மூன்றாம் பாகம் : கொலை வாள் 31. பசும் பட்டாடை மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவளநாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று. இயற்கை அரசி பச்சைப் பட்டாடை உடுத்தி நவயௌவன சௌந்தரியத்துடன் திகழ்ந்தாள். அந்தப் பச்சைப் பட்டாடையில்தான் எத்தனை விதவிதமான பசுமைச் சாயங்கள்! கழனிகளில் கதிர்விடுவதற்குத் தயாராயிருந்த நெற் பயிர்கள் ஒரு சாயல்; நடவு நட்டுச் சில காலமாகியிருந்த இளம் பயிர்கள் இன்னொரு சாயல்; அப்போதுதான் நடவாகியிருந்த பசும் பொன்னிறப் பயிர்கள் வேறொரு சாயல்! ஆல மரத்தில் தழைத்திருந்த இலைகள் ஒரு பசுமை; அரச மரத்தில் குலுங்கிய இலைகள் இன்னொருவிதப் பசுமை; தடாகங்களில் கொழு கொழுவென்று படர்ந்திருந்த தாமரை இலைகளில் மோகனப் பசுமை; வாழை இலைகளின் கண்கவரும் பசுமை; தென்னங் குருத்துக்களின் தந்தவர்ணப் பசுமை; பூமியில் இளம் புல்லின் பசுமை; ஓடைகளில் தெளிந்த நீரின் பசுமை; நீரில் அங்குமிங்கும் தத்திப் பாய்ந்த தவளைகளின் பசுமை.
வந்தியத்தேவனுடைய உள்ளத்திலும் அப்போது
ஏதோ ஒரு வகையான இனந்தெரியாத சோகம் குடி கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவென்று
யோசித்து யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை. உண்மையில் அவன் அபரிமிதமான
உற்சாகம் கொள்வதற்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. இந்த வழியாக இரண்டு
மாதங்களுக்கு முன்னால் போனபோது என்னென்ன மனோராஜ்யங்கள் செய்தானோ அவ்வளவும்
நிறைவேறிவிட்டன. அவன் கனவிலும் நடக்கும் என்று கருதாத காரியங்களும் நடந்தேறிவிட்டன.
சுந்தர சோழ சக்கரவர்த்தியைத் தரிசித்தாகி விட்டது! தஞ்சாவூர், பழையாறை,
மாதோட்டம், அநுராதபுரம் முதலிய மாபெரும் நகரங்களைப் பார்த்தாகி விட்டது.
சோழநாட்டின் கண்ணுக்குக் கண்ணாக விளங்கிய பொன்னியின் செல்வனுடைய சிநேகிதம்
கிடைத்து விட்டது; அந்த வீர இளவரசனுக்கு உதவி புரியும் பேறும் கிடைத்து
விட்டது; தமிழகத்தின் அழகுத் தெய்வமும், சோழர் குலவிளக்குமான அரசிளங்குமரி
குந்தவையை ஒருமுறை பார்ப்பதற்கே எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும்.
இப்படியிருக்க அவளுடைய தூய இதயத்தின் நேயத்தைப் பெறுவதென்பது எத்தகைய
பெறற்கரும் பாக்கியம்? அதை எண்ணியபோது அவன் உள்ளம் பெருமிதத்தினால் பொங்கியது.
ஆனால் அந்தப் பெருமிதக் குதூகலத்துடனே ஏதோ ஒரு வேதனையும் தொடர்ந்து வந்தது.
அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் உண்மையில் உரியவன்தானா? அது நிலைத்து
நிற்குமா? கைக்கு எட்டியது வாய்க்கெட்டுவதற்குள் எவ்வளவோ தடங்கல்கள்
ஏற்படக்கூடுமல்லவா?
