உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 20 கதை சொல்லிக்கொண்டே வந்த மோட்டார் டிரைவர் வண்டியை நிறுத்தியதும், மறுபடியும் 'பொய்மான் கரடு'க்குச் சமீபம் வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன். இடது பக்கத்தில் செங்குத்தாகக் கரிய குன்று நின்றது. மழைக்கால இருட்டுச் சூழ்ந்திருந்தபடியால் குகையும் மானும் கண்ணுக்குத் தெரியவில்லை. கார் செல்லும் சத்தமும் கதை சொன்ன குரலும் நின்றவுடனே மழைத் தூற்றலின் சளசளச் சத்தமும் பூமியில் மழை விழுந்ததும் எங்கிருந்தோ கிளம்பும் ஆயிரக்கணக்கான சிறிய ஜீவராசிகளின் கதம்பக் குரலும் சேர்ந்து கேட்டன. "இப்போது இங்கே நின்று என்ன உபயோகம்? இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே?" என்றேன். இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே பளிச்சென்று ஒரு பெரிய மின்வெட்டுத் தோன்றிச் சுற்றிலும் சூழ்ந்திருந்த காரிருளை அகற்றிக் குன்றுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்விதம் மின்னிய நேரத்தில் பொய்மான் குகைக்குள்ளே நெளிந்து நெளிந்து ஒரு பளபளப்பான கயிறு சென்றதையும், குகைக்குள்ளிருந்து கிறீச் சென்று சத்தமிட்டுக்கொண்டு ஒரு சிறிய பிராணி வெளிப்பட்டு ஓடிவந்ததையும் பார்த்தோம். பாம்புக்குப் பயந்து அந்தக் குகைக்குள்ளிருந்த மான் வெளியே ஓடி வந்ததாகவே தோன்றியது. அடுத்த நிமிஷம் மறுபடியும் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. கரிய பாறை மட்டும் பயங்கரமாக நின்றது. மின்னலில் கண்ட காட்சி என்னைச் சிறிது அரட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். "சரி போகலாமே இருட்டில் இங்கே என்னத்தைப் பார்க்கிறது?" என்றேன். வண்டி நகரத் தொடங்கியது. சாலையில் வலப்புறத்தில் இருந்த குடிசைகளில் இருட்டும் நிச்சப்தமும் குடி கொண்டிருப்பதைக் கவனித்தேன். "இந்தக் குடிசைகளையே பார்க்க முடியவில்லையே! அரை மைல் தூரத்திலுள்ள செங்கோடக் கவுண்டரின் குடிசை எங்கே தெரியப் போகிறது? மழை இல்லாமல் நிலவு நாளாக இருந்தால் குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கலாம்" என்று நான் சொல்லிக்கொண்டிடேயிருக்கையில், மோட்டார் திடீரென்று ஒரு திரும்புத் திரும்பி வளைந்து சாலையோரத்து மரத்தில் மோதிக் கொள்ளப் போய் மறுபடியும் வேகமாக வளைந்து திரும்பி நடுச்சாலைக்கு வந்தது. அந்த மழையிலும் குளிரிலுங்கூட எனக்கு உடம்பு வியர்த்துவிட்டது. "என்ன? என்ன?" என்று பக்கத்திலுள்ள மோட்டார் சாரதியின் காது செவிடுபடும்படி கத்தினேன். "ஒன்றுமில்லை, ஸார்! பதறாதீங்க! ஒரு நாய் குறுக்கே ஓடியது. அதன்மேலே வண்டி ஏறாமலிருப்பதற்காக வளைத்துத் திருப்பினேன்" என்றார் மோட்டார் டிரைவர். இதைக் கேட்டதும் எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை. "என்ன அப்பா, நீ! ஒரு நாயைக் காப்பாறுவதற்காக மனிதர்களைக் கொன்றுவிடுவதற்குப் பார்த்தாயே? அழகாயிருக்கிறது!" என்றேன். "அது எப்படி, ஸார்! நாயும் உயிருள்ள ஜீவன் தானே? மனிதனுடைய உயிரைக்காட்டிலும் நாயின் உயிர் எந்த விதத்தில் மட்டம்?" என்றார் டிரைவர். இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கார் போய்க்கொண்டே இருந்தது. மழைத் தூற்றல் போட்டுக்கொண்டேயிருந்தது. சேலம் ஜங்ஷன் நெருங்கிக் கொண்டேயிருந்தது. கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள என் ஆவல் வளர்ந்து கொண்டேயிருந்தது. "கொஞ்சம் நான் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் அந்த நாய் செத்துப் போயிருக்கும்! ஒரு மயிரிழையில் அது தப்பியது" என்றார் டிரைவர். "இன்னும் கொஞ்சம் மோட்டாரை வளைத்திருந்தால் நாமே பைஸலாகியிருப்போம்!" என்று சொன்னேன். "அதெல்லாம் இல்லை, ஸார்! மனித உயிர் ரொம்ப கெட்டி! அவ்வளவு இலகுவாகச் சாவு வந்து விடாது!" "அப்படியே சாவு வந்தாலும் கதையின் முடிவைத் தெரிந்துகொண்ட பிறகு வந்தால் எனக்குக் கவலையில்லை!" என்றேன். "அதற்கென்ன, சொல்கிறேன். கதை கொஞ்சந்தான் பாக்கி இருக்கிறது!" என்றார் டிரைவர். பணத்தைக் காணோமே என்று கவலைப்பட்ட செம்பவளவல்லிக்குப் போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஆறுதல் கூற முயன்றார். "செங்கோடன் இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது கேவலம் பணத்தைப் பற்றி நீ கவலைப்படுகிறாயே? பணம் கிடக்கட்டும், தள்ளு!" என்று சொன்னார். இது செம்பவளவல்லியின் காதில் கொஞ்சமும் ஏறவில்லை. "நீங்கள் தான் போலீஸ்காரர் ஆச்சே! பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இல்லாவிட்டால், கோர்ட்டில் வந்து நடந்தது நடந்தபடியே சொல்லிவிடுவேன்!" என்றாள். "சொன்னால் செங்கோடனுக்குப் பதில் நீ கொலை கேஸில் அகப்பட்டுக்கொள்வாய். அவ்வளவுதானே? அதில் என்ன பிரயோஜனம்?" "நான் ஏன் மாட்டிக்கொள்கிறேன்? கதவிடுக்கில் மறைந்து நின்று கடப்பாரையினால் மண்டையில் ஓங்கிப் போட்டவர் அல்லவா அகப்பட்டுக்கொள்ள வேண்டும்? உங்களை நான் பார்க்கவில்லை என்று நினைத்தீர்களா?" என்றாள் செம்பா. போலீஸ்காரர் திடுக்கிட்டுப் போனார். ஏனெனில் செம்பா சொன்னது உண்மையேயாகும். போலீஸ்காரர் அன்று மாலை பங்காருவுக்கும் எஸ்ராஜுக்கும் முன்னதாகவே கேணிக்கரைக்கு வந்துவிட்டார். அந்தப் போக்கிரிகள் குடிசைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அரைகுறையாக அச்சடித்த கள்ள நோட்டுகளை ஃபிலிம்களுடன் சேர்த்துக் கொளுத்தியதைப் பார்த்தார். உள்ளே அச்சமயம் நுழையலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, செங்கோடன்-பங்கஜா இவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. பிறகு எஸ்ராஜ் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினான். அதுதான் குடிசைக்குள்ளே நுழைந்து பங்காருவைக் கையும் களவும் கள்ள நோட்டுமாகப் பிடிக்கத் தக்க சமயம் என்று நினைத்து உள்ளே பிரவேசித்தார். ஆனால் தம் பின்னோடு இன்னும் யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டுக் கதவின் இடுக்கில் ஒளிந்து கொண்டார். வருவது ஒரு பெண் என்று அறிந்ததும் அவருக்கு ஒரே வியப்பாகிவிட்டது. அவள் யார், எதற்காக அங்கே வருகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. வந்தவள் உள்ளே வந்து அவசரமாகச் செப்புத் தவலையை எடுத்தாள். பங்காரு திரும்பிப் பார்த்து அவளுடைய சேலைத் தலைப்பைப் பற்றினான். கத்தியை எடுத்துக் குத்துவதற்கு ஓங்கினான்-இவை யாவும் கண் மூடித் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டன. போலீஸ்காரருடைய புத்தி பிரமாதமான அவசரத்தில் வேலை செய்தது. பங்காருவுக்குப் பின்னால் கிடந்த கடப்பாரையைச் சட்டென்று எடுத்து அவன் பின் தலையில் ஓங்கிப் போட்டார். பங்காரு, "ஐயோ!" என்று கத்திக் கொண்டு தரையில் விழுந்தான். அவன் இருட்டில் பார்த்தது ஒரு பெண்பிள்ளையைத்தான். அந்தப் பெண் குமாரி பங்கஜாவாக இருக்கவேண்டும் என்று தவறாகத் தீர்மானித்துக் கொண்டான். அவளே தன் தலையில் அடித்தவள் என்று எண்ணிக் கொண்டு தரையில் விழுந்தான். ஆகையினாலேயே பின்னால் அவன் குமாரி பங்கஜாவின் மேல் குற்றம் சாட்டினான். செம்பா கையில் தவலையை எடுத்துக்கொண்டு பங்காருவின் பிடியை உதறிக்கொண்டு கிளம்பியபோது, கதவின் இடுக்கில் ஓர் உருவம் கடப்பாரையை ஓங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டாள். அப்படி நின்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய போலீஸ் உடை மட்டும் அவளுடைய மனத்தில் பதிந்திருந்தது. அவசரத்திலும் பீதியிலும் அப்போது அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. பின்னால் யோசித்துப் பார்த்து, பார்த்து இப்படி இப்படி நடந்திருக்கவேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்டாள். தாம் கதவருகில் நின்றதைச் செம்பா பார்த்தாளா இல்லையா என்பதைப் பற்றிப் போலீஸ்காரருக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது இப்போது தெளிந்து விட்டது. "ஐயா! பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்" என்றாள் மறுபடியும் செம்பா. "பணமா? நான் எங்கே போக?" "நீங்கள்தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்!" "என்னைத் திருடன் என்றா சொல்லுகிறாய்?" "நான் சொல்லவில்லை. நீங்களேதான் ஒப்புக்கொண்டீர்களே!" "அது எப்போது?" "அன்றைக்கு அவரிடம் நீங்கள் போலீஸ்காரன் வேஷத்திலே கூட 'திருடன் வருவான்' என்று சொல்லவில்லையா? அதை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்." "செம்பா! நீ பலே கெட்டிக்காரி. இவ்வளவு சாமர்த்தியசாலியாயிருந்துகொண்டு அந்த அசட்டுச் செங்கோடனைப் போய்க் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயே, அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது!" "சிலரைப் போல புத்திசாலிகளாயிருப்பதைக் காட்டிலும் அவரைப்போல் அசடாயிருப்பதே மேல்!" "அது உன் தலை எழுத்து! எப்படியாவது போ! செங்கோடன் சீக்கிரம் திரும்பிவருவான். உன் கலியாணத்தன்று பணமும் சீதனமாகக் கிடைக்கும்!" என்றார் போலீஸ்காரர். |