ஜமீன்தார் மகன் 1. முன்னுரை சிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள். இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படுகிறார்கள். மூன்றாவது கூறிய எழுத்தாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். கொஞ்சங்கூட எதிர்பாராத விதத்தில் எழுத்தாளன் ஆனவன். இன்றைய தினம் நான் 'வாடா மலர்' பிரசுராலயத்தின் தலைவனாக இருந்து, தமிழ் நாட்டுக்கு இணையில்லாத் தொண்டு செய்து, தமிழைக் கொன்று வருவதற்குப் பொறுப்பாளி யார் என்று கேட்டால், நிச்சயமாக நான் இல்லை. என் கைக்குள் அகப்படாத சந்தர்ப்பங்களின் மேலேயே அந்தப் பொறுப்பைச் சுமத்த வேண்டியவனாயிருக்கிறேன். இல்லையென்றால், முதன் முதலாக நான் பேனாவைக் கையில் பிடித்துக் கதை எழுதத் தொடங்கிய வேளையின் கூறு என்று சொல்ல வேண்டும்.
மலர்ந்து விழித்த அந்த நயனங்களிலேதான் என்னமாய் சக்தி இருந்ததோ, எனக்குத் தெரியாது. அந்த நயனங்களுக்குரியவளான நங்கையிடம் வேறு என்ன மந்திரம் இருந்ததோ, அதுவும் எனக்குத் தெரியாது. அவள் தன் கண்களின் தீட்சண்யமான பார்வையினால், என் உடைமை, உள்ளம், ஆவி எல்லாம் ஒருங்கே கவர்ந்து, என்னை அடிமை கொண்டு, சுய புத்தியுடன் இருந்த காலத்தில் நான் ஒரு நாளும் செய்யத் துணியாத காரியங்களையெல்லாம் செய்யப் பண்ணினாள் என்பது மட்டுந்தான் தெரியும். ஆம்; ஒருவிதக் கஷ்டமும் இன்றிச் சுயபுத்தியுடனே தாய் நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் இருக்கத்தான் இருந்தது. அதை நான் வேண்டுமென்று தவற விட்டதை நினைத்தால், விதியைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்வதற்கு முடியாமலிருக்கிறது. 2. ரங்கூன்
1941 ஆம் வருஷம் டிசம்பர் 23• உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அந்தத் தேதியை உங்களில் அநேகர் ஞாபகம் வைத்துக் கொள்வதற்குக் காரணம் இல்லாமலிருக்கலாம். ஆனால், நான் அந்தத் தேதியை ஒரு நாளும் மறக்க முடியாது. அன்றைய தினம் ரங்கூன் நகரில் இருக்க நேர்ந்த எவரும் அதைத் தங்கள் வாழ்நாள் உள்ள வரையில் மறக்க முடியாது. அன்று தான் முதன் முதலாக ரங்கூனில் ஜப்பான் விமானங்கள் குண்டு போட்டன. குண்டு விழுந்தபோது நான் என் காரியாலயத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அபாயச் சங்கு ஊதிச் சற்று நேரத்துக்கெல்லாம் 'விர்' என்று விமானங்கள் பறக்கும் சத்தம், 'ஒய்' என்று குண்டுகள் விழும் சத்தம், 'படார்' என்று அவை வெடிக்கும் சத்தம், கட்டிடங்கள் அதிரும் சத்தம், கண்ணாடிகள் உடையும் சத்தம் எல்லாம் கேட்டன. ஆனாலும், கட்டிடத்துக்குள் பத்திரமாயிருந்த நாங்கள் அவற்றையெல்லாம் அவ்வளவு பிரமாதமாக எண்ணவில்லை. அபாய நீக்கச் சங்கு ஒலித்து வெளியிலே வேடிக்கை பார்க்க வந்த பிறகு தான், விஷயம் எவ்வளவு பிரமாதமானது என்று தெரிந்தது. ரங்கூன் நகரில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். விளைந்த சேதத்தை ஒன்றுக்குப் பத்தாக மிகைப்படுத்திச் சொன்னார்கள். எல்லாம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. டல்ஹௌஸி தெருவில் வீடுகள் பற்றி எரிகிறதென்று கேள்விப்பட்டதும் எனக்கு வயிற்றிலேயே நெருப்புப் பிடித்துவிட்டது போலிருந்தது. ஏனெனில், அந்தத் தெருவும், கர்ஸான் தெருவும் சேரும் முனையில் ஒரு வீட்டு மச்சு அறையிலேதான் நான் வாசம் செய்தேன். என்னுடைய துணிமணிகள், கையிருப்புப் பணம் முதலிய சகல ஆஸ்திகளும் அந்த அறையிலேதான் இருந்தன. மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, கம்பெனியின் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்து விழுந்து கொண்டு சென்றேன். ஆனால் என்னுடைய வீடு எரியவில்லை. அதற்கு மாறாக, நான் சற்றும் எதிர்பாராத ஒரு காட்சி அங்கே தென்பட்டது. நான் குடியிருந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு சிறு காம்பவுண்டு உண்டு. அந்தக் காம்பவுண்டில் ஓரிடத்தில் இருபது முப்பது ஸோல்ஜர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். வாசல் கேட்டுக்கு அருகில் இரண்டு ஸோல்ஜர்கள் காவலுக்கு நின்றார்கள். மோட்டாரைச் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, வீட்டின் 'கேட்' அருகில் சென்றேன். காவல் ஸோல்ஜர்கள் வழி மறித்தார்கள். அது நான் குடியிருந்த வீடு என்றும், என் சாமான்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் சொன்னேன். நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. வீட்டுக்காரர்கள் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள் என்றும், என்னை உள்ளே விட முடியாது என்றும் சொன்னார்கள். அப்புறம் அங்கே எதற்காக ஸோல்ஜர்கள் நிற்கிறார்கள் என்று விசாரித்தேன். மத்தியானம் அங்கே ஒரு குண்டு விழுந்தது என்றும், அது பூமிக்குள்ளே வளை தோண்டிக் கொண்டு போய் புதைந்து கிடக்கிறதென்றும், அதை அபாயமில்லாமல் எடுத்து அப்புறப் படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும் அறிந்தேன். அவர்களுடன் விவகாரம் செய்வதில் பயனில்லை என்று திரும்பிப் போனேன். திரும்பி எங்கே போனேன். அது எனக்கே தெரியாது. கை போனபடி காரை விட்டுக் கொண்டு, ரங்கூன் நகரமெல்லாம் சுற்றினேன். அன்று ரங்கூன் நகரம் அளித்த கோரக் காட்சியை என் வாழ் நாள் உள்ள அளவும் என்னால் மறக்க முடியாது. வீதிகளிலெல்லாம் செத்த பிணங்கள், சாகப் போகிற பிணங்கள், அங்கங்கே தீப்பற்றி எரியும் காட்சி, நெருப்பணைக்கும் இயந்திரங்கள் அங்குமிங்கும் பறந்து விழுந்து ஓடுதல், ஜனங்களின் புலம்பல், ஸ்திரீகளின் ஓலம், குழந்தைகளின் அலறல். இத்தகைய கோரக் காட்சியைப் பார்த்து விட்டு சூரியாஸ்தமனம் ஆகி நன்றாய் இருட்டிய பிறகு மறுபடியும் என்னுடைய வீட்டுக்கே திரும்பிச் சென்றேன். வாசற்புறத்தில் மோட்டாரை ஒரு மூலையில் நிறுத்தி விட்டு, காம்பவுண்டு சுவரின் பின்பக்கமாகச் சென்றேன். நான் குடியிருந்த வீட்டிலிருந்து என்னுடைய சொந்த சாமான்களை எடுத்து வருவதற்குத் திருடனைப் போல் சுவர் ஏறிக் குதித்து இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் சென்று வீட்டின் பின்புறத்தை அடைந்தேன். சத்தம் செய்யாமல் உள்ளே புகுந்து மாடிப்படி வழியாக மேலே ஏறினேன். சாதாரணமாக மாடி அறையை நான் பூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. அன்றைக்கும் கதவைப் பூட்டவில்லை. "நல்லதாய்ப் போயிற்று" என்று எண்ணிக் கொண்டு கதவைத் திறந்தேன். திறந்ததும் மாடி அறைக்குள்ளே நான் கண்ட காட்சி விழித்துக் கொண்டிருக்கிறேனா, கனவு காண்கிறேனா என்ற சந்தேகத்தை எனக்கு உண்டாக்கி விட்டது. வியப்பினாலும் திகைப்பினாலும் என் தலை 'கிறுகிறு' வென்று சுற்ற ஆரம்பித்தது. அந்தக் காட்சி என்னவென்றால், அந்த மச்சு அறையின் பலகணியின் அருகில் ஓர் இளம்பெண் நின்று ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். காம்பவுண்டில் ஸோல்ஜர்கள் வைத்துக் கொண்டிருந்த டார்ச் லைட்டிலிருந்து வந்த மங்கிய வெளிச்சத்தில், அந்தப் பெண்ணின் முதுகுப் பக்கம் 'ஸில் ஹவுட்' படம் மாதிரி தெரிந்தது. அவள் யாராயிருக்கும்? ஜன சூன்யமான வீட்டில், இந்த நேரத்தில் தன்னந்தனியாக அவள் என்னுடைய அறையில் இருப்பது எப்படி? மனத்தில் துணிச்சலை வருவித்துக் கொண்டு, "யார் அங்கே?" என்று கேட்டேன். வெளியிலிருந்த ஸோல்ஜர்களுக்குக் கேட்கக் கூடாதென்று மெல்லிய கள்ளக் குரலில் பேசினேன். அந்த இடத்தில் அந்த வேளையில் என்னுடைய குரல் எனக்கே பயங்கரத்தை அளித்தது என்றால், அந்தப் பெண் அப்படியே பேயடித்தவள் போல் துள்ளித் திரும்பி என்னைப் பீதி நிறைந்த கண்ணால் பார்த்ததில் வியப்பு இல்லை அல்லவா? ஆனால் திரும்பிப் பார்த்த மறுகணத்தில் எங்கள் இருவருடைய பயமும் சந்தேகமும் நீங்கி, வியப்பு மட்டும் தான் பாக்கி நின்றது. என்னைப் பொருத்த வரையில் மனத்திற்குள்ளே ஒருவகையான ஆனந்த உணர்ச்சி உண்டாகவில்லையென்று சொல்ல முடியாது. "நீயா?" "நீங்களா?" அந்தப் பெண் இப்போது என் அறையில் இருட்டில் தன்னந்தனியாய் நிற்பதைக் கண்டதும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 3. கிழக்கு ரங்கூன்
என் வியப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு "இங்கே எப்படி வந்தாய்? எப்போது வந்தாய்?" என்று கேட்டேன். "நீங்கள்?" என்று அவள் திருப்பிக் கேட்டதில் பல கேள்விகள் தொனித்தன. சற்றுக் கோபத்துடன், "அப்படியா? உனக்கு அவசியம் தெரிய வேண்டுமா? இது என்னுடைய அறை! என் அறையிலிருந்து என் சாமான்களைத் திருடிக் கொண்டு போவதற்காக வந்தேன். கொல்லைப் புறச் சுவர் ஏறிக் குதித்து வந்தேன். வந்த வழியாகத்தான் திரும்பிப் போகப் போகிறேன்! உனக்கு இங்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாகத் தெரிகிறது. கவலைப்படாதே! இதோ போய் விடுகிறேன்" என்று சொல்லி, என் கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டேன். "ஐயோ! என்னையும் அழைத்துக் கொண்டு போங்கள். உங்களுக்குப் புண்ணியம் உண்டு!" என்று அவள் கூறிய போது, அவளுடைய நெஞ்சு 'பட் பட்' என்று அடித்துக் கொள்ளும் சத்தமே நான் கேட்கக் கூடியதாயிருந்தது. அவளிடம் நான் உடனே இரக்கம் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் அவளைக் கெஞ்சப் பண்ண வேண்டுமென்ற அசட்டு எண்ணத்தினால், "அதெல்லாம் முடியாது. புண்ணியமும் ஆச்சு, பாவமும் ஆச்சு! எனக்கு வேறே வேலை இல்லையா?" என்றேன். உடனே அந்தப் பெண், "அப்படியா சமாசாரம் இதோ நான் 'திருடன், திருடன்' என்று கூச்சல் போடுகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே, ஜன்னல் பக்கம் போனாள். நான் அவசரமாய்ச் சென்று அவளைக் குறுக்கே மறித்து, "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய கரங்களைப் பற்றினேன். மேலே போகாமல் அவளைத் தடுப்பதற்காகவே அவ்விதம் செய்தேன். அவளோ திருப்பி என் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "என்னை அழைத்துக் கொண்டு போவதாகச் சத்தியம் செய்து கொடுங்கள்; இல்லாவிட்டால் கூச்சல் போடுவேன்" என்றாள். அவளுடைய கைகளைத் தொட்ட அதே நிமிஷத்தில் நான் என் சுதந்திரத்தை அடியோடு இழந்து அவளுக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும், அவளுடைய சுண்டு விரலால் ஏவிய காரியங்களை எல்லாம் சிரசினால் செய்யக் கூடிய நிலையில் இருந்தேன் என்பதையும், நல்ல வேளையாக அவள் அறிந்து கொள்ளவில்லை. நானும் அவளுக்கு அச்சமயம் தெரியப்படுத்த விரும்பவில்லை. "ஆகட்டும் பயப்படாதே! உன் அப்பா, அம்மா?" என்று கேட்டேன். "அப்பா, அம்மாவா?" என்று அந்தப் பெண் பெருமூச்சு எறிந்தாள். மறுபடியும் "நல்ல அப்பா! நல்ல அம்மா!" என்று பல்லைக் கடித்துக் கொண்டாள். அழுகையும் ஆத்திரமுமாக அவள் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளிவந்தன. அன்று மத்தியானம் அந்தப் பெண் ஸ்நான அறையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஸைரன்' ஊதிற்றாம். அவசர அவசரமாக அவள் குளித்து முடிப்பதற்குள் 'டுடும்' 'டுடும்' என்று காது செவிடுபடும் சத்தம் கேட்டதுடன், வீடே அதிர்ந்ததாம். அந்த அதிர்ச்சியில் அவள் தடாலென்று தரையில் விழுந்தாளாம்! தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி விட்டாளாம். மூர்ச்சை தெளிந்து எழுந்து, உடை உடுத்திக் கொண்டு ஸ்நான அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வீட்டிலே ஒருவரும் இல்லையாம்; கொஞ்ச தூரத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி தென்பட்டதாம். அவள் வீட்ட்டுக்கு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்து வீடுகளில் அப்பா அம்மாவைப் பற்றி விசாரிக்கலாமென்று ஓடி ஓடிப் பார்த்தாளாம். சில வீடுகளில் ஒருவருமில்லையாம். சில வீடுகளில் சாமான்களை அவசரமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்களாம். இவளை கவனிப்பாரோ, இவளுடைய கேள்விக்குப் பதில் சொல்வாரோ யாரும் இல்லையாம்! கடைசியில் இந்த வீடு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே வந்தாளாம். வீட்டில் ஒருவரும் இல்லாமலிருக்கவே, மச்சு அறையில் யாராவது இருக்கலாமென்று மேலே ஏறினாளாம். அவள் மச்சு அறையில் இருக்கும் போது ஸோல்ஜர்கள் வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டார்களாம். பிறகு வெளியே வர பயப்பட்டுக் கொண்டு மச்சு அறையிலேயே ஒளிந்து கொண்டிருந்தாளாம். இதையெல்லாம் கேட்டபின் "உன் அப்பா அம்மாவுக்குத் தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் இந்த ஊரில் பலர் இருப்பார்களே? அவர்களுடைய விலாசங்கள் ஏதாவது உனக்குத் தெரியுமா? ஒருவேளை எந்தச் சிநேகிதர் வீட்டுக்காவது போயிருக்கலாமல்லவா?" என்று விசாரித்தேன். "போயிருக்கலாம்" என்று சொல்லி, கிழக்கு ரங்கூனில் இரண்டு மூன்று வீடுகளையும் அவள் சொன்னாள். உடனே, ஒரு முடிவுக்கு வந்தேன். என் கைப் பெட்டியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு அவளை இன்னொரு கையினால் பிடித்துக் கொண்டு கிளம்பினேன். மச்சிலிருந்து கீழே இறங்கி, வீட்டின் கொல்லைப் புறமாகச் சென்று, காம்பவுண்டுச் சுவரின் மேல் முதலில் அவளை ஏற்றி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொடுத்தேன். பிறகு நான் ஏறிக் குதித்து அவளையும் இறக்கி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்க் காரில் வைத்தேன். டிரைவர் ஆசனத்தில் நான் உட்கார்ந்ததும், அவள் காரின் பின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டில் உட்கார்ந்தாள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. அரைப் படிப்புப் படித்து