உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் : புது வெள்ளம் 7. சிரிப்பும் கொதிப்பும் அரசுரிமையைப் பற்றி பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப்போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக்காட்டிலும் வசதியான இடம் வேறு கிடைக்காது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை? இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் - இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஏன் நழுவவிட வேண்டும்? ஆகா! தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான். இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கிவிட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான். "உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்கமாட்டார்' என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்!" என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார். "ஜோசியர்கள் என்ன சொல்லுகிறார்கள்?" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர். "ஜோசியர்களைப் போய்க் கேட்பானேன்? சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால் நட்சத்திரம் தெரிகிறதே! அது போதாதா!" என்றார் ஒருவர். பின்னர் பழுவேட்டரையர் கூறினார்: "ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது. அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்..." "அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது? ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே!" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது. "உண்மைதான். ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார், என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழநாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர் கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை..." "நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா?" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள். "ஆகா! நீங்கள் சிரிக்கிறீர்கள்! எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது? இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். 'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்..." இவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன. "ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்!" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார். "நானும் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதல் சோழராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேரநாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பாடி, வைதும்பர் நாடு, சீட்புலிநாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு - ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்கு காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தான்!..." "ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்..." "மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களாகவும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார்? இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு, பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா? உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்! பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்ல..." "பொன் மாளிகை கட்டி முடிந்துவிட்டதா?" "ஆம். முடிந்துவிட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்று." "மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா?" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார். "அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்ன பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன். "வாழ்க பழுவேட்டரையர்!", "வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்!" "வாழ்க அவர் வீரம்!" என்னும் கோஷங்கள் எழுந்தன. "இன்னும் கேளுங்கள். பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன? பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்திருப்பதென்ன? நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா? ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்கவேண்டுமாம்! ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்ற உணவு அனுப்பி வந்திருக்கிறேன்..." "விந்தை! விந்தை!", "இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!", "இப்படிக் கேட்டதே இல்லை!" என்ற குரல்கள் எழுந்தன. "இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டுவையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம்! அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்!" இச்சமயம் கூட்டத்தில் ஒருவர், "படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிடவேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது!" என்றார். "அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்! சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்!" "ஆ! கூடவே கூடாது! தாங்கள் இப்பதவியிலிருப்பது தான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்கவில்லையா?" "சொல்லாமல் என்ன! பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள். இளைய பிராட்டியிடம் கேளுங்கள்!" என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது! முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்த படியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப் பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப்போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும். எப்படியிருக்கிறது கதை! இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை! இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும்? அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்துவிடுகிறேன்..." "கூடாது! கூடாது! பழுவூர்த் தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்" என்றார் சம்புவரையர். "அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள் தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரன் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார் பழுவூர் மன்னர். |