காரிருளில் ஒரு மின்னல் முன்னுரை ஆரம்பிக்கும்போது, என் கதையை நீங்கள் நம்புவீர்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது. வேறு யாராவது இத்தகைய சம்பவம் தங்கள் வாழ்க்கையில் நடந்தது என்று சொன்னால் எனக்கும் அவநம்பிக்கைதான் பிறக்கும். கைதேர்ந்த கதாசிரியர்களைப் போல் அசாத்தியமான விஷயங்களையும் நடந்தது போல் நம்பச் செய்யும்படி எழுதும் சக்தியும் எனக்கில்லை. எழுதும் பழக்கம் எனக்கு அதிகம் கிடையாது. ஒரே ஒரு தடவை கிறுக்குப் பிடித்துப் போய் ஒரு நாவல் எழுதுவதென்று தொடங்கினேன். காமா சோமாவென்று அதை எழுதி முடித்தும் விட்டேன். ஆனால் அதை அப்புறம் ஒரு முறை படித்தபோது சுத்த மோசமென்று தோன்றியபடியால் அதை அச்சிடும் முயற்சி எதுவும் செய்யவில்லை. சிநேகிதர் ஒருவர் ஒரு தடவை என் வீட்டிற்கு வந்திருந்த போது அந்த கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, அதைப் படிக்க வேணுமென்று சொல்லி எடுத்துக் கொண்டு போனார். அதை அவர் திருப்பிக் கொடுக்கவுமில்லை; நான் அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. எனக்கு எழுதும் திறமை இல்லைதான். ஆகையால் காது வைத்து, மூக்கு வைத்து, எல்லாவற்றையும் பொருத்தமாய்ச் சேர்த்து எழுத முடியாது. நடந்தது நடந்தபடி தான் சொல்லக்கூடும். "ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை அநுபவங்களைக் கொண்டு ஒரு சிறந்த கதை கட்டாயம் எழுத முடியும்" என்று யாரோ ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். அந்தத் தைரியத்தினால் தான் இதை நான் எழுதத் துணிகிறேன். 1 நான் பி.ஏ., எல்.டி. பட்டம் பெற்று, சென்னையிலுள்ள அழகப்ப செட்டியார் ஹைஸ்கூலில் வாத்தியார் வேலை பார்த்து வந்தேன். என் வாழ்க்கையின் முக்கிய சம்பவம் நடந்தபோது, எனக்கு வயது முப்பது. ஆனால் கலியாணம் ஆகவில்லை. காரணம் சொன்னால், உங்களுக்கு வேடிக்கையாயிருக்கும். நான் சிறு பையனாயிருந்த காலத்தில் ஒரு நாள், என் வீட்டில் என்னுடைய தாயார், பாட்டி, அம்மாமி, சித்தி எல்லாரும் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் ஏதோ விஷமம் செய்தேன். அம்மாமி, "இப்படி நீ அசடா யிருந்தால், உனக்கு யார் பெண் கொடுப்பார்கள்? கலியாணமே ஆகாது போ!" என்று சொன்னாள். அதற்கு என் பாட்டி, "அவனுக்கென்று ஒருத்தி எங்கேயோ பிறந்து காத்துக் கொண்டுதானே இருப்பாள்?" என்றாள். பாட்டி சொன்னது எப்படியோ என் மனதில் ஆழமாய்ப் பதிந்து வேரூன்றி விட்டது. எங்கேயோ ஒரு பெண் தன்னந் தனியாக உட்கார்ந்து என் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தோற்றம் என் மனக் கண்ணின் முன் ஓயாமல் வந்து கொண்டேயிருந்தது. அவள் யார், எப்படி இருப்பாள், எங்கே உட்கார்ந்திருப்பாள் என்பதொன்றும் தெரியவில்லை. மெல்லிய பனிப் படலத்தினால் மறைக்கப்பட்டது போன்ற அத் தோற்றம் மட்டும் என்னுடைய நனவிலும் கனவிலுங்கூடத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
என்னுடைய பாலிய சிநேகிதனும் கலாசாலைத் தோழனுமான சாம்பமூர்த்தி இது விஷயத்தில் என்னுடன் போட்டி போடுவதாகச் சொன்னான். வெகு காலம் அவனும் கலியாணம் செய்து கொள்ளாமலே இருந்தான். கடைசியில் சென்ற வருஷம் அவன் தோல்வியடைந்தான். அவன் சென்னையில் பிரபல உத்தியோகஸ்தர் ஒருவரின் பிள்ளை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு பெரிய மிராசுதாரின் பெண்ணுக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்தது. நான் கூடக் கலியாணத்துக்குப் போயிருந்தேன். தீபாவளிக்கு முதல் நாளைக்கு முதல் நாள் அவன் என்னிடம் வந்து, "ஸாமி! நீயே என் கதி" என்று சொல்லி, ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். "உன் கதியைக் கலங்க வைக்காமல் சமாசாரத்தை சொல்லலாமே" என்றேன். "தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போக வேண்டியதாயிருக்கிறது. தன்னந் தனியாக அவ்வளவு பெரிய அபாயத்தை எதிர்க்க எனக்குத் தைரியமில்லை" என்றான். "இதோ அபயப் பிரதானம் கொடுத்தேன். ஸ்ரீமதி காந்தாமணி தேவியிடம் நீ தனியாக அகப்பட்டுக் கொண்டு முழித்தாயானால், 'ஸாமி!' என்று ஒரு குரல் கொடு, உடனே நான் ஜாக்கிரதையாகி, யாரும் அவ்விடம் தலை காட்டாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்றேன். தீபாவளிக்கு முதல் நாள் காலையில் எழும்பூரில் ரயில் ஏறினோம். சாயங்காலம் ஆறு மணிக்கு வண்டி பாபநாசத்தை அடையும். அங்கிருந்து வண்டி பிடித்துக் கொண்டு கிளம்பினால், இராத்திரி சாப்பாட்டுக்கு வரதராஜபுரம் போய்ச் சேரலாம். இப்படி எண்ணிக் கொண்டு கிளம்பினோம். ஆனால் இந்த எங்கள் எண்ணம் வருண பகவானுக்குக் கொஞ்சங்கூடத் தெரியவில்லையென்று தோன்றியது. காலையில் கிளம்பும் போதே வானம் இருண்டிருந்தது. செங்கற்பட்டுக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் அசாத்தியமான காற்றும் மழையும் அடித்ததில், ரயில் ஒரு மணி நேரம் தாமதித்தது. பிறகு, சீர்காழிக்கருகில் ஒரு கூட்ஸ் வண்டி தண்டவாளத்தைவிட்டு அகன்று விட்டபடியால் இன்னும் மூன்று மணி நேரம் தாமதமாயிற்று. பாபநாசம் ஸ்டேஷனை அடைந்த போது, இரவு பத்து மணி இருக்கும். ஸ்டேஷனில் விசாரித்ததில்; வரதராஜபுரத்து மிராசுதாரின் வில்வண்டி வந்து காத்திருந்ததாகவும், "ரயில் சீர்காழியில் தங்கிவிட்டது; வராது" என்று சொன்னதன் பேரில் திரும்பிப் போய் விட்டதாகவும் அறிந்தோம். மாப்பிள்ளை விறைப்பு என்பதை அப்போதுதான் நான் பார்த்தேன். "ஸாமி! சுத்த மரியாதையற்ற ஜனங்கள் இவர்கள்! இரண்டு மணி நேரம் நமக்காகக் காத்திருக்கக்கூட இவர்களால் முடியவில்லை. பேசாமல் இவர்கள் மூஞ்சியில் கூட முழிக்காமல் திரும்பிப் போய்விடுவதுதான் சரி..." என்று அவன் சொல்ல, "ரொம்ப சரி சாம்பு! டிக்கட் வாங்கி விடட்டுமா?" என்றேன் நான். "பேஷாக வாங்கிவிடலாம். திரும்பியும் போய்விடலாம்? ஆனால் இந்தப் பட்டிக்காடு ஜனங்களுக்கு ஒரு பாடங் கற்பிக்காமல் போவதா என்றுதான் பார்க்கிறேன். 