உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 36 - குயில் பாட்டு அபிராமியை நாம் பார்த்து ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டதல்லவா? திருப்பரங்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் ஸ்ரீமதி மீனாட்சி அம்மாளுடன் அவளை நாம் கடைசியாகப் பார்த்தோம். இப்போது, சரஸ்வதி வித்யாலயத்தின் மதில் சூழ்ந்த விஸ்தாரமான தோட்டத்தின் ஒரு மூலையில், பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு மர மல்லிகை மரத்தின் அடியில், ஏறக்குறைய சம வயதுடைய ஒரு தோழியுடன் அவளைக் காண்கிறோம். ஒரு நிமிஷம் அபிராமியை அடையாளங் கண்டுபிடிப்பதுகூட நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. முன்னே அவளை நாம் பார்த்த போது இன்னும் குழந்தையாகவே இருந்தாள். இப்போது யுவதியாகி விட்டாள். முன்னே பட்டிக்காட்டுப் பெண்ணைப்போல் பாவாடை, தாவணி அணிந்து கொண்டிருந்தாள். இப்போது காலேஜ் மாணவியைப் போல் ஜோராகப் பின்னால் தலைப்புத் தொங்கவிட்டுப் புடவை உடுத்திக் கொண்டிருந்தாள். தலை மயிரைக் கோண வகிடு பிளந்து தளர்ச்சியாகப் பின்னி விட்டுக் கொண்டிருந்தாள். முகத்திலே இருந்த குறுகுறுப்பு மட்டும் அப்படியே இருந்தது. எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், அதிசயத்துடன் மிரண்டு விழிக்கும் கண்களும் அப்படியே மாறுதலின்றி இருந்தன. அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு கிணறும், அதைச் சுற்றிச் சில கமுகு மரங்களும் இருந்தன. அந்த மரங்களில் ஒன்றிலிருந்து ஒரு குயில் 'கக்கூ' 'கக்கூ' என்று கூவிற்று. "அபிராமி! பிலஹரியில் ஒரு குயில் பாட்டுப் பாடுவாயே! அதைப் பாடு" என்றாள் லலிதா. ராகம்: பிலஹரி
தாளம் : ஆதி வேலனையே அழைப்பாய்-விந்தைக்
குயிலே
நெடிது வளர்ந்து அடர்த்தியாகத் தழைத்திருந்த
மர மல்லிகை மரத்தின் மேல் சற்று பலமான காற்று அடிக்க அதிலிருந்து புஷ்பங்கள்
பொலபொலவென்று உதிர்ந்து, அபிராமியின் மேலும், அவள் தோழியின் மேலும் விழுந்தன.கோலக் கிளியைத் துணைகூட்டிச் சென்றாகிலுமென் (வேல) நீல வெளிதனிலே நிமிர்ந்து பறந்து பாடி நேரஞ் செய்யாமலிருந்த நிமிஷம் எழுந்துவர (வேல) சோலையழகும் சொர்ணம் ஓடி ஒளிந்து பாயும் ஓலைக் குருத்தும் தென்னம் பாளை வெடித்த பூவும் மாலை வெயிலும் மஞ்சள் கோலமுங் கண்டு மனம் பாலித்தருள் செய் யென்றிப் பேதையுரைத்ததாக (வேல) "பார் அபிராமி! உன் மேல் புஷ்பமாரி பெய்கிறது. உன்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டுத் தேவர்கள்தான் பூ மழை பெய்கிறார்கள் போலிருக்கிறது!" என்றாள் லலிதா. இப்படிச் சொன்னவள், அபிராமியின் கண்களில் ஜலம் துளித்திருப்பதைக் கண்டு மனம் கலங்கி, "இதென்ன அபிராமி! உன் கண்களில் ஏன் ஜலம் வருகிறது? இவ்வளவு உருக்கமாய்க் கூப்பிட்டும் அந்த வேலன் வரவில்லையேயென்றா?" என்பதாகப் பாதிக் கவலையுடனும் பாதி பரிகாசமாகவும் லலிதா கேட்டாள். "லலிதா! திருப்பரங்கோயிலில் நானும் என் அண்ணனும் சந்தோஷமாயிருந்த காலத்தில் இந்தப் பாட்டை நான் இட்டுக் கட்டினேன். அதைத் திருப்பித் திருப்பிப் பாடச் சொல்லிக் கேட்டு அவன் சந்தோஷப்படுவான். கடைசி நாள் அன்றைக்குக் கூட..." என்று அபிராமி கூறி மேலே பேச