சுண்டுவின் சந்நியாசம் நம்ம சுண்டுவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ? தெரியும் என்று ஒப்புக் கொண்டு விடுங்கள்! தெரியாது என்று நீங்கள் சொன்னால் அவன் உங்களை விட்டு விடப் போகிறானா என்ன? முதுகு வலிக்கு ஆளாவதுதான் பலனாக முடியும். முதன் முதலில் சுண்டுவை நான் சந்தித்தபோது அப்படித்தான் ஜால்ஜாப்பு சொல்லிப் பார்த்தேன். திடீரென்று முதுகில் ஒரு பலமான தட்டு விழவே, திடுக்கிட்டுத் திரும்பினேன். சுண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். "என்ன, அப்பனே! ஏன் முழிக்கிறாய்? சுண்டுவை அடையாளம் தெரியவில்லையோ?" என்று என் இரண்டு தோள்களையும் பிடித்துக் குலுக்கினான். பள்ளிக்கூட ஆசிரியர்களின் கூட்டம் ஒன்றில் நான் பின் வரிசையில் உட்கார்ந்து சொற்பொழிவுகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தபோது இந்த மகத்தான சம்பவம் நடந்தது.
"ஓஹோ!" என்று சுண்டு சிரித்து விட்டு, "அந்தக் காலத்தில் எப்படி இருந்தாயோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறாய். கொஞ்சங்கூட உருவத்திலோ குணத்திலோ மாறுதல் இல்லை!" என்றான். "எந்தக் காலத்தில்?" என்று கேட்டேன். "என்னப்பா பெரிய ஆளாயிருக்கிறாயே? சிதம்பரத்திலே படித்துக் கொண்டிருந்த காலத்திலேதான்." நான் சிதம்பரத்துக்கு அதுவரையில் போனதே கிடையாது. ஆனால் மேலும் மறுதலித்தால் முதுகுக்கு அபாயம் வரும் என்று பயந்து, "சரிதான்!" என்றேன்! "ஏனப்பா, கிருஷ்ணசாமி, என்னை ஏமாற்றலாமென்றா பார்த்தாய்?" என்று சொல்லி மறுபடியும் முதுகிலே ஒரு தட்டு தட்டினான். "எனது நாமதேயம் கிருஷ்ணஸ்வாமி இல்லை நாராயண ஸ்வாமி!" என்றேன். "ஆகா! வந்துட்டாயா வழிக்கு! அப்படிச் சொல்லு. எங்கே கிருஷ்ணசாமி என்றதும், உன் பெயர் கிருஷ்ணசாமிதான் என்று சொல்லி டிமிக்கி கொடுக்கப் பார்க்கிறாயோ என்று சோதித்தேன். அப்பனே, நாராயணசாமி! உன் பெயர் எனக்குத் தெரியாதென்றா நினைத்துக் கொண்டாய்!" உண்மையில் என் பெயர் நாராயணசாமியும் இல்லை! ஆனால் அதைச் சொல்லி என்ன பிரயோஜனம்? இப்பேர்ப்பட்ட ஆளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, "சுண்டு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன். "என்னத்தை செய்கிறது? உன் முதுகுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு பள்ளிக்கூட உபாத்தியாயர்களின் துயரங்களைப் பற்றிய அழுகையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! இப்படி எத்தனையோ நாளாகத்தான் பேசுகிறார்கள். யாருக்கு என்ன பிரயோஜனம்? புதுடில்லி வரையில் போய் வைஸ்ராயின் தாடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கத் தயாராயிருந்தால் அல்லவா வழி பிறக்கும்! சுத்த டாணா டாவன்னாக்கள்!" "கொஞ்சம் மெதுவாய் பேசு!" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபிறகு, "நான் கேட்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதே! அப்படியானால், நீ உபாத்தியார் இல்லையா?" என்றேன். "நல்ல கேள்வி கேட்டாய், அப்பா! டிபுடி கலெக்டருக்குப் பிள்ளையாகப் பிறந்துட்டு, அந்தப் பாழும் பரீட்சையிலே ஒரு மார்க்குக் குறைந்து போனதினாலே ஐ.சி.எஸ்.