மூன்றாம் பாகம் : கொலை வாள்

7. காட்டில் எழுந்த கீதம்

     பூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது.

     "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
     மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!"

     அந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். காலடிச் சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட அச்சமயம் அவள் மறந்து போனாள்.

     "அத்தான்! நீதானா?"

     "ஆமாம்! பூங்குழலி!"

     "எங்கே இருக்கிறாய்? இப்படி வா!"

     "இதோ வந்துவிட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.

     "நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?"

     "பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய்? எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம்!!"

     "பாடுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்!"

     "நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்!"

     "பித்தா! பிறைசூடி பெருமானே அருளாளா!"

     "போதும், அத்தான்! கொஞ்சம் பாட்டை நிறுத்து!"

     "அப்படியானால் நீ பாடுகிறாயா?" இவ்விதம் இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், "பூங்குழலி! உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்றான்.

     பிறகு மீண்டும், உரத்த குரலில், "என்ன சொல்லுகிறாய்! நீ பாடுகிறாயா? நான் பாடட்டுமா? சிவபெருமான் சுடுகாட்டில் ஆடினார்; நீ வெறுங் காட்டில் பாடக்கூடாதா?" என்று இரைந்தான்.

     "இதோ பாடுகிறேன்; கோபித்துக் கொள்ளாதே!" என்று சொல்லிவிட்டுப் பூங்குழலி பின்வருமாறு பாடினாள்:

"பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்!
அறக்கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை
மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்
உறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே!"

     இவ்விதம் பாடிவிட்டு மெல்லிய குரலில், "அமுதா! நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள்.

     "பூங்குழலி! கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்."

     "ஐயோ! என்ன தவறு செய்துவிட்டீர்கள்! படகு என்ன ஆயிற்று!"

     "படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம்! ஏன் பூங்குழலி! பாட்டை ஏன் நிறுத்திவிட்டாய்! மிச்சத்தையும் பாடு!" என்று பிற்பகுதியை உரத்த குரலில் கூறினான் சேந்தன் அமுதன்.

     "மறந்துவிட்டது அமுதா இந்தக் கோடிக்கரைக் குழகரைப் பற்றி ஒரு பாடல் உண்டே! உனக்கு அது நினைவிருக்கிறதா?- நினைவிருந்தால் பாடு!"

     "ஓ! நினைவிருக்கிறது!" என்று சேந்தன் அமுதன் இரைந்து சொல்லிவிட்டுப் பாடினான்:

     "கடிதாய்க் காற்று வந்தெற்றக் கரைமேல்
     குடிதானயலே இருந்தால் குற்றமாமோ?
     கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்
     அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே!"

     பாட்டு முடிந்தவுடனே பூங்குழலி, "அத்தான்! என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா? பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

     "நாம் இங்கே நின்ற பிறகு காலடி சத்தம் கேட்கவில்லை. அவன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ மறைந்து நிற்க வேண்டும். அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?"

     பூங்குழலி இரைந்து, "தெரியாமல் என்ன? நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே? இதோ கேள்!

     காடேன் மிகவால் இது காரிகை யஞ்சக்
     கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
     வேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
     கோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே!

     பார்த்தாயா! அமுதா! சுந்தரமூர்த்தியின் காலத்தில் ஆந்தைகளும் கூகைகளும் இன்று போலவே இக்காட்டில் கத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது இக்காட்டில் மனிதர்கள் கூட ஆந்தைபோலச் சத்தமிடுகிறார்கள். சற்றுமுன் அத்தகைய குரல் ஒன்று கேட்டேன். அந்தத் தீய சழக்கர் யாராயிருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரியுமா?" இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, "எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு!" என்றாள்.

     பின்னர், ஆந்தை மாதிரியே மூன்று தடவை குரல் கொடுத்தாள். "அப்படியே ஆந்தைக் குரல் மாதிரியே இருக்கிறது! தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே? இதை எங்கே கற்றுக் கொண்டாய்?" என்று அமுதன் கேட்டான்.

     "மந்திரவாதி ஒருவனிடம் கற்றுக்கொண்டேன். மந்திரம் பலிப்பதற்கு இப்படி ஆந்தை போலக் கத்தத் தெரிந்திருக்க வேண்டுமா!"

     "உனக்கு மந்திரவித்தைகூடத் தெரியுமா, என்ன?"

     "ஏதோ கொஞ்சம் தெரியும். என்னுடைய மந்திரசக்தியைப் பரீட்சித்துப் பார்க்கிறாயா?"

     "எப்படிப் பரீட்சிக்கிறது?"

     "இப்பொழுது நாம் பேசுவதையெல்லாம் நமக்குப் பக்கத்தில் ஒருவன் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேண்டுமானால் தேடிப் பார்!"

     இவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள்ளே காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்டது. மந்திரவாதி ரவிதாஸன் மறைவிலிருந்து வெளியே வந்தான். "ஹா ஹா ஹா!" என்று சிரித்துக் கொண்டே வந்தான்.

     "பெண்ணே! அப்படியா சமாசாரம்? உனக்குத் தந்திரம் தான் தெரியும் என்று நினைத்தேன்; மந்திரம்கூடத் தெரியுமா?" என்று கேட்டான்.

     "அட பாதகா! நீதானா?"

     "பெண்ணே! நான் யார், என்று உனக்குத் தெரியுமா?"

     "இலங்கையில் இளவரசரைக் கொல்லப் பார்த்தவன் நீ! அது உன்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய்!"

     "அவர்கள் மூழ்கியது உனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? நீ பார்த்தாயா?"

     "இரண்டு பேருடைய உடல்களும் கரையில் வந்து ஒதுங்கின. பூதத் தீவிலே குழி தோண்டி அவர்களைப் புதைத்து விட்டு வந்தேன். துரோகி! உன் மந்திரத்தில் இடி விழ!"

     "பெண்ணே! என்னை ஏமாற்றப் பார்க்காதே! என்னுடைய மந்திரத்திற்குப் பதில் மந்திரம் போட்டு நீ அவர்களை உயிர் பிழைக்கச் செய்யவில்லையா?"

     "ஐயோ! அது எப்படி உனக்குத் தெரிந்தது?"

     "இந்த ரவிதாஸனுக்குப் புறக் கண்ணைத் தவிர அகக் கண்ணும் உண்டு. நூறு காத தூரத்தில் நடப்பதையும் என்னுடைய மந்திரசக்தியினால் தெரிந்து கொள்வேன்."

     "அப்படியானால் என்னை எதற்காகக் கேட்கிறாய்?"

     "உன்னைப் பரிசோதிப்பதற்காகக் கேட்கிறேன்! அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்!" என்றான் ரவிதாஸன்.

     அவனுடைய புறக்கண்கள் அச்சமயம் நெருப்புத் தணல்களைப் போல் அனல்வீசி ஜொலித்தன.

     "என்ன? உண்மையைச் சொல்கிறாயா, மாட்டாயா! ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷ்ட்!- இதோ என் மந்திரத்தின் சக்தியைக் காட்டப் போகிறேன்."

     பூங்குழலி பயத்தினால் நடுநடுங்கிச் சேந்தன் அமுதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவனிடம் மெல்லிய குரலில், "நான் இப்போது ஓடப் போகிறேன். நீ அவனைத் தடுத்து நிறுத்தப் பார்!" என்றாள்.

     மந்திரவாதியைப் பார்த்து உரத்த குரலில், "என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் இருக்குமிடத்தைக் காட்டி விடுகிறேன்!" என்று கூறினாள்.

     "என்னுடன் வா! காட்டுகிறேன்!" என்று சொல்லி விட்டுப் பாழடைந்த மண்டபத்துக்கு நேர்மாறான திசையை நோக்கி நடந்தாள்.

     மந்திரவாதி அவளைப் பின் தொடரப் பார்த்தான். சேந்தன் அமுதன் பின்னாலிருந்து அவனைப் பிடித்து நிறுத்த முயன்றான்.

     பூங்குழலி ஓடத் தொடங்கினாள். மந்திரவாதி சேந்தன் அமுதனை ஒரே தள்ளாகத் தலைகுப்புறத் தள்ளிவிட்டுப் பூங்குழலியைத் தொடர்ந்து ஓடினான்.

     பூங்குழலி மானைப்போல் விரைந்து பாய்ந்து ஓடினாள். மந்திரவாதி மானைத் துரத்தும் வேடனைப்போல் அவளைப் பிடிக்க ஓடினான். ஆனால் அவளைப் பிடிப்பது எளிதில் முடிகிற காரியமாயில்லை.

     மந்திரவாதி அவளைத் துரத்துவதை விட்டு நின்று விடலாமா என்று எண்ணியபோது பூங்குழலியும் களைத்துப் போனவளைப் போல் நின்றாள். மந்திரவாதி மறுபடியும் அவளைத் துரத்தினான். இருவருக்கும் பின்னால் சேந்தன் அமுதனும் தட்டுத் தடுமாறி விழுந்தடித்து ஓடிவந்து கொண்டிருந்தான். ஓடும்போது மறைந்த மண்டபத்துக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாமா என்று அவன் அடிக்கடி நினைத்தான். அதே சமயத்தில் பூங்குழலியை மந்திரவாதியிடம் தனியாக விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனம் வரவில்லை.

     பூங்குழலி ஒரு மேட்டின் மீது ஏறி நின்றாள். அங்கே சற்றுக் காத்திருந்ததோடு அல்லாமல், திரும்பிப் பார்த்து மந்திரவாதியைக் கைதட்டி அழைத்தாள். மந்திரவாதி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் அருகில் போய் நின்றான். அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் நாலு அறை கொடுக்க வேண்டும் என்று அவன் எண்ணிய சமயத்தில் பூங்குழலி, "அதோ பார் என் காதலர்களை!" என்றாள்.

     அவள் சுட்டிக்காட்டிய திசையை மந்திரவாதி பார்த்தான். முன்னொரு தடவை வந்தியத்தேவன் கண்ட காட்சியை அவனும் கண்டான். சதுப்பு நிலத்தில் ஆங்காங்கு தீப் பிழம்புகள் குப் குப் என்று தோன்றுவதும் கப் கப் என்று மறைவதுமாயிருந்தன. ரவிதாஸனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தின் காரணம் என்னவென்று தெரியுமென்றாலும் அச்சமயம் அவனுக்கு ரோமம் சிலிர்த்தது.

     "மந்திரவாதி! உனக்கு மந்திரம் தெரியுமென்றால், இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளை ஓட்டுவதற்கு ஒரு மந்திரம் போடு பார்க்கலாம்! இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன!" என்றாள்.

     ரவிதாஸனுக்கு அளவில்லாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

     "பெண்ணே! என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா!" என்று கர்ஜித்தான்.

     "உன்னை எதற்காக நான் ஏமாற்ற வேண்டும்?"

     "இளவரசரும் வல்லவரையனும் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி நீ என்னை இழுத்து அடிக்க வில்லையா?"

     "அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னதை நீ நம்பவில்லை. வேறு என்ன செய்யட்டும்?"

     "இளவரசர் இறந்தது உண்மைதானா? ஆணையிட்டுச் சொல்வாயா?"

     "ஆணை எதற்கு! அதோ ஆகாசத்தைப் பார்!"

     ரவிதாஸன் வானத்தை நோக்கினான். வால் நட்சத்திரம் தெரிந்தது.

     "வால் நட்சத்திரம் தோன்றினால் அரச குலத்தில் மரணம் என்று உனக்குத் தெரியாதா? அப்படியே நடந்துவிட்டது!" என்றாள் பூங்குழலி.

     "பெண்ணே! அப்படியானால் உன் கையில் உள்ள கெண்டியை இப்படிக் கொடு; அதில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா உன்னோடு ஓடி வந்ததில் எனக்குத் தாகம் எடுத்து விட்டது!...?"

     பூங்குழலி திடீரென்று மறுபடி ஓட்டம் பிடித்தாள். மேட்டிலிருந்து தாவிக் குதித்து இறங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் தோன்றி மறைந்த சதுப்பு நிலப்பரப்பை நோக்கி ஓடினாள். ரவிதாஸன் ஆத்திரத்தினால் அறிவை இழந்தான். பூங்குழலியைப் பிடித்து அவளுடைய கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் என்று வெறியை அடைந்தான். தலைகால் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.

     சிறிது தூரம் ஓடிய பிறகு பூங்குழலி சட்டென்று கொஞ்சம் குனிந்து நாலைந்தடி ஒரு புறமாக நகர்ந்து கொண்டாள். அதிக வேகமாக அவளைத் துரத்தி வந்த ரவிதாஸனால் அவள் நின்ற இடத்தில் நிற்க முடியவில்லை. அவளுக்கு அப்பால் சில அடிதூரம் வரையில் சென்று நின்றான். திரும்பி அவளைப் பிடிப்பதற்காகப் பாயப் பார்த்தான்; ஆனால் முடியவில்லை. கால்களுக்குத் திடீரென்று என்ன நேர்ந்து விட்டது? அவை ஏன் இப்பொழுது நகரவில்லை? அவை ஏன் சில்லிட்டிருக்கின்றன?

     இது என்ன? உள்ளங்காலிலிருந்து சில்லிப்பு மேலே மேலே வந்து கொண்டிருக்கிறதே? இல்லை, இல்லை! கால்கள் அல்லவா கீழே கீழே போய்க் கொண்டிருக்கின்றன! ரவிதாஸன் குனிந்து பார்த்தான். ஆம், அவனுடைய கால்கள் கீழே புதை சேற்றில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஒவ்வொரு அணுவாக, ஒவ்வொரு அங்குலமாக, அவன் கால்கள் கீழே சேற்றில் மெதுவாகப் புதைந்து கொண்டிருந்தன.

     ரவிதாஸன் தன்னுடைய அபாய நிலையை உணர்ந்தான் சேற்றிலிருந்து வெளிவர முயன்றான். கால்களை உதறி எடுக்கப் பிரயத்தனம் செய்தான். அவனுடைய பிரயத்தனம் பலன் தரவில்லை.

     கீழே சேற்றுக்கடியில் ஏதோ ஒரு பூதம் இருந்து அவனைப் பற்றி இழுப்பது போலத் தோன்றியது. பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.

     "மந்திரவாதி! என்ன விழிக்கிறாய்? பூதத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்டாயா? மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே?" என்றாள்.

     மந்திரவாதி ஒரு பக்கம் பீதியினாலும் மறுபக்கம் கோபத்தினாலும் நடு நடுங்கினான்.

     "அடி பாவி! உன் வேலையா இது?" என்று கையை நெறித்தான்.

     "என் கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாயல்லவா? அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள்!" என்றாள்.

     ரவிதாஸன் கோபத்தை அடக்கிக்கொண்டு, "பெண்ணே! சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு!" என்றான்.

     பூங்குழலி 'ஹா ஹா ஹா' என்று சிரித்தாள். "உன்னைக் கரையேற்றிவிட என்னால் ஆகாது! உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளையெல்லாம் கூப்பிடு!" என்றாள்.

     ரவிதாஸன் இதற்குள் தொடை வரையில் சேற்றில் புதைந்து போயிருந்தான். அவன் முகத்தைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அவனுடைய கண்கள் கொள்ளிக் கட்டைகள் போலச் சிவப்புத் தணல் ஒளியை வீசின.

     கைகளை நீட்டிப் புதை சேற்றுக்கு அப்பால் இருந்த கரையைப் பற்றினான். அங்கே நீண்டு வளர்ந்திருந்த கோரைப் புற்களின் அடிப்பகுதியைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் சேற்றில் இருந்து வெளிவரப் பிரயத்தனம் செய்தான். ஆனால் புதைந்திருந்த கால்களை அசைக்கவும் முடியவில்லை.

     "பெண்ணே, உனக்குப் புண்ணியம் உண்டு! என்னைக் காப்பாற்று!" என்று ஓலமிட்டான்.

     இதற்குள்ளே அங்கே சேந்தன் அமுதன் வந்து சேர்ந்தான். ரவிதாஸனுடைய நிலைமை இன்னதென்பதை அவன் ஒரு நொடியில் அறிந்து கொண்டான். அவனுடைய கண்களில் இரக்கத்தின் அறிகுறி புலப்பட்டது.

     பூங்குழலி அவனைப் பார்த்து, "வா, போகலாம்!" என்றாள்.

     "ஐயோ! இவனை இப்படியே விட்டுவிட்டா போகிறது!"

     "ஏன் சேற்றில் இவன் முழுவதும் புதைகிற வரையில் இருந்து பார்க்க வேண்டுமென்கிறாயா!"

     "இல்லை, இல்லை! இவனை இப்படியே விட்டுவிட்டுப் போனால் வாழ்நாளெல்லாம் கனவு காணுவேன். இவனைக் கரையேற்றி விட்டுப் போகலாம்."

     "அத்தான்! இவன் என்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல நினைத்தான்."

     "அவனுடைய பாவத்துக்குக் கடவுள் அவனைத் தண்டிப்பார். நாம் காப்பாற்றிவிட்டுப் போகலாம்."

     "அப்படியானால் உனது மேல் துண்டைக் கொடு" என்றாள் பூங்குழலி.

     அமுதன் தன் மேல் துண்டைக் கொடுத்தான். அதன் ஒரு முனையைப் புதைசேற்றுக் குழிக்கு அருகில் இருந்த ஒரு புதரின் அடிப்பகுதியில் பூங்குழலி கட்டினாள். இன்னொரு முனையை ரவிதாஸனிடம் கொடுத்தாள்.

     "மந்திரவாதி! இதோ பார்! இந்தத் துண்டின் முனையைப் பிடித்துக் கொண்டிரு! அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே! பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள்!' என்றாள்.

     "ஐயோ! இரவெல்லாம் இப்படியே கழிக்க வேண்டுமா? என்னால் முடியாது அதைக்காட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு!"

     பூங்குழலி அவன் கூக்குரலைப் பொருட்படுத்த வில்லை. சேந்தன் அமுதனைக் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஓடத் தொடங்கினாள். அவர்கள் மேட்டின் மேல் ஏறி அப்பால் காட்டில் இறங்கும் வரையில் மந்திரவாதியின் ஓலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

     அந்தக் குரல் மறைந்த பிறகு, "அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்! நீ எப்படி இங்கு வந்தாய்? எதற்காக?" என்று பூங்குழலி கேட்டாள்.

     "பாதாளச் சிறை அனுபவத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார். எனக்கும் உன்னைப் பார்த்து உன் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசையாயிருந்தது..."

     "பாட்டுக் கேட்பதற்கு நல்ல சமயம் பார்த்தாய்! இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது."

     "ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். அதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். பூங்குழலி! நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த பிக்ஷுக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்."

     "நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?"

     "கால்வாய் வழியாகத்தான்!"

     "கால்வாய் வழியாக எப்படிப் போவது? படகைத் தொலைத்து விட்டீர்களே?"

     "படகு தண்ணீரில் முழுகித்தானே இருக்கிறது? திரும்ப எடுத்து விட்டால் போகிறது!"

     "அப்படியானால் இன்று இராத்திரியே கிளம்பிவிட வேண்டியதுதான். அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே!"

     "வேண்டியதில்லை, பூங்குழலி! அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோ ம். வல்லவரையன் இங்கிருந்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது."

     பூங்குழலிக்குப் புல்லரித்தது. மீண்டும் இளவரசருடன் பிரயாணம்! கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில்! வழியில் அபாயம் ஒன்றும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.

     இருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தை நெருங்கியதும் சேந்தன் அமுதன் பலமாகக் கையைத் தட்டினான்.

     "யார் அங்கே?" என்று வந்தியத்தேவனுடைய கடுமையான குரல் கேட்டது.

     "நான்தான் சேந்தன்!"

     "இன்னும் யார்?"

     "என் மாமன் மகள்!"

     வந்தியத்தேவன் மண்டபத்தின் வாசலில் வந்து எட்டிப் பார்த்தான்.

     "வேறு யாரும் இல்லையே?"

     "இல்லை, ஏன் சந்தேகம்?"

     "மெல்லப் பேசுங்கள்; இளவரசர் தூங்குகிறார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இங்கே யாரோ ஒருவன் வந்தான். நீதானாக்கும் என்று நினைத்து வெளியில் வந்தேன். நீ இல்லை. மந்திரவாதியைப் போல் தோன்றியது."

     "அப்புறம்?"

     "அச்சமயம் உன் பாட்டின் குரல் கிளம்பியது. பாடுவதற்கு நல்ல நேரம் பார்த்தாய் என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளையாக அதை மந்திரவாதியும் கேட்டுவிட்டுத் திரும்பிப் போனான். அவனை நீங்கள் பார்த்தீர்கள்?"

     "பார்த்தோம்."

     "அவனை என்ன செய்தீர்கள்?"

     "நான் ஒன்றும் செய்யவில்லை. இவள் தான் அவனைப் புதைசேற்றுக் குழியில் இடுப்புவரையில் இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்!"

     "இவளுடைய குரல் கூடக் கொஞ்சம் கேட்டதே!"

     "ஆம், பூங்குழலியும் ஒரு பாட்டுப் பாடினாள்."

     "அதைக் கேட்டதும் இளவசருக்குக் சுய உணர்வு வந்தது போலத் தோன்றியது. 'யார் பாடுகிறது?' என்று கேட்டார். 'ஓடக்காரப் பெண்' என்றேன். பாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார்."

     பூங்குழலிக்கு மீண்டும் மெய்சிலிர்த்தது.

     "இவள் பாட்டு மட்டுந்தானா பாடினாள்? ஆந்தை போலவும் கத்தினாளே!"

     "அதுவும் என் காதில் விழுந்தது. காட்டில் ஏதோ அதிசயம் நடைபெறுகிறதென்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் - அத்தானும், மாமன் மகளும் - வசந்தோத்ஸவம் கொண்டாடுகிறீர்களோ என்று நினைத்தேன்..."

     "இது என்ன வீண் பேச்சு?" என்றாள் பூங்குழலி.

     "வேறு என்ன செய்வது? இரவை எப்படியேனும் கழித்தாக வேண்டும்!" என்றான் வந்தியத்தேவன்.

     "இல்லை; பொழுது விடிந்து இங்கே இருந்தால் தப்பிப் பிழைக்க முடியாது. இராத்திரியே புறப்பட்டாக வேண்டும்."

     அச்சமயம் எங்கேயோ வெகு தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. அந்த ஊளைச் சப்தத்துக்கு இடையில் ஆந்தைக் குரல் ஒன்றும் கேட்டது.

     சேந்தன் அமுதன் நடுங்கினான். அவன் மனக் கண்ணின் முன்னால் மந்திரவாதி சேற்றில் புதைந்திருப்பதும், அவனைச் சுற்றி நரிகள் ஊளையிட்டுக் கொண்டு நெருங்கி நெருங்கி வருவதும், மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்தி நரிகளை விரட்டப் பார்ப்பதும் தென்பட்டன.

     வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள். பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.

     கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.

     இளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குரலில் "தாகமாயிருக்கிறது!" என்றார்.

     பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊற்றினாள்.

     சிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், "பூங்குழலி, நீ தானா? சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை ஊற்றுவது போலத் தோன்றியது" என்றார்.