உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 4 - விம்மலின் எதிரொலி முத்தையன் அபிராமியுடனும் துரதிர்ஷ்டத்துடனும் கூடப்பிறந்தவன். அவனுடைய தகப்பனாருக்குப் பூர்வீகம் பூங்குளந்தான். ஆனால் அவர் இங்கிலீஷ் படித்து உத்தியோக வாழ்க்கையில் ஈடுபட்டவர். ரெவினியூ இலாகாவில் தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்து, படிப்படியாக மேல் ஏறி, டிபுடி கலெக்டர் ஆபீஸில் தலைமைக் குமாஸ்தாவாக வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம், யாரும் எதிர்பாராதபடி அவருக்கு மரணம் சம்பவித்தது. அப்போது முத்தையன் ஹைஸ்கூலில் மூன்றாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தான். அபிராமி ஏழு வயதுக் குழந்தை. அவர்களுடைய தாயார் தன் கணவன் இறந்ததும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பூங்குளத்துக்கு வந்து சேர்ந்தாள். பூங்குளத்தில் அவர்களுக்குப் பிதிரார்ஜிதமாகப் பத்து ஏக்கரா நன்செய் நிலம் இருந்தது. ஆகையால் இந்தச் சின்னக் குடும்பம் சாப்பாட்டுக்குத் துணிக்குக் கஷ்டப்படாமல் சௌக்கியமாக வாழ்க்கை நடத்தியிருக்கலாம். ஆனால் முத்தையனுடன் கூடப் பிறந்த துரதிர்ஷ்டம் இங்கேயும் அவர்களை விடவில்லை. அவர்கள் ஊருக்கு வந்த மறு வருஷம் கொள்ளிடத்தில் பெருவெள்ளம் வந்து உடைப்பு எடுத்தது. அந்த உடைப்பினால் பூங்குளத்தின் சுற்றுவட்டத்தில் பலருடைய நிலங்களில் வண்டல் தங்கி அவை மிகவும் செழிப்பாகி விட்டன. வேறு சிலருடைய நிலங்களில் மணல் அடித்து அவை சாகுபடிக்கு லாயக்கற்றுப் போயின. முத்தையனுடைய நிலங்களுக்குப் பின் சொன்ன கதி தான் நேர்ந்தது. இரண்டு போகம் சாகுபடியாகி, மாவுக்கு இருபது கலம் கண்டு முதல் ஆகிக் கொண்டிருந்த முதல் தரமான அவனுடைய நிலம் முழுவதும் மண்மேடிட்டுப் போயிற்று! ஆகவே, அந்தக் குடும்பம் நிராதரவான நிலைமையடைந்தது. ஏற்கனவே முத்தையனுடைய தகப்பனார் உத்தியோகம் பார்த்த காலத்தில், பூங்குளத்தில் இருந்த அவனுடைய தாயாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் அவர் மேல் அசூயை இருந்தது. முத்தையன் கொஞ்சம் துடுக்கான சுபாவம் உள்ளவனாயிருந்தபடியால், அவன் பேரிலும் அந்த ஊர்க்காரர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எனவே, அவனுக்குக் கஷ்டம் வந்த காலத்தில் யாரும் அவன் மேல் அனுதாபப்படவில்லை. "அவனுடைய திமிருக்கு நன்றாய் வேண்டும்" என்று தான் நினைத்தார்கள். மேலும் கிராமாந்தரங்களில் யாருக்கு யார் ஒத்தாசை செய்ய முடியும்? அப்போதோ நெல் விலை மளமளவென்று இறங்கிக் கொண்டிருந்த காலம். ஆகவே, அவரவர்கள் காலட்சேபம் நடத்துவதே கஷ்டமாயிருந்த போது மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்வது? சுமார் இரண்டு வருஷ காலம் மணலடித்த பூமியைக் கட்டிக் கொண்டு மாரடித்தான் முத்தையன். அது