பரிசல் துறை 1 காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட 'சலசல' சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச மரத்துடன் ஒரு வேப்ப மரமும் அண்டி வளர்ந்து இருந்தது. இவற்றின் அடியில் இருந்த மேடையில் ஒரு கல்லுப் பிள்ளையார் எழுந்தருளியிருந்தார்.
வேலம் பாளையம் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். அதற்குச் சமீபத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதின்மூன்று மைல் தூரத்திலிருப்பது. கிராம வாசிகள் ரொம்பவும் சாமான்யமான ஜனங்கள். குடியானவர்களும், கைக்கோளர்களும், ஹரிஜனங்களும்தான் அங்கே வசித்தார்கள். காவேரிக் கரையில் இருந்தும் ஜலக் கஷ்டம். அவ்விடம், காவேரி ஆற்றின் தண்ணீர் சாகுபடிக்குப் பயன் படுவதில்லை. பூமி அவ்வளவு மேட்டுப் பாங்காயிருந்தது. சாதாரணமாய், கரையிலிருந்து வெகு ஆழத்தில் ஜலம் போய்க் கொண்டிருக்கும். பெரும் பிரவாகம் வருங்காலத்தில் அரச மரத்தின் அடிவேரைத் தொட்டுக் கொண்டு போகும். இப்படிப்பட்ட பட்டிக்காட்டிலே கொண்டு வந்து காப்பி ஹோட்டல் வைத்திருந்தார் ஒரு பாலக்காட்டு ஐயர். அவர் வட துருவங்களுக்குப் போய்ப் பார்த்து, அங்கே கூட ஹோட்டல் அதிகமாகி வியாபாரம் கம்மியாய்ப் போனதைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். பரிசல் துறையிலிருந்து கிராமம் கொஞ்ச தூரத்திலிருந்தது. பரிசல் துறைக்கு அருகில் இரண்டே கூரைக் குடிசைகள். அவற்றில் ஒன்றிலேதான் ஹோட்டல். அதன் வாசலில் இங்கிலீஷிலே "டிரிப்ளிகேன் லாட்ஜ்" என்றும், தமிழிலே "பிராமணாள் காப்பி - டீ கிளப்" என்றும் எழுதிய போர்டு ஒன்று தொங்கிற்று. அன்று சந்தை நாள் ஆகையால் ஹோட்டலில் வியாபாரம் அதிகம். உள்ளே ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் தையல் இலையில் வைத்திருந்த இட்டிலியை வெகு சிரமத்துடன் விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "ஐயரே! எங்கே, ஒரு கப் காப்பி 'அர்ஜெண்'டாக் கொண்டாரும் பார்க்கலாம்" என்றார் அவர்களில் ஒருவர். "ஏஞ்சாமி! நீங்க காப்பியிலே தண்ணீ ஊத்தற வழக்கமா, தண்ணியிலே காப்பி ஊத்தற வழக்கமா" என்று கேட்டார் ஹாஸ்யப் பிரியர் ஒருவர். "ஐயர் பாடு இனிமேல் கொண்டாட்டந்தான். காவேரித் தண்ணியெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து காப்பி, டீன்னு சொல்லி வித்துப்பிடுவாரு. காங்கிரஸ் கவர்மெண்டிலேதான் கள்ளுக்கடையை மூடிடப் போறாங்களாமே?" என்றார் மூன்றாவது பேர் வழி. "ஆமாம், போங்க! இந்த மாதிரிதான் எத்தனையோ நாளாய்ப் பேசிக்கிட்டிருக்கிறாங்கோ!" என்றார் ஒரு சந்தேகப் பிராணி. "இந்தத் தடவை அப்படியெல்லாம் இல்லை; நிச்சயமாய் சாத்திவிடப் போகிறார்கள். இப்போது காங்கிரஸ்தானே கவர்மெண்டே நடத்தறது? உத்தரவுகூடப் போட்டுட்டாங்களாம். அக்டோ பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு சொட்டுக் கள்ளு, சாராயம் இந்த ஜில்லாவிலேயே பேசப்படாது." "கள்ளுக்கடை மூடினால் ஐயருக்கு ரொம்பக் கொண்டாட்டம் என்கிறீங்களே? நிஜத்திலே அவருக்குத்தான் ஜாஸ்தி திண்டாட்டம்" என்றார் ஒரு வம்புக்கார மனுஷர். "அது என்னமோ? கொஞ்சம் வியாக்யானம் பண்ணுங்க!" என்றார் ஒரு கல்விமான். "ஆமாம்; பொழுது சாய்கிற வரைக்கும் ஐயர் காப்பிக் கடையிலே இருக்கிறாரு. பொழுது சாய்ந்ததும் கடையை மூடிக்கிட்டு எங்கே போறாரு கேளுங்க. என் வாயாலே நான் சொல்லலை. அவரையே கேட்டுக்கங்க..." அப்போது உள்ளேயிருந்து, "இந்தா கவுண்டரே! இப்படியெல்லாம் பேசினால் இங்கே ஒண்ணும் கிடைக்காது. காப்பி வாயிலே மண்ணைப் போட்டுடுவேன்" என்று கோபமான குரல் கேட்டது. "சாமி! சாமி! கோவிச்சுக்காதிங்க. இனிமே நான் அப்படி உங்க கிட்டக்கச் சொல்லலை, சாமி!" என்றார் கவுண்டர். அப்போது பரிசல் துறையிலிருந்து, "ஏ ஓடக்காரத் தம்பி, எத்தனை நேரம் நாங்க காத்துக்கிட்டிருக்கிறது?" என்று ஒரு கூக்குரல் கேட்டது. மேற்சொன்ன ரஸமான சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன், "ஐயரே! இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா?" என்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவன், "அதோ பார்த்தாயா, சுப்பண்ணா! பத்ரகாளி போறாள்!" என்றான் பக்கத்திலிருந்தவனிடம். ஓடக்காரத் தம்பி உடனே எட்டிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி தலையில் கத்திரிக்காய்க் கூடையுடன் பரிசல் துறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவ்விடம் அரசமரத்துப் பிள்ளையார் இருந்த