அத்தியாயம் - 5

     அன்றைக்குச் செங்கோடன் தரையில் நடக்கவில்லை. வானத்தில் பறந்து கொண்டிருந்தான்; கடலில் அலைகளுக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தான்; மேகக் குதிரைகளில் சவாரி செய்தான்; மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவினான். தேர் திருவிழாக்களுக்குப் போவதற்காக அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, சட்டைப் பையில் எட்டணாக் காசையும் எடுத்துப் போட்டுக் கொண்டு தலையில் ஜோராக முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே சினிமாவுக்குக் கிளம்பிச் சென்றான்.

     பொய்மான் கரடு ஓரமாகப் போன சாலைக்கு அரை மைல் கிழக்கே செங்கோடனுடைய கேணியும் காடும் குடிசையும் இருந்தன. அந்தச் சாலைக்கு அரை மைல் மேற்கே சின்னம நாயக்கன்பட்டிக்கு வந்திருந்த 'டூரிங் சினிமா'வின் டேரா இருந்தது. செங்கோடன் அங்கே போய்ச் சேர்ந்தான். கொஞ்ச நேரம் கூடாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். குமாரி பங்கஜா வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காகத்தான். ஆனால் அவளுடைய தரிசனம் கிட்டவில்லை. சினிமாப் பார்ப்பதற்காக வந்திருந்த சில ஸ்திரிகள் அங்குமிங்கும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அருகில் சென்று செங்கோடன் உற்றுப் பார்த்தான். அவர்கள் இவனை சற்று ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் செங்கோடனைப் பற்றிப் பரிகாசமாகப் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி அவனைப் பார்த்து, "என்ன மச்சான்! புகையிலை இருக்குதா?" என்று கேட்டாள். "தூ! பட்டிக்காட்டு ஜன்மங்கள்!" என்று செங்கோடன் முணுமுணுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

     சினிமாப் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் டிக்கட் வாங்கத் தொடங்கினார்கள். செங்கோடன் மட்டும் காத்துக் கொண்டிருந்தான். முதல் மணி அடித்தாகி விட்டது. அப்படியும் அந்தக் குமாரி பங்கஜாவைக் காணவில்லை. ஒருவேளை அவள் வந்ததைத் தான் கவனிக்க வில்லையோ என்னவோ, டிக்கட் வாங்கிக்கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டாளோ என்னவோ என்ற சந்தேகம் செங்கோடன் மனத்தில் உதித்தது. உடனே அவசரமாகச் சென்று இரண்டேகாலணா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டான். அப்போது கூட ஒருவேளை வெளியில் வந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்த்துக் கொண்டே விரைவாக நடந்து கூடாரத்துக்குள் சென்றான். இரண்டு மூன்று இடத்தில் அவன் நுழையப் பார்த்த இடங்களில் அவனுடைய டிக்கட்டைப் பார்த்துவிட்டு, "முன்னுக்குபோ!" "முன்னுக்குப்போ!" என்றார்கள். செங்கோடனும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு, முன்னுக்குப் போனான். இரண்டே காலணா டிக்கட் வாங்கிய ஜனங்கள் அதற்குள் கொட்டகையில் நிறைந்துவிட்டார்கள் செங்கோடன் எல்லாருக்கும் முன்னாடி சென்று திரைக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டான். இவ்வளவு நேரம் கழித்து வந்தும் படத்துக்கு இவ்வளவு அருகாமையில் தனக்கு இடம் கிடைத்தது பற்றி மனத்திற்குள் சந்தோஷப்பட்டான்.

     'அதிர்ஷ்டம் வரும்போது அப்படித்தான் வரும்' என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அதிர்ஷ்டம் பூரணமாகவில்லை என்பது நினைவு வந்தது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி எழும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்தினான். குமாரி பங்கஜாவை எங்கும் காணவில்லை.

     திரையில் படம் ஆரம்பமாயிற்று. செங்கோடன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பார்க்கையில் திரையில் வந்த ஒவ்வோர் உருவமும் செங்குத்தாக வளர்ந்து பூதாகார வடிவமாகத் தோன்றியது. பேசுவதற்கோ, பாடுவதற்கோ வாயைத் திறந்தபோது பூதம் வாயைப் பிளப்பதுபோலவே இருந்தது. ஆயினும் இதுதான் சினிமாவில் தமாஷ் என்று செங்கோடன் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைக் காட்டிலும் நாலு மடங்கு சிரித்தான். எட்டு மடங்கு கையைக் கொட்டினான். சினிமாவில் வந்த உருவங்கள் சொல்லும் வார்த்தையை இவனும் திருப்பிச் சொல்லத் தொடங்கினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனை அடக்கப் பார்த்தார்கள். "இந்தக் குடிகாரனை வெளியில் பிடித்துத் தள்ளு" என்றது ஒரு குரல். "அது யார் குடிகாரப்பயல் இங்கே வந்தது? நான் பிடித்துத் தள்ளுகிறேன்" என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் சுற்று முற்றும் பார்த்தான்.

     கூடார சினிமாக்களில் சுமார் ஆயிரத்துச் சொச்சம் அடி படம் காட்டியதும் படத்தை நிறுத்திவிட்டு விளக்குப் போடுவார்கள். முதல் தடவை விளக்குப் போட்டதும் செங்கோடன் 'படம் முடிந்துவிட்டது' என்று எண்ணிக் கொண்டு எழுந்தான், பக்கத்திலிருந்தவர்கள் "உட்காரு உட்காரு!" என்று இரைந்தார்கள்.

     "இன்னும் கொஞ்சம் படம் பாக்கி இருக்கிறதா?" என்று செங்கோடன் கேட்டான்.

     "அட பட்டிக்காடு! ஆயிரம் அடிதான் ஆகியிருக்கிறது இன்னும் பதினேழாயிரம் அடி பாக்கியிருக்கிறது" என்றார் ஒரு சினிமா ரசிகர்.

     "என்ன ஐயா, விளையாடுகிறாய்? பதினேழாயிரம் அடியை எவனாலே தாங்கமுடியும்? கடோ த்கசனாலே கூட முடியாதே" என்றான் செங்கோடன்.

     இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் பின்னால் பார்த்தபோது, சினிமாக் கூடாரத்தின் அந்தப் பக்கத்து ஓரத்தில், குமாரி பங்கஜா உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவளுக்குப் பக்கத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களை அவன் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை.

     "ஐயோ! பாவம்! அவ்வளவு தூரத்திலே போய் உட்கார்ந்திருக்கிறாளே! படம் ஒன்றுமே தெரியாதே! தாமதித்து வந்ததனால் அங்கேதான் இடம் கிடைத்ததுபோல் இருக்கிறது" என்று எண்ணி அநுதாபப்பட்டான். அவனுக்குப் பக்கத்திலேயிருந்த ஓர் ஆள் அவனுடைய ஆர்ப்பாட்டம் பொறுக்காமல் எழுந்து போய்விட்டான். அந்த இடம் காலியாக இருந்தது. செங்கோடன் சட்டென்று தன் தலையிலிருந்த முண்டாசை எடுத்து விரித்து அந்த இடத்தில் போட்டான். குமாரி பங்கஜா இருந்த இடத்தைப் பார்த்துக் கையினால் சமிக்ஞை செய்து கொண்டே, "வா! இங்கே இடம் இருக்கிறது, வந்து விடு!" என்றான். குமாரி பங்கஜா அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை; அவள் காதில் இவன் அழைப்பு விழுந்ததாகவும் தோன்றவில்லை. ஆனால் இவனுக்குப் பக்கத்திலிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். "அந்தப் பட்டிக்காட்டான் தலையில் அடித்து உட்காரவை" என்றது ஒரு குரல்.

     மறுபடியும் விளக்கு அணைந்தது; கூடாரம் இருண்டது; திரையில் படம் ஓடத் தொடங்கியது. செங்கோடனுக்கு இந்தத் தடவை படம் பார்ப்பதில் உற்சாகம் மிகக் குறைந்துவிட்டது. உண்மையில், படத்தின் பேரில் அவன் மனம் செல்லவே இல்லை. குமாரி பங்கஜா வெகுதூரத்தில் படம் தெரியாத இடத்தில் உட்கார்ந்திருக்கிறாளே என்ற கவலை அவனைப் பிடுங்கித் தின்றது.

     அடுத்த தடவை விளக்கு எரியத் தொடங்கியதும், செங்கோடன் தன் தலைக்குட்டையை நன்றாகத் தரையில் இரண்டு பேருக்கு இடம் காணும்படி விரித்துவிட்டு எழுந்து போனான். கூடாரத்தின் பின்னால் சென்ற குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்த இடத்திற்குள் நுழையப் பார்த்தான். அங்கே காவலுக்கு நின்றவன் அவனைத் தடுத்தான்.

     "எங்கே போகிறாய்?" என்றான்.

     "அந்த அம்மாவிடம் பேசவேண்டும்" என்றான் செங்கோடன்.

     "இங்கே பேச முடியாது. சினிமா கொட்டகையிலே பேச்சு என்ன வந்தது? வெளியில் வந்த பிறகு இஷ்டம் போலப் பேசிக்கொள்!"

     "என்ன ஐயா! இப்படி ஏறுமாறாய்ப் பேசுகிறாய்! அங்கே திரைக்குப் பக்கத்தில் இடம் சௌகரியமாயிருக்கிறது. அந்த அம்மாளிடம் சொல்லி அழைத்துப் போக வந்தேன். நீ உள்ளேயே விடமாட்டேன் என்கிறாயே!"

     அந்த ஆசாமி செங்கோடனை ஏற இறங்கப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, "ஆமாம் அப்படித்தான்! உள்ளே விடமுடியாது! போ!" என்று சொன்னான்.

     "என்ன ஐயா, யாரைப் பார்த்தாலும் ஒரே இளிப்பா இளிக்கிறீங்க! சினிமா என்றால் இப்படித்தானோ? என்னிடம் டிக்கட் இருக்கிறது, ஐயா!" என்று செங்கோடன் எடுத்துக் காட்டினான்.

     "கோபித்துக்கொள்ளாதே, அப்பனே! நீ வைத்திருக்கிற டிக்கெட் இரண்டே காலணா டிக்கெட்; அந்த அம்மாள் ஒன்றே கால் ரூபாய் ஸீட்டில் உட்கார்ந்திருக்காங்க! நீ கூப்பிட்டால் வருவாங்களா, அப்பா! ஆமாம், நீ என்னத்துக்கு இவ்வளவு சிரமப்படுகிறாய்? உனக்கு அந்த அம்மாளைத் தெரியுமா?" என்றான்.

     செங்கோடன் காதில் மற்றதெல்லாம் விழவில்லை. ஒன்றேகால் ரூபாய் டிக்கெட் என்பதுமட்டும் நன்றாக விழுந்தது. அவன் மனத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் அவனுடைய வாய் அகலமாகப் பிளந்ததிலிருந்து தெரிந்தது.

     "என்ன ஐயா, நிஜமாகச் சொல்கிறாயா? அல்லது கேலி செய்கிறாயா? இவர்கள் எல்லாரும் தலைக்கு ஒன்றே கால் ரூபாய் கொடுத்துவிட்டா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்?" என்றான் செங்கோடன்.

     "இவர்கள் எதற்காக டிக்கெட் வாங்குகிறார்கள்? ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள்தான்!" என்று தணிந்த குரலில் சொன்னான் 'கேட்' ஆசாமி.

     ஓசி டிக்கட் என்றால் என்னவென்று செங்கோடனுக்குத் தெரியவில்லை.

     "அப்படி ஒரு டிக்கட்டா! அதிலே எனக்கும்தான் ஒன்று கொடேன்!" என்றான் செங்கோடன்.

     "நான் கொடுக்க முடியாது. அந்த அம்மாளுக்கு வலப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார், பாரு! அவர் இந்த சினிமாவுக்கு மானேஜர். அவரை நாளைக்குக் கேளு. இப்போது உன் இடத்துக்குப் போ!"

     "அந்த அம்மாளுக்கு இடப்பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் தெரியுமா?"

     "அவர் இந்த ஊர்ப் பஞ்சாயத்துச் சபையின் மானேஜர்....போ! போ! படம் ஆரம்பித்தாகிவிட்டது."

     "இது என்னடா வம்பாயிருக்கிறது! வலது பக்கத்திலே ஒரு மனேஜர், இடது பக்கத்திலே ஒரு மானேஜர்!" என்று முணுமுணுத்துக்கொண்டே செங்கோடன் தன் இடத்துக்குப் போய் சேர்ந்தான். படம் ஆரம்பித்த பிறகு இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தபடியால் பலரும் அவனைத் திட்டினார்கள். ஆனால் அதெல்லாம் அவன் கவனத்துக்கு வரவேயில்லை. தன்னைச் சினிமாவுக்கு வரச்சொல்லிவிட்டு அந்தக் குமாரி பங்கஜா எங்கேயோ தூரத்தில் இரண்டு ஆண்பிள்ளைக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதைப் பற்றியே யோசனையாயிருந்தது.

     நடுவில் அவகாசம் கிடைத்தபோதெல்லாம் பக்கத்திலிருந்தவர்களை விசாரித்து, சினிமாவில் குறைந்த விலை டிக்கட் வாங்குகிறவர்கள் திரைக்குப் பக்கத்தில் உட்காருவார்கள் என்றும், அதிக விலை டிக்கட் வாங்குகிறவர்கள் தூரத்தில் உட்காருவார்கள் என்றும் செங்கோடன் தெரிந்து கொண்டான். இந்த ஏற்பாடு தலைகீழ்ப் பாடமாகவே அவனுக்குத் தோன்றியது.

     படத்தில் சுவாரஸ்யமான கட்டம் ஒன்று வந்தது. செம்பவளவல்லி சொன்னாளே, அந்தக் கட்டந்தான். கண்ணீர் விட்ட கதாநாயகியைக் கதாநாயகன் தேற்றிச் சமாதானம் செய்யும் இடம். செங்கோடன் அதில் கவனத்தைச் செலுத்தியிருந்தபோது, திடீரென்று படம் நின்றது. ஒரு கணம் ஒரே இருட்டாயிருந்தது. அடுத்த கணம் பின்னால் எங்கேயோ வெளிச்சமாய்த் தெரிந்தது. 'நெருப்பு!', 'நெருப்பு!' என்ற கூக்குரல் கிளம்பியது. உடனே கூடாரத்திற்குள் இருந்தவர்கள் விழுந்தடித்து ஓடத் தொடங்கினார்கள். பெண் பிள்ளைகள் 'ஐயோ!' 'ஐயோ!' என்று கத்தினார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுதன.

     செங்கோடன் எல்லோரையும் போல் எழுந்து நின்றான். வெளியே ஓட எத்தனித்தான். சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. நெருப்பு பின்னாலேதான் பிடித்திருக்கிறது. குமாரி பங்கஜா அங்கே தான் இருக்கிறாள்! செங்கோடனின் தலை சுழன்றது!


பொய்மான் கரடு : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21