உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 15 சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குச் சென்ற வழியில் மோட்டார் சாரதி சொன்ன கதை இது என்பதை நேயர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் சொன்ன கதையை ஏதோ எனக்குத் தெரிந்த பாஷையிலும் பாணியிலும் எழுதிக்கொண்டு போகிறேன். சேலம் ஜில்லா கிராமங்களில் குடியானவர்கள் கையாளும் சக்தி வாய்ந்த பேச்சு நடையை என்னால் அவ்வளவு நன்றாகக் கையாள முடியுமா? அல்லது அவர்களுடைய பேச்சில் காணும் ரஸத்தைத்தான் எழுத்திலே கொண்டு வர முடியுமா? செங்கோடன் லாந்தரைப் பொருத்திக்கொண்டு குடிசைக்குள்ளே நுழைந்த கட்டத்தில் கதை நின்று போயிற்று. ஏனெனில், அதற்குள் நாமக்கல் வந்துவிட்டது. "இந்த நாமக்கல்லுக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை. இன்னும் கொஞ்சம் அப்பால் தள்ளியிருக்கக் கூடாதோ! கதையின் நடுவில் வந்து குறுக்கிட்டு விட்டதே!" என்று நொந்து கொண்டேன். நாமக்கல்லுக்கு வந்த காரியம் முடிந்து முன்னிரவில் திரும்பிப் புறப்பட்டோ ம். மணி சுமார் ஒன்பது இருக்கும். காலையில் போட்ட தூற்றலைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே விழுந்துகொண்டிருந்தது. 'மழை' என்று கூட அதைச் சொல்லலாம். மேலே வானமும் கீழே நான்கு திசைகளும் இருட்டியிருந்தன. மோட்டார் வண்டியின் முன் விளக்குகள் அந்த இருட்கடலைக் கிழித்துக் கொண்டு சாலையில் சற்று தூரத்துக்கு வெளிச்சமாக்கிக் கொண்டு சென்றன. அந்தப் பிரகாசமான ஒளியில் மழைத்துளிகள் வைரத்துளிகளாக ஒளிர்ந்தன. ஒவ்வொரு சமயம் வானத்தை வெட்டிய மின்னல் பூமியில் நெடுந்தூரத்தைப் பிரகாசமாக்கி விஸ்தார வெட்டவெளிகளையும் ஆங்காங்கு நின்ற மொட்டைப் பாறைகளையும் குட்டை மரங்களையும் ஒரு கணம் காட்டி விட்டு மறைந்தது. பாக்கிக் கதையைக் கேட்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை மோட்டார் சாரதியிடம் தெரிவித்துக் கொண்டேன். அவரும் கதையைத் தொடங்கினார்: *****
குடிசைக்குள் செல்லும்போதே செங்கோடனின் உள்ளம் பதைபதைத்தது. என்னத்தைப் பார்க்கப் போகிறோமோ என்று திகில் கொண்டிருந்தது. அங்கே அவன் பார்த்த காட்சியோ பதைபதைப்பையும் திகிலையும் அதிகமாக்கியது. மனிதன் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடந்தது தெரிந்தது. தன்னைக் கெடுப்பதற்கு முயன்ற இருவரில் ஒருவன் தான் அவன்! பங்காருசாமி என்ற பெயரை உடையவன். அவன் பக்கத்தில் ஒரு கூரிய கத்தி கிடந்தது. அதில் இரத்தக் கறை பட்டிருந்தது. அப்புறம், அடுப்பைத் தோண்டி எடுத்து அப்பாற்படுத்திவிட்டு அங்கே குழி தோண்டியிருந்ததையும் அவன் பார்த்தான். குழி காலியாயிருந்ததையும் கவனித்தான். ஆனால் அந்தச் செம்புக் குடம் பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறதா? இல்லை! மாயமாய் மறைந்துவிட்டது! தான் எண்ணியது சரிதான்! ஆனால் இது என்ன? ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே! அதற்குள்ளே... ஆத்தாடி! நோட்டுக்கள்! ரூபாய் நோட்டுக்கள்! பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள்! இன்னும் ஏதோ கறுப்பாகச் சுருள் சுருளாகக் கிடந்தது! ஒன்றும் புரியாமல் திக்பிரமையுடன் செங்கோடன் அந்தப் பெட்டிக்குச் சமீபத்தில் சென்று குனிந்து பார்த்தான். அப்போது தரையில் விழுந்து கிடந்த மனிதன் முனகினான். செங்கோடன் விளக்கை அவன் பக்கம் திருப்பினான். அந்த மனிதன் கொஞ்சம் தலையைத் தூக்கித் தன் சிவந்த கண்களினால் செங்கோடனை விழித்துப் பார்த்தான்! அதனால் செங்கோடனுக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது. "நீயா....! நீயா வந்து தொலைந்தாய்....அவள் எங்கே! அந்தப் பெண் பேய் எங்கே?-அவள்தான் என்னைக் கொன்றவள்!" என்று மெல்லிய குரலில் முணு முணுத்தான், கீழே கிடந்த பங்காருசாமி. "பாவி! சண்டாளி...!" என்று சபித்துக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். முடியாமல் கீழே விழுந்தான். அவன் தலை சாய்ந்தது. கோரமாக விழித்த சிவந்த விழிகள் மூடிக் கொண்டன. செங்கோடன் உடனே மந்திர சக்தியிலிருந்து விடுபட்டவன் போலானான். கீழே கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். அந்தச் சமயத்தில்தான் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் தயக்கத்துடன் நெருங்கி வந்து குடிசைக்குள்ளே எட்டிப் பார்க்க முயன்றார்கள். அவர்களைப் பார்த்ததும், செங்கோடன் ஆவேசம் வந்தவனைப் போல் கத்தியைக் காட்டி, "உள்ளே வராதீர்கள்! வந்தால் உங்களையும் பலி கொடுத்துவிடுவேன்!" என்று கத்தினான். அவர்கள் பயந்து அப்பால் விலகிக் கொண்டார்கள். செங்கோடன் வெளியில் வந்து குடிசையின் கதவைச் சாத்தினான். "ஓகோ!", "கொலை!", "கொலை!" என்று கத்திக்கொண்டு கேணியைப் பார்த்து ஓடி மேட்டின் மீது ஏறினான். கேணி ஓரத்தில் வந்ததும் மடியை அவிழ்த்து அதிலிருந்த பொருளைக் கேணியில் விழும்படி செய்தான். அதே சமயத்தில் பக்கத்து தென்னை மரத்துக்குப் பின்னாலிருந்து போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் வெளிப்புறப்பட்டார். "அப்பனே, செங்கோடா! என்ன விஷயம்? எதற்காக இப்படி அலறுகிறாய்? கேணியில் என்னத்தைப் போட்டாய்?" என்றார். ஒரு நிமிஷ நேரம் செங்கோடன் திகைத்து நின்று விட்டு "நானா? நான் ஒன்றும் கேணியில் போடவில்லை! இனிமேலே தான் போடப் போகிறேன்!" என்றான். "என்னத்தைப் போடப் போகிறாய்?" "ஒரு மனுஷனைத் தூக்கிப் போடப்போகிறேன்." "மனுஷனையா? மனுஷனைக் கேணியிலே தூக்கிப் போடலாமா? செத்துப் போவானே?" "அவன் முன்னமே செத்துப் போய்விட்டானுங்க!" "யார் செத்துப் போனது? செத்தவனை எதற்காகக் கேணியில் போடப் போகிறாய்?" "ஒருவனைக் கொலை செய்தால், அவனைச் சாக்கிலே கட்டிக் கிணற்றிலே போடலாம் என்று சினிமாவிலே காட்டினாங்களே!" "யாரை நீ கொலை செய்தாய்?" "அந்தப் பங்காருசாமியை நான் கொலை செய்து விட்டேன்! இந்தக் கத்தியினால்தான்...!" என்று செங்கோடன் சொன்னபோது, அவன் கை கொஞ்சம் நடுங்கிற்று. "இங்கே கொடு, அந்தக் கத்தியை!" என்று போலீஸ்காரர் கேட்டதும் செங்கோடன் கொடுத்டுவிட்டான். "சரி! வா! நீ கொன்ற ஆளைப் போய்ப் பார்க்கலாம். அவனைத் தூக்கிப் போடுவதற்கு நானும் ஒரு கை கொடுக்கிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரர் குடிசையை நோக்கிப் போனார். செங்கோடனும் அவர் பின்னால் போனான். குடிசை வாசலில் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள். பங்கஜா அழுது கொண்டிருந்தாள். எஸ்ராஜ் அவளைத் திட்டிக்கொண்டிருந்தான். கான்ஸ்டேபிளைப் பார்த்ததும் பங்கஜா, "ஐயோ! இங்கேயும் வந்துவிட்டாயா! இந்தப் பாவிகளால் என் கதி இப்படியாச்சு!" என்று அலறினாள். |