இடத்துக்குக் கீழே சுமார் 30, 40 அடி ஆழம் இறங்கித்தான் தண்ணீர்த் துறைக்குப் போக வேண்டும். ஒரு கையால் தலைக் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கை ஊசலாட, இடுப்பு நெளிந்து நெளிந்து அசைய அந்த இளம்பெண், ஓடத்துறைக்கு இறங்கிக் கொண்டிருந்த காட்சியை அசப்பிலே பார்த்தால் உயர்தர சித்திரக்காரன் எழுதிய ஒரு சித்திரக் காட்சியைப் போல் தோன்றியது. ஓடக்காரத் தம்பி அவளைப் பார்த்த உடன், "சரி, சரி, இந்த ஐயர் இட்லி கொடுப்பார் என்று காத்திருந்தால், அடுத்த வெள்ளிக்கிழமைச் சந்தைக்குத் தான் போகலாம்" என்று சொல்லிக் கொண்டு எழுந்து விர்ரென்று வெளியே சென்றான். அவன் போனவுடன் ஹோட்டலில் பின்வரும் சம்பாஷணை நடந்தது:- "என்ன, பழனிச்சாமி திடுதிப்பென்று கிளம்பி ஓடிட்டான்." "காரணமாகத்தான். அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேணுமென்று இவனுக்கு ரொம்ப ஆசை. அவள் அப்பன் காளிக் கவுண்டன் 'கூடாது' என்கிறான். 'கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனுக்கு இரண்டாந் தாரமாகத்தான் கட்டிக் கொடுப்பேன்' என்கிறான். காளிக் கவுண்டன் பெரிய மொடாக்குடியன். தெரியாதா உனக்கு?" "அதேன் பத்திரகாளி என்று அவளுக்கு பேரு? அவள் அப்பன் வைச்சது தானா?" "அவள் நிஜப் பேரு குமரி நங்கை, ரொம்ப முரட்டுப் பெண். அப்பனுக்கு அடங்கமாட்டாள். ஊரிலே ஒருத்தருக்குமே பயப்பட மாட்டாள். அதனால்தான் 'காளிமவள் பத்திரகாளி' என்று அவளுக்குப் பெயர் வந்தது. "அவளைக் கட்டிக்க வேணுமென்று இந்தப் பையனுக்கு ஆசை உண்டாச்சு பாரேன்! என்ன அதிசயத்தைச் சொல்ல?" குமரி நங்கை பரிசலின் சமீபம் வந்ததும் அதில் ஏற்கனவே ஏறியிருந்தவர்களைப் பார்த்து, "ஏன், ஓடக்காரர் இல்லையா, என்ன" என்றாள். "அதோ பார் பின்னாலே!" என்றான் பரிசலில் இருந்தவர்களில் ஒருவன். குமரி நங்கை திரும்பிப் பார்த்தாள். பழனிச்சாமி அவளுக்கு வெகு சமீபமாய் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் காரணமில்லாமல் திடுக்கிட்டாள். பரிசலில் இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள். ஆனால், பழனிச்சாமி இதையெல்லாம் சற்றும் கவனிக்காதவன் போல் விரைவாகச் சென்று பரிசலில் ஏறினான். குமரி நங்கை ஏறினாளோ இல்லையோ, பரிசல் இரண்டு தடவை நின்ற இடத்திலேயே வட்டமிட்டு விட்டு, விர்ரென்று போகத் தொடங்கியது. படகிலிருந்தவர்கள் ஏதேதோ ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழனிச்சாமியாவது குமரி நங்கையாவது வாயைத் திறக்கவில்லை. அக்கரை நெருங்கியதும், பழனிச்சாமி பரிசலைச் சிறிது நிறுத்தி, "துட்டு எடுங்க!" என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, "இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி! வரும்பொழுது தருகிறேன்" என்றான். குமரி நங்கையும் கையில் இரண்டணாவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்; அதைப் பழனிச்சாமி கவனிக்கவுமில்லை; வாங்கிக் கொள்ளவுமில்லை. பரிசலைக் கரையிலே கொண்டு சேர்த்து விட்டுக் கீழே குதித்தான். எல்லாரும் இறங்கினார்கள். குமரி நங்கை கடைசியாக இறங்கி, இரண்டணாவை நீட்டினாள். பழனிச்சாமி அப்போதும் அதைப் பாராதவன் போல் இருக்கவே, அவள் பரிசலின் விளிம்பில் அதை வைத்து விட்டுப் போய் விட்டாள். 2
சூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன. பரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி, சாமான்கள் அதில் வைத்திருந்தன. வாழைப்பழக் குலைகளும், கயிற்றில் கோத்த முறுக்குகளும் தொங்கின. பழனிச்சாமி அந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு கடைக்காரச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கவனம் பேச்சில் இல்லையென்று நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில் அடிக்கடி அவன் சாலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ எதிர் பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பவன் போல் காணப்பட்டான். குமரி நங்கை தண்ணீர்த் துறைக்குக் கிட்டத்தட்ட வந்த போது, பழனி பரிசலைக் கரையிலிருந்த அவிழ்த்துவிட்டு அதில் ஏறிக் கொண்டான். குமரி தயங்கி நின்றாள். வேறு யாராவது வருகிறார்களா வென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லை. "நீ வரவில்லையா? நான் போகட்டுமா? இனிமேல் திரும்பி வரமாட்டேன். இதுதான் கடைசித் தடவை" என்றான். குமரி இன்னமும் தயங்கினாள். மறுபடியும் சாலைப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். "இதோ பார் சந்தைக்கு வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நீ இப்போது உடனே வராவிட்டால், இராத்திரி இங்கேயே தங்க வேண்டியதுதான்" என்றான். குமரி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலை குனிந்தபடி சென்று பரிசலில் ஏறினாள். பரிசல் போக ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் வரை வேகமாய்ப் போயிற்று. பிறகு, ரொம்பத் தாமதமாய்ப் போகத் தொடங்கியது. குமரி நங்கை மேற்குத் திக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மலைவாயில் இறங்கி விட்டது. அவ்விடத்தில் சற்று முன் காணப்பட்ட மஞ்சள் நிறம் விரைவாக மங்கி வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருட்டியே போய்விடும். அதற்குள் படகு கரைசேராதா என்ன? பழனிச்சாமி அவளுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான். அவள் முகத்தில் அவன் என்னத்தைத் தான் கண்டானோ, தெரியாது. தினம் பார்க்கும் முகம் தானே? அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும்? சற்று நேரத்துக்கெல்லாம் இருட்டிப் போய்விடும். அப்புறம் அந்த முகத்தை நன்றாய்ப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினால் தானோ என்னமோ, கண்ணை எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான். குமரி நங்கைக்கு உள்ளுணர்வினாலேயே இது தெரிந்திருக்க வேண்டும். அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். "ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?" என்றாள். "நீ ஏன் என்னைப் பார்க்கிறாய்?" "நான் எங்கே பார்த்தேன்?" "நீ பார்க்காவிட்டால் நான் உன்னைப் பார்த்தது எப்படித் தெரிந்தது?" குமரி சற்றுப் பேசாமல் இருந்தாள். பிறகு, "பரிசல் ஏன் இவ்வளவு தாமதமாய்ப் போகிறது?" என்று கேட்டாள். "காரணமாய்த்தான். இரண்டு வருஷமாய் நான் உன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லவில்லை. இன்றைக்கு பதில் சொன்னால் தான் பரிசலை அக்கரைக்குக் கொண்டு போவேன்" என்றான். குமரி பேசவில்லை. பழனி மறுபடியும், "இதோ பார் குமரி! உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா? சொல்லுகிறேன். இன்று காலையில் நான் உன் முகத்தில் விழித்தேன். முதல் பரிசலில் நீ வந்தாய். அதனால் இன்றைக்கு எனக்கு நல்ல அதிர்ஷ்டம். ஏழு ரூபாய் வசூலாயிற்ரு. இன்னொரு பரிசல் வாங்குவதற்குப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றோடு ரூபாய் ஐம்பது சேர்ந்து விட்டது" என்று சொல்லி, பரிசலின் அடியில் கிடந்த பணப்பையை எடுத்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு மறுபடி கீழே வைத்தான். "நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், தினமும் உன் முகத்தில் விழிக்கலாமே, தினமும் எனக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்குமே என்று பார்க்கிறேன்" என்றான். "இப்படி ஏதாவது சொல்லுவாய் என்று தான் உன் பரிசலில் தனியாய் ஏறப்படாது என்று பார்த்தேன்..." "பின் ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்?" "சீக்கிரம் போனால், கத்திரிக்காய் விற்ற பணம் அவ்வளவையும் அப்பன் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடும். 'அது' கடைக்குப் போன பிறகு நான் வீட்டுக்குப் போனால் தேவலை என்று கொஞ்சம் மெதுவாய் வந்தேன். இருக்கட்டும்; நீ இப்போது சீக்கிரம் பரிசலை விடப் போகிறாயா, இல்லையா?" "முடியாது அம்மா, முடியாது!" என்று பழனி கையை விரித்தான். பரிசல் தள்ளும் கோலைக் கீழே வைத்துவிட்டு, குமரியின் சமீபமாக வந்தான். "இன்றைக்கு நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய், சுவாமி கிருபையினால். உன்னை நான் விடப் போவதில்லை. நீ என்னைக் கட்டிக் கொள்கிறதாக சத்தியம் செய்து கொடு. கொடுத்தால் பரிசலை விடுகிறேன். இல்லாவிட்டால் மாட்டேன்" என்றான். குமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் கோபம் ஜொலித்தது. "கிட்ட வராதே! ஜாக்கிரதை!" என்றாள். "கிட்ட வந்தால் என்ன பண்ணுவாய்? சத்தியம் செய்து கொடுப்பாயா! மாட்டாயா?" "மாட்டேன்." "பின்னே, அந்தக் கள்ளுக் கடைக்காரனையா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?" "சீ! வாயை மூடு!" "அதெல்லாம் முடியாது. உன்னை நான் விட மாட்டேன். நீ என்னைக் கட்டிக் கொள்ள மாட்டேனென்றால், நான் உன்னை கட்டிக் கொள்ளப் போகிறேன்" என்று சொல்லி, பழனி இன்னும் அருகில் நெருங்கினான். "என் பெயர் என்ன தெரியுமா? 