உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 51 - காலைப் பிறை முத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ? பொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணியிருந்தாளோ, அது இன்று பொய்யாய்ப் போய்விட்டதை அவள் கண்டாள். துன்பமயமான இந்த வாழ்க்கையை எந்த ஒரு இன்பத்தைக் கருதி அவளால் சகித்துக் கொண்டிருக்க முடிந்ததோ, அந்த இன்பம் வெறும் மாயக் கனவு என்பதை அவள் அறிந்தாள். முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போய்விட்டது! அவனுடன் தான் இன்ப வாழ்க்கை நடத்துவதைப் பற்றிக் கட்டியிருந்த ஆகாயக் கோட்டையெல்லாம் சிதறி விழுந்தன. ஆஹா! இத்தனை காலமும் கானல் நீரையல்லவா தேடியலைந்து கொண்டிருந்தோம்? என்ன பேதமை! அன்று சாயங்காலம் அவளுடைய காதில் விழுந்த ஊரார் பேச்செல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. திருடன் பிடிபட்டதன் காரணத்தைப் பற்றி இரண்டு மூன்று விதமான வதந்திகள் பரவியிருந்தன. "இந்தப் பக்கத்தில் யாரோ ஒரு பெண் பிள்ளை அவனுக்குச் சிநேகமாம். அவள் தான் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு அவனைக் காட்டிக் கொடுத்து விட்டாளாம்" என்று ஒரு வதந்தி. "அதெல்லாம் இல்லை; போலீஸாரே ஒரு அழகான தாஸியைப் பிடித்து அனுப்பி முத்தையன் அவளுடைய மோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது பிடித்து விட்டார்களாம்!" என்று இன்னொரு வதந்தி. படுகைக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடைப் பையன் ஒருவன் காட்டு வழியாக ஒரு பெண் பிள்ளை-ரொம்ப அழகான பெண் பிள்ளை போனதைப் பார்த்ததாகச் சொன்னதன் பேரில் இம்மாதிரி வதந்திகள் எல்லாம் கிளம்பியிருந்தன. கல்யாணி அன்று மத்தியானம் கொள்ளிடத்துக்குப் போய் குளிக்காமல் திரும்பி வந்த சமாசாரம் ஊரில் எல்லோருக்கும் தெரியுமாதலால், அவளிடம் திருடன் பிடிபட்ட விருத்தாந்தத்தைப் பற்றிப் பேசுவதற்காகவே பலர் வந்தார்கள். முத்தையனுக்குக் கல்யாணியைக் கொடுப்பதாக முன் ஒரு பேச்சு இருந்தபடியால் அவளுடன் இதைப் பற்றி வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம். ஆனால் கல்யாணியோ தான் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், அவர்கள் சொல்வதையெல்லாம் மட்டும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். *****
இரவு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்த போது மேற்சொன்னதெல்லாம் கல்யாணிக்கு நினைவு வந்தது. வதந்திகளுக்கும் உண்மைக்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் என்பதை எண்ணி அவள் திகில் அடைந்தாள். கோர்ட்டு விசாரணையின்போது ஒரு வேளை தன்னுடைய இரகசியம் வெளியாகி விடுமோ? முத்தையனைக் காட்டிக் கொடுத்தது இவள் தான் என்று தெரிந்து விடுமோ? அந்தப் பிராமணன் பரிசு தனக்கே வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒரு வேளை வெளியிடாமலிருக்கலாம். ஒரு வேளை அவன் சொல்லிவிட்டானானால்! - அது முத்தையனுக்கு தெரிந்து போய்விடுமே! "அவனுக்குத் தெரிந்தால் என்ன?" என்று கல்யாணி