ஸுக்குப் போக முடியாமல் உட்கார்ந்திருக்கேன் நான். என்னைப் பார்த்து வாத்தியார் வேலையிலிருக்கிறாயா என்று நீ கேட்கிறாயே! உன்னைப் போன்ற ஆசாமிகள் இருக்கிறது வரையில் இந்த உலகம் உருப்படப் போகிறதில்லை! ஒரு நாளும் உருப்படப் போகிறதில்லை! நான் சொல்லுகிறது தெரிந்ததோ, இல்லையோ!" என்று என் முதுகின் மூலம் அதை அழுத்தமாய்த் தெரியப்படுத்த முயன்றான். "தெரிந்தது அப்பனே! தெரிந்து விட்டது!" என்று கதறினேன். இம்மாதிரியாக எனக்கும் சுண்டுவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்புறம் சுண்டுவும் நானும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத விதமாக வெல்லாம் சந்தித்து நாளொரு முதுகும் பொழுதொரு தட்டுமாக எங்கள் நட்பை வளர்த்துக் கொண்டு வந்தோம். ஒரு நாள் சுண்டுவைச் சந்தித்தபோது, "இப்போது என்ன செய்கிறாய்?" என்று கேட்டேன். "அப்படிக் கேள் சொல்கிறேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தானே கேட்கிறாய்? இந்த உலகத்துக்குப் புத்தி புகட்ட வழி தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் இருக்கிறதே; மகா முட்டாள் உலகம். பணம் உள்ளவனுக்குத்தான் இந்த உலகத்தில் மதிப்பு. பணக்காரன் என்னத்தை உளறிக் கொட்டினாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்கிறார்கள். பணமில்லாதவன் எவ்வளவு அறிவாளியா யிருந்தாலும் அவன் பேச்சு அம்பலத்தில் ஏறுகிறதில்லை." "உலகம் அப்படித்தான் இருக்கிறது. என்ன செய்கிறது?" என்று சுண்டுவை ஆமோதித்தேன். "ஆனால் உலகம் என்ன செய்யும்? உலகத்தைக் குறை கூறி என்ன பயன்? உலகத்தைப் படைத்த கடவுளைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் கடவுளாயிருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? நமது அளுகுண்ணி புளுகுண்ணி செட்டியார், அண்ணா மலேரியா முதலியார், அப்பண்ணா அபக்கண்ணா அய்யங்கார், கிருபணாஜி தசல்பாஜி ஐயர், டபிள் நிமோனியாடிலாமியா, திஜோடியா டிமிக்கிலால் டிங்கர்லால், பயானதாஸ் மயானதாஸ் பயங்கர்லால் ஆகிய எவ்வளவு பணக்காரப் பேர்வழிகளையும் கூப்பிட்டு வரிசையாக நிறுத்துவேன். நிறுத்தி, "உங்கள் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது? உண்மையைச் சொல்லுங்கள்!" என்று காதைப் பிடித்துத் திருகுவேன். அவர்கள் உண்மையைச் சொல்லியாக வேண்டும். சொல்லாவிட்டால் யார் விடுகிறார்கள்! பிறகு, "இவ்வளவு பணத்தையும் என்ன மாதிரி செலவு செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்பேன். அவர்கள் திருதிருவென்று முழிப்பார்கள்! "செலவு செய்ய வழி தெரிந்த பேர்வழி இதோ ஒருவன் இருக்கிறான். ஒவ்வொருவரும் உங்கள் பணத்தில் சரிபாதியை நமது சுண்டுவிடம் உடனே ஒப்புவித்து விட்டு மறுகாரியம் பாருங்கள்!" என்பேன். அவர்கள் அப்படியே செய்வார்கள். செய்யாவிட்டால் யார் விடுகிறார்கள்? தானே கதறிக் கொண்டு பணத்தைக் கொண்டு வந்து கலகலவென்று கொட்ட வேண்டாமா? ஆனால் சுண்டுவின் இஷ்டப்படி கடவுள் நடப்பதாகத் தெரியவில்லை. எனவே என்னிடம் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், டிராம் செலவுக்கென்று தனியாக நாலு அணாவும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தான். *****