"ஆகா! அதோ கும்பலாயிருக்கும் மரங்கள்! நதி வெள்ளத்தில் முதலைகளைப் போல் கிடக்கும் அந்த வேர்கள்! இங்கேதான் பொம்மை முதலைமீது வேல் எறிந்த படலம் நடை பெற்றது! வாரிணியும் தாரகையும், செந்திருவும் மந்தாகினியும் நம்முடைய வீரச்செயலைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தது இவ்விடத்தில்தான்! அரசிளங்குமரி நமக்குப் பரிந்து அந்தப் பெண்களை அதட்டியதும் இதே இடத்தில்தான்! சற்று இங்கே நின்று பார்க்கலாம்." வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து இறங்கி நதிக்கரையில் ஓரமாகச் சென்று நின்றான். மரத்தின் வேர்களைச் சுற்றிச் சுற்றிச் சுழலிட்டுக் கொண்டு ஓடிய தெளிந்த நீர்ப்பிரவாகத்தைச் சிறிதுநேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்... ஆகா! அந்தச் சுழலில் ஒரு முகம் தெரிகிறது! அது யாருடைய முகம்? சொல்லவேண்டுமா? அரசிளங்குமரி குந்தவைப் பிராட்டியின் இன்பப் பொன்முகந்தான்! "கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்ணுக்கினியன கண்டேன்!" என்று பாடிய குரலைக்கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தான். உன்னதமான மரத்தின் உச்சாணிக் கிளை ஒன்றில் ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருப்பது தெரிந்தது! "ஓகோ! வீரவைஷ்ணவரே! நான் உம்முடைய திருக்கண்களுக்கு அவ்வளவு இனியவனாக இருக்கிறேனா! நான் உம்மைச் சிறிது நன்றாகப் பார்க்கிறேன். கீழே இறங்கி வருக!" என்று சொன்னான் வந்தியத்தேவன். வீரவைஷ்ணவன் - மரத்திலிருந்து இறங்கிய வண்ணம், "நான் உன்னை சொல்லவில்லை, அப்பனே! உடையில் வாளும், கையில் வேலும் ஏந்திய நீ என் கண்ணுக்குப் பயங்கரமாகவல்லவோ புலப்படுகிறாய்?" என்றான். "பிறகு, யாரைப் பற்றிச் சொன்னீர், வைஷ்ணவரே?" "முழு முதற் கடவுளாகிய திருமால் வாமனாவதாரம் எடுத்து வானத்தை அளப்பதற்காக ஒரு பாதத்தைத் தூக்கிய போது, உங்கள் சிவபெருமானுடைய கண்களுக்கு...." "வைஷ்ணவரே! நிறுத்தும்! இம்மாதிரியெல்லாம் சிவனைத் தாழ்த்திக் கூறுவதை நிறுத்தி விடும். இல்லாவிடில் பெரிய அபாயத்துக்கு உள்ளாவீர்!" "என்ன அபாயம், அப்பனே! முதலையைக் கொன்று யானையைக் காத்த பெருமானின் சக்கரம் இருக்கும்போது என்னை யார் என்ன செய்ய முடியும்?" "நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உமது இஷ்டம்." "பழையாறையில் ஜனங்கள் கொந்தளித்து அரண்மனை வாசலுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது சில காலாமுகர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்." "என்ன பேசிக் கொண்டார்கள்?" "சோழ நாட்டில் பெருகிவரும் வீரவைஷ்ணவர்களை மகாகாளிக்குப் பலி கொடுத்து, அவர்களுடைய மண்டை ஓடுகளைக் குவித்து அடுக்கி, அவற்றின் பேரில் நின்று ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டும் என்று சொன்னார்கள்!" ஆழ்வார்க்கடியான் தன் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு, "இது கெட்டியாகத்தானிருக்கிறது! காலாமுக தாண்டவத்தைத் தாங்கக்கூடியதுதான்" என்றான். "நான் கேள்விப்பட்டதற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு நான் வரும் வழியெல்லாம் காலாமுகர்கள் மண்டை ஓடுகளையும் சூலாயுதங்களையும் தாங்கிக் கொண்டு அலைகிறார்கள். நீர் சிவனே என்று இந்த முன் குடுமி வேஷத்தை மாற்றிக் கொண்டு..." "முடியாது, அப்பா, முடியாது!" "என்ன முடியாது?" "நீ சொன்னாயே அந்தப் பெயரைச் சொல்ல முடியாது. 