![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை நாற்பத்தேழாம் அத்தியாயம் - பிரயாண முடிவு சூரியாஸ்தமன சமயத்தில் ஒரு மலைப் பாதையின் முடுக்குத் திரும்பியதும் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருக்கும் பாசறை தென்பட்டது. பல்லவ சைனியத்தைப் பார்த்தவுடனேதான் வஜ்ரபாஹுவின் கவலைக்கு எவ்வளவு தூரம் காரணம் உண்டு என்பதைப் பரஞ்சோதி உணர்ந்தான். வாதாபி சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் அவ்வளவு மலைக்கும் மடுவுக்குமான தாரதம்மியம் இருந்தது. "தம்பி? பார்த்தாயா?" என்றான் வஜ்ரபாஹு. "பார்த்தேன், ஐயா!" "இன்னமும் நீ நம்புகிறாயா, பல்லவ சைனியம் ஜயிக்கும் என்று?" "கட்டாயம், ஜயிக்கும் ஐயா! சந்தேகமே இல்லை!" என்று பரஞ்சோதி அழுத்தந்திருத்தமாகச் சொன்னான். "அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாயே, எதனால் சொல்கிறாய்." "பல்லவ சைனியத்தின் பட்சத்தில் தர்ம பலம் இருக்கிறது. அதோடுகூட, மகேந்திர சக்கரவர்த்தியும் இருக்கிறார்!" "ஏது ஏது, மகேந்திர சக்கரவர்த்தியிடம் உனக்கு அபார நம்பிக்கை இருக்கிறதே?" என்றான் வஜ்ரபாஹு. "ஆம், ஐயா!" "பல்லவ சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?" "முன்னம் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆயனச் சிற்பி வீட்டில் புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் நான் ஒளிந்திருந்தபோது ஒரு தடவை பார்த்தேன். இன்னொரு தடவை காஞ்சியில் நடு ராத்திரியில் மாறுவேடத்தில் பார்த்தேன். அப்போது சக்கரவர்த்தி கிட்டத்தட்டத் தங்களைப் போலத்தான் இருந்தார்! தங்களைப் போலவே பெரிய மீசையும் வைத்திருந்தார்." "ஆமாம்! நான்கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். மகேந்திர சக்கரவர்த்தி சில சமயம் மாறுவேடம் பூண்டு ஊர்சுற்றுவது உண்டு என்று. சக்கரவர்த்தியை நான் என்றும் என்னைச் சக்கரவர்த்தி என்றும் கூடச் சிலர் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்." "எனக்கு அம்மாதிரியெல்லாம் சந்தேகம் கிடையாது ஐயா!" "அது போகட்டும், வாதாபி சைனியம், பல்லவ சைனியம் இரண்டையும் நீ பார்த்திருக்கிறாய். தம்பி! இன்னமும் பல்லவ சைனியத்தில் சேருவதற்கு இஷ்டப்படுகிறாயா?" "இஷ்டப்படுவது மட்டுமல்ல; பல்லவ சைனியத்திலே சேரத் துடித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நாம் பேசிக் கொண்டு நிற்கும் நேரமெல்லாம் வீண் போவதாகவே நினைக்கிறேன்." "அப்படியானால், எனக்கு விடைகொடு!" "என்ன? என்னை இங்கே விட்டுவிட்டா போகிறீர்கள்?" "ஆமாம்; நான் முதலில் போய்ப் பல்லவ சக்கரவர்த்தியைப் பார்த்து உன்னைப்பற்றிச் சொல்கிறேன். அவர் இஷ்டப்பட்டால் உன்னை அழைத்து வரச் செய்வார். அது வரையில் நீ பாசறைக்கு வெளியிலேதான் காத்திருக்க வேண்டும்." "சக்கரவர்த்தி பாசறையில் இருக்கிறாரா? காஞ்சியிலிருந்து கிளம்பியவரைப் பற்றி அப்புறம் செய்தியே இல்லை என்றீர்களே!" "இதற்குள்ளே ஒருகால் வந்திருக்கலாமல்லவா?" "ஐயா! சக்கரவர்த்தியை நான் ஒரு தடவை நேரில் பார்க்க விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்று பரஞ்சோதி ஆர்வத்துடன் சொன்னான். "எதற்காகச் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு அவ்வளவு ஆவலுடன் இருக்கிறாய்?" என்றான் வஜ்ரபாஹு. "காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொள்வதற்குத்தான்!" "ஓகோ! மதயானையின் மீது வேல் எறிந்த வீரன் அல்லவா நீ? சிவகாமி சுந்தரியைக் காப்பாற்றியது போல் காஞ்சி சுந்தரியையும் காப்பாற்ற விரும்புகிறாய் போலிருக்கிறது! உன்னைப் போன்ற மகா வீரனை, தாளம் போட்டுக் கொண்டு பாசுரம் பாடுவதற்கும் கல்லுளியை வைத்துக் கொண்டு கல்லைச் செதுக்குவதற்கும் உன் மாமா அனுப்பி வைத்தாரே! அது எவ்வளவு பெருந்தவறு?" "சிற்பக் கலை தெய்வீகக் கலை, ஐயா!" "போதும் போதும்! அப்படியெல்லாம் சொல்லித்தான் மகேந்திர சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டார். சக்கரவர்த்தியிடம் நானும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளப்போகிறேன். 'மலையைக் குடைவது, பாறையைச் செதுக்குவது முதலிய காரியங்களை எல்லாம் நிறுத்துங்கள். பல்லவ ராஜ்யத்திலுள்ள அவ்வளவு சிற்பிகளையும் ஏவி ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரத மண்டபம் கட்டச் சொல்லுங்கள். அந்த மண்டபங்களில் ஒவ்வொரு நாளும் ஜனங்கள் கூடிக்கேட்கும்படியாக மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன்." "இதெல்லாம் எதற்காக?" என்று பரஞ்சோதி கேட்டான். "இந்த யுத்தத்தை மகேந்திர சக்கரவர்த்தியாலும் பல்லவ வீரர்களாலும் மட்டும் ஜயித்து விடமுடியாது. பல்லவ நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் வீரமும் பௌஷ்யமும் அடைய வேண்டும். உயிரைத் திரணமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்." வஜ்ரபாஹு பரஞ்சோதியைப் பிரிந்து செல்வதற்கு முன்னால் அவனை அன்புடன் தழுவிக்கொண்டு, "தம்பி! எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கும் உன்னுடைய வயதுதான். நீங்கள் இருவரும் சேர்ந்தீர்களானால் எவ்வளவோ அரும் பெரும் காரியங்கள் செய்யலாம்!" என்றான். பரஞ்சோதி, நாத் தழுதழுக்க, "ஐயா! சிறு பிராயத்தில் நான் என் தந்தையை இழந்தேன்! என்னையும் உங்கள் புதல்வனாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்று கூறினான். வீரன் வஜ்ரபாஹு பாசறைக்குள் புகுந்து சென்ற பிறகு பரஞ்சோதிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகத் தோன்றியது. சக்கரவர்த்தியிடமிருந்து தன்னை அழைத்து வரும்படி எப்போது ஆக்ஞை வருமென்று அவன் ஆவலுடன் காத்திருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பல்லவ சைனியத்தின் பாசறையில் ஒரு பெரிய கலகலப்பு ஏற்பட்டது. திடீரென்று பல ஆயிரம் வீரர்களின் குரல்கள் எழுப்பிய ஜயகோஷம் வானவெளியையெல்லாம் நிரப்பி மலை அடிவாரம் வரை சென்று எதிரொலி செய்தது. சங்கங்களும் முரசங்களும் பேரிகைகளும் சேர்ந்து முழங்கிய பேரொலி வானமுகடு வரையில் சென்று முட்டித் திரும்பியது. பாசறையின் வாசலில் நின்று காவல் புரிந்த வீரர்களைப் பரஞ்சோதி தயக்கத்துடன் நெருங்கி, பாசறைக்குள்ளே மேற்கூறிய கோலாகலத்தின் காரணம் என்னவென்று கேட்டான். அதற்கு, "மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார்!" என்று குதூகலமான மறுமொழி கிடைத்தது. |