அடுத்த தடவை நான் சுண்டுவைப் பார்த்தபோது, "பணமா! சீ! பணம் இங்கே யாருக்கு வேண்டும்? பணத்தைக் கொண்டு போய் உடைப்பிலே போடு!" என்றான். நான் திடுக்கிட்டு நிற்கையில், "பணத்தினால் மனித வர்க்கமே நாசமடைந்து வருகிறது! பணக்காரர்கள்தான் உலகத்தைப் பாழ் பண்ணி வருகிறார்கள்! பணம் சம்பாதிக்கிற எண்ணத்தை நான் விட்டு விட்டேன்!" என்றான். "பின்னே என்ன உத்தேசம் செய்திருக்கிறாய்?" என்று கேட்டேன். "உலகத்தை உத்தாரணம் செய்யப் போகிறேன். மனித வர்க்கத்தை மகோந்நத நிலைமைக்குக் கொண்டு வரப்போகிறேன்! ஆமாம்; தீர்மானம் செய்துவிட்டேன்!" என்றான். "எப்படி!" என்று கேட்டேன். "எப்படியா! சொல்கிறேன், கேள். நான் எழுத்தாளன் ஆகப் போகிறேன். அச்சடித்த எழுத்துக்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை. ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால், முட்டாள் ஜனங்கள் அது எவ்வளவு அபத்தமானாலும் அப்படியே விழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது ஒன்றுதான் சரியான வழி!" என்றான். "ரொம்ப சந்தோஷம்!" என்றேன். "ஆனால் உன்னை மறந்து விடுவேன் என்று பயப்படாதே! உலகத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவுடனே உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்!" என்று அபயம் அளித்தான். *****
மறுபடியும் சுண்டுவைப் பார்த்தபோது, "எழுத்தாளன் ஆகும் முயற்சியில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறாய்?" என்று கேட்டேன். "அப்பனே! உலகத்திலே வேறு எந்த தொழில் வேணுமானாலும் செய்யலாம். தெருக் கூட்டலாம்; ஹோட்டல் வைக்கலாம்; மந்திரி வேலை வேணுமானாலும் பார்க்கலாம். ஆனால் எழுத்தாளனாக மட்டும் ஆகக் கூடாது. அதிலும் நமது நாட்டில் இப்போது உள்ள பத்திரிகையாசிரியர்கள் இருக்கும் வரையில் எழுத்தாளனாகவே ஆகக் கூடாது. பத்திரிகாசிரியர்களா இவர்கள்? சுத்தத் திருடர்கள்!" "பின்னே என்ன என்று கேட்கிறேன்! ஓரணா இரண்டனா ஸ்டாம்புகளை திருடிக் கொள்கிறார்கள். அனுப்பிய கட்டுரைகளைத் திருப்பி அனுப்புவதும் கிடையாது!" "ஆமாம், அப்பா, ஆமாம்! அநேகப் பத்திரிகாசிரியர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்!" என்றேன். "ஓஹோ நீ மட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ? நீயும் அதே வர்க்கந்தானே!" "ஆம்; வாஸ்தவந்தான்! மன்னித்துக் கொள்!" "மன்னிக்கிறதாவது, மண்ணாங்கட்டியாவது? நீங்கள் பத்திரிகாசிரியர்கள் இருக்கிறீர்களே, மகா கிராதகர்கள்! எழுத்தாளர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்லுவீர்கள். செத்துப் போன பிறகு நிதி வசூல் செய்து ஞாபகச் சின்னம் கட்டுவீர்கள்!" "போகட்டும்! அது ஒரு திருப்தியாவது இருக்கிறதோ இல்லையோ?" "நல்ல திருப்தி!" "சரி, மேலே என்ன செய்யப் போகிறாய்?" என்றேன். "இனிமேல் ஒருவரை நம்பி ஒரு காரியம் செய்வதில்லை என்று தீர்மானித்து விட்டேன். நானே ஒரு பத்திரிகை வெளியிடுகிறதென்று நேற்று இரவு பன்னிரண்டரை மணிக்கு முடிவு செய்து விட்டேன்." "ரொம்ப சந்தோஷம்." "அதெல்லாம் வெறுமனே வாயால் சந்தோஷம் என்று சொன்னால் மட்டும் போதாது, சந்தோஷத்தைக் காரியத்திலே காட்ட வேணும்." "எப்படிக் காட்டுகிறது?" "ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்துக் காட்டுகிறது. எழுத்தாளனுக்கு எழுத்தாளனும் பத்திரிகைக்காரனுக்குப் பத்திரிகைக்காரனும் உதவி செய்யாவிட்டால், வேறு யார் உதவி செய்வார்கள்?" என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று சத்தியம் செய்ததன் பேரில், "சரி, ஒரு பூஜ்யத்தைக் குறைத்துக் கொள்!" என்று சொல்லி, அப்புறம் இன்னொரு பூஜ்யத்தையும் குறைத்துக் கொண்டு கடைசியில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனான். *****