'பத்திரகாளி!'" என்றாள் குமரி. "நீ பத்திர காளியாயிருந்தால் நான் ரண பத்திரகாளி" என்று பழனி சொல்லி, அவளுடைய தோளில் கையைப் போட்டான். உடனே, குமரி அந்தக் கையை வெடுக்கென்று ஒரு கடி கடித்தாள். "ஐயோ!" என்று அவன் அலறிக் கொண்டு கையை எடுத்ததும், 'தொப்'பென்று தண்ணீரில் குதித்தாள். அவள் குதித்தபோது பரிசல் ஒரு பெரிய ஆட்டம் ஆடி ஒரு புறமாய்ப் புரண்டது. அப்போது, குமரியின் கூடை, பழனியின் மேல் துணி, பணப்பை எல்லாம் ஆற்றிலே விழுந்தன. பழனிக்கு ஒரு நிமிஷம் வரை இன்னது நடந்தது என்றே தெரியவில்லை. பரிசல் புரண்டபோது பரிசல் தள்ளும் கோல் ஆற்றில் போய் விடாதபடி இயற்கை உணர்ச்சியினால் சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். பிறகு, குமரி நங்கை அந்தப் பிரவாகத்தில் நீந்துவதற்கு முயன்று திண்டாடுவதைப் பார்த்துத்தான் அவனுக்குப் புத்தி ஸ்வாதீனம் வந்தது. "ஐயோ! குடி முழுகிப் போச்சே!" என்று அவன் உள்ளம் அலறிற்று. அவசரமாய்ப் படகைச் சமாளித்துக் கொண்டு, பிரவாகத்துடன் குமரி போராடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய், "குமரி, குமரி! நான் செய்தது தப்புத்தான். ஏதோ கெட்ட புத்தியினால் அப்படிச் செய்து விட்டேன், மன்னித்துக்கொள். இனிமேல் உன்னைத் தொந்தரவே செய்வதில்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இப்போது இந்தக் கழியைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்ப் பரிசலில் ஏறிக்கொள்" என்று கதறினான். குமரி அவனை ஒரு பார்வை பார்த்தாள். பழனி, "என் தலைமேல் ஆணை. உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். ஏறிக் கொள்" என்றான். "கையைக் கொடு!" என்றாள். அவன் கொடுத்ததும் ஒரு எம்பு எம்பி பரிசலுக்குள் ஏறினாள். பரிசல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு மறுபடி சரியான நிலைமைக்கு வந்தது. அவள் ஏறினவுடனே பழனிச்சாமி அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பாராமல் பரிசலில் இன்னொரு பக்கத்துக்குப் போனான். வெகு வேகமாகப் பரிசல் தள்ள ஆரம்பித்தான். குமரி இருந்த பக்கம் பார்க்கவேயில்லை. குமரி இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய துணியில் இரத்தக் கறை பட்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்குத் துணுக்கென்றது. அவன் அருகில் போய்ப் பார்த்தாள். கையில் அவள் கடித்த இடத்தில் இன்னமும் இரத்தம் பெருகிச் சொட்டிக் கொண்டிருந்தது. குமரியின் உள்ளத்தில் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. கொஞ்சம் துணி இருந்தால் காயத்தைக் கட்டலாம். பழனியின் மேல் துண்டு கிடந்த இடத்தைப் பார்த்தாள். அந்தத் துண்டைக் காணவில்லை. அங்கிருந்த பணப் பையையும் காணவில்லை! குமரியின் நெஞ்சு மீண்டும் ஒரு முறை திடுக்கிட்டது. தான் நதியில் குதித்த போது பரிசல் புரண்டதில் பணப்பையும் மேல் துண்டும் வெள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்! ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, குமரி தன்னுடைய சேலைத் தலைப்பில் ஒரு சாண் அகலம் கிழித்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து பழனியின் கையில் கடிபட்ட இடத்தில் கட்டிவிட்டாள். பிறகு, பரிசலின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்புறமுங்கூடப் பழனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கீழ் வானத்தின் அடியில் உதயமாகிக் கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய 'கண்ட'த்திலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு உள்ளத்திலே ஏற்படக் கூடிய சாந்தி அவள் மனத்தில் இப்போது ஏற்பட்டிருந்தது. கடவுளே! எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே! எல்லாம் உன் அருள்தான்! கையில், குமரி பல்லால் கடித்த இடத்தில் 'விண் விண்' என்று தெறித்துக் கொண்டிருந்தது. அதை அவன் இலட்சியம் செய்யவில்லை. கோலுக்குப் பதிலாகத் துடுப்பை உபயோகித்து முழு பலத்துடனும் தள்ளினான். சிறிது நேரத்துக்கெல்லாம் பரிசல் கரையை அடைந்தது. இருட்டுகிற சமயம் ஆற்றங்கரையோடு இரண்டு வாலிபர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழனியும் குமரியும் மட்டும் பரிசலில் வந்து கரை சேர்ந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவன் சீட்டி அடித்தான்! இன்னொருவன் தெம்மாங்கு பாடத் தொடங்கினான். கரை சேர்ந்ததும் குமரி பரிசலிலிருந்து குதித்தாள். பழனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவசரமாய்க் கரையேறிச் சென்றாள். பழனி சற்று நேரம் பரிசலிலேயே இருந்தான். பிறகு அதைக் கரையில் வழக்கமான இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்தான். நடக்கும் போதே அவனுடைய கால்கள் தள்ளாடின. தேகம் நடுங்கிற்று. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொண்ட பிறகுதான், தனக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வந்தது. 3
நதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்குப் போயிருந்தாள். பழனி, காலையும் மத்தியானமும் காப்பி ஹோட்டலில் சாப்பிடுவான்; இராத்திரியில் சமையல் செய்து சாப்பிடுவான். இப்போது சுரமாய்ப் படுத்ததும், அவன் பாடு ரொம்ப சங்கடமாய் போயிற்று. பக்கத்தில் வேறு வீடு கிடையாது. காப்பி ஹோட்டல் ஐயர் கொண்டு வந்து கொடுத்த காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுக் கிடந்தான். ஐயரும் பகலில்தான் காப்பி ஹோட்டலில் இருப்பார். இருட்டியதும் கதவைப் பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த தம்முடைய வீட்டுக்குப் போய் விடுவார். சுரமாய்ப் படுத்து மூன்று நாள் ஆய்விட்டது. இந்த நாட்களில் ஆற்றில் பரிசல் போகவில்லை. ஆகையால் ஊரெல்லாம் ஓடக்காரத் தம்பிக்கு உடம்பு காயலா என்ற சமாசாரம் பரவியிருந்தது. பழனிசாமி முதல் நாளே அம்மாவுக்கு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டான். நாளை அல்லது நாளன்று அவள் வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அதுவரை ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தான் கழித்தாக வேண்டும். மூன்று நாள் சுரத்தில் பழனி ரொம்பவும் மெலிந்து போயிருந்தான். கை வீக்கம் ஒரு பக்கம் சங்கடம் அளித்தது. அன்று சாயங்காலம் எழுந்து விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவனுக்கு உடம்பில் சக்தியில்லை. "விளக்கு ஏற்றாமல் போனால்தான் என்ன?" என்று எண்ணிப் பேசாமல் படுத்திருந்தான். உள்ளே நன்றாய் இருண்டு விட்டது. திறந்திருந்த வாசற்படி வழியாக மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் தெரிந்தது. பழனி அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஏனெனில், அந்த வாசற்படியில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. அந்த வேளையில் யார் அங்கே வரக்கூடும்? "யார் அது?" என்று கேட்டான். "நான் தான்" என்று குமரி நங்கையின் குரலில் பதில் வந்தது. பழனி சற்று நேரம் ஸ்தம்பித்துப் போய்விட்டான். "விளக்கு இல்லையா?" என்று குமரி கேட்டாள். "மாடத்தில் இருக்கிறது. இதோ ஏற்றுகிறேன்" என்றான் பழனி. "வேண்டாம். நீ படுத்திரு. நான் ஏற்றுகிறேன்" என்று சொல்லி, குமரி சுவரில் மாடம் இருக்கும் இடத்தைத் தடவிக் கண்டு பிடித்து விளக்கு ஏற்றினாள். "உனக்கு காயலா என்று சொன்னார்கள். பார்த்துப் போகலாமென்று வந்தேன். என்னால் தான் உனக்கு இந்தக் கஷ்டம் வந்தது. என்னால் எல்லாருக்கும் கஷ்டந்தான்..." "ரொம்ப நன்றாய் இருக்கிறது. நீ என்ன பண்ணுவாய்? நான் பண்ணினதுதான் அநியாயம். அதை நினைக்க நினைக்க எனக்கு வேதனை பொறுக்கவில்லை. என்னமோ அப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. நீ மன்னித்துக் கொள்ள வேண்டும்." "நான் மன்னிக்கவாவது? என்னால்தான் உனக்கு எவ்வளவோ கஷ்டம். பரிசலில் வைத்திருந்த பணம் ஆற்றோடு போய்விட்டதல்லவா? அதற்குப் பதில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லி, ஒரு துணிப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்த பழைய பத்து ரூபாய் நோட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு பையைப் பழனிச்சாமியின் பக்கத்தில் வைத்தாள். பழனி ரொம்பக் கோபமாய்ச் சொன்னான். "இந்தா பேசாமல் இதை எடுத்துக் கொண்டு போ. அப்படி இல்லையானால் நான் நாளைக்கே உன் அப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன்" என்றான். "ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பரிசல் வாங்குவதற்குச் சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே? இனி என்ன செய்வாய்?" "போனால் போகட்டும்; இந்தப் பரிசலும் போனாலும் போகட்டும். நான் செய்த தப்புக்கு இதெல்லாம் போதாது. குமரி, நான் இந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்து விட்டேன். அப்படிப் போனால்தான் உன்னை என்னால் மறக்க முடியும்?" என்றான். அப்போது குமரி