![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பாகம் 18. பொன்னனின் அவமானம் சென்ற மூன்று தினங்களாகப் பொன்னன் குடிசைக்குள்ளே இடியும் மழையும் புயலும் பூகம்பமுமாக இருந்தது. "நான் செய்தது தப்பு என்று தான் ஆயிரந் தடவை சொல்லி விட்டேனே! மறுபடியும் மறுபடியும் என் மானத்தை வாங்குகிறாயே!" என்றான் பொன்னன். "தப்பு, தப்பு, தப்பு என்று இப்போது அடித்துக் கொள்கிறாயே, என்ன பிரயோஜனம்? இந்தப் புத்தி அப்போது எங்கே போச்சு?" என்று வள்ளி கேட்டாள். "இப்போது என்ன குடி முழுகிப் போய்விட்டதென்று ஓட ஓட விரட்டுகிறாய், வள்ளி! அந்தச் சக்கரவர்த்தி எங்கே போய்விட்டார்! என் வேல் தான் எங்கே போச்சு?" "வேல் வேறயா, வேல்? கெட்ட கேட்டுக்குப் பட்டுக் குஞ்சந்தான், ஓடம் தள்ளுவதற்கும் கும்பிடுவதற்குந்தான் கடவுள் உனக்குக் கையைக் கொடுத்திருக்கிறார்! கும்பிடுகிற கையினால் எங்கேயாவது வேலைப் பிடிக்க முடியுமா?" இரண்டு உடலும் ஓர் உயிருமாயிருந்த தம்பதிகளுக்குள் இப்படிப்பட்ட ஓயாத வாய்ச் சண்டை நடப்பதற்குக் காரணமாயிருந்த சம்பவம் இதுதான்:- இரண்டு நாளைக்கு முன் இந்தக் காவேரிக்கரைச் சாலை வழியாக நரசிம்ம சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அவர்களுடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, தோணித் துறைக்கு அருகில் சக்கரவர்த்தி சிறிது நின்றார். தோணித் துறையையும், காவேரியின் மத்தியிலிருந்த தீவையும், அந்தத் தீவில் பச்சை மரங்களுக்கிடையே காணப்பட்ட வசந்த மாளிகையின் பொற் கலசத்தையும் குந்தவிக்குச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அச்சமயம் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த பொன்னன், வள்ளி இவர்கள் மேல் சக்கரவர்த்தியின் பார்வை விழுந்தது. பொன்னனை அருகில் வரும்படி அவர் சமிக்ஞை செய்யவும், பொன்னன் ஓடோ டியும் சென்று, கைகூப்பித் தண்டம் சமர்ப்பித்து, பயபக்தியுடன் கையைக் கட்டிக் கொண்டு அவர் முன்னால் நின்றான். சக்கரவர்த்தியைப் பழிக்குப்பழி வாங்கப் போவதாகவும், அவருடைய மார்பில் தன் வேலைச் செலுத்தப் போவதாகவும் அவன் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அச்சமயம் அடியோடு மறந்து போய் விட்டது. சக்கரவர்த்தியின் கம்பீரத் தோற்றமும் அவருடைய முகத்தில் குடி கொண்டிருந்த தேஜசும் அவனை அவ்விதம் வசீகரித்துப் பணியச் செய்தன. "இந்தத் தோணித் துறையில் படகு ஓட்டுகின்றவன் நீதானே, அப்பா!" என்று சக்கரவர்த்தி கேட்கவும், பொன்னனுக்குத் தலைகால் தெரியாமற் போய் விட்டது. "ஆமாம், மகா....சக்ர...பிரபு!" என்று குழறினான். "அதோ தெரிகிறதே, அந்த வசந்த மாளிகையில் தானே அருள்மொழி ராணி இருக்கிறார்!" "ஆமாம்" "இதோ பார்! நமது குழந்தை குந்தவி தேவி, ராணியைப் பார்ப்பதற்காகச் சீக்கிரத்தில் இங்கே வரக்கூடும். ஜாக்கிரதையாக ஓடம் செலுத்திக் கொண்டு போய் அந்தக் கரையில் விட வேண்டும், தெரியுமா?" "புத்தி, சுவாமி!" என்றான் பொன்னன். பிறகு சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிச் சென்றார்கள். இதையெல்லாம் வள்ளி குடிசை வாசலில் நின்றபடி அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பொன்னன் திரும்பி வந்தபோது, வள்ளியின் முகத்தில் 'எள்ளும் கொள்ளும்' வெடித்தது. முழு விவரமும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர் வள்ளி பலமாய்ச் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். சக்கரவர்த்திக்குப் பணிந்து மறுமொழி சொன்ன காரணத்தினால் விக்கிரம மகாராஜாவுக்குப் பொன்னன் துரோகம் செய்துவிட்டதாக வள்ளி குற்றம் சாட்டினாள். "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகி!" என்று நிந்தித்தாள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரம் மூன்று தினங்களாக இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. வள்ளியின் சொல்லம்புகளைப் பொறுக்க முடியாதவனாய், அன்று மத்தியானம் உச்சிவேளையில் பொன்னன் நதிக்கரையோரம் சென்றான். அங்கே நீரோட்டத்தின் மீது தழைத்து கவிந்திருந்த ஒரு புங்க மரத்தினடியில் அதன் வேரின் மேல் உட்கார்ந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படித் துடைத்துக் கொள்வது, வள்ளியிடம் மறுபடியும் எப்படி நல்ல பெயர் வாங்குவது? - என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது கார்த்திகை மாதக் கடைசி, ஒரு மாதம் சேர்ந்தாற்போல் அடைமழை பெய்து விட்டிருந்தது. கழனிகளில் நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது. பச்சை மரங்களின் இலைகள், புழுதி தூசியெல்லாம் கழுவப்பட்டு நல்ல மரகத வர்ணத்துடன் பிரகாசித்தன. குளுகுளுவென்று குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. இப்படி வெளி உலகமெல்லாம் குளிர்ந்திருந்ததாயினும், பொன்னனுடைய உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. பத்து வருஷத்துக்கு முன்னால் இந்தக் கார்த்திகை மாதம் எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பார்த்திப மகாராஜாவும் ராணியும் இளவரசரும் இங்கே அடிக்கடி வருவதும் போவதுமாயிருப்பார்கள். அரண்மனைப் படகுக்கு அடிக்கடி வேலை ஏற்படும். தோணித்துறை அப்போது எவ்வளவு கலகலப்பாயிருந்தது! குதிரைகளும், யானைகளும், தந்தப் பல்லக்குகளும் இந்த மாந்தோப்பில், வந்து காத்துக் கொண்டு கிடக்குமே! அந்தக் காலம் போய்விட்டது. இப்போது ஈ, காக்கை இங்கே வருவது கிடையாது. இந்தத் தோணித்துறைக்கு வந்த கேடுதான் என்ன? பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்து போனார். இளவரசர் எங்கேயோ கண் காணாத தீவில் தவித்துக் கொண்டிருக்கிறார். அருள்மொழி ராணியோ ஓயாமல் கண்ணீரும் கம்பலையுமாயிருக்கிறார். வசந்த மாளிகைக்குப் போவார் இல்லை; ஓடத்துக்கும் அதிகம் வேலை இல்லை. அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி மட்டும் துரோகம் செய்யாமலிருந்தால்... இப்போது விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பார் அல்லவா? பல்லவ சக்கரவர்த்தி இங்கே ஏன் வரப்போகிறார்? வள்ளியிடம் தான் ஏச்சுக் கேட்கும்படியாக ஏன் நேரிட்டிருக்கப் போகிறது? இப்படிப் பொன்னன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குதிரை வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாலை ஓரத்தில் பொன்னனுடைய குடிசைக்கருகில் மாரப்ப பூபதி குதிரை மேலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். |