![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் 15. திரும்பிய குதிரை குந்தவி குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் பெண்ணாக வளர்ந்து வந்தவள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். நரசிம்மச் சக்கரவர்த்தியே அவளுக்குத் தாயும் தகப்பனும் ஆச்சாரியனும் உற்ற சிநேகிதனுமாயிருந்தவர். அவளுக்கு ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட்டால் அப்பாவிடம் சொல்லித்தான் ஆறுதல் பெறுவாள். சந்தேகம் வந்தால் அவரைத்தான் கேட்பாள்; ஏதாவது குதூகலிக்கக் கூடிய விஷயம் நேர்ந்தாலும் அவரிடம் சொல்லிப் பகிர்ந்து கொண்டால்தான் அவளுக்குப் பூரண திருப்தி உண்டாகும். ஒரு கதையோ, கவிதையோ, நன்றாயிருந்தால் அவரிடம் சொல்லி அனுபவிக்க வேண்டும்; ஒரு சித்திரமோ சிற்பமோ அழகாயிருந்தால் அவருடன் பார்த்து மகிழவேண்டும். இப்படியெல்லாம் வெகுகாலம் வரையில் மகளும் தந்தையும் இரண்டு உடம்பும் ஒரே உள்ளமுமாக ஒத்திருந்தார்கள். ஆனால், அந்தக் காலம் போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. அப்பாவுக்கும் பெண்ணுக்குமிடையே இப்போதெல்லாம் ஒரு மானசீகத் திரைபோட்டது போலிருந்தது. தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளான சோழ ராஜகுமாரனுடைய ஞாபகம் குந்தவியின் மனத்தை விட்டு அகலவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவனை மறக்க முடியவில்லை. அந்த ராஜகுமாரனைப் பற்றிக் குந்தவி பேச விரும்பினாள். ஆனால் யாரிடம் பேசுவது? இத்தனை நாளும் தன்னுடைய அந்தரங்க எண்ணங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் தந்தையிடமே சொல்லி வந்தாள். ஆனால் சோழ ராஜகுமாரன் விஷயமாக அவரிடம் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எப்போதாவது ஏதாவது கேட்டாலும் தன் எண்ணத்தைச் சிறிதும் அறிந்து கொள்ளாதது போலவே அவர் மறுமொழி சொல்லி வந்தார். தனக்குத் தாயார் இல்லையே என்ற குறையைக் குந்தவி இப்போதுதான் உணர ஆரம்பித்தாள். அந்தக் குறையை ஒருவாறு நீக்கிக் கொள்வதற்காக அவள் விக்கிரமனுடைய அன்னையுடன் சிநேகம் கொள்ள விரும்பினாள். ஆனால், அருள்மொழியைக் குந்தவி சந்தித்த அன்றே அவள் பரஞ்சோதியடிகளுடன் தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டதைப் பார்த்தோம். யாத்திரையின் போது ஒரு சமயம் அவர்கள் மாமல்லபுரத்துக்கும் வந்திருந்தார்கள். சில தினங்கள் அந்தக் கலாக்ஷேத்திரத்தில் இருந்தாள். அடிக்கடி அருள்மொழி ராணியைப் பார்த்தாள். ராணி அவளிடம் மிகவும் பிரியமாகவே இருந்தாள். ஆனாலும் அவர்களுடைய உள்ளங்கள் கலக்கவில்லை. எப்படிக் கலக்க முடியும்? தன்னுடைய ஏக புதல்வனைக் குந்தவியின் தந்தை கண்காணாத தீவுக்கு அனுப்பிவிட்டதைப் பற்றி அருள்மொழியின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. குந்தவிக்கோ தன் தந்தைமேல் அணுவளவேனும் குற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை. தந்தையினிடத்தில் அவளுக்கு இருந்த ஒப்பில்லாத பிரியத்தோடு அவரைப் பற்றி அவளுக்கு ரொம்பப் பெருமையும் உண்டு. இதிகாசங்களில் வரும் சூரிய, சந்திர வம்சத்துச் சக்கரவர்த்திகளைப் போல் பெருமை வாய்ந்தவர் தன் தந்தை; வடக்கே நர்மதை நதிவரையில் சென்று திக் விஜயம் செய்தவர்; ராட்சஸப் புலிகேசியை வென்று வாதாபியை அழித்தவர்; அப்படிப்பட்டவரின் கீழ் சிற்றரசனாயிருப்பதே அந்தச் சோழ ராஜகுமாரனுக்குப் பெருமையல்லவா? இருநூறு வருஷமாகச் சோழர்கள் பல்லவ சக்கரவர்த்திகளுக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வரவில்லையா? இப்போது மட்டும் என்ன வந்தது? இவ்விதம் அந்த இரண்டு பேருடைய மனோபாவங்களிலும் வித்தியாசம் இருந்தபடியால் அவர்கள் மனங் கலந்து பேச முடியவில்லை. ஒருவரிடம் ஒருவரின் அன்பு வளர்ந்தது. ஆனால் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒரு முக்கியமான பகுதி பூட்டப்பட்டுக் கிடந்தது. ஒருநாள் அருள்மொழி ராணி ஓரளவு தன் இருதயத்தின் கதவைத் திறந்தாள். குந்தவியின் தந்தைக்குத் தன்னை மணஞ் செய்து கொடுப்பதாகப் பேச்சு நடந்ததையும், தான் அதைத் தடுத்துப் பார்த்திப மகாராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டதையும் கூறினாள். விக்கிரமனுடைய பிள்ளைப் பிராயத்தில் அவனுக்குக் குந்தவியை மணம் முடித்து வைக்கத் தான் ஆசைப்பட்டதையும் தெரிவித்தாள். அப்போது குந்தவியின் உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது. ஆனால், பிறகு ராணி, "அதெல்லாம் கனவாய்ப் போய்விட்டது. பாக்கியசாலியான வேறொரு ராஜ குமாரனை நீ மணந்து சந்தோஷமாய் வாழ்வாய்!" என்று சொன்னபோது குந்தவிக்குக் கோபமே வந்தது. "இல்லை அம்மா! எனக்கு இல்லறத்தில் பற்று இல்லை. உலகத்தைத் துறந்து நான் சிவவிரதையாகப் போகிறேன்" என்றாள் குந்தவி. அவள் அவ்விதம் கூறியதன் கருத்தை ராணி அறிந்து கொள்ளவில்லை. பிறகு ஒரு சமயம் குந்தவி, இளவரசர் விக்கிரமன் பல்லவ சாம்ராஜ்யத்துக்குக் கப்பம் செலுத்த இசைந்தால் இன்னமும் திரும்பி வந்து சோழ நாட்டுக்கு அரசராகலாமே என்று சொன்னபோது, அருள்மொழி ராணியின் முகம் அருவருப்பினால் சிணுங்கிற்று. "அதைக் காட்டிலும் விக்கிரமன் செத்துப் போனான் என்று செய்தி எனக்குச் சந்தோஷத்தையளிக்கும்!" என்றாள். மாமல்லபுரத்தில் அருள்மொழி ராணி தங்கியிருக்கும்போது தான் ஒரு நாளைக்குப் பழைய சிவனடியார் வந்து மகாராணியைப் பார்த்துப் பேசினார். அவர் பேசிவிட்டு திரும்பிப் போகும் சமயத்தில் குந்தவி அவரைப் பார்த்தாள். உடனே பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்துவிட்டன. ராணியிடம் சென்று அந்தச் சிவனடியார் யார் என்று கேட்டாள். யார் என்று ராணியினால் சொல்ல முடியவில்லை. "யாரோ பெரியவர். என் பதி வீர சொர்க்கம் சென்ற பிறகு இவர்தான் எங்களுக்குக் குலதெய்வமாயிருந்து வருகிறார்!" என்றாள். குந்தவி மனதிற்குள், "குல தெய்வமில்லை; குலச் சனியன்!" என்று நினைத்துக் கொண்டாள். பின்னால் அருள்மொழித் தேவி காவேரி சங்கமத்தில் கடலில் மூழ்கிய செய்தியும், அவளை யாரோ தூக்கிச் சென்றதாக வதந்தியும் காதில் விழுந்தபோது, "தூக்கிக் கொண்டு போனவர் அந்தப் போலிச் சிவனடியாராய்த் தானிருக்க வேண்டும். ஏதோ கெட்ட நோக்கத்துடன் அந்த வேஷதாரி இத்தனை நாளாய் மகாராணியைச் சுற்றியிருக்கிறான்!" என்று நிச்சயம் செய்து கொண்டாள். இந்தத் துர்ச் சம்பவத்துக்குச் சில காலத்துக்கு முன்பு தான் குந்தவியின் தமையன் இலங்கையை வெற்றி கொண்டு திரும்பி வந்திருந்தான். அவன் தன் சகோதரியிடம் அளவற்ற வாஞ்சை வைத்திருந்தான். குந்தவி தன் உள்ளத்தை ஓரளவு திறந்து காட்டுவதும் சாத்தியமாயிருந்தது. தன் சகோதரியின் மனோநிலையை உணர்ந்து மகேந்திரன் தானே செண்பகத் தீவுக்குப் போய் விக்கிரமனை எந்தச் சாக்கிட்டேனும் திருப்பி அழைத்து வரத் தீர்மானித்தான். இந்த எண்ணத்துடனே அவன் சக்கரவர்த்தியிடம் சாவகம், காம்போஜம் முதலிய கீழ்ச் சமுத்திரத் தீவுகளுக்குப் படையெடுத்துச் செல்ல அனுமதி கேட்டான். சக்கரவர்த்தி இதற்குச் சம்மதியாமல், தமக்கே கடற் பிரயாணம் செய்யும் உத்தேசம் இருக்கிறதென்றும், அதனால் மகேந்திரன் யுவராஜ பதவியை வகித்துப் பல்லவ சாம்ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பை வகிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். மகேந்திரனால் இதை மறுக்க முடியவில்லை. இந்த நிலைமையில், குந்தவியின் வற்புறுத்தலின் மேல் மகேந்திரன் மாரப்ப பூபதியைச் சோழ நாட்டின் சேனாதிபதியாக்கியதுடன், அவனை மாமல்லபுரத்துக்கும் தருவித்தான். சிவனடியாரை அவன் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், அவர் மூலமாக ராணி அருள்மொழித்தேவி இருக்குமிடத்தை அறிய வேண்டுமென்றும் மாரப்ப பூபதிக்குக் கட்டளை பிறந்தது. அதோடு குந்தவியும் மகேந்திரனும் உறையூர் வசந்த மாளிகையில் சில காலம் வந்து தங்கப் போவதாகவும், அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறையூர் போவதற்குச் சக்கரவர்த்தியும் சம்மதம் கொடுக்கவே, மகேந்திரனும் குந்தவியும் மற்றப் பரிவாரங்கள் புடைசூழ ஒரு நாள் பிரயாணம் கிளம்பினார்கள். விக்கிரமன் காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டுத் தப்பிப் பிழைத்த அன்றைக்கு மறுநாள் உச்சிப் போதில், அந்தக் காட்டாற்றுக்குச் சுமார் ஒரு காத தூரத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குந்தவி பல்லக்கிலும், மகேந்திரன் குதிரை மேலும் அமர்ந்து பிரயாணம் செய்தார்கள். மகேந்திரன் தன்னுடைய இலங்கைப் பிரயாணத்தைப் பற்றியும் அங்கே தான் நடத்திய யுத்தங்களைப் பற்றியும் தங்கைக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். இலங்கை நாட்டின் நீர்வள நிலவளங்களைப் பற்றியும் வர்ணித்தான். குந்தவி வியப்புடன் கேட்டுக் கொண்டு வந்தாள். ஆனாலும் இடையிடையே அவளுடைய ஞாபகம் செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியின் மீது சென்று கொண்டிருந்தது. இது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரத்தின வியாபாரி வராமல் போனதினால்தான் என்ன, எதற்காகத் தன் மனம் அவ்வளவு கவலையுறுகிறது என்று ஆச்சரியப்பட்டாள். அவன் தனக்குச் செண்பகத் தீவு என்று சொன்னபடியால்,சோழ ராஜகுமாரனைப் பற்றி அவனிடம் விசாரிக்கும் ஆவல்தான் காரணம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள். "இல்லை; இல்லை; அவர்கள் இருவருக்கும் உள்ள முக ஒற்றுமைதான் காரணம்!" என்று ஒரு மனம் சொல்லிற்று. "ஆனால் அது உண்மையா? அல்லது நம்முடைய கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டனவா? உண்மையில் அத்தகைய முக ஒற்றுமையிருந்தால், அப்பா அதைக் கவனித்திருக்கமாட்டாரா? கவனித்திருந்தால் அவனை வழிப்பறிக்காரர்களிடமிருந்து காப்பாற்றி உறையூருக்கு அனுப்பி வைத்திருப்பாரா? அதெல்லாம் இல்லை; நம்முடைய பிரமைதான் காரணம்!" என்று இன்னொரு மனம் சொல்லிற்று. இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியில், "உறையூரில் ஒருவேளை அந்த ரத்தின வியாபாரியைச் சந்திப்போமா?" என்ற நினைவும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் குந்தவி தன் மனத்திற்குள் எண்ணமிட்டுக் கொண்டும், ஒரு காதில் மகேந்திரனுடைய பேச்சைக் கேட்டு 'ஊங்' கொட்டிக் கொண்டும் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு எதிரே திடீரென்று தோன்றிய ஒரு காட்சி அவளை ஒரே அடியாகத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனைக்கும் அந்தக் காட்சி வேறொன்றுமில்லை; சேணம் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு உயர்ந்த ஜாதிக் குதிரை முதுகில் ஆள் இல்லாமல் தனியாக வந்து கொண்டிருந்த காட்சிதான். அதைக் கண்டு ஏன் அவ்வாறு குந்தவி திடுக்கிட வேண்டும்? - அவளுக்கே தெரியவில்லை. குதிரை இன்னும் அருகில் வந்தது. அது அவளுடைய தந்தையின் குதிரைதான் என்பது ஐயமறத் தெரிந்தது. சில சமயம் சக்கரவர்த்தி அதில் ஏறி வந்திருப்பதை அவளே பார்த்திருக்கிறாள். அது எப்படி இங்கே வந்தது? ஒருவேளை, அப்பாதான்...? அவ்விதம் இருக்க முடியாது. அப்பாவிடம் காஞ்சியில் விடை பெற்றுக் கொண்டு தானே கிளம்பினோம்? நமக்கு முன்னால் அவர் எப்படி வந்திருக்க முடியும்? வந்திருந்தாலும் குதிரை ஏன் இப்போது தனியாக வருகிறது? சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இரத்தின வியாபாரிக்குக் குதிரையும் கொடுத்து அனுப்பியதாக அப்பா சொன்னாரல்லவா? குதிரைக்குப் பதிலாக அவன் கொடுத்த இரத்தினங்களையும் காட்டினாரல்லவா? ஆமாம்; இரத்தின வியாபாரி ஏறிச் சென்ற குதிரையாய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது ஏன் இப்போது தனித்து வருகிறது? இரத்தின வியாபாரி எங்கே? அவன் என்ன ஆனான்? குந்தவியின் அடிவயிறு அப்படியே மேலே கிளம்பி அவளுடைய மார்பில் புகுந்து மூச்சை அடைத்து விட்டது போலிருந்தது. |