எண்ணமிட்டாள். உண்மையில் அவனுக்குத்தான் முக்கியமாகத் தெரியவேணும். அந்தப் பாவி தனக்குச் செய்த துரோகத்துக்கு தான் ஏன் அப்படிப் பழிவாங்கக் கூடாது? ஆமாம், விசாரணை நடக்கும் போது கோர்ட்டுக்கே போய், "நான் தான் முத்தையன் இருக்குமிடம் சொன்னேன்; எனக்குக் கொடுங்கள் பரிசை!" என்று கேட்கலாம். முத்தையன் கைதிக் கூண்டில் நிற்கும்போது அம்மாதிரி போய்க் கேட்க வேண்டும். அப்போது அவன் முகம் எப்படியிருக்கும்? ஆனால் அவன் அதுவரை உயிரோடிருப்பானா? இப்போதுதான் அவன் உயிரோடு இருக்கிறானோ என்னமோ? - ஐயோ! என்ன தான் அவன் துரோகம் செய்தாலும், நானா அவனுக்கு யமனாக முடியவேண்டும்? என் வாக்கினாலேயா அவனுக்கு இந்த கதி நேர வேண்டும்? ஸ்வாமி! முத்தையன் பிழைப்பானா? - ஆம்; அவன் சாகக் கூடாது. அவனை விசாரணை செய்து எட்டு வருஷம் அல்லது பத்து வருஷம் ஜெயிலில் போட வேண்டும். நாம் ஜெயிலுக்குள்ளே போய் அவனைப் பார்த்து, "முத்தையா! நீ எனக்குத் துரோகம் பண்ணினாய். அதற்கு நான் பழிக்கு பழி வாங்கினேன்; ஆனாலும் இந்தப் பாவியின் மனத்திலிருந்து உன்னுடைய ஞாபகம் போகமாட்டேனென்கிறது!" என்று சொல்ல வேண்டும்... இப்படி எண்ணிய கல்யாணி தனக்குத்தானே சிரித்தாள். அவளுடைய சிரிப்பின் ஒலி அவளுக்கே பயங்கரத்தை அளித்தது. சீச்சீ! என்ன அசட்டு எண்ணங்கள்! முத்தையன் பல வருஷம் ஜெயிலிலே இருப்பது; அத்தனை காலமும் தான் உயிரோடிருந்து அவனைப் போய் பார்ப்பது இதெல்லாம் நடக்கக் கூடியதா? இனிமேல் நமக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? - இந்த உயிர் வாழ்க்கைதான் இனிமேல் என்னத்திற்கு? முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போனபிறகு உயிர் வாழவும் வேண்டுமா? உயிர் வாழத்தான் முடியுமா? இனி இரவு நேரங்களில் தூக்கம் வரப்போவதில்லை. தூக்கம் வராமல் முத்தையனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்து பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும். இப்போதே மனது இப்படியிருக்கிறதே! போகப் போக எப்படியாகுமோ, என்னமோ? பைத்தியம் பிடித்துப் போய் ஊரார் எல்லாம் சிரிக்கும்படி உயிர் வாழ வேண்டுமா - இந்த எண்ணம் தோன்றியதும் கல்யாணி அளவிலாத பயங்கரமடைந்தாள். அடுத்த நிமிஷத்தில் அவள் ஓர் உறுதி கொண்டாள். இன்று இராத்திரி எப்படியாவது தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியது. வேறு விமோசனம் கிடையாது. *****
டிங், டிங், டிங் என்று கடிகாரத்தில் மூன்று மணி அடித்தது. கல்யாணி சத்தம் செய்யாமல் எழுந்திருந்தாள். அத்தை காடாந்த நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள் என்பதைக் கவனித்து விட்டு வாசற்கதவை மெதுவாகத் திறந்து கொண்டு வெளியே கிளம்பினாள். நடு வீதியில் நாய் ஒன்று படுத்துக் கிடந்தது. அது குரைத்து ஊர்க்காரர்களை எழுப்பி விடப் போகிறதே என்று கல்யாணி ஒரு கணம் திகில் அடைந்தாள். ஆனால் அது குரைக்கவில்லை. அவள் வீதியோடு கொஞ்ச தூரம் போன பிறகு அந்த நாய் ஆகாயத்தை நோக்கிக் கொண்டு மிகவும் தீனமான குரலில் அழுதது. நாய் அழுதால் யமன் வருவதற்கு அறிகுறி என்று கல்யாணி