நான்காம் பாகம் : மணிமகுடம் 15. இராஜோபசாரம் கடம்பூர் சம்புவரையர் மாளிகையின் முன் வாசல் அன்று மாலை, கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் கண்டது. கண்ணுக்கெட்டிய தூரம் ஜனங்கள் திரள் திரளாக நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், வயோதிகர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள். திடமாகக் காலூன்றி நிற்கவும் முடியாத கிழவர்களும் கிழவிகளும் கோலூன்றி நின்றார்கள். தாங்கள் பிறரால் அங்குமிங்கும் தள்ளப்படுவதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆதித்த கரிகாலரின் வீரத் திருமுகத்தைப் பார்க்கும் ஆர்வத்தினால் தள்ளாடிக் கொண்டு நின்றார்கள். சிறுவர் சிறுமியர் தாங்கள் ஜனக்கூட்டத்தின் நடுவே நசுக்கப்படுவதைப் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வர முயன்று கொண்டிருந்தார்கள். யௌவனப் பெண்கள் தங்களுக்கு இயற்கையான கூச்சத்தை அடியோடு கைவிட்டு அன்னிய புருஷர்களின் கூட்டத்தினிடையே இடித்துப் பிடித்துக் கொண்டு முன்னால் வரப் பிரயத்தனம் செய்தார்கள். யௌவன புருஷர்களோ, அத்தகைய இளம் பெண்களைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல், அவர்களின் மீது கடைக்கண் பார்வையைக் கூடச் செலுத்தாமல், இளவரசரை நன்றாகப் பார்க்கக் கூடிய இடங்களைப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். அவர்களில் பலர் கடம்பூர் மாளிகைக்கு எதிரிலும் பக்கங்களிலும் உள்ள மரங்களின் மீதெல்லாம் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னும் அநேகர் அந்த மாளிகையில் வெளி மதிள் சுவரின் பேரிலும் ஏற முயன்று, அரண்மனைக் காவலர்களால் கீழே இழுத்துத் தள்ளப்பட்டார்கள். அந்த விதமாக ஆதித்த கரிகாலரின் வீரப் புகழ் நாடெங்கும் அக்காலத்தில் பரவியிருந்தது. பன்னிரண்டாவது பிராயத்தில் போர்க்களம் புகுந்து கையில் கத்தி எடுத்துப் பகைவர் பலரை வெட்டி வீழ்த்தியவரும், சேவூர்ப் போர்க்களத்தில் பாண்டிய சைன்யத்தை முறியடித்து, வீரபாண்டியன் பாலைவனத்துக்கு ஓடிப் பாறைக் குகையில் ஒளிந்துகொள்ளும்படி செய்தவரும், பத்தொன்பதாவது பிராயத்தில் வீரபாண்டியனுடைய ஆபத்துதவிப் படையைச் சின்னாபின்னம் செய்து அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்தவருமான இளவரசரைப் பார்ப்பதற்கு யார்தான் ஆர்வம் கொள்ளாமலிருக்க முடியும்?
இத்தகைய வீர புருஷரைப் பற்றிச் சென்ற
மூன்று நாலு வருஷ காலமாகப் பற்பல வதந்திகள் உலாவி வந்தன. ஆதித்த கரிகாலருக்கு
யுவராஜ பட்டாபிஷேகம் ஆன பிறகு சுந்தர சோழ சக்கரவர்த்திக்கும் அவருக்கும்
மனத்தாங்கல் வந்துவிட்டது என்றும், ஆதித்த கரிகாலர் தமக்குப் பின் பட்டத்துக்கு
வருவதைச் சக்கரவர்த்தி விரும்பவில்லையென்றும் சிலர் சொன்னார்கள். முன்னொரு
காலத்தில் காஞ்சியில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துப் பல்லவர் பெருங்குலத்தைத்
தொடங்கி வைத்தது போல் ஆதித்த கரிகாலரும் காஞ்சியில் தனி அரசை ஏற்படுத்த
விரும்புகிறார் என்றார்கள் சிலர். அவருடைய தம்பியாகிய அருள்மொழிவர்மனிடம்
சக்கரவர்த்தி அதிக அன்பு காட்டிப் பட்சபாதமாக நடந்து கொள்வதால் ஆதித்த
கரிகாலருக்குக் கோபம் என்றார்கள், வேறு சிலர். இன்னும் சிலர் இதை அடியோடு
மறுத்து கரிகாலனையும், அருள்மொழியையும் போல் நேய பாவமுள்ள சகோதரர்கள்
இருக்க முடியாது என்று சாதித்தார்கள். இளவரசருக்கு இன்னும் திருமணம்
ஆகாமலிருந்தது பற்றியும் பலர் பலவாறு பேசினார்கள். அரசகுலத்து மங்கை
யாரையும் கரிகாலர் மணப்பதற்கு மறுதளித்து ஆலய பட்டர் மகளை மணந்து அரியாசனம்
ஏற்றுவிக்க எண்ணியது தான், தந்தைக்கும் மகனுக்கும் வேற்றுமை நேர்ந்த
காரணம் என்றும் சிலர் சொன்னார்கள். ஆதித்த கரிகாலருக்குச் சித்தப்பிரமை
என்றும், பாண்டிய நாட்டு மந்திரவாதிகள் சூனிய வித்தையினால் அவரைப் பைத்தியமாக்கி
விட்டார்கள் என்றும் அதனாலேயே சக்கரவர்த்திக்குப் பிறகு அவர் சோழ சிங்காதனம்
ஏறுவதைச் சிற்றரசர்கள் விரும்பவில்லையென்றும் சிலர் பேசிக் கொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தை ஜன சமுத்திரம் என்று சொல்வது மிகப் பொருத்தமாயிருந்தது. ஆயிரமாயிரம் ஜனங்களின் கண்டங்களிலிருந்து எழுந்த பேச்சுக் குரல்கள் உருத்தெரியாத ஒரே இரைச்சலாகி சமுத்திர கோஷத்தைப் போலவே கேட்டுக் கொண்டிருந்தது. மாளிகையின் முன் வாசலுக்கு எதிரே இளவரசரும் அவருடைய பரிவாரங்களும் வருவதற்கு அரண்மனைக் காவலர்கள் வழி வகுத்து நின்றார்கள். பின்னாலிருந்த ஜனங்கள் வந்து மோதியபடியால் முன்னாலிருந்தவர்கள் தள்ளப்பட்டு அவ்வழியை அடைக்கப் பார்த்ததும், காவலர்களால் தள்ளப்பட்டு அவர்கள் மீண்டும் பின்னால் சென்றதுமான காட்சி, சமுத்திரக் கரையில் அலைகள் வந்து மோதிவிட்டுப் பின்வாங்குவதை ஒத்திருந்தது. மரத்தின் மேல் இருந்த ஒருவன் திடீரென்று, "அதோ வருகிறார்கள்!" என்று கூவினான். "எங்கே? எங்கே?" என்று ஆயிரம் குரல்கள் எழுந்தன. ஒரு குதிரை அதிவேகமாக வந்தது. கூட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் புகுந்து பாய்ந்து வந்தது. குதிரையின் காலடியில் சிக்கிக் கொள்ளாமலிருக்கும்படி ஜனங்கள் இருபுறமும் நெருக்கியடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டு வழிவிட்டார்கள். "இளஞ் சம்புவரையன்!" என்று கத்தினார்கள். ஆம், வந்தவன் கந்தமாறன் தான்! கூட்டத்திலிருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கந்தமாறன் வேகமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய்க் கோட்டை வாசல் அருகில் நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான். அங்கே நின்று கொண்டிருந்த சம்புவரையரையும் பழுவேட்டரையரையும் பார்த்து வணங்கிவிட்டு, "இளவரசர் வருகிறார்; ஆனால் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லை. திடீர் திடீர் என்று கோபம் வருகிறது. முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே வந்தேன். நல்லபடியாக இராஜோபசாரம் செய்து வரவேற்க வேண்டும். அவர் ஏதாவது தாறுமாறாகப் பேசினாலும் பதில் சொல்லாமலிருப்பது நல்லது!" என்றான். இவ்விதம் கூறிவிட்டு அங்கே நிற்காமல் மேலே அண்ணாந்து பார்த்தான். முன் வாசல் கோபுரத்தின் மேல் மாடியில் அரண்மனைப் பெண்கள் காத்திருப்பது தெரிந்தது. உடனே கோட்டை வாசலில் புகுந்து உள்ளே சென்று, அங்கே ஒரு பக்கம் இருந்த மச்சுப் படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றான். பெண்கள் இருக்குமிடத்தை அடைந்ததும் கந்தமாறனுடைய கண்கள் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் நந்தினி தேவி இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்தன. அவள் அருகில் சென்று, "தேவி! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினேன். இளவரசரை அழைத்து வந்தேன், அதோ வந்து கொண்டிருக்கிறார். ஆனால் மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறார். அவரை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ, தெரியவில்லை!" என்றான். "ஐயா! அதைப்பற்றி என்ன கவலை? மதம் பிடித்த யானையை அடக்கி ஆள்வதற்குத் தங்கள் சகோதரியின் இரு கண்களாகிய அங்குசங்கள் இருக்கின்றன!" என்றாள் நந்தினி. மணிமேகலை, "அக்கா! இது என்ன பேச்சு!" என்றாள். கந்தமாறன், "மணிமேகலை! பழுவூர் ராணி கூறுவதில் தவறு ஒன்றுமில்லையே! ஆதித்த கரிகாலரைப் போன்ற வீராதி வீரரைப் பதியாகப் பெறத் தவம் செய்ய வேண்டாமா?" என்றான். மணிமேகலை பதில் சொல்வதற்குள் நந்தினி குறுகிட்டு, "ஐயா! இளவரசருடன் இன்னும் யாரேனும் வருகிறார்களா?" என்று கேட்டாள். "ஆம், ஆம்! பார்த்திபேந்திர பல்லவனும், வந்தியத்தேவனும் வருகிறார்கள்.." நந்தினி மணிமேகலையைக் குறிப்பாகப் பார்த்துவிட்டு "எந்த வந்தியத்தேவன்? தங்களுடைய சிநேகிதன் என்று சொன்னீர்கள், அவனா?" என்றாள். "ஆம், என்னைப் பின்னாலிருந்து குத்திக் கொல்லப் பார்த்த அந்தப் பரம சிநேகிதன்தான். அவன் எங்கிருந்தோ, எப்படியோ வந்து குதித்து வெள்ளாற்றங்கரையில் எங்களோடு சேர்ந்து கொண்டான். இளவரசருடைய தாட்சண்யத்துக்காகப் பார்த்தேன்; இல்லாவிடில் அங்கேயே அவனை என் கத்திக்கு இரையாக்கியிருப்பேன்!" என்றான். "கண்ணே! நீ பேசாமலிரு! அதெல்லாம் புருஷர்களின் விஷயம். நேற்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள்; இன்றைக்கு கட்டிப் புரளுவார்கள்!" என்றாள் நந்தினி. கந்தமாறன் புன்னகை புரிந்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இளவரசரின் முகத்துக்காகப் பார்க்க வேண்டியதாயிற்று. ஓகோ! கூடை கூடையாகப் புஷ்பம் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே! நீங்கள் இங்கிருந்து பொழிகிற மலர் மழையினால் இளவரசரின் கோபம் தணிந்து அவர் சாந்தம் அடைந்து விடுவார்! அதோ வந்து விட்டார்கள்! நான் கீழே போகிறேன்!" என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று மச்சுப் படிகளில் இறங்கிப் போனான். அந்த முன் வாசலின் மேன்மாடத்திலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் பரந்திருந்த ஜன சமுத்திரத்தின் நடுவே, சுழிக் காற்றினால் ஏற்படும் நீர்ச் சுழலைப் போல ஓரிடத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. அந்தச் சுழலின் மத்தியில் அகப்பட்டுக் கொண்ட நாவாயைப் போல் மூன்று குதிரைகளும் அவற்றின் மேல் வந்த வீரர்களும் சில சமயம் தோன்றினார்கள். மறு கணம் ஜன சமுத்திரத்தின் பேரலைகளினால் அவர்கள் மறைக்கப்பட்டார்கள். அவ்விதம் ஏற்பட்ட சுழல் மேலும் மேலும் பிரயாணம் செய்து கோட்டையின் முன் வாசலை நெருங்கிக் கொண்டிருந்தது. கடைசியில், கோட்டை வாசலுக்கே வந்து விட்டது. கோட்டை வாசலை அடைந்த மூன்று குதிரைகள் மீதும் வீற்றிருந்தவர்கள் ஆதித்த கரிகாலரும், பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனுந்தான். அவர்களைத் தொடர்ந்து வந்த யானை குதிரை பரிவாரங்கள் எல்லாம் வெகு தூரம் பின்னாலேயே அந்தப் பெரிய ஜன சமுத்திரதினால் தடை செய்யப்பட்டு நின்றுவிட்டன. குதிரைகள் வந்து மாளிகை வாசலில் நின்றது, ஒரு பெரிய முழக்கம் எழுந்தது. இருபது பேரிகைகள், இருநூறு கொம்புகள், முந்நூறு தாரைகள், ஐந்நூறு தம்பட்டங்களிலிருந்து எழுந்த அந்தப் பெருமுழக்கத்தைக் கேட்டு அந்த மாபெரும் ஜன சமுத்திரத்தின் பேரிரைச்சலும் ஒருவாறு அடங்கியது. வாத்தியங்களின் பெருமுழக்கம் சிறிது நேரம் ஒலித்துவிட்டுச் சட்டென்று அடங்கி நின்றது. அப்போது ஏற்பட்ட நிசப்தத்தில் கட்டியங் கூறுவோன் மேன்மாடத்தை அடுத்திருந்த ஒரு மேடை மீது நின்று இடி முழக்கக் குரலில் கூவினான்: "சூரிய வம்சத்திலே பிறந்த மனுமாந்தாதா. அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர் ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில் எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர் மதுரையும் ஈழமும் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவருடைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதல் சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில் ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் - கோப்பெரு மகனார் - வடதிசை மாதண்ட நாயகர் - யுவராஜ சக்கரவர்த்தி - வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார்! பராக்! பராக்!" என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. அவன் அவ்விதம் பேரிடி போன்ற குரலில் கூறி முடித்ததும் மேல் மாடியிலிருந்து மலர் மாரி பொழிந்தது. ஆதித்த கரிகாலனும், வந்தியத்தேவனும் அண்ணாந்து பார்த்தார்கள். அங்கே இருந்த பல பெண்களின் சுந்தர முகங்களுக்கு நடுவில் வந்தியத்தேவனுக்கு மணிமேகலையின் மலர்ந்த புன்னகையுடன் கூடிய முகம் மட்டும் தெரிந்தது. வந்தியத்தேவனும் ஒரு கணம் புன்முறுவல் செய்தான். உடனே தன் காரியம் எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தவன் போல் வேறு திசையை நோக்கினான். அதே சமயத்தில் மேலே நோக்கிய ஆதித்த கரிகாலனின் முகத்தில் முன்னை விடக் கடுகடுப்பு அதிகமாயிற்று; அவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான். மற்ற இருவரும் குதிரை மீதிருந்து இறங்கினார்கள். இதற்குள் மறுபடியும் வாத்தியங்களின் கோஷம் முழங்கத் தொடங்கி விட்டது. சற்று அடங்கியிருந்த ஜன சமுத்திரத்தின் ஆரவாரப் பேரொலியும் மீண்டும் பொங்கி எழுந்து விட்டது. விருந்தாளிகளும், அவர்களை வரவேற்பதற்கு வாசலில் நின்றவர்களும் கோட்டை வாசலுக்குள் புகுந்தார்கள். உடனே கோட்டை வாசலின் கதவுகள் படார், படார் என்று சாத்தப்பட்டன. ஆதித்த கரிகாலன் திரும்பிப் பார்த்துவிட்டு, "ஏன் இவ்வளவு அவசரமாகக் கதவைச் சாத்துகிறார்கள்? தஞ்சைக் கோட்டையில் என் தந்தையைச் சிறை வைத்திருப்பது போல் என்னையும் இங்கே சிறை வைக்கப் போகிறார்களா, என்ன? என்னுடன் வந்த பரிவாரங்கள் என்ன ஆவது?" என்று கேட்டான். இரு கிழவர்களும் சில கணநேரம் திகைத்துப் போய் நின்றார்கள். பழுவேட்டரையர் முதலில் சமாளித்துக் கொண்டு, "கோமகனே! இந்த சோழ சாம்ராஜ்யத்திலுள்ள லட்சோப லட்சம் ஜனங்களின் அன்பு நிறைந்த உள்ளங்களே தங்களையும், தங்கள் தந்தையையும் சிறைப்படுத்தியிருக்கின்றன; தனியாகச் சிறை வைப்பது எதற்கு?" என்றார். "இளவரசே! தங்களுடைய தரிசனத்துக்காக வந்திருக்கும் பெருந்திரளான மக்கள் இந்தச் சிறிய குடிசைக்குள் புகுந்தால் என்ன ஆவது? அவர்கள் வெளியில் நிற்கும்போது அக்கம் பக்கமுள்ள தோப்புகள் எல்லாம் குரங்குகள் அழித்த மதுவனம் போல் ஆகிவிட்டன. ஜனக் கூட்டம் கலைந்ததும் தங்களுடன் வந்த பரிவாரங்களை உள்ளே அழைத்து வருகிறோம். அது வரையில் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய இங்கே பணியாளர் பலர் இருக்கிறார்கள்..." என்றார் சம்புவரையர். இச்சமயம் கோட்டை வெளி வாசலில் ஜனங்களின் ஆரவாரம் அதிகமானது போலக் கேட்டது. கரிகாலன் கந்தமாறனிடம், "முன் வாசல் மேன்மாடிக்குப் போக வழி எங்கே?" என்று கேட்டான். கந்தமாறன் மாடிப்படிகள் இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டியதும் கரிகாலன் அந்தப் பக்கம் நோக்கி விடுவிடுவென்று நடந்து சென்றான், கந்தமாறனும், வந்தியத்தேவனும், பார்த்திபேந்திரனும் உடன் சென்றார்கள். சம்புவரையர், பழுவேட்டரையரைப் பார்த்து, "இது என்ன? வழியோடுபோகிற சனியனை விலைக்கு வாங்கியது போல் வாங்கிக் கொண்டோ மே? இவனுடைய மூளை சரியாயிருப்பதாகவே தோன்றவில்லையே? சின்னப்பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு இந்தக் காரியத்தில் தலையிட்டோம்!" என்றார். "அப்படி என்ன மோசம் வந்துவிட போகிறது? காரியம் நடந்தால் நடக்கட்டும்; நடக்காவிட்டால் போகட்டும்" என்றார் பழுவேட்டரையர். "காரியத்தைப் பற்றி நான் சொல்லவில்லை. நம் வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஏடாகூடமாக நடக்கக் கூடாது அல்லவா? நிமித்தம் ஒன்றும் சரியாக இல்லை. அவனோ மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறான். முகத்தின் கடுகடுப்பையும், நாக்கில் விஷத்தையும் பார்த்தீர்கள் அல்லவா?" "அவன் என் மகனுடைய சிநேகிதன் அல்லவா? ஆகையால் அவனைப் பற்றிப் பயமில்லை. இப்போது எதற்காகப் பெண்கள் இருக்கும் இடத்துக்கு அவசரமாக போகிறார்கள்? நாமும் போவோமா?" இச்சமயம், மச்சுப்படி வரையில் போன பார்த்திபேந்திரன் திரும்பி வந்து, இரு பெரும் குறுநில மன்னர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை அணுகினான். சம்புவரையர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. "ஐயா! இளவரசர் விஷயத்தில் உங்களுக்கு வேறு என்ன சந்தேகம் இருந்தாலும், பெண்கள் சம்பந்தமான சந்தேகம் மட்டும் வேண்டியதில்லை. பெண்களை அவர் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.." என்று சொன்னான். பழுவேட்டரையர் புன்னகையுடன், "அப்படியானால் அவரை நாம் இங்கே அழைத்ததின் நோக்கம் எப்படி நிறைவேறும்?" என்று கேட்டார். "அது சம்புவரையர் திருமகளின் அதிர்ஷ்டத்தையும் சோழ சாம்ராஜ்யத்தின் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது." "பார்த்திபேந்திரா! மணிமேகலையின் அதிர்ஷ்டம் ஒருபுறம் இருக்கட்டும்! வரும்போதே எதற்காக இளவரசர் இவ்வளவு கடுகடுத்த முகத்துடன் வருகிறார்? எதற்காக இப்படி விஷமமாகப் பேசுகிறார்? அவரை நீ எப்படியாவது இங்கிருந்து சமாதானமாக அழைத்துப் போனால் போதும் என்று தோன்றுகிறது!" என்றார் சம்புவரையர். "வெள்ளாற்றங்கரை வரையில் இளவரசர் சுமுகமாகவும் குதூகலமாகவும் வந்தார். பின்னர் இந்த வந்தியத்தேவனும் வைஷ்ணவன் ஒருவனும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அது முதல் இளவரசரின் குணம் மாறியிருக்கிறது..." "நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் இப்போது என்ன செய்யலாம்? அந்தத் துஷ்டப் பையனும் உங்களோடு வந்திருக்கிறானே?" "நீங்கள் கொஞ்சம் பொறுமையாயிருங்கள்; நான் எல்லாம் சரிப்படுத்தியிருக்கிறேன். அந்தப் பையனுடன் எனக்கும் ஒரு சண்டை இருக்கிறது. அதை நான் சமயம் பார்த்துத் தீர்த்துக் கொள்கிறேன்" என்றான் பார்த்திபேந்திரன். கரிகாலனும் மற்ற இருவரும் முன் வாசல் மேன்மாடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பெண்கள் திரும்பிப் படியில் இறங்கி வரும் சமயமாயிருந்தது. கரிகாலன் கந்தமாறனைப் பார்த்து, "நண்பனே! தாய்மார்களையெல்லாம் நமக்காக இங்கு வந்து காத்திருக்கும்படி செய்யலாமா? அது பெருந்தவறு. நாம் அல்லவா இவர்கள் இருக்குமிடம் சென்று நமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும்?" என்று கூறிவிட்டுப் பெண்மணிகளுக்கு வணங்கி வழி விட்டு நின்றான். ஒவ்வொருவராக இறங்கிய போது கந்தமாறனிடம் யார் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். நந்தினியைப் பார்த்ததும், "ஓ! பழுவூர் இளைய பாட்டி அல்லவா? உண்மையாகவே வந்திருக்கிறார்களா? மிகவும் சந்தோஷம்!" என்றான். நந்தினி ஒன்றும் சொல்லாமல் அவனைத் தன் கூரிய கண்களால் பார்த்துவிட்டுச் சென்றாள். அப்பார்வையின் தீட்சண்யத்தினால் கரிகாலனுடைய உடம்பு சிறிது நடுங்கிற்று. மறுகணமே அவன் சமாளித்துக் கொண்டு, பின்னால் வந்த மணிமேகலையைப் பார்த்து, "ஓகோ! இவள் உன் தங்கை மணிமேகலையாக இருக்க வேண்டும். சித்திரத்தில் எழுதிய கந்தர்வ கன்னிகையைப் போல் இருக்கிறாள். இவளுக்கு விரைவில் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டும்!" என்றான். மணிமேகலை வெட்கத்தினால் குழிந்த கன்னங்களுடன் வந்தியத்தேவனைக் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு மடமடவென்று கீழே இறங்கினாள். பெண்கள் எல்லாருமே சென்ற பிறகு, கரிகாலன் அந்த மேல் மாடத்தின் முகப்புக்குச் சென்று நின்றான். வாசலில் அப்போது தான் கலையத் தொடங்கியிருந்த ஜனக் கூட்டதினிடையே மறுபடியும் பேராரவாரம் எழுந்தது. ஜனங்கள் திரும்பிக் கோட்டை வாசலண்டை வரத் தொடங்கினார்கள். அவ்வளவுதான்! இதுவரையில் அந்த ஜனக் கூட்டத்தில் எழுந்த ஆரவாரமெல்லாம் நிசப்தம் என்று சொல்லும்படியாக அவ்வளவு பெரிய பேரிரைச்சல் கிளம்பியது. குதூகலக் குரல்களும் வாழ்த்தொலிகளும் கரகோஷ ஓசையும் சேர்ந்து கலந்து எழுந்து சுற்றுப் பக்கம் வெகு தூரம் சென்று வீர நாராயண ஏரியிலிருந்து எழுபத்து நாலு கண்மாய்களின் வழியாகப் பாய்ந்த தண்ணீர் வெள்ளத்தின் ஓசையையும் அமுங்கி விடும்படி செய்தன. சம்புவரையரும் பழுவேட்டரையரும் பார்த்திபேந்திரனும் அவர்கள் முன்னால் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆதித்த கரிகாலன் அவர்கள் நின்ற இடத்தை நெருங்கியதும், "பார்த்திபேந்திரா! ஏது நீ இங்கேயே நின்றுவிட்டாய்? இந்தக் கிழவர்களுடன் சேர்ந்து நீயும் சதியாலோசனை செய்யத் தொடங்கி விட்டாயா?" என்று கேட்டான். கிழவர்கள் இருவரும் திடுக்கிட்டுக் கரிகாலனுடைய முகத்தைப் பார்த்தார்கள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சம்புவரையர் சிறிது சமாளித்துக் கொண்டு, "கோமகனே! சற்று முன் சிறை என்கிறீர்கள்; இப்போது சதி என்கிறீர்கள். இந்தக் குடிசையில் தாங்கள் விருந்தாளியாகத் தங்கியிருக்கும் போது தங்களுக்கு அணுவளவேனும் தீங்கு நேராது என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். அவ்விதம் நேர்வதற்கு முன்னால் என் உடலிலிருந்து உயிர் பிரிந்து போயிருக்கும்!" என்றார். "ஐயா! எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சுவதாக எண்ணினீர்களா? ஒரு லட்சம் பாண்டிய நாட்டுப் பகைவர்களின் மத்தியில் இருக்கும்போதே எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சியதில்லை. என் அருமைச் சிநேகிதர்களின் மத்தியில் இருக்கும்போது அஞ்சுவானேன்? ஆனால் தங்களுடைய இந்த மாளிகையைக் குடிசை என்று மட்டும் கூற வேண்டாம்; ஆகா! இதைச் சுற்றியுள்ள மதிள் சுவர்கள் எவ்வளவு உயரம்? எவ்வளவு கனம்? தஞ்சாவூர்க் கோட்டை மதிளை விடப் பெரியதாக அல்லவா இருக்கிறது? எந்தப் பகைவர்களை முன்னிட்டு இவ்வளவு பந்தோபஸ்தாகக் கோட்டை கட்டியிருக்கிறீர்கள்?" என்றான் கரிகாலன். "தங்கள் வாக்குறுதி எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத் தங்கள் குமாரன் கந்தமாறனிடம் சொல்லி வையுங்கள். என்னுடைய நண்பனாகிய வாணர் குலத்து இளவரசனைக் கந்தமாறன் தன்னுடைய பகைவன் என்று கருதி வருகிறான். இது பெரும் பிழையல்லவா?" என்று ஆதித்த கரிகாலன் கூறிய போது கந்தமாறன் தலையைக் குனிந்து கொண்டான். கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்
|