![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை பதினாலாம் அத்தியாயம் - தாமரைக் குளம் தன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது காதில் விழுந்ததும் பரஞ்சோதி அவர்கள் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் புத்த பிக்ஷு, "என்னுடைய சீடன் இல்லை, ஆயனரே! தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி! இங்கே வா!" என்றார். பரஞ்சோதி அவர்களருகில் நெருங்கி வந்தான். அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்த ஆயனர் வியப்புடன், "யார் இந்தப் பிள்ளை? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது?" என்றார். "அப்பா! உங்களுக்குத் தெரியவில்லையா? அன்றைய தினம் மத யானையின்மேல் வேலை எறிந்தாரே, அவர்தான்!" என்று உற்சாகத்துடன் கூறினாள் சிவகாமி. பரஞ்சோதி நன்றியறிதலுடன் சிவகாமியை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தான். ஆயனரின் முகத்தில் ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கின. "என்ன? என்ன? அந்த வீர வாலிபனா இவன்? என்ன லாகவமாய் வேலை எறிந்தான். மாமல்லர்கூட அதிசயிக்கும்படி! இவனுக்கு எந்த ஊர்? இத்தனை நாளும் எங்கே இருந்தான்? தங்களை எப்போது சந்தித்தான்...?" என்று சரமாரியாக ஆயனர் கேள்விகளை அடுக்கினார். சாதாரணமாக, ஆயனர் தாம் ஈடுபட்டுள்ள கலைகளின் விஷயத்திலே தவிர, வேறெதிலும் இவ்வளவு ஆர்வம் காட்டிப் பேசுவதில்லை. "சித்தர்வாச மலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்தப் பிள்ளையை வழியில் பார்த்தேன்.." என்று பிக்ஷு ஆரம்பிப்பதற்குள்ளே ஆயனர் பரஞ்சோதியை மறந்து விட்டார். "ஆஹா, அடிகள் சித்தர் மலைக்கா போயிருந்தீர்கள்? அங்கேயுள்ள சித்திர அதிசயங்களைப் பார்த்தீர்களா?" என்றார். "பார்த்தேன், ஆயனரே! அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன். நான் வரும் வழியில் சாலை ஓரத்தில் இந்தப் பிள்ளை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். இவனை ஒரு பெரிய நாக சர்ப்பம் கடிக்க இருந்தது. என்னுடைய கொல்லா விரதத்தைக் கூடக் கைவிட்டு அந்த நாகத்தைக் கொன்று இவனைக் காப்பாற்றினேன்..." "இது நல்ல வேடிக்கை! தங்கள் திருநாமம் நாகநந்தி! இவனை நாகம் தீண்டாமல் தாங்கள் காப்பாற்றினீர்கள்! இவன் எங்களை நாகம் கொல்லாமல் காப்பாற்றினான்! ஆஹா! ஹா!" என்று ஆயனர் சிரித்தார். நாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால் ஆயனருக்கு மேற்படி சிலேடைப் பொருத்தம் மிக்க விநோதத்தை அளித்தது. புத்த பிக்ஷு, "இவனை நான் காப்பாற்றியதனால் பல காரியங்களுக்குச் சாதகமாயிற்று. தங்களுக்கு இவன் ஓலை கொண்டு வந்திருக்கிறான்!" என்றார். "ஓலையா? யாரிடமிருந்து?" "திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து, அவருடைய மருமகன் இவன்!" ஆயனர் ஆர்வத்துடன் எழுந்து, "என் அருமைச் சிநேகிதரின் மருமகனா நீ? உன் பெயர் என்ன, தம்பி!" என்று கேட்டுக் கொண்டே பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார். பிறகு, "ஓலை எங்கே?" என்று கேட்டார். பரஞ்சோதி நாகநந்தியை நோக்கினான் அவர், "ஆயனரே ஓலை காணாமல் போய்விட்டபடியால் வாலிபன் இங்கு வருவதற்கே தயங்கினான். அதற்காகவே இவனை நான் அழைத்துக்கொண்டு வந்தேன். இவனுடைய மாமன் தங்களுக்கும் நாவுக்கரசருக்கும் ஓலைகள் கொடுத்திருந்தாராம். அந்த ஓலைகளை மூட்டைக்குள் கட்டி வைத்திருந்தான். அன்றிரவு யானைமேல் வேல் எறிந்த இடத்தில் மூட்டை காணாமல் போய் விட்டது..." என்று நிறுத்தினார். அப்போது ஆயனர், "ஆமாம், ஆமாம்! யானை நின்ற இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அதை நான் எடுத்து வந்தேன். ஆனால், மறுநாள் கோட்டைக் காவல் தலைவர் ஆள் அனுப்பி அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார். போனால் போகட்டும், என் அருமை நண்பரின் மருமகன் என்று சொன்னால் போதாதா! ஓலை வேறு வேணுமா?.. சிவகாமி, நம்மைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய வீரப்பிள்ளை இவன்தான் இவனுக்கு உன்னுடைய நன்றியைத் தெரியப்படுத்து!" என்றார். சிவகாமி பரஞ்சோதியைப் பார்த்தவண்ணம், "இவருக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை. இவரை யார் விதிக்குக் குறுக்கே வந்து வேலை எறியச் சொன்னது? இவர் பாட்டுக்கு இவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதானே?" என்றாள். சிவகாமியின் இந்தக் கடுஞ்சொல், கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரையும் சிறிது திடுக்கிடச் செய்தது. நாகநந்தி ஆயனரைப் பார்த்து, "உங்கள் குமாரிக்கு என்ன ஏதாவது உடம்பு குணமில்லையா?" என்று கேட்டார். "அதெல்லாம் ஒன்றுமில்லை, சுவாமி! அன்று அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்டதிலிருந்து அவளுக்கு உற்சாகக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அது ஏதோ அபசகுனம் என்று நினைக்கிறாள்... சிவகாமி! நீ உன் அத்தையிடம்போய், 'அதிதிகள் வந்திருக்கிறார்கள்' என்று சொல்லு, அம்மா!" என்றார். "ஆகட்டும், அப்பா!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமி அந்த வீட்டின் பின்கட்டை நோக்கிச் சென்றாள். மண்டபத்தின் பின்வாசற்படியை அவள் தாண்டிக் கொண்டிருந்த போது, புத்த பிக்ஷு பின்வருமாறு பரிகாசக் குரலில் சொன்னது அவள் காதில் இலேசாக விழுந்தது. "உம்முடைய குமாரியைத் தாங்கள் நன்றாகக் கவனிக்கவேண்டும், ஆயனரே! சாதாரணமாக, இளம் பெண்கள் உயிரின்மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா?" சிவகாமி தனக்குள், "இந்த புத்த பிக்ஷு பொல்லாதவர்; நெஞ்சிலும் நாவிலும் நஞ்சு உடையவர்; இவருடன் அப்பாவுக்கு என்ன சிநேகம் வேண்டிக் கிடக்கிறது?" என்று சொல்லிக் கொண்டாள். இரண்டாங் கட்டுக்குள் சிவகாமி நுழைந்ததும் அங்கே 'கலகல' என்றும் 'சடசட' என்றும், பலவிதமான சப்தங்கள் ஏக காலத்தில் உண்டாயின. பச்சைக் கிளிகளும் பஞ்சவர்ணக் கிளிகளும், 'அக்கா! அக்கா! என்று கூவின. நாகணவாய்ப் புட்கள் 'கிக்கி!' என்றன. புறாக்கள் 'சடசட' என்றும், சிறகுகளை அடித்துக் கொண்டன. முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் 'ஜிவ்'வென்று பறந்து தரைக்கு வந்தது. அங்கிருந்த மான்குட்டி மட்டும் சப்தம் ஒன்றும் செய்யாமல், சிவகாமியின் முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு அவள் அருகில் வந்து நின்றது. இந்தப் பட்சிகள், மிருகங்கள் எல்லாம் சிவகாமி விளையாடிப் பொழுதுபோக்குவதற்காகவும், ஆயனரின் சிற்ப சித்திரவேலைகளுக்காகவும் இரண்டாவது கட்டில் வளர்க்கப்பட்டு வந்தன. சிவகாமி பிரவேசித்ததும் அவை போட்ட சத்தத்தைக் கேட்டு, "சீ! பேசாமலிருங்கள்! தலைவேதனை!" என்று அதட்டினாள். உடனே அங்கு அதிசயமான நிசப்தம் உண்டாயிற்று. சிவகாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "இன்றைக்கு ரதியைத்தான் அழைத்துப் போக வேண்டும். ரதிதான் சத்தம் போடாமல் வருவாள்! ரதி வா!" என்று கூறிவிட்டு மேலே சென்றபோது, மான்குட்டி மட்டும் அவளைத் தொடர்ந்து சென்றது. மற்ற பட்சிகள் மௌனமாயிருந்த போதிலும், தலையைச் சாய்த்துக்கொண்டும் மற்றும் பலவிதக் கோணங்கள் செய்து கொண்டும் ரதியைப் பொறாமை ததும்பிய கண்களால் நோக்கின. இரண்டாவது கட்டைத் தாண்டியதும், மூன்றாவது கட்டு ஒன்று இருந்தது. அது சமையல் கட்டு என்பது, அங்கு வந்த புகையினாலும், அடுப்பிலிருந்து வந்த பலவகை உணவுப் பதார்த்தங்களின் நறுமணங்களினாலும் தெரியவந்தது. தாழ்வாரத்தில் நின்றபடி, "அத்தை!" என்று கூப்பிட்டாள் சிவகாமி. "ஏன், குழந்தாய்?" என்று கேட்டுக்கொண்டு ஒரு மூதாட்டி சமையல் அறை வாசலில் தோன்றினாள். "அதிதிகள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள். முன்னொரு தடவை வந்தாரே கடுவன் பூனை போன்ற முகத்துடனே ஒரு புத்த பிக்ஷு அவர் வந்திருக்கிறார்" என்றாள் சிவகாமி. "பெரியவர்களைப்பற்றி இப்படியெல்லாம் சொல்லாதே, கண்ணே நீ எங்கே கிளம்புகிறாய், ரதியையும் அழைத்துக் கொண்டு?" என்று மூதாட்டி கேட்டாள். "அப்பாவும் அந்தப் புத்த பிக்ஷுவும் ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப் போய்வருகிறேன்!" என்று சொல்லி விட்டுச் சிவகாமி சமையற்கட்டைத் தாண்டிச்சென்று வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள். கொல்லைப்புறத்தில் வீட்டைச் சேர்ந்தாற்போல் மல்லிகை, முல்லை, அலரி, பாரிஜாதம், சம்பங்கி முதலிய பூஞ்செடிகளும் கொடிகளும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டி மரங்களடர்ந்த வனப் பிரதேசத்துக்குள்ளே சிவகாமி பிரவேசித்தாள். அந்தக் காட்டில் நடக்கும் போது அவள் ரதியிடம் பின்வருமாறு சொல்லிக்கொண்டு போனாள். "என்ன ரதி! அப்பாவுக்கு என் அரங்கேற்றத்தின்போது இரண்டே இரண்டுபேர் வரவில்லை என்றுதான் வருத்தமாம்! இந்தப் புத்த பிக்ஷு வந்து என் அரங்கேற்றத்தைப் பார்க்கவில்லையென்று வருத்தம் என்ன வந்தது?.. யாருடைய பாராட்டுதலைப் பெறுவதற்காக நான் இரவு பகலாய்ப் படாதபாடுபட்டு இந்த நிருத்தியக் கலையைப் பயின்றேனோ, அவர் அன்றைக்கு வரவில்லை. இந்தப் பெரிய பல்லவ ராஜ்யத்துக்குள்ளே யார் மகா ரசிகரோ, அப்பேர்ப்பட்டவர் வரவில்லை. ஏழு வருடங்களுக்கு முந்தி, நான் உன்னைப் போல் சிறு குழந்தையாய் இருந்த காலத்தில், எவர் என்னுடன் கைகோத்து நின்று தாமும் நடனம் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடித்தாரோ - தமக்கும் நடனக் கலை சொல்லிக் கொடுக்கும்படி எவர் என் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாரோ - அவர் வரவில்லை, ரதி நீயே சொல்லு! ஆண் பிள்ளைகளைப்போல் பொல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா...?" ரதி பாவம், சிவகாமி தன்னிடம் சொல்லிக்கொண்டுவந்த விஷயங்களின் முக்கியத்துவத்தைக் கொஞ்சமும் அறிந்து கொள்ளாமல் ஆங்காங்குத் தரையில் காணப்பட்ட அறுகம்புல்லின் நுனியைக் கடித்து மென்றுகொண்டு வந்தது. அரை நாழிகை நேரம் அவர்கள் காட்டுக்குள் நடந்து வந்த பிறகு, கொஞ்சம் இடைவெளி காணப்பட்டது. அந்த இடைவெளியில், ஓர் அழகிய தடாகம் இருந்தது. அதில் தாமரை, செங்கழுநீர், நீலோத்பலம் முதலிய மலர்கள் செழித்து வளர்ந்திருந்தன. சிவகாமி அந்தக் குளத்தில் இறங்கி நீர்க்கரை ஓரமாய் நின்று தண்ணீரில் தன்னுடைய நிழலைப் பார்த்தவண்ணம் பேசினாள். "ரதி! இதைப் பார்! அவர்மட்டும் இனிமேல் எப்போதாவது வரட்டும், நான் முகங்கொடுத்துப் பேசப் போவதே இல்லை! 'போதும், உம்முடைய சிநேகிதம்! போய் விட்டு வாரும்!' என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேனா, இல்லையா, பார்!" என்று சொல்லிய வண்ணம், அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள். சிவகாமி குளக்கரையில் வந்து நின்ற சிறிது நேரத்துக்கெல்லாம் காட்டில் சற்றுத் தூரத்தில் ஓர் உயர்ந்த ஜாதிக் குதிரை வந்து நின்றது. அதன்மேல் வீற்றிருந்த வீரன் சத்தம் செய்யாமல் குதிரை மேலிருந்து இறங்கித் தடாகத்தை நோக்கி வந்தான். |