ஒன்றும் பிரயோசனப்படாமல் போகவே, மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்துப் பாஸ் பண்ணி உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவனுடைய தாயார் வைத்திருந்த இரண்டொரு நகைகளுக்கு இதனால் சனியன் பிடித்தது. அவற்றை விற்று வந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் பழையபடி மூன்றாவது பாரத்தில் சேர்ந்தான். வருஷக் கடைசியில் அவனுக்குப் பரீட்சை தேறவில்லை. இதில் வியப்பும் கிடையாது. வாழ்க்கையில் அடிபட்டு முதிர்ச்சியடைந்த அவனுடைய மனது, கேவலம் பள்ளிக்கூடத்துப் பாடங்களில் கவனம் செலுத்த மறுத்துவிட்டது! அவ்வருஷம் பள்ளிக்கூடத்தில் படித்த போது, பெரிய மனுஷர்களின் பிள்ளைகள் சிலருடன் அவனுக்குச் சிநேகம் ஆகியிருந்தது. இதன் பலனாக, அவன் மோட்டார் வண்டி விடுவதற்குக் கற்றுக் கொண்டிருந்தான். பரீட்சை தேறாமற் போகவே அவன் படிப்பை விட்டுவிட்டு ஒரு பெரிய மிராசுதாரரிடம் மோட்டார் டிரைவராக அமர்ந்தான். அந்தக் காலத்தில் மிராசுதாரர்கள் வாங்கிய மோட்டார்களை எப்படிக் கையை விட்டுக் கழிப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவன் டிரைவராகப் போய் ஆறு மாதத்துக்குமேல் யாரும் வண்டி வைத்துக் கொண்டிருக்கவில்லை. கடைசியாக அவன் டிரைவராக இருந்த பெரிய மனுஷரிடம் பலத்த சண்டை போட்டுக் கொண்டு "இனிமேல் ஒருவரிடமும் சம்பளத்துக்கு டிரைவராயிருப்பதில்லை" என்று சபதம் செய்துகொண்டு, கிராமத்துக்குத் திரும்பினான். ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்த துன்பங்களால் மனம் இடிந்து போயிருந்த முத்தையனுடைய தாயார், அவன் ஊருக்குத் திரும்பி வந்த சில நாளைக்கெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் உலகில் தன்னந்தனியாக விட்டுவிட்டுக் காலஞ் சென்றாள். *****
இரண்டாவது தடவை முத்தையன் ஹைஸ்கூலில் சேர்ந்து படிக்கப் போனான் என்று சொன்னோமல்லவா? அதற்கு அவனுக்குத் தூண்டுகோலாயிருந்த மற்றொரு காரணமும் உண்டு, அந்தக் காரணம் கல்யாணிதான். கொள்ளிடத்தில் உடைப்பு எடுத்த வருஷத்தில் அவன் ஒரு நாள் வண்டி மாட்டுக்கு நல்ல தார்க்குச்சி சம்பாதிப்பதற்காகப் படுகைக் காட்டில் புகுந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று, "ஐயோ! ஐயோ!" என்று ஒரு சிறு பெண்ணின் குரல் கேட்கவே, அந்தத் திசையை நோக்கி விரைந்து ஓடினான். முன் அத்தியாயத்தில் நாம் பார்த்த பாழடைந்த கோவிலை அடைந்தான். அங்கே ஆச்சரியத்தையும் திகிலையும் ஒருங்கேயளித்த ஒரு காட்சியைக் கண்டான். நாவல் மரத்தின் கிளைகளில் ஒன்றில் கல்யாணி உட்கார்ந்திருந்தாள். அந்தக் கிளைக்கு நேர் கீழே பாழும் கோவில் மண்டபத்தின் மீது ஒரு பெரிய குரங்கு உட்கார்ந்திருந்தது. அது கல்யாணி இருந்த கிளையின் மேல் தாவுவதற்கு யத்தனம் செய்து கொண்டிருந்தது. முத்தையன் ஒரு