முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை பதின்மூன்றாம் அத்தியாயம் - அமர சிருஷ்டி புத்த பிக்ஷுவின் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த ஆயனர், விரைந்தெழுந்து, "வாருங்கள்! அடிகளே வாருங்கள்!" என்று கூறிக்கொண்டே வாசற்படியண்டை சென்றார். சிவகாமி அவசரமாக எழுந்து அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள். உள்ளே பிரவேசித்த பிக்ஷு நாலாபுறமும் சுற்றிப் பார்த்து விட்டு "ஆயனரே! நான் சென்ற தடவை வந்துபோன பின்னர், புதிய சிலைகள் செய்திருக்கிறீர்களோ?" என்றார். பிக்ஷு ஆயனர் காட்டிய சிலைகளைக் கண்ணோட்டமாய்ப் பார்த்துவிட்டு, தூணைப் பிடித்துக் கொண்டு நின்ற சிவகாமியை நோக்கியபடி, "அதோ அந்தத் தூணின் அருகில் நிற்பதும், சிலைதானோ?" என்று வினவினார். அப்போது புத்த பிக்ஷுவின் கடூர முகத்தில் தோன்றிய புன்னகை அந்த முகத்தின் விகாரத்தை அதிகமாக்கிற்று. ஆயனர் சிரித்துக்கொண்டே, "இல்லை சுவாமி! அவள் என் பெண் சிவகாமி!... குழந்தாய்! இதோ, நாகநந்தி அடிகள் வந்திருக்கிறார், பார்! பிக்ஷுவுக்கு வந்தனம் செய்!" என்றார். சிவகாமி அச்சமயம், நாகநந்திக்குப் பின்னால் வந்த இளைஞனைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயனர் கூறியதைக் கேட்டதும் பிக்ஷுவின் பக்கம் திரும்பி நமஸ்கரித்தாள். பிக்ஷுவுடன் உள்ளே பிரவேசித்த பரஞ்சோதி அந்தச் சிற்ப மண்டபத்தில் நாலாபுறமும் காணப்பட்ட அதிசயங்களைப் பார்த்த வண்ணம் வாசற்படிக்கு அருகிலேயே பிரமித்துப்போய் நின்றான். அம்மாதிரியான அபூர்வ வேலைப்பாடமைந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் அவன் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. இடையிடையே அவன் ஆயனர், சிவகாமி இவர்களையும் கவனித்தான். அன்று பல்லக்கில் அமர்ந்திருந்தவர்கள் - மதயானையின் கோபத்திலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டான். புத்த பிக்ஷுவை ஆர்வத்துடன் வரவேற்று அவருடன் பேசிக் கொண்டே சென்ற ஆயனர் பரஞ்சோதியைக் கவனிக்கவே இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை.
ஆனால், தூணருகில் நின்ற அவருடைய மகள்
அவ்வப்போது தன்னைக் கடைக் கண்ணால் கவனிப்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான்.
நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து நின்ற சிவகாமியின் நவ யௌவன சௌந்தர்யத்தின்
ஒளி பரஞ்சோதியின் கண்களைக் கூசச் செய்தது.
கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும், தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால் சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அதிலும், சிவகாமி தன்னைக் கவனிக்கிறாள் என்பதை அவன் அறிந்த பின்னர். அவர்கள் இருந்த பக்கமே திரும்பாமல் எதிர்ப்புறக் கூடத்தில் காணப்பட்ட சிலைகளைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். அந்தச் சிலைகளின் தோற்றத்திலும், முக பாவத்திலும் ஏதோ ஓர் அதிசயம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த அதிசயம் இன்னதென்பது மின்வெட்டைப் போல் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆ! இந்தச் சிலைகள் எல்லாம் தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் பல்வேறு தோற்றங்கள் தாம்! இந்த உண்மையை அவன் உள்ளம் கண்டதும், சிவகாமியினிடம் அவனுக்குத் தெய்வங்களிடம் உண்டாவது போன்ற பயபக்தி உண்டாயிற்று. இந்த ஆசி மொழியானது சிவகாமிக்கு அருவருப்பை உண்டாக்கியது என்று அவள் முகபாவத்தில் தெரிந்தது. ஆயனருக்கும் அது பிடிக்கவில்லையென்பது அவருடைய வார்த்தைகளில் வெளியாயிற்று. "அடிகளே! குழந்தை ஏதோ வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாலு நாளைக்கு முன்னால் காஞ்சியில், சிவகாமியின் அரங்கேற்றம் நடந்தது. ஆகா! தாங்கள் அதற்கு இல்லாமல் போய்விட்டீர்களே!" என்றார் ஆயனர். "எல்லாம் கேள்விப்பட்டேன் அரங்கேற்றம், அதற்குப் பின்னால் நடந்தவை எல்லாம் அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரிய ஆபத்து வந்ததாமே? மதயானையின் கோபத்துக்குத் தப்பினீர்களாமே!" என்றார் பிக்ஷு. "ஆம், சுவாமி! ஏதோ தெய்வத்தின் அருள் இருந்தபடியால் தப்பிப் பிழைத்தோம்... தங்களுக்குச் சாவகாசம் தானே? இன்று பிக்ஷை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறி, ஆயனர், பிக்ஷுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். "ஆகா! எனக்குச் சாவகாசந்தான். இன்றைக்குத் தங்கள் கிருஹத்திலே பிக்ஷை என்று எண்ணிக் கொண்டுதான் வந்தேன். தங்களுக்கு அதிகச் சிரமம் இல்லாவிட்டால்...?" என்று பிக்ஷு கூறுவதற்குள் "சிரமமா? என்னுடைய பாக்கியம்!" என்றார் ஆயனர். முற்றத்தில் கிடந்த இரண்டு பெரிய கற்களில் இருவரும் எதிர் எதிராக அமர்ந்தார்கள். "அம்மா, சிவகாமி! நீயும் உட்காரலாமே? அடிகளுக்குக் கலைகளில் அபார பிரேமை, தெரியுமோ, இல்லையோ?" என்று ஆயனர் கூறிவிட்டு, பிக்ஷுவைப் பார்த்துச் சற்று மெதுவான குரலில், "அடிகளே! அஜந்தா சித்திரங்களைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா?" என்று கேட்டார். அப்போது அவருடைய முகத்தில் அளவிடக்கூடாத ஆர்வம் தோன்றியது. ஆயனர் உட்காரச் சொல்லியும் சிவகாமி உட்காரவில்லை. தூணைப் பிடித்துக்கொண்டே நின்றாள். அவளுடைய கவனம் இவர்களுடைய பேச்சில் இருந்தபோதிலும், இடையிடையே கண்கள் பரஞ்சோதியையும் கவனித்தன. புத்த பிக்ஷு ஆயனரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல், "ஆயனரே! தெய்வத்தின் சிருஷ்டியைக் காட்டிலும் தங்களுடைய சிருஷ்டியே மேல் என்று எனக்குத் தோன்றுகிறது!" என்றார். "சுவாமி.." என்று ஆயனர் மறுமொழி சொல்ல ஆரம்பித்தபோது, பிக்ஷு அதற்கு இடங்கொடாமல் தொடர்ந்து சொன்னார்: "நான் முகஸ்துதி செய்யவில்லை, ஆயனரே! உண்மையைச் சொல்லுகிறேன். தெய்வத்தின் சிருஷ்டி அழிந்து போகக் கூடியது. இந்த மனித உடம்புக்கு நூறு வயதுக்கு மேல் கிடையாது. நரை, திரை, மூப்புத் துன்பங்கள் மனித தேகத்துக்கு உண்டு. ஆனால், நீர் அமைத்திருக்கிறீரே, இந்த அற்புதச் சிலைகள், இவற்றுக்கு அழிவே இல்லையல்லவா? நரை, திரை, மூப்புத் துன்பம் இந்தச் சிலைகளை அணுகாவல்லவா? கல்லால் அமைந்த இந்தச் சிலைகளில் விளங்கும் ஜீவகளை ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் ஆனபோதிலும் மங்காமல் பிரகாசிக்குமல்லவா? உம்முடைய சிருஷ்டி தெய்வ சிருஷ்டியைக் காட்டிலும் மேல் என்பதில் சந்தேகம் என்ன?" இதையெல்லாம் கேட்ட ஆயன சிற்பியின் முகத்தில் கலை ஞானத்தின் கர்வம் தாண்டவமாடியது. "அடிகளே! தாங்கள் சொல்லும் பெருமை எல்லாம் சிவகாமிக்கே சேரும். நடனக் கலையில் அவள் இவ்வளவு அற்புதத் தேர்ச்சி அடைந்திராவிட்டால், இந்தச் சிலை வடிவங்களை நான் எப்படி அமைத்திருக்க முடியும்?.. ஆஹா! குழந்தையின் அரங்கேற்றத்துக்கு நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்களே! ருத்ராச்சாரியார் பிரமித்து ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அன்றைக்கு இரண்டுபேர் இல்லாமல் போனதாலே தான் எனக்கு வருத்தம். தாங்களும் இல்லை; நாவுக்கரசர் பெருமானும் இல்லை..." "ஆமாம், ஆமாம்! ஆயனரே! நாவுக்கரசர் சிவகாமியின் அரங்கேற்றத்தின்போது