அத்தியாயம் 34 - சங்கீத சதாரம்

     சென்னைப் பட்டணத்தில், ஸர்வோத்தம சாஸ்திரியின் மைத்துனி பெண்ணுக்குக் கல்யாணம் நடந்து முடிந்தது. ஒரு நாள் கல்யாணந்தான். அன்றிரவு சாஸ்திரி அவசரம் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிளம்பினார். வழியில் ஒரு டிராம் வண்டி மின்சார விளக்குகளால் ஜகஜ்ஜோதியாக அலங்கரிக்கப்பட்டு, ஒளிமயமான நாடக விளம்பரத்துடன் போய்க் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.

சங்கீத சதாரம்
     எங்களுடைய புதிய நட்சத்திர நடிகரை
     திருடன் பார்ட்டில் கண்டு களியுங்கள்

என்று அந்த மின்சார ஜோதி விளம்பரம் பிரகாசப்படுத்திக் கொண்டு போயிற்று.

     நாடகக் கொட்டகைக்கு அவர் போய்ச் சேர்ந்த போது அங்கே ஏராளமான கூட்டம் நின்று கொண்டிருக்கக் கண்டார். ஜனங்கள் டிக்கட் வாங்குவதற்கு "நான் முந்தி" "நீ முந்தி" என்று பிரமாதமான சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் சிலர் கையில் குண்டாந்தடிகளுடன் கூட்டத்தைச் சமாளிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் "ஸீட் காலியில்லை" என்று நோட்டீஸ் போடப்பட்டது. அநேகம் பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.

     இந்த வேடிக்கையைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் கொட்டகைக்குள் சென்று, தாம் ஏற்கனவே ரிஸர்வ் செய்திருந்த இடத்தில் உட்கார்ந்தார். ஆரம்பத்திலெல்லாம் நாடகம் ரொம்பவும் சாதாரணமாயிருந்தது. இதைப் பார்ப்பதற்குத்தானா இவ்வளவு ஜனங்கள் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள் என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

     நாடகத்தில், திருடன் வரும் கட்டம் வந்ததும் அவருக்கு மற்ற ஞாபகமெல்லாம் போய்விட்டது. தான் துரத்தி வந்த முயலைக் கொஞ்ச தூரத்தில் கண்டதும் ஒரு வேட்டை நாய்க்கு எத்தகைய பரபரப்பு உண்டாகுமோ அத்தகைய பரபரப்பு அவருக்கு உண்டாயிற்று. ஆனால் அந்த முயலைப் போய்ப் பிடிக்க முடியாமல் நடுவில் மிகவும் உயரமான ஒரு வேலி தடுத்துக் கொண்டிருந்தால், அந்த வேட்டை நாய் எப்படித் துடிதுடிக்கும்? அப்படித் துடித்தார் ஸர்வோத்தம சாஸ்திரி.

     "இந்தத் திருடன் வேஷக்காரன் தான் முத்தையன்" என்று அவருடைய உள்ளுணர்வு சொல்லிற்று. ஆனால் அதை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கு அவருக்கு வழி எதுவும் புலப்படவில்லை. முத்தையனைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு ஏற்கனவே இருந்த இடையூறு இதுதான்! அவர் முத்தையனைப் பார்த்தது கிடையாது. அங்க அடையாளங்களைக் கொண்டு ஓரளவு ஊகிக்கலாம். நிச்சயமாய் எப்படிச் சொல்லமுடியும்?

*****

     முத்தையனைக் கைது செய்து லாக்-அப்பில் அடைத்த இரண்டு போலீஸ்காரர்களும் அன்றிரவு அஜாக்கிரதையாயிருந்து அவனைத் தப்பித்துக் கொண்டு போகவிட்டதற்காக 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டிருந்தார்கள். இது சாஸ்திரிக்குச் சம்மதமில்லை. அவர்கள் தான் முத்தையனைப் பார்த்திருக்கிறார்களாதலால், அவனைப் பிடிப்பதில் அவர்களுடைய உதவி மிகவும் உபயோகமாயிருக்குமென்று அவர் கருதினார். ஆதலின் அவர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட பிறகுங்கூட, அவர்களை அவர் உபயோகப்படுத்தி வந்தார். அவர்களுடைய முயற்சியினால் திருடன் பிடிபட்டால், மறுபடியும் உத்தியோகம் வாங்கித் தருவதாகவும் வாக்களித்திருந்தார்.

