![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் 9. விக்கிரமன் சபதம் சித்திரங்கள் எல்லாம் பார்த்து முடித்ததும் விக்கிரமன் தயங்கிய குரலில் "அப்பா!" என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து "என்ன கேட்க வேண்டுமோ கேள், குழந்தாய்! சொல்ல வேண்டியதையெல்லாம் தயங்காமல் சொல்லிவிடு; இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது" என்றார். "ஒன்றுமில்லை அப்பா! இந்தச் சித்திரங்கள் எல்லாம் எவ்வளவு நன்றாயிருக்கின்றன என்று சொல்ல ஆரம்பித்தேன். இவ்வளவு அற்புதமாய்ச் சித்திரம் எழுத எப்போது கற்றுக் கொண்டீர்கள்? நமது சித்திர மண்டபத்தில்கூட இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே!" என்றான் விக்கிரமன். மகாராஜா மைந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார். "என் கண்ணே! என்னுடைய சித்திரத் திறமையை நீ ஒருவன் வியந்து பாராட்டியதே எனக்குப் போதும். வேறு யாரும் பார்த்துப் பாராட்ட வேண்டியதில்லை. என் மனத்திலிருந்த ஏக்கம் இன்று தீர்ந்தது" என்றார். "ஆனால் அப்பா! எதற்காக உங்கள் வித்தையை நீங்கள் இவ்விதம் ஒளித்து வைத்திருக்க வேண்டும்? இந்த ஆச்சரியமான சித்திரங்களைப் பற்றி நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆகா! இந்த உருவங்கள் எல்லாம் எவ்வளவு தத்ரூபமாக, உணர்ச்சி பெற்று விளங்குகின்றன? முகங்களிலே தான் எத்தனை ஜீவகளை! இவ்வளவு ஆச்சரியமான சித்திரங்களை வேறு யார் எழுத முடியும்? ஏன் இந்தத் திருட்டு மண்டபத்தில் இவற்றைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்? எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டாலென்ன?" என்று விக்கிரமன் ஆத்திரமாய்ப் பேசினான். அப்போது பார்த்திப மகாராஜா சொல்லுகிறார்:- "கேள், விக்கிரமா! இந்த உலகத்தில் எவன் அதிகாரமும் சக்தியும் பெற்றிருக்கிறானோ, அவனிடம் உள்ள வித்தையைத்தான் உலகம் ஒப்புக் கொண்டு பாராட்டும். காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி இருந்தாரல்லவா? ஒரு தடவை பெரிய வித்வசபைகூடி அவருக்குச் 'சித்திரக்காரப் புலி' என்ற பட்டம் அளித்தார்கள். மகேந்திரவர்மருடைய சித்திரங்கள் மிகவும் சாமானியமானவை; ஆனாலும் அவற்றைப் புகழாதவர் கிடையாது. இப்போதுள்ள நரசிம்ம சக்கரவர்த்திக்கு இது மாதிரி எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. சித்திரக் கலையில் சிங்கம்! கான வித்தையில் நாரதர்! சிற்பத்தில் விசுவகர்மா! - உலகம் இப்படியெல்லாம் அவரைப் போற்றுகிறது. ஏன்? அவரிடம் பெரிய சைன்யம் இருப்பதினால்தான். குழந்தாய்! தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்றுதான்! செருப்பு தைக்கும் சக்கிலியனும் ஒன்றுதான். ஆனாலும் இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாயிருப்பவர்கள் கூட, பெரிய படை பலம் உள்ளவன் பக்கமே தெய்வமும் இருப்பதாய்க் கருதுகிறார்கள். மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான்! சிவனடியார்களை எவ்வளவோ துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான் விக்கிரமா! மகேந்திரனும் சரி, அவன் மகன் நரசிம்மனும் சரி, நடிப்புக் கலையில் தேர்ந்தவர்கள்; விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள்; நம்பினவர்களை ஏமாற்றுவார்கள். இவர்களுடைய சிவபக்தி நடிப்பு உலகத்தை ஏமாற்றிவிட்டது. புராதன காலத்திலிருந்து சோழ வம்சத்தினர்தான் சைவத்தையும், வைஷ்ணவத்தையும் வளர்த்து வந்தார்கள். சிராப்பள்ளிப் பெருமானையும், ஸ்ரீரங்கநாதனையும், குல தெய்வங்களாகப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் யாருடைய சபா மண்டபத்திற்குப் போகிறார்கள்? திரிலோகாதிபதியான காஞ்சி நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குத் தான்! என்னுடைய