இருந்திருந்தால் ரொம்பவும் குதூகலமடைந்திருப்பார். முக்கியமாக, சக்கரவர்த்தியின் 'மத்தவிலாச'த்திலிருந்து எடுத்து அபிநயம் செய்த கட்டத்தை ரொம்பவும் ரசித்திருப்பார் நாவுக்கரசர். மதுபானம் செய்த புத்த பிக்ஷுவும் காபாலிகனும் சண்டையிட்ட இடம் வெகு ரசமாக இருந்திருக்குமே?" மகா ரசிகரும் சகல கலைகளிலும் வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி ஜைனராயிருந்தபோது, 'மத்த விலாஸம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை இயற்றியிருந்தார். அதில் காபாலிகர்களும் புத்த பிக்ஷுக்களும் பெருங்கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அந்த நாடகத்தில் ஒரு பகுதியைச் சிவகாமி அபிநயத்துக்கு விஷயமாக எடுத்துக் கொண்டிருந்தாள். அதைக் குறித்துத்தான் மேற்கண்ட பேச்சு நடந்தது. பின்னர் பிக்ஷு சொன்னார்: "வாஸ்தவந்தான்; ஹாஸ்ய ரசத்தை அபிநயித்துக் காட்ட மிகவும் பொருத்தமான சம்பவம். காபாலிகன் புத்த பிக்ஷுவின் தலைக் குடுமியைப் பிடிக்கப் பார்த்து, மொட்டைத் தலையைத் தடவி விட்டுக் கீழே விழும் கட்டத்தில் ஹாஸ்ய ரசம் ததும்பியிருக்கும்! ஆனால், சபையோர் சிரித்து முடிவதற்குள்ளே ஏதோ யுத்தத்தைப் பற்றிய செய்தி வந்து, சக்கரவர்த்தி எழுந்து போய் விட்டாராமே? சபையும் கலைந்துவிட்டதாமே?.." "ஆமாம், ஆமாம்! அதுதான் சற்று மனக் கிலேசத்தை அளித்தது. அதனாலேயே சிவகாமிகூட நாலு நாளாக உற்சாகமில்லாமல் இருந்தாள். அரங்கேற்றத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் மறுபடியும் காலில் சதங்கை கட்டிக் கொண்டாள். அடிகளே, யுத்தம் எதற்காக வருகிறது? எதற்காக ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகவேண்டும்?" என்றார் ஆயனர். "ஆயனரே! அந்தக் கேள்வியை ஏழை பிக்ஷுவாகிய என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம்? உலகத்திலுள்ள திரிபுவன சக்கரவர்த்திகளையும், குமார சக்கரவர்த்திகளையும், மகாராஜாக்களையும் யுவ ராஜாக்களையும், சிற்றரசர்களையும் படைத் தலைவர்களையும் கேட்கவேண்டும். கொலையும் கொடூரமும் நிறைந்த இந்த உலகத்தில் புத்த பகவான் அவதரித்து அன்பு மதத்தைப் பரப்பினார். அதற்காகப் பிக்ஷுக்களின் சங்கத்தையும் ஸ்தாபித்தார். அந்தப் புத்த பிக்ஷுக்களை ராஜ சபைகளில் பரிகசித்துச் சிரிக்கும் காலம் இது! யுத்தம் ஏன் வருகிறது என்று என்னைக் கேட்டு என்ன பயன்?" அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவிடம், பேச்சு யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டு தன் தந்தை திணறுவதைச் சிவகாமி அறிந்தாள். அவளுடைய கண்களில் கோபக் கனல் வீசிற்று. அவள், "அப்பா! புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் அந்தப் புத்த பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு போலி பிக்ஷுக்கள் தோன்றி, மக்களை வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் யுத்தம் முதலிய விபரீதங்கள் வருகின்றன!" என்றாள். ஆயனருக்கு, 'இதேதடா வம்பு?' என்று தோன்றியது. அங்கிருந்து சிவகாமியை எப்படியாவது அனுப்பிவிட எண்ணி அவளை இரக்கம் தோன்றப் பார்த்து, "குழந்தாய், சிவகாமி! நீ வேணுமானால் உள்ளே அத்தையிடம் போய்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். பேச்சை வேறு வழியில் திருப்பியாக வேண்டுமென்று ஆயனர் கருதிச் சுற்று முற்றும் பார்த்தார். அப்போது அவருடைய பார்வை அம்மண்டபத்தின் இன்னொரு பக்கத்தில் சிலைகளையும் சித்திரங்களையும் பார்த்துக் கொண்டு நின்ற பரஞ்சோதியின் மேல் விழுந்தது. "சுவாமி! அந்தப் பிள்ளை யார்? உங்களுடைய சீடனா?" என்று கேட்டார் ஆயனர். |