     அந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவன் இரண்டு வாரத்துக்கு முன் சென்னைக்கு வந்திருந்தான். சென்னையில் இருந்த அவனுடைய மைத்துனன் வேலை தேடித் தருவதாகச் சொன்னதன் பேரில் அவன் வந்தான். வந்தவன் ஒரு நாள் "சங்கீத சதாரம்" பார்க்கப் போனான். அங்கே, திருடன் வேஷக்காரனைக் கண்டதும் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. "முத்தையன் மாதிரியல்லவா இருக்கிறான்?" என்று நினைத்தான். நினைக்க நினைக்க சந்தேகம் உறுதிப்பட்டது. உடனே, திருப்பரங்கோயிலுக்குத் திரும்பிச் சென்று சாஸ்திரியிடம் தன்னுடைய சந்தேகத்தைத் தெரியப்படுத்தினான்.

     சாஸ்திரி முதலில் 'பூ பூ' என்றார். துளிக்கூட நம்பிக்கையில்லாமல் சிரித்துப் பரிகாசம் செய்தார். "திருடனை பிடிக்க உன்னைத்தான் அனுப்பவேண்டும்" என்றார்.

     ஆனால் அவர் மனத்திலும் எப்படியோ சந்தேகத்தின் விதை போட்டாய்விட்டது. இரண்டு மாதமாய் முத்தையனுடைய ஆர்ப்பாட்டம் அந்தப் பக்கத்தில் ஒன்றுமே இல்லாததால், அவருடைய சந்தேகம் வளர்ந்து வந்தது. ஆனால், இத்தகைய ஆதாரமற்ற, சிரிப்புக் கிடமான சந்தேகத்தின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

     மைத்துனி பெண்ணின் கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு, தாமே ஒரு முறை சென்னைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமா என்று ஒரு யோசனை தோன்றிற்று. இப்படி அவருடைய மனத்திலே உள்ளுணர்ச்சிக்கும், புத்திக்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்திலேதான், மேற்படி பத்திரிகைச் செய்தியை அவர் பார்த்தார். "சரி சரி! இதைப் போய்ப் பார்த்து விட்டு வந்தாலொழிய மனத்தில் அமைதி ஏற்படாது; வேறு எந்த வேலையிலும் மனம் செல்லாது" என்று தீர்மானித்துத்தான் அவர் சென்னைக்குக் கிளம்பி வந்தது.

     நாடக மேடையில் திருடன் வந்ததிலிருந்து, அவருடைய தவிப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. சில சமயம் நாம் எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது; ஆனாலும் வருவதில்லை. ரொம்பவும் தெரிந்த விஷயம்; தெளிவான சங்கதி; சந்தேகமே இல்லாத செய்தி; ஆனால் அதென்ன? நெஞ்சாங்குழியில் இருக்கிறது; நினைவுக்கு வரமாட்டேனென்கிறதே! - இப்படி எத்தனையோ தடவைகளில் நாம் தவித்திருக்கிறோமல்லவா? ஸர்வோத்தம சாஸ்திரி இப்போது அந்த நிலைமையில்தான் இருந்தார். "இவன் முத்தையன் தான்; ஆனால் அதை நிச்சயம் செய்வது எப்படி? ஏதோ ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது என்ன?" சாஸ்திரி தலையைச் சொறிந்து கொண்டார்; நெற்றியை அமுக்கிப் பிடித்துக் கொண்டார். நல்ல வேளையாக அப்போது எல்லாரும் நாடகத்தில் மிகவும் ரஸமான கட்டத்தில் பூரணமாய் ஈடுபட்டிருந்தபடியால், சாஸ்திரியை யாரும் கவனிக்கவில்லை. யாராவது அவருடைய சேஷ்டைகளைக் கவனித்திருந்தால், இவருக்கு என்ன பைத்தியமா என்று தான் யோசிக்க வேண்டியிருந்திருக்கும்.

     நாடகத்தில் மிகவும் ரஸமான கட்டம் சதாரமும், திருடனும் சந்திக்கும் இடம்தான். சதாரம் வேஷம் போட்டவனுக்கு ஸ்திரீ வேஷம் வெகு நன்றாய் பலித்திருந்தது. உண்மையில், அந்த வேஷம் போடுகிறவனுடைய பெயர் விளம்பரத்தில் கண்டிராமலிருந்தால், புருஷன் தான் ஸ்திரீ வேஷம் போட்டிருக்கிறான் என்று கருதவே முடியாது. அவனுடைய தோற்றத்தைப் போலவே பேச்சு, நடை, பாவனை எல்லாம் ஸ்திரீக்கு உரியனவாகவே இருந்தன. அவனுடைய கைகளின் ஒவ்வொரு அசைவிலும், உடம்பின் ஒவ்வொரு நெளிவிலும், புருவத்தின் ஒவ்வொரு நெறிப்பிலும், கண்ணின் ஒவ்வொரு சுழற்சியிலும் மெல்லியலாரின் இயற்கை பரிபூரணமாய்ப் பொருந்தியிருந்தது.

     முகமூடியணிந்த திருடனைக் கண்டதும் சதாரம் பயந்து போனாள். அவளுடைய முகத்தில், கண்களில், நின்ற நிலையில், உடம்பின் நடுக்கத்தில் - திகைப்பும் பயமும் காணப்பட்டன. அப்போது அவளைப் பார்த்த யாருக்கும் புலியைக் கண்டு வெருண்டு நிற்கும் பெண்மானின் தோற்றம் உடனே ஞாபகம் வராமற் போகாது.

     "ஐயோ! நீ யார்?" என்று சதாரம், குடல் நடுக்கத்துடன் கேட்டாள்.

     "நானா? நான் மனுஷன்" என்று சொல்லிச் சிரித்தான் திருடன்.

     அந்தச் சிரிப்பினால் சிறிது தைரியம் கொண்ட சதாரம், "நீ திருடனில்லையா?" என்றாள்.

     "நான் திருடனில்லை, பெண்ணே! நான் கள்ளன்!"

     "கள்ளனா? ஐயோ! உன்னைப் பார்த்தால் எனக்குப் பயமாயிருக்கிறது!" என்றாள் சதாரம்.

     அப்போது, திருடன் தெம்மாங்கு மெட்டில் ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான்.

     "கண்ணே! உனக்குப் பயமேனோ?"

     என்று ஆரம்பித்து, அமர்க்களமாய்ப் பாடினான். தன்னுடைய குல பரம்பரையின் பெருமையையெல்லாம் அவன் எடுத்துச் சொன்னான். தன்னுடைய குலத்தின் ஆதி புருஷன் கிருஷ்ணன் என்னும் கள்ளன் என்று கர்வத்துடன் கூறினான். "அப்பேர்ப்பட்ட கள்ளர் பரம்பரையில் வந்த வீரக்கள்ளன் நான். உனக்குக் கள்ளப் புருஷனாய் வாய்த்திருக்கிறேன்" என்று பாட்டை முடித்தான். அப்படிப் பாட்டை முடிக்கும்போது தன்னுடைய முகமூடியைச் சற்று அவன் விலக்கிச் சொந்த முகத்தைக் காட்டினான்.

     அப்போது சதாரம் "ஆ!" என்று கூவி மூர்ச்சையடைந்து கீழே விழுந்தாள். ஆனால் சபையோர் எல்லாரும் அச்சமயம் பிரமாதமான குதூகலம் அடைந்து கை தட்டி ஆர்ப்பரித்தார்கள். அநேகர் "ஒன்ஸ் மோர்" என்று கத்தினார்கள். அவன் திருடனாகையால், முகமூடிக்குப் பின்னால் பயங்கரமான முகம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தவர்களுக்குக் களை சொட்டிய முத்தையனுடைய அழகான முகத்தைக் கண்டதும் அவ்வளவு உற்சாகம் உண்டாயிற்று. அச்சமயம் ஸர்வோத்தம சாஸ்திரியின் முகம் கூடப் பிரகாசம் அடைந்தது. ஆனால் அதற்குக் காரணம் மட்டும் வேறு. திருடனுடைய முகமூடி விலகிய அதே சமயத்தில் சாஸ்திரி தம்முடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வழி கண்டுபிடித்துவிட்டார்! "அபிராமி! அபிராமி!" என்று அவருடைய வாய் அவரை அறியாமலே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.