்றும் கூடாது" என்றாள். அதிகாரத் தோரணையுடன் அவள் இவ்வாறு பேசியது திருச்சிற்றம்பலம் பிள்ளைக்கு அதிசயமாயிருந்தது; சிறிது கோபத்தையும் உண்டு பண்ணிற்று. "உனக்கென்ன தெரியும் இதெல்லாம்? 'சொந்தப் பண்ணை வைத்து நடத்தமுடியாது; ஆள்களை மேய்ப்பது ரொம்பக் கஷ்டம்' என்று ரத்தினம் பிள்ளை சொல்றாரே?" "அது யார் அது ரத்தினம் பிள்ளை? நம்முடைய வீட்டுக் காரியத்துக்கு அவர் என்ன யோசனை?" என்றாள் கல்யாணி. திருச்சிற்றம்பலம் பிள்ளை திகைத்துப் போனார். ஆனாலும் அவர் சமாளித்துக் கொண்டு, "என்ன அப்படித் தூக்கி எறிந்து பேசுகிறாய்! புலிப்பட்டிப் பிள்ளையைத் தான் சொல்கிறேன். இந்த ஊர் நெளிவு சுளுவு எல்லாம் அவருக்குத்தானே தெரியும்! நான் ஊருக்குப் புதிது. நீயோ சிறுபெண்! உலகம் தெரியாதவள், உன்னால் என்ன முடியும்...?" என்று சொல்கையில் கல்யாணி குறுக்கிட்டு, "அப்பா! இந்த யோசனையெல்லாம் உங்கள் பெண்ணைக் கிழ மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதற்கு முன்னாலேயே உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்" என்றாள். திருச்சிற்றம்பலம் பிள்ளையின் வாய் அடைத்துப் போய் விட்டது. கல்யாணியின் குணத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவருக்கு அர்த்தமாகவேயில்லை. இந்த வீட்டில் கல்யாணிதான் சர்வ சுதந்திர எஜமானி, தமக்கு ஒரு அதிகாரமும் இல்லையென்று அவருக்கு இரண்டொரு நாளில் ஸ்பஷ்டமாகத் தெரிந்து போகவே, அவர் கோபித்துக் கொண்டு பூங்குளத்துக்கே போய் விட்டார். பிறகு கல்யாணியும் அவளுடைய வயதான அத்தை ஒருத்தியும் அந்த வீட்டில் வசித்து வந்தார்கள். காரியங்கள் எல்லாம் எப்போதும் போலவே நடந்து வந்தன. காரியஸ்தர்கள் குடிபடைகள் எல்லாரையும் கல்யாணி அடிக்கடி வீட்டுக்குத் தருவித்து, நேரில் உத்தரவு இட்டு வந்தாள். அவர்கள் எல்லாரும் பண்ணையாரின் எதிர்பாராத மரணத்தினால் என்ன விபரீதமான மாறுதல் ஏற்படுமோ என்று திகிலடைந்தவர்கள், இப்போது மிகவும் குதூகலத்துடன் தங்கள் வேலைகளைச் சரிவரச் செய்து வந்தார்கள். *****
ரத்தினம் பிள்ளைக்கு இதெல்லாம் ஒன்றும் பிடிக்கவே இல்லை. அவனுடைய உத்தேசங்கள் எல்லாம் தவறிப்போயே வந்தன. ஆனாலும் அவன் நிராசை அடைந்து விடவில்லை. பல தடவை அவன் தாமரை ஓடைப் பண்ணையின் வீட்டுக்குப் போய் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, ஆச்சியுடன் சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறதென்று வேலைக்காரியிடம் சொல்லி அனுப்புவான். ஆச்சிக்கு உடம்பு சரியில்லையென்றும், ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தால் காரியஸ்தரிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் வேலைக்காரி வந்து கூறுவாள். கடைசித் தடவை ரத்தினம் பிள்ளை அவ்வாறு வந்திருந்த போது ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. பண்ணையாரின் வீட்டு வாசலில் எப்போது ஒரு நாய் கட்டியிருக்கும். அது உயர்ந்த ஜாதி நாய். பார்த்தால் சாது மாதிரிதான் இருக்கும். குரைக்காது; யாரையும் அநாவசியமாகக் கடிக்காது. ஆனால் எஜமான் மட்டும் ஏவி விட்டால் முழங்கால் சதையில் குறைந்தது ஒரு ராத்தல் சதை எடுத்துப் பட்சணம் செய்தாலொழிய அதற்குச் சரிக்கட்டி வராது. அந்த நாய் வீட்டின் முன் ஹாலில் ஜன்னல் கம்பியில் அன்று சங்கலியால் கட்டப்பட்டிருந்தது. ரத்தினம் பிள்ளை வாசல் அருகில் வந்ததும், அந்த ஜன்னலண்டை ஒரு பெண்ணின் கை தெரிந்தது; அது பொன் வளையல் அணிந்த அழகான கை. அந்தக் கை நாயைக் கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டது. "சூ!" என்ற மெல்லிய சத்தமும் கேட்டது. அவ்வளவுதான், நாய் ஒரே ஒரு தடவை "லொள்" என்று குரைத்துவிட்டு, வாய்ப் பேச்சில் அதிக நம்பிக்கையில்லாத வீரனைப் போல், புலிப்பட்டிப் பிள்ளைவாளின் மேல் பாய்ந்தது. பிள்ளைவாள் ஓடினார். நாயும் பின் தொடர்ந்தது. சீக்கிரத்தில் அவருடைய கால் சட்டையை அது பற்றிற்று; ஒரே கடியில் சட்டையைக் கிழித்து, சதையைக் கவ்விற்று. பிள்ளைவாள் மும்மடங்கு வேகமாய் ஓடினார். நாயும், அவருடைய முழங்கால் சதையை ருசி பார்த்துக் கொண்டே தொடர்ந்து ஓடிற்று. அவரைத் தெரு முனை வரையில் கொண்டு போய் வழியனுப்பிய பிறகுதான் திரும்பி வந்தது. துரத்தப்பட்டு ஓடுகிறவனிடம் சாதாரணமாய் அனுதாபம் உண்டாவது கிடையாது. இது மனித சுபாவம். இந்த சுபாவத்தையொட்டி புலிப்பட்டிப் பிள்ளைவாள் நாயினால் துரத்தப்பட்டு ஓடியபோது, வீதியில் நின்றவர்கள் - பிள்ளைகள் பெரியவர்கள் கூட - சிரித்தார்கள். சில துஷ்டப் பிள்ளைகள் "சூ! பிடி!" என்று நாயை உற்சாகப் படுத்தினார்கள். நாயின் பல்லினால் பிள்ளைவாளுக்குக் காலிலே புண்ணும், ஊராருடைய சிரிப்பினால் அவருடைய உள்ளத்திலே புண்ணும் ஏற்பட்டன. கல்யாணியிடம் அவர் அளவிலாத துவேஷம் கொண்டார். எப்படியும் அவளைப் பழி வாங்குவதென்று தீர்மானித்தார். |