பெரிய அதட்டல் போட்டான். குரங்கு அவனைப் பார்த்து 'உர்' என்று பல்லைக் காட்டி உறுமிவிட்டுக் காட்டில் ஓடி மறைந்தது. மரக் கிளையின் மேலிருந்த கல்யாணியைப் பார்த்து மிகவும் கடுமையான குரலில் "இங்கே இறங்கி வா" என்றான் முத்தையன். கல்யாணி கலகலவென்று ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, சாவதானமாய், நாவல் பழம் பறிக்கத் தொடங்கினாள். அப்போது அவளுக்குப் பதின்மூன்று, பதினாலு வயது தான் இருக்கும். முத்தையன், கோபத்துடன், ரொம்பவும் அதட்டி மிரட்டிய பிறகுதான் கல்யாணி இறங்கி வந்தாள். அவன் அவளுடைய மென்மையான காதைப் பிடித்து இலேசாக நிமிண்டிக் கொண்டே, "இனிமேல் இங்கெல்லாம் வராதே! வராதே!" என்றான். "இந்தக் காடு என்ன, உங்கள் பாட்டனார் சொத்தா? இங்கே வராதே என்று சொல்ல நீ யார்?" என்றாள் கல்யாணி. "அதெல்லாம் சரிப்படாது; இனிமேல் இங்கெல்லாம் வருவதில்லையென்று சொன்னால் தான் விடுவேன்" என்று முத்தையன் கூறி, காதை நிமிண்டிக் கொண்டேயிருந்தான். "அடாடா! ஒரு குரங்கினிடமிருந்து தப்பி, இன்னொரு குரங்கினிடம் அல்லவா அகப்பட்டுக் கொண்டேன்?" என்றாள் கல்யாணி. அவ்வளவுதான்; முத்தையன் குபீரென்று சிரித்து விட்டான். கல்யாணியும் சேர்ந்து சிரித்தாள். இரண்டு பேருடைய சிரிப்பும் சேர்ந்து அந்த நிசப்தமான காட்டில் எதிரொலி செய்தன! இதற்கு முன்னால் முத்தையன் கல்யாணியைப் பார்த்தது உண்டு; பேசியதும் உண்டு. ஆனால் இன்று அவளுடைய தோற்றத்திலும், பேச்சிலும் அவன் என்னமோ புதுமையைக் கண்டான். அவனுடைய இருதயத்தைப் பறிகொடுத்தான். நாளுக்கு நாள் அவர்களுடைய சிநேகம் வளர்ந்து வந்தது. கல்யாணியைக் கல்யாணம் செய்து கொண்டாலன்றி வாழ்க்கையில் தனக்கு நிம்மதியிராது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவள் சொத்துக்காரி; தானோ ஒன்றுமில்லாதவன். இதையெல்லாம் உத்தேசித்து அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தகுதி பெறும் பொருட்டே அவன் மறுபடியும் படிக்கச் சென்றது. நன்றாய் படித்துப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து விட்டால் கல்யாணியைத் தனக்குக் கொடுக்க மறுக்க மாட்டார்களல்லவா! ஆனால் அதிர்ஷ்டம் அவன் பக்கத்தில் இருக்கவில்லை. ஐயோ! அந்த நாசமாய்ப் போன இங்கிலீஷ் பரீட்சையில் நாலு மார்க்கு மட்டும் குறைந்து போகாமலிருந்தால்? கல்யாணி கோபமாய்த் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்ற பிறகு, திரும்பி வந்து அந்தக் கோயில் திண்ணையில் உட்கார்ந்த முத்தையனுக்கு அதே இடத்தில் முதன் முதலில் தான் கல்யாணியைச் சந்தித்த போது நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டு விம்மி அழுதான். அந்த விம்மலுக்கு எதிரொலியைப் போல், காட்டிலே போய்க் கொண்டிருந்த கல்யாணியின் தேம்பும் குரலும் கேட்டது! |