மறுமுறை சுண்டுவைப் பார்த்தபோது, "என்னப்பா! சொந்தப் பத்திரிகை ஆரம்பித்து விட்டாயா?" என்று கேட்டேன். "பத்திரிகையைக் கொண்டு குப்பையிலே போடு! இந்தப் பத்திரிகைகளைப் போல் உலகத்துக்குக் கெடுதல் செய்வது ஒன்றுமே கிடையாது!" என்றான். "அந்த உண்மையை எப்படித் தெரிந்து கொண்டாய்?" என்றேன். "குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்வதற்கு அப்படி என்ன வந்தது? தினந்தினந்தான் பத்திரிகைகள் படிக்கிறோமே? ஒரு நாளாவது ஒரு பத்திரிகையிலாவது ஆயிரம் பொய்க்குக் குறைவாக வந்திருக்கிறதா? மார்பிலே கையை வைத்துக் கொண்டு சொல்லு!" என்றான். "எங்கள் குட்டை ரொம்ப உடைச்சு விட்டு விடாதே! பின்னே இப்போது என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்?" என்றதும், ஓர் அச்சடித்த துண்டுக் காகிதத்தை எடுத்துக் காட்டினான்; அதில், "மிஸ்டர் சுண்டு, ஸ்டாக் அண்டு ஷேர் புரோக்கர்" என்று அச்சிட்டிருந்தது. மூக்கின் மேல் சுண்டு விரலை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டேன். "நாராயணசாமி! நான் சொல்கிறேன் கேள்! கடைசியாகப் பணம் சம்பாதிப்பதற்கு வழி கண்டு பிடித்து விட்டேன். பணம் என்றால், இந்த லயனிலே இருக்கிற பணம் வேறே எதிலும் இல்லை! உன்னுடைய டால்மியா டீல்மியா, பிர்லா கிர்லா, டாடா கீடா எல்லாரும் எப்படிக் கோடீசுவரர்கள் ஆனார்கள்? எல்லாம் இந்த ஷேர் மார்க்கெட்டிலே பணம் பண்ணித்தான்! ஆனால் ஒன்று சொல்கிறேன் கேள்! இந்த ஷேர் மார்க்கெட் உலகத்திலே உள்ள முட்டாள்களைப் போல் வேறே எந்த உலகத்திலும் கிடையாது. வாங்க வேண்டிய சமயத்திலே குடுகுடு என்று ஓடிப் போய் விற்பார்கள். விற்க வேண்டிய சமயத்தில் இறுக்கிப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். தங்களுக்காகத் தெரியாவிட்டாலும், ஏதடா, நம்ப சுண்டு ஒருத்தன் இதற்கென்று தலையைச் க்ஷவரம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கானே, அவனைக் கேட்டுக் கொண்டு செய்வோம் என்று செய்வார்களோ? அதுதான் கிடையாது. போனால் போகட்டும். நீ என்ன சொல்றே? இப்போது ஷேர் மார்க்கெட்டிலே பணம் பண்ணுகிறதற்குச் சரியான சந்தர்ப்பம். மைசூர் நிலக்கரி இருக்கே, அப்படியே தங்கம்! இன்னிக்கு 23 ரூபாயாயிருக்கு. இன்னும் பத்து நாளிலே 29 வரை போகாவிட்டால் என்னை ஏன் என்று கேளு; ஓர் ஆயிரம் ஷேர் இதிலே நீ வாங்கலாம். பத்து நாளைக்குள்ளே ஆறாயிரம் ரூபாய் கை மேல் வந்து விழும்! அப்புறம், குடகு காப்பிக் கொட்டை இருக்கிறதே, 'ஏ ஒன்' ரகத்தில் சேர்க்கவேண்டியது." "வீசை என்ன விலை?" என்று நடுவிலே கேட்டு வைத்தேன். "அட நாராயணசாமி! நான் வெறும் காப்பிக் கொட்டையைச் சொல்லவில்லை! குடகு குண்டுக் காப்பிக் கொட்டை கம்பெனி ஷேரையாக்கும் சொல்கிறேன். உனக்கு அதிலே அவ்வளவு திருப்தி இல்லாவிட்டால் திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கு இருக்கிறது! அது வெறும் கடலைப் பிண்ணாக்கு இல்லை! அவ்வளவும் கோட்டைப் பவுன் என்று வைத்துக் கொள். அதிலே ஓர் இரண்டாயிரம் ஷேர் நீ வாங்கிப் போடலாம்." மிஸ்டர் சுண்டுவின் வாய் மொழியாக அன்று சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையில் நான் சம்பாதித்து விட்டேன். அவ்வளவோடு அன்றைக்குப் போதும் என்று சொல்லி அவனைப் போகச் சொன்னேன். *****
