உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 53 - கல்யாணியின் கல்யாணம் நிர்மலமான வானத்தில் பூரண சந்திரன் பவனிவந்து கொண்டிருந்தது. கீழே அலைகளின்றி அமைதியாயிருந்த நீலக்கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் அதிவேகமாய்ச் சென்றது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் ஓர் ஓரமாகக் கம்பியின் மீது சாய்ந்து கொண்டு முத்தையனும் கல்யாணியும் நின்றார்கள். முத்தையன், கல்யாணியின் முகத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். "மதி வதனம்" என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு அறிவீனம்? இரண்டும் வட்ட வடிவமாயிருக்கின்றன என்பதைத் தவிர சந்திரனுக்கும் இந்த முகத்துக்கும் வேறு என்ன பொருத்தமிருக்கிறது? அந்தச் சந்திர வட்டத்தில் கருவிழிகள் இரண்டு உண்டா? அவை நம்மைக்கொன்று விடுவது போல் பார்ப்பதுண்டா? ஒரு கண நேரத்துப் புன்னகையினால் பித்தம் தலைக்கேறச் செய்யும் சக்திதான் சந்திரனிடம் இருக்கிறதா?" என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுடைய மனத்தில் மிகவும் விசித்திரமான ஓர் எண்ணம் உண்டாயிற்று. "கல்யாணியின் கண்களிலிருந்து இப்போது கண்ணீர் பெருகினால் எப்படியிருக்கும்? நிலவின் ஒளி அந்தக் கண்ணீர்த் துளிகளின் மீது படும்போது அவை முத்து உதிர்வது போல் உதிருமல்லவா?" என்று நினைத்தான். அப்படி நினைத்ததுதான் தாமதம் - ஐயோ! இதென்ன அந்தக் கரு விழிகளிலிருந்து உண்மையிலேயே கண்ணீர் பெருகி வழிகின்றதே! முத்தையன் பதறிப் போய், "கல்யாணி! கல்யாணி, என்ன இது? கண்ணீர் ஏன்..." என்று சொல்லி, கண்களைத் துடைப்பதற்காக அருகில் நெருங்கினான். ஆனால் கல்யாணி, சடக்கென்று ஒரு அடி பின்வாங்கினாள். "ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனந்தக் கண்ணீர் என்று சொல்கிறார்களோ, அது தானோ என்னமோ? அளவில்லாத ஆனந்தத்திலேதான் மூழ்கியிருக்கிறேன். ஆனால் ஆனால்..." என்று மேலே சொல்வதற்குத் தயங்கினாள். "ஆனால் என்ன? அவ்வளவு சொத்து சுதந்திரங்களையும் விட்டு இந்தத் திருடனை நம்பி வந்தோமே என்று தோன்றுகிறதா?..." "அதெல்லாம் இல்லையென்று உனக்கே தெரியும், முத்தையா! சொத்தும் சுதந்திரமும் இங்கே யாருக்கு வேணும்? நீ திருடன் என்றால் இந்த உலகத்தில் யோக்யர்கள் யாருமே இல்லை. ஆனால், ஆனால்... நான் கேள்விப்பட்ட ஒரு விஷயந்தான், என் மனத்தில் உறுத்திக் கொண்டிருக்கிறது. உனக்கு இன்னொரு ஸ்திரீயிடம் நேசம் உண்டு என்று சொன்னார்கள். நான் அதை நம்பவில்லை. ஆனாலும் உன் வாயிலிருந்தே தெரிந்து கொண்டால் என் மனம் நிம்மதியடையும்." முத்தையன் சிரித்துக் கொண்டே சொன்னான்:- "ஆமாம்; கல்யாணி! அது வாஸ்தவந்தான். எனக்கு ஒரு ஆசை நாயகி இருக்கிறாள். அவள் பெயர்..." முத்தையன் அந்த வாக்கியத்தை முடிக்கவில்லை. அவன் அதை "அவள் பெயர்...