நாணம் மடம் முதலிய ஸ்திரீகளுக்குரிய குணங்களைத் துறந்த பெண் அவள் அல்ல என்பதற்கும் அது அறிகுறியாயிருந்தது. அதிர்ஷ்டவசமாக, முதல் முதல் நான் காரைக் கொண்டு போய் நிறுத்திய வீட்டிலேயே அந்தப் பெண்ணின் அப்பா, அம்மா இருந்தார்கள். ராவ்சாகிப் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அவருடைய பெண் காரிலிருந்து இறங்கியதும், அவர் வரவேற்புக் கூறிய விதம் எனக்குத் திகைப்பை அளித்தது. "வந்துவிட்டாயா, வஸந்தி! வா!" என்றார். உடனே வீட்டுக்கு உட்புறம் பார்த்து "அடியே! தவித்துக் கொண்டிருந்தாயே, இதோ வஸந்தி வந்து விட்டாள்" என்றார். ஓர் அம்மாள் உள்ளிருந்து வாசற்படியண்டை வந்து, "வந்து சேர்ந்தாயாடி, அம்மா. ஏதோ பகவான் இருக்கிறார்!" என்றார். அந்தப் பெண் வீட்டுக்குள்ளே போனதும் அவளுடைய அப்பாவும் உள்ளே போய்க் கதவைப் படீரென்று சாத்தினார். பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தவனுக்கு ஒரு வார்த்தை வந்தனம் கூடச் சொல்லவில்லை! 4. மாந்தலே
ரங்கூனிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் யாரை வேணுமானாலும் விசாரித்துப் பாருங்கள். "ரங்கூனுக்குச் சமானமான நகரம் உலகத்திலேயே உண்டா?" என்று தான் கேட்பார்கள். அப்படிக் குதூகலத்துக்கும் கோலாகலத்துக்கும் பெயர் போனதாயிருந்த ரங்கூன் நகரம், மேற்படி டிசம்பர் 23• சம்பவத்துக்குப் பிறகு, சில தினங்களில் அடைந்த நிலைமையை எண்ணிப் பார்த்தால், இப்போது கூட எனக்கு என்னமோ செய்கிறது. ரங்கூனில் வசித்த இந்தியர்கள் எத்தனையோ பேர் தென்னிந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். கப்பல்களில் இடத்துக்கு ஏற்பட்டிருந்த கிராக்கியைச் சொல்ல முடியாது. எனினும் நான் முயன்றிருந்தால் டிக்கெட் வாங்கிக் கொண்டு கிளம்பியிருக்கலாம். பல காரணங்களினால் நான் கிளம்பவில்லை. முக்கியமான காரணம், நான் வேலை பார்த்த கம்பெனியின் இங்கிலீஷ் மானேஜர் அடிக்கடி, 'இந்தியர் எல்லாரும் பயந்தவர்கள்!' 'அபாயம் வந்ததும் ஓடிப் போய் விடுவார்கள்!' என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். நான் ஒருவனாவது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியே தீர்வது என்று உறுதி கொண்டிருந்தேன். 1942ஆம் வருஷம் பிறந்தது. ஜனவரி முடிந்து பிப்ரவரியில் பாதிக்கு மேல் ஆயிற்று. பர்மாவின் தென் முனையில் ஜப்பானியர் இறங்கி விட்டார்கள் என்றும் முன்னேறி வருகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. சிட்டாங் பாலத்துக்காக சண்டை தொடங்கிவிட்டதென்றும் தெரிகிறது. என் மனமும் சலனமடைந்தது. எவ்வளவுதான் நான் தைரியமாயிருந்தாலும் என் விருப்பத்துக்கு விரோதமாக இந்தியாவுக்குப் போக வேண்டி நேரலாமென்று தோன்றிற்று. இந்த நிலைமையில் கையில் எவ்வளவு பணம் சேகரித்துக் கொள்ளலாமோ, அவ்வளவும் சேகரித்துக் கொள்ள விரும்பினேன். சில மாதங்களுக்கு முன்னாலிருந்து பர்மாவில் மோட்டார் வண்டிக்கு அளவில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. சைனாக்காரர்கள் வந்து பர்மாவில் மோட்டார் வாங்கிக் கொண்டிருந்தது தான் காரணம். பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நல்ல லாபம் கிடைத்தது. நான் மோட்டார் கம்பெனியில் வேலையிலிருந்தபடியால், என் சொந்த ஹோதாவில் அந்த வியாபாரம் கொஞ்சம் செய்து கொண்டிருந்தேன். கடைசியாக, ரங்கூனில் குண்டு விழுந்த போது நான் வாங்கி வைத்திருந்த வண்டி விற்பனையாகாமல் என்னிடமே இருந்தது. அதை எப்படியாவது பணம் ஆக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ரங்கூனில் அதை விற்பதற்கு வழியில்லையாகையால் மாந்தலேக்குக் கொண்டு போய் விற்று விட எண்ணினேன். எனவே, கம்பெனி மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, பிப்ரவரி 18ந் தேதி மோட்டாரை நானே ஓட்டிக் கொண்டு பிரயாணமானேன். பெகு வழியாகச் சுமார் 360 மைல் பிரயாணம் செய்து மறுநாள் 18• தேதி மத்தியானம் மாந்தலேயை அடைந்தேன். மாந்தலேயின் பிரசித்தி பெற்ற கோட்டைச் சமீபத்தில் வந்ததும், வண்டியை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அபாயச் சங்கு ஒலித்தது. "இதென்ன கூத்து" என்று ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே, 'விர்' என்று சத்தம் வரவரப் பெரிதாகக் கேட்டது. விமானங்கள் என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில் பறந்து போயின. அடுத்த கணத்தில் 'டுடும்' 'டுடும்' என்ற பயங்கர வெடிச் சப்தங்கள் கேட்டன. சொல்ல முடியாத பீதியும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆவலும் என்னைப் பற்றிக் கொண்டன. காரிலேயே பாய்ந்து ஏறி, திக்குத் திசை பாராமல் அதிவேகமாக வண்டியை விட்டுக் கொண்டு சென்றேன். அந்தச் சமயத்தில் அந்தப் பாழும் மோட்டார் எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, டடடட டடடட என்று அடித்துக் கொண்டு நின்று போய் விட்டது. வண்டி நின்று போய் விட்ட இடத்துக்குப் பக்கத்திலே ஒரு தபால் ஆபீஸைப் பார்த்தேன். அதற்குள் புகுந்து கொள்ளலாமென்று ஓடினேன். உள்ளேயிருந்த பர்மியப் போஸ்டு மாஸ்டர் படாரென்று கதவைச் சாத்தித் தாளிட்டார். ஜன்னல் வழியாக அவரைத் திட்டினேன். அவர் பர்மியப் பாஷையில் திருப்பித் திட்டினார். வேறு வழியின்றிப் போஸ்டாபீஸ் வாசல் முகப்பிலேயே பீதியுடன் நின்று கொண்டிருந்தேன். அந்த பிப்ரவரி மாதம் 19• இந்த யுத்தத்திலேயே ஒரு விசேஷமான தினம் என்று பிற்பாடு எனக்குத் தெரிந்தது. இந்தியாவுக்கு வந்திருந்த சீனத் தலைவர் சியாங் - காய்ஷேக் திரும்பிச் சீனா போகையில், அன்று மாந்தலேயில் இறங்கினார். கோட்டையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவருக்கு விருந்து அளித்தார்கள். அதைத் தெரிந்து கொண்டுதான், ஜப்பான் விமானங்கள் அன்றைக்கு வந்து கோட்டையில் குண்டு போட்டன. ஆனால் அதிர்ஷ்டம் சீனாவின் பக்கம் இருந்தபடியால், ஜப்பான் விமானங்கள் ஒரு மணி நேரம் பிந்தி விட்டன! இந்த விவரம் ஒன்றும் அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ள விரும்பவும் இல்லை. அப்போது ஒரே ஓர் எண்ணம், ஒரே ஓர் ஆசை, என் உள்ளம், உடம்பு எல்லாவற்றிலும் புகுந்து கவிந்து கொண்டிருந்தது! அது தாய் நாட்டுக்குச் சென்று, என் வயது முதிர்ந்த தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அபாய நீக்கச் சங்கு ஊதியதும், வண்டியை ரிப்பேர் செய்து கிளம்பிக் கொண்டு எந்தச் சினேகிதர் மூலமாக வண்டியை விற்க நினைத்தேனோ, அவர் வீட்டை அடைந்தேன். வீட்டில் நண்பர் இல்லை. அவர் மனைவியிடம் வண்டியை ஒப்படைத்து, நண்பர் திரும்பி வந்ததும் கிடைத்த விலைக்கு விற்றுப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு, அன்று மாலை மாந்தலேயிலிருந்து ரங்கூனுக்குக் கிளம்பும் ரயிலில் கிளம்பினேன். சாதாரணமாக, மாலையில் மாந்தலேயில் கிளம்பும் ரயில், மறுநாள் காலையில் ரங்கூன் போய்ச் சேருவது வழக்கம். வழியிலே 'பின்மானா' என்னும் ரயில்வே ஸ்டேஷன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், அந்தத் தீயின் கோரமான வெளிச்சத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தனி மனிதராக நின்று கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாலும் எனக்கு மயிர்க் கூச்சல் உண்டாகிறது. கடைசியாக 20• சாயங்காலம் ரயில் ரங்கூன் ஸ்டேஷனை அடைந்தது. ஸ்டேஷனை ரயில் நெருங்கும்போதே, அங்கு ஏதோ அல்லோலகல்லோலமாயிருக்கிறதென்று தெரிந்து விட்டது. ரங்கூன் ஸ்டேஷனில் எத்தனை ரயில் பாதைகள் உண்டோ அவ்வளவு பாதைகளிலும் ரயில்கள் புறப்படத் தயாராய் நின்றன. எல்லா ரயில் என்ஜின்களும் மாந்தலேயே நோக்கியிருந்தன. ரயில்களில் கூட்டத்தைச் சொல்ல முடியாது. பிளாட்பாரத்திலோ இறங்குவதே அசாத்தியமாயிருந்தது. எப்படியோ இறங்கியவுடன், எனக்குத் தெரிந்த ஆசாமி யாராவது உண்டா என்று பார்த்தேன், என் கம்பெனியைச் சேர்ந்த ராமபத்திர ஐயர் தென்பட்டார். அவரைப் பிடித்து 'இது என்ன கோலாகலம்?' என்றேன். அவர் சொன்னார். "ரங்கூனை, 'எவாகுவேட்' பண்ணும்படி சர்க்கார் உத்திரவு பிறந்து விட்டது! சிறைச்சாலைகளையும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளையும் திறந்து விட்டு விட்டார்கள். மிருகக் காட்சிச் சாலையில் துஷ்ட மிருகங்களைக் கொன்று விட்டார்கள். குரங்குகளை அவிழ்த்து விட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட சமயம் பார்த்து நீ திரும்பி வந்திருக்கிறாயே?" என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்! 5. பக்கோக்கூ
அன்றிரவே சென்று கப்பலுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்கும்படி உத்தியோகஸ்தரைச் சந்தித்தேன். அவர் "அப்பனே! டிக்கெட் என்னமோ வாங்கித் தருகிறேன். ஆனால், டிக்கெட் வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உனக்கு முன்னால் கப்பலுக்கு டிக்கெட் வாங்கிய எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்களே?" என்றார். பிறகு அவர், "நாளைக்கு நானே காரில் மாந்தலேக்குப் புறப்படுகிறேன். நாலு பேர் போகிறோம். நீயும் வந்தாயானால், உன்னையும் அழைத்துப் போகிறேன்" என்றார். 'பெகு' மார்க்கம் அபாயமாகி விட்டபடியால் 'புரோமி' வழியாகப் பிரயாணஞ் செய்தோம்! இந்தப் பிரயாணத்தால் நேர்ந்த எத்தனையோ அனுபவங்களைப் பற்றி நான் இங்கே விஸ்தரிக்கப் போவதில்லை. 21• ரங்கூனில் கிளம்பியவர்கள் 24• மாந்தலே போய்ச் சேர்ந்தோம் என்று மட்டும் குறிப்பிடுகிறேன். இவ்வளவு சிரமப்பட்டு மீண்டும் மாந்தலேயே அடைந்த பிறகு, அங்கே மற்றோர் ஏமாற்றம் எனக்குக் காத்துக் கொண்டிருந்தது. மாந்தலேயிலிருந்து 'கலாவா' போகும் ரயிலுக்கு டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். மறுபடியும் எப்போது கொடுக்க ஆரம்பிப்பார்கள் என்று தெரியவில்லை. டிக்கெட் கிடைக்காமற் போனதில் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும், துக்கத்தையும் சொல்லவே முடியாது. ஆனால், இப்போது நினைத்துக் கொண்டால் பகவானுடைய கருணை எப்படியெல்லாம் இயங்குகிறது என்று ஆச்சரியக் கடலில் மூழ்கிவிடுகிறேன். முன் தடவை மோட்டாரை ஒப்புவித்து விட்டு வந்த நண்பரைச் சந்தித்தேன். நல்லவேளையாக அவர் வண்டியை விற்றிருந்தார். ஆயிரத்து நூறு ரூபாயும் கொடுத்தார். இந்தப் பணத்தைக் கடவுளே கொடுத்ததாகப் பின்னால் நான் கருதும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதே நண்பர்தான் இன்னொரு யோசனையும் சொன்னார். மாந்தலேயில் ரயிலுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், 'பக்கோக்கூ'வுக்குப் போய் அங்கிருந்து 'டம்மு' வரையில் போகும் மோட்டார் லாரிகளில் போகலாம் என்றார். 'பக்கோக்கூ' என்னும் ஊர் மாந்தலேக்குக் கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஐராவதிக்கு அக்கரையில் இருக்கிறது. அங்கே போய்ச் சேர்ந்து விசாரித்தேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அங்கும் என்னைத் தொடர்ந்து வந்ததாகத் தோன்றியது. ஏனெனில், மறுநாள் காலையில் அங்கிருந்து நாலு லாரிகள் 'டம்மு'வுக்குக் கிளம்புவதாகவும், ஆனால் அவற்றில் ஒன்றிலும் கூட இடம் இல்லை என்றும் தெரிந்தது. லாரிகளின் சொந்தக்காரனான பஞ்சாபியிடம் நேரில் போய் எனக்கு மோட்டார் வேலை தெரியும் என்றும் வழியில் உபயோகமாயிருப்பேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். 'இடமில்லை' என்ற ஒரே பதில் தான் வந்தது. அன்றிரவு நடுநிசிக்கு அதே பஞ்சாபிக்காரன் என்னைத் தேடிக் கொண்டு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான். எனக்கு மோட்டார் வண்டி நன்றாய் ஓட்டத் தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன். அவன் ஏற்படுத்தியிருந்த டிரைவர்களில் ஒருவன் வராமல் ஏமாற்றி விட்டபடியால் அவன் என்னைத் தேடி வந்தான் என்று தெரிந்தது. "டம்மு வரையில் லாரி ஓட்டிக் கொண்டு போய் சேர்த்தால் 200 ரூபாய் தருகிறேன்" என்றான் அந்தப் பஞ்சாபி. சற்று முன்னால் தான் அவனிடம் நான் மேற்படி பிரயாணத்துக்கு 200 ரூபாய் தருவதாகச் சொன்னேன். இப்போது அதே பிரயாணத்துக்கு அந்த ரூபாய் எனக்குக் கிடைப்பதாயிருந்தது. ஆனால், மோட்டார் லாரி ஓட்டுவதிலும் எனக்குக் கௌரவம் இருக்க வேண்டும் என்று எண்ணி, "எனக்கு உன் ரூபாய் வேண்டாம்; பிரயாணத்தின் போது எனக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தால் போதும்" என்றேன். மறுநாள் காலையில் லாரிகள் நின்ற இடம் போனேன். பிரமாண்டமான லாரிகள் நாலு நின்று கொண்டிருந்தன. ரொம்ப ரொம்ப அடிபட்டுப் பழசாய்ப் போன லாரிகள். அவற்றில் நான் ஓட்ட வேண்டிய வண்டியைச் சுற்றுமுற்றும் வந்து பார்த்தேன். இந்த லாரிப் பூதத்தைக் காட்டு மலைப் பாதையில் 300 மைல் ஓட்ட வேண்டும் என்று நினைத்த போது பகீர் என்றது. பிறகு, லாரிகளில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தேன். வங்காளிகள், பஞ்சாபிகள், ஆந்திரர்கள், தமிழர்கள் முதலிய பல மாகாணத்தவர்களும் இருந்தார்கள். அப்படி நின்றவர்களுக்கு மத்தியில், சென்ற இரண்டு மாதமாக நான் கனவிலும் நனவிலும் தியானித்துக் கொண்டிருந்த பெண் தெய்வமும் நின்று கொண்டிருந்தது. அவளுடைய பெற்றோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அப்புறம் வண்டி கிளம்புகிற வரையில் லாரியின் என்ஜினுக்குப் போட்டியாக என் நெஞ்சம் அடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னுடைய வண்டியில் ஏறுவார்களா, வேறு வண்டியில் ஏறுவார்களா என்று தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிதுடித்தது. ஒரு வேளை ராவ்சாகிப் என்னைத் தெரிந்து கொண்டால் வேண்டுமென்றே வேறு வண்டியில் ஏறினாலும் ஏறுவார் என்று, கூடிய வரையில் அவர்கள் பக்கம் பார்க்காமலே இருந்தேன். ஆயினும் இரண்டொரு தடவை பார்த்த போது அவளும் என்னைத் தெரிந்து கொண்டாள் என்றும் அவளுடைய நெஞ்சும் ஆவலினால் துடிதுடித்துக் கொண்டிருந்தது என்றும் அறிந்தேன். கடவுள் என் பக்கத்திலே இருக்கிறார் என்றும் விரைவிலேயே தெரிந்து விட்டது. அவர்கள் என்னுடைய லாரியில் தான் ஏறினார்கள்! வண்டிகள் கிளம்ப வேண்டிய சமயம் வந்ததும், நான் டிரைவர் பீடத்திலிருந்து இறங்கிச் சென்று, வண்டிக்குள்ளே பார்த்து, "எல்லோரும் ஏறியாயிற்றா?" என்றேன். பிறகு அந்த மனுஷரின் முகத்தை உற்றுப் பார்த்து, "குட்மார்னிங் ஸார்! சௌக்கியமா?" என்று கேட்டுவிட்டுச் சட்டென்று திரும்பிப் போய் என் பீடத்தில் உட்கார்ந்தேன். அப்போது வஸந்தியின் முகத்தில் நாணங்கலந்த புன்னகை மலர்ந்ததையும், கீழே நோக்கியபடி கடைக்கண் பாணம் ஒன்றை என்மீது எறிந்ததையும் சொல்லாமல் விட முடியவில்லை. 6. கங்கோ
பர்மா தேசப் படத்தைப் பார்த்தால் ரங்கூனிலிருந்து ஏறக்குறைய நேர் வடக்கே, பர்மாவின் நடுமத்தியில் ஐராவதி நதிக்கரையில் பக்கோக்கூ என்னும் ஊர் இருப்பதைக் காணலாம். பக்கோக்கூவிலிருந்து மீண்டும் ஏறக்குறைய நேர் வடக்கே 360 மைல் அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளின் வழியாகச் சென்றால் அஸ்ஸாமிலுள்ள மணிப்பூர் எல்லையை அடையலாம். வழியில் உள்ள முக்கியமான ஊர்கள் 'கங்கோ', 'கலன்மியோ', 'டம்மு' 'மீந்தா' என்பவை. பக்கோக்கூவிலிருந்து நாங்கள் புறப்பட்ட பத்தாவது நாள் 210 மைல் பிரயாணம் செய்து கலன்மியோ என்னும் இடத்தை அடைந்தோம். சாதாரண சாலையில் எவ்வளவு மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் லாரி ஓட்டினாலும் பத்து மணி நேரத்தில் அவ்வளவு தூரம் போயிருக்கலாம். எங்களுக்குப் பத்து நாள் ஆயிற்று என்பதிலிருந்து நாங்கள் பிரயானம் செய்த பாதை எவ்வளவு லட்சணமாயிருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். உண்மையில் அதைப் பாதை என்றே சொல்வதற்கில்லை. காட்டிலும் மலையிலும் எங்கே இடம் கிடைத்ததோ அந்த வழியாகவெல்லாம் லாரியைச் செலுத்திக் கொண்டு போனோம். எங்களுக்கு முன்னால் போயிருந்த லாரிகளின் சுவடுதான் எங்களுக்குப் பாதையாயிற்று. முன்னால் போனவர்கள் ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டிக் கொஞ்சம் இடைவெளியும் உண்டு பண்ணியிருந்தார்கள். அது தான் பாதையென்று மரியாதைக்குச் சொல்லப்பட்டது. செங்குத்தான மேட்டிலும் கிடுகிடு பள்ளத்திலும் லாரி ஏறி இறங்கும் போதெல்லாம் உயிர் போய் விட்டுத் திரும்பி வருவது போலத் தோன்றும். இப்படியாகக் காட்டு மலைப் பாதையில் முட்டி மோதிக் கொண்டு, இடித்துப் புடைத்துக் கொண்டு, எலும்பெல்லாம் நொறுக்கும்படியாக அலைப்புண்டு, அடியுண்டு, உயிருக்கு மன்றாடிக் கொண்டு, பிரயாணம் செய்த பத்து தினங்கள் தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாட்கள் ஆயின. அவையே என் வாழ்க்கையின் ஆனந்தம் மிகுந்த நாட்களாகவும் ஆயின. அந்த வண்டியில் வஸந்தியும் வருகிறாள் என்ற எண்ணமே, பிரயாணத்தின் அசௌகரியங்களையெல்லாம் மறக்கச் செய்யும்படியான அளவற்ற உற்சாகத்தை எனக்கு அளித்தது. அந்தப் பத்து தினங்களிலும் எங்களுக்குள் ஓயாமல் சம்பாஷணை நடந்து கொண்டேயிருந்தது. எங்களுடைய கண்கள் அடிக்கடி பேசிக் கொண்டன. வாய் வார்த்தையினாலும் சில சமயம் நாங்கள் பேசிக் கொண்டோம். அந்தப் புதுமை உணர்ச்சியினாலும், இருதயக் கிளர்ச்சியினாலும் ஏற்பட்ட உற்சாகத்தில், நான் ஓர் எழுத்தாளனாகக் கூட ஆகிவிட்டேன் என்பதை இந்தக் கதையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அந்த அற்புத சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு இதுதான்: அச்சமயம் காட்டு மரங்களின் அடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான், எங்களுக்குள் ஒவ்வொரு வரும் தத்தம் கதையைச் சொல்ல வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. "எங்களுக்குள்" என்னும் போது அந்த நாலு மோட்டார் லாரிகளிலும் வந்த தமிழ் நாட்டார்களைத்தான் சொல்கிறேன். அப்படித் தமிழர்களாக நாங்கள் மொத்தம் 15 பேர் இருந்தோம். தினந்தோறும் சாப்பிடுவதற்காகவோ இளைப்பாறுவதற்காகவோ, இரவில் தூங்குவ்தற்காகவோ எங்கே தங்கினாலும், நாங்கள் ஓரிடத்தில் சேர்வது வழக்கமாயிருந்தது. எனக்கு உணவளிக்கும் பொறுப்பை லாரி சொந்தக்காரன் ஏற்றுக் கொண்டிருந்தபடியால், இது விஷயத்தில் மற்றவர்களை விட எனக்குக் கிடைத்த ரொட்டி, பிஸ்கோத்து முதலியவைகளை மற்றவர்களுடன் சில சமயம் நான் பகிர்ந்து கொண்டேன். பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று நான் தான் யோசனை கூறினேன். அவர்களும் கதை சொல்லிக் கொண்டிருக்கையில், நானும் வஸந்தியும் எங்களுடைய அந்தரங்க நினைவுகளையும் எதிர்கால கனவுகளையும் வார்த்தை தேவையில்லாத இருதய பாஷையில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருக்கலாமல்லவா? என்னுடைய யோசனையை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு முதன் முதலில் சுயசரிதையைச் சொல்ல ஆரம்பித்தவர் ராவ்சாகிப் தான். அப்பப்பா! அந்த மனுஷர் பீற்றிக் கொண்ட பீற்றலையும், அடித்துக் கொண்ட பெருமையையும் சொல்லி முடியாது. அவ்வளவு சொத்துக்களை வாங்கினாராம்! அவ்வளவு ஸோபாக்களும் பீரோக்களும் அவர் வீட்டில் இருந்தனவாம். அவ்வளவு டின்னர் பார்ட்டிகள் கொடுத்திருக்கிறாராம். கவர்னருடன் அவ்வளவு தடவை கை குலுக்கியிருக்கிறாராம். என்ன பீற்றிக் கொண்டு என்ன? என்ன பெருமை அடித்துக் கொண்டு என்ன? ஆசாமி இப்போது பாப்பர்! அவருடைய அவ்வளவு சொத்துக்களும் பர்மாவிலேயே இருந்தபடியால், சர்வமும் கயா! பழைய கதையைச் சொல்லி விட்டு, வருங்காலத்தில் அவருடைய உத்தேசங்களையும் ஒருவாறு வெளியிட்டார். இந்தியாவுக்குப் போனதும், அவர் இன்ஷியூரன்ஸ் வேலையை மேற்கொள்ளப் போகிறாராம். அவருடைய பெண்ணை ஒரு பெரிய பணக்காரனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறாராம். சாதி வேற்றுமை கூட அவர் பார்க்கப் போவதில்லையாம்! எவனொருவன் கலியாணத்தன்று லட்ச ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்கிறானோ, அவனுக்குக் கொடுத்து விடுவாராம்! இந்தப் பேராசை பிடித்த தற்பெருமைக்கார மனிதர், ஒரு வேளை எங்களுடன் வந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரை மனத்தில் வைத்துக் கொண்டு தான் மேற்கண்டபடி சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது. ராவ்சாகிப்புக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் அப்போது நான் வெறுத்த மனுஷர் ஒருவர் உண்டு என்றால், அவர் இந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார் தான். உலகத்திலே பல விஷயங்களைப் பற்றியும் என்னுடைய கொள்கைகளையும் அபிப்ராயங்களையும் தெரிந்து கொள்வதில் இந்த மனுஷர் கொண்டிருந்த பெருந் தாகம் சமுத்திரத்துக்குச் சமமாக இருந்தது. இந்த தாகத்தைத் தணித்துக் கொள்ள அவர் சமயா சமயம் தெரியாமல், சந்தர்ப்பா சந்தர்ப்பம் பார்க்காமல், எனக்கு அளித்த தொந்தரவை நினைத்தால், அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்திருந்தும் கூட இன்னமும் என் கோபம் தணிந்தபாடில்லை. நானும் வஸந்தியும் மரத்தடியில் தனியா உட்கார்ந்து இரண்டு நிமிஷம் அந்தரங்கமாகப் பேச நினைத்தோமானால், இந்த மனுஷருக்கு மூக்கிலே வியர்த்துவிடும்! எங்கள் இரண்டு பேருக்கும் நடுவிலே சம்பாஷிக்க வந்து உட்கார்ந்து கொண்டு, "ஏன் ஸார்! இன்ஷியூரன்ஸைப் பற்றி உங்களுடைய கொள்கை என்ன?" என்று கேட்டார். "இன்ஷியூரன்ஸ் என்பது மகா முட்டாள்தனம். இன்ஷியூரன்ஸ் செய்து கொள்கிறவர்களுக்கு ஈரேழு பிறவியிலும் நரகம் தான் கிடைக்கும்" என்று நான் சொன்னேன். "அதனால் தான் கேட்டேன்! இருக்கட்டும், பாரதியாரைப் பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன?" என்று கேட்டார். "கூடியவரையில் நல்ல அபிப்ராயம் தான்" என்றேன். "பாரதியார் தேசிய கவியா? மகா கவியா?" என்று வினவினார். "அவரைத் தான் கேட்க வேண்டும்!" என்றேன். "ரொம்ப சரி. காதல் மணத்தைப் பற்றி உங்கள் கொள்கை என்ன?" என்று கேட்டார் செட்டியார். காதல் மணம் ரொம்ப ரொம்ப அவசியமானது. அதைப் போல அவசியமானது ஒன்றுங் கிடையாது. காதல் மணத்துக்குத் தடை செய்கிறவர்களைப் போன்ற மகாபாவிகள் வேறு யாரும் இல்லை" என்றேன். "என் அபிப்ராயமும் அதுதான்" என்று சொல்லி விட்டு செட்டியார் எழுந்திருப்பதற்குள், ராவ்சாகிப்பும் வந்து தொலைந்து விட்டார். இந்த சி.த.ப.வுக்கும் பர்மாவில் இருந்த திரண்ட சொத்தெல்லாம் போய் விட்டது. அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யவில்லை. "இந்தியாவிலே எனக்கு வேண்டிய சொத்து இருக்கிறது" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவிலுள்ள சொத்தும் இவர் அங்கே போவதற்குள் தொலைந்து போய்விடக் கூடாதா என்று நான் வேண்டிக் கொண்டேன். நாங்கள் புறப்பட்டு எட்டு நாளைக்குள், எங்களில் பத்துப் பேர் தங்கள் வரலாற்றைச் சொல்லியாகி விட்டது. நானும், வேல்முருகதாஸரென்னும் சுமார் அறுபது வயதுள்ள கிழவருந்தான் பாக்கி. இந்த தாஸர் ரங்கூனில் ரொட்டிக் கடை வைத்திருந்தாராம். அதிகமாக வாய் திறந்து இவர் பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்பார். என்னுடைய கதை மிகவும் சோகமான கதையாதலால் என்னால் அதைச் சொல்ல முடியாதென்றும், எழுதி வேணுமானால் படிக்கிறேன் என்றும் சொன்னேன். அவ்விதமே கதையை எழுதி அதைக் 'கங்கோ' என்னும் ஊரில், அதே பெயருடைய சிற்றாற்றங்கரையில் நாங்கள் தங்கியிருந்தபோது படித்தேன். அளவில்லாத உணர்ச்சியும் வேகமும் வாய்ந்த நடையிலேதான் எழுதியிருந்தேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையே அந்த வரலாற்றைப் பொருத்தது என்ற உணர்ச்சியுடனே எழுதினேன். துரதிருஷ்டவசமாக அதைப் படித்துக் காட்டிய பிறகு, கிழித்துக் காங்கோ ஆற்றில் போட்டு விட்டேன். எனவே, நான் எழுதியிருந்ததன் சாராம்சத்தை மட்டும் இங்கே தருகிறேன். "தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் வேங்கைப்பட்டி ஜமீன் ரொம்பவும் பிரசித்தமானது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால், அந்த ஜமீனுக்குக் கடன் முண்டிப் போய் சர்க்கார் கோர்ட் ஆப் வார்ட்ஸில் எடுத்துக் கொண்டு விட்டார்கள். இதனால் மிக்க அவமானம் அடைந்த ஜமீன்தார் தம் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தேசாந்திரம் போய்விட்டார். அப்போது அவருக்கு எட்டு வயதுள்ள மகன் ஒருவன் இருந்தான். அந்த மகன் பெரியவனாகித் தகப்பனை அவன் மன்னித்து விட்டதாகவும் கோர்ட் ஆப் வார்ட்ஸிலிருந்து ஜமீன் திரும்பி வந்துவிட்டதாகவும் தெரிந்த பிறகுதான், தாம் மீண்டும் ஊருக்கு வரப் போவதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தது. இதை நான் படிக்கக் கேட்டு வந்தவர்கள் எல்லாரும் ஒரேயடியாக ஆச்சரியக் கடலில் மூழ்கித்தான் போனார்கள். ஆனால் இதுவரை வாய் திறவாத மௌனியாக இருந்து வந்த ரொட்டிக் கிடங்கு வேல்முருகதாஸருடைய நடத்தை தான் எனக்கு மிகுந்த வியப்பை அளித்து வந்தது. அவர் நான் கதையைப் படித்து வருகையிலேயே சில சமயம் விம்மியதுடன், கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டு வந்தார். நான் கதையை வாசித்து முடித்ததும், அவர் எழுந்து ஓடி வந்து, "என் மகனே!" என்று என்னைக் கட்டிக் கொண்டு தரையிலே விழுந்து மூர்ச்சையானார். 7. டம்மு
நான் என் அருமைத் தந்தையைக் கண்டுபிடித்த, அதாவது என் அருமைத் தந்தை என்னைக் கண்டுபிடித்த - மேற்படி அற்புத சம்பவம், பக்கோக்கூவிலிருந்து நாங்கள் கிளம்பிய எட்டாவது நாள் நடந்தது. அதற்கடுத்த எட்டாவது நாள் 'டம்மு' என்னும் ஊரில் எங்கள் லாரிப் பிரயாணம் முடிவடைந்தது. இந்த எட்டு நாளும் என்னுடைய வாழ்க்கையில் சுப தினங்களாகும். இந்த தினங்களில் என் தந்தைக்கு நான் செய்த பணிவிடைக்கு ஈடாகச் சொல்வதற்குக் கதைகளிலும் காவியங்களிலும் கூட உதாரணம் இல்லையென்று சொல்ல வேண்டும். பல வருஷ காலத்தில் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் அந்த ஏழு நாளில் நான் செய்து விட்டேன். இந்தத் தினங்களில் வஸந்தியைக் கூட நான் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அவளுடைய மனோபாவத்திலும் அவளுடைய தந்தையின் மனோபாவத்திலும் ஏற்பட்ட மாறுதல்களை மட்டும் கவனித்து வந்தேன். அன்று முதல் ராவ்சாகிப்புக்கு என்னிடம் அபாரமான அபிமானமும் மரியாதையும் ஏற்பட்டு விட்டன. என் தந்தையிடம் நான் காட்டிய பக்தியை அவர் பெரிதும் பாராட்டினார். வஸந்தி முதலில் இரண்டு மூன்று நாள் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவளும் பழையபடி ஆகி வந்தாள். டம்முவில் சர்க்கார் 'எவாக்குவேஷன்' விடுதிகள் இரண்டு இருந்தன; ஒன்று இந்தியர்களுக்கு, மற்றொன்று வெள்ளைக்காரர்களுக்கு. அது போலவே டம்முவிலிருந்து இந்தியா போவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று இந்தியர்களுக்கு, இன்னொன்று வெள்ளைக்காரர்களுக்கு. கடவுள் வெள்ளைக்காரர்களையும் கறுப்பு மனிதர்களையும் தனித்தனி நிறத்தோடு படைத்ததுமல்லாமல், அவர்கள் பர்மாவிலிருந்து இந்தியா போவதற்குத் தனித்தனிப் பாதைகளையும் படைத்திருந்த அதிசயத்தை எண்ணி எண்ணி வியந்தேன். இரண்டு பாதைகளையும் பற்றிய விவரங்களைக் கேட்ட பிறகு, மேலெல்லாம் சுண்ணாம்பைப் பூசிக் கொண்டு நானும் வெள்ளைக்காரனாக மாறி விடலாமா என்று யோசித்தேன். ஆனால், அதற்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று பன்னிரண்டு வருஷப் பிரிவுக்குப் பிறகு கடவுளின் அற்புதத்தினால் எனக்குக் கிடைத்த என் தந்தை; இன்னொரு தடை வஸந்தி. இவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் இந்தியப் பாதையிலேயே கிளம்பினேன். டம்முவிலிருந்து இந்தியாவுக்குக் கிளம்புகிறவர்களுக்கு, குடும்பஸ்தர்களாயிருந்தால் அரிசி, பருப்பும், என்னைப் போன்ற தனி ஆள்களாயிருந்தால், அவலும் வழியில் சாபாட்டுக்காகக் கொடுக்கும்படி, சர்க்காரிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப்படியே நாங்களும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். டம்முவிலிருந்து பதினெட்டு மைலிலுள்ள 'மீந்தா' வரையில் சமவெளிப் பாதையாகையால் சுலபமாகப் போய் விடலாம். அதற்குப் பிறகு, 56 மைல் மலைப் பாதையில் சென்று, மணிப்புரி சமஸ்தானத்து எல்லையிலுள்ள லம்டி பஜார் அடைய வேண்டும். இந்த வழியில் சாமான் தூக்கிக் கொண்டு போவதற்கு ஆளுக்குப் பத்து ரூபாய் கூலி என்று சர்க்கார் விகிதம் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், உண்மையில் இருபது ரூபாய்க்குக் கூடக் கூலி ஆள் கிடைப்பது துர்லபமாயிருந்தது. ராவ்சாகிப் சந்தாகூலி விகிதத்தில் பேரம் பேச முயன்றதினால், ஆள் கிடைப்பது இன்னும் கஷ்டமாய் போயிற்று. கடைசியில், நாங்கள் டம்முவை அடைந்த மூன்றாம் நாள் காலை, தென்னிந்தியர்கள் சுமார் இருபத்தைந்து பேர் அடங்கிய கோஷ்டியார், ஜன்மதேசம் போவதற்காகக் கால்நடையாகக் கிளம்பினோம். ராவ்சாகிப் கையிலே ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டும், அவ்வப்போது அதைச் சுழற்றி வீசிக் கொண்டும், எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்த காட்சியை, இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பாக வருகிறது. வழியில் சில இடங்களில் பர்மியர்கள் பிரயாணிகளை கொள்ளை அடிக்க வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருந்தபடியால், ராவ்சாகிப் அப்படிக் கையில் கத்தி எடுத்துக் கொண்டு வந்திருந்தார். 'கத்தியை வைத்துக் கொண்டு ஏன் எல்லோருக்கும் பின்னால் வருகிறீர்கள்?' என்று நான் கேட்டதற்கு, "அப்பனே! உனக்குத் தெரியாது, பர்மியர்கள் ஒருவேளை தாக்க வந்தால், பின்பக்கமாக வந்து தான் தாக்குவார்கள்" என்று ராவ்சாகிப் சாதுர்யமாகப் பதில் கூறினார். 8. லம்டி பஜார்
டம்முவிலிருந்து கிளம்பிய ஏழாவது தினம் பர்மாவில் என்னுடைய கடைசியான கால்நடை யாத்திரை மணிப்பூர் சமஸ்தானத்தில் லம்டி பஜார் என்னும் இடத்தில் முடிவுற்றது. டம்முவில் கிளம்பும் போது இருபத்தைந்து பேரில் ஒருவனாகக் கிளம்பிய நான், லம்டி பஜாருக்கு வந்து போது மூன்று பேரில் ஒருவனாக இருந்தேன். எங்கள் கோஷ்டியில் பலர் முன்னால் போய்விட்டார்கள். சிலர் பின்னாலும் தங்கி விட்டார்கள். நாங்கள் மூன்று பேர் மிஞ்சியவர்கள் யார் யார் என்றால், நானும் வஸந்தியும் சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாருந்தான். அந்த மனுஷர் எங்களை விட்டு நகர்வதில்லை என்று ஒரே பிடிவாதமாயிருந்தார். என்னுடைய தந்தை என்ன ஆனார் என்று கேட்கிறீர்களா? ஆஹா! டம்முவிலிருந்து கிளம்பிய முதல் நாளே அவர் என்னைக் கைவிட்டுப் போய்விட்டார். இந்தக் கடைசிப் பிரயாணம், அவருடைய வாழ்க்கையிலேயே கடைசிப் பிரயாணமாய் முடிந்து விட்டது. மீந்தாவைத் தாண்டியபிறகு மேலே மேலே ஏற வேண்டியதாயிருந்த மலை வழியில், முதல் மலை ஏறியவுடனேயே, அவர் "அப்பா! குழந்தாய் எனக்கு என்னவோ செய்கிறதே!" என்றார். நான் உடனே உட்கார்ந்து, அவர் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டேன். "குழந்தாய்! நான் உனக்குச் செய்த துரோகத்தையெல்லாம் மன்னித்து விடுவாயா?" என்றார். "அப்பா! நீங்கள் நிம்மதியடையுங்கள். என் வாழ்க்கையிலேயே மிகவும் அபூர்வமான அனுபவத்தை அளித்தீர்கள். மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை" என்றேன். மோட்டார் என்ஜின் கெட்டுப் போய் நிற்கும் சமயத்தில் வண்டியைக் குலுக்கிப் போட்டு விட்டு நிற்பது போல், அவருடைய ஆவியும் மூன்று தடவை உடம்பை ஆட்டி விட்டுப் பிரிந்து சென்றது. அழுது புலம்புவதற்கு எனக்கு நேரமில்லை; மனமும் இல்லை. ஆனாலும் தந்தையின் உடலைக் குழி தோண்டிப் புதைத்து விட்டுத்தான் வருவேன் என்று சொல்லி, மற்றவர்களை முன்னால் போகச் சொன்னேன்; நாங்கள் வந்த வழியில் ஏற்கனவே பாதை ஓரமாக அனாதைப் பிரேதங்கள் கிடந்த கண்றாவிக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வந்திருந்தேனாதலால், அந்த மாதிரி என் தந்தையை விட்டுப் போக முடியாது என்று பிடிவாதமாயிருந்தேன். செட்டியாரும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லிப் பின் தங்கினார். மலையிலே குழி தோண்டுவதென்றால் இலேசான காரியமா? எப்படியோ ஒரு பள்ளத்தைக் கண்டுபிடித்து மேலே தழையும் மண்ணும் போட்டு மூடிவிட்டு, எங்கள் பிரயாணத்தைத் தொடங்கினோம். சி.த.ப. கேட்டார்: "பிரேதஸம்ஸ்காரத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? புதைப்பது நல்ல வழக்கமா? தகனம் செய்வது நல்லதா?" என்று. "நல்ல பதில்!" என்று கூறிச் சிரித்தார். நாங்கள் வேகமாக நடந்து மற்றவர்களை அன்று சாயங்காலமே பிடித்து விட்டோம். ஆனால், மறுபடியும் நாங்கள் மூன்று பேராகப் பின் தங்கும்படி நேர்ந்த காரணம் என்ன? அதைத்தான் இப்போது சொல்லப் போகிறேன். இரண்டாம் நாள் மத்தியானம் ஒரு செங்குத்தான மலை உச்சியில் நாங்கள் ஏறிக் கொண்டிருந்தபோது, வஸந்தி திடீரென்று, "ஐயோ! என்னமோ செய்கிறதே!" என்று சொல்லி விட்டு உட்கார்ந்தாள். அவள் உடம்பெல்லாம் வெடவெட வென்று நடுங்கியது. தாயார் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்த்து, "ஐயோ! கொதிக்கிறதே" என்றாள். தகப்பனார் "அடி பாவி! சண்டாளி! கெடுத்தாயா காரியத்தை!" என்று திட்டத் தொடங்கினார். மனைவியைப் பார்த்து "இவளை வைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாருடனும் கப்பலில் ஏற்றி அனுப்பி விடலாம் என்று சொன்னேனே கேட்டாயா? இப்போது வாயிலே மண்ணைப் போடப் பார்க்கிறாளே?" என்று கத்தினார். அப்போது வஸந்தி நடுங்கிய குரலில் "அப்பா! நீங்கள் ஏன் மனத்தை வருத்தப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்னை இங்கேயே விட்டு விட்டு நீங்கள் போங்கள். நான் உங்கள் மகள் இல்லையென்று நினைத்துக் கொள்ளுங்கள்" என்றாள். "அடி சண்டாளி! உன்னை உயிரோடு எப்படி விட்டு விட்டுப் போகிறது? செத்துத் தொலைத்தாலும் நிம்மதியாகப் போகலாம்" என்றார் ராவ்சாகிப். என் காதில் இது எவ்வளவு நாராசமாக விழுந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சண்டை போட அது சமயமில்லையென்று எண்ணி, "ராவ்சாகிப்! ஒரு யோசனை சொல்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வயதானவர்கள். கூட்டத்தோடு நீங்களும் போய் விடுவதுதான் சரி. என்னிடம் உங்கள் பெண்ணை ஒப்புவித்து விட்டுப் போங்கள். உயிர் கெட்டியாயிருந்து பிழைத்தால் அழைத்து வருகிறேன். இல்லாவிட்டால், என் தந்தைக்குச் செய்ததை இவளுக்கும் செய்துவிட்டு வருகிறேன்" என்றேன். "அதெப்படி ஐயா, நியாயம்? அன்னிய மனுஷனாகிய உம்மிடம் எப்படி இந்த இளம் பெண்ணை ஒப்புவித்துவிட்டுப் போவது?" என்றார் ராவ்சாகிப். "ராவ்சாகிப்! நான் அன்னிய மனுஷன் அல்ல! வஸந்தியை நான் கலியாணம் செய்து கொள்வதாகத் தீர்மானித்து விட்டேன். அவளுக்கும் அது சம்மதம். உங்கள் முன்னிலையிலே, ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாக, இப்போதே இவளை நான் பாணிக்கிரகணம் செய்து கொள்கிறேன்" என்று கூறி வஸந்தியின் பக்கத்தில் உட்கார்ந்து, அவளை என் மடி மீது படுக்க வைத்தேன். ஜ்வரதாபத்தினால் தகித்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் விரல்களை என்னுடைய கை விரல்களுடன் கோத்துக் கொண்டேன். 9. முடிவுரை
என்னையும் வஸந்தியையும் தவிர மற்றவர்கள் எல்லாம் வெகு தூரம் போன பிறகு, வஸந்தி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். "ஏன் கண்ணே! ஏன் அழுகிறாய்? நம்முடைய கலியாணம் உனக்குப் பிடிக்கவில்லையா?" என்றேன். வஸந்தி சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டுப் புன்னகை புரிந்தாள். கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள். "உங்களை மணந்து கொள்ளும் பாக்கியத்துக்கு இந்த ஜன்மத்தில் நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லை. பூர்வ ஜன்மத்திலே செய்திருக்க வேண்டும்" என்றாள். பிறகு, "உங்களுக்கு ஒரு பெரிய துரோகம் செய்து விட்டேன். என்னை மன்னிப்பீர்களா?" என்று கேட்டாள். "ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்!" என்றேன். "விளையாட்டு இல்லை. நிஜமாகவே உங்களை மோசம் செய்து விட்டேன். நான் ராவ்சாகிப் சுந்தரின் மகள் இல்லை. அவர் வீட்டுச் சமையற்காரியின் மகள். அம்மாவை அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் கப்பலில் அனுப்பி விட்டார்கள். மாமிக்குத் துணையாக என்னை மட்டும் வைத்துக் கொண்டார்கள்." இது மாதிரி ஏதோ இருக்கும் என்று நானும் சந்தேகித்திருந்தேன். எனவே, சிறிதும் வியப்படையாதவனாய், "என் கண்ணே! அந்த மூர்க்கத் தற்பெருமைக்காரருடைய மகள் நீ இல்லை என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்" என்றேன். அப்போது எங்களுக்குப் பின்னாலிருந்து "மிஸ்டர் சிவகுமார்! நீங்களும் நிஜத்தைச் சொல்லி விடுவதுதானே!" என்று ஒரு குரல் கேட்டது. அது சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரின் குரல் தான். போனவர்களுடன் சேர்ந்து போவது போல் செட்டியார் ஜாடை காட்டிவிட்டு, எங்களுக்குத் தெரியாமல் திரும்பி வந்து மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தார். பழனி மலையில் வீற்றிருக்கும் பழனியாண்டவரே வந்தது போல், அச்சமயம் செட்டியார் வந்தார் என்று சொல்ல வேண்டும். அவர் தான் வஸந்தி உயிர் பிழைப்பதற்கும், நாங்கள் பத்திரமாய் இந்தியா போய்ச் சேருவதற்கும் காரணமாயிருந்தார். அல்லது அவருடைய காந்தி குல்லா காரணமாயிருந்தது என்றும் சொல்லலாம். தலையில் காந்தி குல்லாவுடன் அவர் அந்தமலைப் பிரதேசத்திலுள்ள பர்மிய கிராமம் ஒன்றுக்குச் சென்று மனிதர்களை ஒத்தாசைக்கு அழைத்து வந்தபடியால் தான் வஸந்தி பிழைத்தாள். ஆனால் இதெல்லாம் பின்னால் நடந்த சம்பவங்கள், அச்சமயம் செட்டியாரைப் பார்த்ததும் எனக்கு அசாத்தியமான கோபம் வந்தது. "நீர் ஏன் போகவில்லை? இங்கே எதற்காக ஒளிந்து கொண்டு நிற்கிறீர்?" என்று நான் கேட்டதும், செட்டியார் சாவதானமாக, "உமது குட்டை உடைத்து விடத்தான்; நீர் ஜமீன்தார் மகன் இல்லை என்று வஸந்திக்குச் சொல்வதற்குத்தான்!" என்றார். அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவும் இருந்தது. எப்படியும் அந்த உண்மையை வஸந்தியிடம் சொல்லியாக வேண்டும் அல்லவா? சிறிது வெட்கத்துடன் வஸந்தியின் முகத்தைப் பார்த்தேன். அவள் சொல்ல முடியாத ஆவலுடன் "செட்டியார் சொல்வது நிஜமா?" என்றாள். "நிஜந்தான் வஸந்தி? நான் ஜமீன்தார் மகன் இல்லை. ராவ்சாகிப் உன் தந்தை என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அவருடைய மதிப்பைப் பெறுவதற்காக அந்தக் கதையைக் கட்டினேன்" என்றேன். வஸந்தி பலஹீனமடைந்த தன் மெல்லிய கரங்களினால் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "ரொம்ப சந்தோஷம்! நீங்களே அந்தக் கதையைச் சொன்னவுடன் எனக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது" என்றாள். "ஏன்?" என்று கேட்டேன். "சமையற்காரி மகளுக்கும் ஜமீன்தார் மகனுக்கும் பொருந்துமா?" என்றாள் வஸந்தி. "அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். நான் எழுதி வாசித்தது பொய்க் கதை என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டேன். "பேஷான கதை; அதைக் கேட்டவுடனே இந்தியா போனதும் உங்களை வைத்துக் கொண்டு ஒரு புத்தகப் பிரசுராலயம் நடத்துவது என்று தீர்மானித்து விட்டேன். அதிலும் அந்த வேல்முருகதாஸரைப் பத்து நாள் நீர் கட்டிக் கொண்டு அழுததை நினைத்தால், எனக்குச் சிரிப்பாய் வருகிறது. வேங்கைப்பட்டி ஜமீன்தார் ஆகிவிடலாமென்று நினைத்த அந்த மோசக்காரன் பேரில் கை நிறைய மண்ணை வாரிப் போட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!" என்றார். "செட்டியாரே உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?" என்று மறுபடியும் கேட்டேன். "எனக்கு ராமநாதபுரம் ஜில்லாதானே? வேங்கைப்பட்டி ஜமீன்தாரை எனக்குத் தெரியும்." "அப்படியா?" "ஆமாம்; பழைய ஜமீன்தாரையும் தெரியும்; புதிய ஜமீன்தாரையும் தெரியும். பத்து வருஷத்துக்கு முன்னால் கடன் முண்டிப் போய் ஏலம் போட்டதில் ஜமீன் கை மாறிற்று" என்றார். "ஓஹோ" என்றேன். "பழைய ஜமீன்தார் பெயர் ராஜாதி ராஜ வீர சேதுராமலிங்க முத்து ரத்தினத் தேவர்; அவர் காலமாகி விட்டார்!" "இப்போதைய ஜமீன்தாரின் பெயர் என்ன?" என்று கேட்டேன். "சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார்" என்று பதில் வந்தது. ஆஹா! வேங்கைப்பட்டி ஜமீன்தார் சி.த.ப. பழனி சுப்பாஞ் செட்டியார் நன்றாயிருக்கட்டும்! அவர் மகாராஜனாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் அன்று செய்த உதவியினாலே அல்லவோ, இன்று வசந்தியும் நானும் இந்த உலகத்திலேயே சொர்க்க இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்! |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |