பொய்மான் கரடு


முன்னுரை

     ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று!

     ஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால் உலகத்துக்கு எப்பேர்பட்ட அமர இலக்கியம் நஷ்டமாய்ப் போயிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு திடுக்கிடுகிறது!

     நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா!) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் 'பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

     'அமர இலக்கியம்' என்பது என்ன? பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது! இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை! ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது! கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள்! இப்படிப்பட்ட கதையை 'அமர இலக்கியம்' என்று சொல்லாவிட்டால், வேறு எதைச் சொல்லுவது?

     மேனாட்டுக் கீழ்நாட்டுப் பிரபல கதை ஆசிரியர் பலர், 'நான் கதை எழுதுவது எப்படி' என்பது பற்றி எழுதியிருக்கிறார்கள். என்னையும் அப்படிப்பட்ட பிரபல ஆசிரியராக்கி விடவேண்டுமென்று சதியாலோசனை செய்த சில நண்பர்கள், 'நீர் கதை எழுதுவது எப்படி?' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது?' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்? சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே!' என்பார்கள்.

     அது எப்படியாவது இருக்கட்டும். இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

     ஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே! நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா? போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்!' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.

     பாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு! எவ்வளவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.

     நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.

ரா. கிருஷ்ணமூர்த்தி
'கல்கி'


பொய்மான் கரடு : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21