ஒரு மாதம் கழித்து மிஸ்டர் சுண்டுவை நான் பார்த்த போது, "நாராயணசாமி! நல்ல வேளை நீ பிழைத்தாய்! நான் சொன்னதைக் கேட்காமல் நீ பாட்டுக்குப் போய்த் திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கையும், மைசூர் நிலக்கரியையும், கொச்சி காப்பிக் கொட்டையையும் வாங்கியிருந்தாயானால் அடியோடு தொலைந்து போயிருப்பாய்!... அதற்காக எனக்குத் தாங்க்ஸ் ஒன்றும் சொல்ல வேண்டாம். நமக்குள்ளே என்னத்திற்காக உபசாரம்?" என்றான். "சரி, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்றேன். "அது என்ன?" "உலகத்திலே சரியான படிப்பு இல்லை; இருக்கிற படிப்பும் மோசம். இதுதான் காரணம். முதலிலே நமது சட்டசபையின் அங்கத்தினர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேணும். அப்புறம் பள்ளிக்கூட வாத்தியார்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேணும். அதற்கப்புறம் பிள்ளைகளுக்குச் சரியான முறையில் கல்விப் பயிற்சி கொடுக்க வேணும். நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான். "அவசியம் உடனே செய்ய வேண்டிய காரியந்தான்!" என்றேன். "அப்படியானால் முதலிலே சட்டசபை அங்கத்தினருக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கென்று ஒரு பள்ளிக் கூடம் வைக்கிறேன். அதற்கு உன்னாலான கைங்கர்யத்தைச் செய்!" என்று ரசீது புத்தகத்தை நீட்டினான். சுண்டு இந்தத் தடவை போனால் திரும்பி வரமாட்டான் என்ற தைரியத்துடன் சக்தியானுசாரம் நன்கொடை கொடுத்து அனுப்பினேன். *****
என் நம்பிக்கை வீணாயிற்று. சுண்டு சீக்கிரமே திரும்பி வந்து, "அப்பனே! நல்ல வேலை பார்த்து என்னை ஏவி அனுப்பினாய். அதைக் காட்டிலும் கொட்டைப் பாக்கைப் பிழிந்து பாதாம் கீர் பண்ணு என்று ஏவியிருக்கலாம்!" என்றான். "ஏன்? நமது சட்டசபை அங்கத்தினர்களை உன்னால் படிப்பிக்க முடியவில்லையோ?" என்றேன். "அவர்கள் முதலில் பள்ளிக் கூடத்துக்கு வந்தால் தானே படிப்பிக்கலாம்? எங்களுக்குப் படிப்பு வேண்டாம்; இருக்கிற படிப்பு போதும் என்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கொண்டு போய் இராஜ்ஜியத்தை ஒப்பித்தால் அது ஏன் உருப்படப் போகிறது?" என்றான் சுண்டு. "அப்படியானால் உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருகிற காரியம் 'ஹோப்லெஸ்' என்று விட்டு விட வேண்டியதுதான், இல்லையா?" என்றேன். "நன்றாயிருக்கிறது. அப்படியெல்லாம் விட்டு விடலாமா? உலகத்தின் தலையிலே ஒரு குட்டுக் குட்டி அதை முன்னுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா? உலகத்தைப் படிப்பிக்கிறதற்கு வேறு வழி ஒன்று கண்டுபிடித்து விட்டேன். இத்தனை நாள் அந்த யோசனை ஏன் தோன்றவில்லையென்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. ஆம்; சில சமயம் நாம் தூரத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். காலடியிலுள்ள சூரியன் கண்ணில் படுவதில்லை! சினிமா டாக்கி என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாயோ இல்லையோ?" "கேள்விப்பட்டிருக்கிறேன்." "இந்த சினிமா ஒன்று மட்டும் என் கையில் இருந்தால் போதும், அதைக் கொண்டு நமது யுனிவர்ஸிடி வைஸ் சான்ஸலர்களையும், பாடப் புத்தகக் கமிட்டி