'நீங்கள் இவ்வளவு மரியாதைக் குறைவாக நடந்துகொண்டாலும் நாங்கள் மரியாதைத் தவறு செய்யமாட்டோ ம்' என்று அவர்களுக்குக் கன்னத்தில் அறைந்ததுபோல் காட்டினால் தான் புத்தி வரும்" என்றான் சாம்பு. ஆகவே, சாம்புவின் மாமனாருக்குப் புத்திவரச் செய்வதற்காக, பாபநாசத்தில் யாராவது மோட்டார் வண்டி வாடகைக்கு விடுகிறார்களா என்று பார்க்கலானோம். அன்று முழுதும் அடைமழை பெய்தபடியால் சாலை ரொம்ப மோசமாயிருக்கிறதென்றும், வண்டி போகாதென்றும் அநேகர் சொல்லிவிட்டார்கள். கடைசியில், எங்களைப் போலவே, தன் மோட்டாருக்குப் புத்தி கற்பிக்க எண்ணங் கொண்ட ஒருவன், பதினைந்து ரூபாய் வாடகைக்குத் துணிந்து வண்டி கொண்டுவந்தான். 2
நாங்கள் கிளம்பும் போது சரியாக இரவு மணி பன்னிரண்டு. இருட்டென்றால் இப்படி அப்படியான இருட்டல்ல. கன்னங்கரிய காரிருள். வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குமுறிக் கொண்டிருந்தன. சாலையில் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாயிருந்தபடியால், அவ்வப்போது இருளை வெட்டிக் கொண்டு தோன்றிய மின்னலொளியும் அந்தச் சாலைக்குள் புகுவதற்கு முயன்று தோல்வியடைந்து திரும்பிச் செல்வதுபோல் காணப்பட்டது. சாலையின் ஒரு புறத்தில் வயல்கள். மற்றொரு புறம் வாய்க்கால். வயல்களில் மழை ஜலம் நிரம்பி, சாலை மீது வழிந்து போய்க் கொண்டிருந்தது. இதனால் சாலையிலுள்ள குண்டு குழிகள், மரங்களின் வேர்கள் ஒன்றையும் தெரிந்து கொள்வதற்கில்லை. வண்டி திடீர் திடீரென்று சாலையின் குழிகளில் விழுந்து எழுந்தது. கால் மணி நேரத்திற்குள் நானும் சாம்புவும் இருநூறு தடவை ஒருவரோடொருவர் முட்டிக் கொண்டோம். அங்கங்கே வாய்க்கால் மதகுகள் வேறு வந்து கொண்டிருந்தன. மதகுகளின் ஏற்ற இறக்கங்களில் வண்டி ஏறி இறங்கிய போது, சறுக்கலினால் டிரைவர் ஒரு பக்கம் திரும்பினால், வண்டி இன்னொரு பக்கம் திரும்பிற்று. எந்த நிமிஷத்தில் வண்டி வாய்க்காலில் இறங்கிவிடுமோ, அல்லது மரத்தில் முட்டிக் கொள்ளுமோ என்று திகிலாய்த்தான் இருந்தது. இடி முழக்கமோ சொல்லவேண்டியதில்லை. எந்த நிமிஷமும் வானம் பிளந்து துகள் துகளாகிவிடுமென்று தோன்றியது. ஒவ்வொரு பேரிடி இடித்தபோதும் அண்டகடாகங்களுடனே எங்கள் மண்டைகளும் அதிர்ந்தன. சாம்புவின் நெஞ்சைத் தொட்டுப் பார்த்து, "ஏண்டா உனக்கு இருதயம் இப்படி ரோடு என்ஜின் மாதிரி அடித்துக் கொள்கிறது?" என்று கேட்டேன். "ஸாமி! என் மாமனாருக்கு மட்டும் ஒரு பாடம் கற்பித்து விட்டேனானால், அப்புறம் இந்த உயிர் எனக்கு லட்சியமில்லை" என்றான். இச்சமயம் வண்டி ஒரு குழியில், தொபுகடீரென்று விழுந்தது; எங்கள் தலைகள் முட்டிக் கொண்டன. வண்டி எழுந்திருக்கும் போது இன்னொரு முட்டலுக்கு நான் தயாரானேன். ஆனால் ஏமாந்து போனேன். வண்டி எழுந்திருக்கவில்லை. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த மோட்டார் என்ஜின் ஓர் அலறல் அலறிவிட்டு அப்புறம் மௌனம் சாதிக்கத் தொடங்கியது. டிரைவரும், அவனுக்குத் துணையாக வந்தவனும் கீழே இறங்கினார்கள். இரண்டு மூன்று தடவை மோட்டார் வண்டியைப் பிரதக்ஷிணம் செய்தார்கள். "ஏண்டா! உன் புத்தியை எங்கேடா அடகு வைத்து விட்டு வந்தாய்?" என்று டிரைவர் தன் சிநேகிதனைப் பார்த்துக் கேட்டான். "ஏன்? செட்டியார் கடையிலேதான் அடகு வைத்துவிட்டு வந்தேன்" என்றான் அவன் சிநேகிதன். எனக்கும் சாம்புவுக்கும் கோபம் அசாத்தியமாய் வந்தது. "நீங்கள் சண்டை போடுவது அப்புறம் இருக்கட்டும் அப்பா! வண்டி என்ன சமாசாரம்?" என்ரு கேட்டேன். "வண்டி நின்னுடுத்துங்க!" என்றான் டிரைவர். "இந்த முட்டாளை நீங்களே கேளுங்க. இராத்திரியிலே கிளம்பினால் கையிலே லாந்தர் கொண்டு வரவேணுமென்று எத்தனை தடவை அழுதிருக்கிறேன்" என்றான் டிரைவர். "நான் தான் முட்டாளாச்சே. புத்திசாலியாயிருக்கிறவங்க கிளம்புகிற போது ஞாபகப்படுத்துகிறதுதானே!" என்றான் டிரைவரின் சிநேகிதன். "இல்லைங்க, ஸார்! இந்த ஆளுக்கு ஊரிலே தீவட்டித் தடியன் என்று பெயர். பேருக்குத் தகுந்தபடி இந்தச் சமயம் தீவட்டி போடவேண்டுமல்லவா? பின்னே இவன் தீவட்டித் தடியனாயிருப்பதில் என்ன பிரயோஜனம்?" என்றான் டிரைவர். அந்தச் சமயத்தில் கோபித்துக் கொள்வதால் பிரயோஜனமில்லையென்று அறிந்த நான், "சரிதான்; அப்பா மேலே நடக்க வேண்டியதைப் பாருங்கள்" என்று சாந்தமாகச் சொன்னேன். "அதுதான் நானும் யோசிக்கிறேன்" என்று கூறிய டிரைவர் ஏதோ சட்டென்று நினைவு வந்தவன் போல், "ஏன் ஸார்! உங்களிடத்தில் டார்ச் லைட் இருக்குமே?" என்றான். நாங்கள் இல்லையென்று சொன்னதும், மிகவும் ஏமாற்றமடைந்தவனாய், "இவ்வளவுதானா! உங்கள் மாதிரி இராத்திரிப் பயணம் கிளம்புகிறவங்க எப்போதும் கையிலே டார்ச் லைட் வைத்துக் கொள்ளவேணும், ஸார்!" என்றான். "அட போக்கிரி படவா!" என்று மனத்திற்குள் திட்டினோம். டிரைவரிடமும் அவனுடைய சிநேகிதனிடமுமிருந்த இரண்டு நெருப்புப் பெட்டிகளையும், நாங்கள் கொண்டு வந்திருந்த மத்தாப்புப் பெட்டிகளில் ஐந்தாறையும் காலி செய்தும் பிரயோஜனப்படாமல் போகவே, "அடமடையா ஓடுடா! இந்த ஐயாக்களுக்குத்தான் அவசரமில்லையென்றால் நமக்குக் கூடவா அவசரமில்லை? காலையில் தீபாவளிக்கு வீடு போய்ச் சேர வேண்டாமா? ஓடிப்போய் இப்போது நாம் தாண்டி வந்தோமே, அந்த ஊரில் யார் வீட்டிலாவது கதவைத் தட்டி ஒரு லாந்தர் வாங்கிக் கொண்டு வா!" என்று டிரைவர் அந்தத் தீவட்டித் தடியனை விரட்டினான். 3
அவன் போய்க் கால் மணி நேரமாயிற்று. திரும்பி வரவில்லை. டிரைவர் உட்கார்ந்தபடியே குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான். சாம்புவும் ஆடிவிழுந்தான். எனக்கு மட்டும் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு படபடப்பு ஏற்பட்டிருந்தது. தேகத்தின் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அப்போது, எங்களுக்கு எதிரே சுமார் கால் மைல் தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு வெளிச்சம் தெரிந்தது. உடனே அது அணைந்தது. அம்மாதிரி இன்னும் இரண்டு தடவை அது பளிச்சென்று ஒளி வீசி மறைந்தது. பிறகு என்னால் வண்டியில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அந்த வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து வந்த ஏதோ ஒரு வகைக் காந்த சக்தி என்னைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். வண்டியிலிருந்து கீழிறங்கினேன். வாடைக்காற்று ஜிலீரென்று மேலே பட்டது. உடம்பெல்லாம் நடுங்கிற்று. நல்ல வேளையாக அச்சமயம் மழை பலமாகப் பெய்யவில்லை. சிறு தூற்றலாகத் தூறிக் கொண்டிருந்தது. "சாம்பு! எதிரே கொஞ்சம் தூரத்தில் ஒரு டார்ச் லைட் தெரிவது போல் இருந்தது. நான் போய்ப் பார்க்கிறேன். அதற்குள் அவன் லாந்தர் கொண்டு வந்து வண்டி கிளம்பினால், புறப்பட்டு வாருங்கள். நான் வழியில் நிறுத்தி ஏறிக் கொள்கிறேன்" என்றேன். சாம்புவுக்கு அரைத் தூக்கமாயிருந்தபடியால், "சரிதான்" என்றான். என் பேச்சைக் கேட்டு விழித்துக் கொண்ட டிரைவர், "வேண்டாம், ஸார்! போகாதிங்க, ஸார்! போனாத் திரும்ப மாட்டீங்க, ஸார்!" என்று உளறினான். "உன் வேலையைப் பார்!" என்று சொல்லிவிட்டு நான் சாலையில் நடக்கலானேன். அந்தக் காரிருளில் அவ்வப் போது மரக்கிளைகளினிடையே நுழைந்து வந்த மின்னல் ஒளியின் உதவி கொண்டு தட்டுத் தடுமாறி நடந்து சென்றேன். சுமார் பத்து நிமிஷம் இவ்வாறு சென்றதும், சாலையில் மரங்களின் அடர்த்தி அதிகமில்லாத இடம் வந்தது. எதிரே சமீபத்தில் ஒரு பாலம் தென்பட்டது. அந்தப் பாலத்தின் ஒரு பக்கத்துக் கைப்பிடிச் சுவரில் கறுப்பாய் ஏதோ தெரிகிறதே, அது என்ன? மனித உருவமா அது? திடீரென்று சமீபத்தில் யாரோ தேம்பி அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகைக் குரல் என் நெஞ்சைப் பிளந்து விடும்போல் இருந்தது. அவ்வளவு சோகமும் தாபமும் ஏக்கமும் அந்தக் குரலில் தொனித்தன. பாலத்தின் மதகிலிருந்துதான் அந்த விம்முதல் வந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஆனாலும் விரைந்து நடந்தேன். பளீரென்று ஒரு மின்னல் வானத்தையும் பூமியையும் ஒரு கணம் ஜோதி வெள்ளத்தில் மூழ்கடித்தது; அடுத்த கணத்தில் மறுபடியும் ஒரே அந்தகாரம். ஆனால் அந்த ஒரு கணத்தில் நான் தேடி வந்ததைக் கண்டுவிட்டேன். பாலத்தின் மதகின் மேல் சோகமும் சௌந்தரியமும் ஒன்றாய் உருவெடுத்தது போன்ற ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த மின்னல் மின்னிய ஒரு கண நேரத்தில் அவளுடைய ஆச்சரியம் நிறைந்த கண்களிலிருந்தும் ஒரு மின்னல் கிளம்பி என் இருதயத்தில் பாய்ந்தது. அந்த மின்னலின் வேகத்துடனேயே பின்வரும் எண்ணமும் என் உள்ளத்தில் ஊடுறுவிச் சென்றது: எனக்காகவென்று பிறந்து வளர்ந்து என் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நங்கை இவள்தான்! ஒரு யுகம்போல் தோன்றிய ஒரு நிமிஷத்துக்குப் பிறகு, என் மார்பைக் கையால் அமுக்கிக் கொண்டு, "நீ யார், அம்மா! இந்த நடுராத்திரியில் ஏன் இங்கே தனியாய் உட்கார்ந்திருக்கிறாய்?" என்று கேட்டேன். அதற்குப் பதிலாக, பளிச்சென்று என் முகத்தில் வெளிச்சம் அடித்தது. அந்தப் பெண்ணின் கையிலிருந்த டார்ச் லைட்டிலிருந்து அந்த வெளிச்சம் வந்தது. "நீங்கள் ஏன் கேட்கவேண்டும்?" என்ற கேள்வி விம்மலுடன் கலந்து வந்தது. "எனக்குக் கேட்க உரிமையுண்டு. எத்தனையோ காலமாக உன்னை நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கண்டுபிடித்தேன்..." "அப்படியானால் நான் யார் என்று ஏன் கேட்க வேண்டுமோ?" சற்றுத் திகைத்து விட்டேன். பிறகு சமாளித்துக் கொண்டு, "சரி, எழுந்திருந்து வா! போகலாம்" என்றேன். அவள் எழுந்திருந்தாள். இதற்குள்ளே தூரத்தில் மோட்டார் கிளம்பும் சப்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் வண்டி எங்களண்டை வந்து நின்றது. உடனே நான், "சாம்பு! என்னை மன்னி. நான் உன்னுடன் வருவதற்கில்லை. எத்தனையோ வருஷமாக என்னுடைய வாழ்க்கைத் துணைவியை நான் தேடிக் கொண்டிருந்தேன், இன்று