சித்திரங்களைப் பிறர் பார்ப்பதை நான் ஏன் விரும்பவில்லை என்று இப்போது தெரிகிறதா? சோழ நாடு சிற்றரசாயிருக்கும் வரையில் 'பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்து விட்டானா' என்று உலகம் பரிகசிக்கும். விக்கிரமா! இன்னொரு விஷயம் நீ மறந்து விட்டாய்..." என்று நிறுத்தினார் மகாராஜா. "என்ன அப்பா?" என்று விக்கிரமன் கேட்டான். "இவை கேவலம் சித்திரத் திறமையைக் காட்டுவதற்காக மட்டும் எழுதிய சித்திரங்கள் அல்லவே, குழந்தாய்! என்னுடைய மனோரதங்களை என் இருதய அந்தரங்கத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் ஆசைகளையல்லவா இப்படிச் சித்திரித்திருக்கிறேன்? இந்தச் சித்திரங்களை இப்போது பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா? 'வீணாசை கொண்டவன்' 'எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுகிறவன்' என்றெல்லாம் பரிகசிக்க மாட்டார்களா? ஆகையினாலேயே, இந்த மண்டபத்தை இப்படி இருள் சூழ்ந்ததாய் இப்போது வைத்திருக்கிறேன். இந்தச் சித்திரக் காட்சிகள் எப்போது உண்மைச் சம்பவங்களாகத் தொடங்குமோ, அப்போதுதான் மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்ய வேண்டும். அப்போதுதான் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி மண்டபத்தைத் திறந்துவிடவேண்டும். அந்தப் பாக்கியம், விக்கிரமா என் காலத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன்னுடைய காலத்திலாவது நிறைவேற வேண்டுமென்பது என் ஆசை. என்னுடன் நீயும் போர்க்களத்துக்கு வருவதாகச் சொல்வதை நான் ஏன் மறுக்கிறேன் என்று இப்போது தெரிகிறதல்லவா?" "தெரிகிறது அப்பா!" "என் கனவை நிறைவேற்றுவதற்காக நீ உயிர்வாழ வேண்டும். சோழ நாட்டின் உன்னதமே உன் வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். சோழர் குலம் பெருமையடைவதே அல்லும் பகலும் உன்னுடைய நினைவாயிருக்க வேண்டும். சோழரின் புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கொடிக்கும் தாழாமல் வானளாவிப் பறக்கவேண்டுமென்று சதா காலமும் நீ சிந்திக்க வேண்டும். நாளை மறுதினம் நான் போருக்குக் கிளம்புகிறேன். யுத்த களத்திலிருந்து திரும்பி வருவேனென்பது நிச்சயமில்லை. விக்கிரமா! போர்க்களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம் அடைகிறார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம் போகமாட்டேன். திரும்பி இந்தச் சோழ நாட்டுக்குத்தான் வருவேன். காவேரி நதி பாயும் இந்தச் சோழ வளநாடுதான் எனக்குச் சொர்க்கம். நான் இறந்த பிற்பாடு என்னுடைய ஆன்மா இந்தச் சோழ நாட்டு வயல் வெளிகளிலும், கோயில் குளங்களிலும், நதிகரைகளிலும், தென்னந் தோப்புகளிலும்தான் உலாவிக் கொண்டிருக்கும். அப்போது 'பார்த்திபன் மகனால் சோழர் குலம் பெருமையடைந்தது' என்று ஜனங்கள் பேசும் வார்த்தை என் காதில் விழுமானால், அதைவிட எனக்கு ஆனந்தமளிப்பது வேறொன்றுமிராது. எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா, விக்கிரமா?" இளவரசன் விக்கிரமன், "செய்வேன், அப்பா! சத்தியமாய்ச் செய்வேன்!" என்று தழுதழுத்த குரலில் சொன்னான். அவன் கண்களில் நீர்துளித்து முத்து முத்தாகக் கீழே சிந்திற்று. இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பொன்னனுடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. மகாராஜா அவனைப் பார்த்து, "பொன்னா! எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? இளவரசரிடம் உண்மையான அன்புள்ள சிலராவது அவருக்குத் துணையாக இருக்கச் சொல்லுகிறேன். என்னுடன் நீ யுத்தத்துக்கு வருவதைக் காட்டிலும் இளவரசருக்குத் துணையாக இருந்தாயானால், அதுதான் எனக்குத் திருப்தியளிக்கும் இருக்கிறாயல்லவா?" என்று கேட்டார். பொன்னன் விம்மலுடன் "இருக்கிறேன், மகாராஜா!" என்றான். |