உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 32 - கவிழ்ந்த மோட்டார் அஸ்தமித்து ஒரு நாழிகையிருக்கும். மேற்குத் திசையில் நிர்மலமான வானத்தில் பிறைச் சந்திரன் அமைதியான கடலில் அழகிய படகு மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தது. வெள்ளித் தகட்டினால் செய்து நட்சத்திரங்களுக்கு மத்தியில் பதித்த ஓர் ஆபரணம் போல் விளங்கிய அப்பிறைமதி அழகுக்காக ஏற்பட்டது என்றே தோன்றும்படி, அதன் வெளிச்சம் அவ்வளவு சொற்பமாயிருந்தது. ஆனால் அது கூட அதிகமென்று நினைத்து, எப்போது அந்த இளம்பிறை, அடிவானத்தில் மறையுமென்று கவலையுடன் எதிர்பார்த்த சில பிரகிருதிகள் இருக்கத்தான் செய்தார்கள். புதுச்சேரிக்குச் சமீபத்தில் ஏழெட்டு மைல் தூரத்தில் வயல் காடுகளின் வழியாக ஊர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் வண்டியில் இவர்கள் இருந்தார்கள். அந்த வண்டி சிவப்புச் சாயம் பூசப்பட்ட வண்டி; அதற்கு நம்பர் பிளேட் கிடையாது. அதனுடைய முன் விளக்குகள் மங்கலாக எரிந்தன. வண்டி கிளம்பி அரை மணி நேரமாகியிருந்தும், இதுகாறும் ஒரு தடவை கூட டிரைவர் அதன் ஹாரனை உபயோகப்படுத்தவில்லை. வண்டியில் இருந்த நாலு பேரில் முத்தையனும் ஒருவன். அவன் கையில் ஒரு குழல் துப்பாக்கி இருந்தது. அவன் அதைத் தயாராய் கையில் பிடித்துக் கொண்டு, வண்டிக்குப் பின்புறமே பார்த்துக் கொண்டு வந்தான். பின்னால் போலீஸ் வண்டி தொடர்ந்து வந்தால் அதை நோக்கிச் சுட வேண்டுமென்பது அவனுக்கு உத்தரவு. விதி என்றும், தலையெழுத்து என்றும், பூர்வஜன்ம கர்மம் என்றும் சொல்கிறார்களே, அதிலெல்லாம் ஏதோ உண்மையிருக்கத்தான் வேண்டும். இல்லாது போனால் கல்யாணியைப் பார்த்த பிறகு, அவளுடைய அழியாத காதலை அறிந்த பிறகு முத்தையனுக்கு இந்தக் காரியத்தில் ஈடுபட ஏன் புத்தி தோன்றுகிறது. *****
பிறைச் சந்திரன் மறையும் தருணத்தில், இதுகாறும் காடு மேடுகளில் வந்து கொண்டிருந்த அந்த மோட்டார், நல்ல சாலையை அடைந்தது. அந்த இடத்தில் அச்சாலை ஒரு பெரிய ஏரியின் கரைமீது அமைந்திருந்தது. ஏரியில் ஜலம் நிறைந்து அலைமோதிக்கொண்டு காணப்பட்டது. சுமார் அரை மைல் தூரம் சாலை இப்படி ஏரிக்கரையோடு போய், அப்பால் வேறு பக்கம் திரும்பிச் சென்றது. மோட்டார் அச்சாலையில் ஏறியதும், டிரைவர் வண்டியின் 'ஆக்ஸிலேட்ட'ரைக் காலால் ஒரு மிதி மிதித்தான். வண்டி பிய்த்துக் கொண்டு கிளம்பிற்று. "இனி அபாயம் இல்லை" என்று எண்ணி வண்டியிலிருந்தவர்கள் பெருமூச்சு விட்டார்கள். முத்தையன் கூட ரிவால்வரின் பிடியைச் சிறிது தளர்த்தினான். திடீரென்று, "ஹால்ட்" என்ற ஒரு சத்தம் கேட்டது. பல போலீஸ் விளக்குகளின் வெளிச்சம் பளீரென்று மோட்டாரின் மேல் விழுந்தது. சாலை, ஏரிக்கரையிலிருந்து திரும்பும் இடத்தில் இருபது முப்பது போலீஸ்காரர்கள் எழுந்து நின்றார்கள். அதே சமயம் பின்னாலிருந்து ஒரு மோட்டார் அதிவேகமாக வரும் சத்தம் கேட்டது. வண்டிக்குள், "நிறுத்தாதே; விடு" என்ற ஒரு உத்தரவு பிறந்தது. டிரைவர் 'ஆக்ஸிலேட்ட'ரை இன்னும் ஒரு அழுத்து அழுத்தினான். வண்டி பாய்ந்து சென்றது. "ஷுட்" என்று ஒரு பெருங்குரல் அப்போது கிளம்பிற்று. அநேக துப்பாக்கிகளிலிருந்து ஏககாலத்தில் குண்டுகள் கிளம்பின. முத்தையன் சுட்டான். ஆனால், ஒரு தடவை அவன் விசையை இழுத்துவிட்டு இன்னொரு தடவை இழுப்பதற்குள்ளே எங்கேயோ அதல பாதாளத்தில் தான் விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். போலீஸ்காரர்களுடைய குண்டுகளில் ஒன்று மோட்டாரின் டயரில் பட்டு, டயர் கிழிந்து, வண்டி ஒரு திரும்புத் திரும்பி ஏரியை நோக்கிச் சென்றது. இது ஒரு விநாடி; அடுத்த விநாடி வண்டி தண்ணீரில் தலைகீழாய் விழுந்து முழுகியே போயிற்று. *****
முத்தையன் ஒரு கணம் திக்குமுக்காடினான். அடுத்த கணத்தில் நிலைமை இன்னதென்று ஒருவாறு உணர்ந்தான். மோட்டாருடன் தண்ணீரில் முழுகியிருக்கிறோம் என்பது அவனுக்கு ஞாபகம் வந்ததும், "சரி, பிழைத்துக் கொள்ளலாம்" என்று அவனுக்குத் தைரியம் வந்தது. தண்ணீர் என்பது அவனுக்குத் தாயின் மடியைப் போல் அவ்வளவு பிரியமானதல்லவா? காலாலும் கையாலும், துழாவி, மோட்டாரின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தான். மெதுவாகத் தலையைச் சிறிதளவு தண்ணீரின் மேல் உயர்த்தினான். அநேக போலீஸ்காரர்கள் கையில் விளக்குடனும் துப்பாக்கிகளுடனும் சாலையிலிருந்து ஏரிக்கரைக்கு ஓடி வருவது தெரிந்தது. உடனே மறுபடியும் தண்ணீரில் அமுங்கி, உத்தேசமாகக் கரையோரமாகவே போகத் தொடங்கினான். மூச்சு நின்ற வரையில் அவ்வாறு போன பிறகு தலையை மறுபடி தூக்கினான். வண்டி விழுந்த இடத்தில் ஏக அமர்க்களமாயிருந்தது. வண்டியைத் தூக்கிக் கரையேற்றிக் கொண்டிருந்தார்கள். இவன் தப்பித்துக் கொண்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லையென்று தெரிந்தது. கவனித்திருந்தால் இதற்குள் தடபுடல் பட்டிராதா? ஏரிக்கரையோரமாகப் போலீஸார் ஓடி வரமாட்டார்களா? மோட்டாரில் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பது போலீஸாருக்கு தெரிந்திராது. தன்னுடைய சகபாடிகள் சொல்லாவிட்டால் அவர்களுக்குத் தான் தப்பிப் போனது தெரியவே நியாயமில்லை. துரதிர்ஷ்டத்திலும் தனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருப்பதாக எண்ணிக் கொண்டே முத்தையன், மறுபடியும் தண்ணீரில் மூழ்கிக் கரையோரமே சென்றான். மோட்டார் விழுந்த இடத்திலிருந்து சுமார் அரை மைல் தூரம் சென்ற பிறகு, ஏரிக்கரையில் புதர்கள் அடர்ந்திருந்த ஓர் இடத்தில் கரையேறினான். துணிகளைப் பிழிந்து உலர்த்திய வண்ணம் ஏரிக்கரையோடு நடக்கலானான். *****
இராத்திரி சுமார் ஒரு மணி இருக்கும். கொஞ்ச தூரத்தில் ரயில் சத்தம் கேட்கவே, முத்தையன் அந்தத் திசையை நோக்கி நடந்தான். சித்திரை மாதமாகையால் அவனுடைய துணிகளெல்லாம் அதற்குள் நன்றாய் உலர்ந்துவிட்டன. அவனுக்கு என்னமோ அப்போது வெகு உற்சாகமாயிருந்தது. அவ்வளவு பெரிய துர்சம்பவம் நடந்துங்கூடத் தான் மட்டும் தப்பி வந்ததை நினைக்குங்கால், அவனுக்குத் தன்னிடம் ஏதோ ஒரு அற்புத சக்தியிருப்பதாகவே தோன்றிற்று. ஆகையால் அவனுடைய தைரியமும் துணிச்சலும் அதிகமாயின. சமீபத்தில் கைகாட்டி மரத்தின் சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி முத்தையன் சென்றான். அவன் ஸ்டேஷனை அடைந்ததும் சென்னைக்குப் போகும் ரயில் வந்து நின்றதும் சரியாயிருந்தது. நல்ல வேளையாய் அவன் இடுப்பில் கட்டியிருந்த பணப்பை பத்திரமாயிருந்தது. சென்னைக்கு ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினான். அவன் ஏறிய வண்டியில் ஒரே கூட்டம். அத்துடன் பாட்டும் கூத்தும் பிரமாதப்பட்டன. அவ்வண்டியில் இருந்தவர்களுடைய நடை உடை பாவனைகள் எல்லாமே சிறிது விசித்திரமாயிருந்தன. முத்தையன் தன் பக்கத்திலிருந்தவனுடன் பேச்சுக் கொடுத்தான். அவர்கள் ஒரு பிரபல நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்களென்றும் சென்னையில் நாடகம் நடத்துவதற்காகப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான். |