முடியாமல் விம்மினாள். "சற்று இரு, அபிராமி! - ஏதோ சத்தம் கேட்டதே! - அது என்ன?" என்று லலிதா நாலா பக்கமும் கலக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. "வேறு யாரோ விம்மி அழுதாற் போலிருந்தது. என்னுடைய பிரமையோ, அல்லது பக்கத்துச் சாலையில் தான் யாராவது அழுதுகொண்டு போகிறார்களோ?" என்றாள். அபிராமிக்கு என்னமோ அன்று பழைய ஞாபகங்கள் பொங்கிக் கொண்டு வந்தன. "லலிதா! பாவி நான் இங்கே சௌக்கியமாயிருக்கிறேன். சந்தோஷமாய் ஆடிப்பாடிக் கொண்டு காலங் கழிக்கிறேன். முத்தையன் எந்தக் காட்டில் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ? ஐயோ! என் அண்ணன்! உலகத்தில் ஒருவருக்கும் ஒரு தீங்கு நினைக்காதவன். அவனுக்கு வந்த கஷ்டமெல்லாம் என்னால்தான். ஆனாலும் நான் இங்கே சுகமாயிருக்கிறேன். பகவானே!" என்று பரபரப்புடன் பேசிக் கொண்டு போனாள். "ஏன் அபிராமி உன்னை நீயே அநாவசியமாய் நொந்து கொள்கிறாய்? உன் அண்ணனுடைய தலைவிதி அது. திருட்டுக் கொள்ளையில் ஒருவன் இறங்கின பிற்பாடு அவனைப்பற்றிக் கவலைப்படுவதில் என்ன பிரயோஜனம்?" "லலிதா! உனக்கென்ன தெரியும்? என் அண்ணனா திருடன்? அவனா கொள்ளையடிக்கக் கூடியவன்! ஒரு நாளுமில்லை. எல்லாம் பொய். நான் பிறந்த வேளை, அவன் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறது." *****
அவள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து, "அபிராமி! அபிராமி!" என்று கூப்பிடும் குரல் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண் வந்து, "அபிராமி இங்கே என்ன செய்கிறாய்? உன்னைத் தோட்டமெல்லாம் தேடிக்கொண்டு வருகிறேன். யாரோ திருப்பரங்கோயிலிலிருந்து மனுஷாள் வந்திருக்கிறார்களாம். அம்மாள் உன்னை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்கள். சாஸ்திரியும் அவர் மனைவியும் அபிராமியைச் சந்தித்தது குறித்து அதிகம் விஸ்தரிக்க வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தினங்களுக்குப் பிறகு தன்னுடைய ஊர் மனுஷ்யர்களைக் கண்டதும் அபிராமிக்குச் சந்தோஷமாய்த் தானிருந்தது. அவர்கள் தங்களுடன் ஒரு நாள் இருக்கும்படி அழைத்தபோது உற்சாகத்துடன் சென்றாள். நாடகம் பார்க்கப் போகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். அன்றிரவு நாடகக் கொட்டகையில் ஏற்கனவே 'ரிசர்வ்' செய்திருந்த இடங்களில் மூன்று பேரும் சென்று உட்கார்ந்தார்கள். உட்கார்ந்தவுடனே சாஸ்திரி சுற்று முற்றும் பார்த்தார். அவருக்குப் பின்னால் இரண்டு வரிசை தள்ளி நாலைந்து ஆசாமிகள் சேர்ந்தாற்போல் உட்கார்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட சங்கேதத்தின் மூலம் அவர்கள் போலீஸ்காரர்கள் என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. அபிராமி நாடகத்தின் ஆரம்ப முதலே மிக்க ஆவலுடன் பார்த்து வந்தாள். ஆனால் மேடைக்குத் திருடன் வந்ததிலிருந்து அவள் மகுடியின் சங்கீதத்தினால் கட்டுண்ட பாம்பைப் போல் ஆனாள். கண்ணைக்கூடக் கொட்டாமல் அவனைப் பார்த்த வண்ணமிருந்தாள். இடையிடையே அவளுடைய தேகத்தில் இன்னதென்று விவரிக்க முடியாத படபடப்பு உண்டாயிற்று. அப்போதெல்லாம், பக்கத்திலிருந்த மீனாட்சி அம்மாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். |