![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பாகம் 8. குந்தவியின் கலக்கம் "புஷ்பேஷு
ஜாதி புருஷேஷு விஷ்ணு;
என்று வடமொழிப் புலவர்களால்
போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று
கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது
சுவாமி தரிசனம் செய்து விட்டு வரும் நோக்கத்துடன் அவள் சென்றாள். ஆனால்
அவளுடைய உள்ளம் மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பு மாமல்லபுரத்தில் விஜயதசமியன்று
கண்ட கோலாகலக் காட்சியிலேயே ஈடுபட்டிருந்தது. நாரீஷுரம்பா நகரேஷு காஞ்சி" அன்று ஆரம்பித்த திருப்பணிகளில் உலகம் உள்ள வரையில் தன் தந்தையின் புகழ் குன்றாதிருக்குமல்லவா? என்று அவள் எண்ணமிட்டாள். இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில் வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும் தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க் கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில் அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள். சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக் களைததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள். அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின் அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான். "என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும்? என் உள்ளத்தை யாராலும் சிறைப்படுத்த முடியாதல்லவா?" என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது அவனுடைய திருமுகத்தின் தோற்றம். இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும் ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன. குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால் கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த் திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால் அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத் திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான் தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப் பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது. குந்தவி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச் சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப் பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும், பெருமாள் கோயிலுக்குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும், அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற தியானத்தில் ஈடுபடவில்லை. தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள் அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக் கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று! ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி அரண்மனைக்குத் திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன் மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு விட்டாள். "அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம்? அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்? எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? அவன் அத்தகைய குற்றம் என்னதான் செய்திருப்பான்?" என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது. "உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப் போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா? அது விஷயமாக முன்னமே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா? அந்தச் சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன்?" இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று. 'என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு? எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு அலட்சியமாய்க் கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து உட்கார்ந்திருக்கிறான்! நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம் செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு? எத்தனையோ தூர தூர தேசங்களில் உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின் நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே! செண்பகத் தீவின் வாசிகள் இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களே! இந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு என்ன வந்துவிட்டது? ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால் தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும்! அப்போது தான் புத்தி வரும்.' இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம் அடைந்தது. "ஐயோ பாவம்! முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத் தோன்றவில்லையே! அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான். ஒருவேளை யாராவது கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத் தண்டிப்பதில் என்ன பயன்? அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும் பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித் துன்புறுத்துகின்றனவோ? நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை விட்டுவிட்டால் என்ன? - அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால் அவருக்குத் தெரியாத விஷயமா? "தர்ம ராஜாதி ராஜன்" என்று புகழ் பெற்றவராயிற்றே? நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார். இந்த இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்...." இப்படியெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன் எப்போது அஸ்தமிக்கும்? தகப்பனார் எப்போது ராஜசபையிலிருந்து அரண்மனைக்குத் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தாள். |