நங்கையின் கண்களிலிருந்து பொல பொலவென்று ஜலம் உதிர்ந்தது. பழனி அதைப் பார்த்துவிட்டு, "இது என்ன குமரி, நான் ஊரைவிட்டுப் போவதில் உனக்கு வருத்தமா?" என்றான். "நிஜமாகவா, குமரி! நான் என்ன கனாக் காண்கிறேனா!" என்றான் பழனி. பிறகு, "அப்படியென்றால், என் மேல் இத்தனை நாளும் ஏன் அவ்வளவு கோபமாய் இருந்தாய்? என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய்? கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம்?" என்று கேட்டான். "அது பொய். நான் கள்ளுக் கடைக்காரனைக் கட்டிக்கப் போகிறதில்லை. எங்க அப்பன் அப்படி வற்புறுத்தியது நிஜந்தான். நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்பன் கள்ளுக் குடிக்கிறவரையில் நான் கல்யாணமே கட்டிக்கிறதில்லையென்று ஆணை வைத்திருக்கிறேன்.." "என்ன? என்ன?" என்று பழனிச்சாமி வியப்புடன் கேட்டான். "சத்தியமாய்ச் சொல்லுகிறேன்; அதுதான் நிஜம்." "அப்படின்னா, உங்கப்பன் குடிக்கிறதை விட்டுட்டா, அப்புறம்?..." "நடக்காததைப் பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்?..." என்றாள் குமரி. கண்களிலிருந்து மறுபடியும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அப்போது தண்ணீர்த் துறையில் யாரோ பேசும் குரல் கேட்டது. குமரி திடுக்கிட்டு, "நான் போகிறேன். என்னால் உனக்கு எவ்வளவோ கஷ்டம். எல்லாவற்றையும் மன்னிச்சுக் கொள்" என்று கூறி விட்டு, போகத் தொடங்கினாள். பழனி "குமரி, குமரி! இந்தப் பணத்தை நீ எடுத்துக் கொண்டு போக வேண்டும். என்னிடம் பரிசல் வாங்கப் பணம் இருக்கிறது. நீ எடுத்துக் கொண்டு போகாவிட்டால், உங்க அப்பனிடம் கொடுத்து விடுவேன்" என்றான். "ஐயோ! அவ்வளவும் கள்ளுக்கடைக்குப் போய் விடுமே!" என்று சொல்லிக் கொண்டு குமரி அவன் அருகில் வந்தாள். பழனி பணப்பையை நீட்டினான். குமரி அதைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அப்போது என்ன தோன்றிற்றோ என்னவோ, சட்டென்று அவனுடைய உள்ளங்கையைத் தூக்கித் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பிறகு விரைவாக வெளியில் சென்றாள். 4
குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். "யாராயிருக்கலாம்?" என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே வருவதைக் கண்டதும், அவனுக்குச் சொரேல் என்றது. ஒரு கணத்தில் என்னவெல்லாமோ தோன்றி விட்டது. குமரி அங்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றும், தன்னைக் கொன்றாலும் கொன்று போடுவான் என்றும் எண்ணினான். தன் கதி எப்படியானாலும், குமரிக்கு என்ன நேருமோ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு பதை பதைத்தது. "தம்பி! இரண்டு நாளாய் உனக்குக் காயலாவாமே? உன் ஆயா கூட இல்லையாமே? பார்த்துவிட்டுப் போக வந்தேன்" என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும்? முதலில், அவனால் இதை நம்ப முடியவேயிலை. பரிகாசம் செய்கிறான், சீக்கிரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டுவான் என்று பழனி நினைத்தான். அப்படியொன்றும் நேரவில்லை. காளிக் கவுண்டன் கடைசி வரையில் ரொம்பப் பிரியமாகப் பேசினான். கிட்டவந்து உட்கார்ந்து உடம்பைத் தொட்டுப் பார்த்தான். "வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சிக்கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான். "ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா?" என்று விசாரித்தான். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படி புத்திமதி கூறினான். "தம்பி! நான் சொல்கிறதைக் கேளு, நீ இப்படி இன்னமும் கல்யாணம் கட்டாமலிருக்கிறது நன்றாயில்லை. ஒரு பெண்ணைக் கட்டிப் போட்டிருந்தால், இப்படி தனியாய்த் திண்டாட வேணாமல்லவா? உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள்? அவளுக்கும் வயசாச்சோ, இல்லையோ?" என்றான். பிறகு, "எது எது எந்தக் காலத்தில் நடக்கணுமோ, அது அது அந்தக் காலத்தில் நடந்து விட்டால்தான் நல்லது. அதுதான் நான் கூட நம்ம குமரியை இந்த ஐப்பசியில் கட்டிக் கொடுத்திடணும்னு பார்க்கிறேன். அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது?" என்று சொல்லி நிறுத்தினான். மறுபடியும் அவன் கோபம் வந்தவனைப்போல், "இந்த அதிசயத்தைக் கேளு, தம்பி! நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். 'அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா! உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம்!' என்று சொல்லிவிட்டேன்" என்றான். கடைசியில் "சரி தம்பி, நாளைக்கு வந்து பார்க்கிறேன். உடம்பை நல்லாப் பார்த்துக்கோ! என்று சொல்லிவிட்டுப் போனான். அவன் பேசப் பேசப் பழனிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தது. பேசும் போதெல்லாம் கவுண்டனிடமிருந்து கள்ளு நாற்றம் குப் குப் என்று வந்து கொண்டிருந்தபடியால், அவன் குடி வெறியில் தான் அப்படிப் பேசி இருக்க வேண்டுமெனத் தோன்றியது பழனிக்கு. மதுபானத்தின் எத்தனையோ சேஷ்டைகளில் இப்படித் திடீரென்று உறவு கொண்டாடுவதும் ஒன்றாயிருக்கலாமல்லவா? மறுநாள் பழனியின் தாய் வந்து விட்டாள். பிறகு இரண்டு மூன்று தினங்களில் பழனிக்கு உடம்பு சரியாய்ப் போய்விட்டது. கை வீக்கமும் வடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு அவன் பரிசல் தள்ளத் தொடங்கி விட்டான். ஆனால் அவன் காளிக் கவுண்டனைப் பற்றி எண்ணியது தவறாய்ப் போய் விட்டது. அவன் பழனியிடம் கொண்ட அபிமானம் குடிவெறியில் ஏற்பட்டதல்லவென்று தெரிந்தது. அடிக்கடி அவன் பழனிசாமியின் வீட்டுக்கு வந்து பேசத் தொடங்கினான். பழனியின் தாயாரிடம் பழனியின் கல்யாணத்தைப் பற்றிக் கூடப் பேசலானான். "அவன் அப்பனில்லாத பிள்ளை; அவனுக்கு உங்களைப் போல் நாலு பெரிய மனுசாள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்தால்தான் உண்டு" என்றாள் பழனியின் தாயார். "அதற்கென்ன, நானாச்சு! கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றான் கவுண்டன். காளி கவுண்டனிடம் ஏற்பட்டிருந்த இந்த அதிசயமான மாறுதலின் காரணம் பழனிக்குப் புலப்படவில்லை. இதில் ஏதாவது "சூது" இருக்குமோ என்று அவன் சந்தேகித்தான். அதனால், அவன் மனத்தில் சாந்தி இல்லாமல் போயிற்று. "அடுத்த வெள்ளியிலிருந்து பரிசல்காரத் தம்பிக்குக் கொண்டாட்டந்தான். ஒரு பரிசல் போதாது; மூன்று பரிசல் விடலாம்" என்றான் ஒருவன். "அது என்ன அப்படி?" என்று இன்னொருவன் கேட்டான். "ஆமாம்; அக்டோ பர் முதல் தேதி தான் இங்கே கள்ளுக்கடை மூடப் போகிறார்களே? அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்குப் போய்த் தானே குடிக்க வேணும்?" "அப்படி யாரடா இரண்டும் இரண்டும் நாலணா பரிசல் காசு கொடுத்துண்டு குடிக்கப் போறவனுக?" "எல்லாம் போவானுக, பாரு! போகாதே இருப்பானுகளா? நாலணா கொடுத்தாத்தானா? பரிசல்காரத் தம்பியிடம் சிநேகம் பண்ணிக்கிட்டா சும்மாக் கொண்டு விட்டுடறாரு!" இந்தப் பேச்சு பழனியின் காதில் விழுந்ததும் "ஓஹோ!" என்ற சப்தம் அவன் வாயிலிருந்து அவனை அறியாமலே வந்தது. பிறகு அவர்கள் பேசியது ஒன்றும் அவன் காதில் படவில்லை. அப்படிப் பெரிய யோசனையில் ஆழ்ந்து விட்டான். 5
செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள். பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில் கள்ளுப் பானையை வைத்துச் சுற்றி சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள்! உண்மையில் அவர்களுடைய நிலைமை பார்க்கப் பரிதாபமாகத் தானிருந்தது. ஆனால், காளிக் கவுண்டன் மட்டும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது அநேகம் பேருக்கு ஆச்சரியம் அளித்தது. காளி அன்று சாயங்காலம் பழனிசாமியிடம் போய், "தம்பி! நாளைக்குப் பொழுது சாய எனக்கு அக்கரையில் கொஞ்சம் வேலையிருக்கிறது. என்னைப் பரிசலில் இட்டுப் போக வேணும்" என்றான். "அதற்கென்ன, மாமா? என்னுடைய பரிசல் இருந்தால் அதில் முதல் இடம் உங்களுக்குத்தான்" என்றான் பழனி. அக்டோ பர் முதல் தேதி பிறந்தது. ஊரிலுள்ள ஸ்திரீ, புருஷர், குழந்தைகள் எல்லோரும் அன்று காலை எழுந்திருக்கும் போது ஒரே எண்ணத்துடன் தான் எழுந்தார்கள்; "இன்று முதல் கள்ளு, சாராயக்கடை கிடையாது" என்று. அநேகர் எழுந்ததும் முதல் காரியமாகக் கள்ளுக் கடையைப் போய்ப் பார்த்தார்கள். அங்கே கள்ளுப் பானைகள் இல்லாதது கண்டு அவர்கள் "இப்பேர்ப்பட்ட அற்புதமும் நிஜமாகவே நடந்து விட்டதா?" என்று பிரமித்துப் போய் நின்றார்கள். இந்தப் பரபரப்புக்கு இடையில் இன்னொரு செய்தி பரவிற்று. "பரிசல் துறையில் பரிசலைக் காணவில்லையாம்!" என்று. இது காளிக் கவுண்டன் காதில் விழுந்ததும், அவன் விரைந்து நதிக்கரைக்குப் போனான். அங்கே, பழனிசாமி முகத்தைக் கையினால் மூடிக்கொண்டு அழுது கொண்டு இருப்பதையும், நாலைந்து பேர் அவனைச் சுற்றி நின்று தேறுதல் சொல்லிக் கொண்டு இருப்பதையும் கண்டான். சமீபத்தில் போய் விசாரித்ததில், நேற்று ராத்திரி வழக்கம் போல் பழனி