சதாரம்" என்று சொல்லி முடிப்பதற்குள்ளே, எதிரே நின்ற கல்யாணி மாயமாக மறைந்தாள். கீழே கொந்தளித்த கடலில் 'குபுக்!' என்ற ஒரு சிறு ஒலி கேட்டது. "ஐயோ! இது என்ன விபரீதம்?" என்று முத்தையன் ஒரு கணம் திகைத்து நின்றான். அடுத்த கணத்தில் அவனும் கடலில் குதித்து மூழ்கினான். தண்ணீரில் மூழ்கிய முத்தையனுக்கு நினைவு மட்டும் தெளிவாக இருந்தது. கைகளை நாலா புறமும் துளாவவிட்டுக் கல்யாணியைத் தேடினான். கடைசியில், அவனுக்கு மூச்சு முட்டிப் போகும் என்றிருந்த சமயத்தில் கல்யாணி கைகளில் தட்டுப்பட்டாள். உடனே அவளைத் தழுவிச் சேர்த்துக் கொண்டு முத்தையன் மேலே கிளம்பினான். மேலே வருகிறான் வருகிறான் வருகிறான் - ஆனால் இன்னும் தண்ணீர் மட்டத்துக்கு வந்து சேர்ந்த பாடில்லை. மூச்சோ திணறுகிறது. கடைசியாக தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்துக் காலை உதைத்து மேலே எழும்பினான். அப்பா மேலே வந்தாயிற்று. ஒரு நெடிய மூச்சுவிட்டுக் கண்களையும் திறந்தான். *****
அச்சமயம், முத்தையனுக்கு உண்மையாகவே பிரக்ஞை வந்தது. அவனுடைய கண்கள் திறந்தன. என்ன ஆச்சரியம். இது நிஜந்தானா? மறுபடியும் கண்களை மூடித் திறந்தான். ஆம் கல்யாணிதான். இத்தனை நேரம் கனவில் பார்த்த கல்யாணியேதான்! இப்போது நிஜமாகவே அவனுடைய அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய மென்மையான சரீரந்தான் அவன் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. அவளுடைய கண்களிலிருந்து தான் கண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது. முத்தையன் அவளுடைய கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் கையைத் தூக்க முயற்சி செய்தான்; அவ்வாறு தூக்க முடியாமல் பெருமூச்சு விட்டான். இதைப் பார்த்த கல்யாணியின் கண்களிலிருது கண்ணீர் இன்னும் ஆறாய்ப் பெருகிற்று. ஸப்-இன்ஸ்பெக்டரிடம் தான் கொடுத்திருந்த வாக்குறுதியையும் மறந்து விம்மத் தொடங்கினாள். "வேண்டாம், கல்யாணி! அழாதே!" என்று முத்தையன் ஈனஸ்வரத்தில் கூறினான். "மீண்டும், அடுத்த ஜன்மத்தில் நாம் இம்மாதிரி தவறு செய்ய மாட்டோ ம்; முதலிலேயே கல்யாணம் செய்து கொண்டு விடுவோம்" என்று சொல்லிப் புன்னகை புரிந்தான். இதைக் கேட்ட கல்யாணிக்குத் துக்கம் போய் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அவளுடைய கண்கள் ஒரு நொடியில் வரண்டு போயின. "இந்தப் பாவி அடுத்த ஜன்மத்திலே வேறு வந்து உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? வேண்டவே வேண்டாம்! அடுத்த ஜன்மத்திலாவது உனக்கு இஷ்டமானவளைக் கல்யாணம் செய்து கொண்டு சுகமாயிரு" என்றாள். முத்தையன் சிரித்தான். தன்னுடைய