![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - சத்யாச்ரயன் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நர்மதை வரையிலும் தெற்கே துங்கபத்திரை வரையிலும் பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை - பாரத நாட்டில் அந்தக் காலத்திலிருந்த வீரர்களுக்குள்ளே ஒப்பற்ற மகா வீரனாகிய புலிகேசியை நேயர்கள் இப்போது சந்திக்கப் போகிறார்கள். அப்படிச் சந்திப்பதற்கு முன்னால், அந்த வீரனின் பூர்வ சரித்திரத்தை நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் உபயோகமாக இருக்கும். புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடைய சிற்றப்பன் மங்களேசனுடைய கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது. மங்களேசனுடைய சிறையிலிருந்து அவர்கள் தப்பி ஓடி, வெகுகாலம் அடர்ந்த காடுகளில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அப்படிக் காட்டில் வசித்த காலத்தில் அவர்கள் அனுபவித்த அளவில்லாத கஷ்டங்கள் அவர்களுடைய தேகத்தை வஜ்ரதேகமாக்கி, அவர்களுடைய உள்ளத்தில் வயிரம் ஏற்றி அவர்களை இணையற்ற வீர புருஷர்களாகவும் ஈவிரக்கமற்ற கடூர சித்தர்களாகவும் செய்து விட்டன. காலம் கை கூடி வந்தபோது, புலிகேசியும் காட்டை விட்டு வெளிவந்து, சிற்றப்பனை எளிதில் வென்று அப்புறப்படுத்திவிட்டு வாதாபிச் சிங்காதனத்தில் ஏறினான். பின்னர், தன் வீரத் தம்பிமார் துணைகொண்டு வாதாபி இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினான். வடதிசையில் அவனுடைய ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போய் நர்மதை நதிக் கரையை எட்டியபோது அவனுடைய சைனியம் உத்தர பாரதத்தின் ஏக சக்கராதிபதியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனரின் படைகளுடன் முட்டவேண்டியதாயிற்று. நர்மதை நதியின் இரு கரைகளிலும் பல வருஷ காலம் போர் நடந்தது. வாதாபிப் படைகள் எவ்வளவோ வீரத்துடன் போர் புரிந்தும், வடநாட்டிலிருந்து மேலும் மேலும் ஹர்ஷரின் சைனியங்கள் வந்துகொண்டிருந்தபடியால், முடிவான வெற்றி காணமுடியவில்லை. இந்த நிலைமையில் லட்சோபலட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் சைனியத்துக்கு ஹர்ஷவர்த்தனர் தாமே தலைமை வகித்து வருவதாகத் தெரியவந்தபோது, புலிகேசி மேலும் அவருடன் போராடுவது விந்திய பர்வதத்தில் முட்டிக் கொள்வதேயாகும் என்பதை உணர்ந்து சமாதானத்தைக் கோரினான். மகா புருஷரான ஹர்ஷவர்த்தனரும் அதற்கு உடனே இணங்கியதுடன் புலிகேசியின் வீர தீரங்களைப் பாராட்டி நர்மதைக்குத் தெற்கேயுள்ள பிரதேசத்துக்குச் சக்கரவர்த்தியாக அவனை அங்கீகரித்தார். பின்னர், புலிகேசியின் கவனம் தென்னாடு நோக்கித் திரும்பிற்று. அவ்விதம் திரும்புவதற்கு முக்கிய காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர்கள் ஜைன முனிவர்கள். புலிகேசி சிங்காதனம் ஏறுவதற்கு ஜைனர்கள் உதவிசெய்த காரணத்தினால், வாதாபியில் சமண முனிவர்களுக்கு விசேஷச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய முயற்சியினாலேயே கங்கபாடி மன்னன் துர்விநீதனுடைய மகளுக்கும் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனுக்கும் விவாகம் நடந்தது. காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி ஜைன மதத்திலிருந்து விலகிச் சைவ சமயத்தை மேற்கொண்டபோது, நாடெங்கும் உள்ள சமணர்களின் உள்ளம் கொதிப்பை அடைந்தது. ஏனெனில், கல்வியிற் சிறந்த காஞ்சி மாநகரமானது வெகு காலமாக சமணர்களுடைய குருபீடமாக இருந்து வந்தது. காஞ்சியில் வேகவதியாற்றுக்கு அப்பாலிருந்த பகுதி 'ஜின காஞ்சி' என்று வழங்கி வந்தது. தென்பெண்ணையாற்றின் முகத்துவாரத்தருகில் இருந்த பாடலிபுரம் என்னும் ஊரில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த சமணப்பள்ளி புகழுடன் விளங்கி வந்தது. இத்தகைய பிரதேசத்தில், சமணத்தின் செல்வாக்குத் தாழ்ந்து சைவம் ஓங்குவது என்பதைச் சமண சமயத்தலைவர்களால் சகிக்கக்கூட வில்லை. இவர்களுடைய தூண்டுதலுடனே புலிகேசியின் ஏக சக்கராதிபத்திய வெறியும் சேரவே, அவ்வீர மன்னன் இது வரையில் யாரும் கண்டும் கேட்டுமிராத பிரம்மாண்டமான சைனியத்துடனே தென்னாட்டின் மேல் படையெடுப்பதற்குச் சித்தமானான். படையெடுப்புச் சைனியம் கிளம்பியபோது, வெற்றி முழக்கத்துடனே காஞ்சியில் பிரவேசித்து மகேந்திரனுக்குப் புத்தி புகட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜைன ஆசார்யர்களும் சைனியத்துடனே புறப்பட்டார்கள். ஆனால், தலைநகருக்கும் பாசறைக்கும் வித்தியாசம் அதிகம் என்பதையும் சக்கரவர்த்தி புலிகேசிக்கும் போர்த் தலைவன் புலிகேசிக்கும் மிக்க வேற்றுமை உண்டு என்பதையும் விரைவிலேயே அவர்கள் கண்டார்கள். தலைநகரிலேயே பூஜ்ய பாதர், ரவிகீர்த்தி முதலிய ஜைன குருமாருக்குச் சக்கரவர்த்தியைக் காட்டிலும் அதிகமான மரியாதை நடந்தது. போர்க்களத்திலோ அவர்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள் யாரும் இல்லை. அந்தக் குருமார் வைஜயந்தி பட்டணத்தைக் கொளுத்தக் கூடாது என்று சொன்னதைப் புலிகேசி அலட்சியம் செய்த பிறகு, அவர்களுக்குப் போர்க்களத்தில் இருக்கவே மனங்கொள்ளவில்லை. புலிகேசியிடம் சிறிது விவாதம் செய்து பார்த்த பிறகு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். சளுக்கச் சக்கரவர்த்தியை அவருடைய முக்கியப் படைத்தலைவர்கள் சகிதமாக நாம் சந்திக்கும்போது, மேற்கூறியபடி ஜைன குருமார்கள் பாசறையிலிருந்து போய் விட்டதைக் குறித்துத்தான் பேச்சு நடந்துகொண்டிருந்தது. வானை அளாவிப் பறந்து கொண்டிருந்த வராகக் கொடியின் கீழே, விஸ்தாரமான கூடாரத்தின் நடுவில், தந்தச் சிங்காதனத்தில், மணிமகுடம் தரித்த புலிகேசி மன்னன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். சிங்காதனத்துக்கு எதிரே தரையிலே விரித்திருந்த இரத்தினக் கம்பளத்தில் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் படைத் தலைவர்கள் முதலிய பெரிய பதவி வகிப்பவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுடைய தோற்றத்திலிருந்து தெரிய வந்தது. அவர்கள் எல்லாருடைய கண்களும் பயபக்தியுடன் புலிகேசியின் முகத்தையே நோக்கியவண்ணம் இருந்தன. புலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன. (பிற்காலத்தில் இந்தக்
கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.)
"லட்சணந்தான்! இந்த திகம்பர சந்நியாசிகள்
என்ன எண்ணிக்கொண்டு நம்முடன் கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. இவர்கள்
இஷ்டப்படியே யுத்தத்தை நடத்துவதாயிருந்தால் உருப்பட்டாற் போலத்தான்"
என்று புலிகேசி கூறினான். "அவர்கள் போய்விட்டதே க்ஷேமம். அவர்கள் நம்மோடு வந்து கொண்டிருந்தால் யுத்தம் செய்யவே முடியாது. கோயில்களும் சங்கராமங்களும் ஸ்தூபங்களும் கட்டிக் கொண்டு போகலாம்!" என்றான் ஒரு படைத்தலைவன் எல்லாரும் கலகலவென்று சிரித்தார்கள். சிரிப்பு அடங்கியதும் இன்னொரு படைத் தலைவன், "ஜைனமுனிவர்களை அனுப்பிவிட்டோ ம். சரிதான், ஆனால், புத்த பிக்ஷுவின் இஷ்டப்படிதானே யுத்தம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கிறது?" என்று கூறி புலிகேசியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். "ஆகா! அது வேறு விஷயம். பிக்ஷுவின் யோசனையைக் கேட்டதில் இதுவரையில் நாம் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. எந்த காரியமும் தவறாகப் போனதுமில்லை" என்றான் புலிகேசி. பிறகு, எதிரிலிருந்தவர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுப் பார்த்து, "நம் ஒற்றர் படை வெகு லட்சணமாக வேலை செய்கிறது போலிருக்கிறதே! பிக்ஷுவின் தூதனை நம்முடைய ஆட்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருவதற்கு மாறாக, தூதனல்லவா நம்மைத் தேடிப் பிடித்திருக்கிறான்?" என்று கூறியபோது இயற்கையாகவே கடுமையான குரலில் இன்னும் அதிகக் கடுமை தொனித்தது. அந்த ஒற்றர் படைத்தலைவன் ஒருகணம் தலை குனிந்திருந்து விட்டு, பிறகு நிமிர்ந்து புலிகேசியை நோக்கி, "ஏதோ பிசகு நேர்ந்திருக்கிறது. நான் அனுப்பிய ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்திற்குள் யாரோ வருவது கண்டு திரும்பிப் பார்த்து, "ஆகா! இதோ வந்துவிட்டார்களே!" என்றான். அப்போது, பின்கட்டு முன்கட்டாகக் கட்டியிருந்த பரஞ்சோதியை முன்னால் தள்ளிக்கொண்டு அவனைச் சிறைப்பிடித்து வந்த வீரர்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த புலிகேசி, "இது என்ன? இது என்ன? இந்தச் சிறுவன் யார்?" என்று கேட்டது, பரஞ்சோதியின் காதில் இடி முழக்கம்போல் விழுந்தது. |