கண்டுபிடித்தேன். அவளுடன் நான் போகவேண்டும்" என்றேன். சாம்பு, கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். "சாமி! இது என்ன, சொப்பனமா? நிஜமா?" என்றான். அவனுக்கு நான் பதில் சொல்லாமல் டிரைவரைப் பார்த்து, "நீ விடப்பா வண்டியை!" என்றேன். அப்போது சாம்பு, "ஸாமி! இது என்ன பைத்தியம்? உன் பின்னால் நிற்பது யார்? எங்கே கண்டாய்? என்ன சங்கதி? இந்த இருட்டில் நீங்கள் எங்கே போவீர்கள்?" என்று சரமாரியாய்க் கேள்விகளை அடுக்கினேன். "எல்லாம் இரண்டு நாள் கழித்துப் பட்டணத்தில் சொல்கிறேன்" என்றேன். இதற்குள் டிரைவர் "ஐயோ! நான் வேண்டாமென்று சொன்னேனே? கேட்டாரா பாவி! அநியாயமாய்ப் பூட்டாரே?" என்று சொல்லிக் கொண்டே வண்டியை விரைவாக விட்டான். அவன் ஒரு கில்லாடியாயிருந்ததே அந்தச் சமயம் எனக்கு நல்லதாய் போயிற்று. இல்லாவிட்டால், சாம்பு இலேசில் அங்கிருந்து கிளம்பியிருக்க மாட்டான். சற்று நேரத்திற்கெல்லாம், 'சோ' என்ற சத்தத்துடன் பெருமழை வந்தது. "இங்கே ஒரு பாழடைந்த சாவடி இருக்கிறது. அதில் தங்கலாம்" என்றாள். அந்தச் சாவடிக்குள் போய், டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் கொஞ்சம் இடம் சுத்தம் செய்து கொண்டு உட்கார்ந்தோம். "பொழுது விடிய இன்னும் நாலு மணி நேரம் இருக்கிறது. நமக்கோ தூக்கம் வரப்போவதில்லை. ஒருவருக்கொருவர் நம்முடைய சுய சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டோ மானால் பொழுது போகும்" என்றேன். "என் கதை ரொம்பப் பயங்கரமானது. சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்றாள். "இன்றைய சம்பவத்துக்குப் பிறகு, உலகில் நான் நம்ப முடியாதது ஒன்றுமே இல்லை." இன்னும் சற்று விவாதத்துக்குப் பிறகு, "அப்படியானால் கேளுங்கள்" என்று அவள் சொல்ல ஆரம்பித்தாள். 4
"என் தகப்பனார் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்; வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆகையால் இளம் வயதில் அவர் வைத்ததே சட்டமாயிருந்தது. அவர் காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது மாதம் 200 ரூபாய் செலவழித்துக் கொண்டிருந்தாராம். என் தாயாரும் அம்மாதிரியே பெரிய குடும்பத்தில் பிறந்தவள் தான். இதனால் இல்வாழ்க்கை தொடங்கிக் கொஞ்ச காலம் அவர்கள் பணக் கஷ்டம் இன்னதென்று தெரியாமல் காலங் கழித்து வந்தார்கள். என் தகப்பனார் பி.எல். பரீட்சை கொடுத்து வக்கீல் தொழில் செய்யத் தொடங்கினார். அவர் ரொம்பப் புத்திக் கூர்மையுள்ளவர். அத்துடன் இல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றும் நினைப்பவர். இக்காரணங்களினால், அவர் வக்கீல் தொழிலில் அதிகமாய்ப் பிராபல்யம் அடையவில்லை. இதைக் கண்ட அவருடைய மாமனார் பலமான சிபாரிசுகள் பிடித்து, அவருக்கு ஜில்லா முனிசீப் வேலை பண்ணி வைத்தார். இந்த உத்தியோகம் அவர் நாலு வருஷந்தான் பார்த்தார். அவருக்கும் அப்பீல் கோர்ட்டு ஜட்ஜுகளுக்கும் ஓயாமல் தகராறு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக, அவர் செய்த ஒரு தீர்ப்பு ரொம்பப் பிசகானது என்று ஹைகோர்ட்டில் முடிவானபோது, அவர் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் மூளைகளைப் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி ஒரு ராஜினாமாக் கடிதம் எழுதி அனுப்பி விட்டார். பிறகு சென்னையில் வந்து வக்கீல் தொழில் நடத்தத் தொடங்கினார். ஜில்லா முனிசீப் வேலையை ராஜினாமா செய்தவரென்றும், ஹைகோர்ட் ஜட்ஜுகளையெல்லாம் திட்டினவரென்றும் பிரசித்தியடைந்தவரிடம் எந்தக் கட்சிக்காரன் வந்து வழக்குக் கொடுப்பான்? ஆகவே வீட்டு வாசலில் போர்டு தொங்கினதுதான் மிச்சமாயிற்று. அப்பாவுக்காவது, அம்மாவுக்காவது செட்டு என்றால் இன்னதென்றே தெரியாது; ஆகவே வீட்டுச் செலவுகள் எல்லாம் எப்போதும் போலவே நடந்து வந்தன. இதற்கிடையில் குடும்பமும் பெருகி வந்தது. ஐந்தாறு குழந்தைகள். நான் தான் எல்லாரிலும் மூத்தவள். எனக்கும் பதினைந்து வயதான போது வீட்டில் தரித்திரம் அதிகமாகிவிட்டது. என் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. நல்ல இடமாகக் கொடுக்க வேண்டுமென்றால், வரதட்சிணை ஏராளமாகக் கேட்டார்கள். கிணற்றில் தள்ளுவது போல் என்னை யாருக்காவது கொடுத்துவிட என் பெற்றோர்களுக்கு இஷ்டமில்லை. இப்படியாக மூன்று நான்கு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதற்கிடையில் என் தகப்பனார் மனோவியாகூலத்தினால் தேக சுகத்தை இழந்தார். அவருடைய சுபாவம் நாளுக்கு நாள் கெட்டு வந்தது. கோபம் அதிகமாயிற்று. என் தாயாரையும் குழந்தைகளையும் காரணமில்லாமல் திட்டவும் அடிக்கவும் ஆரம்பித்தார். என்னை மட்டுந்தான் அவர் ஒன்றும் சொல்வதில்லை. என்னிடம் அவர் வைத்திருந்த ஆசைக்கு அளவே கிடையாது. எவ்வளவு அசாத்தியமான கோபத்திலும் நான் 'அப்பா!' என்று கூப்பிட்டால் அடங்கி விடுவார். வீட்டில் அன்றைய சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத நிலைமை ஏற்பட்டது. அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா எங்கள் பந்துக்களுக்கு கடிதம் எழுதுவாள். நேரிலும் போய் உதவி கேட்பாள். அதெல்லாம் பயன்படவில்லை. என் தகப்பனார் முனிசீப்பு வேலையை விட்ட நாளிலிருந்து எங்களுடைய பந்துக்கள் எங்களை அலட்சியம் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்ச நாளைக்கெல்லாம் எங்களை எட்டிப் பார்ப்பதையே விட்டுவிட்டார்கள். என் தந்தையைக் 'கிறுக்கன்' என்றும், என் தாயாரைத் 'துக்கிரி' என்றும் வைதார்கள். கஷ்டம் பொறுக்க முடியாமல் போன சமயம், ஒரு நாள் என் தகப்பனார் என்னைக் கூப்பிட்டு, வெறி கொண்டவரைப் போல், 'மைதிலி! உன்னை விற்றுவிடப் போகிறேன், தெரியுமா? உன்னைப் பலி கொடுப்பதற்காக விற்கப் போகிறேன்' என்றார். அவரை நான் சாந்தப்படுத்தி என்னவென்று கேட்டேன். தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு தனவந்தர் - ஐம்பது வயதுக்கு மேலானவர். என்னைத் தமக்குக் கலியாணம் செய்து கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார் என்று அறிந்தேன். அப்பா, அந்த விவரத்தைச் சொல்லி விட்டு குழந்தாய்! நான் சொல்கிறதைக் கேள். இன்று ராத்திரி நீ கிணற்றில் விழுந்து செத்துப் போய்விடு!' என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார். நான் அவரைத் தேற்றி, 'அப்பா! நான் கிணற்றில் விழப்போவதில்லை. கட்டாயம் அவரைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். எல்லாம் விதிபோல் நடக்கும். பாலிய வயதுள்ளவர்களைக் கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் என்ன சுகப்பட்டு விட்டார்கள்? எப்படியாவது இந்தக் குடும்பத்தின் தரித்திரம் தீர்ந்தால் போதும்' என்றேன். கலியாணம் நடந்து, என் பதியுடன் அவர் ஊருக்குச் சென்றேன். அவர் இந்தப் பாபநாசம் தாலூக்காவில் பெரிய மிராசுதாரர். சிறந்த கல்வியறிவுள்ளவர். அவருடைய முதல் மனைவி சந்ததி இல்லாமலே இறந்து போனாள். வேறு நெருங்கிய பந்துக்கள் அவருக்கு யாருமில்லை. தள்ளாத வயதில் தனிமை வாழ்க்கையைச் சகிக்க முடியாமல் தான் என்னைக் கலியாணம் செய்து கொண்டதாக அவர் அறிவித்தார். எனக்கு ஒருவிதமான குறையும் வைக்கவில்லை. எந்தவிதத்திலும் என் இஷ்டத்துக்கு மாறாக நடக்கச் செய்யவும் இல்லை. நான் அவருடைய வீட்டில் இருப்பதே அவருக்குத் திருப்தியாயிருந்தது. அவருடன் உட்கார்ந்து படித்தாலும் பேசினாலும் பரம சந்தோஷமடைவார். இப்படியே என் வாழ்நாள் முழுதும் கழித்து விடுமென்றே எண்ணினேன். ஆனால் விதி வேறு விதமாயிருந்தது. 5
"ஒவ்வொரு வருஷமும் கோடைக் காலத்தில் இரண்டு மாதம் நாங்கள் தரங்கம்பாடிக்குப் போய்த் தங்குவது வழக்கம். தரங்கம்பாடியில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் கும்பகோணத்தில் பிரபல வியாபாரியான ஒரு பம்பாய் ஸேட் வந்து தங்குவதுண்டு. ஒரு வருஷம் பம்பாயிலிருந்து அவருடைய மருமகனும் அங்கே வந்து தங்கினான். இந்த இளைஞன் பெயர் கிரிதரலால். கதையை வளர்த்தாமல் சொல்கிறேன்; சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு கிரிதரலால் தான் வியாபார நிமித்தமாகக் கிழக்காப்பிரிக்கா போவதாகச் சொல்லி, தன்னுடன் கிளம்பி வந்துவிட இஷ்டமா என்று கேட்டான். இங்கே ஒரு விஷயம் உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். என் கணவருடன் நான் வாழ்ந்த நாலு வருஷ காலத்தில், என் வெளி வாழ்க்கை அமைதியாய்த் தானிருந்தது. ஆனால் என் உள்ளத்தில் மட்டும் சாந்தி இல்லை. ஏதோ சொல்ல முடியாத ஏக்கம் என் இருதயத்தில் குடி கொண்டிருந்தது. யாரையோ எங்கேயோ போய்ப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால் யாரைப் பார்க்க வேண்டும், அதற்கு எங்கே போக வேண்டும் என்பதொன்றும் தெரியவில்லை. பெண்களில் சிலருக்குப் பேய் பிடிக்கிறது என்கிறார்களே, அந்த மாதிரி என்னையும் ஏதாவது பிடித்திருக்கிறதோ என்று கூட சில சமயம் சந்தேகப்படுவேன். எந்த உருவம் தெரியாத மனிதரைக் காணவேண்டுமென்று நான் ஏக்கம் கொண்டிருந்தேனோ அவரல்ல இந்தக் கிரிதரலால் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் நான் அவனுடன் போகச் சம்மதித்தேன். வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு அலுப்பு உண்டாகிவிட்டது. எங்கேயாவது போக வேண்டும் என்ற அளவில்லாத தாபம் ஏற்பட்டிருந்தது. இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தேன். ஒரு நாள் என் கணவர் ஏதோ கோர்ட்டுக் காரியமாய்த் தஞ்சாவூர் போயிருந்தபோது நாங்கள் புறப்பட்டுச் சென்னை சேர்ந்து கப்பல் ஏறினோம். கப்பலில் ஏறிய மறுநாளே கிரிதரலாலின் சுபாவம் தெரிய வந்தது. அவன் பெருங்குடிகாரன், எவ்விதப் பாதகத்துக்கும் அஞ்சாதவன் என்று அறிந்தேன். கடைசியில் நைரோபியில் இறங்கியதும், அவன் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்துப் போய் அங்கிருந்த ஒரு மாதினிடம் என்னை ஒப்புவித்து விட்டுச் சென்றான். அன்று இராத்திரி, அது ஒரு விபசார விடுதியென்றும், கிரிதரலால் மூவாயிரம் ரூபாய்க்கு என்னை அந்த விடுதியின் சொந்தக்காரிக்கு விற்றுவிட்டுப் போய்விட்டான் என்றும் அறிந்தேன். எனக்கு வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் சொல்லி முடியாது. மனநிலையைப் பொறுத்தவரையில் ராக்ஷஸியாகி விட்டேன். மறுநாள் இரவு என்னுடைய அறைக்குள் வந்த குடிகாரன் ஒருவனை அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு அதனாலேயே குத்திக் கொன்றேன். அந்த இரத்தக் கறை தோய்ந்த கையைத்தான் இப்போது நீங்கள் பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள்..." என்றாள் மைதிலி. ஒரு கணம் என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஆனாலும் நான் அவளுடைய கரத்தை விடவில்லை. மைதிலி மேலே கதையைத் தொடர்ந்தாள்: இந்த எண்ணம் தோன்றியதும் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டேன். எந்த நிமிஷமும் என்மேல் ஈட்டிகள் பாயுமென்று எதிர்பார்த்தேன். என்மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த என் கணவருக்குச் செய்த துரோகத்திற்குப் பலன் கிட்டிவிட்டதென்று எண்ணினேன். என் தந்தை, 'உன்னைப் பலி கொடுக்க விற்று விட்டேன்' என்று சொன்ன வாக்குப் பலித்துவிட்டது என்றும் நினைத்துக் கொண்டேன். அப்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வாத்தியங்களிலிருந்து கிளம்பிய பயங்கர ஒலி சட்டென்று நின்றது. அதற்குப் பதிலாக, 'ர்ர்ர்ர்' என்ற சத்தம் ஆகாய வெளியிலிருந்து கேட்டது. உடனே அது என்ன சப்தமென்பதை அறிந்தேன். கண்ணைத் திறந்து பார்த்தேன். ஆகாய விமானம் ஒன்று இறங்கிக் கொண்டிருந்தது. அது அருகில் வந்ததும், அந்த நரமாமிச பக்ஷிணிகள் வெருண்டு நாலாபுறமும் ஓட்டமெடுத்தார்கள். ஆகாய விமானத்திலிருந்து இறங்கிய ஒரு வெள்ளைக்காரப் பெண் தன் கையிலிருந்த கைத்துப்பாக்கியால் நாலாபுறமும் பார்த்துச் சுட்டாள். அந்தக் காட்டுமிராண்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். உடனே என்னுடைய கட்டுக்களை அவள் அவிழ்த்து ஆகாய விமானத்தில் ஏற்றிக் கொண்டாள். அந்த வெள்ளைக்காரி ஆப்பிரிக்காக் கண்டத்தை ஒரே மூச்சில் தாண்டும் பந்தயத்திற்காகப் பறந்து கொண்டிருந்ததாகவும், பந்தயம் போனாலும் போகட்டும் என்று அவ்விடத்தில் கீழிறங்கி என்னைக் காப்பாற்றினதாகவும் சொன்னாள். ஒரு ஜீவனுக்கு அந்தியமக் காலம் வரவில்லையென்றால், எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் எந்த விதத்திலாவது தப்பிக்க முடியும் என்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன். 6
என்னை அந்த வெள்ளைக்காரப் பெண் நைரோபி துறைமுகத்தில் கொண்டு வந்து சேர்ந்து தானே கப்பல் சார்ஜு கொடுத்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏற்றியும் விட்டாள். கப்பல் கடலில் போய்க் கொண்டிருந்தபோது, என் உள்ளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. 'எங்கே போவது?' என்னும் கேள்வி என் மனத்தை அலைத்துக் கொண்டிருந்தது. என்னிடம் எதுவும் எதிர்பாராமல் எனக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் அளித்த என் பதியிடம் மறுபடி திரும்பிச் செல்வதா? ஐயோ! அவருடைய மனம் என்ன வேதனையடைந்ததோ? அவர் என்னைத் திரும்பி அங்கீகரிப்பாரா? - இப்படிப் பல நாள் யோசித்தேன். அவரிடம் நேரே போவதற்குத் தைரியம் எனக்கு ஏற்படவில்லை. நான் ஏறியிருந்த கப்பலோ, கன்னியாகுமரியைச் சுற்றி, கடற்கரையோரமாகச் சென்னை போவதாயிருந்தது. வேண்டுமானால் நான் நாகப்பட்டினத்தில் இறங்கி அவரிடம் போகலாம். அதற்கு எனக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. சென்னைப் பட்டணத்திலே இறங்கி என் தகப்பனாரிடம் தஞ்சம் புகுவதென்றே தீர்மானித்தேன். ஆனால் மறுபடியும் விதி குறுக்கிட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஒரு நாள் இரவு கப்பல் புறப்பட்டது. மறுநாள் அதிகாலையில் சென்னை போய்ச் சேர வெண்டும். ஆனால் அது சென்னை போய்ச் சேரவேயில்லை. அன்று இரவு கடலில் பிரமாதமான புயல் அடித்தது. அலைகள் மலைகளைப் போல் எழுந்தன. உலகத்தில் எவ்வளவு விதமான அபாயங்கள், கஷ்டங்கள் உண்டோ அவ்வளவையும் நான் அநுபவிக்கவேண்டுமென்று பிரம்மதேவன் என் தலையில் எழுதியிருந்தான். கப்பலுக்கு அபாயம் வந்துவிட்டதென்றும், உயிர் தப்ப விரும்புகிறவர்கள் படகுகளில் ஏற வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டோம். எனக்கு உயிர் தப்ப விருப்பமில்லை. ஆகவே பேசாமலிருந்தேன். ஆனால் அந்தக் கப்பல் தலைவன், ஸ்திரீகளை முதலில் படகில் ஏற்ற வேண்டுமென்று கட்டளையிடவே, என்னைப் பலவந்தமாய் இழுத்துப் போய் ஒரு படகில் ஏற்றினார்கள். வெகுநேரம் நாங்கள் ஏறியிருந்த படகு, அலைகளிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. முடிவில், ஒரு பிரமாண்டமான அலை அடித்து அதைக் கவிழ்த்தது. என் துன்பங்களுக்குக் கடைசியாக விமோசனம் வந்துவிட்டதென்று எண்ணினேன். அந்த எண்ணம் நிறைவேறவில்லை. படகு கரைக்கு வெகு சமீபம் வந்திருக்க வேண்டும். ஒரு நிமிஷம் மூச்சுத் திணறுமாறு அலைப்புண்ட பிறகு, கடற்கரை மணலில் நான் கிடப்பதை உணர்ந்தேன். உடனே, உயிர் ஆசை பற்றிக் கொண்டது. ஏற்கனவே குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த உடம்பில், ஈரக்காற்று சவுக்கு கொண்டு அடிப்பதுபோல், சுளீர் சுளீர் என்று அடித்தது. அந்தக் கும்மிருட்டில் இன்ன திசையை நோக்கி போகிறோமென்று தெரியாமல் ஓடினேன்; அநேக முறை தடுக்கி விழுந்தேன்; மறுபடி எழுந்திருந்து ஓடினேன். உடம்பில் உயிர் உணர்ச்சி இருந்தவரையில் ஓடியபின் இனி ஓரடியும் எடுத்து வைக்க முடியாத நிலைமை வந்தது. அப்படியே உட்கார்ந்து கீழே சாய்ந்தேன். நான் உட்கார்ந்த இடம் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்து வாசற்படி போல் தோன்றியது. அடுத்த கணம் நினைவு இழந்தேன். எனக்கு மீண்டும் நன்றாய் ஞாபகம் வந்த போது, என் பதி எனக்குச் சுச்ரூஷை செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். என் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று. அதைப் பார்த்த அவர் 'மைதிலி, நீ மறுபடியும் என்னைத் தேடி வந்தாயே, அதுவே எனக்குப் போதும். நீ எங்கே போனாய் ஏன் போனாய் என்றெல்லாம் நான் ஒன்றும் கேட்கவில்லை' என்றார். என் இருதயம் பிளந்து விடும் போல் இருந்தது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுதேன்..." இப்படிச் சொல்லி வந்த போது மைதிலி உணர்ச்சி மிகுதியில் விம்மினாள். என்னுடைய மனோ நிலைமையையோ விவரிப்பதற்கு இயலாமலிருந்தது. சற்றுப் பொறுத்து அவள் கதையைத் தொடர்ந்து சொன்னாள்: "ஆறு மாதத்திற்கெல்லாம் என் கணவர் இறந்து போனார். அவருடைய ஏராளமான ஆஸ்திகளுக்கெல்லாம் என்னைச் சர்வசுதந்திர எஜமானியாக அவர் ஆக்கியிருந்தார். அச்சமயம் என் தாயாரும், சகோதரர்களும் வந்திருந்து, ஈமக்கடன்கள் முடிந்ததும் என்னை உடன் அழைத்துச் சென்றார்கள். என் தகப்பனார் வராததற்குக் காரணம், அவருக்குச் சித்தம் சரியில்லாததுதான் என்று தெரிந்தது. என்னுடைய கலியாணத்திற்குப் பிறகு, அவர் அடிக்கடி, 'மைதிலி! உன்னை விற்றுவிட்டேன்; உன்னைப் பலி கொடுத்து விட்டேன்' என்று சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாராம். கடைசியில், இது சித்தப் பிரமையாகவே போய்விட்டதாம். இப்போது என்னைக் கண்டதும் அவருக்குச் சட்டென்று பிரமை நீங்கிற்று. அறிவு தெளிந்தது. 'குழந்தாய்! வந்து விட்டாயா!' என்று சொல்லி என்னைக் கட்டிக் கொண்டு அழுதார். அதற்குப் பிறகு அவரும் வெகு காலம் உயிரோடிருக்கவில்லை. மூன்று மாதத்திற்கெல்லாம் காலமானார். சென்னையிலேயே நான் வசிக்கத் தொடங்கினேன். உலகத்திலே பணத்திற்கு எவ்வளவு சக்தி உண்டென்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். நாங்கள் பசிக்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது எங்களை எட்டிப் பாராத இஷ்டமித்திர பந்துக்களெல்லாம் இப்போது வந்து கும்பல் போடத் தொடங்கினார்கள். எனக்குக் கலியாணம் சீக்கிரம் பண்ணாததற்காக எங்களைச் சாதியை விட்டுத் தள்ளவேண்டுமென்று அப்போது சொன்னவர்கள் எல்லாம் இப்போது என்னிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். என் மனத்திலே மட்டும் பழைய ஏக்கம் - யாரையோ பார்க்க வேண்டுமென்ற தாபம் - குடி கொண்டிருந்தது. கடைசியாக, என் இருதய நாதனை நான் இந்த ஜன்மத்தில் காணப் போவதில்லை யென்றும் அது ஒரு வெறும் நிழல் மாத்திரந்தான் என்றும் தீர்மானித்தேன். வாழ்க்கை வேம்பிலும் கசப்பாகிவிட்டது. என்னுடைய சொத்துக்களையெல்லாம் என் சகோதரர்களுக்கும், தர்மங்களுக்கும் எழுதி வைத்துவிட்டு, ஒரு நாள் தன்னந்தனியாக என் கணவருடைய கிராமத்தை அடைந்தேன். மூன்று நாள் அவர் வீட்டில் வசித்து விட்டு நாளாம் நாள் இரவு நடுநிசியில் கிளம்பி வந்து அதோ அந்தப் பாலத்தின் மேலிருந்து வெள்ளம் புரண்டோ டிய நதியின் நடுவில் குதித்தேன். எத்தனையோ விபத்துக்களுக்கெல்லாம் தப்பிய என் உயிரைக் கடைசியில் தானாகவே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்று என் தலையில் எழுதியிருந்தது..." மைதிலி கதையை நிறுத்தினாள். "அப்புறம் என்ன?" என்றேன். "மரணத்திற்கு அப்புறம் என்ன? ஒன்றுமில்லை" என்றாள். "அப்படியானால், நீ யார்?" "அதுதான் எனக்கும் தெரியவில்லை, அற்பாயுளில் மாண்டவர்களின் ஆவி இறந்த இடத்திலேயே உலவுமென்கிறார்களே, அதுதானோ என்னவோ?" பிறகு, நான் சாவதானமாக, "சரி! மேலே கதையைச் சொல். 'ஷுட்டிங்' எல்லாம் முடிந்து, வேஷத்தைக் கலைத்துவிட்டு, எல்லாரும் ஊருக்குக் கிளம்பினீர்களாக்கும்!" என்றேன். ஒரு நிமிஷம் மைதிலி திகைத்துவிட்டாள். என் இரண்டு கைகளையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டு "உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள். "பிறகு சொல்கிறேன்; முதலில் நீ உண்மையைச் சொல், உன் கதையில் எவ்வளவு வரை நிஜம், எவ்வளவு வரை நடிப்பு?" என்று கேட்டேன். 7
மைதிலிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. "இந்த நடுநிசி வேளையில் பயங்கரமான இடி முழக்கங்களுக்கு மத்தியில், என் கதையை நீங்கள் கட்டாயம் நம்புவீர்களென்று எதிர்பார்த்தேன். அது பிரயோஜனப்படவில்லை" என்றாள். "நீ சொன்னதில் நிஜக் கதையும் கொஞ்சம் கலந்துதானிருந்தது. எது வரையில் உன் கதை, எது வரையில் டாக்கிக் கதை என்று தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றேன். "என்னுடைய நிஜக் கதையைச் சொன்னால் நம்பமாட்டீர்களென்றும், ஒரு வேளை பரிகாசம் செய்வீர்களென்றும் நினைத்தேன். நான் சொன்னதில் என் தகப்பனாரையும் குடும்பத்தையும் பற்றிச் சொன்னதெல்லாம் நிஜம். என்னைக் கிழ மிராசுதாருக்கு விற்றதிலிருந்துதான் கதை. அதற்குப் பதிலாக, என்னை என் தகப்பனார் ஒரு டாக்கி முதலாளிக்கு விற்றார். ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. எங்கள் குடும்பத்தின் தரித்திரம் தீர்ந்தது. ஆனால் என் தந்தை மட்டும் மனம் நொந்து போனார். என்னுடைய முதல் டாக்கி வெளியான சில காலத்துக்கெல்லாம், அவர் காலஞ்சென்றார். கதையில் நேர்ந்தது போலவே ஏற்கனவே எங்களைப் புறக்கணித்த பந்துக்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து கொண்டார்கள். என்னுடைய மாமா ஒருவர் பெரிதும் பணத்தாசை உண்டக்கி விட்டார். ஆகவே, இன்னொரு டாக்கியில் நான் நடிப்பதற்காக பேரம் நடந்தது. அப்பா இறந்து போனபின், நான் மனம் குன்றிப் போயிருந்தேன். ஒரே டாக்கியுடன் நிறுத்திக் கொண்டு என்னைக் கலியாணம், செய்து கொடுத்துவிட வேண்டுமென்பது அவருடைய எண்ணம். அவர் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் டாக்கியில் நடிக்க எனக்கு இஷ்டமில்லையென்றாலும், அம்மா மாமா இவர்களுடைய பிடிவாதத்துக்கு உட்பட வேண்டியதாயிருந்தது. இரண்டாவது டாக்கியின் கடைசிக் காட்சிகளை இரண்டு நாளைக்கு முன்பு இங்கே தான் எடுத்து முடித்தார்கள்; கதாநாயகி அதோ அந்தப் பாலத்திலிருந்து விழுந்து தான் இறந்து போகிறாள். ஷுட்டிங் முடிந்ததும் எல்லாரும் போய்விட்டார்கள். என்னுடைய தாயாருக்கு உடம்பு சரிப்படாமலிருந்ததால், நாங்கள் மட்டும் அடுத்த கிராமத்திலுள்ள ஜாகையிலேயே சில நாள் தங்கினோம். ஏற்கெனவே, எனக்கு உயிர் கசந்து போயிருந்தது. டாக்கி எடுக்கும் போது எந்தெந்த மாதிரி ஸ்திரி புருஷர்களுடனெல்லாம் பழக வேண்டியிருக்கிறதென்பதை உங்களால் கற்பனை செய்யவே முடியாது. அம்மா! அவர்கள் மூஞ்சியும் முகரக்கட்டையும்! டாக்கியில் வேஷம் போட்டுப் பார்த்தவர்களை அப்புறம் பார்க்கவே வேண்டியிராது. இன்னும், டாக்கி நட்சத்திரங்களின் முகத்தை பார்ப்பதற்கென்று பல்லிளித்துக் கொண்டு வருகிறவர்களைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. இதனாலெல்லாம் 'இது என்ன வாழ்வு' என்று ஏக்கங் கொண்டிருந்தேன். முன்னமே இப்படியென்றால், இந்த டாக்கி முடிந்ததும், என் மனச்சோர்வு நூறு மடங்கு அதிகமாயிற்று; இப்படி வேஷம் போட்டுப் பணம் சம்பாதித்து யாருக்காக உயிர் வாழவேண்டுமென்று தோன்றியது. ஆகவே, நேற்றிரவு நடுநிசிக்கு, டாக்கியின் கதாநாயகி உயிரை விட்ட இடத்திலேயே நானும் உயிரை விடுவதென்று வந்தேன்..." "பின்னே ஏன் தாமதித்தாய்?" என்று கேட்டேன். "மதகிலிருந்து குதிக்கப் போன சமயம், மோட்டார் குழலின் சத்தம் கேட்டது. எக்காரணத்தினாலோ, உடனே என் தைரியம் போய்விட்டது..." என்று கூறி, மேலே பேசுவதற்குத் தயங்கினாள். "காரணம் நானே சொல்லிவிடட்டுமா? டாக்கியின் கதாநாயகியைப் போலவே, உன்னுடைய உள்ளமும் உருவந் தெரியாத ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தது. அவர் அந்த மோட்டாரில் வருகிறார் என்று உன் இருதயத்தினுள்ளே ஏதோ சொல்லிற்று. இல்லையா?" என்றேன். மைதிலி கண்களில் அளவிலா ஆச்சரியம் தோன்ற "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நீங்கள் மந்திரவாதியா?" என்றாள். "வானம் வெளிவாங்கிவிட்டது. வா, போகலாம்" என்று சொல்லி எழுந்து நின்றேன். அவள் எழுந்திருக்கவில்லை. "உன் இருதயம் சொன்னது சரி. மின்னல் வெளிச்சத்தில் இன்று உன்னை நான் முதல் தடவை பார்த்ததும்..." "நிஜமாகவா? ஏற்கனவே என்னை நீங்கள் பார்த்ததில்லையா? என்னுடைய முதல் டாக்கியில் ஒரு வேளை பார்த்திருப்பீர்கள், அதனால் அடையாளம் கண்டுபிடித்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?" "நான் உன்னுடைய முதல் டாக்கிக்குப் போகவில்லை. உன்னை அதற்கு முன்னல் பார்த்ததும் இல்லை. நீ தேடியது போலவே, மனக்கண்ணுக்கு நன்கு தெரியாத ஒரு உருவத்தை நானும் தேடிக்கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தவுடனே நான் தேடியவள் நீதான் என்று என் இருதயம் சொல்லித் தெரிந்து கொண்டேன்." மைதிலி எழுந்து நின்றாள். "ஐயா! என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா? நிஜமாய்ச் சொல்லுங்கள். நீங்கள் யார்? நான் சொன்னது டாக்கிக் கதையென்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நீங்கள் என்னைத் தேடியதாகச் சொன்னதெல்லாம் உண்மையா, அதுவும் ஒரு கதைதானா?" என்றாள். "மைதிலி, என்னுடைய வாழ்நாளில் நான் ஒரே ஒரு கதைதான் எழுதினேன். அதைத்தான் நீ சற்று முன்பு சொன்னாய்; நானே கேட்டு மயிர்க் கூச்செறியும்படி சொன்னாய்..." என்பதற்குள், மைதிலி அளவிலா வியப்புடன், "என்ன? என்ன? நிஜமாக நீங்களா அந்தக் கதை எழுதியது?" என்றாள். "ஆமாம்! என்னுடைய நாவலின் கையெழுத்துப் பிரதியை ஒருவர் வாசிப்பதற்கு எடுத்துக் கொண்டு போனார். சில நாளைக்கெல்லாம் அவர் இந்தியாவை விட்டு மலாய் நாட்டுக்குப் போய்விட்டார் என்று அறிந்தேன். போவதற்குமுன் அந்த அசட்டுக் கதையை உங்கள் முதலாளியிடம் அவர் விற்றுவிட்டுப் போயிருக்க வேண்டும். தமிழ் டாக்கிக்காரர்கள் தான் கதை அகப்பட்டால் போதுமென்று இருக்கிறார்களே... அஸம்பாவிதங்கள் நிறைந்த அந்தக் கதை எனக்கே பிடிக்கவில்லைதான். ஆனால் அதில் ஓர் அம்சம் மட்டும் உண்மையானதாகையால் எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய உள்ளத்திலிருந்த ஏக்கத்தையே தான் அந்தக் கதாநாயகியின் மூலம் நான் வெளியிட்டிருந்தேன். கதை எழுதியபோது, என்னுடைய இருதயத்தேட்டம் பூர்த்தி பெறவில்லையாதலால், கதாநாயகி உயிரை விட்டாள் என்று சோகமாய்க் கதையை முடித்திருந்தேன்" என்றேன். *****
பட்சி ஜாலங்கள் உதயராகம் பாடிச் சூரியோதயத்தை வரவேற்கும் மனோகரமான காலை நேரத்தில், கார்காலத்தின் குளிர்ந்த காற்று மரக்கிளைகளின் மீது விளையாடி மழைத் துளிகளை உதிர்த்துக் கொண்டிருந்த கிராமாந்தரத்துச் சாலையில், நானும் மைதிலியும் கைகோத்துக் கொண்டு, எங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தைத் தொடங்கினோம். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |