![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் 5. ஒற்றர் தலைவன் நல்ல சமயத்தில் வந்து தன்னைக் காப்பாற்றிய குதிரை வீரனிடம் விக்கிரமனுக்கு நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. அவ்வீரனுடைய கேள்விக்கு மறு மொழியாக, "ஐயா! நான் வியாபாரி. உறையூருக்குப் போவதற்காக இந்தக் குறுக்கு வழியில் வந்தேன். வந்த இடத்தில் இந்த ஆபத்து நேர்ந்தது. நல்ல சமயத்தில் நீங்கள் வந்து உதவி செய்தீர்கள்" என்றான். "வியாபாரியா நீர்? துலாக்கோல் பிடிக்கும் கையா இவ்வளவு லாவகமாய்க் கத்தி சுழற்றுகிறது? நம்ப முடியவில்லை, ஐயா! என்ன வியாபாரம் செய்கிறீரோ?" "இரத்தின வியாபாரி நான்; கத்தியை உபயோகிக்கவும் பழகியிருக்கிறேன்..." "அழகுதான்! இரத்தின வியாபாரியா இம்மாதிரி காட்டு வழியில் தனியாகக் கிளம்பினீர்? அதுவும் இரா வேளையில்...." "நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழைக் கேட்டு ஏமாந்து போனேன். அவருடைய ஆட்சியில் திருட்டுப் புரட்டே கிடையாது என்று கடல்களுக்கு அப்பால் உள்ள தேசங்களில் எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்...." "ஓகோ! வெளிநாட்டிலிருந்து வந்தீரா! நினைத்தேன் அப்போதே. எந்த நாட்டிலிருந்து வருகிறீர், ஐயா?" "எனக்குச் செண்பகத் தீவு." "செண்பகத் தீவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்டில் இரத்தினங்கள் அதிகம் உண்டு என்று. நல்லது; இரத்தின வியாபாரம் செய்ய வந்த நீர் முதலில் காஞ்சிக்கல்லவா போக வேண்டும்? இவ்வளவு அவசரமாக உறையூருக்குக் கிளம்பியது ஏனோ?" "சொல்லுகிறேன், ஐயா! ஆனால் தாங்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தவில்லையே!" "நான் யாராயிருந்தால் என்ன?" "என் உயிரைக் காப்பாற்றியவர் யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?" "உம்முடைய உயிரை நான் காப்பாற்றவில்லை; நீரே தான் காப்பாற்றிக் கொண்டீர். மூன்று பேரை வேலை தீர்த்த உமக்கு இன்னும் ஒருவனைத் தீர்ப்பது பிரமாதம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நான் யாரென்று சொல்லுகிறேன். காஞ்சி சக்கரவர்த்தியைப் பற்றி நீர் கேள்விப்பட்டது பொய்யாகப் போயிற்று என்றீரே? அந்தச் சக்கரவர்த்தியின் ஊழியர்களில் ஒருவன் நான்; ஒற்றர் படைத்தலைவன். நீர் தனியாக இந்தக் காட்டு வழியே போகிறீர் என்று எனக்குத் தகவல் வந்தது. ஏதாவது அபாயம் நேரலாம் என்று எதிர்பார்த்து உடனே புறப்பட்டு வந்தேன்..." "அப்படியா? என்ன விந்தை? சக்கரவர்த்தியின் ஒற்றர் படை அவ்வளவு திறமையாகவா வேலை செய்கிறது? அப்படியானால், நான் எண்ணியது தவறு..." "செண்பகத் தீவில் நடக்கும் ஆட்சியைப் போல் அவ்வளவு திறமையாக இங்கே அரசாங்கம் நடக்காமலிருக்கலாம், ஐயா! ஆனாலும், எங்களால் முடிந்தவரையில் கொலை, களவு நடக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். பார்க்கப் போனால், இரவில் தனிவழியே வந்து நாலு உயிர்களின் மரணத்துக்குக் காரணமாயிருந்ததின் பொருட்டு உம்மை நான் பிடித்துக் கொண்டு போய்ச் சக்கரவர்த்தியின் முன்னால் நிறுத்த வேண்டும்." விக்கிரமனுடைய கை அப்போது அவனுடைய வாளை இறுக்கிப் பிடித்ததை நட்சத்திரங்களின் மங்கிய ஒளியில் அவ்வீரன் கவனித்தான். "வேண்டாம் ஐயா, வேண்டாம். அவ்விதம் செய்கிற உத்தேசம் எனக்கு இல்லை. அயல் தேசத்திலிருந்து வந்தவரானதால், இந்த வழியின் அபாயம் தெரியாமல் வந்துவிட்டீர். உம்மைப்போல் வேண்டுமென்று விபத்தில் அகப்பட்டுக் கொள்கிறவர்கள் இல்லாமற்போனால், அப்புறம் எங்களுக்குத்தான் என்ன வேலை இருக்கும்? ஒற்றர் படைத் தலைவன்தான் எதற்காக? நல்லது; நான் வந்த வேலை ஆகிவிட்டது. பார்க்கப் போனால் நான் வந்திருக்க வேண்டியதில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் உம்மை நீரே காப்பாற்றிக் கொள்ளக் கூடியவராயிருக்கிறீர். நான் போய் வருகிறேன்" என்றான் அவ்வீரன். விக்கிரமனுடைய உள்ளம் குழம்பிற்று. அவ்வீரனுக்குத் தான் தகுந்தபடி நன்றி செலுத்தவில்லையென்று அவன் கருதினான். அன்றியும், அவ்வீரனுடன் இன்னும் கொஞ்சம் சிநேகம் செய்துகொண்டு உறையூர் போவதற்கு அவனுடைய குதிரையை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசையும் உண்டாயிற்று. இரவை எங்கே, எப்படிக் கழிப்பது என்ற கவலையும் தோன்றியது. "அப்படியன்று. அந்தச் சமயத்தில் தாங்கள் வந்திராவிட்டால், ஒருவேளை நான் உயிரிழந்திருப்பேன். எனக்கு உயிர் அளித்தவர் தாங்கள்தான். அதோடு இன்னொரு உதவியும் தாங்கள் எனக்குச் செய்ய வேண்டும்" என்றான் விக்கிரமன். "என்னிடம் யாராவது உதவி கேட்டால், அதை மறுக்கும் வழக்கம் கிடையாது. உதவி கேட்காதவர்களுக்குக் கொடுப்பதும் இல்லை." "உறையூருக்கு நான் அவசரமாய்ப் போக வேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் தாம் உதவி செய்ய வேண்டும். உங்கள்...." "நீர் கேட்கப்போவது தெரிகிறது. என் குதிரையைக் கேட்கிறீர். ஆனால், இந்த இராத்திரியில் இனிமேல் இக்காட்டு வழியில் போனால், உம்முடன் குதிரையும் துஷ்ட மிருகங்களுக்கு இரையாக வேண்டியதுதான். உம்மைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் குதிரையைப் புலிக்கு ஆகாரமாக்க எனக்கு இஷ்டமில்லை." "வேறு என்ன யோசனை சொல்கிறீர்கள்?" "இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு சிற்பியின் வீடு இருக்கிறது. என்னுடன் வந்தால், அங்கே படுத்திருந்துவிட்டு அதிகாலையில் எழுந்து போகலாம்." விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியே செய்யலாம்" என்றான். கீழே கிடந்த மூட்டைகளை எடுத்துக் குதிரைமேல் வைத்துக் கட்டினார்கள். பிறகு, வீரன் குதிரையைப் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் புகுந்து செல்ல, விக்கிரமனும் அவன் பின்னால் சென்றான். |