உடல் நோவையெல்லாம் மறந்து குதூகலத்துடன் சிரித்தான். "கல்யாணி! கோபம் வரும் போது உன் முகம் இவ்வளவு அழகாயிருக்கும்படி பிரம்மதேவன் படைத்து விட்டான். அதனால் தான் போலிருக்கிறது, அந்த நாளிலிருந்து உனக்குக் கோபமூட்டிப் பார்ப்பதிலேயே எனக்குச் சந்தோஷம்" என்றான். கல்யாணியின் முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தது. "முத்தையா! பொய் புனைசுருட்டெல்லாம் இன்னமும் எதற்காக? என் முகத்தில் அழகு வேறு இருக்கிறதா? நீ அன்று கட்டித் தழுவிக் கொண்டு இருந்தாயே, அவளை விடவா நான் அழகு? ஒரு வேளை அது கூட எனக்குக் கோபம் மூட்டுவதற்குத்தான் செய்தாயோ, என்னமோ?" என்றாள். "ஆமாம், கல்யாணி! உனக்குக் கோபமூட்டுவதற்குத் தான்! இல்லாவிட்டால், நீ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் போய் என்னைக் காட்டிக் கொடுப்பாயா?" கல்யாணியின் கோபம் மாறி, மறுபடி துக்கம் வந்தது. "ஐயோ! முத்தையா! அது பொய்; நான் காட்டிக் கொடுக்கவில்லை. உன்னை இன்னொரு பெண் பிள்ளையுடன் பார்த்ததில் என் சித்தம் கலங்கிப் போயிருந்தது. அப்போது அந்தப் பிராமணன் வந்து என்னவோ கேட்க, நான் என்னமோ உளறி விட்டேன். நீ என்ன தான் துரோகம் பண்ணினாலும், ஐயோ! உன்னை வேணுமென்று நான் காட்டிக் கொடுப்பேனா? நானல்லவா இந்தப் பாழும் உயிரை விட்டிருப்பேன்?" என்றாள். "எனக்குத் தெரியும், கல்யாணி! எனக்குத் தெரியும். நீயா என்னைக் காட்டிக் கொடுத்தாய்? விதியின் வினைக்கு நீ என்ன செய்வாய்?" என்றான் முத்தையன். "விதிதான் அப்படிப் பெண்ணுருவம் கொண்டு வந்தது போலிருக்கிறது! முத்தையா! நீ என்னிடம் பிரியம் கொள்ளாததில் கூட எனக்கு துக்கம் இல்லை. 'என்னிடம் அன்பாயிரு' என்று ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியுமா? ஆனால் என்னை எதற்காக நீ ஏமாற்றினாய்? நம்ப வைத்து ஏன் துரோகம் பண்ணினாய்? அதனால் அல்லவா என் சித்தம் அப்படிக் கலங்கிப் போய்விட்டது?" "கல்யாணி! நான் உன்னை ஏமாற்றவில்லை. விதிதான் உன்னை ஏமாற்றியது. நீ பார்த்தது பெண் பிள்ளையல்ல, கல்யாணி! அவன் என் சிநேகிதன் கமலபதி. நாடகத்தில் என்னுடன் 'சதாரம்' வேஷத்தில் நடித்தவன். நாம் கப்பல் ஏறுவதற்கு ஏற்பாடு செய்திருப்பதைத் தெரிவிப்பதற்காகவே வந்தான். போலீஸ் தொந்தரவுக்குப் பயந்து பெண் வேஷத்தில் வந்தான்" என்றான் முத்தையன். *****
இதைக் கேட்டதும் கல்யாணியின் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதலை எவ்வாறு விவரிக்க முடியும்? அவளுடைய நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறாங்கல் திடீரென்று விலகியது போலிருந்தது. மலை உச்சியிலிருந்து சறுக்கி விழுந்து கொண்டேயிருந்தவள் சட்டென்று திடமான பூமியில் உறுதியாக நிற்பது போல் தோன்றியது. முத்தையனுடைய அன்பு பொய்யன்று; அவன் தன்னை ஏமாற்றவில்லை; தனக்குத் துரோகம் செய்யவில்லை; வேறு எது எப்படிப் போனால் என்ன? இப்படி ஒரு நிமிஷம்; அடுத்த நிமிஷத்தில் தான் செய்த பயங்கரமான தவறு அவளுக்கு நினைவு வந்தது. "ஐயோ! பாவி! என்ன செய்து விட்டேன்? உன்னை அநியாயமாகச் சந்தேகித்து இப்படி விபரீதம் விளைத்து விட்டேனே? 'பெண் புத்தி' என்று உலகத்தார் இகழ்வது உண்மையாயிற்றே?" என்று கல்யாணி கதறினாள். வறண்டிருந்த அவள் கண்களிலிருந்து மறுபடியும் கண்ணீர் கலகலவென்று பொழிந்தது. முத்தையனுடைய ஜீவன் நிமிஷத்திற்கு நிமிஷம் மங்கிக் கொண்டிருந்தது. கல்யாணியின் முகத்தை அடங்காத ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு அவன் மிகவும் மெலிந்த குரலில் சொன்னான்: "எனக்கு அதனால் வருத்தமில்லை; சந்தோஷந்தான்! என்னிடம் உனக்குள்ள அளவற்ற அன்புதானே அப்படிச் செய்யத் தூண்டிற்று? - கல்யாணி! சிங்கப்பூருக்குப் போவது, அங்கே சௌக்கியமாயிருப்பது எல்லாம் நடக்காத காரியம் என்று என் மனத்தின் அந்தரங்கத்தில் ஒரு எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது. அது நிஜமாயிற்று. இந்த உலகத்தில் யார் யார் எனக்கு ரொம்பவும் பிரியமானவர்களோ அவர்களாலேயே என் வாழ்வு முடிந்தது. முதலில் அபிராமி, அப்புறம் கமலபதி, பிறகு நீ! உங்கள் மூவருடைய அன்புதான் நான் பிடிபடுவதற்குக் காரணமாயிற்று. இது எனக்கு கெடுதலாயிருக்குமா? ஒரு நாளும் இல்லை. இது தான் தகுந்த முடிவு..." முத்தையனுடைய குரல் இன்னும் மெலிவடைந்தது. அவனுடைய கண் விழிகள் மேலே சென்று மறைந்தன. ஆனால் இதழ்களில் புன்னகை மட்டும் மாறவில்லை. "கல்யாணி! எங்கே இருக்கிறாய்? அருகில் வா! ஒரு முக்கிய சமாசாரம் சொல்கிறேன்" என்றான். கல்யாணி, இடையில் சற்று விலகியிருந்தவள், மறுபடியும் நெருங்கி வந்து, முத்தையனுடைய முகத்துக்கு அருகில் தன் முகத்தை வைத்துக் கொண்டு "இதோ இருக்கிறேன், முத்தையா" என்றாள். "இதோ பார்! அபிராமிக்கு ஒரு ஏற்பாடு செய்து விட்டேன். கமலபதி அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான். இனிமேல் நம்முடைய கல்யாணத்துக்கு யாதொரு தடையும் கிடையாது. உனக்குச் சம்மதந்தானே?" என்று முத்தையன் முணுமுணுத்தான். "சம்மதம், சம்மதம்" என்றாள் கல்யாணி. "அப்படியானால், மேளத்தைப் பலமாக வாசிக்கச் சொல்லு. இதோ இப்போதே தாலி கட்டி விடுகிறேன்" என்று சொல்லி முத்தையன், இரத்தமிழந்து பலஹீனமடைந்திருந்த தன் இரண்டு கைகளையும் எடுத்துக் கல்யாணியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். அப்போது கோயிலில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரிய மேளம் ஜாம் ஜாம் என்று முழங்கிற்று. ஆலாட்சிமணி "ஓம் ஓம்" என்று இசைத்தது. |