கேள்விப்பட்டிருந்தபடியால், அவள் உடம்பு சிலிர்த்தது. கிருஷ்ண பட்சத்துக் காலைப் பிறையின் ஒளி மங்கலாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கல்யாணி ஒரு கையினால் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டு கொள்ளிடக்கரையை நோக்கி நடந்தாள். ஆற்றிலே விழுந்து இறந்து போய் விடுவது என்னும் எண்ணத்துடனே தான் அவள் அந்த நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பியது. ஆனால், கிட்டத்தட்ட இராஜன் வாய்க்காலின் அருகில் வந்தபோது அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. ஐயோ! தனக்கு நீந்தத் தெரியுமே? தண்ணீரில் விழுந்தால், நீந்திக் கரையேறத் தானே தோன்றும்? உயிர் போகுமா? கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுகிறது என்று சாதாரணமாய்ச் சொல்லுவார்கள். நிஜமாகவே அப்படிச் செய்ய முடியுமா? கொள்ளிடக் கரையில் கல்லுக்குப் போவதெங்கே? அல்லது கயிற்றுக்குத்தான் எங்கே போவது? புடவைத் தலைப்பில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்தால், தலைப்பிலிருந்து கல் நழுவி விட்டால் என்ன செய்வது? ஐயோ! உயிரை விடுவதென்பது சொல்வதற்குச் சுலபமாயிருக்கிறதே தவிர, மிகவும் கஷ்டமான காரியமாக அல்லவா தோன்றுகிறது? கல்யாணி இராஜன் வாய்க்காலின் பாலத்தை அடைந்த போது, அதைக் கடந்து மேலே சொல்லவில்லை. அங்கேயே சற்று நேரம் நின்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு வாய்க்கால் ஓரமாய்ச் சென்று தண்ணீர்க் கரையில் ஓரிடத்தில் உட்கார்ந்தாள். சிலுசிலுவென்று காற்றடித்தது. கிராமத்தில் ஜாமக்கோழி கூவிற்று. காக்கையொன்று அரைத் தூக்கமாய்க் கரைந்தது. கல்யாணி, "இன்று நான் இறக்க வேண்டுமென்று விதி இருந்தால், எப்படியும் யமன் என்னைக் கொண்டு போவான் அல்லவா? பார்க்கலாம்" என்று எண்ணமிட்டாள். பிறகு, "யமனே! வா! என்னைக் கொண்டு போ!" என்று வாய் விட்டுக் கூறினாள். அப்படி அவள் சொல்லி வாய் மூடினாளோ இல்லையோ, எங்கேயோ வெகு தூரத்தில் டக், டக், டக், டக் - என்ற சத்தம் கேட்டது. கல்யாணியின் ரோமம் சிலிர்த்தது. உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஒரு வேளை தன்னுடைய பிரார்த்தனையைக் கேட்டு யமன் தான் வருகிறானோ? டக், டக், டக், டக் - இந்த ஒலி நிமிஷத்துக்கு நிமிஷம் பெரியதாகிக் கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அது வெகு சமீபத்தில் வந்து விட்டது. கல்யாணி கண்களை இறுக மூடிக் கொண்டாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் அந்த டக் டக் சத்தம் கல்யாணிக்கு எதிரில் வாய்க்காலின் அக்கரையில் வந்து நின்றது. யமன் தான், சந்தேகமில்லை! சப்தம் நின்று ஒரு நிமிஷம் ஆயிற்று. இரண்டு நிமிஷம் ஆயிற்று, மூன்று நிமிஷம் ஆயிற்று; கல்யாணிக்கோ இந்த மூன்று நிமிஷமும் மூன்று யுகமாகயிருந்தது. அவளுடைய படபடப்பும் அதிகமாகிக் கொண்டு வந்தது. மறுபடியும் ஒரு தடவை, "யமனே! வா! சீக்கிரம் வந்து என்னைக் கொண்டு போ!" என்று கூவினாள். அடுத்த கணம் கல்யாணி தன்னுடைய ஞாபகத்தை இழந்தாள். தண்ணீரில் 'குபுக்' என்று ஒரு சத்தம் கேட்டது. |