பரிசலைக் கரையிலேற்றி முளையில் கட்டிவிட்டுப் போனதாகவும், காலையில் வந்து பார்த்தால் காணோம் என்றும் சொன்னார்கள். காளிக் கவுண்டன், பழனியிடம் போய், "தம்பி! இதற்காகவா அழுவார்கள்? சீ, எழுந்திரு. ஆற்றோரமாய்ப் போய்த் தேடிப் பார்க்கலாம். அகப்பட்டால் போச்சு; அகப்படாமல் போனால், இன்னான் தான் போக்கிரித்தனம் பண்ணியிருக்க வேணுமென்று எனக்குத் தெரியும். கள்ளுக்கடைக் கவுண்டன் தான் செய்திருக்க வேண்டும். உனக்கு வரும்படி வரக் கூடாது என்று. அவனைக் கண்டதுண்டம் பண்ணிப் போட்டு விடுகிறேன். வா, போய்ப் பார்க்கலாம்" என்றான். அன்றெல்லாம் பரிசலைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; பரிசல் அகப்படவேயில்லை. சாயங்காலம், நேற்றுக் கள்ளுக்கடை இருந்த இடத்தில் இன்று பஜனை நடந்தது. காளிக் கவுண்டனும் போயிருந்தான். பஜனையில் பாதி கவனமும், பரிசல் மட்டும் கெட்டுப் போகாமல் இருந்தால் அக்கரைக் கள்ளுக்கடைக்குப் போயிருக்கலாமே என்பதில் பாதிகவனமுமாயிருந்தான். கள்ளுக்கடை மூடி ஏழெட்டு தினங்கள் ஆயின. அந்த ஏழெட்டு நாளில் ஊரே புதிதாய் மாறியிருந்தது. அந்த கிராமத்தின் ஆண் மக்களில் கிட்டத்தட்டப் பாதி பேருக்கு மேல் குடித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருந்தான். ஆகவே, கள்ளுக்கடை மூடிய சில நாளைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் காசு மிஞ்சியிருந்தது. கடை சாமான்கள் முன்னை விடத் தாராளமாய் வாங்க முடிந்தது. மனுஷ்யர்களுடைய புத்தியும் அதற்குள் நன்றாய் மாறி ஸ்திரப் பட்டுவிட்டது. முன்னெல்லாம் குடித்துக் கெட்டு அலைந்ததை எண்ணிய போது அவர்களுக்கே வெட்கமாயிருந்தது. இப்படி மாறியவர்களில் ஒருவன் காளிக் கவுண்டன். அவன் ஒரு நாள் பழனியிடம், "தம்பி! பரிசலை எந்தப் பயலோதான் ஆற்றில் இழுத்து விட்டிருக்கிறான். உனக்கு அதனால் எவ்வளவோ நஷ்டம். அவனைக் கண்டால் நான் என்னவேணாலும் செய்து விடுவேன். ஆனாலும் ஒரு விதத்தில் பரிசல் கெட்டுப் போனதும், நல்லதாய்ப் போயிற்று" என்று சொன்னான். "அது என்ன மாமா, அப்படிச் சொல்றீங்க? பரிசல் கெட்டுப் போனதில் நல்லது என்ன?" என்று பழனி கேட்டான். காளி சிரித்துக் கொண்டு, பழனியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். "தம்பி, நீ குழந்தைப் பிள்ளை. உனக்கு ஒன்றும் தெரியாது. நான் என்னத்துக்காகப் பரிசலில் அக்கரைக்கு வரேன்னு சொன்னேன், தெரியுமா? இந்த ஊரிலே கள்ளுக்கடை மூடி விடறதினால, அக்கரைக் கடைக்கு போகலாமின்னுதான்..." "அக்கரையிலே மட்டும் ஏன் கடைய வச்சிருக்காங்க?" என்று பழனி கேட்டான். "அது திருச்சிராப்பள்ளி ஜில்லா. அந்த ஜில்லாவிலே இன்னும் கடையை மூடலை. அடுத்த வருஷம் தான் மூடப் போறாங்களாம்." "ஏன் மாமா! அடுத்த வருஷம் நிச்சயம் கடை மூடிட்டால், அப்புறம் எங்க போறது?" "நல்ல கேள்வி கேக்கறே. அப்புறம் எங்கே போறது? பேசாமல் இருக்க வேண்டியதுதான்!" "அப்படி இப்பவே இருந்துட்டா என்ன, மாமா?" "அதற்குத்தான் குடிகாரன் புத்தி பிடரியிலே என்கிறது. எப்படியோ, பரிசல் கெட்டுப் போனாலும் போச்சு, எனக்கும் கள்ளுக்கடை மறந்து போச்சு" என்றான் காளி. பிறகு, எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "ஒரு சமாசாரம் கேளு, தம்பி... குமரி இருக்காள் அல்ல, அவள் நான் குடிக்கிற வரையில் கல்யாணம் கட்டிக்கிறதில்லை என்று ஆணை வைத்திருந்தாள். சுவாமி புண்ணியத்திலே குடிதான் இப்போ போயிருச்சே! இந்த ஐப்பசி பிறந்ததும் முகூர்த்தம் வச்சுடறேன். பேசாமே அவளை நீ கட்டிக்கோ. ரொம்ப கெட்டிக்காரி; அந்த மாதிரி பெண் உனக்கு அகப்படமாட்டாள்" என்றான். ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் பழனிசாமிக்கும் குமரி நங்கைக்கும் கல்யாணம் நடந்தது. ரொம்பக் கொண்டாட்டமாய் நடந்தது. கல்யாணம் ஆனதும் பழனிச்சாமி வடக்கே போய்ப் புதுப் பரிசல் வாங்கிக் கொண்டு வந்தான். வழக்கம் போல் பரிசல் துறையில் பரிசல் ஓடத் தொடங்கியது. ஆனால் சாயங்கால வேளைகளில் மட்டும் பழனி குறிப்பிட்ட சில பேரைப் பரிசலில் ஏற்றிக் கொண்டு போக மறுத்து விடுவான். பழைய பரிசல் என்ன ஆயிற்று என்பது தெரியவேயில்லை. அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? பரிசலின் சொந்தக்காரனே நடு நிசியில் எழுந்து வந்து, பரிசலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் எறிந்து விட்டிருக்கும் போது, அந்த இரகசியத்தை அவனாகச் சொன்னாலன்றிப் பிறரால் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |