முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை பதினைந்தாம் அத்தியாயம் - ரதியின் தூது குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது. குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கித் தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள். வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும், திரும்பிப் பார்த்துச் சந்தேகம் தீரவேண்டுமென்ற ஆவல் அளவில்லாமல் எழுந்தது. அந்த ஆவலைப் பலவந்தமாக அடக்கிக்கொண்டு, சிவகாமி சிலையைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. அவரும் சிவகாமியை நேராகப் பார்க்காமல், தண்ணீரில் பிரதிபலித்த அவளுடைய முழுமதி முகத்தை உற்று நோக்கினார். சிவகாமி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னொரு பக்கத்தில் நின்ற மான்குட்டியைப் பார்த்து, "ரதி! இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்று கேள்?" என்றாள். இதைக் கேட்ட நரசிம்மரின் முகத்தில் புன்னகை மறைந்தது, புருவங்கள் நெறிந்தன. அவரும் ரதியைப் பார்த்து, "ரதி! உன் எஜமானி பரத கண்டத்திலேயே இணையற்ற பரத கலாராணியாகிவிட்டாள் அல்லவா? பழைய சிநேகத்தை நினைவு வைத்திருக்க முடியுமா? 'இவர் யார்?' என்று கேட்கத்தான் தோன்றும். இது ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை, ரதி!" என்றார். சிவகாமி ஆத்திரம் நிறைந்த குரலில் கூறினாள்: "ரதி! ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரருக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு. அவரோ பூமண்டலாதிபதியின் புதல்வர்! தேசதேசங்களின் ராஜராஜாக்கள் எல்லாம் தம் திருப்பாதங்களில் விழுந்து வணங்கப்பெற்ற பிரபு; அப்பேர்ப்பட்டவர்க்கும் இந்த ஏழைச் சிற்பியின் மகளுக்கும் சிநேகம் எப்படிச் சாத்தியம்? அந்த எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டது என்னுடைய அறிவீனந்தான் என்பதை உணர்ந்து கொண்டேன், ரதி!"
மாமல்லர் பரிகாசம் தொனித்த குரலில் சொன்னார்:
"ரதி! உன் எஜமானிக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்து. பரத சாஸ்திர பண்டிதையான
சிவகாமி தேவி இப்போது ஆடரங்கத்தில் நிற்கவில்லை; அபிநயம் பிடிக்கவில்லை.
நிருத்தம், நிருத்தியம், ஹஸ்தம் அபிநயம் ஆகியவைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து
விட்டு என்னுடன் சுபாவிகமாகப் பேசச் சொல்லு!"
இயற்கையில் செவ்வரியோடிய சிவகாமியின் கண்கள் இப்போது கோபத்தினால் கோவைப்பழம்போல் சிவந்தன. "ஆமாம் ரதி, ஆமாம்! நான் நடன அரங்கத்தில் நடிக்கும் நாடகக்காரிதான். காஞ்சிச் சக்கரவர்த்தியின் திருக்குமாரர் எங்கே? ஆயனச் சிற்பியின் மகள் எங்கே? மாமல்லரின் அருளைப் பெறுவதற்கு அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் வளரும் எத்தனையோ இராஜகுமாரிகள் தவங்கிடக்கிறார்கள்! அரங்க மேடையில் ஏறி ஆடும் இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகம் அவருக்கு எப்படி இருக்கும்?" என்று சிவகாமி சொன்னபோது, அவளுடைய குரல் தழுதழுத்தது. அவளுடைய கண்களில் நீர் துளித்தது. இதனாலும் சிவகாமியின் மனம் மாறவில்லை. மீண்டும் அவள் மான் குட்டியையே பார்த்தவளாய், "ரதி! கதைகளிலும் காவியங்களிலும் புருஷர்களுடைய நயவஞ்சகத்தைப் பற்றி எவ்வளவோ கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களில் யாரும் காஞ்சி குமார சக்கரவர்த்திக்கு இணையாக மாட்டார்கள்" என்றாள். நரசிம்மவர்மருக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்ததென்று அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. "சிவகாமி! ஏன் இன்றைக்கு இவ்விதம் மாறிப்போயிருக்கிறாய்? எவ்வளவோ ஆசையுடன் நான் உன்னைத் தேடி வந்தேன். எவ்வளவோ விஷயங்கள் பேச எண்ணியிருந்தேன். நான் வந்ததே உனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது இதோ போகிறேன்" என்று ஓர் அடி எடுத்து வைத்தார். அப்போது சிவகாமி விம்மிய குரலில், "ரதி! அவர் போகிறதாயிருந்தால் போகட்டும் ஆனால், குற்றத்தை என் பேரில் சுமத்தி விட்டுப் போகவேண்டாமென்று சொல்லு!" என்றாள். நரசிம்மர் மேலே அடி எடுத்து வைக்காமல் நின்று, "நான் தான் என்ன குற்றம் செய்துவிட்டேன்? அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொண்டால் மிகவும் நன்றாயிருக்கும்!" என்றார். சிவகாமி பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அவரைத் திரும்பிப் பார்த்து, "என்னுடைய நடனக் கலையைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் பாராட்டிப் பேசினீர்கள்! எவ்வளவெல்லாம் முகஸ்துதி செய்தீர்கள்! அப்படியெல்லாம் பேசிவிட்டு, என் அரங்கேற்றத்துக்கு ஏன் வராமல் இருந்தீர்கள்?" என்று கண்களில் கனல் பறக்கக் கேட்டாள். நரசிம்மர் 'கலகல'வென்று சிரித்து, "இதை முன்னமேயே கேட்டிருக்கக் கூடாதா? நான் அரங்கேற்றத்துக்கு வரவில்லையென்று உனக்கு யார் சொன்னது? மேல் உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து 'பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர்களுக்குப் பரத சாஸ்திர நுட்பங்களைப்பற்றி அவ்வப்போது எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சபையில் நேரில் வந்து உட்கார்ந்தால், ஒருவேளை உன் ஆட்டத்துக்குப் பங்கம் விளையுமோ என்று பயந்தேன். அதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா?" என்று கேட்டபோது, சிவகாமியின் முகத்தில் அதுவரை காணப்படாத மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தோன்றின. நரசிம்மரை ஆர்வத்துடன் நோக்கி, "இதை ஏன் முன்னமே நீங்கள் சொல்லவில்லை?" என்று கேட்டாள். அவர்கள் இருவரும் போய் மரத்தடியில் போட்டிருந்த பலகையில் உட்கார்ந்ததை ரதி தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. இனி நம்முடைய தூது இவர்களுக்குத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொண்டதுபோல், அது குளத்தோரமாகக் 'கருகரு'வென்று வளர்ந்திருந்த பசும் புல்லை மேயச் சென்றது. |