உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 8 அவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, "உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா?" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்! முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்ட தல்லவா? வந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். வந்தவர்களில் ஒருவன், "கவுண்டர் ஸார்! தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன? நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு?" என்றான். அதற்குள் இன்னொருவன், "என்னப்பா, எஸ்ராஜ்! நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே?" என்றான். "அழகாய்த்தான் இருக்கிறது! ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே! இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ?" என்றாள் பங்கஜா. "அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா? என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்!" என்றான் செங்கோடன். "பங்காரு! பார்த்தாயா? நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்!" என்றான் 'எஸ்ராஜ்' என்கிற சுந்தரராஜன். "கவுண்டர், ஸார்! அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்!" என்றான் பங்காருசாமி. "எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா? அது எதற்கு?" என்று செங்கோடன் கேட்டான். "இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்." "அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன்? நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள்! நேற்று ராத்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது!" என்றான் செங்கோடன். "அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர்? நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா?" "நெருப்புப் பிடித்ததா, என்ன? நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, 'நெருப்புப் பிடிக்கவே இல்லை' என்றீர்களே!" "அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், 'நெருப்பு ஏன் பிடிச்சுது? என்னமாய்ப் பிடிச்சுது?' என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப் பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா? நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது!..." "எத்தனை ரூபாய்?" என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான். "ஆமாம்; அறுநூறு ரூபாய்க்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவில் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்விட்டது." "என்ன ஐயா, அதிசயமாயிருக்கிறது! ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா? நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா?" என்று செங்கோடன் சத்தம்போட்டுக் கேட்டான். "அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா! பார்த்துக் கொண்டே இருங்கள்! இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் வசூல் ஆகும்." "அடே அப்பா" என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்குத் தோன்றியது! இந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, "கவுண்டரே! நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று உருக்கமான குரலில் கூறினாள். அதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, "அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது! நீ வருத்தப்பட வேண்டான்" என்றான். "அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும்? என்ன நடந்தது தெரியுமா? இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது" என்றாள் பங்கஜா. செங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை நினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று. "எந்த களவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான்? அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே!" என்றான் செங்கோடன். "இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்" என்றாள் பங்கஜா. "சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள்! விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன? பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா?" இதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். "சரி, எஸ்ராஜ்! நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா?" என்று கேட்டான் பங்காரு. "அதற்குள் என்ன அவசரம்? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்!" என்று செங்கோடன் உபசரித்தான். "எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது! சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்?" என்றாள் பங்கஜா. "அதற்கென்ன? நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்!" என்றான் எஸ்ராஜ். "ஆகா! அதோ குயில் கூவுகிறது. பாருங்கள்! அடடா! என்ன இனிமை! என்ன இனிமை!" என்றாள் பங்கஜா. "இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான்! ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்!" என்றான் செங்கோடன். "அப்படியா? இங்கே நிறையக் குயில்கள் உண்டோ?" "இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே? அவ்வளவு போதுமே?" "இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ?" "கூவாவிட்டால் யார் விடுகிறார்கள்? தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா? உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது!" என்றான் செங்கோடன். "பார்த்தாயா, எஸ்ராஜ்! கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்!" என்றான் பங்காரு. "நீங்கள் என்னமோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது." இதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது. "அடாடா! தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது? குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்" என்றான் செங்கோடன். "கவுண்டரே! குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்!" என்றான் எஸ்ராஜ். "குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன?" என்றான் பங்காருசாமி. "இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே? அங்கே போவானேன்?" என்றாள் பங்கஜா. "இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள்! உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?" "சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்!" என்றான் பங்காரு. எல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, "உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்!" என்றான். "வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு? நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள். செங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள்! இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ? பங்கஜா உள்ளே நுழையும்போதே "அடாடா! இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது? வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது! இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது! கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது!" என்று சொல்லிக்கொண்டே வந்தாள். "அதற்கென்ன சந்தேகம்" என்றார்கள் மற்ற இருவரும். செங்கோடன், "எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது" என்றான். "அழகாயிருக்கிறது! வேண்டிய இடம் இருக்கிறதே! ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது!" என்றான் பங்காரு. "மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்!" என்றாள் குமாரி பங்கஜா. பானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்கும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள்? மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள்? எதற்காக இப்படி விழிக்கிறார்கள்? ஆ! இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்! இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை! எல்லாரும் தண்ணீர் குடித்ததும், "வாருங்கள் போகலாம்! வெளியில் காற்றாட உட்காரலாம்!" என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, "இது பிண்ணாக்கு! இது நெல்லு!" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "வாருங்கள்! வாருங்கள்! அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு" என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள். "போகலாமா?" என்றான் ஒருவன். "கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்" என்றான் இன்னொருவன். கயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், "உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்" என்றான். "பேஷாய்க் கேளுங்கள், கவுண்டர்வாள்! ஒன்று என்ன? பத்து வேண்டுமானாலும் கேளுங்கள்!" என்றான் எஸ்ராஜ். "இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க?" என்று கேட்டான். "எனக்கு இந்த அம்மாள் தங்கை!...." "நிஜமாகவா? முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே?" என்றான் செங்கோடன். "என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்!" "என்னங்க? என்னால் நம்பவே முடியவில்லையே! இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது! இவரைப் பார்த்தால்..." "ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே! காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா?" "கண் இல்லாமற் போனாற் போகட்டும்! அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்?" என்றான் செங்கோடன். அப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, "இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள்! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை! அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்!" என்றாள். "அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீ பார்ட்டி கொடுக்கப் போகிறோம்." "எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது." "டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம். சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்." "வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது!" "எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலேகூட உட்காரலாம்." "அப்படியானால் சரி." மூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள். செங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும் வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை. |