அங்கத்தினர்களையும் கூடப் புதுப்பித்து விடலாம்! ஆனால் இப்போது இந்த சினிமா உலகம் கெட்டுப் போயிருக்கிறது போல் வேறெதுவும் கெட்டுப் போயிருக்கவில்லை. ஒண்ணாம் நம்பர் நிரட்சர குட்சிகள் எல்லாரும் டைரக்டர்கள் என்று வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதுகிறவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. நடிகர்கள் மகாமகாமகாமகா மோசம். எல்லாரையும் ஒரே 'ஸ்வீப்'பா 'ஸ்வீப்' பண்ணி வங்காளக்குடாக் கடலிலே எறிந்து விட்டு மறுபடி புதிதாக ஆரம்பிக்க வேண்டும்." "அப்படியே செய்துவிட்டால் போகிறது" என்றேன். "அதற்கு உன்னுடைய ஒத்தாசையும் கொஞ்சம் தேவை." "என்ன செய்ய வேணும்?" "பத்து லட்சம் ரூபாய் கண்ணை மூடிக் கொண்டு போடுகிற முதலாளி ஒருவரை நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். அந்த மனிதர் பணத்தை என்கையில் கொடுத்துவிட்டு அப்புறம் என்ன ஏது என்று கேட்கக் கூடாது. என்னைப் பூராவும் நம்பி விட்டுவிட வேணும்! அப்போது பாரேன் சினிமா உலகம் எப்படி தலை கீழாக ஆகிறதென்று!" "ஆகட்டும் சுண்டு, அவசியம் பார்க்கிறேன்" என்றேன். அடுத்த தடவை நான் மிஸ்டர் சுண்டுவைச் சந்தித்த போது அவனுடைய தோற்றம் அடியோடு மாறிப் போய் இருந்தது. "என்ன பண்ணுகிறாய்?" என்று கேட்டதற்கு "டாக்கி உலகத்திலே பிரவேசித்து விட்டேன். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு!" என்றான். "கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் வேண்டுமானாலும் பொறுத்திருக்கிறேன்" என்றேன். "அவசியமில்லை. கொஞ்ச நாள் பொறுத்தாலே போதும். இப்போது ஒரு தமிழ் டாக்கியின் டைரக்டருக்குக் காரியதரிசியாக அமர்ந்திருக்கிறேன். டாக்கி விஷயமாய் ஆனா, ஆவன்னா தெரியாதவர்கள் எல்லாம் படத்தைக் குட்டிச்சுவர் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அடுத்த வருஷம் இந்த நாளில் சினிமா உலகத்தில் ஒரு பெரிய புரட்சி நடக்கப் போகிறது. அதை எதிர்பார்த்துக் கொண்டிரு! நீ பாட்டுக்குத் தூங்கிப் போய் விடாதே!" என்று முதுகிலே தட்டிக் கொடுத்து எச்சரிக்கை செய்துவிட்டுப் போனான். அந்தப் படியே நான் தூங்காமல் சினிமா உலகப் புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். சில காலம் வரையில் ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு வேளை சுண்டு தான் தூங்கிப் போய்விட்டானோ என்று தோன்றியது. *****
இரண்டு வருஷத்துக்குப் பிறகு சுண்டு திடீரென்று ஒரு நாள் என் எதிரே முளைத்தான். என் தோள்களும் முதுகும் வெகு பாடுபட்டன. "நான் உன்னைக் கடைசியாக பார்த்தபோது என்ன சொன்னேன்?" என்று கேட்டான். "தூங்கிப் போய் விடாதே என்று சொன்னாய். இப்போது தூக்க மருந்து சாப்பிட்டாலும் எனக்குத் தூக்கம் வரமாட்டேனென்கிறது!" என்றேன். "சினிமா உலகில் பெரிய புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிரு என்று சொன்னேனோ, இல்லையோ? அது நடக்கப் போகிறது!" "பேஷ்!" "என்ன பேஷ்! பேஷாவது பேஷ்? உன்னைப் போன்ற உற்சாகமில்லாத பிரகிருதியை நான் பார்த்ததேயில்லை! உலகத்திலே இல்லாத மகா அதிசயம் நடக்கப் போகிறது என்றேன்; நீ பேஷ் என்கிறாய்?" "பின்னே என்ன சொல்ல வேணும், அப்பா?" "ஒன்றும் சொல்ல வேண்டாம்; எழுந்திருந்து கூத்தாடணும்" "ஆகட்டும், சினிமாப் புரட்சி எந்த மட்டும் இருக்கிறது?" "பாதி நடந்தாற்போலத்தான், கதையும் ஸீனோரியோவும் தயாராகிவிட்டது. 