முதல் பாகம் : புது வெள்ளம் 5. குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், "கந்தமாறா! கந்தமாறா!" என்று அழைத்தது. "அம்மா என்னைக் கூப்பிடுகிறாள். இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் தட்டுத் தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது. கடம்பூர் மாளிகையின் நிலாமுற்றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள் பண்டக சாலைகள், பளிங்கு மண்டபங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக்கொண்டு சென்றான். இடையில் வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான். "உன்னை பார்த்ததில் அவர்களுக்கெல்லாம் சந்தோஷந்தான். உன்னை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். ஆனால் உன்னைக் குறித்து அவர்கள் சிரிக்கவில்லை." "பின்னே எதற்காகச் சிரித்தார்களாம்?" "பழுவேட்டரையர் இருக்கிறார் அல்லவா? இத்தனை வயதுக்குப் பிறகு அவர் புதிதாக ஒரு இளம் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறார். மூடு பல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பாமல் அவருடைய விடுதியிலேயே அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறாராம்! அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பார்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு! அவள சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள்! பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா?" "கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன், நீதான் முன்னொரு தடவை சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும், கந்தமாறா! பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது?"
"மூன்று ஆண்டுக்குள்ளேதான் இருக்கும்.
மணம் செய்து கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட அவர்
விட்டு வைப்பதில்லையாம்! எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும்
அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு
நடந்து வருகிறது. வந்தியத்தேவா! ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த
மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே
இருக்கும்?"
"அடே! இது என்ன விந்தை! உனக்கு எப்படி அவளுடைய நிறத்தைப் பற்றித் தெரியும்? அவளை நீ பார்த்திருக்கிறாயா, எங்கே எப்படிப் பார்த்தாய்? பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல!..." "கந்தமாறா! இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல, அது உனக்கு தெரியும். மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. வீரநாராயணபுரத்தில் பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சாலையோடு சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சாலை ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்த மரியாதைகளாமே? அது உண்மையா?" "ஆம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். அதனால் என்ன?..." "அதனால் என்ன? ஒன்றுமில்லை. பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். வேறொன்றுமில்லை!..." கந்தமாறன் இலேசாகச் சிரித்துவிட்டு, "இறை விதிக்கும் அதிகாரிக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்குச் செலுத்தினோம். சுத்த வீரனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்பை உனக்கு அளித்தோம். ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை மரியாதை செய்து வரவேற்போம்!" என்றான். பிறகு, "வேறு என்னமோ சொல்லவந்தாய்; அதற்குள் பேச்சு மாறிவிட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது?" என்றான். "கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடாமீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார்! என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருக்கையில் அடுத்தாற்போல், ஒரு மூடு பல்லக்கு வந்தது. மூடு பல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும் முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன! அவ்வளவுதான் நான் பார்த்ததெல்லாம் நீ இப்போது சொன்னதிலிருந்து அந்தப் பெண்தான் பழுவேட்டரையரின் ஆசை நாயகி என்று ஊகிக்கிறேன்." "வந்தியத்தேவா! நீ அதிர்ஷ்டக்காரன். ஆண் பிள்ளை எவனும் அந்தப் பழுவூர் இளையராணியைக் கண்ணாலும் பார்த்ததில்லை என்று பேச்சு. ஒரு விநாடி நேரமாவது அவள் கரத்தையும் முகத்தையும் நீ பார்த்தாயல்லவா? பார்த்த வரையில் அவள் எந்த தேசத்தில் பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா?" என்று கந்தமாறன் கேட்டான். "அச்சமயம் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போது, அவள் ஒருவேளை காஷ்மீர் தேசத்துப் பெண்ணாயிருக்கலாம்; அல்லது கடல்களுக்கு அப்பாலுள்ள சாவகம், கடாரம், யவனம், மிசிரம் முதலிய நாடுகளிலிருந்து வந்த பெண்ணரசியாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அரபு தேசத்துப் பெண்ணாக இருந்தாலும் இருக்கலாம். அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்!" அச்சமயம் எங்கேயோ சமீபத்திலிருந்து வாத்தியங்களின் முழக்கம் கேட்கத் தொடங்கியது. சல்லி, கரடி, பறை, புல்லாங்குழல், உடுக்கு ஆகியவை சேர்ந்து சப்தித்தன. "இது என்ன முழக்கம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். ஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. "குரவைக் கூத்தை நான் பார்த்ததேயில்லை. கட்டாயம் பார்க்கவேண்டும்" என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக் கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று. மேடைக்கு முன்னால் சபை கூடவும் தொடங்கி விட்டது. சுற்றிலும் அரண்மனைச் சுவரும் கோட்டை கொத்தளங்களின் மதிலும் சூழ்ந்த இடத்தில், வெண் மணல் விரித்த விசாலமான முற்றத்தில் குரவைக் கூத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கோழியைப் போலும், மயிலைப் போலும், அன்னத்தைப் போலும், சித்திரங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். செந்நெல்லை வறுத்த வெள்ளிய பொறிகள், மஞ்சள் கலந்த தினையரிசிகள், பலநிற மலர்கள், குன்றிமணிகள் முதலியவற்றினாலும் அந்த மேடையை அழகு படுத்தியிருந்தார்கள். குத்து விளக்குகளுடன் தீவர்த்திகளும் சேர்ந்து எரிந்து இருளை விரட்ட முயன்றன. ஆனால் நறுமண அகில் புகையுடன் தீவர்த்திப் புகையும் சேர்ந்து மூடுபனியைப் போல் பரவி, தீபங்களின் ஒளியை மங்கச் செய்தன. மேடைக்கு எதிரிலும் பக்கங்களிலும் வாத்தியக்காரர்கள் உட்கார்ந்து அவரவர்களுடைய வாத்தியங்களை ஆவேசமாக முழக்கினார்கள். மலர் மணம், அகில் மணம், வாத்திய முழக்கம் எல்லாமாகச் சேர்ந்து வந்தியத்தேவனுடைய தலை சுற்றும்படி செய்தன. முக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூரிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள். சபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசூர கணங்களைக் கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். தேவலோகத்துக் கன்னியர் பலர் முருகனை மணந்துகொள்ளத் தவங்கிடந்து வருகையில், அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து, காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள். வேலவனுடைய கருணைத் திறத்தைக் கொண்டாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறி கொள்ளச் செய்தன. "பசியும் பிணியும் பகையும்
அழிக!
மழையும் வளமும் தனமும் பெருக!" என்ற வாழ்த்துக்களுடன் குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள்
மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.
பின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன. முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித் தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக்கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான். தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதி குதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கி விட்டாள். இப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்றுவிட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. "சந்நதம் வந்துவிட்டு" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, "வேலா! முருகா! தேவசேநாபதி! கந்தா! சூரசம்ஹாரா! அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டிக்கொண்டான். "கேளடா! சொல்லுகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!" என்று சந்நதம் வந்தவன் சந்நதம் கூவினான். "மழை பொழியுமா? வெள்ளம் பெருகுமா? நாடு செழிக்குமா? நினைத்த காரியம் கைகூடுமா?" என்று பூசாரி கேட்டான். "மழை பொழியும்! வெள்ளம் பெருகும்! நாடு செழிக்கும்! நினைத்த காரியம் கைகூடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை! துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள். மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்!..." என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக்கொண்டே அலறினான். "என்ன பலி வேண்டும்?" என்று பூசாரி கேட்டான். "கேட்டால் கொடுப்பீர்களா?" என்றான் வெறியாடியவன். "கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்!" என்றான் பூசாரி. "மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள். ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!" என்று வெறியாடியவன் கோர பயங்கர குரலில் கூவினான். மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக்கொண்டன. பூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம்போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள். சபை மௌனமாகக் கலைந்தது. வெளியில் எங்கேயோ தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. இத்தனை நேரம் பார்த்துக் கேட்டவற்றினால் பரபரப்புக்குள்ளாகியிருந்த வந்தியத்தேவன், நரிகள் ஊளையிடும் சப்தம் வந்த திசையை நோக்கினான். அங்கே, அம்மாளிகையின் வெளிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது. அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான்! ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மதில் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை! அத்தகைய வீண் சித்தப்பிரமைக்குத் தான் உள்ளானது குறித்து வெட்கமடைந்தான். இதுவரை அனுபவித்து அறியாத வேறு பலவகை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன. கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்
|