முதல் பாகம் : புது வெள்ளம்

41. நிலவறை

     இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின; பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள்; மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான். சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே!

     ஆகா! இது என்ன! இருள் சிறிது குறைந்து வருகிறதே! மிக மிக மங்கலான ஒளி தோன்றுகிறதே! இந்த மங்கிய ஒளி எப்படி எங்கிருந்து வருகிறது? மேலே கூரையில் எங்கிருந்தாவது வரும் நிலவின் ஒளியா? அல்லது சுவர்களில் உள்ள பலகணி வழியாக வரும் ஒளியா? மறைவான இடத்தில் வைத்திருக்கும் விளக்கிலிருந்து பரவும் ஒளியா?... இல்லை, இல்லை! இது என்ன அற்புதம்? நம் கண் முன்னால் தெரியும் இந்தக் காட்சி மெய்யான காட்சிதானா? அல்லது நமது மூளை கலங்கியதால் ஏற்பட்ட தோற்றமா?

     அது ஒரு விசாலமான மண்டபம், கல்லைக் குடைந்து எடுத்து அமைத்த நிலவறை மண்டபம். அதனாலேதான் தலையை இடித்து விடும் போல் அவ்வளவு தாழ்வாகச் சமமட்டமான மேல் தளம் அமைந்திருக்கிறது. அந்த நிலவறையில் குடிகொண்டுள்ள மங்கிய நிலவொளி வெளியிலிருந்து வருவது அல்ல; கூரை வழியாகவோ பலகணி வழியாகவோ வருவதும் அல்ல. அங்கங்கே அந்த நிலவறையில் கும்பல் கும்பலாகவும் சில இடங்களில் பரவலாகவும் வருகிறது. ஆ! அப்படி நிலவொளி வீசும் அப்பொருள்கள் எத்தகைய பொருள்கள்! ஒரு மூலையில் மணி மகுடங்கள்; முத்தும் மணியும் வைரமும் பதித்த மகுடங்கள்; இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள்; முத்து வடங்கள்; நவரத்தின மாலைகள், அதோ அந்த வாயகன்ற அண்டாவில் என்ன? கடவுளே! அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள்! குண்டு குண்டான கெட்டி முத்துக்கள்! அதோ அந்தப் பானையில் பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள். இதோ இங்கே குவிந்து கிடப்பவை தங்கக் கட்டிகள். தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும்! தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? அம்மம்மா! இந்த நிலவறைக்குள் நாம் வந்து சேர்ந்தோமே? பாக்கிய லக்ஷ்மியும் அதிர்ஷ்ட தேவதையும் சேர்ந்தல்லவா நம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்? எப்படிப்பட்ட அதிசயமான, அபூர்வமான இரகசியத்தை, நம்முடைய முயற்சி ஒன்றும் இல்லாமலே நாம் தெரிந்து கொண்டோ ம்! இதை எப்படிப் பயன்படுத்துவது? பயன்படுத்துவது அப்புறம் இருக்கட்டும்; இங்கிருந்து போவதற்கே மனம் வராது போலிருக்கிறதே! இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறதே! இங்கேயே இருந்தால் பசி, தாகம் தெரியாது! உறக்கம் அருகிலும் அணுகாது! நூறு வருஷ காலமாகச் சோழ நாட்டு வீர சைன்யங்கள் அடைந்த வெற்றிகளின் பலன்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. நவநிதி என்று சொல்வார்களே; அவ்வளவும் இங்கே இருக்கிறது! குபேரனுடைய பொக்கிஷத்தையும் தோற்கடிக்கும் செல்வக் களஞ்சியம் இங்கே இருக்கிறது இதை விட்டு எதற்காகப் போக வேண்டும்!

     வந்தியத்தேவன் அந்த நிலவறையைச் சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு மூலையில் கிடந்த மணிமகுடங்களைத் தொட்டுப் பார்த்தான். இன்னொரு பக்கத்தில் கிடந்த ரத்தின ஹாரங்களைக் கையில் எடுத்துப் பார்த்தான். அவற்றைப் போட்டுவிட்டு இன்னொரு பக்கம் சென்று செப்புப் பானையில் நிறைந்திருந்த முத்துக்களில் கைகளை விட்டு அளைந்தான். வேறொரு பானையில் கையை விட்டுப் பொற்காசுகளை அள்ளிச் சொரிந்தான். ஒரு மூலையில் தரையில் பளபளவென்று ஏதோ பரவலாக ஜொலிப்பதைக் கண்டு அங்கே சென்றான். முதலில் என்னவென்று தெரியவில்லை பிறகு, குனிந்து உற்றுப் பார்த்தான். ஐயோ! ஆண்டவனே! அது ஓர் எலும்புக்கூடு! ஒரு காலத்தில் சதையும் இரத்தமும் தோலும் உரோமமும் மூக்கும் முகமும் கண்ணும் காதுமாக இருந்த மனித உடலின் எலும்புக்கூடு!

     ஆ! இந்த எலும்புக்கூடு அசைகிறதே! உயிர்பெற்று எழுகிறதே! பொற்காசுகளைப் போலவே சத்தமிடுகிறதே! நமக்கு ஏதோ சேதி சொல்ல எழுந்திருப்பதாய்க் காண்கிறதே!... வல்லவரையனுடைய உடம்பிலிருந்து ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. தனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டது என்று நினைத்தான். சீச்சீ! எலும்புக்கூடு எழுந்திருக்கவில்லை! அதற்குள்ளேயிருந்து ஒரு பெருச்சாளி ஓடி வருகிறது! நம் கால் மீது விழுந்து ஓடுகிறது!... ஆம்; இப்போது பார்த்தால் எலும்புக்கூடு தரையிலேதான் விழுந்து கிடக்கிறது! ஆனால் அது நமக்கு ஒரு சேதி சொல்லுகிறது என்பது உண்மை. "ஓடிப் போ! இங்கே தாமதியாதே! நானும் உன்னைப் போல் உடல் படைத்த மனிதனாயிருந்தேன். இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டேன்; இங்கேயே மாண்டு மடிந்தேன்! இப்போது எலும்புக்கூடாகக் கிடக்கிறேன்! ஓடிப் போ!" என்று அது நம்மை எச்சரிக்கிறது. இங்கிருந்து, உடனே தப்பிச் சென்றோமோ, பிழைத்தோம். இல்லாவிட்டால் அதோகதி தான்; அந்த மனிதனுக்கு ஏற்பட்ட கதிதான்.

     வந்தியத்தேவன் அந்த நிலவறையிலிருந்து வெளியேற எண்ணினான். ஆனால் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. வந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலவறையின் ஓரமாக எங்கே போனாலும் இருள் என்னும் பூதம் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. கீழே பார்த்தால் அதலபாதாளப் படுகுழியாகத் தோன்றியது. ஏறி வந்த படிக்கட்டு எங்கேயோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டும். அதைக் கண்டுபிடிக்க வந்தியத்தேவன் மேலும் முயன்றான் தேடித் தேடி அலைந்தான். அப்படி அலையும் போது ஓரிடத்தில் சுவர் ஓரமாக ஒரு குப்பல் தங்கக் காசுகள் கிடப்பதைக் கண்டான். அந்தக் குப்பலின் மீது ஏதோ வலை பின்னியது போலிருந்தது. உற்றுப் பார்த்தபோது, அக்குவியலின் பேரில் சிலந்தி வலை கட்டியிருப்பதாகத் தெரிந்தது. சிலந்தியின் வலை அவனது சிந்தனையைத் தூண்டியது.

     பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். வலையை விரித்துக் கொண்டு சிலந்தி காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக் கொள்கிறான்; அப்புறம் மீளுவதில்லை! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் அன்று ஒரே நாளில் நாம் அனுபவித்தாகி விட்டது. நந்தினி என்னும் பழுவூர் இளையராணி தன்னுடைய வலையில் நம்மை அகப்படுத்தப் பார்த்தாள். பழைய வாணர்குல ராஜ்யத்தை அடையலாம் என்னும் மண்ணாசையும் காட்டினாள். கடைசியாக, இங்கே இந்தப் பயங்கரமான பொன்னாசைப் பூதம் நம்மை அடியோடு விழுங்கப் பார்க்கிறது. முதல் இரண்டிலிருந்தும் தப்பினோம், இந்த மூன்றாவது அபாயத்திலிருந்தும் தப்ப வேண்டும். நமக்கு எதற்காக இந்த வம்பெல்லாம்? இராஜ்யம் எதற்கு? செல்வம் எதற்கு? பெண்களின் கூட்டுறவுதான் எதற்காக? வானத்தைக் கூரையாகப் பெற்ற அகண்டமான பூமியே நமது அரண்மனை! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பண்டைத் தமிழ் நாட்டுப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே! எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான். எல்லா மனிதர்களும் நம்முடைய உறவினர்கள் தான். ஊர் ஊராகப் போக வேண்டியது; புதுவெள்ளம் பொங்கி வரும் நதிகளையும், புதிய இலைகள் தளிர்த்து விளங்கும் மரங்களையும், பல வர்ணப் பட்சிகளையும், மகான்களையும், மயில்களையும் மலைகளையும் மலைகளின் சிகரங்களையும், வானத்தையும், மேகத்தையும், கடலையும் கடல் அலைகளையும் பார்த்துக் களிக்க வேண்டியது; பசிக்கு உணவு கிடைக்கின்ற இடத்திலே உண்ண வேண்டியது; உறக்கம் வந்த இடத்தில் உறங்க வேண்டியது! ஆகா! இதுவல்லவா இன்ப வாழ்க்கை! எளிதில் கிடைக்கக்கூடிய இத்தகைய ஆனந்த வாழ்க்கையை விட்டு விட்டு, தொல்லைகளும் சூழ்ச்சிகளும் ஆசைகளும் அபாயங்களும் நிறைந்த வாழ்க்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? எப்படியாவது இந்த நிலவறையை விட்டு இப்போது வெளியேறி விட்டால் போதும்; பிறகு இந்த இருள் மாளிகையையும் தஞ்சாவூர்க் கோட்டையையும் விட்டு வெளியேறி விடவேண்டும். பின்னர், இத்தகைய தொல்லைகளில் என்றைக்கும் அகப்பட்டுக் கொள்ளவே கூடாது...

     ஆகா! கதவு திறந்து மூடும் ஓசை!... மறுபடியும் காலடி ஓசை!... இன்றைய இரவின் அதிசயங்களுக்கு முடிவே கிடையாது போலும்! அதிசயங்களுக்கும் அளவில்லை; பயங்கரங்களுக்கும் எல்லையில்லை! இம்முறை வெகு தூரத்திலிருந்து அந்தக் காலடிச் சத்தங்கள் கேட்டன. இரண்டு பக்கங்களிலிருந்தும் வருவதாகத் தோன்றியது. வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டான். பொக்கிஷ நிலவறையில் நாலுபுறமும் சூழ்ந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு பார்ப்பவனைப் போல் உற்றுப் பார்த்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் எதிர்பார்த்தது போலவே அபூர்வமான காட்சியைக் கண்டான்.

     கூத்து மேடையிலிருந்து மிகத் தொலைவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு மேடையில் தோன்றும் காட்சிகள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வந்தியத்தேவன் அப்போது கண்ட காட்சி. அவன் அச்சமயம் இருந்த இடத்துக்கு உயரமான ஓர் இடத்தில், தொலை தூரம் என்று தோன்றிய தூரத்தில் அது நடந்தது. கூத்து மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு தீவர்த்தி வந்தது. இன்னொருபுறத்துப் பக்கம் படுதாவை நீக்கிக் கொண்டு மற்றொரு தீவர்த்தி வந்தது. தீவர்த்திகள் இரண்டும் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு தீவர்த்தி வெளிச்சத்தில் இரு நெடிய கரிய உருவங்கள் தெரிந்தன. இன்னொரு தீவர்த்தியின் ஒளியில் மற்றும் இரு உருவங்கள் காணப்பட்டன. அவற்றில் ஒற்று நெடிய கம்பீரமான உருவம்; மற்றொன்று சிறிது குட்டையான மெல்லிய வடிவம். இருதரப்பு உருவங்களும் ஒன்றையொன்று நெருங்கி வந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவன் மேலும் கண் விழிகள் பிதுங்கும்படி உற்றுப் பார்த்து அந்த உருவங்கள் யாருடையவை என்பதை ஒருவாறு தெரிந்து கொண்டான். இடது பக்கத்திலிருந்து வந்த இரு உருவங்கள் மதுராந்தகத்தேவரை அழைத்துச் சென்ற கந்தமாறனும் காவலனும்; வலது புறத்திலிருந்து வந்த உருவங்கள் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய இளையராணி நந்தினி தேவியும்.

     இந்த இரு கோஷ்டியாரும் சந்திக்கும் போது என்ன நடக்கும்? ஏதாவது விபரீதமாக நடக்குமா? அல்லது ஒருவருக்கொருவர் வழி விட்டு விட்டுச் சாவதானமாகப் போய் விடுவார்களா?... வந்தியத்தேவன் அந்தப் பரபரப்பில் மூச்சு விடுவதைக் கூட நிறுத்திக் கொண்டு அத்தனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இரு கோஷ்டியாரும் சந்தித்தார்கள் அவர்கள் தடுமாறித் தயங்கி நின்றதிலிருந்து இரு சாராருக்கும் அச்சந்திப்பு வியப்பையும் திகைப்பையும் அளித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் விபரீதம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. பழுவேட்டரையர் கந்தமாறனைப் பார்த்து ஏதோ கேட்டார். அதற்குக் கந்தமாறன் ஏதோ விடை சொன்னான். கேள்வியும் விடையும் என்னவென்பது வந்தியத்தேவனின் காதில் விழவில்லை. பிறகு, பழுவேட்டரையர் கையினால் சமிக்ஞை செய்து சுரங்க வழியின் படிக்கட்டைச் சுட்டிக்காட்டினார். கந்தமாறன் அவரைப் பணிவுடன் வணங்கினான். வணங்கி விட்டுப் படிக்கட்டில் இறங்கினான். அவனுக்குப் பின் கையில் தீவர்த்தியுடன் வந்த காவலனைப் பார்த்துப் பழுவேட்டரையர் ஏதோ சமிக்ஞை செய்தார். அவனும் மறு மொழி சொல்லாமல் ஒரு கையினால் வாயைப் பொத்திக் கொண்டு வணங்கினான். பிறகு கந்தமாறனைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினான். பழுவேட்டரையரும் இளையராணியும் இடதுபக்கம் நோக்கிச் சென்றார்கள்.

     நிழலாட்டத்தையும் பொம்மலாட்டத்தையும் ஒத்த மேற்கூறிய நிகழ்ச்சிகள் எல்லாம் சில கண நேரத்தில் நடந்து விட்டன. இவ்வளவும் சுரங்க வழியில் இறங்கும் படிக்கட்டின் அருகில் நிகழ்ந்தன என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். ஆகா! நாம் வழியில் எங்கும் நில்லாமல் இந்த நிலவறையில் வந்து சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று! நாம் மட்டும் அந்த இரு கோஷ்டிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்? ஏதோ அந்த மட்டுக்கும் பிழைத்தோம். தப்பித்துக் கொள்ள வழி என்ன? கந்தமாறன் மதுராந்தகத்தேவரை அழைத்து வந்த சுரங்க வழியில் திரும்பிச் செல்கிறான் என்பதில் ஐயமில்லை. அந்த வழியிலிருந்து நாம் சிறிது விலகி இந்தப் பொக்கிஷ நிலவறைக்கு வந்திருக்க வேண்டும். இப்போது கந்தமாறன் போகும் வழியைத் தொடர்ந்து சென்றால், எப்படியும் வெளியேறும் வாசலைக் கண்டு கொள்ளலாம். பிறகு ஏதேனும் உபாயம் செய்து தப்பிக்கலாம். அப்படி அவசியம் நேர்ந்தால், கந்தமாறனிடமே உதவி கேட்கலாம். இல்லாவிட்டால் அவனையும் அந்தக் காவலனையும் ஒரு கை பார்த்து விட்டுத் தப்பிச் செல்லலாம் எனவே, கந்தமாறனை இப்போது பின் தொடரலாம்.

     முதலில், தீவர்த்தி வெளிச்சம் நிலவறைக்கு அருகில் வருவது போலிருந்தது. வந்தியத்தேவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றான். பிறகு அவ்வெளிச்சம் அகன்று செல்வது போலிருந்தது. அதற்குள் வந்தியத்தேவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த நிலவறைக்குள் பிரவேசித்த படிக்கட்டு எது என்பதை அறிந்து கொண்டான். அதன் வழியாகக் கீழே இறங்கி மீண்டும் மேலேறினான். தீவர்த்தி வெளிச்சத்தை விட்டு விடாமல், அதிகமாகவும் நெருங்காமல், காலடி ஓசை கேட்காதபடி மெதுவாக அடிவைத்து நடந்து சென்றான். வளைந்தும் நெளிந்தும் சுற்றியும் சுழன்றும் ஏறியும் இறங்கியும் சென்ற அந்தச் சுரங்கப் பாதையில் நாமாக இருளில் நடந்து வழி கண்டுபிடித்துப் போவது எவ்வளவு அசாத்தியமான காரியம்! வாழ்க கந்தமாறன்! அவன் இப்போது தன்னை அறியாமல் நமக்குச் செய்யும் உதவிக்கு எப்போது என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்!...

     அதற்கு ஒரு சந்தர்ப்பம் அவ்வளவு சீக்கிரத்திலேயே கிடைக்கும் என்று வந்தியத்தேவன் எண்ணவேயில்லை!... சுரங்கப் பாதையின் முடிவு வந்து விட்டது. எதிரில் ஒரு பெருஞ்சுவர் தெரிந்தது. அதில் ஒரு வாசலோ, கதவோ இருக்கும் என்று யாரும் கருத முடியாது. ஆயினும் இருக்கத்தான் வேண்டும்! சுரங்கப் பாதைக்கு ஒரு இரகசிய வாசல் இருந்தே தீர வேண்டுமல்லவா?

     காவலன் தன் வலது கையிலிருந்த தீவர்த்தியை இடது கைக்கு மாற்றிக் கொள்கிறான். வலது கையினால் சுவரில் ஓரிடத்தில் கைவைத்து ஏதோ செய்கிறான். திருகாணியைத் திருகுவது போல் திருகுகிறான். சுவரில் மெல்லிய கோடு போல் ஒரு பிளவு தோன்றுகிறது. அப்பிளவு வரவரப் பெரிதாகி வருகிறது. ஓர் ஆள் நுழையும்படியான பிளவாகிறது. காவலன் ஒரு கையினால் அதைச் சுட்டிக்காட்டுகிறான். கந்தமாறன் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சுவரில் தோன்றிய பிளவில் ஒரு காலை வைக்கிறான். ஒரு கால் இன்னும் சுரங்கப் பாதையிலேதான் இருக்கிறது. இப்பொழுது அவனுடைய முதுகுப் பிரதேசம் முழுதும் புலனாகிறது!

     ஆகா! இது என்ன? இந்தக் காவலான் என்ன செய்கிறான்? அரையில் செருகியிருந்த கூரிய வளைந்த சிறு கத்தியை எடுக்கிறானே? கடவுளே! கந்தமாறனுடைய முதுகில் ஓங்கிக் குத்தி விட்டானே! படு பாதகன்! ஒருவனுக்குப் பின்னாலிருந்து முதுகில் குத்தும் சண்டாளன்!... வந்தியத்தேவன் தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளி வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்! அந்தச் சத்தத்தைக் கேட்டுக் காவலன் திரும்பினான்! தீவர்த்தியின் ஒளி வந்தியத்தேவனின் கோபாவேச முகத்தில் விழுந்தது.