'டயலாக்'கும் முக்கால்வாசி எழுதியாகிவிட்டது. கொஞ்சம் கேட்கிறாயா?" "காதலி! கரிய மேகங்களும் கண்டு வெட்கும்படியான ஜாஜ்வல்யமான கன்னங்களிலே குமிழ் விட்டுக் கொப்பளிக்கும் அழகு வெள்ளத்தின் ஆழத்திலே ஆழத்திலே ஆழத்திலே..." "சுண்டு உனக்கு எப்போது தெத்துவாய் ஏற்பட்டது?" என்று கேட்டேன். "என்ன கேட்டாய்?" என்று வேறு உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்தவனைப் போல் சுண்டு கேட்டான். "ஆழத்திலே, ஆழத்திலே, ஆழத்திலே என்றுசொல்லிக் கொண்டே போனாயே? ஒரு வேளை தெத்துவாய் வந்து விட்டதோ என்று கேட்டேன்." "உன்னிடம் இதைப்பற்றியெல்லாம் பேசிப் பிரயோஜனமில்லை என்று தெரியும். தெரிந்தும் பேசினேனே? என் புத்தியை... அடித்துக் கொள்ள வேணும். அடாடா! மணி ஐந்தாகிவிட்டதே! லுல்லு அங்கே காத்துக் கொண்டிருப்பாளே?" "அட நாராயணா! லுல்லுவைத் தெரியாதா? அடுத்த வருஷம் இந்த நாள் எல்லாம் லுல்லுவின் பெயர் உலகப் பிரசித்தியடையப் போகிறது. சினிமா உலகத்திலேதான் சொல்கிறேன். நீ செவிடாய்ப் போனாலும் கூட உன் காதில் அந்தப் பெயர் விழத்தான் விழும்!" "லுல்லு என்பது யார் அப்பா?" "சினிமா உலகத்தில் பாதிப் புரட்சியை நான் நிறைவேற்றி விட்டேன்; பாக்கிப் பாதிப் புரட்சியை லுல்லு நிறைவேற்றப் போகிறாள்! அவளைக் கதாநாயகியாக வைத்துத்தான் நான் கதையும், ஸினோரியோவும் எழுதியிருக்கிறேன். இன்னும் ஐந்தாறு மாதம் மட்டும் தூங்காமலிரு; அப்புறம் பார் அற்புதத்தை!" என்று சொல்லி விட்டுச் சுண்டு நடையைக் கட்டினான். என் முதுகைத் தட்டக் கூட அவன் மறந்து விட்டுப் போனது எனக்கு அளவில்லாத, அளவில்லாத, அளவில்லாத... அட சுண்டு! அளவில்லாத ஆச்சரியத்தை அளித்தது. *****
பிற்பாடும் சில மாதம் காலம் சுண்டு அடிக்கடி என்னைச் சந்தித்ததோடு 'லுல்லு' 'லுல்லு' என்று சொல்லி என் பிராணனை வாங்கிவிட்டான். காது செவிடாய்ப் போய் விட்டாலே தேவலை என்று தோன்றியது. லுல்லுவின் அசல் பெயர் லீலா மனோகரி என்று அறிந்தேன்; சுப்பிரமணியன் என்னும் பெயர் சுண்டு என்று திரிந்திருக்கும் போது லீலா மனோகரி லுல்லு ஆகக் கூடாதா? லுல்லுவும் அவள் தாயாரும் அநாதைகள் என்றும் ஏதோ சினிமாவில் சில்லறைப் பாத்திரங்களாக நடித்தும் குரூப் டான்ஸுகளில் ஆடியும் ஜீவனம் நடத்துகிறார்கள் என்றும் தெரிந்தது. அத்தகைய லுல்லுவிடம் சுண்டு தன் உள்ளத்தை முழுதும் பறிகொடுத்திருந்ததோடு, அவளை உலகம் மெச்சும் சினிமா நட்சத்திரமாகச் செய்து விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததையும் அறிந்தேன். சுண்டுவின் சுபாவம் எனக்குத் தெரியுமாதலால் லுல்லுவிடமும் அவள் தாயாரிடமும் 'ஐயோ! பாவம்' என்று இருந்தது. இவனுடைய வெறும் வாய் புரடாக்களைக் கேட்டு அவர்கள் ஏமாந்து போய்விடப் போகிறார்களே என்று இரக்கப்பட்டேன். அவர்களை ஒரு நாள் நேரில் பார்த்து எச்சரிக்கலாமா என்று கூடத் தோன்றியது. நல்ல வேளையாக, அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஒரு நாள் சுண்டு தலைவிரி கோலமாய் அதாவது கிராப்புத் தலையை வாராமல் ஓடி வந்து, "அப்பனே! இந்த உலகம் இருக்கிறதே, மகா சண்டாள உலகம்; மகா மோசமான உலகம்! அயோக்கிய உலகம்; அக்கிரம உலகம்; மோச உலகம்; நாச உலகம்; இந்த உலகத்திலே இனி ஒரு நிமிஷங் கூட என்னால் வாழ்க்கை நடத்த முடியாது. இதை ஒரே அடியாக விட்டொழித்து தலை முழுகிவிடப் போகிறேன்" என்றான். "சரி" என்றேன். "சரி என்று ஒரு தடவை சொன்னால் போதாது. நூறு தடவை சொல்ல வேணும்!" என்றான். "நூறு தடவை சரி!" என்றேன். "இந்த மோச உலகத்தைத் துறந்து சந்நியாசம் வாங்கிக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டேன். யார் தடுத்தாலும் கேட்க மாட்டேன்" என்றான். "அடடா! லுல்லுவின் கதி என்ன ஆகிறது?" என்றேன். "லுல்லு! லுல்லு! நல்ல லுல்லு! அவளாலேதான் அப்பா, நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன். லுல்லு செய்த மோசடியினால்தான்!" கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து ஒருவாறு விஷயம் இன்னதென்று தெரிந்து கொண்டேன். லுல்லுவுக்காகச் சுண்டு கதையும் 'டயலாக்'கும் எழுதி ஒரு டாக்கி முதலாளியிடம் எடுத்துக் கொண்டு போனான். தன்னை டைரக்டராகவும், லுல்லுவைக் கதாநாயகியாகவும் எடுத்துக் கொண்டால் அந்த அற்புதமான கதையைக் கொடுப்பேன் என்றான். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்தபோது, லுல்லு மேற்படி டாக்கி முதலாளியைச் சந்திக்க நேர்ந்தது. சில தினங்கள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. கடைசியில் மேற்படி டாக்கி முதலாளி லுல்லுவைக் கதாநாயகியாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக தம்முடைய சொந்த நாயகியாகவே ஏற்றுக் கொள்ள முன் வந்தார்! லுல்லுவுக்கும் மேற்படி முதலாளிக்கும் கலியாணம் நிச்சயமாகி விட்டது. சுண்டு உலகத்தைத் துறந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொள்ள எண்ணியதற்குக் கொஞ்சம் காரணம் இருக்கத்தான் செய்தது! ஆனால் சுண்டுவாவது, சந்நியாசம் வாங்கிக் கொள்வதாவது! நாலைந்து நாளில் லுல்லுவை மறந்துவிட்டு இன்னோர் உல்லுவைப் பிடித்துக் கொண்டு திரிவான் என்று நான் எண்ணினேன். அவனிடமும் சொன்னேன். சுண்டு வெகு கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய் விட்டான். *****
ஒரு மாதத்துக்கெல்லாம் சுண்டுவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. "என் பேச்சை நீ நம்பவில்லையல்லவா? இத்தனாந் தேதி இன்ன மணிக்கு இந்த இடத்துக்கு வந்து பார்" என்று எழுதியிருந்தான். என்னதான் செய்யப் போகிறான் என்று பார்ப்பதற்காக நான் குறிப்பிட்ட இடத்துக்குப் போயிருந்தேன். சுண்டு தன் அழகான கிராப்புத்தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு கையில் கமண்டலத்துடன் காட்சியளித்தான். "அடபாவி! சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டாயா?" என்று சத்தமிட்டேன். உடனே 'சைலன்ஸ்' என்று ஓர் இடி முழக்கக் குரல் கேட்டது. "போ! அப்பால் போ!" என்று பல குரல்கள் கட்டளையிட்டன. யாரோ ஒருவன் ஓடி வந்து என்னை அப்பால் இழுத்துப் போனான். "ஷுட்" என்றது மறுபடியும் அந்த இடிமுழக்கக் குரல். லுல்லுவினால் நிராகரிக்கப்பட்ட சுண்டு வாழ்க்கையில் வெறுப்படைந்து "மாய உலகம்" என்னும் படத்தில் கபட சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறான் என்று அறிந்த பிறகுதான் என் மனம் ஒருவாறு நிம்மதி அடைந்தது. போகட்டும்! சுண்டு எந்த வழியிலாவது நாலு பணம் சம்பாதித்து யோக்கியமாக வாழ்க்கை நடத்தினால் சரி! ஆம்; நூறு தடவை சரி! சுபம். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |