உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் : மணிமகுடம் 2. பாட்டனும், பேரனும் பின்னால் ரதத்தில் வந்த கிழவர் சமிக்ஞை செய்யவே, ஆதித்த கரிகாலன் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவர் வீற்றிருந்த ரதத்தின் அருகில் சென்றான். "குழந்தாய்! கரிகாலா! நான் இவ்விடத்தில் உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கோவலூர் போக எண்ணுகிறேன். போவதற்கு முன்னால் உன்னிடம் சில முக்கிய விஷயங்கள் சொல்ல வேண்டும். சற்றுக் குதிரையிலிருந்து இறங்கி அந்த அரச மரத்தடியிலுள்ள மேடைக்கு வா!" என்றார். "அப்படியே ஆகட்டும், தாத்தா!" என்று ஆதித்த கரிகாலன் குதிரையிலிருந்து கீழே குதித்தான். கிழவரும் ரதத்திலிருந்து இறங்கினார். இருவரும் அரசமரத்தடி மேடைக்குச் சென்றார்கள். அப்போது பார்த்திபேந்திரன், கந்தமாறனைப் பார்த்து, "நல்ல வேளையாய்ப் போயிற்று. இந்தக் கிழவர் 'விடேன் தொடேன்' என்று நம்முடன் நெடுகிலும் வந்து விடுவாரோ எனப் பயந்து கொண்டிருந்தேன்" என்றான். "அப்படித் தொடர்ந்து வந்தால் இவரை வெள்ளாற்றின் பிரவாகத்தில் தள்ளி முழுக அடித்து விடுவது என்று நான் எண்ணியிருந்தேன்!" என்றான் கந்தமாறன். இருவரும் தங்கள் பேச்சில் தாங்களே சிரித்து மகிழ்ந்தார்கள். ஆதித்த கரிகாலனைப் பார்த்து மலைநாடு உடையாராகிய திருக்கோவலூர் மலையமான் சொல்லலுற்றார்:- "ஆதித்தா! இன்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நீ பிறந்தாய்! திருக்கோவலூரில் என்னுடைய அரண்மனையிலேதான் பிறந்தாய்! அச்சமயம் நடந்த கொண்டாட்டங்கள் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகமிருக்கின்றன. உன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களும், என்னுடைய குடியைச் சேர்ந்தவர்களும், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்ந்த சிற்றரசர்கள் பலரும் வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் சேர்ந்த வீரர்கள் முப்பதினாயிரம் பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நடந்த விருந்தின் விமரிசையைச் சொல்லி முடியாது. உன் தந்தையின் பட்டாபிஷேக வைபவத்தின்போது கூட அத்தகைய விருந்துகளும் கோலாகலங்களும் நடைபெறவில்லை. என் பொக்கிஷத்தில் என் முன்னோர்கள் காலத்திலிருந்து நூறு வருஷங்களாகச் சேர்த்து வைத்திருந்த பொருள் அவ்வளவும் அந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் தீர்ந்து போய் விட்டது!" "அச்சமயம் உன்னுடைய கொள்ளுப் பாட்டனாராகிய பராந்தக சக்கரவர்த்தியே திருக்கோவலூருக்கு வந்திருந்தார். உன் பெரிய பாட்டனார் கண்டராதித்தரும், உன் தந்தை சுந்தர சோழரும் வந்திருந்தார்கள். ஆண் குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் அவர்கள் அனைவரும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. சோழ குலத்தை விளங்க வைப்பதற்கு நீ பிறந்து விட்டாய் என்று குதூகலம் அடைந்தார்கள். உன் பாட்டனின் மூத்த தமையன்மார்களுக்கு அதுவரையில் சந்ததியில்லை. அரிஞ்சயனுக்கும் உன் தகப்பன் ஒரே மகனாக விளங்கினான். அவன் உன் பிராயத்தில் மன்மதனையொத்த அழகுடன் விளங்கினான், சோழ குலத்திலோ அல்லது தமிழகத்துச் சிற்றரசர் வம்சத்திலோ அவ்வளவு அழகுடைய பிள்ளையை யாரும் அதற்கு முன் கண்டதில்லை. இதனால் உன் தந்தைக்குச் சில சங்கடங்களும் நேர்ந்தன. குடும்பத்தார் அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளையாக இருந்தான். அரண்மனைப் பெண்டிர்கள் அவனுக்குப் பெண் வேடம் போட்டுப் பார்த்து மகிழ்ந்தார்கள். 'இவன் மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால்?' என்று பேசிப்பேசிப் பூரித்தார்கள். உன் தந்தைக்குத் தங்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் உள்ள மன்னாதி மன்னர்களும், சிற்றரசர்களும் தவம் கிடந்தார்கள். அர்ச்சுனனையும் மன்மதனையும் நிகர்த்த அழகன் அவன் என்பதுடன் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்ற எண்ணத்தினாலும் அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள். உன் தந்தையை மருமகனாகப் பெறும்பேறு கடைசியில் எனக்குக் கிடைத்தது." "எங்கள் வம்சத்தில் நாங்கள் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் மேனி அழகுக்குப் பெயர் போனவர்கள் அல்ல. ஆண் பிள்ளைகள் உடம்பில் எத்தனைகெத்தனை போர்க் காயங்களைப் பெறுகிறோமோ அவ்வளவுக்கு அழகுடையவர்களாக எண்ணிக் கொள்வோம். எங்கள் குலத்துப் பெண்களுக்குக் கற்பும், குணமும் தான் அழகும், ஆபரணமும். உன் தந்தைக்கு என் மகளைக் கலியாணம் செய்வதென்று தீர்மானித்தபோது, மலையமானாடு முழுதும் அல்லோல கல்லோலப்பட்டது. அவ்வளவுக்குத் தமிழகத்துச் சிற்றரசர்கள் எல்லாரும் அசூயை கொண்டார்கள்; அதை நான் பொருட்படுத்தவில்லை. மூன்று உலகம் பிரமிக்கும்படியாக உன் பெற்றோர்களின் திருமணம் தஞ்சையில் நடந்தது. என்றாலும் அப்போது நடந்த கொண்டாட்டத்தைக் காட்டிலும் நீ பிறந்த போது திருக்கோவலூரில் நடந்த கொண்டாட்டந்தான் அதிகக் குதூகலமாயிருந்தது. உனக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றிக் குதூகலமான சர்ச்சை நடந்தது. சிலர் உன் குலத்து முன்னோரில் மிகப் புகழ் பெற்ற கரிகால் வளவன் பெயரை இடவேண்டும் என்றார்கள். நானும் இன்னும் சிலரும் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்தியர் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். கடைசியில் இரண்டையும் சேர்த்து 'ஆதித்த கரிகாலன்' என்று உனக்கு நாமகரணம் செய்தார்கள்." "அதோ பார்! ஆதித்தா! திருநாவலூரின் கோவில் சிகரம் தெரிகிறது. நம்பி ஆரூரர் சுந்தரமூர்த்தி அடிகள் பிறந்த ஸ்தலம் அது. அங்கே, இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்ய சோழர் முகாம் செய்திருந்தார். கதைகளிலும், காவியங்களிலும் வரும் எத்தனையோ வீரர்களைப் பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன். இந்த வீரத் தமிழகத்தில் எவ்வளவோ வீரர்களைப் பார்த்துமிருக்கிறேன். ஆனால் இராஜாதித்யரைப் போன்ற இன்னொரு வீரரைப் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. போர்க்களத்தில் அவர் போர் செய்வதைப் பார்த்தவர்கள் யாராயிருந்தாலும், அப்படித்தான் சொல்லுவார்கள்." "ஒரு மாபெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடநாட்டின் மீது படையெடுத்துச் செல்ல அவர் இங்கே ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இரட்டை மண்டலத்து அரசனாகிய கன்னரதேவனை முறியடித்து, மானியகேடம் என்னும் அவனுடைய தலைநகரைத் தரைமட்டமாக்க வேண்டும் என்று அவர் உறுதி கொண்டிருந்தார். முன்னொரு காலத்தில் பல்லவ குலத்து மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி நகரை அழித்தது போல், மானியகேட நகரை அடியோடு அழித்தால்தான் இரட்டை மண்டலத்தாரின் கொட்டம் அடங்கும், என்றும், தானும் மாமல்லரைப்போல் புகழ் பெறலாம் என்றும் இராஜாதித்யர் எண்ணினார். அதற்கு வேண்டிய மாபெரும் சைன்யத்தைத் திரட்டுவதென்றால் இலேசான காரியமா? மாமல்லர் ஏழு வருஷ காலம் படை திரட்டியதாகச் சொல்லுவார்கள். அவ்வளவு காலம் தனக்கு வேண்டியதில்லையென்றும் மூன்று அல்லது நாலு ஆண்டுகள் போதும் என்றும் இராஜாதித்யர் கூறினார். படை திரட்டிச் சேர்ப்பதற்கும், திரட்டிய படைகளுக்குப் போர்ப் பயிற்சி தருவதற்கும், தகுந்த பிரதேசம் இந்தக் கெடிலம் ஆற்றுக்கும் தென்பெண்ணை நதிக்கும் இடைப்பட்ட நாடுதான் என்று தேர்ந்தெடுத்தார்." "ஆதித்தா! அந்த நாளில் இந்த இரு நதிகளுக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை நீ பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அந்தக் காட்சிகளைப் பார்த்தவர்களோ, உயிர் உள்ள வரையில் அதை மறக்க மாட்டார்கள். திருநாவலூரில் இராஜாதித்யர் முப்பதினாயிரம் வீரர்களுடன் தங்கியிருந்தார். பெண்ணை ஆற்றங்கரையில் முடியூரில் சேர நாட்டுச் சிற்றரசன் வெள்ளன் குமரன் இருபதினாயிரம் வீரர்களுடன் முகாம் செய்திருந்தான். உன் பாட்டன் அரிஞ்சயன் என்னுடன் திருக்கோவலூரில் இருந்தான். நானும், அரிஞ்சயனும் ஐம்பதினாயிரம் வீரர்களை ஆயத்தம் செய்தோம். இன்னும் கொடும்பாளூர்ப் பெரிய வேளான், இன்று சோழ நாட்டுக்குச் சனியனாக முளைத்திருக்கும் பழுவேட்டரையன், கடம்பூர் சம்புவரையன், இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசனாக முனையதரையன், மழநாட்டு மழவரையன், குன்றத்தூர்க் கிழான், வைதும்பராயன் முதலியவர்கள் தத்தம் படைகளுடன் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் தங்கியிருந்தார்கள். யானைப் படைகளும், குதிரைப் படைகளும் தெரிந்த கைக்கோளரின் மூன்று கைப் படைகளும் இங்கே முகாம் போட்டிருந்தன. இப்படித் தங்கியிருந்த படைகளுக்குள்ளே அடிக்கடி பயிற்சிப் போர்கள் நடக்கும். யானைகளோடு யானைகள் மோதும்போது பூகம்பம் வந்து விட்டதாகத் தோன்றும். குதிரைப் படைகளின் அணிவகுப்புகள் வேல் பிடித்த வீரர்களுடன் பாய்ந்து செல்லுங்கால் எழும் சத்தம் பிரளய கால சமுத்திரம் பொங்கிவருவது போலிருக்கும். வீரர்கள் வில்லுகளிலிருந்து அம்புகள் விட்டுப் பழகிக் கொள்ளும்போது அந்தச் சரமாரியினால் வானமே மறைந்துவிடும். எதிரிப் படைகளைத் தாக்குவதற்காக ஆயிரமாயிரம் வீரர்கள் 'நாவலோ நாவல்' என்று ஏககாலத்தில் கர்ஜித்துக் கொண்டு கிளம்பிப் பாயும் போது உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதாகவே தோன்றும். இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்குத் திரள் திரளாக ஜனங்கள் வருவார்கள்." இந்தத் திருமுனைப்பாடி நாட்டிலும் நடு நாட்டிலும் உள்ள ஜனங்கள் மிக நல்லவர்கள் அதோடு வீரம் மிகுந்தவர்கள். இங்கே படை திரண்டிருந்தபோது அவர்களுடைய விவசாயத்துக்குப் பெரும் குந்தகங்கள் நேர்ந்தன. அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இத்தகைய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே இராஜாதித்யர் இந்த இரண்டு நாட்டிலும் பல ஏரிகள் தோண்டுவித்தார். கொள்ளிடத்திலிருந்து புதிய ஆறு வெட்டிக் கொண்டு வந்து வீர நாராயணபுரத்து ஏரியில் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்தார். ஆதித்தா! அந்த ஏரியின் வளத்தினால் பெருநன்மை அடைந்தவன் கடம்பூர் சம்புவரையன். அவன் அன்றைக்கு இராஜாதித்யரின் அடிபணிந்து நின்ற நிலையையும் இன்று அடைந்திருக்கும் செல்வச் செருக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்குப் பெரு வியப்பு உண்டாகிறது!.." ஆதித்த கரிகாலன் குறுக்கிட்டு, "தாத்தா! சம்புவரையர் செருக்கைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை? தக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தக் கெடிலக் கரையில் திரட்டிய மாபெரும் சைனியம் எப்போது இங்கிருந்து புறப்பட்டது? அவ்வளவு முன்னேற்பாடுகள் செய்திருந்தும், என் பெரிய பாட்டனார் அவ்வளவு பெரிய மகா வீரராயிருந்தும், ஏன் நம் படைகள் தக்கோலத்தில் தோல்வியுற்றன? தாங்களும் அந்தப் போரில் கலந்து போரிட்டவர் அல்லவா? ஆகையால் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டிருப்பீர்களே?" என்றான். "ஆம், நானும் அந்தப் போர்க்களத்தில் இருந்தேன். அதைப் பற்றித்தான் உனக்குச் சொல்லப் போகிறேன்." "இராஜாதித்யர் இங்கே பல வகைப் படைகள் திரட்டித் தூர தேசங்களுக்குச் சென்று போர் செய்வதற்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அல்லவா? சில காரணங்களினால் உத்தேசித்திருந்த காலத்துக்குள் அவர் புறப்பட முடியவில்லை. இலங்கையில் மறுபடியும் போர் மூண்டதாகச் செய்தி வந்தது. அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு மேலும் படைகள் அனுப்ப வேண்டியிருந்தது. தெற்கே ஒரு பகைவனை வைத்துக் கொண்டு வடக்கே நெடுந்தூரம் சோழ நாட்டின் முக்கிய சேனா வீரர்களும், தளபதிகளும் போவதைச் சக்கரவர்த்தி விரும்பவில்லை. 'இலங்கைப் போர் முடிந்ததாகச் செய்தி வந்த பிறகு புறப்படலாம்' என்று கூறி வந்தார். இராஜாதித்யரும் தந்தையின் வார்த்தையைத் தட்ட முடியாமல் பொறுமையுடன் காத்திருந்தார். ஆனால் பகைவர்கள் அவ்விதம் காத்திருக்க இணங்கவில்லை. இரட்டை மண்டலச் சக்கரவர்த்தி கன்னரதேவனும் அதே சமயத்தில் சோழ நாட்டின் மீது படை எடுப்பதற்காகப் பெரிய சைன்யம் சேர்த்துக் கொண்டு வந்தான். அந்த மாபெரும் சைன்யத்துடன் அவன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான். கங்க நாட்டு மன்னன் பூதுகனும், தன் பெரும் படையுடன் கன்னரதேவனோடு சேர்ந்து கொண்டான். வட கடலும் தென் கடலும் ஒன்று சேர்ந்தாற்போல் இரட்டை மண்டல சைன்யமும், கங்க நாட்டுப் பூதுகன் சைன்யமும் சேர்ந்து ஒரு மகா சமுத்திரமாகி முன்னேறி வந்தது. அந்தச் சமுத்திரத்தில் யானைகளாகிய திமிங்கிலங்கள் ஆயிரக்கணக்கிலும் குதிரைகளாகிய மகர மீன்கள் பதினாயிரக்கணக்கிலும் இருந்தன. பிரளய காலத்தில் ஏழு கடலும் சேர்ந்து பொங்குவது போல் பொங்கி முன்னேறி வந்த அந்தச் சேனா சமுத்திரம் தென்னாட்டை அடியோடு மூழ்க அடித்துவிடும் என்று தோன்றியது. அந்தச் சைன்யத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு முன்னால் வாயுவேக மனோவேகமாக ஓடிவந்து அறிவித்த நம் ஒற்றர்கள் அவ்வாறு சொன்னார்கள்." "ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லதே என்று பராந்தக சக்கரவர்த்தி கூறினார். நம்முடைய சைன்யங்களைத் தொலைதூரம் பிரயாணம் செய்யப் பண்ணி, பிரயாணக் களைப்புடன் பகைவர்களின் நாட்டில் எதிரி சைன்யத்துடன் போர் புரியச் செய்வதைக் காட்டிலும் எதிரி சைன்யங்களை நமது நாட்டுக்குச் சமீபமாக இழுத்து அவர்களை நாலாபுறமும் மடக்கி, அதம் செய்வதுதான் நல்ல போர் முறை என்று சக்கரவர்த்தி கூறினார். எதிரி சைன்யம் வடவேங்கடம் வரை நெருங்கி விட்டதென்று தெரிந்த பிறகுதான் பிரயாணப்படுவதற்கு அனுமதி கொடுத்தார்." "அனுமதி கிடைத்ததோ, இல்லையோ, இராஜாதித்யர் புறப்பட்டு விட்டார். மூன்று லட்சம் காலாள் வீரர்களும், ஐம்பதினாயிரம் குதிரை வீரர்களும், பதினாயிரம் போர் யானைகளும், இரண்டாயிரம் ரதங்களும், முந்நூற்றிருபது தளபதிகளும், முப்பத்திரண்டு சிற்றரசர்களும் அப்பெரும் சைன்யத்தில் சேர்ந்து சென்றார்கள். அவர்களில் ஒருவனாகச் செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. ஆனால் உயிர் பிழைத்துத் திரும்பி வந்த துர்பாக்கியசாலியும் ஆனேன்." "மூன்று நாள் பிரயாணத்துக்குப் பிறகு காஞ்சிக்கு வடக்கே இரண்டு காத தூரத்தில் தக்கோலம் என்னும் இடத்தில் நம் படைகளும் எதிரி படைகளும் போர்க்களத்தில் சந்தித்தன!" "ஆதித்தா! புராணங்களில் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த யுத்தம் பற்றிக் கேட்டிருக்கிறோம். இராமராவண யுத்தம், பாண்டவர் - கௌரவர் யுத்தம் பற்றியும் அறிந்திருக்கிறோம். தக்கோலத்தில் நடந்த கோரயுத்தத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த யுத்தங்கள் எல்லாம் அற்பமானவை என்றே சொல்லுவார்கள். நம்முடைய படைகளைக் காட்டிலும் எதிரிகளின் படைகள் சுமார் இரண்டு மடங்கு அதிகமாயிருந்தன. ஐந்து லட்சம் வீரர்களும் முப்பதினாயிரம் போர் யானைகளும் அச்சைன்யத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இருந்தால் என்ன? உன்னுடைய பெரிய பாட்டனார் இராஜாதித்யரைப் போன்ற சேனாதிபதி அந்தச் சைன்யத்தில் இல்லை. ஆகையால் வீர லக்ஷ்மியும் ஜயலக்ஷ்மியும் நம்முடைய பக்கத்திலேயே இருந்து வருவதாகத் தோன்றியது." "பத்து நாள் வரையில் யுத்தம் நடந்தது. இரு பக்கத்திலும் இறந்து போன வீரர்களைக் கணக்கு எடுப்பது அசாத்தியமாயிற்று. போர்க்களங்களில் கரிய குன்றுகளைப் போல் யானைகள் இறந்து விழுந்து கிடந்தன. இரு பக்கத்திலும் சேதம் அதிகமாயிருந்தாலும், எதிரிகளின் கட்சியே விரைவில் பலவீனமடைந்தது. இதற்குக் காரணம் என்னவென்பதை எதிரிகள் கண்டு கொண்டார்கள். புலிக் கொடியைக் கம்பீரமாகப் பறக்க விட்டுக் கொண்டு இராஜாதித்யரின் யானை போகுமிடமெல்லாம் ஜயலக்ஷ்மியும் தொடர்ந்து போகிறாள் என்பதை அறிந்து கொண்டார்கள். எங்கெங்கே நமது படையில் சோர்வு ஏற்படுகிறதாகத் தென்பட்டதோ, அங்கங்கே இராஜாதித்யரின் யானை போய்ச் சேர்ந்தது. அந்த யானையையும் அதன் மீது வீற்றிருந்த வீர புருஷரையும் பார்த்ததும் நம் வீரர்கள் சோர்வு நீங்கி மும்மடங்கு பலம் பெற்று எதிரிகளைத் தாக்கினார்கள். இதையெல்லாம் பத்து நாளும் கவனித்து வந்த பகைவர்கள் ஒரு படுபாதகமான சூழ்ச்சி செய்தார்கள். அது சூழ்ச்சி என்று பின்னால்தான் தெரியவந்தது. சூழ்ச்சி செய்தவனும் அதை நிறைவேற்றி வைத்தவனும் கங்க மன்னன் பூதுகன் தான். திடீரென்று அந்தப் பாதகன் தன் யானையின் மீது சமாதானக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு `சரணம் சரணம்!' என்று கூறிக் கொண்டு வந்தான். அச்சமயம் இராஜாதித்யரே சமீபத்தில் இருந்தார். புலிக் கொடி பறந்த அவருடைய யானையின் அம்பாரியைப் பார்த்த பின்னரே பூதுகன் அவ்வாறு செய்திருக்க வேண்டும். மகாவீரராகிய இராஜாதித்யர் இவ்வாறு ஒரு பகை மன்னன் 'சரணாகதி' என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் மனம் இளகி விட்டார். இரட்டை மண்டலச் சக்கரவர்த்தியே போரை நிறுத்த, சமாதானம் கோருகிறாரா அல்லது அவரைப் பிரிந்து பூதுகன் மட்டும் நம்முடன் சேர வருகிறானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். ஆகையால் சங்கநாதம் செய்து தன்னைச் சுற்றி நின்ற மெய்க்காப்பாளரை விலகச் செய்தார். பூதுகன் ஏறியிருந்த யானையைத் தாம் ஏறியிருந்த யானைக்கு அருகில் வரும்படி சமிக்ஞை செய்தார். பூதுகன் இராஜாதித்யரின் அருகில் வரும் வரையில் கைகூப்பிய வண்ணம் வந்தான். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதையும் இராஜாதித்யர் பார்த்தார். இதனால் அவருடைய மனம் இன்னும் இளகிவிட்டது. "தொழுகை யுள்ளும் படையொடுங்கும்
ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து" என்னும் தமிழ்நாட்டுப் பெரும் புலவரின் வாக்கு அச்சமயம் இராஜாதித்யரின் ஞாபகத்தில் இருக்கவில்லை. கண்ணீரைக் கண்டு கரைந்து விட்டார். இன்னும் சமீபமாகப் பூதுகனை வரவிட்டு, 'என்ன சேதி?' என்று கேட்டார். அதற்கு அவன் கூறிய மறுமொழி இராஜாதித்யரை அருவருப்புக் கொள்ளும்படி செய்தது. இரட்டை மண்டலப் படைகளுக்குத் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து விட்டால் சரணாகதி அடைந்துவிடும்படி கன்னர தேவனிடம் தான் கூறியதாயும், அவன் அதை மறுத்து விட்டபடியால் தான் மட்டும் தனியே பிரிந்து வந்து சரணாகதி அடையத் தீர்மானித்ததாகவும் பூதுகன் கூறினான். இதைக் கேட்டதும் இராஜாதித்யர் அவனைக் கடுமையாக நிந்தித்தார்." அத்தகைய நீசனைத் தாம் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றும், திரும்பிப் போகும்படியும் கூறிக் கொண்டிருக்கும்போதே, பூதுகன் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் அந்தப் பயங்கரமான வஞ்சகச் செயலைப் புரிந்து விட்டான். மறைவாய் வைத்திருந்த வில்லையும், அம்பையும் எடுத்து வில்லில் நாணேற்றி அம்பைப் பூட்டி எய்து விட்டான். அந்தக் கொடிய விஷம் தோய்ந்த அம்பு எதிர்பாராத சமயத்தில் இராஜாதித்யரின் மார்பில் பாய்ந்ததும் அவர் சாய்ந்தார். இப்படிப்பட்ட வஞ்சனையை யாரும் எதிர்பார்க்கவில்லையாதலால் சுற்றிலும் நின்ற வீரர்கள் என்ன நேர்ந்தது என்பதையே சிறிது நேரம் தெரிந்து கொள்ளவில்லை. இராஜாதித்யர் பூதுகனைத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டது மட்டும் அவர்கள் காதில் விழுந்தது. உடனே பூதுகன் தன் யானையை விரட்டி அடித்துக் கொண்டு ஓடிப் போனான்!" "இராஜாதித்யர் யானை மேலிருந்தபடியே மரணமடைந்தார் என்ற செய்தி பரவியதும் நமது படையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தனித்தனியே தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. அந்த மாபெரும் துயரத்தினால் யுத்தத்தையே மறந்து விட்டார்கள். சிற்றரசர்கள், தளபதிகள், படை வீரர்கள் எல்லாருமே செயல் இழந்து புலம்பத் தொடங்கி விட்டார்கள். அந்த நிலைமையில் பகைவர்களின் கை ஓங்கி விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சிறிது நேரத்துக்கெல்லாம் நமது சைனியம் பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. ஓடுகிறவர்களைத் துரத்துவது எல்லாருக்குமே எளிதுதானே? அப்படி ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்தான்! இந்தக் கொடில நதிக்கரை வரையிலே கூடப் பகைவர்களின் சைனியம் வந்து விட்டது. இங்கே வந்த பிறகுதான் நாங்கள் சுய உணர்வு பெற்றுத் திரும்பி நின்றோம். பகைவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நான் திருக்கோவலூரிலிருந்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு போய் மேற்கே மலை நாட்டில் இருக்கும் என்னுடைய கோட்டையில் விட்டேன். அந்த மலைச்சாரலிலேயே படைகளைத் திரட்டினேன். இந்தக் கெடில நதி வரையில் வந்து விட்ட பகைவர்களை அவ்வப்போது தாக்கிக் கொண்டு வந்தேன். ஆயினும் அப்போது வந்த பகைவர்கள் பல வருஷ காலம் இந்தப் பகுதியை விட்டுப் போகவில்லை. அங்குமிங்கும் தங்கித் தொல்லை கொடுத்துக் கொண்டுதானிருந்தார்கள். காஞ்சி நகர் அவர்கள் வசத்திலே தான் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ வீரபாண்டியனை முறியடித்த பிறகு இந்தப் பக்கம் வந்துதான் காஞ்சி நகரை மீட்டாய்..." ஆதித்த கரிகாலன் மீண்டும் குறுக்கிட்டு, "தாத்தா! இதெல்லாம் எனக்கு முன்னமே தெரிந்ததுதான்! ஆனால் தக்கோலப் போரைப் பற்றியும் இராஜாதித்யர் வரலாற்றையும் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு அலுப்பதில்லை. இப்போது இராஜாதித்யரைப் பற்றி எனக்கு எதற்காக நினைப்பூட்டினீர்கள்? அதைச் சொல்லுங்கள்!" என்றான். "குழந்தாய்! உன் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் சோழ சாம்ராஜ்யத்தை இலங்கை முதல் கங்கை நதி வரையில் விஸ்தரிக்க ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை நிறைவேறாமலே உயிர் நீத்தார். அவரைப் போன்ற மகாவீரன் என் பேரன் ஆதித்த கரிகாலன் என்று நாடு நகரமெல்லாம் பேச்சாயிருக்கிறது. அவர் சாதிக்க நினைத்த காரியத்தை நீ சாதிக்கப் போகிறாய் என்று இத்தமிழகமெங்கும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இராஜாதித்யரைப் போல் நீயும் வஞ்சத்திற்கு ஏமாந்து போகக்கூடாது என்பதற்காகவே அவருடைய வரலாற்றை உனக்கு நினைவூட்டினேன்..." "தாத்தா! என் பெரிய பாட்டனார் போர்க்களத்தில் பகைவர்களின் வஞ்சனையினால் உயிரை இழந்தார். அதை இப்போது எனக்கு எதற்காக நினைவூட்டுகிறீர்கள்? நான் போர்க்களத்துக்குப் போகவில்லையே? என்னை வஞ்சிக்கக் கூடிய பகைவர்களின் மத்தியிலும் போகவில்லையே? என் தந்தையின் அத்யந்த நண்பர்களையல்லவா பார்க்கப் போகிறேன்? அவர்கள் என்னை எந்த விதத்தில், எதற்காக வஞ்சிக்கப் போகிறார்கள்?" என்றான் ஆதித்த கரிகாலன். "கேள், கரிகாலா! எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கொடிய ஆயுதம் இருக்கக்கூடும் என்று கூறிய திருவள்ளுவர் பெருமான், வெளிப்பகையைக் காட்டிலும் உட்பகை கொடியது என்றும் கூறியிருக்கிறார். 'வாள்போல் பகைவரை அஞ்சற்க
அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு' வாளைப் போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயம் வேண்டியதில்லை. சிநேகிதர்களைப் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குழந்தாய்! கேளிரைப் போல் நடிக்கும் பகைவர்களின் மத்தியில் இப்போது போகிறாய். நான் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் நீ போகிறாய். ஏதோ ராஜ்யம் சம்பந்தமாகத் தகராறு நேர்ந்து விட்டதாகவும் அதைத் தீர்த்து வைக்கப் போவதாகவும் உன்னை அழைத்திருக்கிறார்கள். சம்புவரையன் மகள் ஒருத்தியை உன் கழுத்தில் கட்டிவிட உத்தேசித்து உன்னை அழைத்திருப்பதாகவும் அறிகிறேன். ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் இன்னதென்பது எனக்கும் தெரியாது; நீயும் அறிந்திருக்க முடியாது. உனக்குப் பெண் கொடுப்பதற்கு இந்தப் பாரத தேசத்தில் மன்னர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்தச் சம்புவரையன் மகள் தான் வேண்டுமென்பதில்லை. இராஜ்யத்தை உனக்குப் பாதி என்றும் மதுராந்தகனுக்குப் பாதி என்றும் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்விக்கப் போகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதில் என்ன சூது இருக்குமோ, சூழ்ச்சி இருக்குமோ, எனக்குத் தெரியாது. எது எப்படியானாலும், நான் உடனே திருக்கோவலூருக்குச் சென்று என்னுடைய பாதுகாப்புப் படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து வெள்ளாற்றங்கரையில் தங்கியிருப்பேன். சம்புவரையர் அரண்மனையில் இருக்கும்போது உனக்கு ஏதேனும் சந்தேகம் தோன்றினால் எனக்கு உடனே சொல்லி அனுப்பு!..." இச்சமயம் ஆதித்த கரிகாலனுடைய கவனம் தன் பக்கம் இல்லை என்பதையும் வேறு பக்கம் திரும்பியிருக்கிறதென்பதையும் மலையமான் கண்டார். "தாத்தா! அதோ பாருங்கள்!" என்று ஆதித்த கரிகாலன் கலக்கத்துடன் கூறிய வார்த்தைகளை அந்த வீரக் கிழவர் கேட்டு, அந்தத் திசையை உற்று நோக்கினார். |