![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 19. ஆதியின் கோபம் |
இரண்டாம் பாகம் 12. ராணியின் துயரம் சிவனடியார் படகிலிருந்து இறங்கியதும் அருள்மொழி அவரை நமஸ்கரித்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் ததும்பிற்று. "சுவாமி! விக்கிரமன் எங்கே?" என்று சோகம் நிறைந்த குரலில் அவள் கதறி விம்மியபோது, சிவனடியாருக்கு மெய்சிலிர்த்தது. பொன்னன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மரங்களின் மீதிருந்த பறவை இனங்களும் அந்தச் சோகக் குரலைக் கேட்கச் சகிக்காதவை போல் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து சென்றன. "அருள்மொழி! இது என்ன பைத்தியம்? உன்னுடைய பதி உனக்கு என்ன சொல்லிவிட்டுப் போனார்? நீ வீரத்தாயாக இருக்க வேண்டுமென்று அவர் சொன்ன கடைசி வார்த்தையை மறந்துவிட்டாயா? இப்படியும் தைரியத்தை இழக்கலாமா? வா, அரண்மனைக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம்" என்றார் சிவனடியார். மாஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருந்த அழகிய பாறை வழியாக எல்லாரும் வசந்த மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் எவ்வளவு குதூகலமும் கொண்டாட்டமுமாகயிருந்த வசந்த மாளிகை இப்போது பொலிவிழந்து சூனியமாகக் காணப்பட்டது. அரண்மனை ஊழியர்களின் முகங்களும் கலையின்றிச் சோகம் நிறைந்து தோன்றின. மாளிகை முன் மண்டபத்திலே புலித்தோல் விரித்திருந்த உயரமான பீடத்தில் சிவனடியார் அமர்ந்தார். அருள் மொழி கீழே வெறுந் தரையில் உட்கார்ந்தாள். "அம்மா! உன் மனத்தைக் கலங்க விடக் கூடாது" என்று சிவனடியார் ஆரம்பித்தபோது, அருள்மொழி அவரைத் தடுத்து துக்கம் பொங்கும் குரலில் கூறினாள்: "ஐயோ! மனத்தைக் கலங்கவிடக் கூடாது என்கிறீர்களே? மனத்தைத்தான் நான் கல்லாகச் செய்து கொண்டு விட்டேனே? என் தேகமல்லவா கலங்குகிறது? குழந்தையை நினைத்தால் வயிறு பகீரென்கிறதே! குடல் எல்லாம் நோகிறதே! நெஞ்சை இறுக்கிப் பிழிவது போல் இருக்கிறதே! நான் என்ன செய்வேன்? - சுவாமி! விக்கிரமனைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்தீர்களே, அந்த வாக்கை நிறைவேற்றினீர்களா?" "ஏன் நிறைவேற்றவில்லை அருள்மொழி. நிறைவேற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனுடைய உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் என்று உனக்கு வாக்குக் கொடுத்தேன். அவனுடைய உயிரைக் காப்பாற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனை வீரமகனாகச் செய்வதாக அவனுடைய தந்தைக்கு வாக்களித்திருந்தேன். அதையும் நிறைவேற்றியே இருக்கிறேன். அம்மா! நீ மட்டும் அன்று காஞ்சியில் பல்லவ சக்கரவர்த்தியின் நீதி சபையில் இருந்திருந்தாயானால், உடல் பூரித்திருப்பாய்! பொய்யாமொழிப் பெருமான், "ஈன்ற
பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
என்று சொன்னது உன் விஷயத்தில் மட்டும்
பொய்யாகப் போகுமா? சக்கரவர்த்தி எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னார் விக்கிரமனுக்கு.
'பல்லவ சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிக் கப்பங்கட்டிக் கொண்டு வருவதாயிருந்தால்
உன்னுடைய துரோகத்தை மன்னித்து சோழ நாட்டுக்கும் பட்டங் கட்டுகிறேன்!'
என்றார். விக்கிரமன் அணுவளவாவது மனம் சலிக்க வேண்டுமே? மலையைப்போல் அசையாமல்
நின்றான். அதுமட்டுமா? சக்கரவர்த்தியையே தன்னுடன் சண்டைக்கு அழைத்தான்.
'நீர் வீரன் என்பது உண்மையானால் என்னுடன் வாட்போர் செய்ய வாரும்; என்னை
ஜெயித்து விட்டுப் பிறகு கப்பம் கேளும்' என்றான். அவனுடைய கண்களிலேதான்
அப்போது எப்படித் தீப்பொறி பறந்தது? அருள்மொழி! அதைப் பார்க்க நான் கொடுத்து
வைத்திருந்தேன்; நீதான் அந்தப் பாக்கியத்தைச் செய்யவில்லை!" சான்றோன் எனக்கேட்ட தாய்" ஆவலினால் விரிந்த கண்களில் கண்ணீர் ததும்ப மேற்கூறிய விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி கூறினாள்:- "நான் பாக்கியமற்றவள்தான் அதற்கும் சந்தேகமா? பதியைப் போர்க்களத்தில் பலி கொடுத்து விட்டு, இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். மகன் தேசப் பிரஷ்டனாகிக் கண் காணாத தேசத்துக்குப் போன பிறகும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன், சுவாமி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வரப்போகிறார் என்று சொல்லுகிறார்களே, அது உண்மையா? அப்படி வந்தால் அவர் காலில் விழுந்து 'என்னையும் விக்கிரமனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி விடுங்கள்!" என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்...." "என்ன சொன்னாய், அருள்மொழி! அழகுதான்! உன் புருஷனுடைய ஜன்ம சத்ருவின் காலில் விழுந்தா கெஞ்சுவாய்! வீர சொர்க்கத்தில் இருக்கும் பார்த்திப ராஜா இதை அறிந்தால் சந்தோஷப்படுவாரா! யோசித்துப் பார்!" "ஆமாம், அவர் சந்தோஷப்படமாட்டார்; நானும் அவருடைய சத்ருவிடம் பிச்சைக் கேட்கப் போகமாட்டேன்! ஏதோ ஆத்திரப்பட்டுச் சொல்லி விட்டேன். ஆகா! அவர் தான் என்னவெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினார்? கன்னியாகுமரியிலிருந்து இமய பர்வதம் வரையில் புலிக்கொடி பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாரே! அவருடைய பிள்ளைக்கு இந்தப் பெரிய தேசத்தில் இருக்கவும் இடமில்லாமல் போய்விட்டதே...." "பார்த்திப மகாராஜா வேறொரு மனக்கோட்டையும் கட்டவில்லையா அம்மா? சோழ ராஜ்யம் கடல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களிலும் பரவ வேண்டுமென்று அவர் ஆசைப்படவில்லையா? இரகசிய சித்திர மண்டபத்தில் அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்" "ஐயோ! அவருடைய ஆசை இம்மாதிரியா நிறைவேற வேண்டும்? விக்கிரமன் இன்று கடல்களுக்கப்பாலுள்ள இராஜ்யங்களைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தா போயிருக்கிறான்? எந்த காட்டுமிராண்டித் தீவில் கொண்டு போய் அவனை விட்டிருக்கிறார்களோ? காட்டிலும் மலையிலும் எப்படி அலைந்து கஷ்டப்படுகிறானோ? ஏன் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், சுவாமி?" "உன்னை நான் ஒரு நாளும் ஏமாற்ற மாட்டேன் அம்மா! உன்னை ஏமாற்றி எனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? உன் மகனுக்கு ஒரு குறையும் வராது என்பது என் நம்பிக்கை. விக்கிரமனுக்கு முன்னால் யாரும் தேசப் பிரஷ்டராகிக் காட்டுக்குப் போனதில்லையா? இராமன் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள் போகவில்லையா? விக்கிரமன் கடல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய வீர பராக்கிரமங்களை இன்னும் அதிகமாக வளர்க்கும். திரும்பித் தாய் நாட்டுக்கு அவன் வரும்போது...." "ஐயோ! அவன் வரவேண்டாம், சுவாமி. வரவேண்டாம். தாய்நாட்டில் காலடி வைத்தால் சிரசாக்கினை என்றுதான் சக்கரவர்த்தி விதித்திருக்கிறாரே? எங்கேயாவது கண்காணாத தேசத்திலாவது அவன் உயிரை வைத்துக் கொண்டிருக்கட்டும்; அதுவே போதும்!" என்றாள் அருள்மொழி. "ஆனால் அப்படி அவன் வராமல் இருக்க முடியாது, அருள்மொழி! என்றைக்காவது ஒரு நாள் அவன் வந்து தான் தீருவான். தாயின் பாசமும் தாய் நாட்டின் பாசமும் அவனைக் கவர்ந்து இழுக்கும். இந்த இரண்டு பாசங்களைக் காட்டிலும் வலிமை பொருந்திய இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கிறது. உனக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை...." என்று சொல்லிச் சிவனடியார் நிறுத்தினார். "என்ன சொல்லுகிறீர்கள், சுவாமி!" "ஆமாம்; தாயின் அன்பையும் தாய்நாட்டுப் பற்றையும் காட்டிலும் பெரியதொரு சக்தியும் அவனைத் திரும்பவும் இத்தேசத்துக்கு வரும்படி இழுக்கும். அது ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளிலுள்ள காந்த சக்தி தான். அம்மா! நான் இன்று பற்றை அறுத்த துறவியானாலும் பூர்வாசிரமத்தில் ஸ்திரீ பிரேமையினால் ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்தவன்...." "இது என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே? விக்கிரமனுக்கும் ஸ்திரீ பிரேமைக்கும் என்ன சம்பந்தம்?" என்று வியப்புடன் கேட்டாள் அருள்மொழி. சிவனடியார் புன்னகையுடன் கூறினார்:- "ஒவ்வொரு தாயும் மகனைப் பற்றி இப்படித்தான் வெகுகாலம் எண்ணிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் நேருக்கு நேர் உண்மையைக் காணும் போது திடுக்கிடுகிறாள். நீயாவது முன்னாலேயே தெரிந்துகொள், அம்மா! உன் மகன் விக்கிரமன் காஞ்சி நகரின் வீதியில் ஒரு கன்னியைச் சந்தித்தான். அவனைக் குறுக்கும் நெடுக்குமாய்ச் சங்கிலியால் பிணித்துக் குதிரைமீது கூட்டிக்கொண்டு போன போதுதான் அந்தச் சந்திப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலேயே அந்தப் பெண்ணும் தன்னுடைய உள்ளத்தை அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள். இது நான் கேட்டும் ஊகித்தும் அறிந்த விஷயம். ஆனால் நேரில் நானே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன். மாமல்லபுரத்துக் கடற்கரையில் விக்கிரமனை ஏற்றிச் சென்ற கப்பல் கிளம்பக் கரையோரமாய்ச் செல்ல ஆரம்பித்த சமயத்தில், அந்தப் பெண் காஞ்சியிலிருந்து ஓடோ டியும் வந்து சேர்ந்தாள்; மறுபடியும் அவர்களுடைய கண்கள் சந்தித்தன; உள்ளங்கள் பேசிக் கொண்டன; காதலும் கனிவும் ததும்பிய அந்தப் பெண்ணின் விசால நயனங்களை விக்கிரமனால் ஒருநாளும் மறக்க முடியாது. இரவிலும் பகலிலும் விழித்திருக்கும் நிலையிலும் தூக்கத்திலே கனவிலும் அந்தப் பெண்ணின் மதிவதனம் அவன் முன்னால் தோன்றிக் கொண்டுதானிருக்கும். எங்கே இருந்து எந்தத் தொழில் செய்தாலும், எத்தகைய இன்ப துன்பங்களை அனுபவித்தாலும் விக்கிரமன் அந்தப் பெண்ணை மறக்க மாட்டான். என்றைக்காவது ஒருநாள் அவளைப் பார்க்கும் ஆசையுடன் அவன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தே தீருவான்." இத்தனை நேரமும் திகைத்து உட்கார்ந்து கொண்டிருந்த அருள்மொழி "ஐயோ! எனக்கு மிஞ்சியிருந்த செல்வமெல்லாம் என் பிள்ளையின் அன்பு ஒன்றுதான், அதற்கும் ஆபத்து வந்துவிட்டதா? அந்தப் பெண் யார் சுவாமி!" என்று தீனக்குரலில் கேட்டாள். "பல்லவச் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி" "ஆகா! என் பதியினுடைய பரம சத்ருவின் மகளா? சுவாமி! என்னமோ செய்கிறதே! தலையைச் சுற்றுகிறதே!" என்றாள் அருள்மொழி. அடுத்த கணம் தரையில் மூர்ச்சித்து விழுந்தாள். |