'விஷ்ணுவே' என்று சொல்லி, எனது வேஷத்தை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்வேன்... அதோ பார்!" ஆற்றங்கரைச் சாலையில் அப்போது ஒரு பல்லக்கு போய்க் கொண்டிருந்தது. அதற்குள் ஒரு பெண்மணி இருப்பது தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை யாரோ ராஜகுலத்துக்குப் பெண்ணாகத் தானிருக்க வேண்டும், யாராயிருக்கும்? பல்லக்குச் சுமப்பவர்களைத் தவிர ஒரு தாதிப் பெண் பக்கத்தில் போய்க் கொண்டிருந்தாள். ஒருவேளை அரசிளங்குமரியாயிருக்கலாமோ! அப்படி இருக்க முடியாது. "வைஷ்ணவரே! அந்தப் பல்லக்கில் இருப்பது யார், தெரியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான். "தம்பி! நான் சொல்வதைக் கேள். உனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே! அதனால் பல தொல்லைகளை நீ ஏற்கனவே அநுபவித்திருக்கிறாய் அல்லவா! வழியோடு எத்தனையோ பேர் போவார்கள்; உனக்கு என்ன அதைப்பற்றி? குதிரை மேலேறிக் கொள்; தட்டிவிடு!" என்றான். "ஓகோ! அப்படியா சமாசாரம்? வீரவைஷ்ணவர் இப்போது பெரிய வைராக்கியசாலி ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது. வீரநாராயணபுரத்தில் நடந்ததை மறந்துவிட்டீரா? அங்கே மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஓலை ஒன்றைச் சேர்ப்பிக்கும்படி நீர் எனக்குச் சொல்லவில்லையா?" "அதெல்லாம் பழைய கதை! இப்போது எதற்கு எடுக்கிறாய்." "போனால் போகட்டும். நீர் என்னோடு வழியில் வந்து சேர்ந்து கொள்வீர் என்று சொன்னார்கள். உமக்காகவே இத்தனை நேரம் மெள்ள மெள்ளக் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தேன். இனியாவது என்னோடு வரப்போகிறீரா, இல்லையா?" "நீ குதிரையில் போகிறாய்! நான் கால்நடையாக வருகிறேன். நாம் எப்படிச் சேர்ந்து பிரயாணம் செல்ல முடியும்? நீ கொள்ளிடக்கரையில் போயிரு. அங்கே நாளைக் காலையில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன்." ஆழ்வார்க்கடியான் வேறொரு இரகசிய வேலையில் ஈடுபட்டிருக்கிறான் என்றும், தன்னுடன் வரமாட்டான் என்றும் வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். "சரி உமது இஷ்டம்!" என்று கூறிக் குதிரைமீது தாவி ஏறிக்கொண்டான். தான் போக வேண்டிய திசையை நோக்கினான். வடகிழக்குத் திசையின் அடிவாரத்தில் கரியமேகங்கள் திரள்வதைக் கண்டான். "அப்பனே! எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? ஐப்பசி பிறந்து விட்டதல்லவா? மழை பெய்தாலும் பெய்யும். எல்லாவற்றுக்கும் சீக்கிரமாகக் குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டுபோ! இராத்திரி தங்குவதற்கு ஏதேனும் ஒரு சத்திரம் சாவடியைப் பார்த்துக்கொள்!" என்றான் ஆழ்வார்க்கடியான். வந்தியத்தேவன் அவ்விதமே குதிரையைத் தட்டிவிட்டான். "எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டது அவனுடைய மனத்தில் பதிந்திருந்தது. இதிலிருந்து குடந்தை சோதிடரின் நினைவு வந்தது. போகும் வழியிலேதான் அந்தச் சோதிடரின் வீடு இருக்கிறது அவரைப் பார்த்துவிட்டுப் போனால் என்ன? சோழ சிங்காதனம் ஏற ஆசைப்படுகிறவர்களுக்குள்ளே யாருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது? பொன்னியின் செல்வரைத் துருவ நட்சத்திரத்துக்குச் சமமானவர் என்று குடந்தை சோதிடர் சொன்னாரல்லவா? அவரோ இராஜ்யம் ஆளுவதில் மனதை செலுத்தவே மறுக்கிறார்! இலங்கைச் சிம்மாசனத்தையும் மணிமகுடத்தையும் எவ்வளவு அநாயாசமாக மறுதளித்தார்? அவருக்குப் பல கண்டங்கள் நேரிடுமென்று சோதிடர் கூறியது ஓரளவு பலித்துத் தானிருக்கிறது. அது போலவே வருங்காலத்தில் அவர் மகோந்நதம் பெற்று விளங்குவார் என்பதும் பலிக்குமா? அது எப்படிச் சாத்தியமாகக் கூடும்? என்னுடைய வாழ்க்கைக் கனவுகள்தான் எவ்வளவு தூரம் பலிக்கப் போகின்றன? என் முன்னோர்கள் காலத்தில் இழந்து விட்ட இராஜ்யம் திரும்பக் கிடைக்குமா? நான் இப்போது எதற்காகப் புறப்பட்டிருக்கிறேனோ அது எவ்வளவு தூரம் நிறைவேறும்? ஆதித்த கரிகாலர், நந்தினி இவர்களுக்குக் குறுக்கே நின்றுதான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமா? இதுவரையில் இரண்டு மூன்று தடவை நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைத்தோம்! மறுபடியும் அது முடியுமா? பழுவூர் இளைய ராணியை எண்ணியபோது வந்தியத்தேவனுடைய மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அவள் அவனிடம் மிக்க பிரியமும் மரியாதையும் காட்டிப் பேசியதென்னவோ உண்மைதான்! ஆனால் அவள் உள்ளத்தை அவனால் அறிய முடியவில்லை. ஏதோ ஒரு முக்கிய காரிய நிமித்தமாக அவனை அவள் விட்டு வைத்திருப்பதாகவே தோன்றியது. அதனாலேயே வந்தியத்தேவனிடம் அவள் அவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள். அது என்ன காரியமாக இருக்கும்? வந்தியத்தேவனுடைய குதிரை சற்றுமுன் அந்த வழியே சென்ற பல்லக்கைத் தாண்டிச் சென்றது. இம்முறை அவன் பல்லக்கை மோதவும் விரும்பவில்லை. பல்லக்கு அவனை மோதவும் இஷ்டப்படவில்லை. ஆனால் குதிரை பல்லக்கைத் தாண்டியபோது பல்லக்கின் திரை சிறிது விலகியது. உள்ளே வீற்றிருந்த பெண் கொடும்பாளூர் இளவரசி வானதி என்பதை அறிந்து கொண்டான். குதிரையை நிறுத்தலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு அதை மாற்றிக்கொண்டு மேலே சென்றான். வானதியைப் பற்றி இளைய பிராட்டி கூறியது நினைவு வந்தது. நாலுபுறமும் அபாயங்கள் சூழ்ந்த இக்காலத்தில் கொடும்பாளூர் இளவரசி தனியாக எங்கே புறப்பட்டாள்? தகுந்த பாதுகாப்புக்கூட இல்லையே? அதோடு இன்னொரு விசித்திரத்தையும் அவன் கண்டான். சற்றுத் தூரத்திலிருந்து பயங்கரத்தோற்றமுடைய இரண்டு காலாமுக சைவர்கள் வானதியின் பல்லக்கை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எதற்கு அப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் இரண்டு பேரும் யார்? அரிச்சந்திர நதிக்கரையில் தான் படுத்துறங்கிய போது தன் பக்கத்தில் வந்து நின்று பேசியவர்கள் அல்லவா? வானதியிடம் வந்தியத்தேவனுக்கு அவ்வளவு அனுதாபம் இல்லையென்பது உண்மையே. பொன்னியின் செல்வருடைய உள்ளத்தில் பூங்குழலி பெறவேண்டிய இடத்தை வானதி அபகரிக்க விரும்புவதாகவே அவன் எண்ணினான். இதனால் அவள் பேரில் கோபங் கொண்டிருந்தான். ஆனாலும் இளைய பிராட்டி அவளிடம் அளவற்ற அன்பு வைத்திருந்தாள் என்பதை அவனால் மறக்க முடியவில்லை. எனவே வானதிக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் இளைய பிராட்டி அதனால் அளவில்லாத துன்பம் அடைவாள். ஆனால் அபாயம் எதற்காக நேரவேண்டும்? "சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே; உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ!' என்று ஆழ்வார்க்கடியான் கூறிய புத்திமதி நியாயமானதுதான். ஆயினும் வானதியின் பல்லக்குச் சென்றதைக் காலாமுகர்கள் இருவர் மறைவான இடத்திலிருந்து பார்த்துக் கொண்டு நின்ற காட்சி திரும்பத் திரும்ப அவன் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்
|